குரங்கு கூட்டம் 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜீவன் அதிர்ச்சியில் தன் வாயை பொத்தினான். நொடியில் நடந்து விட்ட அசம்பாவிதத்தை அவன் கனவில் கூட நினைக்கவில்லை‌.

"மை காட்.. சிஸ்டர் நீங்க என்ன பண்ணி இருக்கிங்க?" மிருதுளாவிடம் கேட்டான்.

மிருதுளா அவன் புறம் திரும்பிப் பார்த்தாள். வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தாள். தான் செய்த செயலின் பெருமிதம் அவளின் கண்களில் பொங்கி வழிந்தது. "மாஃபியா கும்பல்ல சேர்ந்த ஒருத்தனை கொன்னிருக்கேன். யார் யாரெல்லாம் என்னை பாராட்டுவாங்க? அரசாங்கத்துல இருந்து எவ்வளவு பரிசு தொகை வரும்?" எனக் கேட்டவள் ராகுலின் புறம் பார்த்தாள். "சீனியர் நான் இப்ப அழகா இருக்கேன்னா? நியூஸ்க்காக போட்டோ வீடியோ எடுத்தா கொஞ்சமாவது லட்சணமா இருப்பேனா?" எனக் கேட்டாள். மறக்காமல் பார்லர் சென்று விட்டு வந்த பிறகே செய்திகளுக்கு பேட்டி தர வேண்டும் என்று நினைத்தாள்.

"ஆனா இப்பவும் கூட லட்சணமாதான் இருப்பேன்.." அவளுக்கு அவளே சமாதானம் செய்துக் கொண்டாள்.

தன் முன் நின்றிருந்த கவர்னரோடு கை குலுக்கினாள் மிருதுளா. அவர் அணிவித்த பதக்கத்தை நிமிர்ந்த நெஞ்சோடு பெற்றுக் கொண்டாள். நான்கு புறங்களில் இருந்தும் கேமராவின் வெளிச்சங்கள் பளிச்சிட்டது. கண்களை சிமிட்டாமல் இருக்க சிரமப்பட்டாள்.

"உங்களோட சேவை இந்த நாட்டுக்கு தேவை மிஸ் மிருதுளா.." என்றார் கவர்னர்.

"நன்றிகள் கவர்னர்.!" என்றுவிட்டு மேடையை விட்டு கீழிறங்கினாள் மிருதுளா. "மேடம்.. எங்க சேனலுக்கு பேட்டி கொடுக்க முடியுமா?" எனக் கேட்டவரின் மைக்கை பார்த்தாள். உலகளாவிய செய்தி நிறுவனம் ஒன்று அது.

"மன்னிக்கவும். எனக்கு டைம் இல்ல.!" என்றவள் மேலும் ஒரு படி கீழிறங்கினாள்.

"மேடம்.. இந்த பிரபஞ்சத்துலயே நீங்கதான் ரொம்ப அழகு.. எங்களோட பிலிம்க்கு நீங்க ஹீரோயினியா வர முடியுமா? ப்ளீஸ். முடியாதுன்னு சொல்லிடாதிங்க.. உங்க வாழ்க்கை வரலாறு கேட்ட பிறகு நம்ம நாட்டுல இருக்கும் மொத்த ஆண்களுக்கும் நீங்கதான் ட்ரீம் கேர்ள்.. நீங்க கை அசைச்சாவே பலருக்கு அட்டாக் வரும்.." என்றான் ஒருவன்.

மிருதுளா புன்னகையோடு மறுத்து தலையசைத்தாள். "திரைப்படங்களில் எனக்கு விருப்பம் இல்ல.." என்றாள்.

மேலும் கீழிறங்கியவளை தடுத்து நிறுத்தியது ஒரு கரம்.

"மேம்.. நாங்க அன்டார்டிகாவுல இருந்து வரோம்.. உங்களோட வீரம் இந்த மொத்த உலகத்தையும் வியக்க வச்சிடுச்சி. நீங்கதான் எங்க கண்டத்துக்கு பிரசிடென்டா இருக்கணும். எங்க கான்டினென்டே உங்களை நம்பிதான் இருக்கு. மறுத்துடாதிங்க.. எங்களுக்கு தலைவியா இருங்க.!" என்று கெஞ்சினார் எதிரில் இருந்தவர்.

"ஓ.. ஆனா எனக்கு அரசியல்ல அவ்வளவா விருப்பம் இல்லை.. என்‌ பிரெண்ட் பிரேம்மை கூட்டிப் போங்க.. அவனுக்கு உருட்டுறது நல்லா வரும். அவன்தான் அரசியலுக்கு தகுதியானவன்.!" என்றாள் பெருந்தன்மையோடு.

கீழே நின்றிருந்த பிரேம் இவளை கண்டு தலை வணங்கினான்.

"லீடர் எப்போதும் லீடர்தான் என்பதை நிரூபிச்சிட்ட மிருது.." என்றான் மகிழ்ச்சியோடு. அவனின் பொடனியில் அடி ஒன்று விழுந்தது. திரும்பிப் பார்த்தான்.

"அவங்க எவ்வளவு பெரிய செலிபிரிட்டி. அவங்க வீரத்துக்கு முன்னாடி நாம யாரும் கால் தூசுக்கு கூட வர மாட்டோம்.. வாங்க போங்கன்னு மரியாதையா கூப்பிடு.!" என்றான் பிரேம்மை அடித்த அர்விந்த்.

மிருதுளா புன்னகைத்தாள். அவளின் முன் வாழைப்பழம் ஒரு சீப்பு நீட்டப்பட்டது. யாரென்று நிமிர்ந்துப் பார்த்தாள். மிருத்யூ நின்றிருந்தான்.

"இது எனது பரிசு மிருது.. உன்னை போல ஒரு குரங்கு இவ்வளவு சாதிச்சது ரொம்ப பெரிய விசயம். நீ எங்க எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேசன்.. நீ நடக்கும் பாதையே இனி எங்களோட பாதை.!" என்றான் மின்னும் விழிகளோடு.

மிருதுளாவுக்கு நெஞ்சம் குளிர்ந்தது. "ஓ.. அருமை நண்பனே.. என் சகோதரனே.. வாழைப்பழங்களின் மகிமை அறிந்த வானரமே.. உன் விருப்பப்படியே உங்க எல்லோரையும் நான் லீட் பண்றேன்.." என்றாள் மகிழ்ச்சியோடு.

எவ்வளவு சந்தோசம். கருவில் இருக்கும் குழந்தையை விடவும், பதவியில் இருக்கும் கடவுளை விடவும் அதிக சந்தோசம். வானமே வசப்பட்டு விட்டது போலிருந்தது மிருதுளாவுக்கு. அம்மா இனி வீட்டு வேலைகள் வைக்க மாட்டாள். அப்பா இனி பணம் தர கஞ்ச பாட்டு பாட மாட்டார். தனது குரங்கு கூட்டத்தில் உள்ள மற்ற மூவரும் தனது பேச்சையே கேட்பர்.. அழகான ஆசைகள். அற்புதமான கனவுகள். ஆனால் இது அனைத்தையும் கெடுத்தது இரு விரல்களின் சொடுக்கிடல்.

மிருதுளா படபடத்த இமைகளோடு எதிரே பார்த்தாள். ஜீவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

"யாரும் பாராட்ட மாட்டாங்க.." என்றான்.

"ஏன்?" அதிர்ச்சியில் கத்தினாள் மிருதுளா.

"ஜெயிலுக்கு போன யாரையும் யாரும் பாராட்ட மாட்டாங்க." அவன் சொன்னது கேட்டு உறைந்து போனாள்.

"என்ன? ஜெயிலா?" என்றாள் நம்ப இயலாமல்.

"எங்களை பார்த்தா மெண்டல் எருமைகள் மாதிரி தெரியுதா? உரிமை உள்ள நாங்களே என்கவுண்டர் பண்ணாம இத்தனை நாளா விட்டு வச்சிருக்கோம்ன்னா அதுக்கான ரீசனை புரிஞ்சிக்க வேண்டாமா? ஆதாரம் வேணும் சிஸ்டர்.. இவனை நாங்க என்கவுண்டர் செய்யவே ஆதாரம் வேணும். நீங்க ஏன் இப்படி செஞ்சிங்க? உங்களை அரெஸ்ட் பண்ணியாகணும் நாங்க இப்ப.!" என்றான்.

மிருதுளா அதிர்ச்சியில் பின்னால் நகர்ந்தாள். கையில் இருந்த துப்பாக்கி தானாய் தரையில் விழுந்தது.

கம்பிகளின் பின்னால் நின்றிருந்தாள் மிருதுளா. மற்ற மூவரும் வெளியே நின்றிருந்தனர்.

"ஹாய் குரங்கு குட்டி‌.. நீ ஏன் இப்படி செஞ்ச? உன்னை மாதிரி ஒரு குரங்கு குட்டி இல்லாம இந்த குரூப் எப்படி வாழும்? இனி எங்களுக்கு வாழ்க்கையே இல்ல மிருது.. அதனால நாங்க மூனு பேரும் தற்கொலை பண்ணிக்க போறோம்.!" என்ற அர்விந்த் தன் கையில் இருந்த தூக்கு முடிச்சி இடப்பட்ட கயிறுகளை தூக்கிக் காட்டினான்.

மிருதுளா மறுப்பாக தலையசைத்தாள். "வேணாம் என் குரங்கு கூட்டமே.. தூக்கு போட்டுக்கறது வலிக்கும். அதுக்கு பதிலா இதை யூஸ் பண்ணுங்க.!" என்று தன் கையில் இருந்த மாத்திரை டப்பாவை தந்தாள். மூவருக்கும் கண்களில் இருந்து நயாகரா வழிந்தது. சாரி.. குற்றால அருவி வழிந்தது‌.

"உனக்குத்தான் எங்க மேல எவ்வளவு அக்கறை மிருது.. வீ லவ் யூ‌‌.." என்றான் பிரேம் கண்ணீரை துடைக்காமல்.

அவர்களோடு இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க அவளுக்கும் ஆசைதான். ஆனால் கருப்பு துணியை தலையில் கவிழ்த்து தூக்கு மேடை ஏற்றி விட்டார்கள் ராகுலும் ஜீவனும்.

"ஒரு குரங்கு கூட்டத்தை அழிச்ச பாவத்துக்கு இந்த உலகமே சீக்கிரம் அழிய போகுது.!" அனைத்து மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு, மிருதுளா எரிந்துக் கொண்டிருந்த சிதையில் பாய்ந்தபடியே சொன்னார்கள் மற்ற மூவரும்.

அதிர்ந்து நின்றிருந்தவளின் தோளை உலுக்கினான் ராகுல்.

"மிருது.. என்ன யோசிச்சிட்டு இருக்க? நாங்க பேசுறது உன் காதுல விழுதா இல்லையா?" எனக் கேட்டான் சத்தமாக‌.

மிருதுளா கலங்கிய விழிகளோடு நிமிர்ந்துப் பார்த்தாள். அவனின் மூக்கின் மீது டொம்மென்று ஒரு குத்து விட்டாள். சட்டென்று கொட்டிய ரத்தம் கண்டு பதறிய ஜீவன் தன் கைக்குட்டையை எடுத்து ராகுலிடம் நீட்டினான்.

"லூசு.!" ராகுல் மூக்கின் மீது கைக்குட்டையை வைத்து அழுத்தியபடியே திட்டினான்.

மிருதுளா அவனை முறைத்தாள். தரையில் கிடந்த துப்பாக்கியை கையில் எடுத்தாள். யோசனையோடு அவர்களை பார்த்தாள்.

"நான் இந்த காட்டெருமையை கொன்னதுக்கு நீங்க இரண்டு பேரும்தான் சாட்சி. உங்களை கொன்னுட்டா என்னை யாரு அரெஸ்ட் பண்ணுவா.?" என்றாள் விழிகளை உருட்டி.

"உங்க இரண்டு பேரை வச்சி போலிஸ் கிரிமினல் லவ் ஸ்டோரி எழுதலாம் போல.. ஆனா நீங்க சீன் போடும் அளவுக்கு ஒன்னும் இல்ல ராசாத்தி.. நாங்க சொல்றதை முழுசா கேளுங்க.." என்ற ஜீவனை முறைத்தவள் ராகுலின் காலில் உதைத்தாள்‌.

"நீ சொன்னன்னுதானே இந்த டிராமாவுக்கு நான் ஒத்துக்கிட்டேன். நீ இரண்டு முறை சுட்டதாலதானே நான் ஒரு முறை சுட்டேன். நீ ஆரம்பிச்ச. நான் முடிச்சேன். அதுக்கு என்னை ஏன் அரெஸ்ட் பண்ணணும்?" என்றாள் கோபத்தோடு.

ராகுல் ஜீவனை முறைத்தான். "அவன் சொன்னதை சீரியஸா எடுத்துக்காத.." என்றான் மூக்கின் வலியை பொறுத்துக் கொண்டு.

"பாவம் ராகுல். அவனோட வருங்காலத்தை நினைச்சா பரிதாபமா இருக்கு. அவனுக்கு அவனே பாதுகாப்பு வேணும்ன்னு போலிஸ் ஸ்டேஷன்ல கேஸ் பைல் பண்ண போறான்னு நினைக்கிறேன்.!" தனக்கு மட்டும் கேட்கும்படி முனகினான் ஜீவன்.

"உனக்கு எந்த பரிசும் கிடையாது. அதன் காரணத்தைதான் அவன் புரிய வைக்க டிரை பண்ணான். ஆனா நீ அதுக்குள்ள ஓவர் ரியாக்ட் பண்ற.. அதுவும் சாட்சிகளை கொல்லுற.. நீ என்ன நிஜமான கொலைக்காரியா?" அதிர்ச்சியோடு கேட்டான் ராகுல்.

மிருதுளா உதட்டை கடித்தாள். தன் காலின் கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த சரத்தை வெறித்தாள். "நான் நிஜமாவே கொலை பண்ணிட்டேன்.!" என்றாள் சிறு குரலில்.

ஜீவன் அவளுக்கு சமாதானம் சொல்லும் முன் நிமிர்ந்தவள் "ஆனா.. நான் ஒன்னும் நல்லவனை கொல்லல.. இன்னும் சொல்லணும்ன்னா நீங்க செய்ய வேண்டிய வேலையை நான் செஞ்சிருக்கேன்.. உங்க மொத்த டிபார்மென்ட்டோட ஒன் மன்த் சேலரியையாவது பாராட்டி குடுங்க.. நான் கொன்னது எவ்வளவு பெரிய மான்ஸ்டர் தெரியுமா? இவனை ஏதாவது கேம்ல கொன்னிருந்தா கூட எனக்கு லெவல் பாஸாவது கிடைச்சிருக்கும். நிஜத்துல கொன்னும் யூஸ் இல்ல.!" என்றாள் சோகமாக.

ஜீவன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"ஹலோ பாப்பா.. முதல்ல நான் சொல்றதை கேட்கிறியா.? நீ கொலை பண்ணிட்ட.. இது வெளியே தெரிஞ்சா நாங்க அரெஸ்ட்தான் பண்ணுவோம். ஆனா இந்த வீட்டுல உள்ள யாருக்காவது தெரிஞ்ச.. விசயம் தெரிஞ்ச அந்த செகண்டே நீ காலி.. இது யார் வீடுன்னு ஒரு நிமிசம் யோசிச்சி பாரு? இவனோட பிரதர் யாருன்னு நினைச்சிப் பாரு.!" என்றான்.

மிருதுளாவின் முகம் மாறியது.

அழகாய் போயிருக்க வேண்டிய திட்டம் இது. சித்துவை பற்றி தவறாய் திரித்து சரத்திடம் சொன்னால் பிறகு அவன் கோபத்தில் சித்துவை கொல்வான். இந்த திருமணம் தடைப்படும் என்று நினைத்திருந்தாள் மிருதுளா. ஆனால் இப்போது ஆரம்பமே சொதப்பி விட்டது.

"இப்ப என்ன பண்றது.?" இருவரையும் நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டாள்.

"அவன் டிராக்கை மாத்தும்போதே நானும் பிளானை மாத்திட்டேன்.!" என்ற ராகுல் நறுக்கென்று அவளின் கையை கிள்ளினான். "குரங்கு.. நான் முழுசா சொல்லும் முன்னாடியே மூக்கை பஞ்சர் பண்ணி வச்சிட்ட.." என்றான் கடுப்போடு.

அவன் கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டுக் கொண்டாள் மிருதுளா. வலிக்கவில்லைதான். ஏனெனில் அந்த குரங்கு கூட்டத்தில் கிள்ளல், அடித்தல், உதைத்தல், கொட்டுதல் எல்லாம் நான்காம் வேளை உணவை போல.

"விசயத்தை சொல்லுங்க சீனியர். ப்ளான் என்ன?" கண்களை சுருக்கி கேட்டாள்.

சரத்தை பார்த்து விட்டு நிமிர்ந்தவன் "இப்ப அடுத்த டார்கெட் சம்பத். சரத்தை சித்துதான் கொன்னுட்டான்னு நாம அவனை நம்ப வச்சாகணும்.!" என்றான்.

மிருதுளா யோசித்தாள். "அப்புறம் இந்த கல்யாணம் நின்னுடுமா?" எனக் கேட்டாள்.

"ம். சரத் சித்துவை கொல்லுவான். அப்புறம் இந்த வெங்கட் கல்யாணத்தை நிறுத்திடுவாரு. யாரும் தன் பிரதரை கொன்ன வீட்டுல சம்பந்தம் செய்ய மாட்டாங்க.." என்றான்.

மிருதுளா யோசித்துவிட்டு சரியென்று தலையசைத்தாள்.

"இப்ப நாம என்ன செய்றது?" தலையை கீறியபடி கேட்டாள்.

"நான் சொல்றேன்.." என்றான் ஜீவன்.

"நீ இப்ப சம்பத்துக்கு போன் பண்ணு. விசயத்தை சொல்லு.."

மிருதுளா தன் போனை எடுத்தாள். மீண்டும் அவனைப் பார்த்தாள். "ஆனா நான்தான் சொன்னேன்னு தெரிஞ்சா இந்த வீட்டு ரவுடிங்க என்னை கொன்னுடுவாங்களே.!" என்றாள் சந்தேகமாக.

"குரங்குகளுக்கு இவ்வளவு அறிவு கூடாது.!" என்றவனை நோக்கி மீண்டும் மடங்கிய தன் கை விரல் முட்டிகளை நீட்டினாள். சுதாரித்து நகர்ந்தான் ராகுல்.

"நோ பேபி.." என்றான்.

"அப்படின்னா என் கேள்விக்கு பதில்.."

"ரிஸ்க் எடுத்துதான் ஆகணும். பெரும்பாலும் ரவுடிகளுக்கு கோபம் வரும்போது மூளை ஒழுங்கா வேலை செய்யாது.. பிரதர் செத்துப் போனது தெரிஞ்சா சம்பத்துக்கு கோபமும், துரோக வலியும்தான் இருக்கும். அவன் யோசிக்காமலேயே சித்துவை கொன்னுடுவான். உன்னை யாரும் யோசிக்க கூட மாட்டாங்க.!" என்றான்.

மிருதுளா யோசித்தாள். தயக்கத்தோடு போனை எடுத்தாள். ராகுல் சொல்ல சொல்ல நம்பரை பதிந்தாள்.

"ஹலோ.." எதிரில் ஒலித்த சம்பத்தின் குரலில் முகத்தை கோணினாள்.

"உன் ஆளுக்கு பி. சுசிலான்னு நினைப்பு.!" ராகுலின் காதில் சொன்னான் ஜீவன்.

"அப்படி கிடையாது. ஆனா இவ ஒரு வீர மங்கை. ம்ஹூம்.. இவ ஒரு லூசு மங்கை. சம்பந்தமே இல்லன்னாலும் உதைப்பா.. உனக்கெப்படி வசதி?" எனக் கேட்டான்.

ஜீவன் முறைத்தபடி பார்வையை மிருதுளாவிடம் திருப்பினான்.

சிபியும் மிருத்யூவும் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர். கண்களை இறுக்கமாக மூடியிருந்தான் மிருத்யூ. இன்னும் பத்து பேர் அவர்களை சுற்றி அமர்ந்திருந்தனர். மிருத்யூ ஒற்றை கண்ணை கொஞ்சமாக திறந்து அங்கிருந்தவர்களை பார்த்தான். அனைவருமே வெகு கவனமாக தியானத்தில் இருந்தார்கள். எதிரில் இருந்தவனை திரும்பிப் பார்த்தான். இருக்கையில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தான் பிரேம். அவன் கண்களை மூடியிருக்கவே இல்லை. எதிரே இருந்த சிபியிடம் கண்ணடித்து, காற்றில் முத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தான். சிபியும் தியானத்தில் இல்லை.

'சீட்டர் பக்கீஸ்.. சுத்தி ரவுடிங்க இருக்காங்க. எனக்கு கூட பயமா இருக்கு. ஆனா இவனுக்கு பயமா இல்லையே.!' நெற்றியில் அடித்துக் கொண்டான் மிருத்யூ.

சிபி வெட்கத்தில் அடிக்கடி தலை குனிந்தாள். 'இவங்க ரொமான்ஸை பார்க்கறதுக்கு பதிலா கண் அவிஞ்சி செத்துடலாம்.. அவ்வளவு கன்றாவியா இருக்கு.!' என்று மிருத்யூ நினைத்த நேரத்தில் அவனின் போனில் வெளிச்சம் உண்டானது. எடுத்துப் பார்த்தான். "ஓகே.!" இரட்டை எழுத்துகளை அனுப்பியிருந்தாள் ரோஜா.

'அப்படின்னா எனக்கும் ஓகே பேபி.!' என்றான் மனதுக்குள்.

மிருத்யூ பல் இளித்துக் கொண்டிருப்பதை கண்ட பிரேம் தன் கைத்தடியை எடுத்து அவனின் தலையில் அடித்தான். மிருத்யூ கோபத்தோடு நிமிர்ந்தான்.

'ச்சே.. பொண்ணு கெட்டப்ல இவன் கோபப்பட்டா கூட க்யூட்டா இருக்கே.!' தனது யோசனை கண்டு அதிர்ந்தான் பிரேம்.

'கருமம்.. என்னடா உன் டேஸ்டு பிரேம்? இப்படியா நீ கெட்டுப் போகணும்?' என தன்னையே திட்டிக் கொண்டவன் நண்பனை பார்த்தபோது அவன் இன்னமும் அதே போல்தான் தெரிந்தான்.

'இந்த வீட்டை விட்டு வெளியே நடந்த மறு நொடியே இவன் டிரெஸ்ஸைதான் கழட்டி எறியணும்.. இல்லன்னா எனக்கும் சேர்த்து ஆப்பு வச்சிடுவான் இவன்.!' என்று நினைத்தான்.

"ஏன்டா நாயே?" நண்பனை முறைத்தபடியே கேட்டான் மிருத்யூ.

"கண்ணை மூடி தியானம் செய்யுடா.!" கிசுகிசுப்பாக சொன்னான்.

"அடிங்.. நீயும் இவளும் ரொமான்ஸ் பண்ணலாம். ஆனா நான் கண்ணை திறக்க கூடாதா?" எனக் கேட்டான் அவன் கோபமாக.

சுற்றி இருப்போரை கை காட்டினான் பிரேம். ஆனால் மிருத்யூ மசியவில்லை. பிரேம் பற்களை கடித்தான். "எல்லோரும் கண்களை திறக்கலாம்.!" என்றான்.

அனைவரும் கண் திறந்தனர்.

"சாமி.. நீங்க நிஜமாவே சிறந்த பயிற்சியாளர். கொஞ்ச நேரம் தியானம் செஞ்சதுக்கே எனக்கு யானை மடங்கு பலம் வந்த மாதிரி இருக்கு.!" என்றான் ஒருவன்.

'பைத்தியம். இவனுங்க சும்மாவே யானை பலம்தான் இருக்காங்க. இதுல தியானம் பண்ணி வருதாம்.. லூசு கூட்டத்துல சிக்கிக்கிட்டு பாடா படுறதா இருக்கு.!' தனக்குள் முனகினான் மிருத்யூ.

சம்பத் தனது வீட்டின் பாதாள அறையில் இருந்தான். புதிதாய் வந்திருந்த ஆயுதங்களை அந்த அறையினுள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள் ஆட்கள் சிலர்.

நாட்டின் பல ரவுடி கும்பல்களின் கைகளுக்கு சென்று சேர போகிற அந்த ஆயுதங்களால் தனக்கு எவ்வளவு லாபம் என்று கணக்கிட்டான் அவன்.

அவனது கணக்கிடலின் இடையே போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். ஏதோ புது எண்.

"ஹலோ.."

"ஹலோ.." மறுமுனையில் ஒலித்த பெண்ணின் குரலை அடையாளம் தேட நினைத்தான்.

"யார்?"

காரமாக ஒலித்தது சம்பத்தின் குரல். மிருதுளா தன் முன் நின்றிருந்த இருவரையும் பார்த்தாள். மேலே பேச சொல்லி அவளிடம் சைகை காட்டினார்கள் அவர்கள்.

"நான் சிபியோட வீட்டுல இருந்து பேசுறேன்.!"

"நேரடியா விசயத்துக்கு வாடி.."

அவனின் டியில் மூக்கு சிவந்தது மிருதுளாவுக்கு. அவளின் தோளில் தட்டி தந்தான் ராகுல். "பேசு.." என்று கிசுகிசுத்தான்.

"உன் பிரதர் சரத் செத்துட்டான்.!" அவள் திடீர் என்று சொன்னது கேட்டு ராகுலுக்கே திக்கென்று ஆனது.

"வாட்?" அவன் கத்தியதில் போனை தூர நீட்டினாள் மிருதுளா.

"கழுதை போல கத்துறான்.!" என்று வாய் அசைத்தாள்.

ராகுல் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"உங்க பிரதர் லவ் பண்ண பொண்ணு நான். என்னை கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தார் சரத். ஆனா சித்து என்னை ரேப் பண்ணிட்டான். அந்த விசயம் தெரிஞ்சி இங்கே வந்த சரத் சித்துவோட சண்டை போட்டாரு. ஆனா சித்து சரத்தை சுட்டுக் கொன்னுட்டான்.!" என்றவள் கடைசியாக ஞாபகம் வந்து குலுங்கி அழுவது போல சத்தமிட்டாள்.

"டிராமா குயின்.!" ஜீவன் தன் உதட்டின் கீழ் முணுமுணுத்தான்.

"வாட் த **?" எதிரில் கடித்த பற்களின் இடையே வார்த்தைகளை மென்று துப்பினான் சம்பத்.

"தொரை.. இங்கிலீசு கெட்ட வார்த்தையெல்லாம் பேசுது.. ஆனா நான் க்ரீன் க்ரீனா பேச ஆரம்பிச்சேன்னா இவன் காது வலி வந்தே செத்துட்டுவான்.." போனை மியூட்டில் போட்டு விட்டு கர்ஜித்தாள் மிருதுளா.

"ஆவேசம் வேணாம் செல்லம்.. அவன் வந்து சித்துவை கொன்னுட்டா பிரச்சனை முடிஞ்சிடும்.!" அவளை சமாதானம் செய்தான் ராகுல்.

"எப்படி எப்ப நடந்தது.. என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுடி.." எதிரில் கத்திக் கொண்டிருந்தான் சம்பத்.

அன் மியூட் செய்தாள். "நான் மிரு.. என்னை லவ் பண்ணாரு உன் தம்பி. ஆனா என்னை ரேப் பண்ணிட்டான் சித்து. அதனால சித்துவை கொல்ல வந்தாரு.." அவள் மீண்டும் ஒருமுறை முழுதாய் சொல்லி முடித்தாள்.

எதிரில் இருந்தவன் அழைப்பை துண்டித்தான்.

"ஓகே நாம இங்கிருந்து போகலாம். அவன் வந்ததும் வீடு பத்தி எரியும். அந்த கேப்ல தப்பிச்சி நானும் என் பிரெண்ட்ஸ்ம் வெளியே போயிடுறோம்.!" என்ற மிருதுளா வெளியே நடக்க இருந்த நேரத்தில் அவளின் போன் ஒலித்தது.

"அந்த காட்டெருமைதான்.." என்றவள் அழைப்பை ஏற்றாள்.

"சரத்தை சித்து கொன்னதை யாரெல்லாம் பார்த்தது?"

"நான் மட்டும்தான்.!" என்றவளிடம் "ஓகே. அப்படின்னா நீ அதோட நிறுத்து. நீ என்கிட்ட எதையும் சொல்லாத மாதிரி விடு. நான் என் பிரதர்காக ரிஸ்க் எடுக்க முடியாது. இந்த மேரேஜ் எனக்கு இன்பார்டன்ட். என்னால இப்ப எதுவும் பண்ண முடியாது. அதனால நீ எனக்கு போன் பண்ணாத மாதிரி இருந்துக்கோ. அவங்க போன் பண்ணா கூட நடந்த டெத்க்கும் சித்துக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி நடந்துக்கோ நீ.!" என்றான்.

"வாட் த **? சரத் உன் பிரதர்தானே?" மிருதுளாவுக்கு அவளை மீறி வந்தது கோபம்.

"சோ வாட்? இப்பவே நேரடியா நின்னு தாக்குறதை விட மேரேஜ் முடிச்ச பிறகு அவங்க மொத்த பேமிலியையும் போட்டு தள்ளுறது கிக்கா இருக்கும்.." என்றவன் இணைப்பை துண்டித்தான்.

"*** மாதிரியே பேசுறான் **.. இவனையெல்லாம் என்ன ***க்கு பெத்தாங்க? என்ன **க்கு வளர்த்தாங்க.. ஓடுற இத்தனை ஆயிரம் லாரியில் ஒரு ***லாரி கூடவா இவன் மேல ஏறக் கூடாது? *** *** ***"

"முடியல.." இரு காதுகளையும் உள்ளங்கைகளால் அரக்கி விட்டபடியே சொன்னான் ஜீவன். ஆனால் அவள் எங்கே நிறுத்தினாள். சரளத்துக்கு திட்டிக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN