பௌர்ணமி 23

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாவும் பூமாறனும் உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். பாலாவின் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது. பூமாறனுக்கு கன்னம் வலித்தது.

"அம்மாவும் மகளும் ஒரே சைட்ல அறைஞ்சிட்டாங்க அண்ணா.." என்றான் கன்னத்தை தேய்த்தபடி.

சிரிப்போடு தம்பியை அணைத்துக் கொண்டான் அவன். "சாரி.!" என்றான். இத்தனை நாள் வாங்கிய அறைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

"நானே வருசம் முழுக்க அடி வாங்கறேன். ஒரு நாளைக்கு நீ வாங்கியதுல ஒன்னும் குறையல நீ.!" என்றான் பாலா.

"இந்த அறைகளை வாங்கிய பிறகுதான் ஒன்னு தோணுது, நல்லவேளை நான் தப்பிச்சேன்னு!"‌ கேலியோடு சொன்ன பூமாறன் சாலையை பார்த்தான். காரிருளில் சூரியனுக்கு போட்டியென்று வண்ண விளக்குகள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.

காரின் பின் சீட்டில் அமர்ந்தான் பூமாறன். பாலா மருந்தை எடுத்து தம்பியின் கை காயங்களுக்கு தடவினான்.‌ உணவகத்தில் உணவும் அவன்தான் ஊட்டி விட்டிருந்தான். வீட்டில் கூட அம்மாவிடம் கேட்டு ஸ்பூன்தான் பயன்படுத்தினான். ஆனால் பாலா பொது இடம் என்றும் கூட பாராமல் ஊட்டிதான் விடுவேன் என்று மிரட்டி ஊட்டி விட்டான்.

தண்ணீரை எடுத்தவன் மாத்திரைகளை தம்பியின் வாயில் போட்டு விட்டு தண்ணீரை தந்தான்.

பூமாறன் போதுமென்று கை காட்டினான்.‌ "ஏன் என்னை சாகடிக்கற? கை காயத்தை விட அந்த டாக்டர் குத்திய ஊசிதான் ரொம்ப வலிக்குது.!" என்றான் சோகமாக. அத்தை வீட்டிற்கு வரும் வழியில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தான் பாலா. மருத்துவரும் பூமாறனின் கை காயங்களை சுத்தம் செய்து, மாத்திரை தந்து, ஊசியை போட்டு அனுப்பி இருந்தார்.

"சின்ன குழந்தை மாதிரி சிணுங்காத.." என்ற பாலா தண்ணீர் பாட்டிலை அதன் இடத்தில் வைத்தான்.

"இங்கேயே தங்கிட்டு போலாமா? உடம்பு வலிக்குது.!" என்றான் பூமாறன் உடம்பை வளைத்து நெளித்தபடி. இவ்வளவு தூரம் வந்தது உடல் சோர்வை தந்தது அவனுக்கு.

"தூங்குடா நீ.!" என்ற பாலா தன் இருக்கைக்கு சென்று காரை இயக்கினான்.

"நீயும் நேத்துல இருந்து தூங்கல. ஏதாவது லாரியில் கொண்டுப் போய் காரை விட்டுடாத அண்ணா.." என்ற தம்பியினை திரும்பிப் பார்த்து முறைத்தான் பாலா.

"வாயை மூடிக்கிட்டு வாடா.." என்றான்.

"அத்தை பாவம்.!" சில கிலோமீட்டர்களை தாண்டிய பிறகு சொன்னான் பூமாறன்.

"சாரி கேட்டுக்கலாம்.!"

"சாரியா? நீ சொன்ன பொய்க்கு அத்தை என் தோலையும் சேர்த்து உரிக்க போறாங்க.." என்றவன் இருக்கையில் சாய்ந்துப் படுத்தான். பாலா தன் அருகில் இருந்த போர்வையை எடுத்து தம்பியிடம் வீசினான்.

"குளிரும். போர்த்திக்க.!" என்றான்.

"ம்.. வீடு வந்த பிறகு எழுப்பு. தூக்கிட்டு ஏதும் போயிடாத.. அம்மா பயந்துடுவாங்க.!" என்றபடியே கண்களை மூடினான்.

பாலா ஜன்னலின் கண்ணாடிகளை ஏற்றி விட்டான். அவ்வப்போது நெடுஞ்சாலை மரங்களை நோட்டம் விட்டான்.

பூர்ணிமா அழுதுக் கொண்டிருப்பாள் என்று யூகித்தான். ஆனாலும் இன்னமும் பரிதாபம் வர மறுத்தது.

'வருசம் முழுக்க குழந்தைன்னே நினைப்பு அவளுக்கு.. பட்டாதான் திருந்தும் அந்த ஜென்மம்.!' மனதுக்குள் மனைவியை திட்டி தீர்த்தான்.

பூர்ணிமா அறையில் படுத்திருந்தாள். பாலாவும் மாறனும் போன திசை தெரியவில்லை. போன் செய்தால் இருவருமே எடுக்க மறுத்தனர். இவளின் அழுகை கண்டு என்ன விசயம் என்று கேட்டுச் சலித்தாள் செண்பகம்.

மரிக்கொழுந்து மட்டும் கோபத்தோடு இருந்தார். ஆனாலும் தன் கோபத்தை பூர்ணிமாவிடம் காட்டவில்லை அவர். வாட்சப் செய்திகளை படித்த நேரத்தில் இருந்தே அவருக்குள் கோபம் உயர்ந்தபடிதான் இருந்தது. ஆனால் முல்லை விசயத்தில் செய்த தவறை பூமாறன் விசயத்தில் செய்ய தயாராக இல்லை அவர். பேசுபவர்களுக்கு இது வெறும் செய்தி. ஆனால் வாழ்பவர்களுக்கோ இது சறுக்கி விடும் பாசி பிடித்த படிக்கட்டுகள் என்று இப்போது புரிந்துக் கொண்டார் அவர்.

இரவு உணவை உண்ண மறுத்து விட்டாள் பூர்ணிமா. மரிக்கொழுந்துக்கும் முழுதாய் உண்ண முடியவில்லை. இந்த பிரச்சனையை தன்னை விட தன் மகன்கள் சரியாக கையாளுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு. தங்கை விசயத்தில் கோழையாய் ஒளிந்துக் கொண்டவர் இந்த விசயத்தில் தான் ஒதுங்கிக் கொள்வது சரியான விளைவை வரும் என்று நம்பினார்.

செண்பகத்துக்குதான் எல்லாம் புதிராகவே இருந்தது. ஆனாலும் யாரிடம் கேட்டாலும் பதில் வராது என்று உணர்ந்து அமைதியாகிக் கொண்டாள்.

முன்னிரவு கடந்து விட்டிருந்தது. பூர்ணிமாவுக்கு உறக்கமே வரவில்லை. தன் போனில் பாலாவுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். வழக்கம்போல எதிர் பக்கம் அழைப்பு ஏற்கப்படாமலேயே போய் கொண்டிருந்தது.

கண்களின் கண்ணீர் நிற்கவே இல்லை அவளுக்கு. ஏதேதோ நினைவுகள் வந்தது.

அறைக்குள் குட்டி போட்ட பூனை போல நடந்துக் கொண்டிருந்தாள். கையில் இருந்த போனில் வெளிச்சம் அணையவே இல்லை.

மணி இரண்டை கடந்த நேரத்தில் காரின் இன்ஜின் சத்தம் கேட்டு பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தாள். பாலாவின் கார்தான். அவசரமாக கீழே இறங்கி ஓடினாள்.

அவர்கள் கதவை தட்ட இருந்த அதே நேரத்தில் இவள் கதவை திறந்தாள். பாலா அவளை கண்டும் காணாமல் உள்ளே நடந்தான். அவனுக்கு பின்னால் வந்த பூமாறன் தலையை உயர்த்தவே இல்லை. தரையில் நவரத்தினங்கள் கொட்டி கிடப்பது போல தரையிலேயே பார்வையை ஒட்ட வைத்திருந்தான்.

"பாலா.." பூர்ணிமாவின் கெஞ்சலை காதில் கேட்காதவன் போல படிகளில் ஏறினான் அவன்.

"நான் அப்படி இல்ல பாலா.. மாறா மாமா பொய் சொல்றாரு.. நான் உன்னை விட்டுட்டு அவரை ஏன் லவ் பண்ணணும்?" என்றாள்.

அவன் அவள் சொல்வதை காதில் வாங்கவேயில்லை. சட்டையை கழட்டி எறிந்து விட்டு கட்டிலில் விழுந்தான்.

"பாலா.." அவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

"இங்கே என்ன பண்ற நீ?" என்றான் கண்களை மூடியபடி.

"நான் இங்கே இருக்க கூடாதுன்னு சொல்றியா?" ‌

"இல்ல.. மூணு மாசத்துக்கு உன் அப்பாவோட வீட்டை விட்டு வர மாட்டேன்னு சொன்னியே.!"

பூர்ணிமா தன் உள்ளங்கைகளில் முகம் புதைத்தாள். "என்னால யோசிக்க முடியல பாலா.!" என்றாள் சிறு குரலில்.

பாலா தன் உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல் இருக்க முயன்றான்.

"பைத்தியம் பிடிக்கற மாதிரியே இருக்கு எனக்கு. நான் அப்படி இல்ல. நான் உன்னை விட்டு வேற யாரையாவது லவ் பண்ணா உன்கிட்ட சொல்லிட்டு போவேன். இப்படி கூடவே இருந்து துரோகம் செய்ய மாட்டேன். பிலீவ் மீ. அதுவும் மாறா மாமா மேல எனக்கு எதுவும் இல்ல. அவர் கொஞ்சம் லட்சணமா இருக்காரு. இல்லன்னு சொல்லல. ஆனா நான் அவரை அந்த மாதிரி பார்க்கல.." என்றாள் கரகரத்த குரலில்.

பாலாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவனை பார்த்தாள். உறங்கி விட்டவனிடமிருந்து சிறு குறட்டை சத்தம் வந்துக் கொண்டிருந்தது.

பூர்ணிமா நெற்றியை தேய்த்துக் கொண்டாள். ஒரு ஓரமாக சென்று படுத்தாள். ஈர விழிகளை மூடினாள். அவன் அருகில் இருந்த காரணமோ என்னவோ தூக்கம் கண்களை சேர்ந்து விட்டது.

மறுநாள் காலையில் கதவு தட்டப்பட்டும் சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள் பூர்ணிமா. பாலா அவளை அணைத்துக் கொண்டிருந்தான். கதவு மீண்டும் தட்டப்பட்டது. பாலா கண்களை திறந்தான். மனைவியை கண்டவன் எதுவும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தான். முகம் கல் போல் இருந்தது அவனுக்கு.‌ சென்றுக் கதவை திறந்தான். பூமாறன் நின்றிருந்தான்.

"அத்தை கீழே இருக்காங்க அண்ணா.. எனக்கு பயமா இருக்கு.!" என்று கிசுகிசுத்தான்.

"டோன்ட்.!" எச்சரித்தான் பாலா. அதே நேரத்தில் பூர்ணிமா எழுந்து வந்தாள்.

"பாலா.." கெஞ்சலாக ஆரம்பித்தாள்.

"இவர் பொய் சொல்றாரு.. நீ ஏன் என்னை நம்ப மாட்டேங்கிற?" நேற்று விட்ட இடத்திலிருந்து கேட்டாள்.

"என் தம்பியை நீ குறை சொல்லாத.." என்றான்.

"பாலா.. அவர் உன்னையும் என்னையும் பிரிக்க பார்க்கறாரு.." தலையை பிடித்தபடி சொன்னாள். என்ற சொன்னால் அவனுக்கு புரியும் என்று யோசித்துக் குழம்பினாள்.

"சொந்த அண்ணன் வாழ்க்கையை கெடுக்க அவன் நினைப்பானா?" எனக் கேட்டவன் அந்த அறையை விட்டு வெளியே நடந்தான். போகும்போது தம்பியின் தோளில் தட்டி விட்டுச் சென்றான்.

பூர்ணிமா அவனை பின்தொடர இருந்தாள். ஆனால் பூமாறன் தடுத்து நிறுத்தினான். அறைக்குள் நுழைந்தான்.

"மாமா.." தயக்கமாக அழைத்தாள்.

"ஏன் பூரணி பயப்படுற? அவனை விட நான் எந்த விதத்தில் குறைச்சல்?" எனக் கேட்டான்.

பூர்ணிமாவின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.

"இப்படி சொல்லாதிங்க மாமா.. என்னையும் பாலாவையும் பிரிக்க டிரை பண்ணாதிங்க.! என் வாழ்க்கையே நாசமா போயிடும். ஐ லவ் ஹிம். அவன் இல்லன்னா நான் வாழ்வதே வேஸ்ட்.."

சிரித்தான் பூமாறன். "உன் அப்பா சொன்ன ஒரு சொல் என் இரண்டு அத்தைகள் வாழ்க்கையை கெடுத்துச்சி. ஆனா அதை நீ நம்பல. உன் அப்பாவுக்கு பின்பாட்டு பாடின. ஆனா இன்னைக்கு என் வார்த்தை உன் வாழ்க்கையை அழிக்குதுன்னு சொல்ற.. என்ன ஒரு முரண்பாடு பூரணி? உன் அப்பாவுக்குன்னா ஒரு நியாயம் எனக்குன்னா ஒரு நியாயமா?" எனக் கேட்டான்.

பூர்ணிமாவின் கண்ணீர் நின்றுப் போனது. எதிரில் இருந்தவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"நான் உன்னை விடுறதா இல்ல பூரணி.. உன் அப்பா என் முல்லை அத்தை லைப்பை கெடுத்த மாதிரி நான் உன் வாழ்க்கையை அழிக்க போறேன். உன் அப்பா செஞ்ச அதையேதான் நானும் செய்ய போறேன்.!" என்றவன் அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்.

பூர்ணிமாவுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. தலையை பிடித்தபடி தரையில் அமர்ந்தாள்.

"பூரணி.." பத்து நிமிடங்களுக்கு பிறகு அம்மாவின் குரல் கேட்டது. எழுந்து நின்றாள் பூர்ணிமா. அம்மாவை தேடி ஓட முயன்றாள். ஆனால் அதற்குள் முல்லையே எதிரில் வந்து நின்று விட்டாள். மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

"நான் படிச்சி படிச்சி சொன்னேன்.. என் பேச்சை கேட்டியா?" என்று ஆத்திரத்தோடு கத்தினாள்.

"அம்மா நான் இல்ல..." பூர்ணிமா இடம் வலமாக தலையசைத்தாள்.

ஆனால் முல்லை மகளை பார்க்கவில்லை. முல்லை நெற்றியை தேய்த்தாள். கலங்கும் விழிகளை துடைத்தாள்.

"நீ உன் அப்பாவை போல இருந்துட கூடாதுன்னு நான் எவ்வளவு முயற்சி செஞ்சேன் தெரியுமா? ஆனா அத்தனையும் வேஸ்டா போச்சி.!" என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

பூர்ணிமா அதிர்ச்சியோடு அம்மாவை பார்த்தாள்.

"அம்மா.." என்றாள் தயக்கமாக.

முல்லை கதவின் மீது சாய்ந்து நின்றாள். நெஞ்சத்தை ஒற்றை கையால் பிடித்தாள். கலங்கும் விழிகளோடு மகளை பார்த்தாள்.

"கடைசியில் நீயும் உன் அப்பாவை போலதான் இல்ல? அவருக்கு எப்படி ஒரு பொண்டாட்டி போதலையோ அது போல உனக்கும் ஒரு புருசன் போதல.!" என்றாள்‌ கன்னங்கள் தாண்டிய கண்ணீரோடு.

பூர்ணிமா இல்லையென தலையசைத்தாள். வாய் திறக்கவே முடியவில்லை அவளால். நேற்று இதையேதான் பாலா சொன்னான். அதுவே இதயத்தை இரண்டாக பிளவுற செய்திருந்தது. இப்போது இதுவும் அப்படிதான் இருந்தது. பூர்ணிமாவின் சிந்தனையோட்டம் கூட தடைப்பட்டுப் போனது.

'நான் அவர் போல இல்ல..' என்று கத்த நினைத்தாள். ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN