பௌர்ணமி 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூமாறன் தன் அண்ணனை தயக்கமாக பார்த்தான். பாலாவின் கண்களில் பயண களைப்பு தெரிந்தது. அவனின் உறங்காத கண்கள் பூர்ணிமாவுக்கு வருத்தத்தை தந்தது.

"அண்ணா.."

"போதும் நிறுத்து மாறா.. உன் சமாதான பேச்சு எனக்குத் தேவையில்ல.. உன்னை சொல்லி குத்தம் இல்ல.. புருசனை அந்த பக்கம் அனுப்பிட்டு இந்த பக்கம் மச்சினன் கூட குடும்பம் நடத்தற இவளைதான் சொல்லணும்.." பாலாவின் குற்றச்சாட்டில் அதிர்ந்து நிமிர்ந்தாள் பூர்ணிமா. கோபத்தின் மறு உருவமாக நின்றிருந்தான் அவன். கைகள் இரண்டையும் இறுக்கி பிடித்திருந்தான். பற்கள் ஒன்றுக்கொன்று கடிப்பட்டு கிடந்தன.

"பாலா.." என்றவளுக்கு இது கனவோ என்றுத் தோன்றியது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவன் தன்னை தவறாக நினைக்க கூடாது என்று வேண்டினாள். தன் மீது தவறு இல்லை என்று புரிய வைக்க நினைத்தாள். ஆனால் அதிர்ச்சியின் காரணமாக வார்த்தைகள் வர மறுத்தது.

அவசரமாக பூமாறனை விட்டு நகர்ந்தாள்.

"நீ.. நீ நி..நினைக்கற மாதிரி எதுவும் இல்ல பாலா.." என்றாள் திக்கி திணறி. உள்ளங்கைகள் வியர்த்துப் போனது அவளுக்கு.

அவளைப் பார்த்து கேலியாக சிரித்தவன் "வேற எப்படி.? என் கண்ணு குருடுன்னு சொல்றியா.? இல்ல நான் முட்டாள்ன்னு சொல்றியா.?" எனக் கேட்டான் கடுப்போடு. அருகில் இருந்த சுவரை குத்தினான். பயந்து துள்ளி விழுந்தாள் பூர்ணிமா. அவனின் கோபத்தை ஏற்கனவே கண்டுள்ளாள்தான். இன்னமும் சொல்ல போனால் அவனின் கோபம் கண்டே அவன் மீது காதல் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அந்த கோபம் பயத்தை தந்துக் கொண்டிருந்தது.

பூர்ணிமா இல்லையென தலையசைத்தாள். கன்னங்கள் தாண்டி விட்டிருந்தது கண்ணீர். அவன் மீதான தன் காதலை புரிய வைக்க வேண்டியதன் அவசியத்தை இப்போதுதான் முழுதாய் உணர்ந்தாள் அவள்.

"மிஸ்அண்டர்ஸ்டேன்டிங் பாலா.. எங்களுக்குள்ள எதுவும் இல்ல. ஐ லவ் யூ.. உனக்கு தெரியும் இல்ல?" பொறுமையாக அவனுக்கு விளக்க முயற்சித்தாள். ஆனால் அவன்தான் கேட்கும் நிலையிலேயே இல்லை.

"இதுக்கு என்ன சொல்ற.?" என்றவன் அவளருகே வந்தான். தனது போனை எடுத்து அவளிடம் நீட்டினான். பூர்ணிமா குழப்பத்தோடு போனை கைகளில் வாங்கினாள்.

அவனது குடும்பத்து வாட்சப் குரூப்பில் இருந்த புகைப்படங்களையும் செய்திகளையும் கண்டுவிட்டு மேலும் அதிர்ந்துப் போனாள். ஒரே குடும்பத்தில் இருந்துக் கொண்டு இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று குழம்பினாள். பெரிய தாத்தா, சின்ன தாத்தா குடும்பத்தை பற்றி பாலா சொல்லும்போது கூட அவளுக்கு அவ்வளவாக புரியவில்லை. இன்றுதான் அவளுக்கு மிகத் தெளிவாக புரிந்தது. அவர்கள் தன்னோடு பேசிய கொஞ்சல் மொழிகளை நினைக்கையில் அருவெறுப்பாக இருந்தது. நாக்கில் சர்க்கரையும், மனதில் விஷமும் வைத்திருப்பவர்கள் என்று புரிந்தது. ரோசினியை மீண்டும் பார்க்கும்போது நிச்சயம் ஒரு போர் நடக்கும் என்று‌ நம்பினாள். புகைப்படங்களையும் செய்திகளையும் கண்ட பிறகே பாலாவின் கோபத்தின் மீதான முழு காரணமும் புரிந்தது.

"ஆனா இவங்க சொல்லும் அளவுக்கு எதுவும் இல்ல பாலா.. எங்களுக்குள்ள எதுவும் நடக்கல.. நேத்து என் சேலையில் நெருப்பு பிடிச்சிடுச்சி. மாறா மாமாதான் அணைச்சாரு.. இவர் கையில காயம். காயத்தை பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகிடுச்சி. அதனாலதான் இப்ப பேசிட்டு இருந்தேன்.!" என்றாள்.

"ஆனா நான்.." பாலா மேலே சொல்லும் முன் "ஆமா.. நானும் இவளும் ராங் ரிலேசன்ஸிப்லதான் இருந்தோம். அதுக்கு இப்ப என்னங்கற?" எனக் கேட்டான் இருவருக்கும் அருகில் வந்த பூமாறன்.

பூர்ணிமா அதிர்ந்துப் போனாள். அவனை தன் பக்கம் திருப்பினாள். "மாமா.." என்றாள் பயத்தோடு.

"போதும் பூரணி.. இனியும் எதுக்கு ஒளிவு மறைவு? இவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க என்ன தகுதி இருக்கு? நீ முதல்ல‌ என்னைப் பார்த்திருந்தா நீயும் நானும்தான் கல்யாணம் பண்ணி இருப்போம்.. இவன் நடுவுல புகுந்து நாசம் பண்ணிட்டான். இவனை.." பூமாறன் மேலே பேசும் முன் அவனின் கன்னத்தில் விழுந்தது அறை. பூர்ணிமா சிவந்த கண்களோடு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"மாமா.. என்ன பண்றிங்க நீங்க?" என்றுக் கத்தினாள். பாலாவின் புறம் திரும்பியவள் "இவர் பொய் சொல்றாரு.. என்னை நம்பு பாலா.!" என்றாள் கண்களில் நீர் திரள. பாலாவின் குற்றச்சாட்டை விடவும் பூமாறனின் வார்த்தைகள்தான் அவளுக்கு அதிக பயத்தை தந்தது. 'இது எதையும் நம்பிடாத பாலா.. ப்ளீஸ்..' என்று மனதுக்குள் கெஞ்சினாள்.

இடம் வலமாக தலையசைத்தான் பாலா. பூர்ணிமாவுக்கு இதயம் நிற்பது போலவே இருந்தது. உடம்புக்கு அடிப்படாமல் கூட இவ்வளவு வலிக்கும் என்று இன்றுதான் புரிந்துக் கொண்டாள். அவளை வெறித்து பார்த்துவிட்டு வெளியே நடந்தான் பாலா. உயிரே கை நழுவுவது போலிருந்தது பூர்ணிமாவுக்கு.

அவனை தொடர்ந்து ஓடினாள். தாண்டிச் சென்று அவன் முன் நின்றாள். மேலே நடக்க முயன்றான் அவன். ஆனால் அவள் வழியை விடாமல் தடுத்து நின்றாள். அவளை பார்த்தான் பாலா. கண்ணீரும் கம்பலையுமாக கண்களால் கெஞ்சிக் கொண்டு நின்றிருந்தாள். அவனின் முகத்தில் துளியும் மாற்றம் இல்லை. அதே போல வெறுப்போடுதான் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

"பாலா.." எச்சரித்தாள் அவள். "இது நம்மோட வாழ்க்கை.. ஒரு செகண்ட்ல முடிவெடுக்காத.!"

பாலாவின் கரங்கள் இரண்டும் அவனின் தலையை கோதியது. முகத்தை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தான். அவளைப் பார்த்தான்.

"நான்தான் பைத்தியம் பூர்ணி.. பார்த்த உடனே பிடிச்சி போச்சின்னு உன்னை அப்ரோச் பண்ணிட்டேன். சாரி.!" கையெடுத்துக் கும்பிட்டான். பூர்ணிமா பயத்தில் மிடறு விழுங்கினாள்.

"என்னை பார்க்கும்போது உன் கண்ணுல மின்னல் வெட்டுச்சி. அதான் நம்பிட்டேன். ஆனா நீ உன் அப்பாவை போலன்னு புரிஞ்சிக்காம போயிட்டேன்.!" என்றவனை குழப்பத்தோடு பார்த்தாள்.

'அப்பாவை போல' இதற்கு ஆயிரம் அர்த்தம் இருந்தது. ஒற்றை அர்த்தமும் ஓராயிரம் இடியென தாக்கியது.

"பா.."

"என் முகத்துல கூட விழிக்காத பூரணி.. உன் அப்பா எப்படி எங்க முல்லை அத்தை மேல கள்ள காதல் கொண்டாரோ அது போலதான் நீயும்.. உங்களுக்கெல்லாம் ஒரு துணை போதாது இல்ல. ஒன்னரை வாரத்துல என் தம்பியை மயக்கிட்ட நீ.. யா.. ரைட்.. நாகேந்திரனோட பொண்ணுக்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?" என்றான் கைகளை விரித்து. பூர்ணிமாவுக்கு நா எழ மறுத்தது. மைனஸ் ஆயிரம் டிகிரி கொண்ட குளிர் நீரில் யாரோ அவளை நனைத்தது போல உறைந்தாள். சம்பந்தம் இல்லாத குற்றச்சாட்டு போலிருந்தது அவளுக்கு.

அவளின் முகத்தை சில நொடிகள் பார்த்த பாலா முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிப் போனான்‌.

"நான் அப்படி கிடையாது.!" சில நிமிடங்களுக்கு பிறகு சிறு விம்மலோடு சொல்லியவளை தன் தோளோடு அணைத்தான் பூமாறன். சட்டென்று அவனை உதறி தள்ளினாள் பூர்ணிமா. ஆத்திரம் பெருக்கெடுத்தது அவளுக்கு. அவன் பக்கம் திரும்பினாள்.

"எல்லாம் உங்களாலதான்.. எதுக்கு இப்படி பொய் சொல்லி வச்சிருக்கிங்க.?" கோபமாக கேட்டாள். அவனின் தோளில் அடித்தாள். நெஞ்சில் குத்தினாள். அவன் சிலையென நின்றான்.

"என் மேல உனக்கு ஆசை இல்லன்னு சொல்லாத.." என்று அவன் சொன்னது கேட்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள். "கல்யாணமான அன்னைக்கே நீ என்னைதான் தேர்ந்தெடுத்த.. அன்னைக்கு கூட நீ என்னை சைட் அடிச்ச. ஐ நோ அபவுட் யூ.!" என்றவன் ஒற்றை கண் அடித்து புன்னகைத்தான். பூர்ணிமாவுக்கு பயத்தில் கால்கள் நடங்கியது. ஒரே நிமிடத்தில் மொத்த சந்தோசமும் பறிக்கப்பட்டு விட்டது போலிருந்தது. தரைக்கு கீழ் இருந்த பாதாள குழியில் விழுவதை உணர்ந்தாள் அவள்.

"நீங்களும் சீட்டரா? நம்பவே முடியல மாமா.." என்றவளுக்கு உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

"நியாயமா பேசு. உன் அப்பா கொழுந்தியா மேல ஆசைப்பட்டா சரி. நீ என் மேல ஆசைப்பட்டா தப்பா.. நீ செஞ்ச எதுவும் தப்பு இல்ல பூரணி.. நான் உனக்கு முழுசா சப்போர்ட் பண்றேன். அப்புறமா போன் பண்ணு. பேசலாம்.." என்றவன் புன்னகையோடே வெளியே கிளம்பினான்.

பூர்ணிமா தலையை பிடித்தாள். என்ன நடந்தது என்பதை மறுமுறை யோசித்து பார்க்க வேண்டி இருந்தது அவளுக்கு. ஏனெனில் அந்த அளவுக்கு நடந்து விட்டிருந்தது இந்த சில நிமிடங்களில். பாலா தன்னை சந்தேகிக்கிறான் என்ற உண்மை அவளை பயத்தில் கலங்க செய்தது.

"பாலா ஒரு மாதிரி.. சுய ஒழுக்கம் அவனுக்கு ரொம்ப முக்கியம். நீ எதையாவது பண்ணிட்டாத பூரணி.. முக்கியமா மாறன் கூட அளவுக்கு அதிகமா பழகாதே.!" அம்மா எச்சரித்தது நினைவில் வந்துச் சென்றது.

தானேதான் அனைத்தையும் சொதப்பி வைத்து விட்டோம் என்று விம்மி அழுதாள். பாலாவை எப்படி சமாதானம் செய்வது என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

பூமாறனோடு அவள் பேசிய, பழகிய நேரங்கள் நினைவில் வந்தது. பாலாவின் இடத்திலிருந்து இருவரையும் பார்த்தால் யாராய் இருந்தாலும் சந்தேகிக்கதான் செய்வார்களோ என்று குழம்பினாள். ஆனால் பாலா தன்னோடு பழகியதை நினைக்கையில்தான் அவளுக்கு அதிகம் அழுகை வந்தது.

"மாறனும் நீயும் எனக்கு ஒன்னுதான். உங்க இரண்டு பேரையும் அவ்வளவு லவ் பண்றேன்.!" பாலாவின் வார்த்தைகள் செவிகளில் ஒலித்தது. அவன் தன் மீது எடுத்துக் கொண்ட அக்கறை நினைத்து மீண்டும் உடைந்தாள்.

தரையில் மடங்கி அமர்ந்தாள்.

முகத்தை மூடியபடி அழுதுக் கொண்டிருந்தவளை தூரத்தில் இருந்தபடி பார்த்த அல்லி வெளியே பார்த்தாள். கிளம்ப தயாராய் இருந்த பாலாவின் காரில் ஏறினான் பூமாறன். பிறகு கார் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டது. அல்லி பெருமூச்சு விட்டாள்.

அல்லிக்கு பூர்ணிமாவை பார்த்து பரிதாபமாக இருந்தது.

"அழாத பாப்பா.." என்றாள் அருகில் வந்து.

"நான் எந்த தப்பும் செய்யல அக்கா.." விம்மியபடி சொன்னாள். அல்லி மண்டியிட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். அல்லியின் அணைப்பில் இன்னும் அதிகமாக அழுகை வந்தது பூர்ணிமாவுக்கு.

"விடும்மா.. அழாம இரும்மா.!" என்று சமாதானம் சொன்னாள் அல்லி.

அரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது.

அழுது முடித்து விட்டு எழுந்தாள் பூர்ணிமா. போனை தேடினாள்.

"நான் உனக்கு டீ கொண்டு வரேன்!" என்று சென்றாள் அல்லி.

போனை தேடி எடுத்ததும் பாலாவுக்குதான் அழைத்தாள் பூர்ணிமா. ஆனால் அவன் எடுக்கவேயில்லை. மீண்டும் அழைத்தாள். மீண்டும் மீண்டும் அழைத்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் எத்தனை முறை அழைத்தாள் என்று அவளுக்கே எண்ணிக்கை மறந்துப் போனது.

அல்லி வைத்து சென்ற தேனீர் அப்படியே கிடந்தது. சூடு ஆறியதை எடுத்து ஒரே விழுங்கில் குடித்தாள். எழுந்து நின்றாள். கண்களை துடைத்துக் கொண்டவள் புகுந்த வீட்டிற்கு புறப்பட்டாள்.

வாசலை தாண்ட இருந்தவள் "பாப்பா.. அப்பாவுக்கு விளக்கு வைக்கிற நேரம் ஆச்சி.!" என்ற அல்லியின் குரலில் நின்றாள். சமையலறை வாசலில் நின்றிருந்த அல்லியின் பார்வை நாகேந்திரனின் புகைப்படத்தின் மீதிருந்தது.

அப்பாவை திரும்பிப் பார்த்தாள். கண்களில் மீண்டும் நீர் நிறைந்தது. "இன்னைக்கு ஒரு நாளைக்கு நீங்க விளக்கேத்திடுங்க அக்கா‌.." என்றவள் நிலைக்கொள்ள முடியாமல் அவசரமாக வெளியே ஓடினாள்.

சற்று தூரத்தில் இருந்த தார்சாலைக்கு வந்து நின்றாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று காத்திருந்தாள்.

அனாதை போல இருந்தது சாலை. சற்று நேரம் பொறுத்திருந்தவள் அடுத்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் நாலெட்டு வைத்திருப்பாள். அருகே வந்தது நின்றது ஒரு பைக்.

அவளின் பெரியப்பா மகன்.

"அண்ணா.. என்னை எங்க வீட்டுல கொண்டு போய் விடுறியா?" எனக் கேட்டாள். அவளின் முகத்தை கண்டவன் "என்ன ஆச்சி?" என விசாரித்தான். அவள் பைக்கில் ஏறி அமர்ந்ததும் வண்டியை விரட்டினான்.

"தலைவலி அண்ணா.. வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவள் வாயை விட்டுவிட கூடாது என்று கவனமாக இருந்தாள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளே சமாளிக்க இயலாத நிலையில் இருப்பதால் புது பிரச்சனைகளை உருவாக்க விரும்பவில்லை அவள்.

தென்னந்தோப்புகளை தாண்டி நின்றது பைக். பூர்ணிமா இறங்கிக் கொண்டாள். "தேங்க்ஸ் அண்ணா." என்றவள் அவனின் மறுமொழிக்கு காத்திருந்தாமல் வீட்டை நோக்கி ஓடினாள்.

வாசலில் பாலாவின் கார் இல்லை. சாத்தியிருந்த கதவை திறந்துக் கொண்டு உள்ளே ஓடினாள். செண்பகம் இவளை கண்டதும் முகம் மலர்ந்தாள்.

"வா பூரணி.." என்றாள்.

"பாலா எங்கே அத்தை?" என்றவள் தனது அறையை நோக்கி ஓட முயன்றாள்.

"பாலாவா? அவன் ஜெர்மனியில் இல்ல இருப்பான்?" அத்தையின் கேள்வியில் அதிர்ந்து திரும்பினாள். பாலா இங்கே வரவில்லை என்பது புரிந்தது.

"மாறன் மாமா.." தயக்கமாக கேட்டாள்.

"அவன் அந்த வீட்டுக்கு போறதா சொல்லிட்டுதானே வந்தான்? நீ பார்க்கலையா?" செண்பகத்தின் அடுத்த கேள்வியில் மேலும் குழம்பினாள் பூர்ணிமா. இருவரும் எங்கேயாவது சென்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களா என நினைத்துப் பயந்தாள். பாலாவுக்கு அழைத்துப் பார்த்தாள்‌. இம்முறையும் அழைப்பு ஏற்கப்பட்டவில்லை. மாறனுக்கு அழைத்தாள். அதுவும் எடுக்கப் படாமலேயே போனது.

அழுகை வந்தது அவளுக்கு. சூழ்நிலை அவளை பயம் கொள்ள செய்தது. விசயத்தை அத்தையிடம் சொல்லவும் முடியவில்லை. ஏற்கனவே பாலா தவறாய் நினைத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் மற்றவர்களும் தவறாக நினைப்பதை அவள் விரும்பவில்லை.

இரவு உணவை அப்போதுதான் சமைத்து முடித்திருந்தாள் முல்லை.

பாடல் ஒன்றை முனகியபடி உணவினை அவள் தட்டில் பரிமாறிக் கொண்டிருந்த நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்த நேரத்திற்கு யார் என்று குழம்பினாள். சமையலறை விட்டு நடந்தாள். கதவின் அருகே வந்தவள் யோசனையோடு கதவின் லென்ஸ் கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். பாலாவும் பூமாறனும் நின்றிருந்தார்கள்.

"இந்த நேரத்துக்கு வந்திருக்காங்க. அதுவும் போன் கூட பண்ணாம.." குழப்பமாக சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தை தாண்டி விட்டிருந்தது.

கதவை மீண்டும் தட்டினான் பாலா.

முல்லை கதவை திறந்தாள்.

"அத்தை.." என்றபடியே உள்ளே வந்தான் பூமாறன். பூமாறனின் முகத்தில் சோகம் நிறைந்திருந்தது. பாலா அத்தையின் முகத்தை உற்றுப் பார்த்தபடியே உள்ளே வந்தான். அவனின் முகத்தில் இருந்த சோகமும் கூட முல்லையை கவலையில் ஆழ்த்தியது.

"என்னாச்சி.. இந்த டைம்க்கு வந்திருக்கிங்க?" முல்லையின் கேள்வியை காதில் வாங்காதவன் போல சோஃபாவில் அமர்ந்தான் பூமாறன்.

பாலா தயங்கினான்.

வீட்டின் கூடத்தில் அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்வையை திருப்பினான்.

"என்ன?" முல்லைக்கு பசி வேறு. இவன் மௌனமாய் இருப்பது எரிச்சலைதான் தந்தது அவளுக்கு.

"உங்க பொண்ணுக்கு மாறன் மேல அஃபேர்.!" அவனை அறைய வேண்டும் என்று கையை உயர்த்தியவள் பாதியில் கையை நிறுத்தினாள். கோபத்தில் உதடு துடித்தது அவளுக்கு‌.

"என்ன சொன்ன?" என்றாள் மீண்டும்.

"ஆமா.. அவளுக்கு இவனை ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றவனின் முகத்தில் சட்டென்று அளவுக்கு அதிகமான சோர்வு குடி வந்தது. கண்கள் கலங்கியது. முல்லையின் கோபம் எந்த திசையில் சென்றது என்று அவளுக்கே தெரியவில்லை. நெஞ்சில் பயம் புகுந்தது.

"அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்லி இருப்பா பாலா.. அவ ரொம்ப நல்ல பொண்ணு. என் பொண்ணை நான் எவ்வளவு ஒழுக்கமா வளர்த்தி இருக்கேன் தெரியுமா?" என்றாள் கோபமும் ஆதங்கமுமாக. பாலா வீண் சந்தேகம் கொள்வதாக நம்பினாள்.

பாலா சத்தமில்லாமல் நகைத்தபடி போனில் இருந்த வாட்சப் குரூப் செய்திகளை காட்டினான். புகைப்படத்தை பார்க்கும்போதே முல்லைக்கு கண்களில் கண்ணீர் உற்பத்தியாகி விட்டது. செய்திகளை படித்த பிறகு மொத்தமாகவே உடைந்து விட்டாள். ஆறாய் ஓடிய கண்ணீரோடு மருமகனை பார்த்தாள்.

"சாரி அத்தை.. ஒழுக்கமான வளர்ப்பு எல்லா நேரத்திலும் ஒழுக்கமான வாரிசுகளை உருவாக்கி தந்துடாது.!" என்றான்.

வீட்டின் நிசப்தம் சில நொடிகள் வரை எந்த சப்தத்தாலும் உருக்குலைக்க முடியாதவாறு இருந்தது. ஆனால் நிமிடங்கள் கடந்த பிறகு முல்லை மெள்ள நிதர்சனத்தை உணர்ந்தாள். தன்னை மீறி கண்ணீர் சிந்தினாள். முகத்தை இரு கரங்களாலும் பொத்திக் கொண்டு அழுதாள்.

"அழாதிங்க அத்தை.. அவனுக்கும் அவளுக்கும் டைவர்ஸ் வாங்கி தந்துட்டு எனக்கு அவளை ரீமேரேஜ் பண்ணி வச்சிடுங்க.." என்றான் பூமாறன் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று.

முல்லை கோபத்தோடு அவன் அருகே வந்தாள். அவனின் கன்னத்தில் அறைந்தாள். "என்ன பேசற நீ? பைத்தியமா நீ? இவன் உன் அண்ணன்டா.. அவ உன் அண்ணி.. சொந்த அண்ணனுக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படிடா மனசு வந்தது? இத்தனை வருச பாசமெல்லாம் எங்கேடா போச்சி? உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேனே மாறா?" நீங்காத அழுகையோடு கேட்டாள்.

பூமாறன் வெறுமனே தோள்களை குலுக்கினான். அவன் முகத்தில் துளியும் குற்ற உணர்வு இல்லாதது கண்டு அஞ்சினாள் முல்லை.

"தப்புக்கு இவனும் காரணம்தான். ஆனா முழுசா இவனே காரணம்ன்னு சொல்லாதிங்க. உங்க பொண்ணு ஏறி விழுந்துட்டு இவனை சுத்தி வந்தா இவன் மட்டும் என்ன செய்வான்?" கடுகடுத்த குரலில் கேட்டான் பாலா.

அவர்களின் குற்றச்சாட்டை கேட்கையில் முல்லைக்கு இதயம் ரணமானது.

"அவக்கிட்ட நான் பேசுறேன்டா பாலா.." என்ற அத்தையை உதடு சுழித்தபடி பார்த்தான் அவன்.

"அவ சின்னப் பொண்ணு.. அவளுக்கு நல்லது கெட்டது சரியா தெரியல. நான் அவளை கூப்பிட்டு திட்டுறேன். அவ இனிமே அப்படி செய்ய மாட்டா.. ப்ளீஸ்.. இதுவரை நடந்ததை எல்லாம் மறந்துடுங்க.." கெஞ்சினாள்.

பாலா கசப்பாக சிரித்தான்.

"நடந்ததை மறந்துட்டா அதெல்லாம் இல்லன்னு ஆகிடுமா?" எனக் கேட்டான் பற்களை அறைத்தபடி.

முல்லை தலையில் அடித்துக் கொண்டாள். "நான் என்ன செய்வேன்? இவ இப்படி செஞ்சிட கூடாதுன்னு ஆயிரம் முறை புத்தி சொன்னேன்.. எந்த அவப்பெயர் வர கூடாதுன்னு நான் பயந்தேன்னோ அதே அவப்பெயரை வாங்கித் தந்துட்டா.." என்று அழுதாள்.

பூமாறன் அத்தையின் அழுகையை கண்டு வருத்தப்பட்டான். அவனுக்கும் விழிகள் கலங்கியது.

ஒரு பாட்டம் அழுது விட்டு பாலாவிடம் வந்தாள் முல்லை. "நாம அவக்கிட்ட பேசிக்கலாம் பாலா.." என்றாள் சிறு குரலில்.

மறுப்பாக தலையசைத்தான் அவன். "டைவர்ஸ் வாங்கிடலாம் அத்தை.. ஒருத்தரை கட்டாயப்படுத்தி வாழ வைக்கிறதுல என்ன பிரயோஜனம் இருக்கு? அவளுக்கு இவனைதான் பிடிச்சிருக்குன்னா இவன் கூடயே வாழ்ந்துட்டு போகட்டும். ஐ லவ் ஹேர். அவ வாழ்க்கைக்கு நான் ஏன் தடையா இருக்கணும்? நீங்க அப்பவே சொன்னிங்க, உங்க பொண்ணுக்கு அவனைத்தான் பிடிக்கும்ன்னு. நான்தான் நம்பாம போயிட்டேன்.. சாரி அத்தை‌‌.." என்றவன் வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

பூமாறன் அத்தையின் முகத்தை சில நிமிடங்கள் பார்த்தான். பின்னர் அமைதியாக வெளியே நடந்தான்.

முல்லை நின்றிருந்த இடத்திலேயே அமர்ந்தாள். அழுதாள். நெஞ்சம் உடைய அழுதாள்.

இரவு நேர உணவகம் ஒன்றின் முன் காரை நிறுத்தினான் பாலா.

"சாப்பிடலாம்.." என்றான்.

"பூரணிக்கோ அத்தைக்கோ ஏதாவது ஆச்சின்னா நான் உன்னை கொன்னுடுவேன்.." என்றான் எரிச்சலோடு பூமாறன்.

"உன் வாயை கொஞ்ச நேரம் மூடு மாறா.. இரண்டு பேருக்கும் புத்தி தேவைப்படுது.. முழு தப்பையும் நம்ம மேல போட்டுட்டு அவங்க யோக்கியமா இருந்துடலாம்ன்னு நினைக்கிறாங்க.. சூழ்நிலை காரணமா வந்து சேர்ந்தா எதுவும் நடக்கும். அது அவங்களுக்கு புரியல. அவளுக்கு அப்பன் முக்கியம். பார்க்கலாமே இப்ப உன்னை மெச்சுறாளான்னு!? அத்தைக்கு நாம நம்பாம போனது பிரச்சனை. ஆனா இப்ப தான் வளர்த்த பொண்ணை நம்பாம நாலு போட்டோவையும் எதிராளிங்க திட்டையும்தானே நம்பினாங்க.. பழியோ பாவமோ சம்பந்தப்பட்ட எல்லோரும்தான் அனுபவிக்கணும். ஏமாந்தவங்க தலையில் கட்டக் கூடாது. பூர்ணி எவ்வளவு கதறனாலும் எனக்கு மனசே ஆறாது.." என்றவன் கீழே இறங்கினான்.

பூமாறன் நெற்றியில் அடித்துக் கொண்டான். "அவங்க இரண்டு பேரையும் விட நீதான் அதிக தப்பு பண்ற. பூரணிக்கு கூட ஓகே.. ஆனா அத்தையை நீ மறுபடியும் அழுகதான் வச்சிருக்க.. அவங்க உன்னை கொல்ல போறாங்க.." என்றான் மறுபக்கம் இறங்கி நின்று.

"சரிதான் போடா.. அத்தையை இத்தனை நாள் நம்பாம போயிட்டமேன்னு எவ்வளவு பீல் பண்ணேன் தெரியுமா? ஊர் திரும்பியதும் அத்தை கால்ல விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்கணும்ன்னு நினைச்சேன். ஆனா பூர்ணியோட வார்த்தைகள் என்னை ஈவிலா மாத்திடுச்சி.!" என்றவன் ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN