பௌர்ணமி 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலா சுவற்றை வெறித்தபடி படுத்திருந்தான். எதிரில் இருந்த திருமண புகைப்படத்தில் பிரேம் கண்ணாடி எப்போது இல்லாமல் போய் விட்டது. புகைப்படத்தில் நான்கைந்து கீறல்கள் கூட இருந்தது. ஆனாலும் புகைப்படத்தை அங்கேயேதான் மாட்டி வைத்திருந்தான்.

தாடி வளர்ந்து விட்டிருந்தது. தாடி பிடித்தது என்று சொல்ல முடியாது. அவனுக்கு சேவிங் செய்ய பிடிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மூன்று மாதங்கள்.. தொண்ணூறு பைத்தியக்கார நாட்கள் அவை. வீட்டிற்கு செல்லவே இல்லை அவன். அப்பாவும் அம்மாவும் திட்டினார்கள். முறைத்தார்கள். பூமாறன் இவனோடு பேச மறுத்தான்.

இவர்களின் வெறுப்புகள் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவனின் பொருட்டு அவனை பாதியில் நிறுத்திச் சென்ற காதல் மனைவிதான்.

நேற்றுதான் இருவரும் சேர்ந்து ஒன்றாய் பேசியது போலிருந்தது. திடீரென்று மறுநாள் பார்த்தால் இருவரின் மனங்களுக்கும் இடையில் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் இருந்தது.

இவன் சென்று அவளை அழைக்கவில்லை. அவளும் இவனின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பூமாறன் சென்று அழைத்துப் பார்த்தான்.

"அந்த வீட்டை எனக்கு பிடிக்கல. நம்பிக்கை பாதுகாப்பை இனியும் அந்த வீட்டுல நான் உணருவேன்னு நம்பல.!" என்றுச் சொல்லி விட்டாள்.

பூமாறன் மன்னிப்பு கேட்டுப் பார்த்தான்.

"மாமா.. நீங்க ஒரு விசயத்தை புரிஞ்சிக்கங்க. ரிலேசன்ஷிப்க்கு நம்பிக்கை தேவை. நான் என் அப்பாவை நினைச்சி பீல் பண்றதால உங்க வீட்டுக்கு ஒரு நஷ்டமும் கிடையாது. ஆனா டிராமா பண்ணி என்னை கஷ்டப்படுத்தி எனக்கு பாடம் கத்து தரேன்னு டார்ச்சர் பண்ணி.. இதெல்லாம் எதுக்கு? குடும்பம் குடும்பம் போல இருக்கணும். ஸ்கூல் போல இருக்க கூடாது. நான் என் அப்பாவோட வீட்டுக்கு வந்தது பாலாவுக்கு பிடிக்கல. அதுக்காகவே என்னை இப்படி படுத்தி எடுக்கறான். அவனுக்கே அவ்வளவு திமிர் இருக்கும்போது எனக்கு எவ்வளவு இருக்கணும்? நான் இனி அவனோடு சேர்ந்து வாழ வருவதா இல்ல.." என்றாள்.

பூமாறன் தன் அண்ணனிடம் வந்தே பேசி பார்த்தான்.

"அவளுக்கு இது ஒரு சாக்கு. எப்படா விட்டுப் போகலாம்ன்னு காத்துட்டு இருந்திருக்கா. இப்ப போயிட்டா.." என்றான்.

இவர்களை இருவருக்கும் இடையில் பூமாறன்தான் அதிக மன வேதனை பட்டான்.

பூர்ணிமா இருக்கும்போது கலகலப்பாக இருந்த வீடு இப்போது பக்தர்கள் கை விட்ட பழங்கால கோவில் போல பேரமைதியாக இருந்தது.

செண்பகம் கடமைக்கு சமைத்தாள். தான் தலையிட்டால் பிரச்சனை பெரிதாகி விடுமோ என்று விலகி இருந்த மரிக்கொழுந்துவுக்கு ஏன் விலகினோம் என்று இப்போது தோன்றியது.

பூமாறன் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் இருந்து வந்தான்.

முல்லை மகளிடம் செல்லமாகவும் சொல்லிப் பார்த்தாள். திட்டியும் கூட பார்த்தாள். ஆனால் பூர்ணிமா தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்னாலேயே நாகேந்திரனுக்கான மூன்றாம் மாத சடங்கு சம்பிரதாயங்கள் நடந்து முடிந்து விட்டன. நாகேந்திரனின் குடும்பம் பூர்ணிமாவோடு நன்றாக பழகி விட்டிருந்தது. பூர்ணிமாவுக்கு அனைவரையுமே பிடித்துதான் இருந்தது. யாரும் அவளை வெறுக்கவில்லை. அதனால் அவளும் யாரையும் வெறுக்கவில்லை.

பூர்ணிமாவும் பாலாவும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று அறிந்து அவளின் குடும்பம் சமாதான முயற்சியில் இறங்க பார்த்தது. "யாரும் இந்த விசயத்துல தலையிடாதிங்க.." என்று முடிவாக சொல்லி விட்டாள் பூர்ணிமா.

நாகேந்திரனுக்கான மூன்றாம் மாத சடங்கிற்கு கூட பாலாவை அழைக்கவில்லை பூர்ணிமா. அவளின் அண்ணன் "நான் போய் கூப்பிடுறேன்.!" என்றான்.

"ஒன்னும் தேவையில்ல. அவனுக்கு எப்பவும் அப்பாவை பிடிக்காது. அவன் வராம இருக்கறதே நல்லது." என்று விட்டாள் இவள்.

பாலாவும் சடங்கிற்கு வரவில்லை. இவள் அதற்கு கவலைக் கொள்ளவும் இல்லை.

இரவெல்லாம்‌ தூங்காமல் இருந்த பாலா படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான். ஜன்னல் வழி ஒளி வீசியது வெளிச்சம்.

இன்று பூர்ணிமா தன் தாய் வீடு செல்ல போகிறாள். அதையும் பூமாறன்தான் வந்து சொல்லிச் சென்றான்.

"நாளைக்கு உனக்கு லாஸ்ட் சான்ஸ். அப்புறம் அவளோடு நீ பேச சந்தர்ப்பமே அமையாம போயிடலாம்.!" என்றுச் சொல்லியிருந்தான் அவன்.

பாலாவுக்கு அந்த யோசனையினால்தான் இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அவளிடம் கெஞ்சவும் மனம் வரவில்லை. அவளை அனுப்பவும் மனம் வரவில்லை.

நிறைய யோசித்துவிட்டு எழுந்தான்.

பூர்ணிமாவின் அண்ணன் காரோடு வாசலில் நின்றிருந்தான். பூர்ணிமா சுவரில் மாட்டப்பட்டிருந்த தந்தையின் புகைப்படத்தை சற்று நேரம் பார்த்தாள். பெருமூச்சோடு வீட்டை விட்டு வெளியே வந்தாள். இவ்வளவு நாளும் இவளுக்கு பாதுகாப்பாக இருந்த அல்லி வாசலில் நின்றிருந்தாள். பூர்ணிமா இந்த பக்கம் கிளம்பியதும் அவள் அந்த பக்கம் பாலாவின் வீட்டிற்கு செல்ல இருக்கிறாள்.

வீட்டை சாத்தினாள் பூர்ணிமா. சாவியை திருகினாள். திரும்பி நடந்தாள். அண்ணனின் அருகே வந்தவள் சாவியை அவனின் கையில் தந்தாள்.

"பார்த்துக்கங்க.." என்றவள் தனது பேக்கை கொண்டுச் சென்று பின் சீட்டில் வைத்தாள். அண்ணன் காரை இயக்கியதும் முன்னால் வந்து அமர்ந்தாள். அல்லியிடம் கையசைத்தாள். அல்லி சோகமாக இவளை பார்த்தாள். அந்த சோகத்தின் காரணம் பூர்ணிமாவுக்கும் தெரியும். ஆனால் அதை வெளிக் காட்டவில்லை அவள்.

பார்வையிலிருந்து மறையும் வீட்டை கடைசியாக ஒரு முறை திரும்பிப் பார்த்தாள்.

"பூரணி நான் ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே.." என்றான் அண்ணன் அசோக்.

"கோச்சிக்கற மாதிரி சொல்லாதிங்க.." என்றவளின் பார்வை கடந்துச் சென்றுக் கொண்டிருந்த வீடுகள் வயல்கள் மீது இருந்தது.

"பாலாவை நான் வேணா அடிச்சி கை காலை உடைக்கட்டா?" எனக் கேட்டான்.

'உங்க பழி தீர்த்துக்கவா?' எனக் கேட்க‌ நினைத்தவள் "ஒன்னும் வேணாம். என் பிரச்சனையை நான் பார்த்துப்பேன்.!" என்றாள் கட்டை குரலில். சரியென்று தலையசைத்தான் அவன்.

ஊரின் எல்லையை தாண்டி தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்தது கார். எதிரில் வந்து நின்றது பாலாவின் கார். எதிரில் வந்த காரின் வேகம் கண்டு சட்டென்று பிரேக்கடித்திருந்தான் அசோக். சமாளித்து நிமிர்ந்தாள் பூர்ணிமா.

"இவ்வளவு பெரிய ரோட்டுல இவனுக்கு நாம போர வழிதான் வண்டி ஓட்ட கிடைச்சதா?" எரிச்சலோடு கேட்டாள் பூர்ணிமா.

பாலா கீழே இறங்கி வந்தான்.

"அப்படி ஓரத்துல வளைச்சி காரை ஓட்டுங்க.!" என்றாள் அண்ணனிடம்.

மறுப்பாக தலையசைத்தான் அவன். "மறுபடி எப்ப திரும்பி வருவியோ.. அவனோடு பேசிடு இப்ப.." என்றான்.

"உங்களுக்கு என்ன இவன் மேல திடீர் பாசம்?" சந்தேகமாக கேட்டாள்.

"ஒரு பாசமும் இல்ல. உன் கழுத்துல ஒன்னு தொங்கிட்டு இருக்கே.. அதுக்காக பொறுத்து போறதுதான்.." என்றான்.

'இப்ப என் தாலியில் உங்க குடும்ப மானமும் சேர்ந்துடுச்சி இல்லையா!' கேலியோடு நினைத்தாள்.

"பூரணி.." ஜன்னல் கதவை தட்டி அழைத்தான் பாலா.

பூர்ணிமா கடுப்போடு கீழே இறங்கினாள்.

"என்னோடு வா.!" என்றவன் அவளின் கையை பற்ற தன் கையை நீட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN