பௌர்ணமி 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முல்லை தன் மகளுக்கு அவ்வப்போது அறிவுரை சொல்லி பார்த்தாள்.

"தப்பு செஞ்ச அவனே மன்னிப்பு கேட்கல. ஆனா நான் அவன் கால்ல போய் விழணுமா?" என திருப்பிக் கேட்டு மறுப்பு தெரிவித்தாள் பூர்ணிமா.

இப்படியே இரண்டரை வருடங்கள் ஓடி விட்டது. அவனும் தேடி வரவில்லை. இவளும் செல்லவில்லை. இருவருக்கும் இடையில் இருந்த கோபம் மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டிருந்தது.

பூமாறனுக்கும் பிரியாவுக்கும் இடையில் இருந்த காதல் நல் முறையில் வளர்ந்துக் கொண்டிருந்தது. அவன் எப்போதும் எதற்காகவும் அவளை கட்டாயப்படுத்தவில்லை. பிரியா தற்போது கர்ப்பமாக இருந்தாள். அதில் செண்பகத்திற்குதான் அதிக சந்தோசம்.

ஸ்டெல்லா தந்த சாக்லேட்டை சுவைத்த பூர்ணிமா "என் டார்லிங் நீ மட்டும்தான் தெரியுமா? உன்னை விட்டு அந்த பன்னி பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போனதுக்கு சாரி ஸ்டெல்லா.." என்று தோழியின் தோளில் முகம் புதைத்து சொன்னாள் பூர்ணிமா.

ஸ்டெல்லா தன் உதட்டில் உதித்த குறும்பு சிரிப்பை அப்படியே மறைத்துக் கொண்டாள்.

கல்லூரி வகுப்பறையில் இவர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர். இடைவேளை நேரத்தில் வெளியே சென்ற மற்ற அனைவரும் இன்னும் திரும்பி வந்திருக்கவில்லை.

"ஒரு சாக்லேட்க்கு இவ்வளவு ஐஸா?" கேலியாய் கேட்டாள் ஸ்டெல்லா.

பூர்ணிமா நேராய் அமர்ந்து தோழியை முறைத்தாள். "ஒரு சாக்லேட்டா இருந்தாலும் நீ தினம் தர.. ஆனா அவன் நாலு நாள் லவ்வை தந்துட்டு மீதி நாள் எல்லாம் வலியை தந்துட்டான்.!" என்று நெஞ்சில் குத்தி சொன்னாள்.

வழக்கத்தை விட இன்று நாடகத்தனம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தது ஸ்டெல்லாவுக்கு.

"என்னாச்சி என் செல்ல குட்டிக்கு? உன் அம்மா இன்னைக்கும் உன் ஹப்பி புராணம் பாடிட்டாங்களா?" எனக் கேட்டாள் சந்தேகமாக.

இல்லையென தலையசைத்தவள் "இன்னைக்கு அந்த லூசு பயலுக்கு பிறந்தநாள்.!" என்றாள் தரையை பார்த்த வண்ணம்.

ஒவ்வொரு நாளும் அவனை நினைக்கும் நேரங்களில் எல்லாம் அது நரகம் போல்தான் மாறிக் கொண்டிருந்தது. அவனை நினைக்க எந்த காரணமும் தேவையில்லை. தானாய் மனதில் தோன்றும் அவன் முகம். அறுபது நிமிடங்களுக்கு ஒரு முறை கடிகார எண்களை தொட்டுச் செல்லும் மணி முள்ளை போன்று அவள் அமைதியாக இருந்தால் கூட நினைவுகள் வரும்.

தோழியின் தாடையை பற்றி நிமிர்த்தினாள் ஸ்டெல்லா.

"நீ வேணா போன் பண்ணி பேசு.. அவர் இப்ப மாறியிருக்கலாம் இல்ல?" என்றாள்.

"அவனாவது மாறுவதாவது.. எல்லா மிருகத்துக்கும் இரண்டு கொம்புதான் முளைச்சிருக்கும். ஆனா அவனுக்கு மட்டும் மூணு கொம்பு முளைச்சிருக்கு. அவன் ஒரு எருமை மாடு ஸ்டெல்லா.." இப்படிதான் தினமும் திட்டிக் கொண்டிருக்கிறாள். காரணம் இருக்கிறதோ இல்லையோ தினமும் ஒரு மணி நேரமாவது தன் வாய் வலிக்க பாலாவை திட்டினால்தான் அவளுக்கு திருப்தியே.

ஸ்டெல்லாவுக்கும் இது தினசரி தொடர்கதை பார்ப்பது போலாகி விட்டது. ஆரம்பத்தில் அவளுக்கு பாலாவின் மீது அதீத கோபம். ஆனால் தினமும் தோழி திட்டி திட்டி பாலாவின் மீது சிறிது பரிதாபப்படும்படி ஆக்கி விட்டாள்.

இருவரும் முதுகலை முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பில் இருந்து தொடரும் நட்பு. தோழியை பற்றி நன்கு அறிந்திருப்பவள் இவள்.

"பேபி.." பூர்ணிமாவின் கையை பற்றினாள்.

"ஒரு விசயத்துல தெளிவா இரு.. அவன் உனக்கு வேணும்ன்னா போ. போய் அவன்கிட்ட சமாதானம் பேசு. இல்லன்னா சாரி கேளு.. அப்படியும் இல்லன்னா மிரட்டு. அவன் உனக்கு வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டன்னா அவனை மறந்துடு.. அந்த ரிலேசன்ஷிப் வேணாம்ன்னு விலகி வந்துட்ட.. அதை பத்தி நினைச்சா உனக்குதான் மைன்ட் டிஸ்டர்ப் ஆகும். ஏற்கனவே உன் மார்க்ஸெல்லாம் ரொம்ப கம்மியாக்கிட்டு இருக்கு. இதுக்கு மேலயும் ரிஸ்க் வேணாம். மறந்துடு. பாரு.. இங்கே எத்தனை பசங்க உன்னை ரூட் விடுறாங்க.. அவங்க பக்கம் பார்வையை திருப்பு. முடியாதுன்னாலும் பரவால்ல. ஆனா விட்டு வந்த ஒருத்தருக்காக அரை பைத்தியமா மாறாத.. அப்புறம் நீ பைத்தியங்கறது கன்பார்ம் ஆகிடும்.!" என்றாள்.

பூர்ணிமாவுக்கு எல்லாம் புரிந்துதான் இருந்தது. ஆனால் மனதில் தானாய் தோன்றும் உணர்வுகளை என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.

"எல்லாம் இதனால வரும் பிரச்சனை.." பூர்ணிமாவின் தாலியை சுட்டிக் காட்டி சொன்னவள் "முறைப்படி எதுவா இருந்தாலும் செய். டைவர்ஸ் பண்ணிடு.. உன்னை நீயே டார்ச்சர் பண்ணிக்கறதை என்னால பார்க்க முடியல.!" என்றாள்.

பூர்ணிமா யோசித்தாள். "திங் பண்றேன்.!" என்றாள்.

அன்று மாலையில் அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது பூமாறன் போன் செய்தான்.

"ஹாம்.. மாமா.. சொல்லுங்க.." என்றவளிடம் "இந்த வாரத்துல பிரியாவுக்கு வளைகாப்பு நடத்தலாம்ன்னு பேசிட்டு இருக்கோம். நீ என்ன சொல்ற?" எனக் கேட்டான்.

இவளின் முடிவையும் அவன் கேட்டது பூர்ணிமாவுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

"உங்களுக்கு எந்த தேதி ஓகேவோ எனக்கும் அந்த தேதியே ஓகே மாமா.." என்றாள்.

"நான் கன்பார்ம் பண்ணிட்டு மறுபடியும் கூப்பிடுறேன்.." என்று அழைப்பை துண்டித்தவன் அன்று இரவில் தேதியை சொல்லி விட்டான்.

ராஜாவின் முகத்தில் பூரிப்பு குடி கொண்டிருந்தது.

"பின்னாடி கல்யாணம் பண்ண தம்பி கூட அவன் பொண்டாட்டிக்கு வளைகாப்பு நடத்துறான்.. ஆனா நீ.." பாலாவின் கம்பெனி வீட்டில் உணவை வைத்தபடி இழுத்தாள் செண்பகம்.

"தேவையுள்ளதை பேசுங்க அம்மா.. அவ கொழுப்பெடுத்து போனா அதுக்கு நான் காரணமா?" என்றான் எரிச்சலாக.

செண்பகம் யார் பக்கம் பரிந்துப் பேசுவாள்? அவளுக்கு இருவரும் வேண்டும். அவள் இருக்கையில் வீடு வந்த மகன் இப்போது இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டது அந்த தாய் மனதை வருத்தி எடுத்தது.

"பிரியாவுக்கு வளைகாப்பு செய்ய பேசியிருக்கோம்.. அடுத்த வாரம்.. பூரணியும் வரா.." என்ற அம்மா மகனின் முகத்தை பார்க்கலாம் திரும்பி நடந்தாள்.

பாலா யோசனையோடு அறையில் அந்த பக்கமும் இந்த பக்கமும் நடந்தான். பூமாறன் திருமணத்தின் போதே அவள் வந்து இருந்த நான்கைந்து நாட்களையும் கடக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். இப்போது என்ன செய்வது என்று குழம்பினான்.

"அவ பெரிய ரதி தேவதை.? ஆளும் அவ முகமும்.. ச்சை!" என்று காற்றோடு திட்டியவன் உணவை முடித்துக் கொண்டு படுத்து உறங்க ஆரம்பித்தான்.

வளைக்காப்புக்கு முன்னால் நாள் காலையிலேயே வந்து விட்டனர் முல்லை தம்பதியினரும் பூர்ணிமாவும்.

செண்பகம் பூர்ணிமாவை அணைத்துக் கொண்டாள். மௌனமாக கண்ணீர் சிந்தினாள். அத்தையின் கண்ணீர் அவளுக்கும் இதய வலியை தந்தது.

நலம் விசாரித்த பிறகு அவளை விலக்கி நிறுத்திய செண்பகம் "உட்காரும்மா.. காப்பி சாப்பிடுவ.!" என்று விட்டு கிச்சனை நோக்கி ஓடினாள்.

பிரியா மேடிட்ட வயிற்றோடு படிகளில் இறங்கி வந்தாள்.

"பெரியப்பா.. பெரியம்மா.." இருவரையும் அருகில் வந்து அணைத்துக் கொண்டாள். "நல்லா இரும்மா.." என்றாள் முல்லை.

பூர்ணிமாவின் அருகில் வந்து அமர்ந்தாள் பிரியா.

"படிப்பெல்லாம் நல்லா போகுதா?" எனக் கேட்டாள்.

"சூப்பரா போகுது.." என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தான் பாலா. பூர்ணிமா அவனை பார்த்ததும் தன் கண்களில் நெருப்பை கக்கினாள். அவனும் தன்னால் முடிந்த அளவுக்கு முறைத்துவிட்டு அவளை தாண்டி போனான்.

"போதும்.. இவ்வளவு முறைச்சா உடம்புக்கு ஆகாது.." பிரியாவின் கிண்டலில் திரும்பிய பூர்ணிமா முகத்தில் தன் வழக்கமான புன்னகையை படர விட்டாள்.

"ஹாஸ்பிட்டல் செக்கப்பெல்லாம் சரியா போய்ட்டு வந்தியா?"

"நான் மறந்தாலும் இவர் விடணுமே.." வெட்கத்தோடு சிரித்தவளை பார்க்கையில் பூர்ணிமாவுக்கு மனம் நிறைந்தது.

அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்த முல்லைக்குதான் குற்ற உணர்வாகவும், கவலையாகவும் இருந்தது. திருமணம் முடித்தும் தன் பெண் வாழாவெட்டியாக இருக்கிறாளே என்று தினமும் மனதுக்குள்ளேயே கரைந்துக் கொண்டிருந்தாள் அவள்.

பூர்ணிமாவுக்கு அவளது பழைய அறையே ஒதுக்கி தரப்பட்டிருந்தது. பாலாவின் அறைக்கு எதிரில் இருந்த அறை. "இங்கே வரும் போதெல்லாம் இவன் முகத்துலயேதான் விழிக்க வேண்டியதா இருக்கு.." கடுப்போடு முனகியபடியே தனது அறையின் கதவை திறந்தாள் பூர்ணிமா.

"முகத்துல விழிக்க கூடாதுன்னு நினைச்சா இங்கே வராம இருக்கணும்.." பாலாவின் குரலில் திரும்பினாள்.

"இவ பெரிய மகாராணி.. இவ வரான்னு நாங்க ஊரை விட்டு போகணுமோ? நாலு நாள் கெஸ்டா வந்தா கெஸ்ட் மாதிரி இருந்துட்டு போ.. தேவையில்லாம பேசிட்டு இருக்காது.!" என்றான் ஆத்திரத்தோடு.

பூர்ணிமா பற்களை கடித்தாள்.

"கெஸ்டா.? டேய் மாப்பிளை.. இந்த வீட்டுல எனக்கும் பங்கு இருக்கு. அதுவும் உன்னை விட இரண்டு மடங்கு பங்கு இருக்கு. வாய் இருக்குன்னு பேசிட்டு இருக்காத.. உடைச்சி வச்சிடுவேன்.!" என்றாள் மூக்கு சிவக்க.

கோபத்தில் பாலாவின் நரம்புகள் முறுக்கேறியது. ஆனால் அவளை ஒரு அறை அறைந்தால் அதன் பிறகு இந்த வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் அடியும், திட்டும் வாங்க வேண்டி வரும் என்பதால் பற்களை கடித்தபடி பின் வாங்கினான்.

"ரொம்ப ஆடாதடி.. குப்புற விழுந்து வாரிட போற!"

"நீ உன் வேலை என்னவோ அதை பாருடா.. நான் ஆடினா உனக்கு என்ன வலிக்குது? ஒரு வேளை அப்படி உனக்கு வலிச்சா நீ போய் கிணத்துல குதி. நான் ஏன் என் ஆட்டத்தை நிறுத்தணும்?" எனக் கேட்டவள் அவன் அடுத்துப் பேசும் முன் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

பாலாவும் தன் கதவை அறைந்து சாத்தினான்.

"வாய் மட்டும் வானம் நீளத்துக்கு வளர்ந்திருக்கு.." என்று திட்டினான்.

பூர்ணிமா எரிச்சலோடு தன் அறைக்குள் உலாவினாள்.

"இவனுக்கு நல்ல பாடம் கத்து தரணும்.." என்று சொல்லிக் கொண்டாள்.

"எனக்கு நீ பாடம் கத்து தரியா.? இருடா உனக்கு நான் கத்து தரேன்.. கதற விடுறேன் இரு..!" என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.

மதிய வேளைக்கு பிறகு உறவினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். மற்ற இரு வீட்டு குடும்பமும் கூட முழுதாய் வந்து சேர்ந்தனர். பூர்ணிமாவை நலம் விசாரித்தனர். கடமைக்கு அனைவரிடமும் பதில் சொன்னாள்.

"பஞ்சாயத்து வேணா பேசி பார்க்கலாமா?" எனக் கேட்ட பெரிய தாத்தாவை குழப்பமாக பார்த்தாள்.

"உங்களை சமாதானம் செய்ய.." என்றார் அவளையும் தூரத்தில் அமர்ந்திருந்த பாலாவையும் கை காட்டி.

"அதெல்லாம் வேணாம்.." என்ற பூர்ணிமா இவர்களின் கேள்விக்கு பதில் சொல்வதை விட அறைக்குள்ளேயே முடங்கலாம் என்றெண்ணி தன் அறைக்கே திரும்பி வந்தாள்.

அறையில் இருந்த திருமண புகைப்படத்தை பார்த்தாள். அவள் அறைக்குள் முதலில் வந்தபோது அதை பார்க்கவில்லை. யாரோ இப்போதுதான் அதை மாட்டி வைத்துள்ளார்கள் என்பதை யூகித்தாள்.

பெருமூச்சோடு கட்டிலில் விழுந்தாள். ஏன் பாலாவை பார்த்தோம் என்று இருந்தது அவளுக்கு.

"சரியான ஈவில்‌‌.." புகைப்படத்தை பார்த்து திட்டினாள்.

மீண்டும் அவள் கீழே வந்த போது வீடு மொத்தமும் உறவினர் கூட்டமாக இருந்தது. அவளுக்கு தெரியாதவர்கள் கூட நிறைய பேர் இருந்தார்கள்.

தூரத்தில் பாலா நின்றிருந்தான். சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அவனின் முப்பத்தாறு பற்களும் தெரிவது கண்டு அவளுக்கு எரிச்சலாக இருந்தது. எரிச்சலுக்கு காரணம் அவனின் பற்கள் அல்ல. அந்த பற்களை அவன் காட்டிக் கொண்டிருந்த ஆள். அழகான இளம் பெண் அவள். இதுவரை பார்க்காத முகம். இரு பக்க காதுகளில் இருந்தும் புகை வருவது போலிருந்தது பூர்ணிமாவுக்கு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN