குரங்கு கூட்டம் 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலா தன் கையில் இருந்த பிஸ்கட்டை பாதி தின்று பாதியை கீழே சிந்தி வைத்திருந்தாள். அவளின் வாயை சுற்றி பிஸ்கட்டின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

குழந்தை தண்ணீரை தேடுவது கண்டு தன் கையில் இருந்த பால் புட்டியை தந்தாள் ரோஜா. வரும் வழியில் குழந்தைக்கு பசிக்குமோ என பயந்து வாங்கியிருந்தாள் அதை. குழந்தை நகைப்போடு பால் டப்பாவை இரு கைகளிலும் பிடித்தது. ரோஜாவை பார்த்து சிரித்தது.

"இவ்வளவு அழகான குழந்தையை விட்டுட்டு இருக்க இவங்களுக்கு எப்படிதான் மனசு வந்ததோ?" மிருத்யூ கோபத்தோடு முனகினான். பிரேம் தன் கையில் கிடைத்தால் அவனை புரட்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தான்.

"வீடே பரபரப்பா இருக்கு. நமக்கு மட்டும் ஒன்னுமே தோணலையே.." ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு சிரிப்போடு சொன்னாள் ரோஜா.

"பைத்தியக்காரன் கூட இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் வீட்டுக்குள்ள இருக்க மாட்டான். ஆனா நமக்கு வேற வழி இல்ல. பிரேமுக்காக இல்லன்னாலும் இந்த நிலா குட்டிக்காக இருந்துதானே ஆகணும்?" எனக் கேட்ட மிருத்யூ இருக்கையை விட்டு எழுந்து வந்தான். அவனின் ஒரு பக்க தோளில் குத்தியிருந்த துப்பட்டா தரையை அழகாக கூட்டிக் கொண்டிருந்தது.

குழந்தையை தன் கைகளில் தூக்கினான். அவள் அணிந்திருந்த பிராக்கில் ரோஜா பூக்களாய் சிதறி கிடந்தது. அவளின் முகத்தை ஊதினான். பிஸ்கட் துகள்கள் பறந்து போயின.

"மாம்மா.." என்றாள் நிலா அவனின் கூந்தலையும் பூச்சரத்தையும் பிடித்து இழுத்தபடி.

"மாமா.!?" ஆச்சரியத்தோடு அவளை பார்த்தவன் அவளின் கன்னங்களிலும் நெற்றியிலும் முத்தங்களை தந்தான்.

"பார்த்த உடனே கரெக்டா சொல்லிட்டா செல்ல குட்டி.. நான் உனக்கு மாமாதான்டா தங்கம்.." என்றான். முதல் பாலில் அடித்த சிக்ஸர் போலவே இருந்தது நிலா அவனை அழைத்ததும்.

சிபி நெற்றியை பிடித்தபடி சுவர் பக்கம் திரும்பினாள். அம்மா என்பதைதான் நிலா அப்படி சொன்னாள் என்பதை எப்படி அவள் விவரிப்பாள்? மிருத்யூவின் பெண் வேடத்தை கண்டு குழந்தை அவளை அம்மா என்று அடையாளம் தேடிக் கொண்டிருந்திருக்கிறாள்.

குழந்தை அவனின் கன்னங்களில் கை பதித்து அவனின் மூக்கின் மீது முத்தமிட்டது. மனம் முழுக்க தித்திப்பது போலவே இருந்தது அவனுக்கு.

"செல்ல குட்டி என்னை கொல்றா.." என்றான்.

சிபி விழிகளை சுழற்றினாள். இந்த குரங்கு கூட்டத்தின் கரங்களில் சிக்கிய முதல் குழந்தை நிலாதான் என்பதை அவள்தான் அறியாமல் போய் விட்டாள் பாவம்.

மிருத்யூ நிலாவை கொஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் அறையின் கதவை யாரோ மெல்லமாக தட்டினார்கள். சிபி எழுந்து சென்று கதவை திறந்தாள். வெளியே ராகுல் பரபரப்போடு நின்றிருந்தான்.

உள்ளே வந்தவன் "மிருதுளாவோட டிரெஸ் ஒரு செட் வேணும்.." என்றான் தன் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு.

அரை மணி நேரத்திற்கு முன் மிருதுளாவை தேடி இந்த அறைக்கு வந்தான் அவன். ஆனால் அப்போது அவள் இங்கே இல்லை. வீடு முழுக்க தேடிய பிறகே அவள் இங்கே இல்லை, அவளுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்தான். ஜீவனிடம் சொல்லி இருவரும் தேட ஆரம்பித்து இருந்தார்கள்.

காதலி கிடைக்காத கவலையில் இருந்தவனிடம் ஜீவன் போன் செய்து விசயத்தை சொன்னான். அவள் எப்படியோ தப்பி விட்டாள் என்ற விசயமே அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

"எதுக்கு சீனியர்?" எனக் கேட்டபடி முன்னால் வந்தான் மிருத்யூ.

"அப்புறமா சொல்றேன்.. அர்ஜென்ட்.."

சிபி ஓடிச் சென்று அலமாரியை திறந்தாள்‌.

நிலா ராகுலை பார்த்து புன்னகைத்தாள்.

"பாப்பா.." என்று இரு கைகளையும் நீட்டி அவனிடம் தாவ முயன்றாள். கொஞ்சம் தவறி இருந்தாலும் குழந்தையை கீழே தவற விட்டிருப்பான் மிருத்யூ. பயத்தோடு அவளை அணைத்துக் கொண்டவன் "நீதான் பாப்பா.. அவர் போலிஸ் மாமா.." என்றான் குழந்தையிடம்.

குழந்தை மறுபடியும் "பாப்பா.." என்றது ராகுலை பார்த்து.

"அப்பாங்கறதைதான் அவ அப்படி பாப்பான்னு சொல்றா.." என்ற சிபி "டிரெஸ்.." என்று ராகுலிடம் உடையை நீட்டினாள்.

ராகுல் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.

"அப்பாவா?" என்ற மிருத்யூ குழந்தையின் முகம் பார்த்தான். அவனுக்கு முகம் வாடிப் போனது. குழந்தை அவனின் கழுத்து சங்கிலியை எடுத்து வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

"பிரேம் ராஸ்கல் மட்டும் கையில கிடைச்சான்னா அவன் சங்கை கடிச்சி ரத்தம் குடிச்சிடுவேன்.!" என்று கோபத்தோடு சொன்னான்.

"குழந்தை அவனுக்காக ஏங்கி போயிட்டா.!" குழந்தையின் கன்னத்தோடு கன்னம் வைத்து வருத்தமாக சொன்னான்.

சிபி மௌனமாய் தரை பார்த்தாள்.

அறையின் அலமாரி காலியாக இருந்தது. அந்த அலமாரியில்தான் பிணங்களை பதுக்கி வைத்துக் கொண்டிருந்தான் ஜீவன்.

வீட்டில் நூறு அறைகளுக்கு மேல் இருந்த காரணத்தாலோ என்னவோ இந்த அறையை சம்பத்தின் ரவுடிகளுக்கு என்று ஒதுக்கி தந்திருந்தான் சித்து. ஆனால் இப்போது இந்த அறையையும் காலி செய்து விட்டான் ஜீவன்.

அந்த அறையின் கட்டில்களில் இருந்த போர்வையை அள்ளி தரையில் எறிந்தான். ரத்தத்தை முழுதாய் துடைத்து அந்த போர்வையையும் அலமாரியிலேயே எறிந்தான்.

அலமாரியை சாத்தி பூட்டிட்டான்.

"எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியுமோ தெரியல.. குமரன் சார் வந்து காப்பாத்தினாதான் உண்டு.!" என்று புலம்பியபடியே அறையின் கதவை திறந்தான். மூன்றாவது மாடியின் வராண்டா அது. ஒரு மூலையில் இருந்தது அறை. ஆட்களின் நடமாட்டம் இல்லையென்றாலும் கூட இந்த மாடியில்தான் சித்து மற்றும் மற்ற ரவுடிகளுக்கான அறைகள் இருந்தது. அதனாலேயே ஜீவனுக்கு சற்று பயமாக இருந்தது.

வராண்டாவை சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்தில் ஓசை கேட்டது. ஆனால் அவர்களை பார்க்க முடியாதபடி வராண்டாவின் வளைவு இருந்தது‌. இந்த அறையோடு சேர்ந்திருந்த வராண்டாவின் முடிவில் ஒரு படிக்கட்டுகள் இருந்தன. இதே போல நான்கைந்து வளைவுகளும், வராண்டாவும், படிகளும் அங்கே இருந்தன.

வீட்டின் செழிப்பில் மயங்கி நிற்க தோன்றவில்லை ஜீவனுக்கு. இந்த வீடு பல ஏழை மனிதர்களின் வரிகளையும், பல அப்பாவி மனிதர்களின் உயிரை குடித்த துப்பாக்கி குண்டுகளின் ரத்த கரை படிந்த பணத்தில் கட்டப்பட்டது என்று அவனும் அறிவான்.

நாட்டின் பல இடங்களில் உள்ளூர் தீவிரவாத அமைப்புகள் போலிசோடும், அப்பாவி கிராம மக்களோடும் துப்பாக்கி சூடுகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த சித்துவையும் சம்பத்தையும் ஜெயிலில் போட்டு விட்டால் பிறகு பல அப்பாவி கிராமங்கள் நிம்மதியாக வாழும் என்று நம்பினான் இவன்.

போனை காதில் வைத்துக் கொண்டு என்னவோ பேசிக் கொண்டே அங்கு வந்துச் சேர்ந்தான் ராகுல். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அறைக்குள் நுழைத்தான்.

"மை காட்.. நம்மூர் செக் போஸ்ட் எண்ணிக்கையை விட அதிகமா இங்கே ரவுடிகள் என்னை தடுத்துட்டாங்க.. ரூபாவதி சொன்ன வேலையை செய்றதா சொல்லிட்டு கடந்து வரதுக்குள்ள செம கடுப்பாகிடுச்சி." என்றான்.

ஜீவன் குளியலறையை கை காட்டினான்.

"உன் ஆள்.. சீக்கிரம் வெளியே வந்து சேருங்க.‌" என்றவன் வெளியே நடந்தான். யாராவது இந்த பக்கம் வந்தால் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தான்.

"மிருது.." குளியலறை கதவை கட்டியபடி அழைத்தான் ராகுல்.

"சீனியர்.." உடனே கதவை திறந்தவள் "எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?" எனக் கேட்டபடி கையை வெளியே நீட்டினாள்.

உடைதனை தந்தவன் "என்னை டிரெஸ் எடுத்துட்டு வந்து தர சொன்னன்னு கேள்வி பட்டதும் நான் ஏதேதோ நினைச்சிட்டு வந்தேன்.." என்றான் வருத்தமாக.

சிரித்தாள் மிருதுளா. "குளிச்சிட்டு இருக்கேன். என்னதான் இருந்தாலும் அவர் டிரெஸ் கொண்டு வந்து தருவது எனக்கு கொஞ்சம் அன்கம்பர்டபிளா இருக்கும் இல்லையா?" எனக் கேட்டாள்.

ராகுல் வியந்தான்.‌ அவளை பிடித்திருந்தது. கதவை திறந்து வெளியே வந்தவள் தன் கையிலிருந்த ஈர உடைகளை யோசனையோடு பார்த்தாள். "ப்ளட் ஸ்டெயின் இல்ல சீனியர்.!" என்றாள்.

இவளை எப்படி கீழே அழைத்துச் செல்வது என்று யோசித்தான் ராகுல்.

"நீங்க செமையா இருக்கிங்க சீனியர்.!" என்றவளை காணும்போது அவனுக்கு மனம் வலித்தது. ஒரு பக்க கன்னம் வீங்கிப் போயிருந்தது.

"சாரி.. நான் உன்னை முன்னாடியே கண்டுபிடிச்சி இருக்கணும்.!" என்றான் அவளின் கன்னங்களை அள்ளியபடி. அவன் கை பட்டு கன்னம் எரிந்தது. ஆனால் ஏனோ அவனின் கரம் கன்னத்தில் இருப்பதும் அவளுக்கு பிடித்திருந்தது.

அவளின் கண்களை பார்த்துக் கொண்டிருந்தவன் அவனையும் மீறி அவளின் உதடுகளை நோக்கி குனிந்தான்.

மிருதுளாவுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

"ம்ம்ம்.. சீனியர் சாரி.. நான் ஒரு முறை அர்விக்கு கிஸ் தந்துட்டேன்.!" என்றாள் அவசர குரலில்.

குழப்பமாக அவளைப் பார்த்தான் அவன்.

"கிஸ் பண்ணா எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சிக்க நினைச்சேன். அவனுக்கு கிஸ் தந்தேன். ஆனா அந்த நாய் போதையில் இருந்திருக்கு. அது கூட பரவால்ல. என்னை மிருத்யூன்னு நினைச்சிருக்கான்.." என்றாள் கோபமும் சோகமும் ஒன்றாய் சேர.

ராகுலுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. முறைத்தாள் அவள்.

"உன் ஆர்வ கோளாறுக்கு ஒரு அளவே இல்லையா?"

"ஆனா நான் அவனை லவ் பண்ணிட்டு இருந்தேன்.." அவள் சொன்னது கேட்டு மீண்டும் சிரிப்புதான் வந்தது அவனுக்கு.

"சாரி மிருது.. நீ எப்படி சொன்னாலும் இதெல்லாம் எனக்கு காமெடியாவேதான் இருக்கு.. சாரி.. உங்க குரங்கு கூட்டத்துக்குள்ள இன்னும் என்ன என்ன அக்கப்போர் நடந்திருக்கோ.. யார் கண்டா?" என்றவன் அவளின் இதழில் முத்தம் பதித்தான். அதிர்ந்துப் போனாள் மிருதுளா. ஆனால் முத்தம் அவளை கரைய செய்தது. சூழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க செய்தது‌. அவனின் கழுத்தை சுற்றியது அவளின் கரங்கள்.

அவளின் இடையோடு அணைத்துக் கொண்டவன் மென்மையை தவிர வேறு எதையும் உணரவில்லை. ஆனால் அந்த நேரத்திலும் சித்து மிருத்யூவுக்கு தந்த முத்தம் நினைவில் வந்துச் சென்றது. முத்தமிட்டபடியே முகம் சுளித்தான். வந்த யோசனை கண்டு தன்னையே திட்டிக் கொண்டான்.

இவர்களில் முத்தத்தில் முத்தெடுத்துக் கொண்டிருந்த வேளையில் வெளியே பரபரப்பு சத்தம் அதிகமாக கேட்டது. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ‌ஜீவன்.

வந்தவன் உடனே திரும்பிக் கொண்டான்.

கதவு திறந்த சத்தம் கேட்டதும் ராகுலும் மிருதுளாவும் விலகிக் கொண்டனர். ஆனாலும் ஜீவனின் கண்களில் நெருப்பு துண்டாய் விழுந்து விட்டது இவர்களின் முத்த காட்சி.

பற்களை அரைத்தான் அவன்.

"அவங்களாவது பொண்ணு கடத்த வந்த மங்கி குரூப். அவங்க தப்பிக்க கூட ஸ்கோப் இருக்கு. ஆனா நாம மாட்டிக்க தொண்ணூத்தியொன்பது சதவீத வாய்ப்பு இருக்கு. அப்படியிருந்தும் எப்படிதான் இந்த பையனுக்கு இப்படியெல்லாம் மூட் வருதோ? நாலு பேரை போட்டு தள்ளிட்டோமேன்னு நினைச்சா எனக்கு பயத்துல பாத்ரூம் தான் வருது.." என்று முனகினான் ஜீவன்.

"சாரி ப்ரோ.." என்றான் ராகுல்.

"எல்லோரும் கீழே போயிருக்காங்க. அந்த சாமியார் பிராடு ஏதோ மேஜிக் செய்ய போறானாம்.." என்றவன் சட்டென்று பின்னந்தலையை தட்டிக் கொண்டான்.

"சாரி சாரி.. அந்த சாமியார் நம்ம பக்கம்ங்கறதை அடிக்கடி மறந்துடுறேன்.." என்றான் இவர்கள் பக்கம் திரும்பியபடி.

மிருதுளா அவனை முறைத்தபடி வெளியே நடந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN