தேவதை 68

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"ஆதி நான் பயந்துப் போனேன்.." என்றபடி அவளை அணைத்தான் கவி.

'நானும்' என்றவள் அதை வெளியில் சொல்லவில்லை. அவனுக்கு தீங்கென நினைத்த அந்த நேரத்தில் அவள் தன்னை மறந்து விட்டாள். அவளின் மனதில் இருந்த வெறுப்பு எப்படி அவளை மீறி வெளி வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆதி என்ற ஒரு தேவதை அந்த இடத்தில் வெறுப்பினுள் மூழ்கிப் போனதை அவளும் அறிந்தாள். மீண்டு வர முடியாது என நினைத்து பயந்திருந்தாள் அவள்.

ஆதி சில நிமிடங்களுக்கு பிறகு அவனை விட்டு விலகினாள். அவனின் கையில் இருந்த கத்தியை கண்டவள் தான் தோற்றுப் போனதை மீண்டும் ஒரு முறை உணர்ந்தாள். எத்தனை முறை தோற்பது என்று அவளுக்கே சலிப்பாக இருந்தது. சில முறைகளுக்கு மேல் தோல்வி என்பது இயல்பு போலாகி விடுவதையும் கண்டாள்.

பூமியை விட்டு வெளியே வந்தாள். பிரபஞ்சத்தின் சூன்யத்தில் தன் சக்தியை கரைத்தாள். அன்பு அனைத்து திசைகளிலும் பரவிக் கொண்டிருந்தது. போருக்கு புறப்பட்ட சத்திய தேவ உலகம் கூட பக்கத்து தேவ உலகோடு ஆடி பாடி மகிழ கிளம்பியது.

ஆதியை பின்தொடர்ந்து வந்த கவி அவள் சோர்வுற்று விழுகையில் ஓடி சென்று தாங்கினான்.

"ஏன்.?" என்றான் தன் இதயத்தின் வலியை தாங்க பிடிக்காமல்.

"ஏனா இதான் நான். என் பணி இதான்.." என்றவள் மீண்டும் கண்களை மூடினாள். கவி பூமிக்கே திரும்பி வந்தான்.

அன்பிற்காக அவள் எதையும் செய்வாள். பார்த்து பார்த்து சலித்துப் போனது அவனுக்கு.

இன்னும் கோடி ஆண்டுகள் கழிந்தாலும் அவளின் முடிவு இதேதான் என்று அவனுக்கு புரிந்துப் போனது. முடிவை தேடியது அவன் மனம். பிரச்சனைகள் இல்லாத ஒரு நாட்களை தேடியது. தன்னால் தனது எண்ணங்களை மாற்ற முடியாது என்பதை புரிந்துக் கொண்டவன் அடுத்த முறை ஆதி எழுந்து அமரும் வரை தனது போருக்கான எண்ணங்களை தள்ளிப் போடலாம் என்று நினைத்தான்.

ஆதியின் உடல் நலனை பரிசோதிக்க வந்தார் வனி. பூமியில் இருக்கையில் நன்றாகதான் இருந்தாள் அவள். தெம்பு குறைந்தாலும் மீண்டு வந்தது.

"உனக்கு ஒன்னும் இல்ல.." என்ற வனியிடம் நடந்ததை சொன்னாள் ஆதி.

"அவனுக்கு அடிப்பட்டா நான் ஏன் துடிக்கணும்.?" என்றாள்.

வனி பெருமூச்சு விட்டார். "ஆதி நீ ஒன்னை புரிஞ்சிக்க.. அவனை நீ நேசிக்கற.. உன் வெறுப்பை நீ எவ்வளவு வெளிக் கொட்டினாலும் உன் உள் மனசுல இருக்கும் காதல் உனக்கு எதிராதான் செயல்படும்.." என்று விளக்கிச் சொன்னார்.

ஆதிக்கு அதுதான் பயமாக இருந்தது. மனதுக்குள் இருக்கும் அந்த சின்ன காதலுக்காக எவ்வளவு பெரிய அழிவு.? நினைக்கையில் இதயம் நடுங்கியது.

"நான் என்ன செய்யட்டும்.?" என்றாள் கவலையோடு.

"உன் மனசுபடி செய்.." என்றவர் எழுந்தார். அங்கிருந்து கிளம்பினார்.

ஆதி குகையின் ஓரங்களில் உலாவினாள். கீழே இருந்த மக்களின் வாழ்வை படிக்க முயன்றாள்.

"ஒரு துளி அன்பு கிடைச்சா நான் பிழைப்பேன்!" அனாதை ஒருவன் கண்ணீரோடு வானம் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆதியின் விழிகளில் ஆறாய் புறப்பட்டது கண்ணீர்.

"என் அன்பு மொத்தமும் கடல்ல பொழிஞ்சு, உப்பு கலந்த மழைநீர் போல ஆகிடுச்சி.!" குடும்பத்தாலும், நட்புக்களாலும், காதலாலும் கை விடப்பட்டு தற்கொலையின் விளிம்பில் நின்றுக் கொண்டிருந்த ஒருவன் அழுகையோடு பிதற்றிக் கொண்டிருந்தான். ஆதியின் கண்ணீர் மேலும் அதிகமானது.

"வேண்டாம் மகனே.!" என்று கையை நீட்டினாள்.

தன்னிடமிருந்த அன்பை தந்து அவனை தற்கொலையிலிருந்து மீட்க நினைத்தாள். ஆனால் தானமிடும் அளவுக்கு அவளிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. பதறிய உள்ளத்தோடு அவனை காப்பாற்ற வழி தேடினாள்.

ஆதியின் பின்னால் நின்றிருந்த கவி விரல் சொடுக்கிட்டான். தற்கொலை செய்ய மலை சிகரத்தின் மேல் நின்றிருந்த மனிதன் கீழே குதித்தான். குதித்த அந்த வினாடியில் மனதுக்குள் பிறந்தது போராடும் எண்ணம். ஆனால் மரணம் அல்லவா தழுவ இருந்தது? எதையாவது பற்றி விட மாட்டோமா என்று கைகள் இரண்டையும் விரித்தான். அவன் தேடிய அதே நேரத்தில் அவன் கையில் கிடைத்தது ஒரு கொடி.

கொடியோடு ஒன்றியடி மேலும் கீழும் பார்த்தான். கொடியின் வேர் இருந்த இடம் அவன் பார்வைக்கு தெரியவில்லை. அவ்வளவு ஆழத்தில் இருந்தது. ஆனால் கொடியின் நுனி அவன் கால் பதித்து நின்று கீழ் குதித்த பாறையின் மேல் படர்ந்துக் கொண்டிருந்தது.

"ஒரு கொடிக்கு உண்டான போராட்டம் உன்னிடம் இல்ல.." கவியின் குரல் அவனின் மனதுக்குள் கேட்டது. தன் மனசாட்சி அது என்று நினைத்தான் அவன். கொடியை பற்றிக் கொண்டு மேலே ஏறினான். அந்த கொடி நிறைய இடத்தில் அடிப்பட்டு கிடந்தது. பல இடங்களில் பரவிய கொடி நிறைய இடங்களில் துண்டாகி காய்ந்து கிடந்தது. ஓரிடத்தில் கொடி இரண்டாய் வெட்டுப் பட்டு கிடந்தது. ஆனால் வெட்டுட்டு இடத்தின் மேல் பாறையின் வெடிப்பில் வேர் பதித்து மீண்டும் உயர்ந்திருந்தது அந்த கொடி.

கை கால்கள் சிராய்ப்போடு மேல் ஏறினான் அந்த மனிதன்.

"அன்பு முக்கியம் ஆதி. உண்மையை மட்டும் பேசும் இந்த சத்திய தேவ உலகின் அரசனாகவே அதை ஒத்துக்கறேன். ஆனா அன்பு இருக்கும் அதே அளவுக்கு போர் குணம் இருக்கணும். இல்லன்னா இந்த பூமியில் இந்த மனிதர்களால் வாழ முடியாது. இன்னைக்கு இவங்க பரிணாம வளர்ச்சி குறைவுன்னு நீ என்னை ஒதுக்கி வைக்கிற.. ஆனா அவங்க என்னைக்கு இந்த பிரபஞ்ச வெளியில் உலாவ ஆரம்பிக்கிறாங்களோ அன்னைக்கு அவங்களுக்கு அன்பின் அதே அளவுக்கு போர் குணமும் தேவைப்படும். தேவதையோ, மனிதனோ, செடியோ, கொடியோ வாழணும்ன்னா வாழ்க்கை முழுக்க போராடணும். அதுக்கு என்னோட போர் குணம் வேணும். பல ஆயிரம் வருசங்களுக்கு முன்னாடியே நான் உன் அன்பை மனசார ஏத்துக்கிட்டேன். அதனாலதான் உன் மனசு வாட கூடாதுன்னு எங்களோட போரை கூட உன்கிட்ட சொல்லாம இருந்தேன். எந்த விதத்திலும் உன் அன்பு நிறைந்த கண்கள்ல கண்ணீர் வந்துட கூடாதுன்னு போராடினேன். என்னை புரிஞ்சிக்காத வரை இரண்டு பக்கமும் நட்டம் மட்டும்தான். செஞ்ச தப்பை ஒத்துக்கதான் முடியும். மன்னிப்பு கேட்க முடியும். அழிச்சதை மீட்டுக் கொண்டு வர முயற்சிக்க முடியும். ஆனா செஞ்ச தவறின் அதே இடத்தில் நின்னு தற்கொலை பண்ணிக்க முடியாது என்னால. ஏனா நான் ஒரு சத்திய தேவன். வீரம் மட்டும்தான் நான்.!" என்றவன் குகையின் உள்ளே நடந்தான்.

ஆதி பதில் பேச முடியாமல் மீண்டும் அந்த மனிதனை பார்த்தாள். பாறையில் ஓடிக் கொண்டிருந்த கொடியின் மீதிருந்த பழம் ஒன்றை பறித்து தின்றுக் கொண்டிருந்தான்.

"அன்பு தப்பு இல்ல.. அதை தவறான இடத்துல காட்டுறதுதான் தப்பு.. அது இவனுக்கு புரியணும்ன்னா அதுக்கு இவனுக்கு போராடும் குணம் வேணும். இல்லன்னா இளிச்சவாயன்னு சொல்லி எல்லாரும் ஏமாத்திட்டு போவாங்க.. நீ என்னை ஏமாத்துற மாதிரி!" கவி இதை சொல்லி விட்டு அவளைத் தாண்டி நடந்தான்.

அவனின் குற்றச்சாட்டை கேட்டு விழிகளை உருட்டினாள் ஆதி.

காற்றின் வெளியில் சென்று நின்றவன் அவளை திரும்பி பார்த்தான்.

"அன்பு அன்புன்னு பிணாத்துற இல்ல.. உன் உலகம் அழிய காரணமே அன்பை தப்பா பயன்படுத்தியதாலதான்.. உன் சகோதரன் செழினி ஏற்கனவே காதலில் இருந்த ஒரு பெண்கிட்ட வந்து அன்புன்னு சொல்லி அவளை சாகடிக்காம இருந்திருந்தா இன்னைக்கு எந்த பிரச்சனையுமே இருந்திருக்காது. அன்பால நீங்க கொன்னா அது நியாயம். போராட்டத்தால நாங்க கொன்னா அது பாவமா?" கோபமாக கேட்டு விட்டு சென்றான் அவன்.

ஆதி குகையின் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். அவன் விலகி சென்றது மனதுக்கு வருத்தமாக இருந்தது.

கவி தனது மாளிகையில் வந்து அமர்ந்தான். அவனின் வீரர்கள் ஆடுபுலி ஆட்டமும் வீராங்கனைகள் நொண்டி ஆட்டமும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவனை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. உலகத்தை நிர்வகிக்கும் சில மேலதிகாரிகள் மட்டும் அரை நேர வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிரபஞ்சம் இயங்க தேவையான வீரத்தையும் பகுதி நேர வேலையாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆக மொத்தத்தில் அந்த உலகமே பாதி சோம்பலாகதான் இருந்தது. அது கவிக்கு ஆதங்கத்தை தந்தது.

"அவளுக்காக நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்.!" என்று முனகினான்.

"அடுத்த உலகத்துக்கு போய் சண்டையிடுவது பொக்கிஷம் கிடையாது.!" ஆதியின் குரல் கேட்டு எழுந்து அமர்ந்தான். அறையின் வாசலில் கதவின் மீது சாய்ந்து நின்றிருந்தாள்.

"அன்பை பரப்பிக்கிட்டு இருப்பதும் வேலை கிடையாது.."

"இதுங்க சண்டை தீரவே தீராதா?" ஃபயர் கவலையோடு கேட்டாள். அவளின் கையில் இருந்த கரும்பை பிடுங்கி கடித்த ஆக்சிஜன் "அழகாக இருப்பதாக நீ நினைப்பதை நிறுத்தும் வரை தீராது." என்றான்.

ஃபயர் அவனை முறைத்தாள்.

"இப்ப எதுக்கு இங்கே வந்த?" ஆதியை முறைப்படியே கேட்டான் கவி.

"தனியா இருக்க சலிப்பாக இருக்குன்னு என் இணையை தேடி வந்தேன்!" என்றவளை நம்பிக்கை இல்லாமல் பார்த்தான் அவன்.

"ஏன் இந்த திடீர் மாற்றம்?"

ஆதி பனிப் பூக்களை கையில் எடுத்தாள். "இதன் மேல் ஆசை.!" என்றாள்.

கவி கவிழ்ந்து படுத்தான்.

"உன் மேலயும்தான்.!" அவள் சொன்னது கேட்டு மீண்டும் எழுந்து அமர்ந்தான்.

"ஆனா ஏன்?"

"ஏனா நான் ஓர் அன்பின் தேவதை.."

விழிகளை சுழற்றினான் கவி.

"உன்னை தள்ளி வைப்பதால ஒரு லாபமும் இல்ல எனக்கு. ஆனா சேர்ந்திருந்தா என்னால என் அன்பின் தேவ தேவர்களை பெற்றெடுக்க முடியும். அப்பதான் இந்த பிரபஞ்சத்துல நீங்க வீணாக போர் புரியாம என்னால பாதுக்காக்க முடியும். உன்னை விலக்கினா நான் என் பணியில் தோற்பேன். என் வெறுப்பு இந்த பிரபஞ்சத்தை அழிக்கும். உன்னை விலக்கினா பிரபஞ்ச எதிரிகள் என் பிள்ளைகளை அழிக்க வருவாங்க.. உன்னை விலக்கினா நான் அனாதையா இருப்பேன்.!" என்றாள்.

'எல்லாமே அவளின் தேவைகள்.. இங்கே எதுக்கு நான்? இந்த மணம் நடக்காமல் இருந்திருக்கலாம்..' கவலையோடு நினைத்தான்.

"உன்னை விலக்கினா நான் என் மனசாட்சிக்கு துரோகம் செஞ்ச மாதிரி இருக்கும். தடைகளுக்காக நான் என் அன்பை தடுத்தா அப்புறம் எப்படி நான் அன்பின் தேவதையா இருக்க முடியும்?" கலங்கும் குரலில் கேட்டவளை சுற்று வளைத்தது அவனின் கரங்கள். எப்போதும் நெருங்கி வந்தான் என்று அவள் கவனிக்கவே இல்லை.

அவளின் வலது செவியில் உதடு பதித்தவன் "உனக்கு என்னை பிடிச்சிருக்கா?" எனக் கேட்டான்.

ஆமென்று தலையசைத்தாள். "தோத்துப் போய் வந்திருக்கேன் கவி. என் உணர்வை என்னால கட்டுப்படுத்திக்க முடியலன்னு வந்திருக்கேன்.!" என்றாள் விழிகளை தீண்டிய கண்ணீரோடு.

அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் "இனி நீ தோற்காத மாதிரி நடந்துக்கறேன்!" என்றான் மென் குரலில்.

உணர்வுகளை கட்டுப்படுத்தும், அன்பையும் காதலையும் கட்டுப்படுத்தும் சக்தியை தன் பூமியின் பிள்ளைகளுக்கு தந்திருந்தான் கவி. ஆனால் அதை ஆதிக்கு தர மாட்டான்.

"ஏனா இவன் ஒன்னும் பைத்தியம் கிடையாது. அதானே?" ஃபயரின் கேள்விக்கு ஆமென்று தலையசைத்தார் அக்வா.

"அவ வேறு இடங்களில் தோற்க கூடாதுன்னு இவன்கிட்ட தோத்துட்டா.. ஆனா அவன்கிட்ட தோத்த அந்த நொடியில் இருந்து அவனை வெல்வா.. ஏனா இது காதலின் விதி.!" என்றார் அவர்.

"ஆனா தோத்தது தோத்ததுதானே?" கோபமாக கேட்டாள் ஃபயர்.

"அன்பு எப்பவும் தோற்கும்ன்னு சொல்றியா நீ?" ஆக்சிஜனும் கோபத்தோடு கேட்டான்.

அக்வா இடம் வலமாக தலையசைத்தார்.

"புத்தியை பயன்படுத்தாத, போராட்டம்ன்னா என்னன்னு கூட அறியாத அன்பு நிச்சயம் தோற்கும்ன்னு சொல்றேன்.. அன்புக்கு ரோசமும் கோபமும் இருக்கணும். அது இந்த பிரபஞ்சத்தின் அதிசயம். விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷம். அதை சரியான முறையில் பயன்படுத்தணும்.. ஏமாந்து போறதுக்கும் ஏமாத்துறதுக்கும் பயன்படுத்த கூடாது.." என்றார் அவர்.

"அது சரி.. சிறகொடிந்த தேவதைன்னு கதைக்கு தலைப்பு தந்திருக்கியே.. ஆனா ஆதிக்கு ஒன்னும் சிறகு உடையலையே.." சந்தேகமாக கேட்டாள் ஃபயர்.

அக்வா அவளை முறைத்தார். "நல்லா யோசிச்சி பாரு.. யாருன்னு தெரியும்.."

"வெளங்கல.." என்றவளின் நெற்றியில் சுண்டி விட்டவர் "பூமியில் உள்ள மனிதர்கள்தான் சிறகொடிந்த தேவன்(தை)கள். லட்சம் கோடி ஒளியாண்டு தூரத்துக்கு கனவுகளை தந்துட்டு சிறகு தராம விட்டுட்டாங்க ஆதியும் கவியும்.. அதனால சிறகொடிந்த தேவன்(தை) மனிதர்கள்தான்.." என்றார் விளக்கமாக.

ஃபயர் யோசனையோடு தலையசைத்தாள்.

"சிறகில்லாமலே இவ்வளவு பண்றாங்க.. அது ஒன்னுதான் குறைச்சலா?" என்ற ஆக்சிஜனை இருவரும் ஒன்று சேர்ந்து முறைத்தனர்.

"சிறகில்லன்னாலும் அவங்க சாதிக்கிறாங்க.. அப்புறம் என்ன உங்களுக்கு பிரச்சனை?" எனக் கேட்டு அந்த விசயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான் ஆக்சிஜன்.

ஆதி உறங்கிக் கொண்டிருந்தாள். கவி அவளின் தலையை வருடி விட்டான்.

"என்னை மீண்டும் நம்புவதே உன் அன்பின் இடறல்தான் ஆதி.. ஆனா நான் இனி உன் அன்பை உடைக்காம இருப்பேன். உன் அன்பின் காரணம் கிடையாது. நான் சத்திய தேவன். ஒரு முறை தந்த வாக்கை வாழ்நாள் முழுக்க காப்பாற்றுவேன். ஆனா என்னை போல எல்லாரும் இருப்பாங்கன்னு நம்பாத நீ.." என்றான்.

ஆண்டுகள் பலவாயிரம் கடந்துப் போனது. ஆதி ஒரு விசயத்தில் கவனமாக இருந்தாள். பிரபஞ்சத்தில் தேவையற்ற போர் வராமல் இருப்பதுதான் அது. கவி ஒரு விசயத்தில் கவனமாக இருந்தான். ஆதி எவ்விடத்திலும் தோற்காமல் இருப்பதுதான் அது.

பூமி பல முறை அழிந்து பிறந்தது.

பூமி மனிதர்களின் பரிணாம வளர்ச்சி ஆதியால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது இந்த இடைப்பட்ட நாட்களில். பிரபஞ்சத்தின் பதினேழு கிரகங்களில் அவர்களின் வசிப்பிடத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

ஆதியின் அழிந்த உலகம் மெள்ள மீண்டும் உருவாகிக் கொண்டிருந்தது.

"இது எப்படி சாத்தியம்?" எனக் கேட்டாள் ஆதி.

"சத்திய தேவனுக்கும் அன்பின் தேவதைக்கும் வாரிசு பிறந்தா இந்த உலகம் மீண்டும் உருவாகும்.." என்றான் கவி.

அதை இவன் இவ்வளவு நாளும் சொல்லாமல் போனதற்காக அவனிடம் கோபித்துக் கொண்டாள் ஆதி. ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளில் அந்த கோபமும் மறைந்துப் போனது.

அன்பின் தேவ உலகில் முதல் பூ பூத்தது. தான் மீண்டும் பிறந்தது போல அவ்வுலகினுள் பறந்தாள் ஆதி. அன்றைய தினம் அவளுக்கு குழந்தையும் பிறந்தது. அவளின் சக்தி இரட்டிப்பாகியது.

தன் சகோதர சகோதரிகளை போல அன்பை ஒற்றை உலகில் வைத்து பூட்டாமல் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளுக்கு கூட வாரி வழங்கினாள் ஆதி.

கவி என்ன சொன்னாலும் சரி. அன்பிற்கு சுயநலம் கிடையாது என்பதுதான் அவளின் ஒரே வாதமாக இருந்தது.

ஆதி என்ன சொன்னாலும் சரி. வாழ்க்கைக்கு தேவை போராட்டம்தான் என்பது கவியின் ஒரே வாதமாக இருந்தது.

"இரண்டும்தான் வேணும்ன்னு நான் சொல்லிட்டேன்.. நீ இப்ப முற்றும் போடு.!" அக்வாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாள் ஃபயர்.

"சரி.. சரி.. இரண்டும் வேணும். அவங்கவங்க வாழ்க்கைக்கு தேவையானபடி சரியான வீதத்தில் பயன்படுத்தணும். முற்றும்.. நன்றிகள்.." என்று கதையை சொல்லி முடித்தார் அக்வா.

பேன்டஸியில் எனது இரண்டாவது அட்டெம்ட்.. உங்க பொறுமையை ரொம்ப சோதிச்சி.. என் பொறுமையையும் ரொம்ப சோதிச்சிட்ட கதை. எபிலாக்ஸ் மெதுவா வரும்.

கதை எப்படின்னு ஒரு வார்த்தையேனும் சொல்லிட்டு போங்க. அது திட்டுற வார்த்தையா இருந்தா வேணாம். நீங்களே வச்சிக்கங்க. இது அட்டெம்டுன்னு நானே சொல்லிட்டேன். நீங்க திட்டினாலும் அது வேஸ்டுதான்.

அடுத்த கதைக்கு நோட்டிபிகேஷன் வரணும்ன்னா பாலோவ் பண்ணுங்க என்னை.

இதுவரை இந்த கதைக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

கதை நல்லாருந்தா வோட், கமெண்ட், ஷேர் எல்லாம் பண்ணுவிங்கன்னு நம்புறேன்..

நன்றிகளுடன் கிரேஸி ரைட்டர்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN