பௌர்ணமி 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூமாறன் தான் செய்த தவறை நன்றாக உணர்ந்து விட்டான். யார் என்ன பேசியிருந்தாலும், பூர்ணிமா தந்தைக்கு வக்காலத்து வாங்கியிருந்தாலும் தான் இந்த நாடகத்தில் பங்கு கொண்டிருக்க கூடாது என்று நினைத்தான்.

ஆனால் பாலாவுக்கு இன்னமும் மனம் மாறவில்லை.

"அப்பான்னா அதுக்காக எவ்வளவு கெட்டவரா இருந்தாலும் சப்போர்ட் பண்ணுவியா நீ?" எனக் கேட்டான் கோபத்தோடு.

"ஆமா.." என்று கத்தினாள் பூர்ணிமா. அவளின் முகத்தில் இருந்த வெறுப்பும், கோபமும் அவனுக்கு கொஞ்சமும் மாற்றத்தை தரவில்லை.

"ஆமா. அதுக்கு இப்ப என்னங்கற? என் அப்பா கெட்டவர்தான்.. முல்லை அம்மாவை அன்னைக்கு நீங்க நம்பல இல்ல.. நீங்களும்தான் கெட்டவங்க. அவரை புதைச்சாச்சி.. உங்களையெல்லாம் என்ன செய்ய?" எனக் கேட்டாள் விழிகளை உருட்டி. அவனின் எண்ணங்கள் அவளுக்கு சலிப்பை தந்தது. தன் நிலையில் இருந்து ஒரு நொடி கூட சிந்திக்காத இவனை ஏன் காதலித்தோம் என்று வருத்தப்பட்டாள்.

முல்லை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

"பூரணி.. வேணாம்.. போதும் இத்தோடு விட்டுடு.." என்றாள் மகளிடம். அவளுக்கு பயமாக இருந்தது பூர்ணிமாவின் கோபம் கண்டு.

"ஏன்?" அம்மாவை திரும்பிப் பார்த்துக் கேட்டாள்.

"உங்க குடும்பம் உங்களை அன்னைக்கு அவமானப்படுத்தினாங்க. ஆனா நீங்க மன்னிச்சி மறந்துட்டு உங்க அண்ணன் கூட பேசுறிங்க.. ஆனா நான் என் அப்பாவை ஒதுக்கணுமா? அவரை நான் மன்னிக்க கூடாதா?" எனக் கேட்டாள்.

முல்லையின் கண்கள் இறைஞ்சியது அவளிடம். அவளுக்கு மகளின் மனம் புரிந்துதான் இருந்தது. பல வருடங்கள் தந்தை இல்லாமல் வளர்ந்தவள், உறவு முறையே தெரியாமல் தந்தையின் கடைசி காலத்தை கண்டவள்.. அவளுக்குள் நிச்சயம் வருத்தம் இருக்கும் என்று நம்பினாள். தந்தையின் இறப்பை காரணம் காட்டி வருத்தப்பட்டாளே தவிர மற்ற யாரையும் அவள் குறை சொல்லவில்லையே என்று அப்போதும் கூட மகளுக்காகதான் அவளின் மனம் பரிந்துப் பேசியது.

"நீ புரிஞ்சி பேசுறியா முட்டாள்? உன் அப்பா செஞ்சது மன்னிக்க கூடிய தப்பு இல்ல.." பாலா சொன்னது கேட்டு கோபத்தோடு அவனின் முகத்தைப் பார்த்தாள்.

"நீ வாயை மூடு பாலா.. நான் உன்கிட்ட பேசல. என் அப்பா செஞ்ச தப்புக்கு மன்னிப்பதும் மறப்பதும் என் இஷ்டம்.." என்றவள் "நீ முதல்ல என் கையை விடு.. எனக்கு செம கடுப்பாகுது உன் திமிரை பார்க்கும்போது‌.." என்றாள்.

"உன் அப்பா செஞ்சது தப்பு இல்லன்னா அப்புறம் ஏன் நான் செஞ்சது தப்புன்னு சொல்லி இந்த துள்ளு துள்ளுற.!?" முறைத்தபடி கேட்டான் அவன். அவனின் கண்களை பார்க்க பிடிக்கவேயில்லை அவளுக்கு.

அதுவும் இதுவும் ஒன்று என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"அவர் பின்விளைவை யோசிக்காம செஞ்சிட்டாரு.. ஆனா நீ எல்லாம் தெரிஞ்சிதானே செஞ்ச?" என்றவள் தன் கையை உருவ முயன்றுக் கொண்டே இருந்தாள்.

"என்னை பழிக்கு பழி வாங்கணும்ன்னு நினைச்ச.. வாங்கிட்ட. என் அப்பா உன் அத்தையோட வாழ்க்கையை அழிச்சதுக்கு பலனா நீ என் வாழ்க்கையை அழிச்சிட்ட.. வாழ்த்துக்கள்.." என்றவள் கையை விசையோடு பின்னால் இழுத்தாள்.

"அவளை விடு பாலா.." முல்லை அருகே வந்து மகளின் அருகே நின்றாள்.

"கோபப்படாத பூரணி.. நாம பேசிக்கலாம்.." என்றாள் மகளிடம்.

"ஆனா ஏன்? நீங்களும்தான் என்னை நம்பல.. நான் என் அப்பா மாதிரின்னுதானே நினைச்சிங்க நீங்களும்.. இரண்டு பேரை லவ் பண்ற ஆள் நான்.." என்றாள் வேதனையோடு.

முல்லை அதிர்ந்தாள். "பூரணி அப்படி இல்ல.." என்றாள். பூமாறன் மீதும் பாலா மீதும் கொலைவெறி வந்தது அவளுக்கு. அவர்கள் இருவரும் வந்து கதை கட்டாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தாள். மகளை நம்பினாள். ஆனால் அந்த வாட்சப் செய்திகள்தான் அவள் மனதில் குழப்பத்தை விளைவித்து விட்டது.

"எனக்கு புரிஞ்சிடுச்சி அம்மா.. நீங்க என்னை ஆரம்பத்துல இருந்து நம்பவே இல்ல.‌ நான் தப்பு பண்ணலன்னு அத்தனை முறை சொல்லியும் என்னை நம்பல நீங்க‌.." என்றவள் தன் கன்னங்களை துடைத்தாள். அழுது வீங்கிய கண்களில் தூக்கமின்மையும் சேர்ந்திருந்தது. விழிகள் இரண்டுமே சிவந்து போயிருந்தது.

"எதுக்கோ செஞ்சது எப்படியோ முடியுது.." பூமாறன் பயத்தோடு சொன்னான். அருகில் நின்றிருந்த மரிக்கொழுந்து சின்ன மகனை பார்வையால் எரித்தார். இப்போதுதான் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து வீடு நிம்மதியின் பிடியில் இருப்பதாக நம்பினார். ஆனால் அதற்குள் இப்படியொரு பஞ்சாயத்து.

"எனக்கு யாரையும் பிடிக்கல.." அழுகை குரலில் முணுமுணுத்தாள் பூர்ணிமா. அவளின் முகத்தில் தன் பார்வையை பதிந்திருந்த பாலா உதடுகளை சுழித்தான்.

"சீன் போட்டது போதும். இதே இவங்க உன்னை பெத்தவங்க இல்லன்னு சொன்ன அடுத்த செகண்டே இவங்களை தூக்கி எறிஞ்சிட்டு உன் சித்தப்பா பெரியப்பாவோடு போனவதானே நீ?" என்றான் கோபத்தோடு.

பூர்ணிமாவுக்கு புரியவில்லை. தவறுகள் என்று அவன் நினைக்கும் அனைத்திற்கும் பதில் தேடுகிறான் என்பது மட்டும் புரிந்தது.

"என் கையை விட்டுட்டு பேசு.. இத்தனை வருசமா நீங்களே அவங்களை நம்பாத போது நான் எப்படி ஒரு நாள்ல அவங்களை ஏத்துப்பேன்? அதுவும் நான் ஒன்னும் நம்பாம போகல.. எனக்கு குழப்பம். அந்த குழப்பத்துல நான் அவங்களை தெரியாம கூட தப்பா நினைச்சிட கூடாதுன்னுதான் விலகி இருந்தேன். அதுவும் இதுவும் ஒன்னாகாது.." என்றாள் தன் தீர்மானத்தில் உறுதியாக.

அவளின் வாதம் அவனுக்குப் புரியவில்லை. அவனின் கோபம் அவளுக்கு தேவையில்லை. ஆனால் மகளின் உள்ளம் கண்ணாடி போல முல்லைக்கு தெரிந்தது.

"நீ இப்ப என் கையை விடலன்னா டைவர்ஸ்க்கு வெயிட் பண்ணாம நான் இப்பவே தாலியை கழட்டி வீசிடுவேன்.." செந்தணலின் நிழல் அடித்தது பூர்ணிமாவின் முகத்தில்.

"நீயாவது பொறுமையா இரு பூரணி.!" செண்பகம் நின்ற இடத்திலிருந்தே கெஞ்சினாள்.

"நான் ஏன் பொறுமையா இருக்கணும்? எனக்கு தேவை கிடையாது.." என்றவளின் குரலில் துளியும் இரக்கம் இல்லை.

"எனக்கு நீ வேணாம். உன்னை பிடிக்கல.. உன்னோடு இனி வாழ்வதற்கு பதிலா நான் செத்துப் போவேன். உன்னை லவ் பண்ணதுக்கு ரொம்ப கேவலமா பீல் பண்றேன்.." அவள் மேலே பேசும் முன் அவளின் கையை விட்டு விட்டான் பாலா.

அவளின் வார்த்தைகள் அவனுக்குள் சுர்ரென்று கோபத்தை தூண்டி விட்டிருந்தது. மற்ற சண்டைகளுக்கும் காதலுக்கும் இடையில் என்ன சம்பந்தம் என்று நினைத்து கோபமுற்றான் அவன்.

"என் முகத்துல கூட விழிக்காத நீ இனி.." என்றவன் அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அங்கேயே இருந்தால் வார்த்தை சண்டை இன்னும் அதிகமாக முற்றிப் போகும் என்று நினைத்தான்.

பூமாறன் பூர்ணிமாவின் அருகே செல்ல நினைத்து நடந்தான்.

"அவளை யாராவது இந்த வீட்டுல இருக்க வச்சிக்கன்னா நான் இந்த வீட்டை விட்டு‌ போயிடுவேன்.!" பாலாவின் குரலில் சட்டென்று நின்றான் பூமாறன். அண்ணனை சந்தேகமாக திரும்பிப் பார்த்தான். பாலா மாடி படிகளை ஏறினான்.

முல்லைக்குதான் மனது அடித்துக் கொண்டது.

"பூரணி.." என்ற அம்மாவை திரும்பிப் பார்த்தாள்.

"சாரிம்மா.. நான் நல்ல பொண்ணு இல்ல.. என்னை உங்க பொண்ணுன்னு நீங்க யார்கிட்டேயும் சொல்ல வேணாம். இல்லன்னா ஒழுக்கம் இல்லாத பொண்ணை வளர்த்தியதா எல்லாரும் உங்களைதான் திட்டுவாங்க.." என்றவள் வீட்டின் வாசலை தாண்டி வெளியே நடந்தாள்.

வாசல் திண்ணையை பார்க்கையில் இதயம் பாரமாகுவதை அவளால் உணர முடிந்தது. அப்பா இருந்திருக்கலாம் என்று நினைத்தாள். அவரின் ஒடுங்கிய தேகமும், தாடியால் நிறைந்த முகமும் கண்களை விட்டு மறைய மறுத்தது.

பாலா தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான். கதவு படீரென்று திறக்கப்பட்டது. திரும்பிப் பார்த்தான். முல்லை நின்றிருந்தாள்.

"என் பொண்ணுக்கு புத்தி வர வைக்கிறேன்னு சொல்லி அவளை என்கிட்ட‌ இருந்து பிரிச்சிட்ட நீ.." என்று குற்றம் சாட்டினாள்.

பாலா கோபத்தோடு அத்தையிடம் வந்தான்.

"நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க.."

"முதல்ல உனக்கு அறிவிருக்கா சொல்லு.. சம்பந்தமே இல்லாம என் பொண்ணையும் என்னையும் பிரிச்சிட்ட.."

"நான் உங்களுக்காகதான்.."

"செட் அப்.. நான் கேட்டேனா உன்கிட்ட? என் பொண்ணு என்னை விலக்கி வச்சா கூட எனக்கு அது பெரிய விசயம் கிடையாது. ஏனா அவ என் பொண்ணு.. எங்க இரண்டுக்கும் பேருக்கும் இடையில் உனக்கு என்ன வேலை?" எனக் கேட்டாள் கோபமாக.

பூமாறன் வெளியிலிருந்து ஓடி வந்தான். "அத்தை.." என்றபடி முல்லையின் கையை பற்றினான்.

"நீங்களாவது கோபப்படாம இருங்க.." என்றான்.

"எப்படி கோபப்படாம இருக்க முடியும்? எனக்காகதான் இவன் இப்படி பண்ணதா சொல்லி என் பக்கம் பழியை திருப்பி விடாத நீ.. நான் இவ்வளவு நாள் உங்களை தப்பா நினைச்சிட்டேன். சாரின்னு சொல்லி இருந்தா கூட போதும். ஆனா எனக்கு இன்னும் அதிகமான கஷ்டத்தைதான் தந்திருக்கான்.." என்று எரிந்து விழுந்தாள் முல்லை.

"சாரி அத்தை.." என்றான் பூமாறன்.

"எதுக்காக சாரி கேட்கற மாறா? அத்தையும் அவங்க பொண்ணும் அவ்வளவு யோக்கியம் கிடையாது.." என்ற பாலாவின் சட்டையை பிடித்தாள் முல்லை.

அத்தையின் கையை எடுத்து விட்டான் பாலா. "உங்க பொண்ணு தப்பு பண்ணிட்டான்னு சொன்னதும் நீங்க நம்பதானே செஞ்சிங்க. பழைய பிரச்சினையின் போது இந்த வீட்டுல இருந்தவங்க உங்களை நம்பாம போனாங்கன்னு எங்க மேல பழி போட்டிங்கதானே நீங்க.? பிரச்சனைகளும் சூழ்நிலைகளும் ஒன்னு சேர்ந்து வந்தா யார் வேணாலும் பழி சுமக்க வேண்டி வரும். யாரும் என்னை நம்பல நம்பலன்னு பழி போட்டுட்டு சுத்த கூடாது.." என்றான் சட்டை காலரை சரி செய்தபடி.

முல்லை தனக்குள் எரிந்த நெருப்பை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

"ஓ.. அதனாலதான் என்கிட்ட வந்து அப்படியொரு பொய்யை சொன்னிங்களா?" எனக் கேட்டவள் "ஒரு தப்பு நடந்துட்டா அந்த தப்பை இன்னொரு தப்பின் மூலம்தான் நீங்க சரி செய்விங்க.. அப்படிதானே?" என்றாள்.

பாலா கூரையை பார்த்தபடி நின்றிருந்தான். பூமாறன் அத்தையை கெஞ்சலாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"என் வாழ்க்கையை நாசம் பண்ண மாதிரி என் பொண்ணு வாழ்க்கையையும் நாசம் பண்ணிட்டிங்க.. நல்லாருங்க.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

"அத்தை.." பூமாறன் அவளை தடுக்க பார்த்தான்.

"போதும் மாறா.. இந்த வீட்டுல நீயாவது மூளையுள்ளவன்னு நினைச்சேன். எல்லாம் போச்சி. குளிருக்கு பயந்து நெருப்புல விழுந்த அதே கதைதான் என் பொண்ணை இங்கே கட்டி தந்ததும்.." என்றவள் அவர்களை மறுமுறை பார்க்கவும் பிடிக்காமல் நடந்தாள்.

பூமாறன் அண்ணனை பார்த்தான்.

"அண்ணா.."

"என்ன நீயும் என்னை தப்பு சொல்ல போறியா?" என கர்ஜித்த அண்ணனை எரிச்சலாக பார்த்தவன் "வேற என்ன சொல்ல சொல்ற? உனக்கு நீதான் ராஜா. ஆனா எல்லாருக்கும் ராஜாவா இருக்க டிரை பண்ணாத. உன் முட்டாள்தனத்தாலதான் இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை.. உனக்கு உடந்தையா இருந்தது என் தப்புதான்.." என்றான் கோபத்தோடு.

முல்லை தன் அக்காவின் வீட்டை தயக்கத்தோடு பார்த்தாள். இந்த வீட்டிற்கு மீண்டும் வருவோம் என்று அவள் நினைக்கவே இல்லை. நாகேந்திரன் இறந்த அன்று மரியாதை நிமித்தமாக கூட அவள் இங்கே வரவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN