பௌர்ணமி 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரியா பூர்ணிமாவின் அருகே வந்தாள்.

"அத்தையோட சித்தியும் சித்தப்பாவும் உன்னை பார்க்கணும்ன்னு சொன்னாங்க.!" என்று சொல்லி அழைத்தாள்.

வாசலில் இருந்த பந்தலில் தாறுமாறாக கிடந்தது பிளாஸ்டிக் நாற்காலிகள். அவைகளை தாண்டி பூர்ணிமாவை அழைத்துச் சென்றாள்.

வாசலின் முன்னால் இருந்த மதில் சுவரோரம் இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள் அவர்கள். பூர்ணிமா வந்ததும் அவளுக்கு இருக்கையை கை காட்டினாள் செண்பகம்.

"இவதான் என் மூத்த மருமக பூர்ணிமா!" என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.

செண்பகத்தின் சித்தப்பா வயதானவராக இருந்தார். கணவனுக்கும் மனைவிக்கும் எழுபதுக்கும் மேல் இருக்கும் என்று யூகித்தாள் பூர்ணிமா.

"நல்லாருக்கிங்களா தாத்தா? நல்லாருக்கிங்களா பாட்டி?" மரியாதை குறைவாய் எண்ணி விடக் கூடாது என்பதற்காக கேட்டாள்.

அந்த பாட்டி பூர்ணிமாவை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள். தாத்தாவின் கண் கண்ணாடியில்தால் பார்வையை வைத்திருந்தாள் பூர்ணிமா. ஆனாலும் முதுகின் பின்னால் தூரத்தில் ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டிருந்த பாலாதான் உறுத்திக் கொண்டிருந்தான். முதுகு பக்கம் கண்கள் இல்லாமல் போனதற்காக வருந்தினாள் பூர்ணிமா.

பாட்டி தன் பையிலிருந்த பாக்கு ஒன்றை எடுத்து மடக்கென்று கடித்தாள்.

"புருசனை விட்டுட்டு ஓடி போயிட்டியாமே.. ஏம்மா.. எங்க பேரனுக்கு என்ன குறைச்சல்?" பாட்டியின் கேள்வி செண்பகத்தை சங்கடத்தில் ஆழ்த்தியது. ஆனால் பூர்ணிமாவுக்கோ கடுப்பை தந்தது. அத்தைக்காக வாயை மூடிக் கொண்டிருந்தாள்.

"ஓடி போகல.. பிரிஞ்சி இருக்கேன்.!" தன்மையாக சொல்ல முயன்றவளை பைத்தியமோ என நினைத்தபடி பார்த்த அந்த பாட்டி செண்பகத்திடம் திரும்பினாள்.

"இரண்டு மூனு வருசம் ஆகுதுன்னு சொல்ற.. இன்னும் ஏன் இப்படியே விட்டு வச்சிருக்க? வெட்டி அனுப்பிட வேண்டியதுதானே?" எனக் கேட்டாள் கோபத்தோடு.

பூர்ணிமா தன் இதழை கடித்தாள். தேவையில்லாமல் கோபம் வந்தது. அந்த கிழவியின் சங்கை கடித்து துப்பி வேண்டும் போல் வெறி வந்தது.

"ஏன், என்னை அத்து விட்டுட்டு என் புருசனை நீங்க கட்டிக்க போறிங்களா?" அவளை மீறிக் கொண்டு வந்தது வார்த்தைகள். வெளி வந்து விட்ட வார்த்தைகளுக்காக வெகுவாய் மனம் வருந்தினாள். வார்த்தைகளை திருப்பி வாங்கிக் கொள்ள முடியாமல் போனது அவளுக்கு நஷ்டம்தான்.

செண்பகம் அதிர்ச்சியோடு மருமகளைப் பார்த்தாள். பிரியா வாயை பொத்தினாள்.

பாட்டி எழுந்து நின்றாள்.

"கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திட்டு இருங்கிங்களா?" பாட்டியின் கத்தலில் சுற்றியிருந்த அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.

பூர்ணிமா குனிந்த தலை நிமிரவில்லை.

"சித்தி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்களேன்.!" செண்பகம் கெஞ்சினாள்.

"உன் மருமக வாயை பார்த்தியா? இவளோட அகங்காரத்துக்கு எவன்கிட்டயுமே கூறு எடுக்க மாட்டா.." பாட்டி மேலும் திட்டியது கேட்டு பாலாவும் பூமாறனும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

"என்னாச்சி?" பூமாறன் கவலையோடு விசாரித்தான். பிரியா தயக்கத்தோடு நடந்ததை விவரித்தாள்.

பாலா பூர்ணிமாவை முறைத்தான்.

"வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கக்கிட்ட எப்படி பேசணும்ன்னு கூட தெரியாதா?" பொதுவாய் முணுமுணுத்தான்.

"விருந்தாளின்னா விருந்தாளி மாதிரி நடந்துக்க சொல்லு.. என் விசயத்துல தலையிட வேணாம்.." என்ற பூர்ணிமாவின் தோளைப் பற்றினாள் முல்லை.

"ஏன் பூரணி.. கொஞ்சம் அமைதியா இரேன்!" என்றாள்.

"அத்து விடணும்ன்னு சொல்றாங்கம்மா.. நான் இவங்ககிட்ட ஆலோசனை கேட்டேனா?" என்றாள் இவள் எரிச்சலாக.

முல்லை நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.

சுற்றியிருந்தவர்கள் தங்களின் வாய்க்கு வந்தது போல் பேச ஆரம்பித்தார்கள்.

"பாட்டி கேட்டதுல என்ன தப்பிருக்கு? புருசனை விட்டுட்டு ஊர் மேஞ்சிட்டு இருப்பவதானே இவ.. இவளை அத்து விடுறதுதானே சரி!" என்றார்கள் சிலர்.

"இவன் யோக்கியமா இருந்தா அவ ஏன் விட்டுட்டு போறா? அத்து விட்டுட்டுடா அதுக்கு மேலாவது அவளுக்கு நிம்மதியான வாழ்க்கை அமையும்!" என்றனர் பெரிய தாத்தா வீட்டினர்.

பாலாவுக்கும், பூர்ணிமாவுக்கும் கோபம் வந்தது.

"தயவு செஞ்சி போய் வந்த வேலையை பார்க்கறிங்களா? எங்க அண்ணனும், பூரணியும் உங்ககிட்ட பஞ்சாயத்து வைக்க சொல்லி கேட்டாங்களா? தேவையில்லாம எதுக்கு பேசுறிங்க?" எரிந்து விழுந்த பூமாறன் "உங்களையெல்லாம் கூப்பிட்டு வச்சி ஒரு விழா கூட நடத்த முடியாது போல.!" என்று முணுமுணுத்தான்.

ஆனாலும் வந்தவர்களின் வாய் நிற்கவில்லை. கண்டதையும் பேசினார்கள்.

"டேய் பேரான்டி.. நீ என்னடா சொல்ற? ஒன்னு இவளை அடக்கி வீட்டோட வை. இல்லன்னா இவளை அத்து விடு. என் மகன் பேத்தியை உனக்கே கட்டி வைக்கிறேன்!" என்றாள் செண்பகத்தின் சித்தி.

கோபத்தில் பூர்ணிமாவுக்கு கண்கள் கூட சிவந்து விட்டது.

"பூரணி, வா‌ நாம போயிடலாம்!" அவளின் கைப்பிடித்து இழுத்தாள் பிரியா.

"முடியாது!" பற்களை கடித்தபடி சொன்னவளை பயத்தோடு பார்த்தாள் அவள்.

"இந்த கிழவியா நானான்னு இன்னைக்கு முடிவு பண்ணிடலாம்.!" என்றவளிடம் "அவங்க கெஸ்டா வந்திருக்காங்க பூரணி.. நாளைக்கு அவங்க போயிடுவாங்க.. அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்க.. இந்த வீட்டுல நடக்கும் முதல் வளைகாப்பு இது!" என்று கெஞ்சினாள் பிரியா.

பூர்ணிமா திகைத்துப் போய் அவளை திரும்பிப் பார்த்தாள். "கெஸ்ட்ன்னா எது வேணாலும் பேசலாமா? முதல் வளைகாப்பு?? இதுக்கு என்ன அர்த்தம் பிரியா? நீயும் என்னை வாழாவெட்டின்னு சொல்லி காட்டுறியா?" பிரியாவுக்கு மட்டும் கேட்கும்படிதான் கேள்விகளை கேட்டாள். ஆனாலும் அருகில் இருந்த பாலாவுக்கு அனைத்தும் கேட்டது.

"போதும்.." என்றான் அதட்டலாக.

"எதுவா இருந்தாலும் விஷேசம் முடிஞ்ச பிறகு பேசிக்கலாம்.." என்று மற்றவர்களிடம் சொன்னவன் "சாரி பாட்டி.. என்னால உங்க பேத்தியை கல்யாணம் பண்ணிக்க முடியாது. இரண்டரை வருசம் முன்னாடி என் தம்பிக்கு இதே பேத்தியைதான் எங்க அம்மா பொண்ணு கேட்டு வந்தாங்க. ஆனா அவன் செய்ற வேலை பிடிக்கல உங்களுக்கு. அதை அப்படியே விடாம, என் தம்பியை கேவலமா பேசியிருந்திங்க.. இந்த இரண்டரை வருசத்துல உங்க மனசு இப்படி மாற காரணம் என்ன? என்கிட்ட காசு இருக்குன்னா?" எனக் கேட்டான்.

பாட்டி அதிர்ச்சியில் வாயை மூடிக் கொண்டாள். செண்பகம் நாக்கை கடித்தாள். 'வில்லிக்கு ஏத்த வில்லன்.. அவளோட நாக்கும் இவனோட நாக்கும் ஒரே மாதிரிதான் வேலை செய்யுது!' என்று நினைத்தாள் சிரிப்போடு. இரண்டரை வருடங்களுக்கு முன்பு நடந்ததை அவள் மறந்தே விட்டாள். பாட்டி பேத்தியை மணம் முடித்து தருகிறேன் என்று சொன்ன போதுதான் அந்த விசயமே நினைவுக்கு வந்தது. ஆனாலும் அதனால் மனதில் காயம்தான் கூடியது‌. பெரியோரை மரியாதை குறைவாக நடத்த கூடாது என்று நினைத்தாலும் கூட மகனின் கேள்வியில் தன் இதயத்தின் ரணம் ஆறுவதை உணர்ந்தாள். ஆயிரம்தான் சொன்னாலும் தானும் ஒரு சராசரி மனுசிதான் என்பதை அந்த கணம் உணர்ந்து விட்டாள் செண்பகம்.

"என்னடா.. நீ இப்படி பேசற?" பாட்டி தடுமாறியபடி கேட்டாள்.

"யாரும் யோசிக்காம இரண்டாம் தாரமா கட்டி தர மாட்டாங்க. அதுவும் சொந்த பொண்டாட்டியை வலுக்கட்டாயமா துரத்தி விட சொல்லவும் மாட்டாங்க. ரொம்ப தப்பா யோசிக்கிறிங்க பாட்டி.. உங்க அனுதாபம், அறிவுரை எதுவும் எங்களுக்கு தேவை இல்ல.!" என்ற பாலா வீட்டை நோக்கி நடந்தான். கூட்டம் ஏதேதோ முணுமுணுத்தபடி அங்கிருந்து நகர்ந்தது.

பாட்டி பூர்ணிமாவை வெறித்தபடி தன் வெத்தலை பையை இறுக்கமாக பற்றினாள்.

"இங்கிருந்து போகலாம்.!" என்றாள்.

"சித்தி.. அவங்க ஏதோ சின்ன பிள்ளைங்க.. அவங்க சொன்ன எதையும் மனசுல வச்சிக்காதிங்க.!" என்றாள் செண்பகம்.

பூர்ணிமாவை அங்கிருந்து இழுத்துச் சென்றாள் பிரியா.

"இருக்கறதை நீயும் இன்னும் மோசமாக்காத!" என்றாள் வீட்டுக்குள் வந்த பிறகு.

"ஆனா அந்த.."

"போதும் பூரணி.. நாலு மனுசங்க நாலு விதமா பேசதான் செய்வாங்க.. உன்னால ஹேண்டில் பண்ண முடியலன்னா நீ ஏன் தனியா போய் இருக்க?" எனக் கேட்டவள் பூர்ணிமா பதில் சொல்லும் முன்பே அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

"பிரியா.." ஓடிச் சென்று அவளின் கையை பற்றி நிறுத்தினாள். "நான் உன்னை ஹர்ட் பண்ண நினைக்கல.." என்றாள் மன்னிப்பு கோரும் விதமாக.

பிரியா அவளின் கையை விலக்கினாள்.

"இந்த விசயத்துல நீயும் உன் புருசனும் ஒன்னேதான். உன்னை பத்தி ஏதாவது பேச ஆரம்பிச்சா கெட்ட வார்த்தையில் எங்களை திட்டிட்டு போவாரு அவரு. எனக்கு மேரேஜ் ரொம்ப சிம்பிளா நடந்தது. இந்த வளைகாப்பாவது விழாவா நடக்கட்டுமேன்னு ஆசை பட்டேன். ஆனா அதுவும் தப்புன்னு இப்ப நல்லா தெரிஞ்சிடுச்சி. நான் ஒன்னும் உன்னை குழந்தை பெத்துக்கு வேணாம்ன்னு சொல்லல.." என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டாள்.

பூர்ணிமா தலையை பற்றினாள். 'சின்ன சின்ன வார்த்தைகள் கூட மற்றவர்களை பாதிக்கும்ன்னு புரிஞ்சிக்க மாட்டியா பூரணி?' என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

சோகத்தோடு தனது அறைக்கு வந்தாள். அவளின் கட்டிலில் அமர்ந்திருந்தான் பாலா.

"இங்கே என்ன பண்ற?" கையை கட்டிக் கொண்டு கேட்டாள் இவள். எழுந்து நின்றவன் இவளை நோக்கி வந்தான்.

"உன்னால எப்பவும் பிரச்சனை மட்டும்தான் செய்ய முடியுமா?" அவனின் கேள்வி செத்துப் போயிருந்த இதயத்தையும் கூறு போடுவது போலிருந்தது. பிரச்சனைக்கு தான் காரணம் இல்லை என்று கத்த நினைத்தாள்.

"நான் எதுவும் செய்யல.!" சிறு குரலில் சொன்னாள்.

சிரித்தான் அவன்.

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த வீட்டுல ஒரு நல்ல விசயம் நடக்குது. அது பொறுக்கல உனக்கு.!" என்றவன் அவளை தாண்டி வெளியே நடந்தான்.

பூர்ணிமாவின் விழிகளில் இருந்த கண்ணீர் கன்னங்களில் இறங்கியது. உடனே துடைத்துக் கொண்டாள்.

"அவன் எப்பவும் இப்படிதான். எல்லாம்‌ முடிஞ்ச பிறகும் என்னத்தை எதிர்பார்க்கற நீ?" என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

பாலா‌ தன் அறையின் கதவின் மீது சாய்ந்து‌ நின்றான். சண்டை போடுவதும், பிரிந்திருப்பதும் கூட வேண்டா வெறுப்பாகவேனும் சகித்து போகும்படி இருந்தது. ஆனால் அத்து விடுவது.. அவனால் யோசிக்கவும் முடியாத விசயமாக இருந்தது. மனைவி என்று வரும் இடத்தில் எல்லாம் கோபத்தோடாவது பூர்ணிமா என்று எழுதினால்தான் திருப்தியாக இருந்தது அவனுக்கு. சின்ன பாட்டியின் மீது கோபமாக வந்தது.

செண்பகமும் மரிக்கொழுந்தும் கெஞ்சி கூத்தாடி அந்த பாட்டியை நகர விடாமல் எப்படியோ தடுத்து விட்டனர். பிரியாவின் வளைகாப்பில் குறை இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.

ஆனால் பிரியாவின் மனதில் குறை வந்து விட்டது. அவளுக்கு பாலாவை போலவே பூர்ணிமாவையும் பிடிக்கவில்லை. இருவரும் கருந்தேளின் கொடுக்கை போல நாக்கை உடையவர்களாக இருப்பதை புரிந்துக் கொண்டவளுக்கு பூமாறன் மீது இப்பது ஆயிரம் மடங்கு காதல் வந்து விட்டிருந்தது.

முல்லையும் ராஜாவும் தனி தனியாய் மனம் நொந்துப் போய் இருந்தார்கள். ராஜாவுக்கு பிரியாவின் வளைகாப்பும் முக்கியம். பூர்ணிமாவின் தன்மானமும் முக்கியம்.

பாலா இருளும்‌ வானத்தை பார்த்தபடி பால்கனியில் நின்றிருந்தான். அவனின் பின்னால் சலசலப்பு கேட்டது. திரும்பினான். பூர்ணிமா நின்றிருந்தாள்.

"என்ன?" என்றான் சந்தேகமாக.

"ரொம்ப தொல்லையா இருக்கு.. டைவர்ஸ் பெஸ்டுன்னு தோணுது.. ஊர் வாயிலாவது விழாம இருக்கலாம்.!" கையை கட்டியபடி சொன்னவளை உணர்வுகள் ஏதுமின்று பார்த்தான்.

"என்னவோ பண்ணு.!" என்றவன் மீண்டும் இந்த பக்கம் திரும்பிக் கொண்டான்.

"உனக்கு என்னை சுத்தமா பிடிக்கலதானே?" அவளின் கேள்வியில் கோபத்தோடு திரும்பினான்.

"இன்னும் எத்தனை பழி போடுவ?" எனக் கேட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN