பௌர்ணமி 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமாவின் தோளில் உதடு பதித்தான் பாலா. பூர்ணிமாவுக்கு உடம்பு உதறியது. அவனை விலக்கி தள்ள நினைத்தாள். ஆனால் செயல்பட முடியவில்லை. "உன்னை பார்க்கும் போதெல்லாம் அட்டை போல ஒட்டி உன் உயிரை திருட தோணுது.." என்றான் அவன்.

"ஒரு சண்டையை கூட முழுசா போட விட மாட்டேங்கிறான்.. என்ன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ.?" கவலையோடு முணுமுணுத்தாள் பூர்ணிமா.

"எனக்கு காது கேட்கும் பூரணி நீ சண்டை போடு.." என்றவன் அவளை ஷவரின் அடியில் இழுத்து வந்து நிறுத்தினான்.

"நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம். நீ என் அப்பாவை கொன்னுட்ட.."

"அதேதான் இங்கேயும். நான் உன் அப்பாவை எப்பவோ டைவர்ஸ் பண்ணிட்டேன். ஏனா அவர் என் அத்தையை கொன்னுட்டாரு.."

"ஆனா நான்.." அவள் மேலே பேசும் முன் ஷவரில் இருந்து கொட்டியது குளிர் நீர்.

இருவரும் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தனர்.

"டைம் சேவ் பண்ற மூஞ்சியை பாரு." பூர்ணிமா அவனை திட்டியபடியே கூந்தலை உலர விட்டாள்.

"உன் பக்கத்துல இருக்கும் போது நான் டைம் சேவ் பண்ணா அது பாவ கணக்குல சேரும் பூர்ணி.."

பூர்ணிமாவுக்கு எரிச்சலாக வந்தது. தந்தையின் மரணத்திற்கு பதில் வாங்காமல் இவனோடு கொஞ்சிக் கொண்டிருக்கிறோமே என்று நினைத்தாள்.

"பசிக்குது வா போகலாம்.." அவளை இழுத்துக் கொண்டு கீழே நடந்தான். அல்லி இருவருக்கும் உணவை எடுத்து வைத்தாள். பூர்ணிமாவுக்கு இப்போதும் கூட சாப்பிட பிடிக்கவேயில்லை. அரைகுறையாக உண்டுவிட்டு எழுந்துக் கொண்டாள்.

தயக்கத்தோடு அம்மாவின் முன்னால் வந்து நின்றாள்.

"உட்கார்.." முல்லை அவளைப் பார்க்காமலேயே சொன்னாள்.

பூர்ணிமா தயங்கி அமர்ந்தாள்.

"உன் பயாலஜிகல் அம்மா பேர் மலர்கொடி. என் அக்கா அவ. அவளுக்கும் நாகேந்திரனுக்கும் பிறந்த பொண்ணுதான் நீ. இதை நான் முன்னாடியே சொல்லி இருக்கணும். இப்படியொரு சந்தர்ப்பம் வரும்ன்னு எனக்குத் தெரியாது." என்றவள் பெருமூச்சி விட்டுக் கொண்டாள். "உன் அப்பாவுக்கு என் மேல காதல். இதை உன் அம்மா கண்டிக்காம அந்த ஆளோட ஆசைக்கு என்னை பலிகிடாவா ஆக்க பார்த்தா. எனக்கு அந்த உறவுல விருப்பம் இல்ல. நீ எப்ப தாய்ப்பால் மறந்தியோ அப்ப இருந்து உன்னை நான்தான் வளர்த்திட்டு இருந்தேன். இதை அவ யூஸ் பண்ணிக்க பார்த்தா. ஒருவேளை அவ செத்துப் போனா உனக்காகவாவது நான் அவளோட புருசனை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சா. அவளோட பரிசுத்த வெங்காய காதலை நிரூபிக்க என் வாழ்க்கையை அனல்ல போட்டு குளிர் காய நினைச்சா. எனக்கு பிடிக்கல. அதான் அவ செத்ததும் உன்னை தூக்கிட்டு இங்கிருந்து ஓடிட்டேன்.."

பூர்ணிமா தன் அம்மாவை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"உன் அப்பாவை நான் லவ் பண்ணல. இது பர்ஸ்ட் பாயிண்ட். என் வாழ்க்கையை நான் என் இஷ்டபடி வாழ எனக்கு முழு உரிமையும் இருக்கு. அது இரண்டாவது பாயிண்ட்.!" என்றாள் முல்லை நிமிர்ந்து அமர்ந்து.

பூர்ணிமா தலை குனிந்தாள். "இரண்டு சந்தேகம் இருக்கு!" என்றவளை யோசனையாக பார்த்தாள் முல்லை.

"என் அப்பா மேல தப்புன்னு நீங்க சொல்றிங்க. சரி. ஆனா என் அம்மா நீங்களும் அப்பாவும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு உயிரை விட்டாங்கன்னு எப்படி நம்பறது.? இது ரொம்ப டிபிகல்டா இருக்கு எனக்கு. அவங்க உங்க அக்காதானே.? இன்னைக்கு வந்த ஒரு ஆணுக்காக பல வருசம் கூட வளர்ந்த தங்கச்சியை பலி தர பார்க்க மாட்டாங்களே.. அதுவும் எந்த பொண்ணுமே தன் காதலை பங்கிட்டுக்க நினைக்க மாட்டாங்க. உயிரை தந்து காதலை விட்டு தருவது ரொம்ப விசித்திரம். ஆனா அவங்க அப்படி நினைச்சாங்கன்னு நீங்க சொல்றதே வித்தியாசமாதான் இருக்கு.." தலை நிமிராமல் சொல்லிக் கொண்டிருந்த மகளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் முல்லை.

"உன் இடத்துல நான் இருந்தாலும் அப்படிதான் நினைச்சிருப்பேன்!" என்றாள்.

பூர்ணிமா நிமிர்ந்து பார்த்தாள்.

"வேற ஏதாவது.."

"நீ.. நீங்க என்னை ஏன் உங்களோடு கூட்டிப் போகணும்?"

முல்லை நகைத்தாள்.

"ஏன் கூட்டிப் போக கூடாது? என் அக்கா சாக காரணமே நான் உன் மேல வச்சு பாசத்தை ப்ளாக்மெயில்லா யூஸ் பண்ணதானே? அதான் அந்த பாசத்தையே நான் ப்ளஸ்ஸா யூஸ் பண்ணேன்.. உன்னை கூட்டிப் போகாம இருந்திருந்தா என்னவாகியிருக்கும்? யாராவது ஒரு பையனை லவ் பண்ணி மேரேஜ் பண்ணி உன்னை மாதிரியே பொண்ணை பெத்திருப்பேன். ஒருவேளை அவன் அல்பாயுசுல செத்திருந்தா அந்த குழந்தையை தனியாவே வளர்த்தி இருப்பேன். ஆனா எனக்கு பிடிக்கல அப்படி. அதனால உன்னையே வளர்த்திட்டு இருந்துட்டேன்!" என்றாள்.

பூர்ணிமா மறுத்து தலையசைத்தாள்.

"அது எப்படி? யாரும் இன்னொருத்தங்க குழந்தையை தன் குழந்தையா நினைச்சி வளர்த்த மாட்டாங்க!"

"ஆனா எனக்கு உன் வார்த்தையில் நம்பிக்கை இல்ல!" என்ற அம்மாவை குழப்பமாக பார்த்தாள்.

"ஒவ்வொரு குழந்தைக்கும் செகண்ட் அம்மாவா பாசம் காட்டுறது சித்திக்களாதான் இருக்கும். அப்பாவுக்கு அப்புறம் அதே போல பாசம் காட்டுறது சித்தப்பாக்களாதான் இருக்கும். அந்த சித்தியோ சித்திப்பாவோ தங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை துணையை தேடி அவங்களுக்கு குழந்தை பிறக்கும் வரைக்குமே தங்களோட குழந்தைகளா அண்ணன் இல்லன்னா அக்கா குழந்தைகளைதான் நினைச்சிப்பாங்க. அந்த காலக்கட்டம் ஒரு வருசமாவும் இருக்கலாம். பத்து வருசமாவும் இருக்கலாம். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நான் உன்னை என் மகளா பார்த்துட்டு இருந்த சமயம் அது. ஒருவேளை அந்த டைம்ல எனக்கு மேரேஜ் ஆகியிருந்தா, உன் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து செத்திருந்தா கூட நிச்சயம் உன்னை வளர்ந்திருப்பேனான்னு தெரியல. ஏனா எல்லா சூழ்நிலைகளிலும் மனசு ஒரே மாதிரி முடிவெடுக்காது. என் அக்கா செத்த அந்த டைம்ல நானும் நீயும் ரொம்ப அட்டாச்டு. நான் உன்னை விட்டு குளிக்க போனா கூட நீ அழுவ. தினமும் நான் காலேஜ் போய்ட்டு வருவதே ரொம்ப கஷ்டமா இருந்தது. என்னை நீ அம்மான்னு கூப்பிட்டு இருந்த.! உன்னை விட்டு போறதை.. எவளாவது ஒருத்தி உனக்கு சித்தியா வந்து கஷ்டப்படுத்துவதை.. உன் அப்பா மனசு திருந்தி ஏதாவது செஞ்சிக்கிட்ட பிறகு நீ அனாதையா நிற்பதையோ நான் விரும்பல. அதனால்தான் உன்னை கூட்டிப் போனேன். நீ என் பாசத்தை சந்தேகப்பட்டா கண்டிப்பா நான் பீல் பண்ண மாட்டேன். உண்மைகளை சொல்லதான் முடியும். ஆதாரங்களுக்கு எங்கே போவேன்? உன் முதல் கேள்விக்கு கூட ஆதாரம் கிடைக்கலாம். ஆனா இரண்டாவது கேள்விக்கு.!? மனசுல உள்ள அன்பை எப்படி காட்ட? அனுமார் மாதிரி நெஞ்சை பிளந்துக் காட்ட முடியாதே!" என்றவள் எழுந்து நின்றாள்.

"உன் முதல் கேள்வியை விட இரண்டாவது கேள்வி என் மனசை ரொம்பவே உடைச்சிடுச்சி பூரணி. வரைமுறை இல்லாமதான் நான் என் அன்பை தந்தேன். அப்பவும் அது உனக்கு சந்தேகத்தை தருதுன்னா நான் என்ன செய்ய முடியும்? யாருமே நம்பல. நீயும் நம்பல.. இட்ஸ் ஓகே.. எனக்கு ஒரு கவலையும் இல்ல.. நான் போய் என் அம்மா அப்பா சமாதியில் சாமி கும்பிட்டு வரேன். இவ்வளவு தூரம் வந்துட்டு அவங்களை பார்க்காம திரும்பிப் போனா தப்பா நினைச்சிப்பாங்க.!" என்றவள் வெளியே நடந்தாள். வாசலில் இருந்த பூமாறன் அத்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

பூர்ணிமா அம்மாவின் முதுகை பார்த்தபடியே சோபாவில் அமர்ந்திருந்தாள்.‌ யாரை நம்புவது என்று தெரியவில்லை. பெற்றெடுத்த தாயும் தந்தையும் ஒரு புறம். முரண்பாடான அன்பை எக்கச்சக்கமாக வழங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு அம்மா ஒருபுறம்.

தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.

முல்லை தங்களின் வயலின் ஓரத்தில் இருந்த சுடுகாட்டுக்கு வந்தாள். பூமாறன் தாத்தா பாட்டி கல்லறைகளை காட்டினான்.

"நீ போ மாறா.. நான் வரேன்.!" என்றவள் அங்கிருந்த கல் ஒன்றின் மீது அமர்ந்தாள்.

பூமாறன் தயக்கத்தோடு அங்கிருந்து‌ கிளம்பினான்.

முல்லை தாய் தந்தை கல்லறையை வெறித்துப் பார்த்தாள். நொடிகள் அவளை சுற்றி நகர்ந்துக் கொண்டிருந்தது. கரும்பு செடிகளின் சலசலப்பு காதில் ஓயாமல் கேட்டது. அடித்துக் கொண்டிருந்த தென்றல் காற்றில் அவளின் புடவை முந்தானையும், கேசத்தை விட்டு விலகியிருந்த சில முடிகளும் பறந்துக் கொண்டிருந்தன.

கால் முட்டிகளை நெஞ்சோடு சேர்த்து கட்டிக் கொண்டவள் "செத்த பிறகு உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும்ன்னு நம்புறேன். ஆனா நீங்க ஏன் உங்க செல்ல பொண்ணை இன்னும் கண்டிச்சி வைக்காம இருக்கிங்க? தினமும் என்னை வேட்டையாட டிரை பண்ணிட்டு இருக்கா. அவளுக்கும் எனக்கும் நடுவுல என்ன சம்பந்தம்? அவ என் கூட பிறந்தவளே இல்லன்னு நான் எப்பவோ உறவை துண்டிச்சி விட்டுட்டேன். அப்புறமும் ஏன்?" எனக் கேட்டவள் சுற்றி இருந்த பச்சையை பார்த்தபடி சில நிமிடங்கள் மௌனம் காத்தாள்.

"நீங்க செத்துப் போனிங்கன்னு கேட்ட பிறகும் கூட எனக்கு பெருசா வலிக்கல. யார் என் மேல பாசம் காட்டுறாங்களோ அவங்க மேல மட்டும் பாசம் காட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேன் நான். என்னை நம்பாத உங்களுக்காக கண்ணீர் விடுவதை வெறுக்கறேன் நான். என்னோட உலகத்தை எப்பவும் நான்தான் உருவாக்குவேன். எனக்கு பிடிக்காத உலகத்தை நீங்க அமைச்சி தருவதையோ, எந்த நாயோ பொய் சொல்லி என்னை அவனோட காம பசிக்கு இரையாக்கிக்கிறதையோ நான் விரும்பல.. அதுக்கு பதிலா நான் இந்த சன்னியாசத்தை முழு மனசோடு ஏத்துக்கறேன்.." என்றவள் பெருமூச்சு விட்டுவிட்டு "சன்னியாசம்.? வேற என்ன பண்றது? உங்க பொண்ணுதான் இரவும் பகலும் என் கனவோடும், நினைவோடும் தொடர் வேட்டை நடத்துறாளே.. அவளை ஒழிச்சி கட்டுறதே இன்னும் முடியல. இதுல நான் இன்னும் எங்கே மண வாழ்க்கை தேடுறது? தன் புருசனுக்கு கிடைக்காதவளுக்கு வேற எதுவும் கிடைக்கவே கூடாதுன்னு உன் மக முடிவு பண்ணிட்டா போல.. ஆனா அதுல ஜெயிச்சிட்டா.." என்றாள்.

முல்லையின் விழிகள் கலங்கியது. "உன் பொண்ணு செத்து என் மொத்த சொந்தத்தையும் என்கிட்ட இருந்து பிரிச்சா.. இப்ப அவளோட புருசன் செத்து என் ஒரே உறவான என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான்.." என்றாள் உடைந்த குரலில்.

மகளிடம் என்னதான் கர்வமாக பேசி விட்டாலும் கூட அவளால் தன் வலியை மறைக்க முடியவில்லை. முட்டியில் முகம் புதைத்து குலுங்கி அழுதாள்.

பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு அவளின் தந்தை வீடு வந்தான் பாலா. உறவுகள் தொடர்ந்து வந்துக் கொண்டேதான் இருந்தன. வந்தவர்கள் அனைவரும் பூர்ணிமாவிற்குதான் ஆறுதல் சொல்லி அழுதார்கள்.

"தகப்பனே இல்ல.. இனி எப்படிடி வாழ்வ என் பொன்னே.. கண்ணே.." என்று அவர்கள் ஒப்பாரி வைப்பதை கேட்கையில் பாலாவுக்கு காதுகளில் இருந்து புகை வராத குறைதான். அதிலும் பூர்ணிமா அந்த ஒப்பாரிகளுக்கும் மனம் இளகி அழுவதை காணுகையில்தான் இன்னும் கடுப்பாக இருந்தது.

"இவ்வளவு நாளும் அப்பன்காரன்தான் சீராட்டி தாலாட்டி வளர்த்தினான். இவ அழுறா.." என்று திட்டினான்.

பூர்ணிமா அடிக்கடி நாகேந்திரனின் புகைப்படத்தை பார்த்து பார்த்து அழுதாள்.

அன்றைய நாள் இரவு வரையிலுமே அப்படியே போய் விட்டது. மீண்டும் இரவு தூங்குவதற்கு அவளை வீட்டுக்கு கூட்டிச் செல்ல கட்டாயப்படுத்தினான் பாலா.

"நான் வரல.." சோகமாக சொன்னவளை எரிச்சலாக முறைத்தவன் "உனக்கு சின்ன பாப்பான்னு நினைப்பா? எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு. மரியாதையா வந்து சேரு.." என்றுவிட்டு எழுந்து நின்றான்.

பூர்ணிமா சூழும் இருளை பார்த்தபடியே அவனோடு கிளம்பினாள். வீட்டுக்கு வந்தவளின் கண்கள் முதலில் தேடியது முல்லையைதான். ஆனால் அவள் அங்கே இல்லை.

"அத்தை அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க அண்ணா‌.. டாக்குமெண்ட்ஸ் தயார் பண்ணா வந்து கையெழுத்து போடுறதா சொன்னாங்க.." என்றான் பூமாறன்.

பாலா தலையசைத்தான். சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு கிளம்பினான்.

"என்ன டாக்குமெண்ட்?" பூர்ணிமா சந்தேகத்தோடு கேட்டாள்.

"சொத்து தாத்தா பேர்ல இருக்கு. அதை பேர் மாத்தினா மட்டும்தான் நான் விற்க முடியும். இல்லன்னா அடமானாமாவது வைக்க முடியும். இன்னும் சொல்லணும்ன்னா சொத்தை பேர் மாத்ததான் அத்தையை தேடினேன். அந்த டைம்லதான் உன்னை பார்த்து லவ் பண்ணேன்.!" என்றான் அவன்.

பூர்ணிமா அவனை சந்தேகத்தோடு பார்த்தாள்.

"சொத்துக்காகதான் என்னை கல்யாணம் பண்ணியான்னு நீ புதுசா எதையும் ஆரம்பிக்க வேணாம் தாயே.." அவளைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவன் போர்வையை தேடி எடுத்து உதறி தன் மீது போர்த்தியபடியே படுத்துக் கொண்டான்.

"இல்ல.. சொத்துக்காக உன் அத்தையை தேடி இருந்தா ஏன் இவ்வளவு நாளாக இதை செய்யல.. மேரேஜ் நடந்து மூணு மாசத்துக்கு பக்கமா ஆக போகுதே!" எனக் கேட்டவளின் கையை பற்றி இழுத்தவன் அவள் தன் அருகே வந்து விழுந்ததும் "உன் அம்மா வேற ஒருத்தங்கன்னு தெரிஞ்சா உன் மனசு வருத்தப்படுமேன்னு நானும் அத்தையும் சொத்தை பத்தி யோசிக்காம விட்டுட்டோம்.." என்றான்.

பூர்ணிமா அவனின் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

"ரொம்ப குழப்பமா இருக்கு பாலா. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு.!"

அவளின் கழுத்தில் ஒரு கையையும் இடுப்பில் மறு கையையும் போட்டு வளைத்து அணைத்துக் கொண்டவன் "மைன்டை ப்ரியா விடு. எல்லாம் சரியா போயிடும். உன் இடத்துல யார் இருந்தாலும் குழம்பும்.!" என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN