பௌர்ணமி 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலா ஹோட்டல் அறையில் படுத்திருந்தான். வேலை விசயமாக வந்ததாக பெயர் மட்டும்தான். ஆனால் அவன் எதையும் செய்யவில்லை. மனம் குழம்பிய நிலையில் அமைதியாக படுத்திருந்தான்.

ஊரிலிருந்து வந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டது. இரண்டு நாட்களாக ஹோட்டல் அறையை விட்டு கூட வெளியே நடக்கவில்லை அவன். கடிதத்தின் வார்த்தைகள் அவனின் நினைவுகளை விட்டு அகல மறுத்தது.

குற்ற உணர்வு அவனை கொன்றுக் கொண்டிருந்தது. முல்லை அத்தையின் மீதான இத்தனை ஆண்டு கால வெறுப்பு இப்போது அவனை பழி வாங்க ஆரம்பித்தது.

அத்தை சொன்னதை தான் ஏன் நம்பாமல் போனோம் என்று நொந்துக் கொண்டான். நாகேந்திரன் மீது இருந்த கோபம் இப்போது ஆயிரம் லட்சம் மடங்கு அதிகமாகி இருந்தது.

நாகேந்திரனால் தன் வீட்டு பெண்களின் வாழ்க்கைகள் பறி போனது என்றே இத்தனை வருடம் கோபம் கொண்டிருந்தவன் அந்த வாழ்க்கையும் சூழ்ச்சி செய்யப்பட்டு பறிக்கப்பட்டுள்ளது என்பது புரிந்து ஆத்திரத்தில் இருந்தான்.

அவன் தன்னையும் மீறி தனது மனித தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருந்தான் என்றும் சொல்லலாம்.

போன் ஒலித்தது. கம்பெனி ஒப்பந்தம் காரணமாக அவன் கலந்துக் கொள்ள வேண்டிய இடத்திலிருந்துதான் போன் வந்திருந்தது. எடுத்து பேசினான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் மீட்டிங் என்று தகவல் சொன்னார்கள். சரியென்று விட்டு போனை வைத்தான்.

எழ விருப்பம் இல்லை. கலந்தாய்வில் கலந்துக் கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் தேவை இருந்தது. அந்த தேவையின் காரணமாகதான் எழுந்து நின்றான். மனதின் பாரத்தை சற்று நேரத்திற்கு ஒதுக்கி தள்ளி விட்டு தனது வேலையில் கவனம் செலுத்தினான்.

அவன் குளித்து உடை மாற்றி வெளியே கிளம்பிய நேரத்தில் பூர்ணிமா போன் செய்தாள்.

"ஹலோ பாலா." என்றாள்.

"ம். பூர்ணி.." மனைவியோடு கூட சரியாக பேச முடியவில்லை அவனால். அந்த அளவிற்கு அவனின் மனம் உடைந்து கிடந்தது. முல்லை தன்னிடம் நம்ப சொல்லி கேட்டது மட்டும்தான் நினைவிற்கு வந்தது.

"சாப்பிட்டியா பாலா?" அக்கறையாக கேட்டாள்.

"சாப்பிட்டேன் பூர்ணி.. நீ என்ன பண்ற?"

"அப்பா போட்டோவுல தூசி இருந்தது பாலா. கண்ணாடியை துடைச்சிட்டு இருந்தேன்."

"ஓ.. சரி எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பண்றேன்.!" என்றவன் அவள் பதில் சொல்லும் முன்பே அழைப்பை துண்டித்து விட்டான்.

பூர்ணிமாவின் மீது இருந்த மனதாங்கலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது அவனுக்கு. கடிதத்தை படித்தவுடன் "உன் அப்பாதான் தப்பு பண்ணியிருக்காரு பூர்ணி.!" என்றான்.

பூர்ணிமா சில நொடிகள் மௌனமாக இருந்தாள். "இல்லன்னு சொல்லல பாலா.. ஆனா அவர் சொன்னதும் உடனே நம்பியவங்களை என்ன சொல்றதுன்னுதான் தெரியல.." என்றாள். அவளின் முதல் பதிலே அவனை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.

"உன் அப்பா மேல தப்பே இல்லன்னு சொல்றியா?" தனது குரலில் இருந்த கோபத்தையும் எரிச்சலையும் மறைக்க பெரும்பாடு பட்டான்.

பூர்ணிமா இடம் வலமாக தலையசைத்தாள். "கண்டிப்பா தப்பு இருக்கு. ஆனா அவரை விடவும் அதிக தப்பானவங்களை நான் பார்க்கறேன். நம்பிக்கை எப்படி இருக்கணும். அது மனசுல தானா இருக்கணும். யாரோ ஒருத்தர் பழி சொல்றதை கேட்டு சொந்த பொண்ணை நம்பல தாத்தாவும் பாட்டியும். நீயும் கூட முல்லை அம்மாவை நம்பல. தப்பு உங்க மேலேயும் இருக்கு. அதை கொஞ்சம் கன்சிடர் பண்ணு.!" என்றவள் கடிதங்களையும் மற்ற பேப்பர்களையும் பத்திரப்படுத்த எடுத்துச் சென்றாள்.

கடிதத்தை விடவும் இவளின் பேச்சு அவனை அதிகம் சோதித்து விட்டது. பழியை சுலபமாக திசை திருப்பி விட்டாளே என்று கோபப்பட்டவனுக்கு இன்னமும் கோபம் தீரவில்லை. அதிலும் அவள் இந்த நாளிலும் கூட புகுந்த வீட்டிற்கு செல்லாமல் அப்பாவின் புகைப்படத்திற்கு விளக்கு வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்று அதிகமாக கோபப்பட்டான். அந்த கோபத்தை அவளிடம் காட்டினால் மனம் வாடுவாளோ என்று கவலைக் கொண்டு தன் கோபத்தை தனக்குள் அடக்கிக் கொண்டிருந்தான்.

கலந்தாய்வில் சிரமப்பட்டு கவனம் செலுத்தினான். அடுத்த நாளில் இருந்து அங்கிருந்த கம்பெனியில் அவனுக்கு வேலை இருந்தது. பயிற்சிகளில் கலந்துக் கொள்ளவும் சிரமமாக இருந்தது.

பூர்ணிமா காப்பியை கையில் எடுத்தாள். அல்லி மற்றொரு கோப்பையை பூமாறனிடம் நீட்டினாள்.

அல்லி அங்கிருந்து சென்ற பிறகு பூர்ணிமாவின் முகம் பார்த்தான் பூமாறன்.

"இந்த லெட்டர் இருந்தாதான் நீ அத்தையை நம்புவன்னா அதுக்கு பேர் நம்பிக்கை கிடையாது பூரணி.!" என்றான்.

கருப்பு சட்டை, சிகப்பு வேட்டியில் இருந்தான் அவன். தாடியின் முடிகள் கொஞ்சமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. பாலாவை விட இவன் எப்போதுமே வசீகரமாகதான் தெரிந்தான் அவளுக்கு.

"சீரியஸா பேசிட்டு இருக்கேன்‌. நீ கொழுந்தனாரை சைட் அடிச்சிட்டு இருக்க.!" நெற்றியில் அடித்துக் கொண்டான். அவனின் தோளில் அடித்தாள் அவள். "கொழுந்தன் ஆகும் முன்னாடியே நீங்க என் மாமா பையன்.. உங்களை நான் சைட் அடிக்கல. சும்மாதான் பார்த்தேன்.. ஓவர் கான்பிடென்ட் வேணாம் ராசா.!" கிண்டல் செய்தாள்.

"டிராக்கை மாத்தாத.. உன் அப்பா செஞ்ச காரியத்துக்கு எனக்கு அவரை கொல்லணும்ன்னு தோணுது.!"

காப்பியை பெரிய விழுங்காய் குடித்தாள். "புதைச்சிட்டோம். உங்களுக்கு அவ்வளவு வெறியா இருந்தா போய் பிணத்தை தோண்டி எடுத்து கொல்லுங்க.!" என்றாள். அவளின் நக்கல் அவனுக்கு எரிச்சலை தந்தது.

"என் அப்பா தப்பானவர்தான். இல்லன்னு நான் சொல்லல. ஆனா அவரை விட கெட்டவங்கதான் எனக்கு பூதாகரமா தெரியறாங்க.. நீங்க எப்படின்னா.. உங்க மேல இருக்கும் தவறுகளை மறைக்க ஒரே ஒரு மனுசன் மேல மொத்தமா பழி போட்டுட்டு இருக்கிங்க.. அன்னைக்கு என் அம்மா வந்து முல்லை அம்மாவை பொண்ணு கேட்டபோது என் அம்மாவுக்கு சரியான முறையில் உங்க வீட்டுல யாராவது அட்வைஸ் பண்ணியிருந்தா என் அம்மா இன்னைக்கு உயிரோடு இருந்திருப்பாங்க. என் அப்பா செஞ்சது எப்படிப்பட்ட தப்புன்னு ஒருத்தராவது விலக்கிச் சொல்லியிருந்தா அவர் தன் மாயையிலிருந்து எழுந்து வந்திருப்பார்.. உங்களோட அலட்சியத்தால என் குடும்பம் அழிஞ்சி போச்சி மாமா.!" என்றவள் எழுந்து நின்றாள்.

பூமாறனுக்கு இது புதிய பூர்ணிமாவாக இருந்தது. அவளுக்குள் இப்படி ஒரு பிற்போக்குதனமான சிந்தனைகள் இருக்கும் என்று அவன் நினைக்கவேயில்லை. தந்தைக்கு நன்றாக பரிந்து பேசுகிறாள் என்பது அவனுக்கும் கோபத்தை தந்தது.

தனது கோபத்தை தன் அண்ணனிடமும் சொன்னான் பூமாறன். பாலா ஏற்கனவே எரிந்துக் கொண்டிருந்தான். தம்பி சொன்னது அவனின் நெஞ்சின் நெருப்புக்கு எண்ணெய் விட்டார் போலிருந்தது.

பூர்ணிமா இரவை வெறித்தபடி கட்டிலில் படுத்தாள். பாலாவுக்கு கைபேசியில் அழைக்க நினைத்தாள். ஆனால் அவனின் தயக்கமும் விலகலும் அவளை யோசிக்க வைத்தது. தான் தன் தந்தைக்கு ஆதரவாக பேசுவதே இதற்கு காரணம் என்று அவளுக்கும் புரிந்தது. ஆனால் அவளின் கருத்து மாறவில்லை.

நாகேந்திரனின் மீது அவளுக்கு பரிதாபமே வந்தது. சிறு சபலம் அவருடையது. அதை சுற்றி இருந்தவர்கள் சரியாக கையாளவில்லை என்றே நினைத்தாள்.

போனை கையில் எடுத்தவள் சில நொடிகளுக்கு பிறகு அப்படியே வைத்து விட்டாள். "அவன் கூப்பிடட்டும்.!" என்றாள்.

உறக்கமே வரவில்லை. அவனின் அணைப்பை கேட்டது பழகி பழகி அவனின் அருகாமையில் கரைந்து போன உடல்.

இப்போது என்ன செய்வான் என்ற எண்ணம் அவளின் சிந்தனையில் புகுந்து இம்சித்துக் கொண்டிருந்தது.

ஒரு வாரம் ஓடி விட்டது.

அன்றைக்கு காலை நேரத்திலேயே ரோசினி வந்திருந்தாள். "பாலா மாமா எங்கே?" என்றபடிதான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தாள்.

"ஜெர்மன் போயிருக்கார்.. உனக்கு என்ன வேணும்?" இவளை காணும்போது குரலில் தானாய் எரிச்சல் சேர்ந்தது‌.

"பாடம் சம்பந்தமா மாமாக்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்ன்னு வந்தேன்.!" என்றவள் இருக்கையில் வந்து அமர்ந்தாள். தலை சாய்த்த வண்ணம் பூர்ணிமாவை பார்த்தாள்.

"உன் கண்ணுல ஏன் திமிர் தெரியுது?" சந்தேகமாக கேட்டாள்.

பூர்ணிமா விழிகளை சுழற்றினாள். "அவர் இல்லன்னு சொல்லிட்டேன் இல்ல. அப்புறம் ஏன் இன்னமும் இங்கே இருக்க?"

"நீ என் அக்கா தெரியுமா?" எனக் கேட்டவளை நக்கலாக பார்த்தவள் "இப்படி ஒரு தங்கச்சி எனக்கு சும்மா தந்தா கூட வேணாம்.!" என்று முணுமுணுத்தாள்.

"எனக்கு தலைவலி. நான் ரெஸ்ட் எடுக்க போறேன்.!" என்றவள் அவளை விட்டுவிட்டு நடந்தாள்.

"அகங்காரம் ஓவர் இவளுக்கு.!" என்றபடியே எழுந்து நின்றாள் ரோசினி. அவள் வெளியே வந்த நேரத்தில் பூமாறன் வந்தான்.

"மாமா.." என்றவளை கண்டு புன்னகைத்தவன் "எனி மேட்டர்?" எனக் கேட்டான்.

"பாடத்துல சந்தேகம்.!" புத்தகத்தை காட்டினாள். கைகளை தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டான்.

"உனக்கு பாடம் சொல்லி தந்தா என் சின்ன அறிவும் கரைஞ்சி போயிடும். நான் ரிஸ்க் எடுக்கல ராசாத்தி. நீ போய் வேற யார்க்கிட்டயாவது கேளு.." என்றவன் வீட்டுக்குள் நடந்தான்.

"பாலா மாமாதான் இல்லையே.. உனக்கு என்ன இங்கே வேலை?" ரோசினியின் கேள்வி அவனின் செவிகள் வரை சென்று சேரவில்லை.

பூர்ணிமா தன் தந்தையின் புகைப்படத்தின் முன் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள். அதை காணும் போதே கடுப்பாக இருந்தது பூமாறனுக்கு. இப்படியே திரும்பி போய் விடலாமா என அவன் நினைத்த நேரத்தில் "மாறா மாமா.!" என்று அழைத்து நிறுத்தினாள் பூர்ணிமா.

"ம்.!" என்றபடியே வந்து இருக்கை ஒன்றில் அமர்ந்தான் அவன்.

"நீங்க எல்லாம் என் அப்பாவை தப்பாவே பார்க்கறிங்க.!" என்ற பூர்ணிமா தந்தை புகைப்படத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். அருகே இருந்த ஊதுவர்த்தியை எடுத்து பற்ற வைத்தாள்.‌ அங்கிருந்த ஸ்டேன்டில் அதை வைத்தாள்.

"உங்க அப்பா யோக்கியம் அப்படி.."

"எல்லா விசயத்திலும் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இதுல மட்டும் எல்லோரும் ஒரே வித வெறுப்போடு இருக்கிங்க.!" பெருமூச்சோடு சொன்னவள் தந்தையை வணங்கி விட்டு எழுந்து நின்றாள்.

"என் அப்பா விளையாட்டா ஆரம்பிச்சது வினையாகி இருக்கு. ஆனா அது முழு காரணமும் நீங்க மட்டும்தான்.!" கைகளை கட்டியபடி சொன்னாள்.

"*** விளையாட்டு. உன் அப்பா ஒன்னும் குழந்தை கிடையாது. கல்யாணம் ஆன ஒரு ஆம்பள இன்னொரு பொண்ணை லவ் பண்றேன்னு சொல்றது விளையாட்டு கிடையாது பூர்ணி. நீ இதே போல எண்ணத்தோடு இருந்தா நிச்சயம் இது நம்ம பேமிலிக்குள்ள பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். எல்லாருக்கும் அப்பா முக்கியம்தான். ஆனா உன் கெட்ட அப்பாவுக்கு நீ ஒரேடியா வக்காலத்து வாங்க தேவையில்ல. செத்தது உன் மலர் அம்மா. வாழ்க்கையை இழந்தது உன் முல்லை அம்மா. சொந்தங்கள் இருந்தும் அனாதையானது நீ. ஆனா முல்லை அத்தை மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்ல கூட அவருக்கு வார்த்தைகள் கிடைக்காம போயிருக்கு. உன் அப்பா செஞ்ச துரோகங்களின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது. அதை நீதான் புரிஞ்சிக்கல.. கொஞ்சமாவது உன் மூளையை யூஸ் பண்ணு. சிந்திக்க கத்துக்கோ இடியட்.." அவன் அவளை திட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தரையில் இருந்த விளக்கின் திரியில் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பு சுடர் அங்கே நின்றிருந்த பூர்ணிமாவின் சேலை முந்தானை தலைப்பை தீண்ட ஆரம்பித்திருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN