பௌர்ணமி 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் மனதுக்குள் நடந்த போராட்டத்தை வெளி சொல்ல தெரியவில்லை பாலாவுக்கு.

"என் அம்மாவை நான் முழு மனசோடு ஏத்துக்காததுக்கு காரணம் நீதான் பாலா.!" பூர்ணிமாவின் குற்றம் சாட்டினாள்.

"உன் அம்மா உன்னை பதினேழு வருசம் வளர்த்தினாங்க பூர்ணி.!"

பற்களை கடித்தாள். அவனின் முகத்தை வெறித்தாள்.

"ஆமா.. நான் பைத்தியம் பாலா.. பதினேழு வருசம் வளர்த்திய என் அம்மாவை நம்பாம இன்னைக்கு வந்த உன் வார்த்தையை நம்பிட்டேன்.. நிஜமாவே முட்டாள்தனம்தான் இது.!" என்றவள் அவனை விட்டு விலகினாள்.

"பூர்ணி.!" அவளை தொட கையை நீட்டினான். பூர்ணிமா மறுப்பாக தலையசைத்தபடி பின்னால் நகர்ந்தாள்.

"உன்னை நம்பியது என் தப்புதான். நான் புரிஞ்சிக்கிட்டேன்.‌ நான் ரொம்ப கெட்டவ. சொந்த அம்மாவை நம்பாம யாரோ சொன்னதையெல்லாம் கேட்டு மனசுல போட்டு குழப்பிட்டேன்.!"

பாலா தன் நெற்றியை தேய்த்தான்.

"அப்படி இல்ல பூர்ணி.!"

"அப்படிதான்.. மைன்ட் ரொம்ப குழம்புது.. அப்புறம் பேசலாம்!" என்றவள் அந்த அறையை விட்டு வெளியே நடந்தாள்.

ஹாலில் நாகேந்திரனின் புகைப்படத்தின் முன்னால் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.

சாய்ந்து படுத்தவளுக்கு நினைவுகள் ரங்க ராட்டினம் போல சுழன்றது. அம்மாவை பற்றி பாலா சொன்னது இன்னமும் அவளின் மனதில் குட்டையை குழப்பிக் கொண்டுதான் இருந்தது.

ஐந்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது. பூர்ணிமாவின் அருகே வந்து அமர்ந்து விட்டான் பாலா.

"தூர போ.!" மறுபக்கம் திரும்பியபடி அவனை விரட்டினாள்.

"உண்மையிலேயே எனக்கு அப்ப அவ்வளவா தெரியாது பூர்ணி. நான் மலர் அத்தை மேல ரொம்ப பாசம் வச்சிருந்தேன். அந்த டைம்ல உன் அப்பா வந்து கொழுந்தியாளும் தானும் காதலிக்கறதா சொன்னாரு. அப்பவே முல்லை அத்தை மறுத்தாங்க. ஆனா அப்பா தாத்தா யாருமே நம்பல. நான் சின்ன பையன். எனக்கு என்ன தெரியும்? யார் என்ன சொல்றாங்களோ அதைதான் நம்பும் இந்த மனசு. அதான் நம்பிட்டேன். உன் அம்மாவையும் அப்படி வெறுத்துட்டேன்.!" என்றான் சோகமான குரலில்.

பூர்ணிமா அவன் புறம் திரும்பினாள். "ஆனா நான் ஒன்னும் குழந்தை கிடையாது.!"

அவளின் தலையை வருடி விட்டவன் "ஆனா குழந்தை மனசு.." என்றான்.

கிண்டல் செய்கிறானோ என்று சந்தேகமாக பார்த்தாள்.

அவளை இரு கைகளிலும் அள்ளி தூக்கினான். விழுந்து விடக் கூடாது என்ற பயத்தில் அனிச்சையாக அவனின் கழுத்தை கட்டிக் கொண்டது அவளின் கரங்கள்.

"விவரம் தெரியலன்னாவோ, சரியா முடிவெடுக்க தெரியலன்னாவோ குழந்தை போல செயல்படாத மனசுன்னுதான் அர்த்தம் பூர்ணி.!" என்றவன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவனின் நெஞ்சில் தலை சாய்த்தவள் "நீ ரொம்ப பேட் பாய்.. என்னை சண்டை போட கூட விட மாட்டேங்கிற.!" என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

"உண்மையை சொல்லணும்ன்னா நீதான் இதுல வீக்.. மாறனுக்கும் எனக்கும் சண்டை வந்தா நான்தான் சமாதானம் செய்வேன். ஆனா அவன் கோபம் குறைய ஒரு வாரமே ஆகும். நீ எவ்வளவோ பரவால்ல. நிஜமா இதுக்காகவே ஐ லவ் யூ வெரி மச்.!" என்றவன் அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

பூர்ணிமா அவனை முறைத்தாள்.

"உன்னை கொஞ்சுறேன். அவனை கொஞ்சுறது இல்ல. அதனாலதான் அந்த ஒரு வார லேட் போல.!" என்றான் அவனே யோசித்து விட்டு.

கட்டிலின் மீது அரை அடி இடைவெளி இருக்கும்போதே அவளை கை விட்டான். விழுந்தவள் கோபத்தோடு எழுந்து அமர்ந்தாள்.

"மாறா மாமாவுக்கும் உனக்கும் நடுவுல ஏன் சண்டை?" எனக் கேட்டாள்.

"அப்கோர்ஸ்.. என் வாய்தான்.!" சிரிப்போடு சொன்னவன் அவளருகே விழுந்தான்.

"முன்கோபத்துல எதாவது வாய் விட்டுடுவேன். அப்புறம் அவன் கோச்சிப்பான்.." என்றவன் அவளை தன்னருகே இழுத்தான். அவள் விழுந்ததும் அவளின் கழுத்தை கட்டிக் கொண்டான்.

"என் அம்மா.."

"உன் அம்மா நல்லவங்கதான் பூர்ணி. அவங்க வேற ஒருத்தங்களை லவ் பண்ணிட்டு இருந்திருக்காங்க. உன் அப்பா நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணாம இருந்திருந்தா அவங்க லைஃப் வேற டிராக்ல ரொம்ப நல்லா போயிட்டு இருந்திருக்கும். நான் என் தப்பை உணர்ந்துட்டேன். உனக்கு என்ன பிரச்சனைன்னா புதுசா அப்பா அம்மான்னு சொல்லவும் மனசு குழம்பிடுச்சி. உங்க அப்பனை வேற நம்ம வீட்டுல பைத்தியக்காரனா பார்க்கவும் ரொம்ப கில்டி பீல் வந்துடுச்சி உனக்கு. அதான் வளர்த்த அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணா அது உயிர் தந்தவங்களுக்கு துரோகம் செஞ்ச மாதிரி ஆகிடுமோன்னு பயப்படுற.. எப்பவும் உயிரோடு இருப்பவங்களை விட செத்தவங்கதான் அதிகம் முக்கியத்துவமானவங்களா மாறிடுறாங்க. அதனால அதுக்கு நீ பயப்படாத.. எல்லாம் சரியா போயிடும். மூணு மாசம் உன் அப்பாவுக்கு விளக்கேத்தி வை. அப்புறம் உன் மனசுல இருக்கும் சிறு சிறு துரோக உணர்வும் போயிடும். அப்புறம் முல்லை அத்தையை நீ பழையபடி பார்ப்ப. எனக்கு நம்பிக்கை இருக்கு." என்றான்.

இந்த முக்கோண உறவு முறைகளில் பாலா மட்டும்தான் தனக்கு கிடைத்த ஒரே உருப்படி என்று எண்ணி மனதுக்குள் சிரித்தாள் பூர்ணிமா. அவனை அணைத்துக் கொண்டாள்.

"நான் கோச்சிக்கிட்டா என் அம்மா சமாதானம் செய்யவே மாட்டாங்க. நான்தான் கொஞ்ச நேரம் கழிச்சி சாரி கேட்டு அழுவேன்.!" என்றாள் அவனின் முகம் பார்த்து.

சிரித்தவன் அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.

"குட்டி பாப்பாக்கள் கோச்சிக்கறதை விட அவங்களை சமாதானம் செய்றது ரசனையானது.!" அவளின் புருவத்தின் மீது முத்தமிட்டபடி சொன்னான்.

அவனின் கையை தட்டி விட்டாள்.

"நான் ஒன்னும் குட்டி பாப்பா இல்ல.!"

"ஆமா.." என்றவனின் குரலில் இருந்த சிரிப்பு வேறு ஒன்றை சொல்லியது.

நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது. பாலாவும் பூர்ணிமாவும் புது மண வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.

முல்லையோடு பேசிக் கொண்டுதான் இருந்தாள் பூர்ணிமா. ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த விரிசல் இன்னும் சரியாகவில்லை.

பாலா அன்று தன் கம்பெனியிலிருந்து மதியமே திரும்பி விட்டான்.

"நான் இரண்டு நாள்ல ஜெர்மனி போகணும்.." என்றான் நாயோடு விளையாடிக் கொண்டிருந்த பூர்ணிமாவிடம்.

பூர்ணிமா நாயை விட்டுவிட்டு இவனிடம் வந்தாள்.

"வேலை விசயமா போறேன் பூர்ணி. இரண்டு வாரத்துக்குள்ள திரும்பி வந்துடுவேன்.!"

"ஆனா நான்.." என்றவளின் முகத்தை அள்ளியவன் "போன்ல பேசலாம். இரண்டு வாரம்தானே!?" என்றான்.

பூர்ணிமா சரியென்று தலையசைத்தாள். ஆனாலும் இவனை விட்டு பிரிந்து இருக்க வேண்டுமா என்று கவலையாக இருந்தது.

அவளின் இதழை அவன் தீண்ட இருந்த நேரத்தில் வீட்டின் காலிங்பெல் ஒலித்தது.

"இந்த வீட்டுல காலிங்பெல் கூட இருக்கா?" கிண்டலாக கேட்டவனின் தோளில் அடித்த பூர்ணிமா அவன் விட்டு விலகினாள்.‌ சென்று கதவை திறந்தாள். அரை வயது மனிதர் ஒருவர் நின்றிருந்தார்.

"பூர்ணிமா.?" என்றார் விரல் நீட்டி.

"நான்தான்..‌ நீங்க?"

"நான் வக்கீல் லாரன்ஸ்.." என்றவர் வீட்டுக்குள் நடந்தார்.

"உங்க அப்பாவோட வக்கீல்.!" என்றவர் நாகேந்திரனின் புகைப்படத்தை கண்டுவிட்டு பூர்ணிமாவின் புறம் திருப்பினார்.

"உங்களோடு பேசணும்.." என்றார்.

பூர்ணிமா சோபாவை கை காட்டினாள். பாலாவை கண்டவர் "நீங்க?" என்றார் குழப்பத்தோடு.

"என் ஹஸ்பண்ட்.." என்றபடியே வந்து அவரின் முன்னால் அமர்ந்தாள் பூர்ணிமா.

லாரன்ஸ் தனது பேக்கில் இருந்து சில பேப்பர்களை எடுத்தார். பூர்ணிமாவுக்கும் தனக்கும் இடையில் இருந்த டீப்பாயின் மீது வைத்தார்.

"உங்க அப்பா அவரோட சொத்துக்களை உங்க பேர்ல உயிலா எழுதி வச்சிருக்காரு.." என்றவரின் அருகே அமர்ந்தான் பாலா.

அவர் கையில் இருந்த பேப்பர் நகலை வாங்கி படிக்க‌ ஆரம்பித்தான்.

"அப்புறம் இது உங்களுக்காக.." என்றபடியே கவர் ஒன்றை நீட்டினார். பூர்ணிமா தயக்கத்தோடு கவரை வாங்கினாள்.

"அவர் டெத் ஆன டைம்ல நான் என் பொண்ணு கல்யாணத்துல பிசியா இருந்துட்டேன். அதனாலதான் அப்பவே வர முடியல.." என்றவர் எழுந்து நின்றார்.

"உங்களுக்கு வசதி படும்போது சொத்தை மாத்தி எழுதிக்கலாம்.. எனக்கு அவசர வேலை இருக்கு நான் கிளம்பணும். இது என் விசிட்டிங் கார்ட்.. உங்களுக்கு ஏதாவது சந்தேகம்.. இல்ல ஏதாவது என்கிட்ட கேட்கணும்ன்னா எப்ப வேணாலும் எனக்கு போன் பண்ணுங்க.." என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

"பாஸ்ட் புட் மாதிரி பாஸ்ட் வக்கீல் போல.!" கேலி செய்த பாலா பேப்பர் நகலை பூர்ணிமாவிடம் நீட்டினான்.

"உங்கப்பன் சொத்து.." என்றான் ஒரு மாதிரி குரலில்.

"ஆரம்பிக்காத ப்ளீஸ்.." என்றவள் தன் கையில் இருந்த கவரை பிரித்தாள். உள்ளிருந்து கடிதங்களும் புகைப்படங்கள் சிலவும் கீழே விழுந்தது.

புகைப்படங்களை எடுத்தாள். அவளின் சிறு வயது புகைப்படம். நாகேந்திரனும், மலரும் அவளின் இரு புறமும் இருந்தார்கள். சில புகைப்படங்களில் நாகேந்திரன் அவளை தூக்கி வைத்திருந்தான். சிலவற்றில் மலரை அணைத்துக் கொண்டிருந்தான்.

புகைப்படங்களை கண்டவளுக்கு கண்கள் கலங்குவது போலிருந்தது. தனது தாய் தந்தையர் என்ற நினைவு அவளின் மனதை பாரமாக அழுத்தியது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியை நம்ப மறுத்தவள் அவள். அவளே இன்று சரிந்து விழுந்துக் கொண்டிருந்தாள்.

புகைப்படங்களை மேஜை மேல் வைத்தாள்.

இரு கடிதங்களையும் ஆளுக்கொன்றாக கையில் எடுத்தனர்.

"பூரணிம்மா.. நான் உனக்கு அப்பாவா இருக்கும் தகுதியிலேயே இல்ல. இரண்டு பேர் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன் நான். ஆனா மலர் இப்படி செய்வான்னு சத்தியமா உனக்கு தெரியாது பூரணி. நான் அவளை எவ்வளவு காதலிச்சேன் தெரியுமா? அதுக்கு பதிலா அவ என்னை கொன்னிருக்கலாமே. நிம்மதியா செத்துப் போயிருப்பேன். முல்லை உனக்காகவாவது என்னை கல்யாணம் பண்ணிப்பான்னு கணக்குப் போட்டு தற்கொலை செய்வான்னு கனவுல கூட நினைக்கல.

ஆசை.. ஏதோ திடீர் ஆசை. மலர் என் மேல வச்சு காதல் எனக்கு போதையா மாறி போச்சி. எனக்கு சின்னதா அடிப்பட்டாலும் அவளுக்கு அழுகை வரும். என்னையே சுத்தி சுத்தி வருவா. என்னை பொத்தி வச்சி பாதுகாக்க நினைப்பா. அவளோட பாசத்தையும் நேசத்தையும் பார்த்து பார்த்து எனக்கு நான் என்னவோ பெரிய ஆள்ன்னு நினைப்பு வந்துடுச்சி. லவ் எப்பவும் மியூச்சுவலா இருக்கும் வரைதான் நல்லது. என்னோடதும் அப்படிதான் இருந்தது. ஆனா எக்ஸ்ட்ரா லவ் கேட்டது. முல்லைதான் உன்னை வளர்த்தினா. உன்னை பார்க்க வரும்போதெல்லாம் அவ உன் மேல காட்டிய பாசத்தை கண்டு என் மனசு முட்டாள்தனமா ஆசைப்பட ஆரம்பிச்சிடுச்சி. உன்னை பிடிச்சிருக்கு. என்னையும் அவளுக்கு பிடிக்கும்தானேன்னு நினைச்சேன். மலர் என் மேல வச்ச காதல் பத்தி நல்லா தெரியும். அவ மறுக்க மாட்டான்னு நம்பினேன். அதனால்தான் என் ஆசையை வெளியே சொன்னேன். நான் மட்டும் காதலிக்கிறேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்கன்னுதான் முல்லையும் என்னை விரும்புறதா சொன்னேன். நான் செஞ்ச தப்புக்கு மலர் தண்டனை தந்துட்டா. முல்லையை அவ வீட்டுல யாரும் நம்பல. உண்மையை சொல்லும் தைரியம் எனக்கு இல்ல. அவ உன்னை தூக்கிட்டு என்னை தாண்டி போனா. என்னை கேவலமா பார்த்துட்டு போனா.. வருங்காலத்துல எந்தவொரு சூழ்நிலையிலும் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிட கூடாதுன்னு பயந்து ஓடினா. அவளோட அந்த உள்ள உறுதிக்கு முன்னாடி நான் சின்ன கொசு போல மாறிட்டேன்.

என் வாழ்க்கையே அழிஞ்சிடுச்சி. நான்தான் அழிச்சிக்கிட்டேன். பரதேசம் போனவனா என் தெய்வமா இருந்தவ செத்துப் போன வீட்டுலயே இருக்க ஆரம்பிச்சிட்டேன். உன்னை நினைக்கவே இல்ல நான். இத்தனை நாளா எனக்கு கிடைச்சிட்டு இருந்த மொத்த அன்பும் முடிஞ்சி போயிடுச்சேன்னு நான் அனாதை போல உட்கார்ந்தேன்.‌‌ பேராசை எவ்வளவு பெரிய நஷ்டத்தை தரும்ன்னு அப்போதான் புரிஞ்சிக்கிட்டேன்.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. வக்கீல் லாரன்ஸை ஞாபகம் வச்சிருப்போர் கமெண்ட் செய்து விட்டு செல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..🧚
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN