பௌர்ணமி 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரியாவுக்கு ஒரு அக்காவும் தம்பியும். அக்கா திருமணம் முடித்து சென்று விட்டாள். தம்பி உயர்நிலை பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருக்கிறான்.

அப்பா விவசாயி. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் வீட்டின் புறம் பிரச்சனை இல்லை என்றுதான் தோன்றியது பூமாறனுக்கு.

இரண்டு நாட்களுக்கு பிறகு "எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு.." என்றான்.

பிரியா மகிழ்ச்சியில் வெட்கப்பட்டு தரை பார்த்தாள்.

"எங்க வீட்டுக்கு வரிங்களா?" என்றவளை கேள்வியாக பார்த்தான்.

"எங்க வீட்டுல உங்களை அறிமுகப்படுத்த ஆசைப்படுறேன்.." என்றவளுக்கு சரியென தலையசைத்தவன் மறுநாள் அவளின் வீட்டிற்கு சென்றான். விவசாய நிலத்தின் ஓரத்தில் இருந்த வீடு அது.

நடுத்தர ஓட்டு வீடு. அரைப் பட்டி மாடுகள் தொழுவத்தில் இருந்தன. இரண்டாள் உயர வைக்கோல் போர் வாசலின் ஓரத்தில் இருந்தது.

"அம்மா.. அவர் வந்திருக்காரு.." பிரியா சொன்னதும் தண்ணீர் சொம்போடு வந்தாள் அம்மா.

வாசல் திண்ணையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் தண்ணீரை பருகினான்.

"பிரியா உங்களை பத்தி நிறைய சொல்ல இருக்கா.." என்றாள்.

பூமாறன் மொத்தமாக புன்னகைத்து வைத்தான். தோட்டத்திலிருந்த அப்பாவை கூட்டி வந்தாள் பிரியா.

"இது அப்பா.. இவர் பெரியப்பா.." என்று கை காட்டினாள்.

எழுந்து நின்று வணக்கம் வைத்தான் பூமாறன். அவளின் அப்பாவிற்கும் அவளுக்கும் ஒரே சாயல். அவளின் அப்பாவும் பெரியப்பாவும் அவனுக்கு எதிரே இருந்த கட்டிலில் அமர்ந்தார்கள்.

பூமாறனை பற்றி நிறைய கேள்வி கேட்டார்கள். புகை பிடிப்பானா, மது அருந்துவானா என்ற வழக்கமான கேள்விகளை கேட்டுவிட்டு "இப்படி மரம் நட்டுட்டு இருந்தா சோத்துக்கு என்ன செய்விங்க?" எனக் கேட்டார்கள் கடைசியாக.

"அப்பா.. அதையெல்லாம் நாங்க பார்த்துப்போம்.!" என்ற பிரியாவை முறைத்த பெரியப்பா "நீ சும்மா இரு.." என்று அதட்டி வைத்தார்.

"சார்.. நான் என் அண்ணனோட கம்பெனியில் பணம் முதலீடு போட்டிருக்கேன். அந்த காசை வச்சி செடி நட்ட பிறகும் கூட எங்களால நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்க முடியும்.." என்று கேரண்டி தந்தான் இவன்.

யோசித்தார்கள் அவர்கள்.

"கொஞ்சம் சிக்கலா இருக்கு தம்பி.. மெதுவா பேசிட்டு சொல்றோம்.." என்றார் அவளின் பெரியப்பா.

பூமாறன் சரியென்று தலையசைத்து விட்டு எழுந்து நின்றான். இன்னும் இரண்டு வாரத்திற்காவது தன் வீட்டை பற்றி விசாரித்து அலைவார்கள் என்று யூகித்தான்.

மறுநாள் ஒரு மலை அடிவாரத்தில் செடிகளையெல்லாம் வேனிலிருந்து இறக்கி தரையில் வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் "உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?" எனக் கேட்டான் பூமாறன்.

"உங்க ஊர்ல இருக்கும் எங்க சொந்தக்காரங்க, அப்பா பெரியப்பாவோட பிரெண்ட்ஸ்கிட்டயெல்லாம் உங்களோட கேரக்டர் சர்டிபிகேட் கேட்டு வாங்கிட்டு இருக்காங்க.." சிரித்தபடியே சொன்னாள்.

வேனில் ஓரத்தில் இருந்த இரண்டு செடிகள் ஒன்றின் மீது ஒன்றாக மோதிக் கொண்டு இருந்தன. இரண்டாம் செடியை கவனிக்காத பிரியா ஒரு செடியை மட்டும் இரு கைகளாலும் எடுத்தாள். இரண்டாவது செடி தரையை நோக்கி சாய்ந்தது.

செடியை பிடிக்க எண்ணி வேனின் மீது சாய்ந்தாள். செடி சாய்வதை கண்டு இவளுக்கு முன்னால் கையை நீட்டிய பூமாறன் இவளின் தோள்களைப் பற்றி விட்டு முகம் சிவக்க திரும்பிக் கொண்டான்.

"சாரி.. தெரியாம டச் பண்ணிட்டேன்.." என்றான்.

"ம்ம்.. ஆனா நீங்க இப்ப இந்த செடியை பிடிக்கலன்னா அந்த செடி கீழே விழுந்திடும்.!" இவள் சொன்ன பிறகு இந்த புறம் திரும்பியவன் இவளின் கையில் இருந்த செடியை தன் கையில் வாங்கினான். பிரியா தன் மீது சாய்ந்து நின்றிருந்த இரண்டாவது செடியை எடுத்தாள்.

"உங்க அப்பாவும் பெரியப்பாவும் ரொம்ப ஸ்டிரிக்ட்.." என்றான் ஒன்றுக்கு ஒன்று என தோண்டியிருந்த குழியில் செடியை நட்டபடி.

"இல்ல. இரண்டு பேருமே பிரண்ட்லி டைப். பழகிட்டா ரொம்ப பிடிச்சிடும். அதிலும் எங்க பெரியப்பா செம அரட்டை.." என்றாள்.

"உங்க பெரியம்மா எங்கே?" என அவன் கேட்கவும் விழித்தவள் "இல்ல.. அவருக்கு கல்யாணம் ஆகல.." என்றாள்.

பூமாறன் ஆச்சரியப்பட்டான். "ஆனா ஏன்? பார்க்க நல்ல மனுசனாதானே தெரியறாரு?" எனக் கேட்டான்.

பிரியா சோகமாக தலை குனிந்தாள். "எங்க பாட்டி தாத்தா காலத்துல நிறைய வறுமை. வீட்டுல சாப்பாட்டுக்கே வழி இல்லையாம். அப்ப எங்க பெரியப்பாவுக்கு பத்து வயசு. கல் குவாரி ஒன்னுக்கு பத்திரத்துல கையெழுத்து போட்டு அவரை அனுப்பிட்டாங்க. ஐம்பதாயிரம் ரூபா.. அவர் அதுக்காக முப்பது வருசம் அங்கே வேலை செய்யணும்ன்னு ஒப்பந்தம் போட்டுட்டாங்க. அந்த ஐம்பதாயிரத்தை வாங்கிதான் எங்க தாத்தா வயல் வாங்கினார். அப்புறம் அதுல உழைச்சிதான் மத்ததெல்லாம்.. ஆனா எங்க பெரியப்பா முப்பது வருச ஒப்பந்தம் முடிஞ்சி கொஞ்ச வருசம் முன்னாடிதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தாரு. வெயில்லயே ரொம்ப வேலை செஞ்சதாலும், சின்ன வயசுலயே அதிகமா பிரஷரை அனுபவிச்சத்தாலும் அவருக்கு தலைமுடி கூட நரைச்சிடுச்சி. அவருக்கு யார் பொண்ணு தருவா? அவருக்கும் கல்யாணத்துல விருப்பம் இல்ல.. உன் குழந்தைங்க என் குழந்தைகளை போலன்னு எங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டு எங்க மேல பாசம் காட்டிட்டு இருக்காரு.." என்றாள்.

"விடுப்பா.. இனி எல்லாம் நல்லதா நடக்கும்.." என்று அவளிடம் சொன்னவனுக்கு தன் அத்தையின் நினைவுதான் வந்தது.

அன்று மாலையே பூர்ணிமாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னான்.

"பேசி பார்க்கலாம் மாமா.. இந்த திருமண தகவல் மையங்களில் ஒருத்தர் கூட சரியா கிடைக்கல. அங்கேயும் ஒரு முறை பேசி பார்க்கலாம்.." என்ற பூர்ணிமா மறுநாளே பிரியாவின் வீட்டிற்கு வந்து விட்டாள்.

வயலில் வேலையை முடித்து விட்டு அப்போதுதான் வீடு திரும்பினார் ராஜா. திண்ணையில் அமர்ந்து தன் தம்பி மனைவியோடு பேசிக் கொண்டிருந்த பூர்ணிமாவை யோசனையோடு பார்த்தபடி வந்து அமர்ந்தார்.

"யார் இந்த பாப்பா?" பிரியா தந்த பழங்கஞ்சியை வாங்கி அருந்தியபடியே கேட்டார்.

"நான் பூர்ணிமா. பூமாறனுக்கு அண்ணி.." என்றவளை வியப்போடு பார்த்தார் அவர். பூமாறனை பற்றி விசாரித்ததில் அவனின் அண்ணனும் அண்ணியும் பிரிந்து இருப்பதாக தகவல் வந்திருந்தது.

"என்ன விசயமா இவ்வளவு தூரம் வந்திருக்க பாப்பா?" என்றவரை தலை முதல் கால் வரை அளந்தாள் அவள். கம்பீரம் துளியும் குறையாத முகம், கருத்திருந்தும் கண்களில் அதிகளவில் இருந்த பளபளப்பு, குரலில் இருந்த தன்மை என அவரின் தோற்றம் அவளுக்கு பிடித்துப் போனது.

"எங்க அம்மா முல்லை.." என்றவள் தாயின் புகைப்படத்தை எடுத்து அவரிடம் தந்தாள்.

வாங்கி பார்த்தவர் என்னவெனும் விதமாக இவளை பார்த்தார்.

"இவங்க என்னை பெத்த அம்மா இல்ல. என்னோட சித்தி. ஆனா என்னை மூனு வயசுல இருந்து இவங்கதான் வளர்த்தினாங்க.. என்னை வளர்த்தணும்ன்னு இவங்க கல்யாணமே பண்ணிக்கல. ஆனா எனக்கே இதெல்லாம் இப்ப சமீபமாதான் தெரிய வந்திருக்கு. நான் என் அம்மாவுக்கு வரன் பார்த்துட்டு இருக்கேன். என் அம்மா ஜவுளி கடை வச்சி நடத்திட்டு இருக்காங்க. சொந்த வீடு அவங்களே உழைச்சி சம்பாதிச்சது இருக்கு. உங்களுக்கு விருப்பம் இருந்தா மேற்கொண்டு பேசலாம்.." என்றாள்.

பிரியாவின் அம்மா ஆச்சரியத்தில் வாய் திறந்தாள்.

ராஜாவுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. முல்லையின் புகைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தார்.

"உங்க அம்மாவுக்கு இதுல விருப்பம் இருக்கா?" எனக் கேட்டார்.

"சம்மதிக்க வைக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்.!" என்றாள் தயக்கமாக.

சில நிமிடங்கள் யோசித்தார். தன் போனை எடுத்தார். "உங்க அம்மாவோட போன் நம்பர் கொடு.. பேசி பார்க்கிறேன்.." என்றார்.

"பெரியப்பா.." ஆனந்த அதிர்ச்சியோடு ராஜாவின் கழுத்தை கட்டிக் கொண்டாள் பிரியா.

"பேசி பார்க்கறேன்னுதானே சொன்னேன்.!" என கேட்டவர் போன் நம்பரை பதிந்து வாங்கிக் கொண்டார்.

பூர்ணிமா அங்கிருந்து கிளம்பும்போது பின்னால் வந்தாள் பிரியா.

"தேங்க்ஸ் பூரணி.." என்றாள்.

"மாறா மாமா என்னை பத்தி சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன்.." என்றவளிடம் ஆமென தலையசைத்தவள் "எப்போதும் உங்களை பத்தியும் அவங்க அண்ணனை பத்தியும் மட்டும்தான் பேசிட்டு இருப்பாரு.." என்றாள்.

பூர்ணிமாவின் இதழ்கள் விரிந்தது.

"வா போன்னே கூப்பிடுப்பா. இரண்டு பேருக்கும் ஒரே வயசுதானே?"

பிரியா சரியென்று தலையசைத்தாள். "நீ ஏன் வீட்டை விட்டு போயிட்ட? அவர் ரொம்ப பீல் பண்றாரு.. வீட்டுக்கு வந்துடலாமே.!" தயங்கி தயங்கி கேட்டாள்.

பூர்ணிமா பெருமூச்சு விட்டாள். "பாலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா அவனோட குணம் சுத்தமா பிடிக்கல.. அவன் என்னை உடைச்சபோதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. நான் சும்மா அவனோட மேனியழகை கண்டு மயங்கிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டனோன்னு.. அவனோட குணத்தை நல்லா யோசிச்சி பார்த்தா எனக்கு எரிச்சல் வருது. அவனுக்கும் எனக்கும் எப்பவும் ஒத்து வராதுன்னு புரியுது. பிடிக்கல. அதான் பிரிஞ்சிட்டேன்.. அவனை பத்தி இன்னும் நிறைய நிறைய யோசிக்க வேண்டி இருக்கு.." என்றவள் வியந்து நின்ற பிரியாவின் கை பிடித்தாள்.

"நீ நல்ல குணமுள்ளவளா தெரியற.. மாறா மாமாவுக்கு பொருத்தமா இருப்பன்னு நினைக்கிறேன்.." என்றவள் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.

வீட்டிற்கு வந்த பிறகு அம்மாவிடம் ராஜாவை பற்றி சொன்னாள் பூர்ணிமா. முல்லைக்கு பரிவுதான் வந்தது முதலில். அன்றைய இரவு தொடங்கும் நேரத்தில் முல்லையின் போனுக்கு வந்தது ஒரு அழைப்பு. ராஜாதான் பேசினார்.

தன்னை பற்றி அறிமுகம் செய்துக் கொண்டவர் "உங்க பொண்ணு வந்து பேசிட்டு போனா.. எதிர்காலத்துல சொந்தக்காரங்க ஆக போறோம். அதனாலதான் உடனே மறுத்துச் சொல்ல முடியல.. கொஞ்ச நாள் பேசிட்டு அப்புறம் விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா அவங்க மனசு வாடாம இருக்கும்.." என்றார்.

"ம்.. சரி.." என்ற முல்லைக்கு மனதுக்குள் முதல் இடறல் தோன்றியது.

அதன் பிறகு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பேசிக் கொண்டார்கள். பூமாறனுக்கும் பிரியாவுக்கும் இடையில் உள்ள மன பொருத்தம், குண பொருத்தம் பற்றி பேச ஆரம்பித்து அவர்களுக்கு இடையில் இருந்த பொருத்தங்களையும் அறிந்துக் கொண்டனர்.

ஒருவருக்கொருவர் பிடித்து உள்ளதை தயக்கத்தோடே‌ ஒப்புக் கொண்டனர். ஊர் உலகம் என்ன பேசுமோ என்பதை மறந்து தங்களின் காதலை கண்டறிந்தனர்.

தங்களின் வீட்டு உறவுகள் சூழ கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் நடந்தது. பாலா மகிழ்ச்சியோடு அத்தையின் தலையில் அட்சதை தூவினான். அவன் இருப்பதை பூர்ணிமாதான் கவனிக்க மறுத்தாள்.

திருமணம் முடிந்ததும் முல்லையின் வீட்டிற்கே வந்து விட்டார் ராஜா. இருவருக்கும் தன்னால் முடிந்த அளவு தனிமையை தந்தாள் பூர்ணிமா.

பூர்ணிமாவோடும் நன்றாக பழகினார் ராஜா. தந்தையின் அன்பு என்றால் என்னவென்றே தெரியாதவளுக்கு ராஜாவின் பாசம் பொக்கிஷமாகவே இருந்தது. ராஜாவுக்கும் இன்னொரு பிரியாவாக பூர்ணிமா மாறிப் போனாள். இருவரும் நிறைய பேசினார்கள்.

பூர்ணிமாவுக்கும் பாலாவுக்கும் இடையில் இருந்த பிரச்சனையை புரிந்து கொள்ள முடிந்த ராஜாவுக்கும் கூட பிரச்சனையை எப்படி சரி செய்து வைப்பது என்று தெரியவில்லை.

அடுத்து வந்த இரண்டாம் மாதத்தில் பூமாறனுக்கும் பிரியாவுக்கும் திருமணம் நடந்தது. ஒரு வாரம் ஊரில்தான் தங்கியிருந்தாள் பூர்ணிமா. ஆனால் அப்போதும் கூட பாலாவும் பூர்ணிமாவும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN