பௌர்ணமி 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முல்லைக்கும் ராஜாவுக்கும் திருமணம் முடிந்த மறு வாரத்தில் அண்ணனை தனியே சந்தித்தான் பூமாறன்.

"உன்னால பூரணியை புரிஞ்சிக்க முடியுதா?" எனக் கேட்டான்.

"அவளை புரிஞ்சிக்க என்ன இருக்கு?" எனக் கேட்டவனை விந்தையாக பார்த்தவன் "அவ நிஜத்துல வாழ்றா.." என்றான்.

தம்பி சொன்னது பாலாவுக்கு புரியவில்லை.

"என்ன நிஜம்?"

"உன்னை போல பழி போட்டுட்டு வெட்டியா உட்கார்ந்திருக்கல அவ.. அவ களத்துல இறங்கி தன் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கா.."

"அதனால் என்ன?" என கேட்ட பாலாவை முறைத்தவன் "உனக்கும் அவளுக்கும் சண்டை வர காரணமே முல்லை அத்தை வாழ்க்கை கெட்டுப் போனதாலதான்.. உனக்கு கோபம் மட்டும்தான் செயல்படுது. வேறு என்ன செஞ்ச நீ? நீ அவளோட அப்பாவை வெறுக்கற.. ஆனா அதை தவிர என்ன செஞ்ச? ஆனா அவ தன் அப்பாவை கோபத்தோடு நேசிக்கறா.. ஆனாலும் தன் அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சா.. என்னைக்கோ நடந்த தவறுகளுக்கு நிகழ்காலத்தை சிதைக்க அவ விரும்பல. அவளோட அம்மாவுக்கு ரொம்ப வருசம் முன்னாடியே கல்யாணம் பண்ணி வைக்க டிரை பண்ணி இருக்கா. ஆனா அத்தை தன் கணவனை ரொம்ப நேசிக்கறதா சொன்னதால, அவங்க காதலுக்கு மரியாதை தருவதா நினைச்சி தன்னோட எண்ணங்களை தனக்குள்ளேயே மறைச்சிட்டா. முல்லை அத்தைக்கு எப்போது கல்யாணமே ஆகலன்னு தெரிஞ்சதோ அப்பவே அவ தன்னோட முதல் வேலை அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான்னு முடிவு பண்ணிட்டா.. லைப்பை ஹேண்டில் பண்ண அவளுக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட உனக்கு தெரியல. நீ இன்னமும் கூட அத்தைக்கிட்ட சாரி கேட்கல. ஆனா அத்தை தன் மகளோட வாழ்க்கைக்காக உன்னை நேசிச்சிட்டு இருக்காங்க.. பாசம் ரொம்ப அபூர்வம். அதை நீ ரொம்ப அலட்சியப்படுத்தாத.!" என்றான்.

அவன் சொன்னது அன்றைக்கு அவனுக்கு புரியவில்லை. ஆனால் இன்று புரிந்தது.

அத்தையின் மலர்ந்த முகத்தையும், ராஜாவின் காதல் நிரம்பிய கண்களையும் காணும்போது மனம் நிறைந்தது.

"வீட்டுக்கு போலாமா அப்பா?" எனக் கேட்டபடி ராஜாவின் தோளில் சாய்ந்தாள் பூர்ணிமா. அவளின் தலையை வருடி விட்டவர் "அதுக்குள்ளயா? அப்புறம் என்னை அப்பா வீட்டுல மூச்சு வாங்க கூட விடல நீங்கன்னு உன் அம்மா நம்மை கரிச்சி கொட்டுவா!" என்றார் கேலியாக.

பூர்ணிமா நகைத்தபடி முல்லையை பார்த்தாள். "அவங்க வேணா தாய் வீட்டுல இருந்துட்டு வரட்டும்.. நாம போகலாம் அப்பா.." என்றாள் சில நொடிகளுக்கு பிறகு.

ராஜா பாலாவை பார்த்தார். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. திருமணமே‌ பாதி கட்டாயத்தின் பேரில்தான் நடந்துள்ளது என்ற விசயம் அவருக்கு பாலாவின் மீதான மரியாதையை மட்டும்தான் குறைக்க செய்திருந்தது. முல்லையின் பயத்தையும், பூர்ணிமாவின் சீர்பெறாத மனதையும் பயன்படுத்தி அன்று திருமணம் செய்தவன் இப்போது இன்றைய நாள்வரை வந்து பூர்ணிமாவை அழைத்து செல்லாதது அவருக்கு விசித்திரமாக தெரியவில்லை.

'அவன் பயன்படுத்திட்டு தூக்கி எறிஞ்சிருக்கான்..' என்று மனைவியிடம் கூட திட்டியுள்ளார் அவர்.

முல்லைக்கு அப்படி தோன்றவில்லை. சிறு பிள்ளைகளின் உதவாத கோபம் விரைவில் சரியாகி விடும் என்று நம்பினாள்.

பாலா எழுந்து நின்றான்.

"யாரும் எனக்காக வீட்டை விட்டு அவசரமா போக வேணாம்.. நானே கிளம்பிடுறேன்!" என்றவன் வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

செண்பகத்தின் முகத்தில் வருத்தம் மேலோங்கியது. பெற்ற மகன் இதே ஊரில் இருந்தும் கூட கண் நிறைய பார்க்க முடியவில்லையே என்று கவலைப்பட்டாள். இன்றாவது இங்கிருப்பான் என்று நினைத்திருந்தவள் அவன் இப்போது கிளம்பி செல்லவும் வருத்தத்தில் ஆழ்ந்தாள்.

முல்லை பாலாவின் முதுகை வெறித்தாள்.

"அம்மா.." மகளின் அழைப்பில் திரும்பினாள்.

"அவனுக்கு திமிரும்மா.. வருசம் முழுக்க வீட்டை விட்டு வெளியேதான் இருக்கான். ஆனா அது மேட்டர் இல்ல.. இப்ப நாம வந்திருக்கும்போது இப்படி சீன் போட்டுட்டு போனாதானே நம்மளை ஈவிலா காட்ட முடியும்ன்னு நினைச்சிட்டு போறான்.." என்றாள்.

முல்லை பரிவோடு தன் அண்ணியை பார்த்தாள். அவள் கலங்கிய தன் கண்களை துடைத்தபடி வேறு பக்கம் பார்த்தாள்.

பூமாறன் வீட்டுக்கு திரும்பி வந்திருந்த போது அங்கே அத்தையின் குடும்பம் இல்லை. அம்மா சொன்ன விவரங்களை கேட்ட பிறகு சலிப்புதான் உண்டானது. அந்த விசயத்தை அப்படியே விட்டு விட்டான் அவன்.

பூர்ணிமாவின் நாட்கள் வழக்கம் போல சென்றுக் கொண்டிருந்தது. கல்லூரியில் மகிழ்ச்சியாக இருந்தாள். ஸ்டெல்லாவும் அவளும் சேர்ந்து அந்த ஊரை நன்றாக சுற்றினார்கள்.

மூன்றாம் மாதத்தில் பிரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பூர்ணிமா உடனடியாக கிளம்பிச் சென்று பார்த்தாள். குழந்தையை கையில் வாரி அணைத்து முத்த மழை பொழிந்து விட்டு பிரியாவுக்கு வாழ்த்துகள் சொன்னாள்.

அவள் மருத்துவமனையை விட்டு கிளம்பும் நேரத்தில் பாலா அங்கே வந்தான். இவளை கண்டதும் வேறு திசையில் முகத்தை திருப்பிக் கொண்டான். பூர்ணிமாவும் அவனுக்கு முன்பே பார்வையை திருப்பிக் கொண்டு விட்டாள்.

அந்த வருட கல்லூரி இனிதாய் முடிந்தும் போனது. முல்லையும் பாலாவும் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பூர்ணிமா அவனோடு பேச விரும்பவில்லை. விவாகாரத்துக்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை இருவரும். அதுவே இரு வீட்டு பெரியோரையும் நிம்மதியில் வைத்திருந்தது.

பிரியா குழந்தையோடு புகுந்த வீடு வந்தாள். அன்று ஒரு நாளும் பூர்ணிமா சென்றுப் பார்த்தாள்.

"இங்கேயே வந்துடு.." என்றாள் பிரியா அவளின் கையை பற்றி.

"எங்கம்மா இந்த வருச காலேஜ்க்கு எவ்வளவு காசு கட்டி இருக்காங்க தெரியுமா? என்னை நம்பி செலவு பண்றாங்க. அவங்க செலவுக்கு நியாயமா நானும் நாலு விசயத்தை கத்துக்கணும் இல்லையா?" எனக் கேட்டாள் இவள்.

"அப்படின்னா காலேஜ் முடிச்சிட்டு இங்கே வந்துடுவியா?" எனக் கேட்டவளிடம் "அதை அப்ப பார்த்துக்கலாம்.!" என்றாள்.

எதிர்காலத்தை பற்றி எந்த முடிவுமே எடுக்க முடியாத சூழலில் இருந்தாள் அவள்.

தனது வீட்டிற்கு வந்துச் சேர்ந்தாள் பூர்ணிமா. மறுநாள் கல்லூரியின் முதல் நாள். மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றாள்.

"பூரணி.. அந்த பையன் நல்லாருக்கான் இல்ல?" ஸ்டெல்லாவின் கேள்வியில் திரும்பிய பூர்ணிமா ஸ்டெல்லாவின் பார்வை சென்ற திசையில் பார்த்தாள்.

அழகாய் இருந்தான் அவன்.

"ம்.. செமையா இருக்கான்.." என்றாள் விஷம புன்னகையோடு. இருவரும் கல்லூரியின் நீண்டிருந்த படிகளின் ஓர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

"ஜூனியர்ன்னு நினைக்கிறேன்.." சாக்லேட்டை சுவைத்தபடியே சொன்னாள் ஸ்டெல்லா.

"அப்படிதான் தோணுது.." என்ற பூர்ணிமாவின் முன்னால் வந்து நின்றான் அவன்.

"ஹாய்.. பதினெட்டாம் நம்பர் கிளாஸ் எங்கே இருக்குன்னு சொல்றிங்களா?" எனக் கேட்டான்.

"சீனியரேதான்.!" பூர்ணிமாவின் காதோரம் கிசுகிசுத்த ஸ்டெல்லா "பேர் சொன்னா கிளாஸ் எங்கே இருக்குன்னு சொல்றோம்." என்றாள் அவனிடம். பூர்ணிமா அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக தோழியை பார்த்தாள்.

"உதயா.." என்றவனை ரசித்துப் பார்த்த ஸ்டெல்லா "நேரா போய் செகண்ட் லெப்ட் கட் பண்ணி, அதுல ஸ்டெயிட்டா போனா லாஸ்ட்ல ரைட் சைட் கிளாஸ் இருக்கும்.!" என்றாள்.

"தேங்க்ஸ்.." கன்னங்கள் குழி விழ சிரித்து விட்டு நகர்ந்தான் அவன்.

"மை காட்.. என் ஹார்ட்ல இருந்து புறப்படும் ஆக்சிஜன் முழுக்க டிராபிக் ஜாம் பண்ற மாதிரியே இருக்கு பூரணி.." என்றாள் இதயத்தின் மீது கையை வைத்தபடி.

தோழியின் தோளோடு அணைத்துக் கொண்ட பூர்ணிமா "ரொம்ப ஆசைப்படுற.. எதுக்கும் கவனமா இரு.!" என்றாள்.

அன்று மாலையில் இவர்கள் ஏறும் அதே பேருந்தில் ஏறினான் உதயா.

"நம்ம பஸ்.. இவனுக்கும் எனக்கும் நடுவுல ஏதோ சம்பந்தம் இருக்கு.!" தோழியின் காதில் மெல்லிய குரலில் சொன்னாள் ஸ்டெல்லா.

"என்னவோ.. வாழ்ந்தா சரி.!" கேலியோடு சொன்ன பூர்ணிமா தனது நிறுத்தம் வந்த உடன் பேருந்திலிருந்து கீழே இறங்கினாள். அவளோடு சேர்ந்து உதயாவும் இறங்கினான். ஸ்டெல்லாவின் கண்கள் அதிர்ச்சியில் பெரியதாக விரிந்தது.

அன்று இரவு தோழிக்கு போன் செய்தவள் "அவனும் நீயும் ஏற்கனவே தெரிஞ்சவங்கன்னு ஏன் சொல்லல?" எனக் கேட்டாள் கோபமாக.

பூர்ணிமா தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள். "மெண்டல் அவனை எனக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா நீ அவனை பார்க்க சொல்லும் போதே அவனை பத்தி சொல்லி இருக்க மாட்டேனே? போன வாரத்துல எங்க எதிர் வீட்டுக்கு புதுசா ஒரு பேமிலி குடி வந்திருக்காங்கன்னு சொன்னேன் இல்லையா? அது இவனோட பேமிலிதான். இன்னைக்குதான் நானே பார்த்தேன். நான் எங்க வீட்டுக்குள்ள நுழைவதை பார்த்துட்டு 'இதுதான் உங்க வீடா அக்கா?'ன்னு கேட்டான்." என்று விளக்கிப் சொன்னாள்.

"ஓ.." என்ற ஸ்டெல்லா "ஐஐஐ ஜாலி.. இனி என்னை அடிக்கடி உங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணு பூரணி.. நீ என் செல்லக்குட்டி இல்ல?" எனக் கேட்டாள்.

"ச்சை.. வந்துத் தொலை.. உனக்கு இல்லாத உரிமையா?" சிரிப்போடு சொல்லி‌விட்டு போனை துண்டித்தாள்.

சமூக வலைதளங்களில் இருந்து சில அறிவிப்புகள் வந்தன. சென்றுப் பார்த்தாள். அனைத்திலும் பாலா தனது புகைப்படத்தை புதிதாக பதிவேற்றி இருந்தான். முன்பை விட இப்போது சற்று கறுத்து இருந்தான். வேலை அதிகம் செய்கிறான் என்று அவளுக்கும் தெரியும். அவனது நிறுவனத்தை பற்றி செய்தி வெளியிட்டிருந்த பத்திரிக்கை பக்கத்தை போட்டோ பிடித்து பதிவேற்றி இருந்தான். இந்த மூன்று வருடங்களில் சில முறை நட்டங்களையும் சில முறை லாபங்களையும் சந்தித்து இருந்தான் அவன்.

அவன் அதை சொல்லா விட்டாலும் கூட பூமாறன் வாரம் ஒரு முறை அனைத்து விசயங்களையும் இவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். பாலாவின் நிறுவனத்திற்கு பூமாறன் இரண்டாம் முறை முதலீடு செய்த போது பூர்ணிமாதான் தனது தந்தையின் சொத்துக்களை அடமானம் வைத்து பணத்தை தந்திருந்தாள்.

பாலாவின் குணம் அவளுக்கு பிடிக்காது என்றாலும் கூட அவனது முயற்சிகள் அவளுக்கு எப்போதும் பிடிக்கும். அதை விட முக்கியமாக மற்ற இரு வீட்டு குடும்பமும் அவளுக்கும் சேர்ந்துதான் எதிரிகளாக இருந்தனர். அவர்களை விட ஒரு படி மேலேறுவது அவளுக்கும் முக்கியமாக இருந்தது.

அவனது புகைப்படத்தை சில நிமிடங்கள் வெறித்தவள் போனை அணைத்து எறிந்து விட்டு தனது பாடங்களை படிக்க ஆரம்பித்தாள்.

வெளியே முல்லையும் ராஜாவும் உரையாடிக் கொண்டிருப்பது அவளின் காதுகளில் கொஞ்சமாக விழுந்தது. போனில் இசையை ஒலிக்க செய்து விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

பாலா நல்ல தூக்கத்தில் இருந்தான். மணி பன்னிரெண்டை கடந்து விட்டிருந்தது. அவனின் வீட்டு கதவு படபடவென்று தட்டப்பட்டது.

எழுந்து சென்று கதவை திறந்தான். ரோசினி நின்றிருந்தாள்.

கடிகாரத்தை பார்த்து விட்டு அவன் புறம் திரும்பியவன் "இந்த நேரத்துல இங்கே என்ன பண்ற?" எனக் கேட்டான்.

ரோசினி சட்டென்று அவனின் காலில் விழுந்தாள். "மாமா.. என்னை எப்படியாவது காப்பாத்துங்க.." என்றாள் கண்ணீர் மல்க.

பாலா குழப்பமாக அவளைப் பார்த்தான்.

"என்ன விசயம்? முதல்ல என் காலை விடு.." என்று நகர்ந்து நின்றான்.

அழுது அழுது வீங்கிப் போயிருந்தது அவளின் முகம். கண்கள் கூட செந்தூரமா இருந்தது.

"உங்களை தவிர வேற யார்கிட்டயும் என்னால உதவி கேட்க முடியாது மாமா.." என்று கை கூப்பி கெஞ்சினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN