குரங்கு கூட்டம் 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிருதுளா அந்த அறையை விட்டு வெளியே நடந்தாள். ராகுல் சொன்னதுபோலவே யாரிடமும் எதுவும் பேசாமல் தனது அறைக்கு வந்து அமர்ந்துகொண்டாள். அவளுக்கு சரத் மீதிருந்த கோபம் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் சரத்தை விட இப்போது சம்பத் மீதுதான் அதிக கோபம் வந்தது. 'அது எப்படி ஒரு மனிதன் தன் சகோதரனை கூட கண்டுகொள்ளாமல் தனது மாபியா பிசினஸ் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவான்' என நினைத்து குழம்பினாள் மிருதுளா.

மிருதுளா வந்து சேர்ந்த கால்மணி நேரத்திற்கு பிறகு சிபியும் மிருத்யூவும் அந்த அறைக்கு வந்து சேர்ந்தார்கள்.

"என்ன பண்ணிட்டு இருந்தீங்க? நானும் ரொம்ப நேரமா உன்னை எதிர்பார்த்துட்டு இருந்தேன்!" என்றான் மிருத்யூ.

நடந்ததை சொல்லி விட வேண்டும் என்று மிருதுளாவுக்கு நாக்கு துடித்தது. ஆனால் ராகுலின் எச்சரிக்கை அவளை பேச விடவில்லை.

"எதுக்கு இப்ப பேயறைஞ்சது போல உட்கார்ந்து இருக்க? நீயும் அந்த போலீஸ் மச்சானும் ரொமான்ஸ் பண்ணியதை இந்த வீட்டுல யாராவது பார்த்துட்டாங்களா?"

மிருத்யூவின் கேள்விக்கு இடம் வலமாக தலையசைத்தாள் மிருதுளா.

மிருதுளாவை கேட்டு கேட்டு பார்த்து விட்டு சற்று நேரத்தில் மிருத்யூவும் அமைதியாகி விட்டான்.

சரத் ஒரு அறையில் செத்துக் கிடந்ததை அடியாள் ஒருவன்தான் முதன்முதலில் பார்த்தான். உடனே தகவல் சித்துவிடம் சேர்க்கப்பட்டது. சித்துவும் ஓடிவந்து பார்த்தான். சரத்தை கொல்லும் அளவுக்கு துணிச்சல்காரர்கள் இந்த வீட்டில் இருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தான். சித்துவின் அனுமதியில்லாமல் இந்த வீட்டின் தோட்டத்து இலைகளை கூட யாராலும் கிள்ள முடியாது. அப்படி இருக்கையில் இப்படி ஒரு மரணம் நிகழ்ந்தால் அதை யார்தான் ஏற்று கொள்வார்கள்?

"உடனே வீட்டோட கேட்ட பூட்டு போடுங்க. இந்த வீட்ல இருந்து ஒரு புல் பூண்டு கூட வெளியே போகக் கூடாது" என்று கர்ஜித்தான் சித்து.

"எனக்கே எதிரிகளா அதுவும் என் வீட்டிலேயேவா? என்ன பத்தி சரியா தெரியாத யாரோதாதான் இப்படி பண்ணி இருக்கணும். ஆனா அதுக்கு எவனாயிருந்தாலும் அவனை என் கையாலயே கண்டம் துண்டமாக வெட்டி போட்டாதான் எனக்கு கோபம் தீரும்" என்றவன் சரத் உடலை பார்த்துவிட்டு கொஞ்சம் தடுமாறினான். திருமணத்தை நினைத்து கவலையாக இருந்தது. திருமணம் நின்று விடுமோ என்று பயந்தான் ஆனால் எது என்னவானாலும் நிச்சயம் இவ்விஷயம் சம்பத் வீட்டாருக்கு தெரிந்தாக வேண்டும் என்று நினைத்தான். சம்பத்திற்கு அழைத்தான்.

"ஹலோ" எதுவும் அறியாதது போல பேசினான் சம்பத்.

"ஒரு சிக்கல் நடந்து போச்சு.!"

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN