பௌர்ணமி 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாவின் மூச்சு காற்று சிறு சத்தத்தோடு வெளி வந்துக் கொண்டிருந்தது.‌ அவனின் அணைப்பில் இருந்த பூர்ணிமா பாலாவுக்கு தொந்தரவு தராமல் விலகினாள்.

மணி பன்னிரெண்டை கடந்து விட்டிருந்தது. ஆனால் இன்னும் தூக்கம் வரவேயில்லை. அம்மா அம்மா என்று அரற்றியது மனம்.

இத்தனை ஆண்டுகளாக அம்மா ஒருத்திதான் அனைத்துமாக இருந்தாள். இன்று அந்த அம்மாவையே அந்த ஸ்தானத்தில் இல்லை என்று நினைத்துப் பார்ப்பது கவலையாக இருந்தது.

இருளை வெறித்தபடி ஜன்னலோரம் வந்து நின்றாள். காலையில் இருந்த முல்லையின் முக வாட்டத்தை அவளால் மறக்க முடியவில்லை. தனது சந்தேகங்களை அம்மாவிடம் கேட்டிருக்க கூடாதோ என்று நினைத்தாள். மனம் விட்டு பேச வேண்டும் என்று அம்மாவேதான் சொல்லி தந்திருந்தாள். ஆனால் இன்று அதேதான் இருவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது.

மனம் கேட்கவில்லை. போனை எடுத்து அம்மாவிற்கு அழைத்தாள்.

ரிங் முற்றும் பெறும் நேரத்தில் போனை எடுத்தாள் முல்லை. "இந்த டைம்க்கு போன் பண்ணியிருக்க.. ஏதாவது பிரச்சனையா பூரணி?" கவலையோடு ஒலித்தது அம்மாவின் குரல்.

அம்மாவின் கரிசனம் கண்டு பூர்ணிமாவின் மனம் நொந்தது.

"இல்லம்மா. சும்மாதான் போன் பண்ணேன்.."

மகளின் குரலில் இருந்த குழப்பம் அவளுக்கும் புரிந்தது.

"அமைதியா தூங்கு பூரணி.. எல்லாம் சரியா போயிடும். நீ என்னை தப்பா கூட நினைக்கலாம். உனக்கு முழு உரிமை இருக்கு."

பூர்ணிமா பெருமூச்சு விட்டாள்.

"அம்மா ஐ யம் சாரி.." என்றாள்.

"இட்ஸ் ஓகே டியர்.. குட் நைட்.!" என்றவள் அத்தோடு தொடர்பை துண்டித்துக் கொண்டாள்.

பூர்ணிமா போனை வெறித்தபடியே சற்று நேரம் நின்றிருந்தாள். அவளே சலித்து பின்னர் தூங்கிப் போனாள்.

நாகேந்திரனுக்கு சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்தது.

"சாவு நடந்த வீட்டை வெறும் வீடா விடக் கூடாதுன்னு சொல்வாங்க.. யார் இந்த வீட்டுல தங்குறது?" எனக் கேட்டார் நாகேந்திரனின் அண்ணன்.

அனைவரும் பூர்ணிமாவைதான் பார்த்தனர்.

"நீதான்ம்மா இருந்தாகணும்.." என்றார் சித்தப்பா.

பூர்ணிமா தயக்கத்தோடு பாலாவை பார்த்தாள்.

அவன் தோள்களை குலுக்கினான்.

"உனக்கு இஷ்டம்ன்னா நாம தங்கிக்கலாம்.." என்றான்.

பூர்ணிமா சரியென்று தலையசைத்தாள்.

"மூணு மாசம் தங்கினா கூட போதும். ஆனா தினமும் காலை மாலை அப்பா போட்டோவுக்கு விளக்கேத்தி வைக்கணும்.!" என்றாள் அத்தை.

பூர்ணிமா அதற்கும் சரியென்று தலையசைத்தாள்.

அந்த விசயத்தை வீட்டிற்கு வந்து தெரிவித்தபோது மரிக்கொழுந்து முடியாதென்று சொல்லி துள்ளினார்.

"அவனுக்கு விளக்கேத்தி வைக்க நம்ம வீட்டு பொண்ணு போகணுமா? முடியாது.!" என்றார்.

"மாமா அவர் எங்க அப்பா.!" பூர்ணிமாவின் இச்சொல்லில் பாலாவும் சேர்ந்து எரிச்சலுற்றான்.

"விடுங்கப்பா. மூணு மாசம்தானே?" என்ற பாலாவை முறைத்தபடி எழுந்து நின்ற மரிக்கொழுந்து‌ "பொண்டாட்டிக்கு இப்பவே இவ்வளவு ஜால்ரா போடாதடா.. வாழ்க்கையை நாசமாக்கிக்க போற.." என்றார்.

பூர்ணிமாவுக்கு முகம் கறுத்துப் போனது. பாலாவிடம் சரிக்கு சரி வாதாடுபவளுக்கு இவரிடம் பதில் பேச தோணவில்லை.

"அப்பா எனக்கும் இவளுக்கும் நடுவுல நீங்க வராதிங்க.. இதுவே கடைசியா இருக்கட்டும்.. உங்க தங்கச்சி மகளாவே இருந்தாலும் நான் லவ் பண்ணி என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு இவளை கூட்டி வந்திருக்கேன். கரெக்டான ரெஸ்பெக்ட் கொடுங்க.!" என்றவன் பூர்ணிமாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்.

பூர்ணிமாவுக்கு மரிக்கொழுந்துவின் மீதுதான் வருத்தம். ஆனால் மரிக்கொழுந்துவின் வருத்தம் நாகேந்திரன் என்பதை அவள் புரிந்துக் கொள்ளவில்லை.

அன்று இரவெல்லாம் அப்பா சொன்னதை நினைத்து மனம் வாடிக் கொண்டிருந்தான் பாலா.

பூர்ணிமாவும் பாலாவும் நாகேந்திரனின் வீட்டிற்கு மாறினர். பெரிய வீடு. ஆனால் இவர்கள் இருவர் மட்டும் என்பதால் துணைக்கு அல்லியும் வந்து விட்டாள்.

நாகேந்திரனின் புகைப்படத்தை ஹாலிலேயே வைத்து தினமும் காலை மாலை வணங்கினாள் பூர்ணிமா. வேலைக்கு சென்று விட்டு வருகையிலேயோ அல்லது அவன் காலை நேரத்தில் பல் விளக்கிக் கொண்டிருக்கும் போதோதான் அவள் இப்படி வணங்கிக் கொண்டிருப்பாள். அதை காணும் போதெல்லாம் அவனுக்கு எரிச்சலாக இருக்கும்.

அந்த வாரத்தின் இறுதியில் பத்திர பதிவர் அலுவலகத்தில் சொத்து பிரிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னால் நாள் வரையிலுமே தனக்கு ஒரு பங்கு தன் தம்பிக்கு ஒரு பங்கு என்றுதான் நினைத்திருந்தான் பாலா. அதைதான் அத்தையிடமும் சொன்னான். ஆனால் முல்லை கேலியாக நகைத்தாள்.

"நான் கணக்கா தெரியலையா?" எனக் கேட்டாள்.

அதன் பிறகே தவறை புரிந்துக் கொண்டவன் "உங்களுக்கும் ஒரு பங்கு அத்தை.!" என்றான்.

முல்லை மீண்டும் சிரித்தாள். மறுப்பாக தலையசைத்தாள்.

"எனக்கு ஒரு பாகம். மலரோட ஒரு பாகம் பூரணிக்கு. என் அண்ணனோட பாகம் என் அண்ணனுக்கு. அதை நீங்க இரண்டா பிரிச்சா என்ன நாலா பிரிச்சா என்ன?" என்றாள்.

பாலா இப்படி ஒரு கணக்கை போடவேயில்லை‌. நட்டப்பட்டது போலிருந்தது. அவன் போட்டு வைத்திருந்த கணக்கிற்கும் இந்த சொத்தின் பாக பிரிவினையில் அவனுக்கு கிடைக்கும் பண மதிப்புக்கும் இடையில் நிறைய தூரம் இருந்தது.

"ஆனா உங்களுக்குதான் கல்யாணம் ஆகலையே.!" வாய் நிற்காமல் கேட்டவனை பார்த்து முறைத்தவள் "உன் தம்பிக்கு கூடதான் கல்யாணம் ஆகல. அதுக்காக அவனை ஏமாத்த போறியா? நான் இதுக்கு மேல கூட கல்யாணம் பண்ணிப்பேன். என்னை கேட்க எவன் இருக்கான்?" எனக் கேட்டாள்.

அவசரமாக மறுத்து தலையசைத்தான் பாலா.

"அண்ணா நீ ஏன் இவ்வளவு பதறுற.? பூரணியோட பாகம் உனக்குத்தான். உன் கணக்குப்படி ஐம்பது சதவீதம் உனக்கு வந்து சேர போகுது. அப்புறம் என்ன?" எனக் கேட்டான் பூமாறன்.

பாலா இடம் வலமாக தலையசைத்தான். "ஆனா நீ.?" என்றான் வருத்தமாக.

"பீல் பண்ணாத மாறா.. என் கம்பெனியில் லாபம் வர ஆரம்பிச்சதும் உனக்கு எல்லா ஹெல்ப்பும் பண்றேன் நான்.!" என்று அவனே சற்று நேரம் கழித்து தைரியம் சொன்னான்.

பூமாறன் புன்னகையோடு சரியென்று தலையசைத்தான்.

பத்திரங்கள் கையெழுத்திடப்பட்டது.

பூர்ணிமாவும் முல்லையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்கும் கண்கள் கலங்கியது. அவர்கள் வாழ்ந்த நாட்கள் நினைவில் வந்துப் போனது.

அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். முல்லை தன் கையில் இருந்த பத்திரங்களை பூமாறனிடம் நீட்டினாள்.

"உனக்கு தேவைன்னா யூஸ் பண்ணிக்க.. அடமானம் மாதிரி வச்சிக்க. லோன் வாங்கிக்க. நான் வந்து கையெழுத்துப் போட்டு தரேன். முழுசா உனக்கே தந்துடலாம்தான். ஆனா எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. சரிபாதியாதான் பிரிச்சி தர முடியும். கொஞ்ச நாள் கழிச்சி பிரிச்சி தரேன்.!" என்றாள்.

அம்மா பேசுவதை கேட்டபடியே அமர்ந்திருந்த பூர்ணிமாவுக்கு நெஞ்சில் அடி விழுந்தது போலிருந்தது‌. அவள் கண் பார்த்திருக்கதான் பூமாறன் முல்லையின் அண்ணன் மகனாக வந்து சேர்ந்தான். பதினேழு வருட இடைவெளியை கூட மறந்து விட்டு சொத்தை உடனே தூக்கி கொடுத்த அவளின் மனம் எதையோ உணர்த்தியது பூரணிக்கு.

தானம் தர்மங்களை வாரி வழங்குபவள்தான் முல்லை. பூர்ணிமா கூட அதை சொல்லி கண்ணடித்து உள்ளாள்.

"யார் வந்து எது கேட்டாலும் தராத அம்மா!" என்று சத்தம் போட்டு உள்ளாள்.

ஆனால் முல்லையின் கைகள் பின் வாங்கியது இல்லை.

'எனக்கு தந்த அன்பும் அது போலதான் தர்மமா?' என யோசித்த பூர்ணிமாவுக்கு விழிகள் கலங்கியது.

முன்னும் போக முடியவில்லை. பின்னும் நகர முடியவில்லை. முல்லையின் அன்பு சுயநலமற்றது என்பதையும் நம்ப மறுத்தாள். அதே சமயம் முல்லை தானமாய் அன்பை தந்தாள் என்பதையும் ஏற்க மறுத்தாள்.

பூர்ணிமாவுக்கு முல்லை தன் சொந்த தாயாக இருக்க வேண்டும் என்று ஆசை. அவள் அப்படி இல்லாத பட்சத்தில்தான் இப்படி கண்டதையும் நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள்.

முல்லை அங்கிருந்து கிளம்பிய பிறகு பூர்ணிமாவும் பாலாவும் நாகேந்திரனின் வீட்டிற்கு வந்தனர்.

அல்லி செய்த சமையல் மணந்துக் கொண்டிருந்தது.

வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த பூர்ணிமா தனது சேலையின் முந்தானையை யாரோ இழுப்பது கண்டு திரும்பிப் பார்த்தாள். அவர்களின் நாய் இவர்களை பின்தொடர்ந்து வந்திருந்தது.

"ரோசி.. இங்கேயே வந்துட்டியா? எப்படி வந்த? வழியில எத்தனை நாய் சண்டைக்கு வந்ததோ?" எனக் கேட்டபடியே நாயின் தலையை வருடி விட்டாள்.

"இந்த நாய் பேரு பப்பி.. ரோசி கிடையாது.." என்ற பாலா நாயிடம் "வீட்டுக்கு கிளம்பு பப்பி.!" என்றான் கண்டிப்போடு.

நாய் வாலை ஆட்டியபடி பூர்ணிமாவின் மடியில் ஏற முயன்றது.

"சொன்னா கேட்க மாட்டியா?" எனக் கேட்ட பாலா நாயை அடிக்க கம்பு தேடினான்.

"விடு பாலா.. இருக்கட்டும்.. நாளைக்கு நான் அங்கே போகும்போது கூட்டி போய் விட்டுடுறேன்.. இது என் டார்லிங்.!" என்றவள் நாயின் கழுத்தில் கை வைத்து உலுக்கினாள்.

அதே நேரத்தில் "பாலா மாமா.!" என்றபடி அங்கே வந்தாள் ரோசினி.

அவளுக்கு தினமும் பாடத்தில் சந்தேகம். அதை பாலாவிடம் மட்டும்தான் கேட்டாக வேண்டும் என்ற நல்ல கொள்கையையும் வைத்திருந்தாள்.

ரோசினியை பார்த்த பாலா சந்தேகத்தோடு மனைவியை பார்த்தான். "நீ ஏன் நாயை அந்த பேர் சொல்லி கூப்பிடுற?" என்றான் சிறு குரலில்.

"உனக்குத்தான் தெரியுமே பாலா.!" என்று கண்ணடித்தவள் நாயோடு வீட்டுக்குள் நுழைந்தாள்.

"ஒரே ஒரு பாடத்தை மட்டும் விளக்கி சொல்லிடுங்க மாமா.." என்ற ரோசினி பாலாவோடு சேர்ந்து சோஃபாவில் அமர்ந்தாள். ஒட்டி உராய்ந்து அவள் குழைந்து பேசுவதை காணுகையில் அல்லி தந்த தேனீர் பச்சை தண்ணீர் போலவே இருந்தது பூர்ணிமாவுக்கு.

கல்லூரி கூட இல்லை. ஆனாலும் அரசு தேர்வுக்கு படிப்பதாக சொல்லி தினமும் இவனை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தாள் அவள். பாலாவை விடவும் அதிக தொல்லையை உணர்ந்தவள் பூர்ணிமாதான்.

"மாமா நீங்க என்ன சோப் யூஸ் பண்றிங்க?" மூச்சை இழுத்து விட்டபடி கேட்டாள் ரோசினி.

"பூர்ணியோடது.!" என்றவனின் பார்வை புத்தகத்தை விட்டு திரும்பவில்லை.

"என்ன மாமா நீங்க? பொண்ணுங்க யூஸ் பண்ற சோப்பெல்லாம் யூஸ் பண்ணிட்டு இருக்கிங்க.." சிணுங்கினாள்.

பாலா பற்களை கடித்தபடி நிமிர்ந்தான்.

"வியர்வை நாத்தம் போக குளிக்கிறேன். அதுல என்ன பொண்ணு சோப்.. பையன் சோப்?" எரிச்சலாக கேட்டான்.

பூர்ணிமா தனக்கு வர இருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"அப்படி இல்ல மாமா.!" என்று சிணுங்கிய ரோசினியை முறைத்தவன் "எனக்கு ஏற்கனவே தலைக்கு மேல வேலை. நீ கெஞ்சி கேட்டியேன்னு உனக்கு பாடம் சொல்லி தர ஒத்துக்கிட்டேன். ஆனா நீ இவ்வளவு டிஸ்டர்ப் பண்றதா இருந்தா தயவு செஞ்சி நாளையிலிருந்து இங்கே வராத ரோசினி. உன் அண்ணனையோ அல்லது அந்த இரண்டு வீட்டு மாமன்களையோ கேளு.. ஒரு கல்யாணமான பையன்கிட்ட நீ தொட்டு தொட்டு பேசிட்டு இருந்தா எல்லாரும் தப்பா பேசுவாங்க.!" என்றான்.

விருட்டென்று எழுந்து நின்றாள் ரோசினி.

"எல்லோரையும் உங்க அத்தை மாதிரியே நினைக்காதிங்க மாமா.." என்றவள் டீப்பாயின் மீதிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி போனாள்.

இரவில் உறங்க வேண்டி தனது சட்டையை கழட்டிக் கொண்டிருந்த பாலாவின் தோளை பற்றி தன் புறம் திருப்பினாள் பூர்ணிமா.

"என் அம்மா இப்படிதான் என் அப்பாவை மயக்கிக்கிட்டு இருந்தாங்களா?" என்றுக் கேட்டாள்.

பாலா இடம் வலமாக தலையசைத்தான்.

"அப்புறம் ஏன் அவங்களை நீ நடத்தை கெட்டவங்கன்னு சொன்ன? இப்ப கூட ரோசினியை கண்டிக்கல நீ.!" என்றாள் கோபத்தோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN