தேவதை 67

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆதி தனது மாளிகையில் அமர்ந்திருந்தாள். கவி அவளோடு உடன் இருந்தான். அவ்வப்போது அவனோடு வாள் பயிற்சி செய்தாள் அவள். அதை தவிர வேறு வழியும் இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு பயமாக இருந்தது, அவனோடு சேர்ந்து தானும் இரக்கமில்லாதவளாக மாறி விடுவோமோ என்று.

"என்னை உனக்கு எப்போது பிடிக்கும்?" கவி ஒருநாள் அவளின் கழுத்தில் கத்தியை பதித்தபடி கேட்டான். தீவிரமாக நடந்துக் கொண்டிருந்த சண்டை அது. இவன் திடீரென கேட்கவும் பிரபஞ்சம் நின்றுப் போனதை போல உணர்ந்தாள் அவள்.

"எனக்கு ஏன் பிடிக்கணும்? நீ ஒன்னும் என்னை பிடிச்சி மணம் முடிக்கலையே.!" என்றவள் அவனிடமிருந்து விலகி வந்து தனது கத்தியை அவன் புறம் திருப்பினாள்.

"ஏனா அப்போது எனக்கு என் உலகத்தை ரொம்ப பிடிச்சிருந்தது."

"அப்படின்னா இப்ப.."

"இப்பவும்தான்.!" அவன் சொன்னது கேட்டு பெருமூச்சு விட்டாள். "ஆனா என் உலகத்தையும் என் மக்களையும் பிடிச்ச அளவுக்கு எனக்கு உன்னையும் பிடிச்சிருக்கு.!" என்றான் அவன்.

ஆதி சிறு நகைப்போடு தனது வாளை பார்த்தாள். பிரபஞ்சத்திலிருந்த அவர்களின் மாளிகையின் பின்புறம் இருந்த அழகிய மைதானம் அது. எப்போதும் வெண் பனி பெய்துக் கொண்டே இருக்கும்.

ஆதியின் தலையில் விழுந்து அவளின் கூந்தலை தனது வெண்மையில் மறைய செய்துக் கொண்டிருந்தது அந்த பனி. வாளின் பிரதிபலிப்பில் கவி தெரிந்தான். அவனின் கார் நிறமும், மின்னும் விழிகளும் அவளின் மனதை உருக்கும் எரிமலையை போல செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவனை பார்ப்பதை தவிர்க்க நினைத்தாள் அவள். ஆனால் அவன் எல்லா நேரங்களிலும் அவளோடுதான் இருந்தான்.

"நான் நினைச்சா உன் உலகத்துத் தேவர்கள் அனைவரும் உன்னை வெறுக்கும்படி செய்ய முடியும்." என்றாள்.

அருகில் வந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவனின் கையை தட்டி விட்டாள் அவள். அந்த இரு கண்களை தோண்டி விட்டால் பிறகு தனக்கு பிரச்சனை இருக்காது என்று நினைத்தாள்.

'ஒரு அன்பின் தேவதை போல யோசி ஆதி!' தன் எண்ணத்திற்காக தன்னையே எச்சரித்துக் கொண்டாள்.

"ஆனா நீ அப்படி செய்ய மாட்ட.. ஏனா உனக்கு என்னை விட உன் பணியின் மீதுதான் அதிக பாசம்.!" என்றான் அவன் கசப்போடு.

ஆதி தரை பார்த்தாள். அவன் சொன்னதில் பாதி உண்மை இருந்தது. ஆனால் அவள் அவனையும் அதிகம் விரும்பினாள். பணி என்றால் என்னவென்று அவள் அறியும் முன்பே அவளை தன் காதலில் விழ வைத்து விட்டான் அவன். அவனோடு இருக்கையில் மகிழ்ச்சியை உணர்ந்தாள் அவள். ஆனால் குற்ற உணர்வை கொன்று புதைத்து விட்டு அவனோடு சல்லாபிப்பதுதான் அவளுக்கு சவாலாக இருந்தது. அவள் அவனை நெருங்கும் ஒவ்வொரு முறையும் அழிந்த அவளின் உலகம் அவளின் கண் முன் வந்து நின்றது.

"இன்னும் எத்தனை ஆயிரம் வருசங்களுக்கு நீ இப்படி விலகி இருப்பியோ இரு.. நான் காத்திருக்கேன்.!" என்றவன் தனது வாளோடு மாளிகைக்குள் நுழைந்தான்.

ஆதி வானம் பார்த்தாள். அவளின் உலகத்தை திருப்பிக் கொண்டு வருவதற்கு அவன் செய்த முயற்சிகளையெல்லாம் அவளும் அறிவாள்.

"நான் சத்திய தேவ உலகம் போறேன். நீயும் வரியா?" சற்று நேரத்தில் திரும்பி வந்துக் கேட்டான் கவி. ஆதி சரியென தலையசைத்து விட்டு கிளம்பினாள்.

இருவரும் பிரபஞ்ச வெளியில் பாதி தூரம் தாண்டும் முன்பே அவர்களின் முன்னால் வந்து நின்றது ஒரு ஆகாய கப்பல். அது கிரகவாசிகளின் கப்பல். பூமியை போல பிரபஞ்சத்தின் மொத்த வெளிகளிலும் ஆயிரக்கணக்கான கிரகங்கள் உயிர்களை தனக்குள் உருவாக்கி வைத்திருந்தன. அதில் ஒரு கிரகத்தை சேர்ந்தவர்கள்தான் இவர்கள். அவர்கள் அப்போதைய பூமியின் மனிதர்களால் பாதிக்கப்பட்டவர்களும் கூட. கிட்டத்தட்ட அழிந்து போயிருக்க கூடிய இனம் அது. அந்த கிரகத்தில் இருந்த ஒற்றை விஞ்ஞானியால் திரும்பவும் உயிர் வரவழைக்கப்பட்டவர்கள் அந்த கிரகத்தார்.

"நீங்க உண்மையிலேயே தேவதைதான்.!" ஆச்சரியமும் வன்மமுமாக ஒலித்தது அந்த கப்பலில் இருந்த ஒருவனின் குரல். மிகவும் உயரமாய், இரட்டை கைகள் இரு புறமும் கொண்டு தலையை வயிற்றில் கொண்டிருந்தான் அவன்.

"ஆமா.. நீ ஏன் கப்பலை விட்டு வெளியே வந்து பேசக் கூடாது?" கவி நக்கலாக கேட்டபடி ஆதியின் அருகே வந்தான். அவளின் கையை பற்றினான்.

"எங்களால பிரபஞ்ச சூன்யத்தை சுவாசிக்க முடியாது.." என்றவனை பார்த்து கேலியோடு நகைத்தான் கவி.

"உன்னால முடியுதுன்னு இல்லாதவங்களை பார்த்து சிரிக்காத.!" ஆதியின் குற்றச்சாட்டில் அவள் புறம் திரும்பியவன் பற்களை அறைத்தான்.

"அப்படின்னா என் பிள்ளைகளுக்கு ஏன் நீ இந்த பாவம் பார்க்கல?" எனக் கேட்டான்.

"அதை பத்தி பேசாதே.. சலிச்சி போச்சி எனக்கு.!" என்றவள் தங்களின் முன்னால் நின்றிருந்த ஓடத்தின் புறம் பார்வையை திருப்பினாள்.

"உங்களுக்கு இங்கே என்ன வேலை? உங்களை பார்த்தா ரொம்ப தூரத்துல இருந்து வந்தது போல் இருக்கு.!" என்றாள்.

உள்ளே இருந்தவன் தன் ஓடத்திலிருந்த பொத்தான் ஒன்றை அழுத்தினான். ஓடத்தின் வெளிப்புற திரையில் காணொளி ஒன்று ஓடியது. அவர்களின் கிரகத்தை பூமியின் மனிதர்கள் அழித்தபோது பதிவு செய்யப்பட்ட காணொளி அது. காட்சிகளை காணும்போதே ஆதிக்கு இதயம் வலித்தது.

"இவங்களால நாங்க ரொம்ப சிரமப்பட்டுட்டோம். அதான் பதிலடி தரலாம்ன்னு ரொம்ப கஷ்டப்பட்டு தேடிட்டு இருக்கோம். அவங்க இருக்கும் கிரகம் எதுன்னு எங்களால கண்டுபிடிக்க முடியல. ஆனா ஆதி எனும் தேவதை பத்தி அவங்க பேசிட்டு இருந்தது எங்களுக்கு தெரியும்.." என்றான் ஓடத்தின் உள்ளிருந்தவன்.

காணொளியில் உள்ள மனிதர்கள் "ஆதியின் பிள்ளைகள் இந்த பிரபஞ்சம் ஆள பிறந்தவர்கள்.!" என்று கத்திக் கொண்டிருந்தார்கள்.

"அந்த ஆதி யார்ன்னும் கண்டுபிடிச்சிட்டோம்.!" என்றவன் மற்றொரு பொத்தானை அழுத்தினான். காணொளியில் காட்சி மாறும் என்று காத்திருந்தாள் ஆதி. ஆனால் ஓடத்தின் பக்கவாட்டு துளையிலிருந்து வெடிப்பொருள் போல ஏதோ ஒன்று வந்து வெளி வந்தது.

ஆதி குழப்பத்தில் நின்றிருந்தாள். அவளின் கையை பற்றி தூரமாக இழுத்தான் கவி.‌ ஆனால் அந்த வெடிப்பொருள் அவனின் நெஞ்சில் வந்து பாய்ந்தது. பிரபஞ்ச வெளியில் விழுந்தான் கவி.

ஆதி அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

"கவி.." பயத்தோடு அழைத்தாள். கவியிடமிருந்து பதில் வரவில்லை.

ஓடத்திலிருந்து மீண்டும் குண்டு பாய்ந்தது. ஆதி ஆத்திரத்தோடு இந்த பக்கம் திரும்பினாள். தனது கையை மடக்கி நீட்டினாள். கத்தினாள். எதிரில் இருந்த ஓடம் துகள் துகளாக சிதறிப் போனது. அதில் இருந்த மனிதர்களும் கூட அதே போல சிதறிப் போயினர். அழிந்த சுவடி கூட இல்லாமல் பிரபஞ்சத்தின் சூனியத்தில் கரைந்துப் போனார்கள்.

ஆதி அதிர்ந்தாள். மூச்சு விடவும் மறந்தாள். என்ன நடந்தது என்று யோசித்தாள். அவளின் இதயத்தில் இருந்த அன்பு செத்துப் போயிருந்தது. அப்படியே மயங்கி சரிந்தாள்.

தூரத்திலிருந்தபடி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கவி ஓடி வந்தான். அவளை தாங்கிப் பிடித்தான். மனிதர்கள் அனுப்பிய வெடி குண்டால் அவனுக்கு ஒன்னும் நேர்ந்திருக்கவில்லை. அந்த வெடிப்பொருளின் சக்தியால் தான் இருந்த இடத்தை விட்டு தூரம் சென்று விழுந்திருந்தான். அவ்வளவுதான். ஆனால் ஆதி அதை அறியவில்லை. அவளுக்குள் இருந்த வெறுப்பு தானாய் வெளிவந்து விட்டது. வெறுப்பின் பிரமாண்டத்தில் அன்பு இறந்து போய் விட்டது.

"ஆதி‌‌.." அவளின் கன்னங்களை தட்டினான். அவளின் இறக்கைகளை வருடி தந்தான். ஆனால் அவள் கண் விழிக்கவே இல்லை.

வனியின் மாளிகையில் இருந்தனர் ஆதியும் கவியும்.

படுக்கையில் இருந்த ஆதியை சோதித்து விட்டு வந்தார் வனி. உதடு பிதுக்கினார். கவி தன் வாளை உருவினான்.

"அவ உயிரோடு வரலன்னா நான் உங்களை கொன்னுடுவேன்.!" என்றான்.

வனி நெற்றியில் அடித்துக் கொண்டார்.

"என் முழு முயற்சியும் தந்தாச்சி. இவ எழல. இதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும்? இதுக்கு ஒரே வழி நீ இவளை பூமிக்கு கூட்டிப் போறது மட்டும்தான். அங்கே கொஞ்சம் அன்பு இருக்கு. அது இவளை திருப்பி கொண்டு வரலாம்.!" என்றான்.

கவி சரியென்று தலையசைத்து விட்டு அவளை தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.

பூமியின் உயர சிகரம் அது. மக்களின் சுவாசம் கலந்த காற்று சங்கமித்துக் கொண்டிருந்த இடம். அங்கிருந்த குகை ஒன்றின் உள்ளே ஆதியை படுக்க வைத்தான் கவி.

அவளுக்குள் இருந்த வெறுப்பை அவனால் உணர முடிந்தது. பூமியை தவிர மற்ற அனைத்து இடங்களிலுமே அவளின் வெறுப்பு நச்சுக் காற்றுப் போல பரவிக் கொண்டிருந்தது. பூமிக்குள் நுழையும் வரை அவனின் மனதிலும் கூட அந்த வெறுப்புதான் குடி இருந்தது.

"நீ சீக்கிரம் கண் விழிச்சாகணும் ஆதி. இல்லன்னா இந்த பிரபஞ்சம் பெரிய அழிவை சந்திக்கும்!" என்று அவளிடம் கெஞ்சினான். ஆனால் அவள் எழவே இல்லை.

சத்திய தேவ உலகத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு மீண்டும் இன்று போர் பயிற்சி தொடங்கியது. அனைவரும் வாள் ஏந்தி இருந்தனர். கண்டபடி கத்திக் கொண்டிருந்தவர்களின் வாள்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தது.

கவியால் தன் உலகில் நிகழ்ந்த மாற்றத்தை உணர முடிந்தது.

"எல்லாம் போச்சி.. ஆதி.. என்னால்தான் எல்லாம். ஆனா இனி நான் என்ன செய்ய முடியும்? என் உலகத்திற்கு தலைமை தாங்க வேண்டியவன் நான். உன் மனசு வாட கூடாதுன்னு நினைக்கிறேன் நான். ஆனா என்னால முடியாதோன்னு தோணுது. இதுக்கு பதிலா நான் இறந்திருக்கலாம். ஒரு சின்ன கோபம் பெரிய அழிவுக்கு வழி வகுக்கும். நான் அனுபவிச்சிட்டேன் நல்லா.." என்றான் முகத்தை மூடியபடி.

ஆதி அப்படியேதான் இருந்தாள். ஆனால் அவளின் செவிகளில் இவனின் கெஞ்சல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"என்னை மன்னிச்சிடு ஆதி.. உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கதான் நானும் ஆசைப்படுறேன். ஆனா விதிக்கல.." என்றவன் எழுந்து நின்றான். தன் கத்தியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

***

பூமியின் தூரத்து தேசத்தில் குழந்தை ஒன்று தன் தாயின் முகம் பார்த்து காரணமே இல்லாமல் சிரித்தது. கடலில் சென்றுக் கொண்டிருந்த கப்பல் ஒன்றினுள் இருந்த கிழவன் ஒருவன் புயலின் வேகம் குறைந்தது கண்டு களித்தான்.

காதலியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் காதலி தன்னை பார்த்து பறக்கும் முத்தம் ஒன்றை வீசியது கண்டு நகைத்தான். வாடிக் கொண்டிருந்த செடி ஒன்றிற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மங்கை ஒருத்தி தண்ணீர் உறிஞ்சும் செடியின் வேரை கண்டு புன்னகைத்தாள்.

இசையின் மிதந்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மகிழ்ந்தான். வீட்டுப் பாடம் முடித்த சிறுமி ஒருத்தி இதழ் விரித்தாள்.

காற்றில் கலந்துக் கொண்டிருந்தது அன்பு. ஒவ்வொருவரின் உதடுகளிலும், கண்களிலும், இதயத்தின் வேர்களிலும் பிறந்துக் கொண்டிருந்தது அன்பு. பூமி முழுக்க அன்பின் சக்தி நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.

***

குகையின் வெளியே நடந்தான் கவி. ஆதி பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தாள். இரும்பினாள். தன் நெஞ்சத்தின் மீது தடவினாள். கழுத்தை தடவிக் கொண்டாள். இப்போதுதான் மூச்சு விடுவது போலிருந்தது அவளுக்கு‌. வெறுப்பின் பிடியில் இருந்த இதயத்தில் பூக்களின் இதழ் விரிப்பு போல மெள்ள பரவியது அன்பு.

கவி திரும்பிப் பார்த்தான். அவளிடம் ஓடி வந்தான். "ஆதி.." என்றான்.

ஆதி அவனின் முகம் பார்த்தாள். அவனின் கழுத்தோடு அணைத்துக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN