குரங்கு கூட்டம் 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டின் பின் வாசல் வழியே சரத்தின் உடல் கொண்டுச் செல்லப்பட்டது.

சம்பத்தின் மனம் எரிமலை போல வெந்துக் கொண்டிருந்தது. இந்த வீட்டையே கொளுத்த வேண்டும் என்று வெறிக் கொண்டான்.

எவ்வளவு யோசித்து பார்த்தாலும் அவனுக்கு சித்துவின் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால் காரணம் காதல், பெண் என்று நம்ப மட்டும் முடியவில்லை. ஏனெனில் தொழில் அப்படி. சரத்தின் மீதான அவனின் நம்பிக்கை அப்படி.

சித்துவின் குடும்பத்திற்கும் சம்பத்தின் குடும்பத்திற்கும் இடையில் ஏற்கனவே பல பகைகள் இருந்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டுதான் இந்த திருமண பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் இரண்டு பக்கமும் ஒப்பந்தங்களும், பண வரவுகளும் வர வேண்டி இருந்தன.

தனது ஆட்கள் சிலரை அழைத்தான் சம்பத்.

"இந்த வீட்டுலயே இருங்க.. சித்துவை கண்காணிங்க.. பக்காவா பார்த்துக்கங்க.. டாக்குமெண்ட்ஸ் சைன் ஆன அடுத்த செகண்ட் வீட்டை கொளுத்துறோம். ஒரு ஆள் விடாம கொல்லுறோம்.." என்றவன் அங்கிருந்து புறப்பட்டான்.

சித்துவின் ஆட்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும் இருந்தார்கள்.

"நம்ம வீட்டுலயே நமக்கு எதிரி.. அவனை பீஸ் பீஸா வெட்டும்வரை எனக்கு தூக்கம் வராது.." என்று பொரிந்தான் சித்து.

"எல்லோரையும் கண்காணிங்க.. யார் மேலாவது சந்தேகம் வந்தா உடனே இழுத்துட்டு வாங்க.!" என்று சொல்லி தன் ஆட்களை விரட்டினான் அவன்.

அவனுக்கு ராகுல் மீது சந்தேகம் இல்லை. ஆனாலும் அவனை தன் சந்தேக வட்டத்திற்கு வெளியில் நிறுத்த விரும்பவில்லை அவன்.

பிணம் எடுத்துச் சென்ற பிறகும் அந்த அறையினுள்ளேயே நின்றிருந்தான் ராகுல். தப்பி தவறி ஆதாரம் எதையாவது விட்டிருப்போமா என்று அந்த அறையை சோதித்துக் கொண்டிருந்தான் அவன்.

"இங்கே வாடா.!" சித்துவின் குரலில் நிமிர்ந்தான் ராகுல். சித்துவின் அருகே சென்றான்.

"யெஸ்.." என்றவனை முறைத்தான் அவன்.

"நீ இருக்கற வீட்டுலதான் இப்படி ஒரு கொலை நடந்திருக்கு. நீ என்னடா பண்ணிட்டு இருக்க? போ.. போய் இப்பவே கொலையாளியை கொண்டு வந்து என் கண் முன்னே நிறுத்து.." என்று கர்ஜித்தான்.

ராகுலுக்கு அவன் சங்கை கடித்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் அமைதியாக நடந்தான்.

சித்து தன் அருகில் இருந்தவனின் தோளை தொட்டான்.

"இவனை பாலோவ் பண்ணு நீ.. என்னவோ இடிக்குது எனக்கு.." என்றான். அவன் தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

சிபி தன் அறைக்குள் வந்து கதவை பூட்டினாள். நெஞ்சில் கை வைத்தபடி கதவின் மீது சாய்ந்து நின்றாள்.

"என்னாச்சி பேபி?" மிருதுளாவின் பெருங்குரலில் துள்ளி விழுந்த சிபி கண்களை திறந்தாள். இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த ரோஜாவையும், பக்கத்தில் இரட்டை வாழைப்பழம் போல ஒட்டிக் கொண்டிருந்த மிருத்யூவையும் அப்போதுதான் பார்த்தாள்.

சிபி வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டு முன்னால் நடந்தாள்.

"பயமா இருக்கு மிருது.. வீடே பரபரப்பா இருக்கு. கொலைக்காரனை பிடிச்சதும் அவனை கொல்லணும்ன்னு இருக்காங்க.." என்றாள் நடுங்கும் குரலில்.

மிருதுளா கட்டிலை விட்டு எழுந்து நின்றாள்.

"நடக்கிறது நடக்கட்டும். இன்னும் இரண்டு நாள்.. தாண்டிடலாம் பேபி.. பயப்படாத.. எங்க ஊர் போயிட்டா அப்புறம் உன்னை எவனும் தொட கூட முடியாது.!" என்றாள்.

"ம்" என்றாள் சிபி.

"குழந்தை ரொம்ப அழகா இருக்கு.." மிருதுளாவின் பாராட்டில் முகம் மலர்ந்தவள் கட்டிலின் அருகே வந்தாள். குழந்தையின் முகம் பார்த்தாள். புன்னகை வளர்ந்தது.

"தூங்கிட்டு இருக்கா.!" குழந்தையின் வலது கையை பிடித்தபடி சொன்னாள் மிருதுளா. குழந்தையின் மென்மையான கரம் தந்த ஸ்பரிசத்தில் உள்ளம் மகிழ்ந்தாள் அவள்.

"இவ்வளவு அழகான குழந்தை இருக்குன்னு நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம். நாம வேற ஏதாவது ப்ளான் பண்ணி இருக்கலாம்." என்ற மிருதுளா குழந்தையின் முகம் பார்த்தபடி "பார்த்தியா பாப்பா காமெடியை.. உன் அம்மாவுக்கு கல்யாணமாம்.. ஆனா இன்னும் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்குமே கல்யாணம் ஆகல. உன்னை மட்டும் பெத்து வச்சிருக்காங்க.. இவங்களுக்கு கொஞ்சமும் பயமே இல்ல.." என்றாள்.

மிருதுளாவை பார்த்துக் கொண்டிருந்தாள் ரோஜா. அவள் பேசுவது குழந்தை பேசுவது போலவே தோன்றியது அவளுக்கு.

ரோஜாவின் முகத்தின் முன்னால் கையை அசைத்தான் மிருத்யூ.

"அவளை பார்க்காத.." என்றான்.

"ஏன் மிரு?" என்றாள் அவள் இவனை திரும்பிப் பார்த்து.

"அது ஒரு குரங்கு.. அவ முகத்தை பார்த்தா மூளையே வேலை செய்யாது.." என்றான்.

அவனின் தோளில் அடித்தாள் ரோஜா. மிருத்யூவிற்கு உள்ளத்தினுள் என்னவோ போலிருந்தது.

சிரித்தாள் ரோஜா. 'இசை போல சிரிக்கறாளே.. இந்த வீட்டை விட்டு போகும் முன்னாடி என் உயிரை நார் நாரா கிழிச்சி தொங்க விட போறா..' என்று புலம்பினான் தனக்குள்.

"கண்ணாடியே பார்க்காதவனை போல பேசாத மிரு.. அவ முகத்தை குத்தம் சொல்லும் ஒவ்வொரு முறையும் நீ உன்னையே குறை சொல்லிக்கற.." என்றாள் அவள்.

மிருத்யூ தன் பின்னந்தலையை அடித்துக் கொண்டான். ஆமென்று தலையசைத்தான். வழிவது போலவே இருந்தது. ஆனால் தன்னை தானே தடுப்பது எப்படி என்று அவனுக்குத் தெரியவில்லை.

"சாமி.." இந்த வார்த்தையை கேட்கும் போதெல்லாம் தன் காதுகளை யாருக்காவது வாடகைக்கு தந்து விட்டால் ஆகும் என்று தோன்றியது பிரேமிற்கு.

"யார் கொலை செஞ்சாங்கன்னு உங்க பவரை வச்சி கண்டுபிடிச்சி சொல்லுங்க சாமி.." என்றான் வெங்கட்டின் நண்பன் ஒருவன்.

கொலை என்று கேட்ட உடனேயே பிரேமிற்கு உள்ளுக்குள் உதறியது.

மிருதுளா சரத்தை சுட்டு விட்டாள் என்ற விசயத்தை ராகுல் வந்து சொல்லி சென்றதில் இருந்தே அவனுக்கு உதறிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் அவள் இடத்தில் தான் இருந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்போம் என்று அவனுக்கும் தெரியும்.

'புண்ணாக்கு.. அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தா மிருது மேல கை வச்சிருப்பான்.!' என்றும் கர்ஜித்துக் கொண்டிருந்தான். சித்துவின் கரங்களை குட்டி குட்டியாக வெட்டாமல் விட்டதற்காக கவலைப்பட்டான் அவன்.

"சாமி என்ன மாந்தீரகவாதியா வெத்தலையில் மை தடவி கொலைக்காரனை கண்டுபிடிச்சி சொல்ல?" என்று‌ திட்டினார் வெங்கட்.

'என் மாமானாருக்கும் கொஞ்சமா மூளை வேலை செய்யுது!' என பிரேம் மகிழ்ந்தான்.

"ஆனா சாமிக்குதான் மாந்தீரகவாதியை விடவும் சக்தி அதிகமாச்சே!" என்றான் ஒருவன்.

'இவனுங்க வாயை கிளறாம விட மாட்டானுங்க..' என்பதை புரிந்துக் கொண்ட பிரேம் "அது ஒரு உருண்டை மனுசன். ஆறடிக்கும் கீழ இல்ல அவன். அவனுக்கு கால்வாசி தலை நரைச்சி இருக்கும். அவன் கால் விரல் ஒன்னு ஊனமா இருக்கும். அவனை தேடி பிடிக்கிறது ரொம்ப சிரமம்.." என்றான்.

அவனை சுற்றி இருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அனைவரது முகத்திலும் அதிர்ச்சி இருந்தது.

"சீக்கரம் எழுந்துப் போய் தேடுங்க.. சாமி சொன்ன அடையாளத்தோடு எவன் இருந்தாலும் அவன் தலையை வெட்டுங்க.." என்றான் வெங்கட்.

'பைத்தியக்காரனுங்க.. இந்த உலகத்துல எங்கேடா உருண்டை மனுசங்க இருக்காங்க?' மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான் பிரேம்.

நிலா தன் குட்டி கண்களை திறந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"அம்மு.." சிபி அவளை தூக்கிக் கொண்டாள்.

"மம்மா.." நிலா சிபியின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

மிருதுளாவின் கண்களில் சந்தோசம் நிரம்பி வழிந்தது.

"உங்க இரண்டு பேரையும் பார்க்கும்போது பர்பெக்டா இருக்கு சிபி.. ஆன்டிக்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ எதுக்கும் பயப்படாத.." என்று தைரியம் சொன்னாள்.

சிறு வருடங்களுக்கு முன்னால் பிரேம் சிகரெட் பிடித்த வாசனையோடு அவன் வீட்டிற்கு புகுந்த நாளில் அவனின் அம்மா மிருதுளாவைதான் தேடி வந்தாள். "நல்ல புள்ளையை கெடுத்து குட்டி செவுரா ஆக்கி வச்சிருக்க.." என்று மிருதுளாவை மொத்து மொத்து என்று மொத்தி எடுத்தாள்.

"ஆன்டி நான் அவனுக்கு சிகரெட் வாங்கி தரல.." என்று சொல்லியவளை முறைத்த பிரேமின் அம்மா "அவனுக்கு சிகரெட் பிடிக்க தெரியாது.. அவன் எதுக்கும் கையாளாகாதவன்னு உசுபேத்தி விட்டது நீதானடி?" என்று மேலும் மொத்தினாள் அவள்‌.

"ஆன்டி.. உங்க பையன் பொய் சொல்லி இருக்கான். உங்க பையன் மேல இருந்த நம்பிக்கையில் பெட் கட்டினேன் நான். ஆனா இந்த நாய் சிகரெட்டை பிடிச்சி எனக்கு ஐநூறு ரூபா நஷ்டத்தை தந்துடுச்சி.." என்று புரிய வைக்க முயன்றாள்.

"ஓ.. பந்தயம் கட்டி என் பையனை சிகரெட் பிடிக்க வைக்கிறியா நீ?" என்று அதன் பிறகும் அரை மணி நேரத்திற்கு திட்டி தீர்த்தாள் பிரேமின் அம்மா.

பிரேம் சிகரெட் பிடிக்க மாட்டான் என்று சொல்லி மிருத்யூவிடம் பந்தயம் கட்டி இருந்தாள் மிருதுளா. ஆளுக்கு இருநூற்றி ஐம்பது என்று மிருத்யூவும் பிரேமும் திட்டமிட்டுக் கொண்டதை அப்போது அவள் அறியவே இல்லை‌. அந்த கூட்டத்தில் யார் என்ன தவறு செய்தாலும் பழி மட்டும் இவள் மீதுதான் வந்து விழும். சிறு வயதிலிருந்தே கேட்டு சலித்து விட்டாள்.

இப்போதும் கூட இந்த குழந்தை விசயத்திற்கும் தன்னைத்தான் திட்டுவார்கள் என்று கணக்கிட்டாள். ஆனால் நண்பனுக்காக சில பல திட்டுக்களை கூட வாங்காவிட்டால் எப்படி என்று நினைத்தாள்.

அர்விந்த் தன் முன் நின்றிருந்தவளை யோசனையோடு பார்த்தான். அவளிடமிருந்து தப்பிக்கும் வழியை யோசித்தான்.

"உங்க மங்கி கேங் இந்த வீட்டுக்கு கொலை செய்யதான் வந்திருக்கிங்கன்னு நான் மட்டும் சொன்னேன்னா நீங்க எல்லோரும் கூண்டோடு கைலாசம்தான்.. எப்படி வசதி?" எனக் கேட்டாள் அவள்.

அர்விந்த் நகத்தை கடித்து துப்பினான்.

"உண்மையை சொல்வேன். ஆனா நீ பயப்படுவ.!" என்றான் யோசித்துவிட்டு.

ஸ்வேதா பதில் சொல்லாமல் கழுத்தை வளைத்து அவனைப் பார்த்தாள்.

"நாங்க அன்டர்கவர் ஆபரேசன்ல இருக்கும் எஸ்.வி.ஐ போலிஸ்.."

"சி.பி.ஐ தெரியும்‌. அது என்ன எஸ்.வி.ஐ?"

"இதெல்லாம் உங்களுக்கு தெரியாத சீக்ரெட் போலிஸ் குரூப்.."

ஸ்வேதாவின் விழிகள் அகல விரிந்தது.

"தப்பு பண்றவங்களை தேடி என்கவுண்டர் பண்றதுதான் எங்க வேலை.. இந்த வீட்டுல உள்ள அறுபத்தியெட்டு பேரை போட்டு தள்ள போறோம். அதுல முதல் வேலைதான் அந்த சரத்.. அது மட்டுமில்ல.. உன் திருட்டு கேஸ் பைலும் எங்க டிபார்ட்மெண்ட் கையில் இருக்கு.. உங்களையும் கூட எங்களால சுட்டு தள்ள முடியும்.."

ஸ்வேதா பயத்தில் மிடறு விழுங்கினாள். புதரினுள் உள்ளே தள்ளி நின்றாள். புதருக்குள் புகுந்து தப்பிக்கும் வழி இருந்திருந்தால் அப்படியே ஓடிப் போயிருப்பாள் அவள்.

"நாங்க வேடமிட்டு வந்த நோக்கத்தை உன்கிட்ட சொல்ல காரணம் நான் உன்னை லவ் பண்றதாலதான்.."

மீண்டும் அதிர்ந்தாள் ஸ்வேதா.

"உன்னை நம்பி நான் என் சீக்ரெட்ஸை சொல்லி இருக்கேன். வெளியே யார்கிட்டேயும் சொல்ல மாட்டன்னு நம்புறேன்.. அதையும் மீறி நீ சொன்னா நீயும் என்கவுண்டர்தான்.!" என்றவன் திரும்பி நடந்தான்.

அவளிடமிருந்து திரும்பியதுமே நெஞ்சின் மீது கையை வைத்தான். 'இந்த குரங்கு கூட்டத்துல சிக்கியதும், சொந்த காசுல சூனியம் வைக்கிறது எப்படின்னு புக் எழுதுறதும் ஒன்னேதான்' என்று புலம்பினான். சில எட்டுகள் நகர்ந்து வந்த பிறகு திரும்பிப் பார்த்தான். ஸ்வேதா அதே இடத்தில் நின்றிருந்தாள், அதே பயத்தோடு. குறுஞ்சிரிப்போடு நகர்ந்தான் அர்விந்த்.

இரவு உண்ண வேண்டி தரை தளம் நோக்கி நடந்தாள் மிருதுளா. ஆனால் அவள் அந்த வராண்டாவை தாண்ட இருந்த நேரத்தில் அவளின் முகத்தை துணியால் பொத்தி அருகே இருந்த அறைக்குள் இழுத்தார்கள் சிலர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN