குரங்கு கூட்டம் 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"எங்களோட துப்பாக்கி.." என்று சித்துவிடம் நீட்டினார்கள்.

அனைவரும் கையிலும் அவரவர் துப்பாக்கிகள் இருந்தன. அனைவர் துப்பாக்கிகளிலும் குண்டுகளும் சரியாக இருந்தன.

"சம்திங் ராங்.." யோசித்தான் சித்து.

"உங்க கண்ணுக்கு யாரெல்லாம் சந்தேக பிராணிகளா தெரியறாங்க?" என்றுக் கேட்டான் தன் ஆட்களிடம்.

"பெரியய்யாவோட பாடிகார்ட்ஸ்.." என்றான் ஒருவன்.

"இந்த இரண்டு போலிஸ்காரங்க.."

"என் சந்தேகமெல்லாம் டேன்ஸ் ஆட வந்த கூட்டத்து மேலதான்.."

"எனக்கு தப்பா படுறது சம்பத் சார்தான்.." என்றான் ஒருவன்.

மற்றவர்கள் தன் சந்தேகத்தை சொல்லும்போது அமைதியாக இருந்த சித்து இப்போது குழப்பத்தோடு இவனைப் பார்த்தான்.

"சம்பத் சாருக்கு ஏற்கனவே சரத் சாரை கொல்ல ஆசை.. எல்லாம் அவங்க பிசினஸ்ல வந்த பிரச்சனைகள்தான். அவங்க ஏற்கனவே பகையோடு இருந்தது நம்ம எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு டைம்ல அவரை போட்டு தள்ளிட்டா தன் அப்பாக்கிட்ட கெட்ட பேர் வாங்காம தப்பிடலாம்ன்னு சம்பத் சார் நினைச்சி இருக்கலாம்.." என்றான் அவன்.

சித்து யோசித்தான். அவன் சொன்னதில் உண்மை இருந்தது. ஏற்கனவே பலமுறை சம்பத்துக்கும் தனக்கும் நடந்த பனிப்போரை பற்றி இவனிடம் சொல்லி உள்ளான் சரத்.

நரம்புகள் முறுக்கேறியது அவனுக்கு. "இதுக்கு காரணம் சம்பத்ன்னா நிச்சயம் அவன் சாவு என் கையால்தான் இருக்கும். நேரம் பார்த்து அவனை போட்டு தள்ளுறேன். பிறகு மொத்த மாஃபியா கேங்குக்கும் நான்தான் முழு தலைவன்.." என்று கொக்கரித்தான்.

"ஆனா அவர் சம்பந்தமே இல்லாம இந்த வீட்டுல ஏன் இந்த கொலையை செய்யணும்? இந்த கொலையை ஏன் நம்ம வீட்டு ஆட்கள் மேல தூக்கி போட பார்க்கணும்?" இன்னொரு ரவுடி தன் சந்தேகத்தை கேட்டான்.

யோசித்தான் சித்து. "என்னவோ இடிக்குது.. நம்ம வீட்டுக்குள்ளயே யாராவது துரோகி இருந்தா நம்ப வருங்காலம் ஆபத்தாகிடும்.!" என்றான்.

ஆம் என்று தலையசைத்தார்கள் மற்ற ரவுடிகள்.

"வீட்டையும் வீட்டுல உள்ள மத்தவங்களையும் கண்காணிங்க.." என்றான் அவன். மற்றவர்கள் தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்.

சிபியின் அறையில் நிலாவை நடுவில் உட்கார வைத்து விட்டு அவளை சுற்றி அமர்ந்திருந்தார்கள் சிபி, மிருதுளா, மிருத்யூ, ரோஜா நால்வரும். பந்து ஒன்றை நிலாவிடம் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் மிருதுளா.

பந்து ஒவ்வொரு முறை தன் கையில் சேருகையிலும் கலகலவென நகைத்தாள் நிலா.

"ஆட்டோட கழுத்து மணி சத்தம் போலவே சிரிக்கறா.." என்று பெருமைப்பட்டுக் கொண்டாள் மிருதுளா.

"பாப்பும்மா.. இந்தாங்க ஜிலேபி.." முக்கால்வாசி ஜிலேபியை நிலாவுக்கு ஊட்டி விட்டு விட்டான் மிருத்யூ. எப்போதும் எதையாவது சாப்பிட தந்துக் கொண்டே இருந்தான் அவன். நிலாவுக்கு வயிறு நிரம்பியதோ இல்லையோ அவன் உணவு தருவதை கண்டு கண்டு சிபிக்கு தன் வயிறு நிரம்பி விட்டது போலிருந்தது.

ரோஜா குழந்தையின் தலையை மறுபடியும் வாரி விட்டாள். இத்தோடு நூறாவது முறையாக இருக்கலாம். எப்படியாவது சீவுவதும் மீண்டும் அதை கலைப்பதுவுமாகவே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தாள் அவள்.

'ஒரு குழந்தையை இப்பவேதான் முதல் முறையா பார்த்திருக்காங்களா? ஏன்ய்யா இந்த நிலா குட்டியை இந்த டார்ச்சர் பண்றிங்க?' என்று மனதுக்குள் புலம்பினாள் சிபி.

"ப்ரோ.. பாப்பாவுக்கு கேவிட்டி வந்துடும். ஜிலேபி போதும்.." மிருத்யூவை தடுக்க பார்த்தாள் சிபி.

மறுப்பாய் தலையசைத்தான் அவன்.

"இல்ல.. அவ பல்லு நல்ல ஸ்ட்ராங்க்.. பாரு என் விரலை கூட எப்படி கடிச்சி வச்சிருக்கான்னு.!" என்று தன் வலது கை சுட்டு விரலை காட்டினான்.

சற்று முன்தான் "பாப்பா வாயில் விரலை வச்சா கடிக்க தெரியுமா தெரியாதா?'' என்று மிருத்யூவும் மிருதுளாவும் சண்டை போட்டனர். பரிசோதித்து முடிவை தெரிந்துக் கொண்டு விடலாம் என்று நிலாவின் வாயில் கையை வைத்தான் மிருத்யூ. நிலா தன் முன் பற்களால் நன்றாகவே கடித்து விட்டாள்.

"கடிக்கிறா.. கடிக்கிறா.." என்று சந்தோச கூச்சலிட்டான் அவன். நிலா கண்களை மூடி மூடி சிரித்தாள். திறந்து பார்க்கும் பொழுதெல்லாம் மிருத்யூவின் முகம் தெரிந்தது. மீண்டும் மீண்டும் குலுங்கி குலுங்கி சிரித்தாள். கடித்த பற்களின் இடையே அவனின் விரல் பாதி துண்டாகும் வாய்ப்போடு இருந்தது.

நிமிடங்கள் சில கடந்த பிறகே வலியை உணர ஆரம்பித்தான் மிருத்யூ.

"வலிக்குது.. கையை விடு பாப்பு.." என்றான். நிலா தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டினாள். சிரித்தாள். ஆனால் அவனின் கையை மட்டும் விடவில்லை.

"விடாத.. இன்னும் நல்லா கடி.." குழந்தையிடம் நன்றாக சொல்லித் தந்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

"நிஜமா வலிக்குது.." கெஞ்சினான் மிருத்யூ.

"அச்சோ.. மாமா பாவமில்ல.. விட்டுட்டா செல்லம்.." என்று நிலாவை கொஞ்சினாள் ரோஜா.

இவர்களின் சேட்டையை பார்த்துக் கொண்டிருந்த சிபிதான் பாவம் பார்த்து குழந்தையை அதட்டி அவனின் விரலை காப்பாற்றி தந்தாள். ஆனால் அதற்கும் "குழந்தையை மிரட்டுற.. ராட்சசியா நீ?" என்று சண்டைக்கு வந்தாள் மிருதுளா.

நடந்ததை நினைத்துப் பார்த்த சிபி இப்போது மிருத்யூ கையில் இருந்த மொத்த ஜிலேபியும் தீர்ந்தது கண்டு கவலைப்பட்டாள்.

"நைட்ல அழுதா என்ன செய்றது?" என்றாள் கோபமாக.

மிருதுளா குழப்பத்தோடு பார்த்தாள்.

"ஏன் அழுவா?" எனக் கேட்டாள்.

"மிருது..‌ இவ குழந்தை.. இவளுக்கு வயித்து வலி, பல் வலி வந்தா என்ன செய்றது? நாளான்னைக்கு திருமணம் முடியும் வரை இவளை நம்மால ஹாஸ்பிட்டல் கூட கூட்டி போக முடியாது.." வருத்தமாக சொன்னவள் குழந்தைக்கு தண்ணீரை குடிப்பாட்டினாள்.

"ஏன் நமக்கு மட்டும் ஓர வஞ்சனை? உன் மாப்பிளை அவன் இஷ்டத்துக்கு வந்துட்டு அவன் இஷ்டத்துக்குதானே போறான்?" மிருத்யூ கோபமாக கேட்கவும், "நீங்க ஏன் இதை போய் உங்க மாப்பிள்ளை சித்துக்கிட்ட கேட்க கூடாது?" என சிபியும் கோபமாகவே கேட்டாள்.

சித்துவின் பெயரை சொன்னதும் சட்டென்று அடங்கிப் போனான் மிருத்யூ.

"தண்ணீர் எப்படி கொட்டுச்சி?" கூரையை பார்த்து கேட்ட ரவுடி ஒருவனின் தலையில் தன் கைத்தடியை போட்டான் பிரேம்.

"அது தண்ணீர் இல்ல.. அதுதான் கடவுளின் ஆசிர்வாதம். நீங்க என்னை நம்பணுங்கறதுக்காக ஆசிர்வாதத்தை திரவப் பொருளா தந்திருக்காரு. யார் மேலெல்லாம் தீர்த்தம் பட்டதோ அவங்க எல்லோருக்கும் கடவுளின் ஆசி நேரடியா கிடைச்சிருக்கு. இனி நீங்க தொட்ட காரியமெல்லாம் துலங்கும். விட்ட பணமெல்லாம் கை சேரும்.!" என்றான் இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதிப்பது போல காட்டி.

தண்ணீரில் நனைந்த அனைவருமே மகிழ்ந்தனர். ஓரங்களில் நின்றிருந்தார்கள் வருத்தமாக வீட்டின் கூரையை பார்த்தார்கள். கடவுள்‌ தங்களுக்கு மட்டும் வஞ்சகம் செய்து விட்டதாக நினைத்தனர்.

"சாமி மறுபடியும் ஆசிர்வாதம் வர செய்யுங்க.." என்றனர் சிலர்.

"நாளை இரவு ஆசிர்வாதம் கிடைக்கும்.." என்றவன் எழுந்து நின்றான்.

"இன்று நடு இரவில் எனக்கும் கடவுள்களுக்கும் வான மண்டலத்தில் ஒரு கூட்டரங்கம் நடைப்பெற இருக்கு. அதனால நான் போய் இப்பவே தியானத்துல மூழ்கி அந்த ஜோதியில் கலக்கறேன்.. இரவில் என்னை யாரும் தொந்தரவு செய்யாம இருப்பிங்கன்னு நம்புறேன்.." என்றவன் அங்கிருந்து நடந்தான்.

வெங்கட் அவனின் பின்னால் ஓடி வந்தார்.

"சாமி உங்களை நான் ரொம்ப நம்பினேன். இப்படி பண்ணிட்டிங்களே.." என்றார் அவர்.

'என்ன சொதப்பினோம்?' புரியாமல் அவரை பார்த்தான். "என்னாச்சி?" என்றான்.

"கடவுளின் ஆசிர்வாதத்தை எல்லோரும்‌ பெறும்படி பண்ணிட்டிங்களே!" என்றார் அவர் வருத்தமும் சோகமுமாக.

பிரேமிற்கு அவரின் தலையை உடைக்க வேண்டும் போல இருந்தது. 'அவனவன் கட்டிய வரியை அவனவனுக்கு பிரிச்சி செலவு பண்ண வக்கில்லாதவன் நீ. லட்சம் பேர் வரியை ஒருத்தனா ஆட்டைய போட்டு விழுங்கியவன்.. உனக்கெல்லாம் எப்படி பகிர்ந்துணர்வு இருக்கும்?' என நினைத்து கடுப்பானான்.

"திருமணம் முடிஞ்சதும் ஸ்பெஷல் பூஜை செய்ய போறோம்‌. அப்புறம் பாருங்க அம்பானியை பீட் பண்ணிடுவிங்க நீங்க. சீக்கிரமே உலக பணக்காரர் வரிசையில் முதல் இடத்துலயும் வந்துடுவிங்க. என்னையும் என் வார்த்தைகளையும், ஆண்டவனையும், அவன் அனுகிரகத்தையும் முழுசா நம்பலாம் நீங்க.." என்றான் கையை காட்டி.

வெங்கட் கையெடுத்து கும்பிட்டு வணங்கினார். சில நேரங்களில் பொய்யான வாக்குறுதியை போல கரும்பு கூட இனிக்காது. ஆனால் பிரேம் தந்த இந்த வாக்குறுதிகள் வெங்கட் தேர்தலில் மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை போன்றது என்பதை அவர்தான் அறியாமல் போய் விட்டார்.

பிரேம் மாடியிலிருந்த தனது அறைக்கு வந்தான். தனது அறையில் காத்திருந்த இருவரையும் கண்டவன் "நீங்க இங்கே என்ன பண்றிங்க?" எனக் கேட்டான்.

கையிலிருந்த வாளியை காட்டினார்கள் அவர்கள்.

"தேங்க்ஸ்.. நானே அந்த முட்டாள்களை எப்படி நம்ப வைக்கிறதுங்கற குழப்பத்துல இருந்தேன். யூஸ்புல்லா ‌ஹெல்ப் பண்ணி இருக்கிங்க.." என்றான்.

தலையசைத்த ராகுல் "எங்க சார் வரும் வரைதான். அப்புறம் நாம சேப்.!" என்றான்.

"அட போங்கப்பா.." என்றபடி சென்று கட்டிலில் அமர்ந்தவன் "உங்க டிபார்ட்மெண்ட்டை பத்தி தெரியாதா? எப்படியும் எல்லா பிரச்னையும் தீர்ந்த பிறகுதான் வருவாங்க.!" என்றான்.

"என்னை பத்தி எவ்வளவு வேணாலும் பேசு.." ராகுல் தொடங்க "என் டிபார்ட்மெண்டை பத்தி பேசாத.. அதானே?" எனக் கேட்ட ஜீவன் "எனக்கே போராடிக்குது.. நீ ஏன் இப்படி இம்சை பண்ற?" என்று தன் நண்பனை கேட்டான்.

அவர்கள் இருவரையும் பார்க்கும்போது பிரேமுக்கு மனம் நிறைந்தது. தன் நண்பர்களின் நினைவு வந்தது. அர்விந்தை நினைக்கையில் மட்டும் லேசாக வருத்தம் வந்தது.

"போலிஸ்கார்ஸ்.. கொஞ்சம் ஹெல்ப் பண்றிங்களா? வெளியே ரவுடி பசங்க இருக்காங்களா இல்லையான்னு பார்த்து சொல்றிங்களா? நான் போய் என் பிரெண்ட்ஸை மீட் பண்ணணும்.." என்றான்.

ராகுல் சென்று கதவை திறந்தான். வெளியே சித்துவின் கையாள் ஒருவன் நின்றிருந்தான்.

"நீ இங்கே என்ன பண்ற?" எனக் கேட்டான் ராகுலிடம்.

"ராகு காலம் நேர்ல வந்து நிற்குது.!" என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவன் "என் செல்போன் பவுச் தொலைஞ்சி போச்சி. அதான் சாமியார்கிட்ட குறி கேட்டுட்டு போக வந்தேன்.!" என்றான்.

ரவுடி கதவை முழுதாய் திறந்து பார்த்தான். பிரேம் தரையில் தியானத்தில் அமர்ந்திருந்தான். அவன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த ஜீவன் எழுந்து நின்றான். கதவை நோக்கி வந்தான்.

"பவுச் நம்ம ரூம் செல்ப்ல இருக்கும்ன்னு சொல்லி இருக்காரு." என்றான்.

"அப்படின்னா நாம போகலாம்.!" என்றவன் தன் முன் நின்றிருந்த ரவுடியை தாண்டிக் கொண்டு பக்கத்தில் இருந்த தனது அறைக்கு சென்றான்.

ரவுடி அவர்கள் இருவரின் முதுகையும் வெறித்தான். "ரூபாம்மா மாதிரி ஒருத்தங்களுக்கு இப்படி இரண்டு கோமாளி போலிஸ்.!" என்று குறைப்பட்டுக் கொண்டான்.

அவன் அங்கிருந்து‌ சென்ற பிறகு எழுந்து நின்றான் பிரேம். "போலிஸ் சீனியர் பாதியில அத்து விட்டுட்டு போயிட்டாரு.." புலம்பிக் கொண்டு வந்து வெளியே பார்த்தான். ரவுடியை கண்ணில் காணவில்லை. சிபியின் அறைக்கு செல்லலாம் என்று இந்த பக்கம் திரும்பியவன் இடையில் இருந்த இடத்தில் இரண்டு ரவுடிகள் காவலுக்கு நிற்பது கண்டு தனது இடத்திலேயே உறைந்துப் போனான்.

"இவங்களை எப்படி தாண்டிப் போறது?" என்று யோசித்தான்.

"நிலா நிலா ஓடி வா.." மிருதுளா அழைத்ததும் மிருத்யூ நிலாவின் கைகளை பிடித்தபடி அவளை நடக்க வைத்துக் கொண்டு மிருதுளாவிடம் ஓடினான். நிலா நடக்க நடக்க சிரித்தாள். நிலாவை கொண்டுச் சென்று மிருதுளாவின் கைகளில் ஒப்படைத்து விட்டு அறையின் மறு சுவர் அருகே வந்து நின்றுக் கொண்டான் மிருத்யூ.

"நிலா நிலா ஓடி வா. நில்லாமல் ஓடி வா.." என்றான். மிருதுளா அங்கிருந்து நிலாவை ஓட்டிக் கொண்டு இங்கே வந்தாள்.

இவர்களின் ஆட்டங்களை கண்டு சிபி மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டாள். "குரங்கு கையில் கிடைச்ச பொம்மையை போல ஆகிட்டா நிலா.!" என்று மனதுக்குள் புலம்பினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN