பௌர்ணமி 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா காலை உணவை முடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

"நான் காலேஜ் கிளம்பறேன்.." பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே ஓடினாள்.

அவள் பத்திரமாக பேருந்து ஏறுவதை பார்த்துவிட்டு வீட்டின் கதவை சாத்தினார் ராஜா.

முல்லை தனது ஈர தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.

"கடைக்கு கிளம்பலையா நீங்க இன்னும்?" இவரின் புறம் திரும்பிப் பார்த்துவிட்டு கேட்டாள் முல்லை.

"போகணும்.." என்றவர் உணவை தட்டில் போட்டுக் கொண்டு வந்தார்.

உணவை உண்டபடியே மனைவியை மேலும் கீழும் பார்த்தவர் "உன் அழகின் ரகசியம் என்ன?" எனக் கேட்டார்.

"கிண்டலோ?" உதடு சுளித்து கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்தவர் "நிஜத்தை கேட்டேன்.!" என்றபடி அவளுக்கும் உணவை ஊட்டி விட்டார்.

"தூரமா போய் சாப்பிடுங்க.. தலைமுடி‌ தட்டுல விழுந்துடும்.." அவரை விரட்ட முயன்றாள்.

"உறவு இன்னும் கொஞ்சம் பலமாகட்டும்.!" கண்டித்து சொன்னவர் அவளுக்கு அடுத்தடுத்து ஊட்டி விட்டுக் கொண்டே இருந்தார்.

"போதும்.." அவள் மறுத்ததை காதில் வாங்காதது போலிருந்தார்.

தலை முழுக்க வெண்மையாகதான் இருந்தது, அவரின் மனதைப் போலவே. அவளை விட ஏழு வருடங்கள் பெரியவர் அவர்.

இரண்டரை வருடங்களுக்கு முன்பு..

பூமாறன் தன் முதுகலை பட்டத்தை கையில் வைத்தபடி வெறித்துக் கொண்டிருந்தான். அடுத்து என்ன செய்வது என்று யோசனை வர மறுத்தது. படித்து முடித்ததும் அண்ணனை போலவே தானும் ஏதாவது தொழில் செய்து அனைவர் முன்னும் பெரிய ஆளாகி காட்ட வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. ஆனால் இப்போது எந்த யோசனையும் வர மறுத்தது.

அந்த நேரத்தில் பாலாவும் சுகனும் சைக்கிள் உதிரி பாகங்கள் பெரும்பாலானாவற்றை தங்களது தொழிற்சாலையிலேயே தயாரிக்கலாம் என்று முடிவு செய்து இருந்தனர். பாலா தன் பெயரில் இருந்த மொத்த சொத்தையும் அடமானம் வைத்தும் கூட, சுகன் தனது மொத்த பணத்தையும் முதலீடு செய்தும் கூட இன்னும் பணம் போதாமல் இருந்தது.

"நான் வேணா உங்க கம்பெனியில் பணம் இன்வெஸ்ட் பண்ணட்டா?" எனக் கேட்டான் பூமாறன். அத்தையின் பெரும்பங்கு சொத்தும் அவனது சொத்தும் அவனின் கைவசம் இருந்தது இப்போது.

பாலாவும் சுகனும் யோசித்தார்கள்.

"ஆனா ஏன்?" சந்தேகமாக கேட்டான் பாலா.

"எனக்கு இது எதிலும் விருப்பமே இல்ல அண்ணா. மனசு வேற என்னவோ தேடுது. கண்டுபிடிக்கும் வரைக்கும் எனக்கு என்ன வேணும்ன்னு எனக்குமே தெரியாது.." என்றான்.

"எனக்கு வர வேண்டிய ஷேரை நீங்க தந்தா போதும். நான் பெருசா ஆசைப்படல.." என்றான் அவனே.

சுகனும் பாலாவும் கலந்து பேசினார்கள். "சரி"யென்று இவனிடம் சொன்னார்கள். யாருக்கோ வட்டி தருவதை விட இவனை பங்குதாரராக ஆக்கி கொள்வது லாபம் என்றுதான் தோன்றியது அவர்களுக்கும்.

பத்திரங்கள் எழுதி கையெழுத்திடப்பட்டது.

"உழைக்காம சாப்பிட பார்க்கற.. வசதி உள்ள பார்டி.!" தம்பியை கிண்டல் செய்தான் பாலா. பூமாறனின் பண முதலீடுக்காக முல்லை வந்து கையெழுத்து போட்டு தந்து சென்றதில் இருந்தே பாலாவுக்கு சிறிது மனத்தாங்கல்தான். அந்த தாங்கல் தம்பியின் மீதோ அத்தையின் மீதோ இல்லை. அவனுக்கு உதவி செய்வது போல தனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லாமல் போய் விட்டார்களே என்ற தாங்கல் அது.

பூமாறன் தான் என்ன செய்வது என்று யோசித்து யோசித்து சலித்துப் போனான். எதன் மீதும் சற்றே இல்லாமல் போய் விட்டது.

"நான் வேணா சன்னியாசம் போகட்டா?" வீட்டிற்கு பாலா வந்திருந்த ஒரு நாளில் தன் சந்தேகத்தை வார்த்தைகளாக கேட்டு விட்டான் பூமாறன். உடனே செண்பகம் மூக்கை உறிஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

"அந்த இரண்டு குடும்பமும் அத்தனை பிள்ளைகளோடு கலகலன்னு பெருகி வளருது. இங்கே உங்க பாட்டிக்கு பிறந்ததும் மூணு பேர்தான். இப்ப அதுலயும் கடைசி கணக்கா நீங்க மூணு பேர்தான் வாரிசுன்னு இருக்கிங்க. இவனும் பூரணியும் ஆளுக்கொரு திசையில் இருக்காங்க. இவங்க பிள்ளை பெத்து தருவாங்க.. நான்‌ தூக்கி வளர்ப்பேன்னு நினைச்சா அது கனவாதான் போகும். நீயாவது ஒரு பொண்ணை கட்டி ஏழெட்டு புள்ளைங்க பெத்து வீடு நிறைய ஓட விடுவன்னு நினைச்சேன். கடைசியில் நீயும் இப்படி பண்றியே.!" என்றாள் விசும்பியபடி.

பூமாறன் நெற்றியை தேய்த்தபடி எழுந்து சென்று விட்டான். பாலா வாயே திறக்கவில்லை.

மறுநாள் காலையில் பூமாறன் தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்த போது அவனின் காலில் இடறியது ஒரு சிறு செடி. நான்கைந்து நாட்களுக்கு முன்னால் ஒருநாள் அவன் தின்று விட்டு துப்பிய சீதா பழத்தின் விதையால் முளைத்திருந்த விருட்சம் அது. என்னவோ போலிருந்தது அவனுக்கு. தரையில் மண்டியிட்டான். தன் பாதம் பட்டு மடங்கி விட்ட செடியின் இலையை நீவி தந்தான். அருகில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வந்து இந்த செடியின் மீது தெளித்தான்.

பிடித்திருந்தது அது. ஒரு செடியால் தனக்கு இவ்வளவு சந்தோசம் தர முடியும் என்று அவன் நினைத்ததே இல்லை.

அன்று இரவிலும் கூட அவனுக்கு உறக்கமே வரவில்லை. அந்த குட்டிச் செடியை பற்றிய யோசனையிலேயே இருந்தான். மறுநாள் காலையில் சூரியன் உதித்ததும் அந்த செடியிடம்தான் ஓடினான். செடி அவனை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. அவனுக்கான வேலை எதுவென்று தேர்ந்தெடுத்து விட்டான்.

அன்றிலிருந்து சாலையோரங்களிலும், தரிசாய் கிடக்கும் பொது இடங்களிலும் மரங்களை நட ஆரம்பித்தான். அவன் விதைத்த விதையெல்லாம் செடியாய், மரமாய் வளருவது கண்டு மனதுக்குள் பூரித்துப் போனான்.

விரைவிலேயே தன்னை ஒரு சமூக ஆர்வலராக அடையாளப்படுத்திக் கொண்டான். உள்ளூரில் இருந்த மற்ற சமூக அமைப்புகள் இவனின் பணியை பார்த்து இவனுக்கு துணை நிற்க ஆரம்பித்தார்கள். சைக்கிள் தொழிற்சாலையின் மூலம் தனக்கு கிடைத்த வருமானத்தில் கொஞ்சம் விதைகளை வாங்கவும், செடிகளை வாங்கவும் பயன்படுத்தினான். சில பல வீடுகளுக்கு சென்று மர கன்றுகளை இலவசமாக தந்தான். அவன்‌ த‌ந்ததில் பாதி பங்காவது பச்சை மரங்களாக உருவெடுத்தது.

வன துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தான். வனங்களில் இருந்த சிறு சிறு சொட்டைகளை நிரப்ப தான் மரங்களை நடுவதாக வேண்டிக் கொண்டான்.

"உங்க ஆர்வம் புரியுது தம்பி.. ஆனா நாங்க உங்களுக்கு உடனே சொல்ல முடியாது. நாங்க எங்க அதிகாரிகள் பலரோடு கலந்து பேசணும்.." என்றவர்கள் சில நாட்களிலேயே இவனுக்கு சரியென்று சொல்லி‌ விட்டார்கள்.

தனியாய் செடிகள் நட அவன் தவித்த நேரத்தில்தான் அவனுக்கு உதவியாளாக அறிமுகமானாள் பிரியா.

"என்னையும் உங்க கூட்டாளியா சேர்த்துக்கிறிங்களா அண்ணா?" என்றபடி பக்கத்து ஊரில் இருந்து வந்தவள் அவள்.

பூமாறன் அவளை யோசிக்காமல் சேர்த்துக் கொண்டான். ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது அவள் படிப்பில் தேர முடியாமல் சோர்ந்து உபயோகம் என்ற ஒன்று செய்வோம் என்று எண்ணி இங்கே வந்துள்ளாள் என்று.

அவளின் சுறுசுறுப்பு அவனுக்கு பிடித்துப் போய் விட்டது. ஆனால் அவளின் வீட்டில் அவளை திட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.

"வயசு பொண்ணு இப்படி கண்டபடி திரியலாமா?" என்று அவளின் அம்மாவும் சித்தியும் வசை பாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவள்தான் எதையும் காதில் வாங்காமல் இருந்தாள்.

ஆரம்பத்தில் ஏதோ உபயோகம் என்றுதான் செடி நட வந்திருந்தாள். ஆனால் செடிகள் வளருவதை கண்டு தனது மகிழ்ச்சியின் வேர் எது என்று அறிந்துக் கொண்டு விட்டாள். செடிகள் மீது காதல் கொண்ட அதே நேரத்தில் அவளுக்கு பூமாறன் மீதும் காதல் வந்து விட்டது.

ஒருநாள் இருவரும் சேர்ந்து வனத்தின் ஓரத்திலிருந்த செடிகளுக்கு தண்ணீரை விட்டுக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த ஓடையிலிருந்து குடம் குடமாக தண்ணீரை கொண்டு வந்துக் கொண்டிருந்தனர்.

"இன்னும் ஒரு மாசம்.. அப்புறம் மழை காலம் வந்துடும்.. மழை காலம் முடியும் முன்னாடி செடிகள் எல்லாம் நல்லா வேர் பிடிச்சிடும். அப்புறம் நம்ம உதவி இந்த செடிகளுக்கு தேவையா இருக்காது.!" என்றான்.

ஆமென்று தலையசைத்தாள் பிரியா.

பாதி செடிகளுக்கு தண்ணீரை விட்டு முடித்த பிறகு ஓய்வெடுக்க எண்ணி மரத்தின் கீழ் அமர்ந்தனர் இருவரும்.

தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை அவளுக்கு உண்ண தந்தான் பூமாறன்.

வாழைப்பழத்தை கையில் வைத்தபடி யோசித்தவள் அவனை திரும்பிப் பார்த்தாள்.

"அண்ணா.. சாரி.." என்று தலையை தட்டிக் கொண்டவளை விசித்திரமாக பார்த்தான் அவன்.

"ம்ம்." என்றவனின் கண்களை பார்க்க பயந்து திரும்பிக் கொண்டவள் "ஒரு விசயம் சொல்லணும். தப்பா எடுத்துக்காதிங்க. யோசிக்கணும்ன்னா யோசிங்க. இல்லன்னா மறுத்துட்டாலும் எனக்கு சந்தோசமே. ஆனா என்னை விலகி அனுப்பிடாதிங்க. இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. செடிகளை வாங்க எனக்கு காசு இல்லன்னாலும் உங்களோடு சேர்ந்து இந்த செடிகளுக்கு இரண்டு குடம் தண்ணீர் விடுவதே பெரிய சந்தோசமா இருக்கு.!"

"பீடிகைதான் பெருசா இருக்கு.." முணுமுணுத்தவனை தயக்கமாக பார்த்தவள் "உங்களை எனக்கு பிடிச்சிருக்கு.. வாய்ப்பிருந்தா உங்களை திருமணம் செஞ்சிக்க ஆசைப்படுறேன்.!" என்றாள்.

பூமாறன் கொஞ்சம் அதிர்ந்துப் போனான். அவளை இது வரை காதலோடு அவன் பார்த்தது இல்லை. ஆனாலும் அவளை பிடிக்காது என்று சொல்ல முடியாது. அவனின் மன விருப்பத்திற்கேற்ப ஏற்ற பெண்தான். தான் ஒரு பெண்ணாய் பிறந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்போமோ என்று அவளின் எண்ணங்களோடு தன் எண்ணங்களை பல முறை ஒப்பிட்டு பார்த்து உள்ளான். ஆனாலும் உடனே பதில் சொல்ல தயங்கினான்.

"கொஞ்ச நாள் கழிச்சி சொல்றேன்.!" என்றவன் பழையபடியே அவளோடு பழகினான்.

அன்று இரவு உறக்கத்தில் கனவாய் வந்தாள் அவள். அவளின் அங்க லட்சணங்கள் எல்லாம் இந்த இரவில்தான் அவனுக்கு தொல்லையாக வந்து சேர்ந்தது. பேண்ட் கால் பகுதியை முட்டி வரை உயர்த்தி வைத்திருப்பாள் அவள். தாவணி அணிந்து வரும் நாட்களில் கூட ஏற்றி சொருகியிருப்பாள். பல முறை நேரில் பார்த்திருந்தும் கூட எதுவும் தோன்றி இருக்கவில்லை. ஆனால் இன்றோ இம்சையாக இருந்தது அனைத்தும்.

அவளின் முகத்தில் இருந்த கண்களையும், புருவத்தையும், மூக்கு, உதடு, காது என்று அனைத்தையும் தனி தனியாய் கனவுக்குள்ளேயே ரசித்தான்.

"ஒரே நாள்ல தலைகீழா மாத்திட்டா என்னை.!" என்று புலம்பினான் மறுநாள் காலையில்.

அன்று வேலை நேரத்தில் அவளை அடிக்கடி பார்த்தான். அவளின் முகத்தில் இருந்த அழகை கண்டுபிடிக்க முயன்றான். ஆக மொத்தத்தில் தான் விழுந்து விட்டது மட்டும் அவனுக்கு தெளிவாக புரிந்தது.

இடுப்பில் துப்பட்டாவை இறுக்கி கட்டியிருந்தாள். இதுநாள் வரை பார்க்காத இடத்திற்கெல்லாம் கண்கள் அலை பாய்ந்தது.

அவளோ அமைதியாக தனது வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்‌. இந்த குறுங்காட்டிற்கு தண்ணீர் விட்டுவிட்டு பிறகு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும்.‌ அதனால் வேகமாக வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

"பிரியா.. உங்க வீட்டுல மொத்தம் எத்தனை பேர்?" முதல் முறையாக அவளின் வீட்டை பற்றி விசாரித்தான். அவனுக்கு உதவியாளாக சேர்ந்திருந்த போதே தன் குடும்பத்தை பற்றி சொல்லி இருந்தாள். ஆனால் அப்போது சரியாக காதில் வாங்கவில்லை அவன்.

இப்போது அவள் சொல்வதை மந்திரம் போல கேட்க ஆரம்பித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN