பௌர்ணமி 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அருகில் வந்து பூர்ணிமாவின் தோளைப் பற்றினான் பாலா.

"உன்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு.!" என்றான் உரத்த குரலில்.

அவனின் கையை தட்டி விட்டாள் அவள்.

"ரொம்ப பிடிச்சா செஞ்ச தப்புக்கு சாரி கேட்க மனசு வரணும்.."

பாலா முறைத்தான். "என் உயிரை நான் விரும்புவதை விட அதிகமா நான் உன்னை விரும்புறேன். அதுக்காக என் தன்மானத்தை அடமானம் வச்சிட்டு வந்து உன் கால்ல விழுவேன்னு மட்டும் நினைச்சிடாத.. ஏனா உன் புத்தி அப்படி.!" என்றான் ஆத்திரத்தோடு.

கசந்த புன்னகையோடு இருண்ட வானம் பார்த்தாள். மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் சில அவளின் கண்மணியில் பிம்பமாக விழுந்து அவனின் ரசனைக்கு உணவூட்டின.

"ஒருவேளை நான் இப்ப இறந்துப் போயிட்டேன்னா உன்னால அதை தாங்கிக்க.." கேட்கும் முன்பே அவளின் அருகே இருந்த சுவரில் மோதியது அவனின் கை விரல்கள். ஓங்கி குத்தியதில் ஐந்து விரல் முட்டிகளிலும் காயம் உண்டாகி விட்டது.

"என்னை சித்திரவதை செய்றதுல உனக்கு என்ன லாபம் பூர்ணி?" அதட்டிக் கேட்டான்.

பூர்ணிமா அவனின் கை விரல் முட்டிகளை வெறித்தாள்.‌ கண்ணீரை அடக்க நினைத்ததில் கண்கள் இரண்டும் எரிவது போலிருந்தது.‌

"நான் கெட்ட எண்ணங்களை கொண்டவ.. உனக்கு என் மேல கொலை வெறி.. அப்புறம் ஏன் என்னை இன்னமும் நேசிக்கற பாலா? வெறுத்துட்டு உன் பாட்டி சொன்ன பொண்ணை கட்டிக்க வேண்டியதுதானே?" எனக் கேட்டாள்.

பாலாவுக்கு தொண்டையிலேயே வார்த்தைகள் சிக்குண்டன. தலையை கோதி கொண்டான்.

"உன் மேல கோபம் இருக்குதுங்கறதுக்காக என்னால என் லவ்வை திருப்பிக்க முடியாது பூர்ணி. இட்ஸ் ப்யூர்.. என் ஹார்ட்ல எப்பவும் நீ மட்டும்தான் இருப்ப.. உன்னை வெறுத்து ஒதுக்கிட்டு இந்த உலகத்தை விட்டே ஓடி போனாலும் கூட எப்பவும் என் மனசு உனக்காக மட்டும்தான் துடிக்கும்.." என்றான். இதை ஏன் அவளிடம் சொல்லுகிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை. அவ்வளவு கோபம் அவள் மீது. அதையும் தாண்டி ஏன் இந்த காதல் என்றும் புரியவில்லை.

பூர்ணிமாவின் விழிகளில் இருந்து இரு துளி கண்ணீர் விழுந்தது.

"உன் லவ்ன்னா உசத்தி.. உன் பீலிங்ஸ்ன்னா உசத்தி. ஆனா என் லவ், என் பீலிங்ஸ் மட்டமா பாலா?" என்றாள் உடைந்த குரலில்.

அவளின் முகத்தை காண முடியவில்லை அவனால். இதயத்தின் மேல் சுத்தியலை வைத்து அடிப்பது போலிருந்தது. அவள் சொல்ல வந்தது அவனுக்கு விளங்கவில்லை.

"வெறும் மூணு நாலு மாசம் என்னோடு வாழ்ந்த நீ.. மூணு வருசமா லவ் பண்ற.. அவ்வளவுதான். அதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ற.. அப்படின்னா விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அப்பா அப்பான்னு கற்பனையில் நான் உருவாக்கி வச்சிருந்த ஒரு உருவம் உயிரோடு என் முன்னால வந்து நின்னு, என் காலை பிடிச்சி கதறி அழுது, என் கையால கெட்டுப் போன சாதத்தை சாப்பிட்டு, நான்தான் அவரோட பொண்ணுன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம செத்து போனா.. எனக்கு எப்படி இருக்கும்ன்னு ஏன் நீ யோசிக்க மாட்டேங்கிற? உனக்கு என் மேல இருக்கும்படிதான் எனக்கும் என் அப்பா மேல கோபம் இருக்கு. ஆனா அதுக்காக அவர் மீதான என் பாசம் பொய்யாகாது. அவர் நல்ல அப்பாவா இல்ல. நல்ல புருசனா இல்ல. ஆனா நான் ஒரு சாதாரண மனுசி பாலா. ஐ ஹேவ் பீலிங்ஸ்.. இன்னைக்கு நீயும் நானும் ஒரே இடத்துலதான் இருக்கோம். என் மேலான உன் கோபம் கம்மி. என் அப்பா மேலான உன் கோபம் அதிகம்ன்னு மறுபடியும் ஆரம்பிச்சி வைக்காத.. அதிகமோ கம்மியோ எல்லோரோட பீலிங்ஸ்ம் உண்மைதான்.!" என்றவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவனின் அறை கதவை திறக்க எண்ணி கைப்பிடியில் கரம் பதித்தாள். அவளின் கரத்தின் மீது பதிந்தது பாலாவின் கரம். நிமிர்ந்தாள். மிகவும் அருகில் நின்றிருந்தான்.

"உன் தப்பால எந்த லாஸும் வரல பூர்ணி!" என்றான் மென்மையாக.

"பாலா.." சோகமாக திரும்பினாள். கதவில் முதுகு சாய்ந்து நின்றவள் "இங்கே தப்பும் லாஸும் மேட்டர் இல்ல.. பாசம்தான் மேட்டர்.. அவர் கெட்டவர். செத்துப் போயிட்டார். அதுக்காக நான் அவரை திட்டிட்டா உன் மனசு குளிர்ந்திடுமா? இல்ல அவர் செஞ்ச தப்பு இல்லன்னு ஆகிடுமா? பேசி சலிச்சிடுச்சி பாலா. இது எப்பவும் முடியாது. நாம பிரிஞ்சிடுறதுதான் நல்லது.. இப்பதான் புரிஞ்சது எனக்கும்.. என் அப்பா மீதான உன் கோபம் என்னை சுடாது. என் அப்பா மீதான என் பாசம் உன்னை வருடாது. விட்டுடலாம்.!" என்றவள் கதவை திறந்து வெளியே நடந்தாள்.

பாலா தலையை பற்றியபடி அந்த கதவின் மீதே சாய்ந்தான்.

பிரியா கோபத்தோடு தனது அறையில் அமர்ந்திருந்தாள்.

"ப்ரூட் ஜூஸ்.." என்றபடி அவளின் முன்னால் கோப்பையை நீட்டினான் பூமாறன்.

"நான் கோபத்துல இருக்கேங்க.." என்றவளை பரிவோடு பார்த்தவன் "கோபம் தீர நான் என்ன செய்யட்டும்?" எனக் கேட்டான்.

பூர்ணிமா தன்னோடு பேசியதை சொன்னாள் பிரியா.

"சண்டை மூட்டி விடணும்ன்னு இதை நான் சொல்லல.. ஆனா அவ பேசியது எனக்கு ஹர்ட் ஆகிடுச்சி. ஒருவேளை வருங்காலத்துல அவ இந்த வீட்டுக்கே வந்துட்டான்னா அப்புறம் உங்க அண்ணனும் இங்கேயே வந்துடுவார். அவங்க இரண்டு பேர் இருக்கும் வீட்டுல என்னால இருக்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது நீங்க தனி குடித்தனம் வருவதா இருந்தா மட்டும்தான் நான் உங்களோடு இருப்பேன்.." என்றாள் முகத்தை திருப்பியபடி.

கலகலவென்று சிரித்தான் பூமாறன்.

"கிண்டலா இருக்கா உங்களுக்கு?" எரிச்சலாக கேட்டாள் அவள்.

"இது அப்படி இல்ல.. அவங்க பண்ற அலப்பரையில் என்னை போலவே கடுப்பாகும் ஒரு ஜீவனா நீ இருக்கியேன்னு நினைச்சி சிரிச்சேன்.." என்றவனை முறைத்தாள்.

"ஆனா நீ சீரியஸா நினைக்கும் அளவுக்கு ஒன்னும் இல்ல. அவங்க இரண்டும் பேரும் பிரிஞ்சியிருந்தா மட்டும்தான் மத்தவங்களை டார்ச்சர் பண்ணுவாங்க. சேர்த்துட்டாங்கன்னா அப்புறம் அவங்க பாட்டுக்கு அவங்களோட தனி உலகத்துல வாழ ஆரம்பிச்சிடுவாங்க. நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதையும் மீறி நீ அன்கம்பர்டபிளா பீல் பண்ணா கண்டிப்பா தனி குடித்தனம்தான்.. ஆனா நாம இல்ல.. அவங்களை அனுப்பிடலாம்.!" என்றான் புன்னகையோடு.

அவன் சொன்னதே அவளுக்கு இதமாக இருந்தது. அவன் கையில் இருந்த குளிர்பானத்தை வாங்கி குடித்தபடியே அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

பூர்ணிமா இரவு உணவு உண்ணும்போது அங்கே பாலா வரவில்லை. அதன் பிறகு அவள் அவனை பார்க்கவும் இல்லை. இரவில் தூக்கமும் வரவில்லை. எதிர் அறையில்தான் அவன் இருக்கிறான் என்ற எண்ணமே அவளின் உறக்கத்தை களவாடி விட்டது.

"பேசாம பிரகீதனையே லவ் பண்ணியிருக்கலாம்.!" என்று முனகினாள்.

பிரகீதனுக்கும் அவனது காதலிக்கும் இடையில் எப்போதோ பிரேக் அப் கூட நடந்து விட்டது. ஆனால் அவன்தான் முதுகலைக்கு வேறு கல்லூரி சேர்ந்து விட்டான். அவ்வப்போது கைபேசியில் அழைத்துப் பேசுவான். ஆனால் நட்பை தாண்டி வேறு எதையும் யோசிக்க முடியவில்லை அவளால்.

முன்னிரவு முடியும் முன் வந்து விட்டார்கள் பிரியாவின் பிறந்த வீட்டார். சலசலப்பு கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் பூர்ணிமா. ஜன்னல் வழியே கீழே பார்த்தாள். பூமாறன் நாற்காலிகளை ஒழுங்குப் படுத்திக் கொண்டு இருந்தான். இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த பிரியாவுக்கு பெண்கள் இருவர் மருதாணி வைத்துக் கொண்டு இருந்தார்கள். முழுமதி போல இருந்தது அவளின் முகம். அவ்வளவு பளபளப்பு.

பூமாறனும் பிரியாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். களங்கமில்லா காதல் புன்னகை அது. பூர்ணிமாவுக்கு மனம் நிறைந்து முகம் மலர்ந்தது.

பாலாவால் இப்படி எப்போதும் காதல் புன்னகையோடு இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தாள். அவன் ஒரு தனி ரகம். அவனுக்கு அனைத்தும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றுதான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள்.

விடியற்காலை நேரத்தில் உணவுகள் தயாராகி விட்டது. பூர்ணிமா அப்போதுதான் கண் அசந்திருந்தாள். அதற்குள் வந்து அவளை எழுப்பி விட்டாள் முல்லை.

"போய் குளிச்சிட்டு வா பூரணி.. நிறைய வேலை இருக்கு. கூட மாட ஒத்தசை செய்வ.." என்றாள்.

பூர்ணிமா அரை தூக்கத்தோடே சென்று குளித்தாள். வெள்ளை நிற புடவையில் மஞ்சள் பூக்களும் பச்சை கொடிகளும் பரவி இருந்தன. தலையை பின்னி அம்மா வைத்து விட்டு சென்ற பூச்சரத்தை சூடிக் கொண்டு வெளியே வந்தாள்.

கதவை திறந்தவள் திகைத்து நின்றாள். வெளியே தன் அறையின் அருகே சுவரில் சாய்ந்து நின்றிருந்த பாலா இவளை வெறித்துப் பார்த்தான்.

அவனோடு பேசலாமா என்று யோசித்துப் பார்த்த பூர்ணிமா அதை தவிர்த்து விட்டு அங்கிருந்துச் சென்றாள்.

காலை நேரத்தில் இன்னும் நிறைய நிறைய விருந்தினர்கள் வந்தார்கள். அனைவரையும் வரவேற்றனர் செண்பகமும், பூர்ணிமாவும். வந்தவர்களில் பாதி பேர் பூர்ணிமாவை கவலையோடு பார்த்து சென்றனர்.

சூரியன் சற்று மேலேறிய பிறகு பிரியாவுக்கு வளைகாப்பு நலங்கு நடந்தது. அனைவரும் அவளுக்கு சந்தனம் பூசி வளையல் போட்டு விட்டனர். பூர்ணிமா வளையல் போட்டு விடுகையில் பிரியா புன்னகைத்தாள். அவளின் புன்னகை பூர்ணிமாவுக்கு சாட்டையடியாக விழுந்தது‌. இவளை போலவே பாலாவும் இருந்தால் நன்றாக இருக்காதா என்று கூட ஆசைப்பட்டாள்.

திரும்பியவளின் பார்வையில் முதலில் தென்பட்டது பாலாதான். வேட்டி சட்டையில் ஒரு ஓரமாக நின்றிருந்தான். இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பூர்ணிமாவும் வீட்டின் மற்ற பெண்களும் விருந்தினர்களை அழைத்து உணவு தந்தனர். பாலாவும் கூட அதிசயமாக வந்து உணவு பரிமாற ஆரம்பித்தான்.

பிரியாவையும், பூமாறனையும் பிரியாவின் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். வந்திருந்த சொந்தங்கள் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தார்கள்.

"உனக்கு நாங்க இருக்கோம்.!" என்று பூர்ணிமாவிடம் வந்து சொல்லி விட்டு சென்றார் பெரிய தாத்தா. அந்த வார்த்தைகள் காதில் விழுந்த பிறகு பாலாவுக்கு எரிச்சலாக இருந்தது.

சொந்தங்கள் முழுதும் சென்ற பிறகு அங்கிருந்த சாமியானா பொருட்களை வாகனமேற்றினார்கள். முல்லையும் அல்லியும் வாசலையும் வீட்டையும் சுத்தமாக கூட்டி தள்ளினர்.

முல்லை அலுப்பாக வந்து சோஃபாவில் அமர்ந்தாள்‌. தேனீர் தந்தாள் செண்பகம்.

"மலரோட கல்யாணம், வளைக்காப்புக்கு பிறகு இந்த வீட்டுல நடக்கும் பெரிய அளவிலான விழா இதுதான்.." என்றாள் செண்பகம் ஒரு வித குரலில்.

"இரண்டு பசங்களை பெத்தேன். இரண்டுமே கோவில்ல வச்சி சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிக்கிட்டாங்க. இருபது வருசத்துக்கு முன்னாடி ஐம்பது ரூபா மொய் வச்சிட்டு வந்தேன். அதை இப்ப நூறா கொண்டு வந்து பிரியா கையில் வச்சிட்டு போறாங்க.." என்று சொல்லி சிரித்தாள் செண்பகம்.

"வருசங்கள் போன பிறகு பணத்தின் மதிப்பு குறையுது. பாசத்தின் அளவு அதிகரிக்குது.." என்றார் ராஜா.

"அப்பா கவிதை.!" என்று சொல்லி நகைத்தாள் பூர்ணிமா. ராஜா வெட்கத்தோடு பூர்ணிமாவிடம் கையசைத்தார். "அமைதியா இரும்மா.. என்னை கிண்டல் செய்யலன்னா உனக்கு பொழுது போகாது." என்றார்.

மாடிப்படியில் அமர்ந்திருந்த பாலா ராஜாவையும் முல்லையையும் மாறி மாறி பார்த்தான். பூமாறன் சொன்னது அவனின் நினைவில் வந்துப் போனது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN