குரங்கு கூட்டம் 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மணி பன்னிரெண்டை கடந்து விட்டிருந்தது. ஆனாலும் நிலாவின் சிரிப்பு சத்தம் குறையவில்லை.

நிலாவை தூங்க விடாமல் நண்பர்கள் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது. ரோஜா வெகு நாளைக்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்தாள்.

"நிலா சிரி.. நான் போட்டோ பிடிக்கிறேன்.!" மிருத்யூ நிலாவை விதவிதமாக நிற்க வைத்து, படுக்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். நிலாவும் சலிக்காமல் அவனுக்கு சிரித்து சிரித்து பற்களை காட்டிக் கொண்டிருந்தாள்.

தன் கைபேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்தபடி புன்னகைத்தவன் "வீட்டுக்கு போன பிறகு என்னவாகும்?தன் மகன் மருமகளை மட்டுமில்லாம பேத்தியையும் கூட்டி வந்திருக்கான்னு தெரிஞ்ச உடனே பிரேமோட அம்மா ஒரு வழி பண்ணிடுவாங்க.!" என்றான் சிரிப்போடு.

"யார் சண்டை‌ போட்டாலும் சரி. நான் நிலா குட்டியை என் கையை விட்டு இறக்க மாட்டேன்.!" என்று நிலாவை அணைத்து முத்தமிட்டாள் மிருதுளா. தரையில் அமர்ந்திருந்த மிருதுளாவை சுற்றி பொம்மைகளும், நிலா எதையெல்லாம் விளையாட்டு பொருள் என்று எடுத்து கீழே எறிந்தாலோ அந்த பொருட்களும் கிடந்தன.

நிலா தரையில் கிடந்த சிபியின் பேனாவை எடுத்து வாயில் வைத்தாள். எச்சில் ஒழுக கடித்துப் பார்த்தாள். காணாததை கண்டது போல சிரித்தாள் மிருதுளா.

"க்யூட்டா இருக்கா இவ.." என்றவள் "ஆனா பேனாவை கடிக்க கூடாது பப்பும்மா.." என்று பேனாவை வாங்கி தூர வைத்தாள்‌.

நிலா பேனாவை நோக்கி செல்ல இருந்தாள். அவளை தன்னோடு இழுத்து வைத்துக் கொண்டாள் மிருதுளா.

அப்போது கதவு மெதுவாக தட்டப்பட்டது. அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "இந்த நேரத்துக்கு யாரா இருக்கும்?" என கேட்டபடியே சென்று கதவை திறந்தான் மிருத்யூ.

பிரேம் அறைக்குள் நுழைந்தான்.

"இந்த டைம்ல இங்கே ஏன் வந்த?" மிருத்யூவின் கேள்வியை காதில் வாங்காமல் தாண்டி நடந்தான்.

"பிரேமு.." என்ற மிருதுளாவை கண்டுக் கொள்ளாதவன் தோழியின் அருகே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த நிலாவை வாரி எடுத்தான். தன் கையில் இருந்த பொருளை கீழே போட்டு விட்டு நிமிர்ந்தாள் நிலா‌. பார்த்த கணமே உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள். அவனின் தாடியையும் முகத்தையும் கண்டு பயந்து வீறிட்டு கத்தினாள் நிலா.

"குரங்கு பயலே‌. எதுக்குடா குழந்தையை அழ வச்ச?" எழுந்து நின்று நண்பனின் தலையில் கொட்டு வைத்து விட்டு நிலாவை தன் கைகளில் வாங்கிக் கொண்டாள் மிருதுளா. இவளின் கைகளுக்கு வந்த பிறகு நிலா அழுகையை நிறுத்தி விட்டாள்.‌ மிருதுளாவின் தோளில் முகம் புதைத்து லேசாக விசும்பினாள்.

பிரேமின் முகம் முழுதாய் வாடிப் போய் விட்டது. அதை கண்டு சிபிக்குதான் மனம் வருந்தியது.

"அவ அடையாளம் தெரியாம அழறா பிரேம்.." சிபி சமாதானம் சொன்னதற்கு சரியென்று தலையசைத்தவன் குழந்தையை கவனித்துப் பார்த்தான்.

"இளைச்சிட்டா.." என்றான் கவலையாக.

"சொந்த புள்ளையை அனாதையா விட்டா இளைக்காம என்னடா பண்ணும்?" நண்பனின் முதுகில் குத்து விட்டபடி கேட்டான் மிருத்யூ.

மிருத்யூவை திரும்பிப் பார்த்த நிலா களுக்கென்று சிரித்தாள்.

"உங்க அப்பாவை அடிச்சா உனக்கு குஷியா இருக்கா? அப்படியே எங்க கூட்டத்துக்கு பொருத்தமான செல்ல குட்டியா வந்து பிறந்திருக்க.!" அவளின் கன்னம் பிடித்து கிள்ளியபடி சிரித்தான். நிலாவும் பதில் சிரிப்பு சிரித்தாள்.

"நாளைக்கு ஒரு நாளை தாட்டிட்டா போதும்.." என்றான் பிரேம் தாடியை சொறிந்தபடி.

நிலா இவனின் குரலில் திரும்பிப் பார்த்தாள். சந்தேகமாக அவனை தலை சாய்த்துப் பார்த்தாள். ஆனாலும் அவளின் குட்டி மூளைக்கு அடையாளம் பிடிப்பட மறுத்தது. அதனால மீண்டும் மிருத்யூவின் பக்கமே திரும்பிக் கொண்டாள்.

"ஆனா நாளைக்கு முழுசா சடங்கும் சம்பிரதாயமாவுமே இருக்கும்.." கவலையாக சொன்னான் பிரேம்.

"கல்யாணம்ன்னாவே அதெல்லாம் இருக்கும் ப்ரோ.." என்ற ரோஜாவிடம் ஆமென்று தலையாட்டினான்.

"தேங்க்ஸ்.. நிலாவை கொண்டு வந்து சேர்த்ததுக்கு.." என்றான். ரோஜா புன்னகைத்தாள்.

நிலாவும் வர மறுத்து விட்டாள். சிபியோடும் கொஞ்ச முடியாது. இனி தனக்கு இங்கு வேலை இல்லை என்பதை புரிந்துக் கொண்ட பிரேம் வெளியே நடந்தான்.

படிகளின் மேல் பகுதியில் நின்றிருந்த அடியாட்கள் இருவரும் இவனை திரும்பிப் பார்த்தார்கள்.

"என்னாச்சி சாமி? எங்க சின்னம்மா உங்க லிங்கத்தை எடுக்கலதானே?" எனக் கேட்டான் ஒருவன்.

செல்லும்போது "என்னோட பிரபஞ்ச லிங்கத்தை காணல.. இந்த பிரபஞ்சத்துலயே அது ஒரே ஒரு லிங்கம்தான் இருக்கு. அதை உங்க வீட்டு சின்ன மகராணிதான் எடுத்துட்டு போயிருப்பதா என் ஞான திருஷ்டி சொல்லுது.. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்.!" என்றான்.

"எங்க சின்னம்மாவை பார்த்தா திருடி மாதிரி தெரியுதா உங்களுக்கு?" கோபமாக கேட்டான் ஒருத்தன்.

"இல்லையப்பா.. அவர் தன் மன மகிழ்ச்சிக்காக எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அது மிகவும் புனிதமான ஒரு லிங்கம். திருமணம் செய்துக் கொள்ளும் பெண்ணிற்கு அந்த லிங்கம் அனாவசியம். நான் சென்று வாங்கி வந்து விடுகிறேன்!" என்றுச் சொல்லி சென்றான்.

தன்னை கேள்வி கேட்ட அடியாளிடம் தன் உள்ளங்கையில் இருந்த சிறு கண்ணாடி லிங்கத்தை காட்டினான்.

"இதுதான் அந்த அபூர்வ லிங்கமா? இதை வித்தா எவ்வளவு தேறும்?" எனக் கேட்டான் அருகில் இருந்தவன்.

"இது விலை மதிப்பில்லாதது. இதை விற்க ஆரம்பித்தால் பிறகு இந்த மொத்த பூமியையே விலையாய் தர வேண்டி வரும்.!" என்றான்.

அவர்கள் இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"நீங்க போய் தூங்குங்க சாமி.." பிரேமுக்கு வழி விட்டு நின்றான் ஒருவன்.

"வீட்டுக்கு போனதும் நிலாவை நான் எங்க வீட்டுக்கு தூக்கிப் போக போறேன்.!" என்றாள் மிருதுளா சந்தோசத்துடன்.

நிலாவை பார்த்துதான் பாவமாக இருந்தது சிபிக்கு. கொட்டாவி விட்டவள் தனது படுக்கையில் சென்று படுத்தாள்.

"இரண்டு பேர் வேற ரூம்க்கு போய் தூங்கிக்கலாமா? இங்கே இடம் பத்தாதுன்னு தோணுது.." என்ற ரோஜாவை விசித்திரமாக பார்த்த மிருதுளா "இந்த கட்டில்ல நாலு பேர் தூங்க முடியும். மிருத்யூ சோபாவுல படுத்துப்பான்.. நீ வா வந்து தூங்கு.!" என்றாள்.

நிலாவை தூக்கிச் சென்று படுக்கையில் நடுவே படுக்க வைத்தாள். அவளின் அருகே படுத்துக் கொண்டவள் மறு பக்கத்தை கை காட்டி "நீ அந்த பக்கமே தூங்கு சிபி.!" என்றாள்.

'ஆக மொத்தத்துல நிலாவை நைட்லயும் இம்சை செய்ய போறாங்க..' என்று கவலையோடு நினைத்தாள் சிபி.

ரோஜா மிருதுளாவின் மறு பக்கத்தில் படுத்துக் கொண்டாள். போர்வையை போர்த்திக் கொண்டவள் மிருத்யூவை பார்த்து புன்னகைத்தாள். சோபாவில் படுத்திருந்தவன் கண்களால் பேச முயன்றான். ஆனால் கடைசியில் தோற்றுப் போனவனாக திரும்பிக் கொண்டான்.

"குட் நைட் சாங் பாடலாமா பேபி?" நிலாவிடம் கேட்ட மிருதுளாவை பயத்தோடு பார்த்தாள் சிபி. இந்த நடு இரவில் கூட தூங்க விடாமல் இம்சை செய்கிறாளே என்று கவலையாக இருந்தது அவளுக்கு.

ஆனால் நல்ல வேளையாக மிருதுளா செல்போனில் பாடல் ஒன்றை ஒலிக்க செய்தாள். பிறகு அறை நிசப்தமாக மாறி போனது.

மொத்த வீடும் அமைதியாக இருந்தது. இந்த அமைதி மறு நாளைய போர்களத்திற்கான அமைதி என்பதை அந்த வீடும் அறியவில்லை. அந்த வீட்டில் இருந்தோரும் அறியவில்லை.

ஸ்வேதா நடு இரவில் தூக்கம் தொலைத்து எழுந்து கீழே வந்தாள். வழி மறித்தோரிடம் வழக்கம் போல தண்ணீர் குடுவையை காட்டிவிட்டு நடந்தாள். மேலே இருந்த அறைகள் மட்டும்தான் நிசப்தமாக இருந்தன. கீழே ஆடலும் பாடலுமாக இரவு நேர கச்சேரி நடந்துக் கொண்டிருந்தது.

ஆடிக் கொண்டிருந்தவர்களை தாண்டி நடக்க முயன்றாள் ஸ்வேதா. அவளையும் நடனம் ஆட இழுத்து விட்டாள் ஒரு பெண். ஸ்வேதாவின் கையில் இருந்த தண்ணீர் கூஜாவை யாரோ வாங்கிக் கொண்டார்கள். ஸ்வேதா இடுப்பில் ஒரு கையையும் தலையில் ஒரு கையையும் வைத்தபடி அவர்களை போலவே ஆடினாள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர்களை விட இவள் இன்னும் சிறப்பாக ஆடியிருந்தாள்.

இரவு நேர கூட்டத்திற்கு தேனீர் தர வந்திருந்த அர்விந்த் ஸ்வேதா அங்கே வந்ததையும் அவள் நடனம் ஆட ஆரம்பித்ததையும் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளின் நடனத்தில் இவன் சற்று சறுக்கினான் என்பதுவும் உண்மைதான்.

'திருடிக்கு இவ்வளவு திறமையா?' என்றுக் கூட நினைத்தான்.

'மிருதுதான் இருக்காளே.. இந்த மாதிரி ஏதாவது தெரியுதா? இவளை கட்டி கூட்டிப் போனதும் மிருதுவுக்கு டேன்ஸ் கத்து தர சொல்லணும்..' என்று நினைத்துக் கொண்டான்.

தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா. அருகில் நின்றிருந்தவர்கள் வட நாட்டு மேள தாளங்களை கழுத்தில் போட்டபடி இசைத்துக் கொண்டிருந்தார்கள். இசை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.‌ அதனால்தான் நிறுத்தாமல் ஆடிக் கொண்டிருந்தாள்.

நல்லதொரு நடனம் என்று கிசுகிசுத்தபடி சுற்றி இருந்த ரவுடிகள் கூட அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன் இஷ்டத்திற்கு ஆடிக் கொண்டிருந்தவள் காலியான தட்டு ஒன்றை இடுப்போடு அணைத்தபடி நின்றிருந்த அர்விந்தை கண்டதும் நின்று விட்டாள். அவனை ஆச்சரியத்தோடுப் பார்த்தாள்‌. அவளின் கண்களில் கொஞ்சமாக பயம் இருந்தது. அது அர்விந்துக்கு பிடித்திருந்தது.

கூடத்தை விட்டுவிட்டு சமையல் இடத்திற்கு செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தான்.

நடன கூட்டத்தை விட்டு விலகிய ஸ்வேதாவும் அவனை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள். இரு புறம் சுவர்கள் இருக்க நீண்டுச் சென்ற வராண்டா பாதை அது. வழியில் இருந்த விளக்குகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தாள் ஸ்வேதா.

திடீரென்று அங்கிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்துப் போயின. கொஞ்சமாக பயந்து விட்ட ஸ்வேதா வந்த வழியில் திரும்பி நடக்க இருந்த நேரத்தில் அவளின் கையை பற்றியது ஒரு கரம்.

"எங்கே போற திருடி?" அர்விந்த்தான் அது என்று அடையாளம் கண்டுக் கொண்டவள் "தூங்க போறேன்.." என்று முணு முணுத்தாள்‌. தூரத்தில் இருந்து வீசிய வெளிச்சத்தில் இவன் தனக்கு மிக அருகில் நிற்பதை கண்டாள் அவள். பயத்திலும் பரபரப்பிலும் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்கு.

"மறுபடியும் திருட்டு நகையை கை மாத்த வந்தியா?" அவனின் கேள்வி அவளின் காதோரத்தில் கிசுகிசுப்பு போல கேட்டது. சுவரோடு சுவராக சாய்ந்து நின்ற ஸ்வேதா தன் டாப்பின் நுனியை இறுக்க பற்றிக் கொண்டாள்.

"இ.. இல்ல.." என்றாள்.

"அப்படின்னா என்னை பார்க்கதான் வந்தியோ!?" அவளின் கழுத்தில் ஊர்ந்தது அவனின் கரம். ஆமென்று சொல்ல துணிவில்லை அவளுக்கு.

மௌனமாக இருந்தவளை மேலும் கேட்டு தொல்லை செய்யாதவன் "உன் டேன்ஸ் சூப்பர்.!" என்றான் அவளின் கன்னத்தில் உதடு பதித்து.

"இ.. இது தப்பு.. ஒரு பொண்ணுக்கு அவளோட இஷ்டம் இல்லாம கிஸ் தந்தா அது சட்டபடி குற்றம்.!" என்றவளின் அதே கன்னத்தில் மீண்டும் முத்தம் தந்தான்.

"ஆனா லவ்வர்ஸ் முத்தம் தந்துக்க கூடாதுன்னு ஒரு சட்டமும் கிடையாது.. என்னை பிடிச்சிருக்குதானே?" எனக் கேட்டான்.

ஸ்வேதாவின் நெற்றி வியர்வை காதுகளை தொட்டபடி கீழிறங்கியது. பிடித்துதான் இருந்தது. யாரென்று கூட தெரியாமல் ஒரு காதல் வந்து சேர்ந்திருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN