குரங்கு கூட்டம் 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலாவையும் ரோஜாவையும் மாறி மாறி பார்த்த அர்விந்த் எழுந்து நின்றான்.

"ம்ம்.. ரோஜா.." என்றான்.

"இவங்க சந்தேகப்படுவாங்க ப்ரோ.." என்றவள் கண் காட்டியதும் தன் சுற்று சூழலை கண்டு சட்டென்று வாயை மூடிக் கொண்டான்.

மிருதுளா போனில் அனுப்பிய புகைப்படத்தை விடவும் அழகாக இருந்தாள் நிலா. அவளை அள்ளி அணைக்க கைகள் பரபரத்தது. ஆனால் தன் மீது வீசும் வாடையின் காரணத்தை நினைவு வைத்து அமைதியாக இருந்தான்.

வெங்காய மூட்டையின் மீதிருந்த சின்ன வடிவிலான கடிகாரத்தை கண்டவன் 'நாலு மணிக்கே எழுப்பி விட்டுட்டாளே.. இவங்க வேற இன்னைக்கு நைட்டெல்லாம் தூங்க விட மாட்டாங்களே..' என்று கவலைக் கொண்டான்.

"டீ ரெடி.!" என்றார் ஒருவர்.

"ஒரு நிமிசம் அண்ணா.. பாத்ரூம் வரைக்கும் போயிட்டு வரேன்.!" என்றவன் முகத்தை துடைத்தபடியே கிளம்பினான்.

"பாப்பா.." நிலாவின் அழைப்பில் திரும்பினான். புன்னகைத்தான். "நீதான் பாப்பா.." என்றான். அங்கிருந்து நகர்ந்தான்.

இதழ் விளையாடும் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள் ரோஜா. "நீ எப்படி பாப்பா இந்த கூட்டத்துக்குள்ள ஐக்கியமான? நேத்து நான் ஆசிரமத்துக்கு வந்து உன்னை தூக்கும் வரை அழுதுக்கிட்டுதான் இருந்த. ஆனா என்னை கண்டதும் அழுகையை நிறுத்திட்ட.. அதே போல இரண்டு மிருவோடும் சேர்ந்துட்ட.. இப்ப அர்வி கூடவும் பேசி சிரிக்கற.. ஏதாவது மாய மந்திரம் தெரிஞ்ச குழந்தையா நீ?" எனக் கேட்டாள்.

அவள் கூடத்திற்குள் வந்தபோது சிபி சந்தன வாசத்தில் இருந்தாள். அருகில் நின்றிருந்த மிருதுளா தன்னை மறந்து வாயை திறந்தபடி நின்றிருந்தாள்.

"உன் மிருது ஆன்டிக்கு இப்பவே கல்யாண கனவு வந்துடுச்சி போல.!" குழந்தையிடம் கிசுகிசுத்தாள் ரோஜா.

"மாம்மா.." சிபியையும், மிருதுளாவையும் மாறி மாறி பார்த்தபடி கை நீட்டி அழைத்தாள் நிலா.

சிபிக்கு தர்ம சங்கடமாக இருந்தது. எழுந்து ஓடி குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. ஆனால் அப்படி ஏதாவது செய்தால் தன் முன்பே நிலாவை கொன்று விடுவார்கள் என்றும் அவளுக்கு தெரியும். அதனால் தன் மனதை இரும்பாக்கிக் கொண்டு இருந்தாள்.

"மாம்மா.." ரோஜாவின் கைகளில் இருந்து துள்ளி குதித்தாள் நிலா. மிருதுளாவால் மேடையில் நிற்க முடியவில்லை. கீழே ஓடி வந்தாள். இவளும் சிபிக்கு நலங்கு பூசியதால் சந்தனம் கொஞ்சமாக கை விரல்களில் ஒட்டி இருந்தது. தனது சுடிதாரிலேயே துடைத்துக் கொண்டவள் நிலாவை தூக்கிக் கொண்டாள்.

"பாப்பும்மா.." என்று கொஞ்சியபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

"குழந்தைக்கு நீதான் அம்மாவா?" மிருதுளா அங்கிருந்து நகரும் முன் கேட்டாள் சிபியின் பாட்டி.

மிருதுளா இடம் வலமாக தலையசைத்தாள்.

"அப்புறம் ஏன் உன்னை ம்மான்னு கூப்பிடுறா.." பாட்டி சந்தேகத்தோடு கேட்டாள்.

"குழந்தை பாட்டி.. அவளுக்கு இன்னும் விவரம் வரல.. அப்படி விவரம் வந்ததும் என்னை அத்தைன்னு கரெக்டா கூப்பிடுவா.." என்றாள்.

"த்த.." நிலா தன் வலது கை கட்டை விரலை வாயில் வைத்தபடி சொல்லவும் உடல் சிலிர்த்து திரும்பினாள் மிருதுளா.

"அதேதான்.. அத்தை.." என்றுச் சொல்லி தந்தாள்.

பாட்டி நிலாவையும் அவளையும் விசித்திரமாக பார்த்து விட்டு நகர்ந்தாள்.

"உனக்கு சொல்லி தந்தா சொல்லுவ இல்ல? சாரிடா குட்டி.. எனக்குத்தான் அறிவே இல்ல.." என்றவள் "மாமா சொல்லு.!" என்றாள்.

"மாம்மா.." என்றாள் அழுத்தமாக நிலா.

"அட இதைதான் நீ ஆரம்பத்துல இருந்தே சொல்றியே.. அத்தை மட்டும் கத்துக்கோ.. போதும்.!" என்றாள்.

நிலா தலை சாய்த்து புன்னகைத்தாள். மிருதுளாவின் தோளில் முகம் புதைத்தாள். அவளின் சுடிதாரை தன் ஜொள்ளால் ஈரம் ஆக்கினாள்.

தன் முன் காப்பியை நீட்டியவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா.

வேலையாள் ஒருவர் நின்றிருந்தார். "காப்பி எடுத்துக்க பாப்பா.!" என்றாள்.

நிலா இவனை பார்த்துவிட்டு மீண்டும் மிருதுளாவின் தோளிலேயே மறைந்துக் கொண்டாள்.

அர்விந்தை தேடியது மிருதுளாவின் கண்கள். காப்பியை எடுத்துக் கொண்டவள் ஊதினாள்.

நிலா காப்பியை பறிக்க முயற்சித்தாள். தன் கையை பின்னால் இழுத்தாள் மிருதுள்.

"ஆற வைக்கிறேன்ம்மா. இது ஆற எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியலையே!" என்றாள் கவலையோடு.

"பால் புட்டியை எடுத்துட்டு வா.. நான் பால் ஊத்தி கொண்டு வரேன்.!" அர்விந்தின் குரலில் நிமிர்ந்தாள் மிருதுளா.

நிலாவும் படக்கென்று திரும்பினாள். "பாப்பா.. பாப்பா.." என்று துள்ளிக் குதித்தாள். மிருதுளாவின் கையில் இருந்த சுடு காப்பி அவளின் கைகளை விட்டு தவறி அவளின் காலின் மீது விழுந்தது. குழந்தை விழுந்து விடுவாளோ என்று பயந்து இடது கையால் குழந்தையை இறுக்க பற்றி இருந்தாள். அப்படியிருந்தும் கூட அவளின் துள்ளலை இவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

காப்பி மிருதுளாவின் கை தவறிய கணமே தன் கையில் இருந்த காப்பி தட்டை பக்கத்திலிருந்த மேஜையின் மீது வைத்து விட்டான் அர்விந்த். துள்ளிய நிலாவை பிடுங்கிக் கொண்டான். நிலாவை தரையில் நிறுத்தியவன் குனிந்து தோழியின் கால்களை சோதித்தான்.

"முட்டாள்.!" திட்டியவன் "போய் பச்சை தண்ணீர்ல காலை வை.." என்று அவசரப்படுத்தினான்.

சுற்றி இருந்த கூட்டம் இருவரையும் சந்தேகத்தோடு பார்த்தது.

அர்விந்தின் தோளை பற்றியபடி மிருதுளாவின் காலை பார்த்தாள் நிலா. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எதற்காக இந்த அர்விந்த் பாப்பா இப்படி திட்டுகிறான் என்ற காரணத்தை தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆவல் இருந்தது.

தன் முன் நின்றிருந்த நிலாவின் தோளை பற்றி திருப்பியவன் "நீ ஏன் இப்படி துள்ளுற? பாரு உன்னாலதான் அத்தை கால்ல காப்பி கொட்டுடிச்சி.!" என்றான் கோபமாக.

நிலா அவனை பார்த்துவிட்டு உதடு பிதுக்கினாள்.

அவள் அழும் முன் அவளை வாரி தூக்கி அணைத்துக் கொண்ட மிருதுளா "நீதான் முட்டாள் அர்வி.." என்று சிறு குரலில் சிடுசிடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

அர்விந்த் தன்னை பார்த்து நின்றவர்களை பார்த்தான். பின்னர் காப்பி தட்டை கையில் எடுத்தான்.

"வேலைக்காரனுக்கு ஏன் இந்த பொண்ணு மேல இவ்வளவு பாசம்?" சந்தேகமாக கேட்டான் ஒருவன்.

"இந்த இடத்துல யார் இருந்தாலும் இப்படி பண்ணியிருப்பேன் நான். இதுக்கு பேர் பாசம் இல்ல. மனிதாபிமானம்.!" என்று மனிதாபிமானத்தை தான்தான் குத்தகைக்கு எடுத்தது போல சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அர்விந்த்.

மிருதுளா தண்ணீரில் கொஞ்ச நேரம் காலை நனைத்தாள்.

"தாத்தை.." என்ற நிலா அவளின் காலை தொட முயன்றாள்.

"நீ வேற ஏன் நிலா? இது நல்லாகிடும் விடு.!" என்றவள் குழந்தையை தூக்கிக் கொண்டு குளியறையில் இருந்து வெளியே வந்தாள்.

அதிகாலை ஐந்து மணி..

ஸ்வேதாவும் விஜியும் காலியாய் இருந்த அறையையெல்லாம் சோதித்துக் கொண்டிருந்தார்கள்.

"இந்த ரூம்ல யாரும் இல்ல.!" என்ற ஸ்வேதா அறையினுள் நுழைந்தாள். அவிழ்த்து எறியப்பட்ட உடைகள் சில தரையில் கிடந்தன.

அலமாரியின் ஒரு பக்க கதவு திறந்திருந்தது. ஜன்னலை மூடி விட்டு வந்தாள் ஸ்வேதா. விஜி அறையின் கதவை பூட்டினான்.

"அஞ்சி நிமிசம்.." என்றவன் அங்கிருந்த அலமாரிகளையும், மேஜைகளையும் வேகமாக பரிசோதிக்க ஆரம்பித்தான்.

ஸ்வேதா பாதியாய் திறந்து கிடந்த பெட்டிகுள்ளும், பேக்குக்கிற்குள்ளும் தேடினாள். விலை உயர்ந்தது என்று அவள் எண்ணியது அனைத்தையும் எடுத்து தனது மடியில் கட்டிக் கொண்டாள். மறுபக்கம் விஜி அலமாரியின் உள் அறை சாவிகளை தேடி எடுத்து அதனுள் இருந்த நகைகளை எடுத்து தன் பாக்கெட்டில் திணித்துக் கொண்டிருந்தான்.

"சீக்கிரம் ஸ்வேதா.. யாராவது வந்துட போறாங்க.." என்று கிசுகிசுத்தான் விஜி.

அதே நேரத்தில் அங்கிருந்த குளியலறையிலிருந்து சத்தம் ஏதோ கேட்டது. ஸ்வேதாவும் விஜியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

"இந்த பக்கம் வா.!" ஸ்வேதாவை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த ஜன்னல் திரையின் பின்னால் ஒளிந்தான் விஜி. கால் வரை மூடிய திரைக்கு ஒரு நன்றி சொல்லிக் கொண்டவன் அலமாரியை பார்த்தான். உள்ளிருந்து பார்க்கும்போது அறையில் அத்தனையும் பார்வைக்கு தெரிந்தன. அலமாரி மூடிதான் இருந்தது. ஆனாலும் வருபவள் நகையை தேடினால் மாட்டிக் கொள்வார்களே என்று பயமாக இருந்தது.

விசிலடித்தபடியே குளியறைக்குள் இருந்து வந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர்.

"மாட்டிக்காம இருக்கணும்.!" என்று சொல்லிக் கொண்டான் விஜி.

வந்தவர் சுற்றம் முற்றும் பார்த்தார்.

"கதவை லாக் பண்ணேனே.. வர வர ஞாபக மறதி அதிகமாகுது.!" என்றவர் தன் அரையில் இருந்த துண்டை உருவி கட்டிலின் மீது எறிந்தார். அவசரமாக ஸ்வேதாவின் கண்களை பொத்தினான் விஜி. அவனும் கண்களை மூடிக் கொண்டான்.

நொடிகள் சில கடந்த பிறகு ஒற்றை கண்ணை திறந்துப் பார்த்தான் விஜி. அந்த மனிதர் பேன்டிற்கு ஜிப் போட்டுக் கொண்டிருந்தார். ஸ்வேதாவின் விழிகளின் மீதிருந்த கையை இறக்கினான் இவன்.

அந்த மனிதர் வெளியே நடந்தார்.

"அவர் ரூமை பூட்டாம போகணும்.!" கண்களை மூடியபடி கடவுளிடம் கெஞ்சினாள் ஸ்வேதா. அவர் மறுபடி வரும்வரை காத்திருப்பதில் அவளுக்கு கவலை இல்லை. ஆனால் இப்போதே வெளியே சென்றால் இன்னும் நான்கு அறைகளில் செல்வம் தேடலாம் என்பது அவளின் எண்ணம். அவளின் வேண்டுதலோ இல்லை அந்த மனிதரின் சோம்பேறிதனமோ, அறை மூடப்படவில்லை.

நிம்மதி பெருமூச்சோடு வெளியே வந்த இருவரும் அடுத்த அறையை நோக்கி நடந்தனர்.

சிபிக்கு நலங்கு முடிந்தது.

"கூட்டி போய் குளிக்க வச்சி கூட்டி வாங்கம்மா.!" ரோஜாவிடமும், மிருதுளாவிடமும் சொன்னாள் பெரியம்மா. இருவரும் சிபியை அழைத்துக் கொண்டு நடந்தனர்.

"இந்த போட்டோஸையெல்லாம் பத்திரம் பண்ணி வை.." சிபியிடம் கிசுகிசுத்தாள் மிருதுளா.

சிபி அவளை முறைத்தாள். நிலாவை வாங்கிக் கொண்டாள். நிலாவின் கன்னங்களில் முத்தம் தந்தாள். நிலா கிலுகிலுப்பை போல சிரித்தாள்.

மூவரும் மேல் தளத்திற்கு வந்தபோது கொட்டாவி விட்டபடியே தனது அறை கதவை திறந்தான் பிரேம். தூரத்தில் எதிரில் இருந்தவர்களை பார்த்தவன் என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் குழம்பினான். இவனின் பதிலுக்கு காத்திராமல் அவர்கள் அறைக்குள் சென்று விட்டனர்.

"நீ போய் குளி சிபி.!" என்ற மிருதுளா கட்டிலில் சென்று அலுப்பாக அமர்ந்தாள்.

"காலங்காத்தாலேயே இவ்வளவு சலிப்பு. இன்னைக்கு நாள் விளங்கினா மாதிரிதான்.!" என்றாள் சிறு எரிச்சலோடு.

"சம்பத்தோட ஆட்களை காணோம்.!" அடியாட்கள் சொன்னது கேட்டு குழம்பினான் சித்து. தூங்கிக் கொண்டிருந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்துப் பார்த்தால் இவர்கள் இப்படி சொன்னார்கள்.

"எப்படி காணாம போவாங்க?" எனக் கேட்டான் இவன்.

"நேத்து நைட்ல இருந்தே நான் அவங்களை பார்க்கல.!" என்றான் இன்னொருவன்.

தலையை கோதி விட்டுக் கொண்ட சித்து "அவங்க ரூம்ல பார்த்திங்களா?" எனக் கேட்டான்.

"ரூம் காலியா இருக்கு.. அதுல ஒருத்தன் எனக்கு பிரெண்ட். அவனுக்கு போன் பண்ணேன். ரீச் ஆகல.!" முன்னால் நின்றிருந்தவன் சொன்னான்.

"எங்கே போயிருக்க போறாங்க? போய் இன்னொரு முறை தேடி பாருங்க.!" என்றவன் அவர்களை அனுப்பி விட்டு கதவை சாத்தினான்.

அதே நேரத்தில் அலமாரி ஒன்றை திறக்க முயன்றான் விஜி. திறக்க சிரமமாக இருந்தது. பற்களை கடித்துக் கொண்டு திறந்தவன் உள்ளே சாய்த்து வைக்கப்பட்டிருந்த பிணங்களை கண்டு உறைந்து போனான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN