பௌர்ணமி 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா தன் கையை பின்னுக்கு இழுத்தாள்.

"உன்னை மாதிரி சீப்பான எண்ணம் கொண்ட ஒருத்தன்கிட்ட மறுபடியும் மாட்டிக்க மாட்டேன்.!" என்றாள் சீற்றமாக.

"நான் சீப்பான எண்ணம் கொண்டவன்!?" தன்னை நோக்கிய சுட்டு விரலோடு அவளிடம் கேட்டான் பாலா.

"ஆமா.‌. என் கேரக்டரை பரிசோதிக்க நாடகம் ஆடியவன்தானே?" என்றவள் "இப்ப எதுக்கு குறுக்கே வந்து விழுந்திருக்க?" எனக் கேட்டாள்.

"பாசை பாவனை எதுவும் சரியில்ல பூர்ணி.!"

அவன்தான் மோசமாக இருந்தான். போரில் நாட்டை இழந்தவனுடையது போல இருந்தது அவனின் விழிகள். கசங்கிய சட்டையை கூட மாற்றாமல் வந்திருந்தான். ஆனாலும் அவனின் வாசத்தை முழுதாய் உணர்வது போலிருந்தது அவளுக்கு. அந்த நினைவிற்கு தன்னையே திட்டிக் கொண்டாள்.

"எதுவும் சரியில்லன்னு தெரியுது இல்ல. அப்புறம் ஏன் என்னை நிறுத்தி கேள்வி கேட்டுட்டு இருக்க?" கையை கட்டியபடி கேட்டாள்.

புடவையில் வெகு அழகாக இருந்தாள் அவள். அப்படிதான் அவனின் பார்வைக்கு தென்பட்டாள். வெகு நாட்களுக்கு பிறகு பிறகு அருகில் பார்க்கவும் அவளை அள்ளி அணைக்க சொல்லியது உள்ளம்.

"உன் தப்பை உன்னால திருத்திக்க முடியாதா?" அவனின் கேள்வியில் சலிப்பாக முகம் சுளித்தாள்.

"நீ திருந்தவே மாட்டியா பாலா? என் எண்ணம் தப்புன்னு நீ சொல்றதே உன்னோட ரொம்ப பெரிய தப்புதான். உனக்கு எப்பவும் யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கணும். என் அப்பா, முல்லையம்மா வரிசையில் இப்ப நான். எப்பவோ முடிஞ்ச தப்பை அப்படியே விட்டுட்டு வாழாம போனதையே திரும்ப பிடிச்சி இழுத்து வச்சி இது ஒரு தப்பு.. இது ஒரு தப்புன்னு சொல்லி சொல்லி என்னை டார்ச்சர் பண்ற நீ.. குற்றவாளிகளை நீ வெறு. நான் வேண்டாம்ன்னு சொன்னேனா? என் அப்பா நல்லவரு.. அவரை ஏத்துக்கோன்னு உங்கிட்ட கேட்டேனா? உனக்கு எப்படி ஒரு குற்றவாளியை வெறுக்க உரிமை இருக்கோ அது போல எனக்கு தண்டனை அனுபவிச்ச ஒரு குற்றவாளியை நேசிக்க உரிமை இருக்கு. ஏனா நான் அவரோட பொண்ணு.. நீ ஒத்துக்கிட்டாலும் இல்லன்னாலும் என்னோடதும் என் அப்பாவுதும் ஒரே ஜீன்தான். ஆனா ஒரே மாதிரி ஜீன் உள்ளவங்க ஒரே மாதிரி தப்பும் செய்வாங்கன்னு நினைக்கிற பார்த்தியா.. அந்த கேவலமான எண்ணத்தை முதல்ல மாத்திக்க பாரு.." என்றவள் காரில் ஏற முயன்றாள்.

அவளின் இடையை பற்றி தன்னோடு இழுத்தான் பாலா. அவனின் நெஞ்சோடு ஒட்டியிருந்தது அவளின் முதுகு.

"நடு ரோட்டுல என்ன பண்ற நீ?" எரிச்சல் பொங்கியது அவளின் குரலில்.

அவளின் காதுகளின் பின் மடல்களில் அவனுடைய மூச்சுக் காற்று மோதியது.

"இப்ப நீ என்னோடு வரலன்னா அப்புறம் உன் லைஃப் லிவிங்க் ஹெல்லா மாறும்.!"

பூர்ணிமா நெற்றியை தேய்த்தாள்.

"பிளாக்மெயில் பண்றதை நீ விடவே மாட்டியா பாலா.? ஐ போர்ட்.!" சலிப்பு தட்டிய தொனியில் சொன்னாள்.

"சாரி கேளு.. என்னோடு வா. இல்லன்னா என்னோடு வா. அப்புறமா சாரி சொல்லு.!"

பெருமூச்சு விட்டாள்.

"ஓகே.. முறைப்படி டைவர்ஸ் வாங்கிட்டு மாங்கல்ய செயினை கழட்டலாம்ன்னு நினைச்சேன்.. நீ இவ்வளவு விருப்பப்பட்டா தந்துட்டுதானே போயாகணும்?" என்றவள் கழுத்து சங்கிலியில் கையை வைத்தாள்.

பாலா பற்களை அரைத்தான். அவளை காரின் மீதே தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

பாதியாய் திறந்திருந்த காரின் கதவில் மோதியவள் தடுமாறியும் கூட எப்படியோ பின்னாலோ கீழோ விழாமல் நின்று விட்டாள்.

அந்த பக்கமாக நின்றிருந்த அசோக் தங்கையிடம் ஓடி வந்தான்.

"ஒன்னும் ஆகலையே?" எனக் கேட்டவனிடம் இல்லையென தலையசைத்தவள் வலது முழங்கை பகுதியை சோதித்தாள். கார் கதவின் ஓரத்தில் மோதியிருந்ததால் அவ்விடத்தில் மட்டும் வலித்தது.

"பைத்தியக்காரன்.!" காரை விர்ரென்று கிளப்பிக் கொண்டு சென்ற பாலாவை நோக்கி கை நீட்டி திட்டினான் அசோக்.

"விடுங்க அண்ணா.." என்றவள் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

பாலாவின் திமிரை நினைக்கையில் கோபம்தான் வந்தது அவளுக்கு. செல்லும் வழி முழுக்க அவன் நினைவுதான் இருந்தது. மனதுக்குள் பொரிந்துக் கொண்டே இருந்தாள்.

வீட்டின் கதவை தட்டினாள் பூர்ணிமா. சட்டென்று கதவு திறந்தது. "பூரணி.!" முல்லை மகளை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

"வா உள்ளே.." அழைத்தாள். அசோக்கை பார்த்தவள் அவனை அழைப்பதா வேண்டாமா என்று குழம்பினாள்.‌‌ மகளுக்காக என்று எத்தனையோ படிநிலைகளை தாண்டி சென்றாயிற்று. இவன் ஒருவனோடு பேசுவதில் என்ன குறைந்து விடப் போகிறது என நினைத்தவள் "வாங்க தம்பி.." என்றாள்.

நாகேந்திரனின் கடிதத்தை படித்ததின் காரணமாய் முல்லையின் மீது அவனுக்கு பரிவு தோன்றி இருந்தது. நாகேந்திரன் இப்படி ஒரு பழி சுமத்தியும் கூட அவரின் மகளை முழு பாசத்தோடு வளர்த்தி விட்டாளே என்று அவள் மீது சற்று மதிப்பு கூட கூடியிருந்தது அவனுக்கு.

தயக்கமாக உள்ளே வந்தான். இருக்கையில் அமர்ந்தான். முல்லை சூடாக தேனீர் கொண்டு வந்து மகளுக்கும் அசோக்கிற்கும் தந்தாள்.

"இன்னும் இரண்டு நாள்ல காலேஜ் போகணும்.." சலிப்பாக சொன்னாள்.

"ஏற்கனவே நிறைய நாள் லீவ் போட்டுட்ட.. கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்ல பூரணி.." உணவு பொருட்களை டைனிங் டேபிளின் மீது அடுக்கி வைத்தபடியே திட்டினாள் முல்லை.

"அதெல்லாம் சமாளிச்சிடுவேன் அம்மா.." என்றவள் டைனிங் டேபிள் நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

"செம பசிம்மா.." என்றாள்.

அசோக்கையும் அழைத்து உணவு பரிமாறினாள் முல்லை.

வெகு நாட்களுக்கு பிறகு அம்மாவின் கையில் உண்ணும் உணவு. ருசித்தது பூர்ணிமாவுக்கு. நிமிடத்திற்கு ஒரு முறை அம்மாவை பாராட்டினாள்.

அசோக் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி போனான்.

"எனக்கு தூக்கம் வருது.." கொட்டாவி விட்டபடியே தனது அறைக்கு கிளம்பிய மகளின் முன்னால் வந்து நின்றாள் முல்லை.

"நீ செஞ்சது சரி கிடையாது பூரணி.. அவன் கோபப்பட்டா என்ன போச்சி.. நீ சரின்னுட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகலாம் இல்ல?" மகளின் வாழ்க்கை பற்றிய கவலையில் சொன்னாள் முல்லை.

"எனக்கு அக்கா மாதிரி இருக்கிங்க நீங்க.. ஆனா வாய்க்கிற வரன் எதுவுமே எனக்கு செட் ஆக மாட்டேங்குது.." கவலையாக சொன்னவளின் தோளில் தட்டியவள் "நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீ என்ன சொல்லிட்டு இருக்க?" என்றாள் கோபத்தோடு.

"ம்மா.." சிணுங்கலாக இழுத்தாள்.

"அவனுக்கு கால் முட்டியில் கூட திமிர் இருக்கு. அவனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்ன்னு இப்பதான் எனக்கே தெரிஞ்சிருக்கு. அவனோடு மறுபடியும் போய் வாழ்வது ரொம்ப கஷ்டம்மா. லைப்ன்னா சுக துக்கங்களை என்ஜாய் பண்ணணும். அடுத்தவங்க மைன்ட்ல இருக்கும் நட் போல்டை திருகி சரி பண்ணிட்டு இருக்க கூடாது.." என்றாள்.

அம்மா அவளை வியப்போடு பார்த்தாள். பூர்ணிமா தன் அறையின் கதவை திறந்தாள். உள்ளே சென்று கட்டிலில் விழுந்தாள். உண்ட மயக்கத்தை பயன்படுத்தி உறக்கத்தில் ஆழ்ந்து விட முயன்றாள்.

பாலா தொழிற்சாலையில் இருந்த தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தான். விரல்களில் இருந்த நகங்களை ஒட்ட கடித்து துப்பி விட்டான். மேஜையில் நொடிக்கொருமுறை தலை சாய்த்து எழுந்தான்.

"என்ன செய்ற நீ?" சுகனின் கேள்வியில் நிமிர்ந்தான்.

"ம்ம்.." குழப்பமாக விழித்தான்.

"புது மெஷின் ஒன்னு வாங்கறதுக்கான ஏற்பாடு செய்ய சொன்னேனே.. செஞ்சியா?" எனக் கேட்டபடி நண்பனின் முன்னால் வந்து அமர்ந்தான் அவன்.

இடம் வலமாக தலையசைத்த பாலா டிராவில் இருந்த பைலை எடுத்து மேஜையின் மீது போட்டான்.

"நீயே பார்.." என்றான் தலையை பிடித்தபடி.

சுகன் பைலை எடுத்தான்.

"ஒரே ஒரு அட்வைஸ் செய்யட்டா? உன் லைஃப் மேல உனக்குதான் அக்கறை தேவை. நீ ஹேப்பியா இருக்கணும்ன்னா சிஸ்டர்கிட்ட ஒரு சாரி கேட்பதால் ஒன்னும் குறைஞ்சி போயிட மாட்ட.." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

பாலாவுக்கு ஆத்திரம்தான் அதிகமானது. அவளால் மன்னிப்பு கேட்க முடியாத பொழுது தான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

இரவு தனது அறையில் உறங்கும்போது மீண்டும் திருமண புகைப்படத்தின் மீது பார்வை சென்றது. எழுந்து அந்த புகைப்படத்தை எடுத்து மேஜையின் மீது கவிழ்த்து வைத்தான். அதன் பின்னர் சென்று கவிழ்ந்து படுத்தான். உறக்கம்தான் வர மறுத்தது. தலையணையை எடுத்து அணைத்தான். ஆனாலும் பூர்ணிமாவின் மென்னுடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளை தேடியது அவன் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்த ஹார்மோன்கள்.

மறுநாள் காலையில் அம்மா தந்து விட்டிருந்த உணவை அவன் பாக்ஸிலிருந்து எடுத்து தட்டில் பரிமாறிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் கதவை தட்டப்பட்டது.

எழுந்து வந்து கதவை திறந்தான். ரோசினி நின்றிருந்தாள்.

முறைத்தான் அவன்.

"எல்லா போட்டோஸையும் டெலிட் பண்ணியாச்சி மாமா.. சித்தப்பா மட்டும் அவரோட மச்சினருக்கு அனுப்பி வச்சிருந்தாரு. ஆனா நான் அவரையும் தேடி போய் போனை வாங்கி போட்டோஸை டெலிட் பண்ணிட்டேன். நான் எடுத்த போட்டோஸ் எங்கேயும் இல்ல. ப்ராமிஸ்.." என்றாள்.

"ம்.." என்றவன் கதவை சாத்த முயன்ற நேரத்தில் கதவை கை வைத்து தடுத்தாள் ரோசினி.

"சாரி மாமா.. நான் தப்பான நோக்கத்தோடுதான் இப்படி பண்ணேன். உங்களுக்கும் அவளுக்கும் நடுவுல சண்டை வரணும்ன்னு ஆசைப்பட்டேன். நீங்க கல்யாணம் பண்ணிட்டு வந்து பிறகுதான் உங்க மேல எனக்கு‌‌ லவ் இருந்ததையே நான் உணர்ந்தேன். ஆனா அது டூ லேட் ஆகிடுச்சி. அவ மேல பொறாமை. எரிச்சல். உங்களுக்குள்ள சண்டை வந்தா என் ஏமாற்றம் போயிடாதுதான். ஆனாலும் மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்குமேன்னு அல்பமா ஆசைப்பட்டு அப்படி பண்ணிட்டேன். சின்ன சண்டை வரும்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க இப்படி ஒரேடியா பிரிவிங்கன்னு நான் நினைக்கவே இல்ல.." என்றாள் கலங்கிய கண்களோடு.

"நல்லா நடிக்கற.. போய் உன் வேலையை பாரு.." என்றவன் கதவை அறைந்து சாத்தினான்.

"முழு வன்மத்தோடு கூட்டத்துல போட்டோவை ஷேர் பண்ணா.. இப்ப வந்து கண் கலங்கறா.. உங்களையெல்லாம் இத்தனை வருசமா பார்த்து வளர்ந்த என்னையே எவ்வளவு ஈசியா ஏமாத்த பார்க்கறிங்க.." கடுப்போடு திட்டியபடியே சென்று உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

பூர்ணிமா‌ கண்ணாடியின் முன் நின்று தலையை வாரினாள். "நீ அழகு பூரணி.." என்றுக் கண்ணாடி பிம்பத்தை கொஞ்சிக் கொண்டாள்.

"என் மருமகனுக்கு உதவாத அழகு.." தேனீர் டம்ளரை நக்கென்று அலங்கார மேஜையின் மீது வைத்து விட்டு குறையாய் திட்டினார் ராஜா.

பூர்ணிமா நிமிர்ந்துப் பார்த்து நாக்கை வெளியே நீட்டி கிண்டல் செய்தாள்.

"அவன் பார்க்கலன்னு நான் தலை வார கூடாதா? அலங்காரம் செஞ்சிக்க கூடாதா?" எனக் கேட்டவள் பூச்சரத்தை எடுத்து சூடிக் கொண்டாள். தேனீரை எடுத்து பருகினாள்.

"வாவ்.. அப்பா டீ பென்டாஸ்டிக்.." என்றாள் விரல்களில் முத்திரை காட்டி.

"இப்படி ஐஸ் வச்சி ஐஸ் வச்சே காலை நேர டிபனை என்னை செய்ய வைக்கிறிங்க அம்மாவும் மகளும்.." பொய்யாய் குறைப்பட்டுக் கொண்டார் அவர்.

"நிஜமா உங்க சமையல் செமப்பா.." என்றவள் அறையை விட்டு வெளியே வந்தாள். முல்லை கொட்டாவி விட்டபடியே வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.

"டீ பேபி.." என்றபடி முல்லையின் முன்னால் தேனீர் கோப்பையை வைத்தார் ராஜா.

"இப்படி கூப்பிடாதிங்கன்னு எத்தனை முறை சொல்வது?" கன்னங்கள் சிவக்க சலித்துக் கொண்டாள் முல்லை. இரண்டு வருட திருமண வாழ்வில் இருநூறு வருட மகிழ்ச்சியை உணர்ந்து விட்டாள் முல்லை. ஆனால் மகள் இரண்டரை வருடங்களாக பாலாவை விட்டு விலகி இருப்பதுதான் அவளுக்கு கவலையை தந்தது.

அடுத்து அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN