என்னைத் துரத்தும் உன் நினைவுகள்...8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் - 8

சிரித்த முகத்துடனே டைனிங்ஹாலுக்குச் சென்றவள் “சரிசரி.. உங்க எல்லாரையும் கடிச்சி ரெண்டு நாள் ஆச்சு. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கடிக்கலேன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும்..” என்று முடிப்பதற்குள் “அச்சோ! பர்கர்பன் எனக்குக் கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. சொல்ல மறந்துட்டேன்” என்று மகேஷ் இல்லாத வேலையைச் சொல்லித் தப்பிக்கப் பார்க்க,

ராம் பதறியடித்து “ஐயோ! வேண்டாம் குட்டிமா.. ப்ளீஸ்!” என்று கெஞ்ச, யாழினியோ “நோ வே! இப்ப என்கிட்டயிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று விரலசைத்துச் சொன்னவள் தொடர்ந்து கடிக்க ஆரம்பித்தாள்.

“ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம். அப்போ அதுக்கு அவன் என்ன பேர் வைப்பான் சொல்லுங்க”

“தெரியலயே..” என்று அனைவரும் ஒரு சேர சொல்ல

“MY CROW SOFT!” என்று சொல்லி யாழினி சிரிக்க, மற்றவர்கள் அழும் பாணியில் முகத்தை வைத்துக்கொள்ள

யாழினி “நெக்ஸ்ட்” எனவும்

“ஐயயோ தெய்வமே! என்று அனைவரும் மேலே கைதூக்கி கும்பிட

“லாஸ்ட் ஒண்ணே ஒண்ணு” என்று தன் அண்ணன்களிடம் கெஞ்சியவள்

“ஒரு பஸ் கண்டக்டர் டிரைவர்கிட்ட, நான் விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?” என்று கோபப்பட

அதற்கு அந்த டிரைவர் என்ன சொல்லி இருப்பான் சொல்லுங்க என்று இவள் கேட்க, அங்கிருந்த அவள் தந்தை முதல் அனைவரும் தெரியாதே என்று உதட்டைப் பிதுக்க

அதுக்கு “அவன்...” என்று ராகம் இழுத்தவள், “இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் மிதிச்சிகிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!” என்று இவளும் பிரேக் பிடிப்பது போல் தரையில் காலைத் தட்டித் தட்டி சிரிக்கவும் அனைவரும் அவளை எரிக்கும் பார்வை பார்த்தனர்

“சரி.. சரி.. கூல்! எதுவா இருந்தாலும் சாப்பிட்ட பிறகு பேசி தீர்த்துக்கலாம் மக்கா....” என்று அசடுவழிந்த படியே வீட்டில் உள்ளவர்களுக்கும் விஜயனுக்கும் பரிமாறினாள் யாழினி.

இது எப்போதும் நடப்பது தான். தங்கள் தாய் பேசும் பேச்சை மறக்க தங்கை போடும் மொக்கை ஜோக்கையும் ஏற்கனவே கேட்டுப் படித்திருந்தாலும் புதுசா கேட்பது போல் சுவாரசியத்துடன் கேட்டு அவளிடம் வம்பு இழுப்பார்கள் அவளின் அண்ணன்மார்கள்.

பின் கணவனைத் தேடி வர, கட்டிலில் படுக்காமல் அங்கிருந்த ஸோஃபாவில் தலையைப் பின்புறம் சாய்த்து உட்கார்ந்த நிலையிலேயே தூங்கியிருந்தான் அவன். கணவனை எழுப்ப மனம் வராமல் தரையில் அமர்ந்து கணவன் மடி மீதே தலை வைத்து யாழினியும் தூங்கி விட,

தனக்கு வந்த கைப்பேசியின் சத்தத்தில் எழுந்தவன், மனைவி தன் மடி மீது தலை சாய்த்துத் தூங்குவதைக் காணவும், அவசரமாக அழைப்பைத் துண்டித்தவன் அசந்து தூங்கும் மனைவின் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கித் தலை கோதிவிட, அதில் சற்றே விழித்தவள் சோம்பலென கணவனைப் பார்க்க

அவளின் அசந்த தோற்றத்தைப் பார்த்தவன், “நிஜமாகவே... பிளட் கொடுக்கலை தானேடி,” என்று மறுபடியும் கேட்க, இல்லை என்று அவள் மறுப்பாக தலையசைக்கவும்

“அப்போ அவ்வளவு நேரம் எங்கே இருந்த டி?”

“சொன்னா திட்டக் கூடாது!” என்று சீரியசான முகத்துடன் கேட்க

“ம்ஊம்...” அவன் முகத்திலும் தீவிரம்.

“நீங்க பாட்டுக்கு என்ன விட்டுட்டுப் போய்ட்டீங்க… எனக்கு என்ன பண்றதுனே தெரியல பாவா. அதான்… ரூம் போட்டு யோசிக்கறதுக்குப் பதிலா வி.ஆர்.மாலில் உட்கார்ந்து ஜிகர்தண்டா சாப்பிட்டு இருந்தேன்” என்று அவள் உதட்டைச் சுழித்து சப்புக் கொட்ட

“அடியே குந்தாணி! எங்க யார் ஞாபகமும் இல்லாம உட்கார்ந்து சாவகாசமா சாப்பிட்டு இருக்க... இரு உன்னை மிதிக்கிறேன்” என்று அவன் பாய,

இதையெல்லாம் கேட்க மனைவி அங்கு இருந்தால் தானே? அவள் தான் சொல்லி முடித்ததும் ஒரே ஓட்டமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாளே…

எழுந்து வந்து பாத்ரூம் வாசலில் நின்றவன் “நீ வெளியே வந்து தானேடி ஆகணும்?” என்று மனைவியை மிரட்டிக் கொண்டிருந்த நேரம் வாசல் கதவை யாரோ தட்டவும், கதவைத் திறந்தவன் அங்கு பாரிவேந்தரைப் பார்த்து விட்டு “மாமா கீதா ரெஸ்ட்ரூம்ல இருக்கா. அவ வந்ததும் சாப்பிட வரோம் மாமா”

“மாப்பிள்ளை...” என்று அவர் ஏதோ சொல்ல வரவும்

“சாரி மாமா! இனி இப்படி நடக்காது. உங்களைத் தவிக்க விடணும்னு நான் நினைக்கலை. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல மாமா...” என அவன் உணர்ந்து சொல்லவும்

“சரி விடுங்க மாப்பிள்ளை” என்ற நேரம், யாழினியும் வெளியே வர, “சீக்கிரம் இரண்டு பேரும் சாப்பிட வாங்க”

“இதோ ப்பா...” இருவரும், தங்களுக்குள் பரிமாறியபடி சாப்பிட்டவர்கள் பின் அனைவரிடமும் அவன் சகஜமாகப் பேச, அன்றைய மாலைப் பொழுது வரை நன்றாகத் தான் சென்றது.

ஏன் என்னை விட்டுப் போனீர்கள் என்று இவளும் கேட்கவில்லை. அப்படி விட்டுப் போனதற்கு அவனும் மன்னிப்பு கேட்கவில்லை. இதற்கு மேல் இப்படி நடக்காது என்பதால் இருவரும் அதை மறந்தார்கள்.

எல்லாம் நந்துவின் அண்ணன் கிருஷ்ணாவும் அவன் மனைவி சந்தியாவும் வரும்வரை தான் நீடித்தது.
வீட்டுப் பெரியவர்களாக காலையில் நடந்த களேபரத்தைப் பற்றி பாரிவேந்தரிடம் பேச, இது தான் சாக்கு என்று ஆரம்பித்து விட்டார் அலமேலு.

இது நொல்லை... அது நொட்ட... மரியாதை இல்லை… என அப்படி இப்படி என்று ஆரம்பித்தவர் கடைசியாக நந்துவின் நோயைப் பற்றி விமர்சித்தவர் “இப்படி உள்ளவனுக்கு என் பெண்ணைக் கொடுத்திருக்கேன். அவ என்ன ஆகப் போறாளோ? எதுக்கும் கீழ்ப்பாக்கத்துல சேர்த்து விடுங்கள் தம்பி” என்று இறுதியாக இலவச ஆலோசனை வேறு தர, கொதித்தே விட்டான் கிருஷ்ணா. பக்கத்திலிருந்த சந்தியா தான் அமைதி... அமைதி... என்று கணவனுக்குக் கடிவாளமிட்டுக் கொண்டிருந்தாள்.

நந்துவுக்கோ விருந்துக்கு அழைத்து அவனைச் செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.... அந்த கோபம் எல்லாம் மனைவி மேல் திரும்ப.... அவள் வாயே திறக்காதது வேறு இன்னும் கோபத்தைக் கொடுக்க, அவன் எழுந்து வெளியே செல்லவிருந்த நேரம்…

சந்தியாவுக்குத் தான் அப்படியே விட மனசு இல்லாமல் “ஏன்.... எங்க வீட்டுப் பிள்ளைக்கு என்ன வியாதின்னே தெரியாமத் தான் உங்க பெண்ணைக் கொடுத்தீங்களா இல்லை நாங்க தான் மறைத்து கல்யாணம் பண்ணோமா? சாதாரண மெண்டல் ஸ்ட்ரெஸ்க்கு எங்க புள்ள கீழ்ப்பாக்கம் போகணும்னா அப்போ அதைச் சொல்ற நீங்க தான் அங்கே இருக்க வேண்டியவங்க” என்று சூடாகத் திருப்பிக் கொடுக்க,

“நான் என்ன இல்லாததையா சொன்னேன்?” என்று அவர் முடிப்பதற்குள் பாரிவேந்தர் “அலமேலு!” என்று கர்ஜித்தவர் “போதும்.. இதற்கு மேல் வாயே திறக்கக் கூடாது. அவர் நம் வீட்டு மாப்பிள்ளை! நினைவிருக்கா?” என்று கேட்க,

இதற்கெல்லாம் அசருபவரா திருமதி அலமேலுமங்கை? எப்பேர்பட்ட ஜமீன் குடும்பம் அவர்! பொதுவாக மனித உடலில் ஓடும் உதிரத்தில் வெள்ளைஅணுக்கள் மற்றும் சிவப்பு அணுக்கள் தான் கலந்திருக்கும். ஆனால் இவர் உதிரத்திலோ மண்டைக் கணம், தான் என்ற அகங்காரம், தனக்கு எல்லோரும் அடங்கிப் போக வேண்டும் என்ற வெறி, தன்னைப் புகழ்ந்து துதி பாட வேண்டும் என்ற கோட்பாடு, அப்படி பாடுபவர்கள் மட்டும் தான் நல்லவர்கள் என்கிற குணாதிசயங்கள் கலந்த உதிரமல்லவா ஓடுகிறது! இதற்கு அலமேலு வைத்துக் கொண்ட பெயர் ஆளுமை! இன்றைய பேச்சு வழக்கில் சொன்னால் கெத்து! பாவம்! அவருக்குத் தெரியவில்லை… இதற்குப் பெயர் சுயதம்பட்டம் என்று.

அலமேலு மட்டும் இல்லை நிறைய பேர் இப்படித் தான் உலகத்தில் திரிகிறார்கள். அதற்காக அவரை சினிமாவில் வரும் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு யாரும் எண்ணி விட வேண்டாம். அவரோ நன்கு படித்த, பண்பாடு தெரியாத மொத்தத்தில் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சுய அறிவு இல்லாத முட்டாள்! இது தான் இந்த ஜமீன் வம்சத்து அலமேலு மங்கை.

கணவன் அடக்கியும் தன் வழமையான நக்கல், நையாண்டி, குத்தல் என்று ஏச்சு பேச்சுக்களை அவர் விடாமல் பேசிக் கொண்டிருக்க…

சிறு வயதிலிருந்து அவரைப் பற்றி தெரிந்த கிருஷ்ணா, நந்து முதற்கொண்டு பிள்ளைகள் யாரும் வாயே திறக்கவில்லை. ஆனால் முதன்முதலாக இவரை இப்படிப் பார்க்கும் சந்தியா தான் ஆடிப் போனாள்.

“நிறுத்துங்க... நந்து போன் எடுக்கலைனு கோபப் படுறீங்களே? கொஞ்சம் அவர் நிலைமையையும் யோசித்துப் பாருங்க. அவர் உங்களை மதிக்காம இல்லை. மனைவியைக் காணோம்னா எந்த ஒரு கணவனும் தன் மனைவியைத் தேடுவாங்களா இல்லை உங்களுக்குப் பதில் சொல்லுவாங்களா? நான் பார்த்த போது நந்து பிளாட்பாரத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. அதையும் மீறி எனக்கு இருந்த கோபத்திற்கு ஏன் யார் போனையும் எடுக்கலைனு அவர் சட்டையைப் பிடித்துக் கேட்கத் தான் இருந்தேன். ஆனா யாழினியைப் பார்த்ததும் அவர் கிட்ட தெரிந்த நிம்மதியையும் மீறி தங்கையை அ.... திட்டியதையும் பார்த்தேன்” என்றான் மகேஷ்.

நந்து அடித்ததைக் கணவன் மனைவிக்குள் சகஜம் என்ற நிலையில் தன் தந்தையைப் பற்றி யோசித்தவன், நந்து திட்டியதாக மாற்றிச் சொன்னான். “அப்பொழுதுதான் பாப்பா மேலே தப்புன்னே உணர்ந்தேன்” என்று தான் பார்த்தவற்றை எல்லாம் தாயின் வாயை அடைக்க மகேஷ் சொல்ல, அப்போது தான் அமைதி ஆனார் அலமேலு. அஞ்சலிக்கு செமஸ்டர் என்பதால் திருமணம் முடிந்த அன்று இரவே அவள் டெல்லி கிளம்பிவிட்டாள்.

பாரிவேந்தர் மாப்பிளையிடம் மன்னிப்பு கேட்க, அதேபோல் சந்தியாவும் யாழினி அப்பாவிடம் தான் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க அனைவரும் கிளம்பினர்.

கள்ளக்குறிச்சியில் பின் தங்கிய கிராமத்தில் பிறந்தவர் தான் பாரிவேந்தர். தன் ஐந்தாவது வயதில் தாயை இழந்து பிறகு ஒரே வாரத்தில் சித்தியின் கொடுமைக்கு ஆளாகி எட்டாவது வயதில் உயிருக்கு பயந்து ஆந்திரா போய் தன் வேலையுடன், படிப்பைத் தொடர்ந்தவர், அதில் வெற்றியும் கண்டு அலமேலு தந்தை நடத்திய கிரானைட் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

அலமேலுவுக்கு ஒரு ஊதாரி அண்ணன் மட்டுமே. அலமேலு சிறுவயதில் இருந்தே யாரையும் மதித்து மற்றும் வேலை செய்தும் பழக்கம் இல்லை. அதனால் இதே குணத்தில் இருந்த அவளின் அத்தையையும் {அப்பாவின் தங்கை} பிடித்துப்போக அதை விட அத்தையின் குடிகாரமகனையும் பிடித்துப் போனது அலமேலுவுக்கு. தன் தங்கை மகனுக்கு மகளைக் கொடுக்க விருப்பம் இல்லை என்றாலும் மகளின் பிடிவாதத்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய ஏதோவொரு காரணத்தால் திருமணம் நின்று விட அலமேலுவுக்கு திடீர் மாப்பிளையாக ஆக்கப்பட்டவர் தான் அவளுடைய தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பாரிவேந்தர்.

ஒரு வேலைக்காரன் தனக்கு கணவனா என்பதில் அலமேலுவுக்கு விழுந்த முதல் அடி பிறகு சொத்தில் எழுபத்தைந்து சதவீதம் அண்ணியின் புலம்பலால் அண்ணனுக்கே போய் சேர. மீதியிருந்த சொத்து தனக்குக் கிடைத்ததால் விழுந்தது அடுத்த அடி. எல்லாவற்றிற்கும் இறுதியாக தான் பெற்ற பிள்ளைகளே தன் உதாசீனத்திற்குப் பயந்து கணவனிடம் ஒண்டவும் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து வாய்!!! வாய்!!! வாய்!!! என்று ஆகிப்போனார் அலமேலு.

எதற்கும் அமைதியாகப் போகும் பாரிவேந்தர் கூட பிள்ளைகளின் சோர்ந்த முகங்களைப் பார்த்து ‘விடுங்க செல்லங்களா! எருமைக்கு எப்படி பிறப்பின் குணம் பொறுமையோ அதேபோல் உங்கள் அம்மாவுக்கு தற்பெருமை!’ என்பார்.

அதனாலேயே நந்து குடும்பம் அவர்களின் கெஸ்ட் ஹவுஸில் இருந்த வரை யாழினிக்கு சகலமுமே நந்து வீடு ஆகிப் போனது. ஆனால் பச்சையப்பருக்கோ நூலைப் போல சேலை! தாயைப் போல பிள்ளை! என்று ஆகிவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது யாழினி விஷயத்தில்.

நந்துவும் யாழினியும் வீட்டிற்கு வந்து படுக்கும் வரையுமே வீட்டில் உள்ளவர்கள் நடந்ததைப் பற்றியே சலசலத்துக் கொண்டேயிருக்க….

“இது என்ன டி கூத்தா இருக்கு! தன் புருஷன் உடல்நிலையைப் பற்றி யோசிக்காம அவன் எப்படி போனாலும் பரவாயில்லைனு யாரோ ஒரு குழந்தைக்குப் போய் இவ உதவி செய்வாளாம்… அதையும் சொல்லி நீங்கெல்லாம் இவளைத் தலையிலே தூக்கி வைத்துப் பேசுவீங்களாம்... நல்லா இருக்கு உங்க கதை என்று சுந்தரி நொடிக்கவும் தான் அந்த பேச்சை விட்டார்கள் அனைவரும்.

வேலைகளை முடித்து விட்டு யாழினி தங்களின் அறைக்கு வர, நெற்றியின் குறுக்கே கையை வைத்த படி நந்து கட்டிலில் படுத்திருக்க, எதுவும் பேசாமல் கணவன் பக்கத்திலிருந்த தலையணையை எடுக்க,

“மரியாதையா தலையணையை அங்கேயே வச்சுட்டுப் போய் படுடி” கையை எடுக்காமலே அவன் உறும,

யாழினிக்கும் கோபம் வந்தது. ‘காலையில் என்னமோ எங்க டா… செல்லம் டா… என்று போனில் கொஞ்சல் செய்திட்டு இப்போ உறுமலைப் பாரு.... என்று யாழினி யோசித்துக் கொண்டிருக்க

“நான் உன்னைத் தலையணையை வைக்கச் சொன்னேன்டி” என்றான் எழுந்து அமர்ந்த படி.

“கீதா கட்டான் தரையில் கூட தூங்குவா! ஆனா தலையணை இல்லாம தூங்க மாட்டா!” என்று முகம் திருப்பிய படி காட்டமாகச் சொல்ல

“அதனால தான்டி நானும் சொன்னேன்” என்றான் இவனும் அவளை விட காட்டமாக.

“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“ஒண்ணும் இல்லை.. போய் தூங்கு”

“ஆமா… எனக்குத் தூங்க தெரியாது பாரு... இவர் எனக்கு சொல்லித்தறார்... நாளைக்கு ஏதாவது கொஞ்சிக்கிட்டு வரட்டும்.... (மனசாட்சி: எப்ப நந்து கொஞ்சினான்?) இவளுக்கும் பிடிவாதத்துடன் கட்டிலில் படுக்க எண்ணம் தான். பாவம்! காலையிலிருந்து கணவன் பட்ட மன உளைச்சலும் தலைவலியையும் பார்த்தவளால் அந்த எண்ணத்தை செயல் படுத்த முடியவில்லை. இவள் கீழே படுக்க, அவனும் படுத்தான். ஆனால் இருவரும் தூங்கத்தான் இல்லை.

யாழினியோ, ‘எதுவா இருந்தாலும் மனசு விட்டுப் பேசினாதான் என்ன? எல்லாவற்றையும் மனசுக்குள்ளயே வைத்திருக்க வேண்டியது…’ என்று புலம்பிய படி இருக்க, பாவம்! அவளுக்குத் தன் அம்மா பேசிய பேச்சிக்கு தான் எதுவும் மறுப்பு சொல்லவில்லலை என்பது தான் கணவனின் தற்போதைய கோபத்திற்கான காரணம் என்று தெரியவில்லை.

நந்துவுக்கு யாழினியைப் பிடிக்காது என்றோ அல்லது அவள் மேல் வெறுப்போ என்று இதுவரை இருந்தது இல்லை. அவளின் துடுக்குத்தனமும் வாய் ஓயாமல் பேசும் பேச்சும் தான் இவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு எங்கே தெரியப் போகிறது? தன் அம்மாவின் சிடுசிடுப்பான பேச்சை மறக்கவே அவள் இப்படி வளவளக்க ஆரம்பித்தாள் என்று! வேலை முடிந்து வரும் பாரிவேந்தர் கூட தன் அலுப்பு சலிப்புகளைப் போக்க டிவி ரேடியோவை நாடுவதுக்குப் பதில் மகளைப் பேச சொல்லிக் கேட்பார். அதுவே வீட்டில் உள்ளவர்களுக்குப் பழக்கம் ஆகி விட, நந்துவுக்கோ அதுவே அவளிடமிருந்து ஒதுங்கக் காரணம் ஆகிவிட்டது.

ஆனால் இன்றோ மனைவி மேல் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது. ‘அண்ணனும் அண்ணியும் இல்லைனா இவளை அவள் வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பேன். அன்று கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடிப் போடினு சொல்லியும் கேட்காம என்னை மாட்ட வெச்சது இல்லாம இன்னைக்கு அவ அம்மா வாயாலேயே பைத்தியம்னு சொல்ல வச்சிட்டா.. இவ்வளவும் செய்துட்டு என்ன பிரச்சனைன்னு என்னையே கேட்குறா... அவங்க பேசின வார்த்தைக்கு இவ மறுத்து ஒரு வார்த்தையாவது பேசினாளா?’ என மனதுக்குள் குமுறியவனோ

‘அட்லீஸ்ட் ஒரு மன்னிப்பாவது கேட்டாளா இவள்?’ என்று இவன் புலம்ப, ‘காலையில் விட்டுட்டுப் போனதுக்கு நீ மன்னிப்புக் கேட்டியா டா?’ என்று அவனின் மனசாட்சி கேட்ட கேள்விக்குக் குப்புறப்படுத்து கண்ணை இறுக்க மூடிக் கொண்டான் நந்து. ‘த்தூ…! தூங்குற மாதிரி நடிக்காதடா’ என்று காறித் துப்பியது அவன் மனசாட்சி.

காலையில் எழுந்ததும் மனைவியைக் கண்டுகொள்ளாமல் இவன் இருக்க, அவளோ அவனுக்கான தேவையை எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தாள். திருமணத்திற்கு எடுத்த லீவுக்குப் பிறகு அன்று தான் அவன் வேலைக்குப் போகிறான். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவன் கிளம்ப “இன்று மாமா வராங்க நந்து. நானும் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்று ஈஸ்வரி சொல்ல, “தெரியும் க்கா.. ஈவினிங் சீக்கிரமே வரேன் க்கா” என்றவன்

மறந்தும் மனைவி பக்கம் திரும்பவில்லை காம்பௌண்ட் வாசலைத் தாண்டும் வரை பார்த்திருந்த யாழினிக்கு முதலில் கோபமும் பிறகு ‘சரி தான் போடா…’ என்ற அலட்சியமும் வந்தது.

டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்து விட்டுப் பெரிய பன்னாட்டுக் கார் கம்பெனியில் மெக்கானிக் வேலையில் சேர்ந்தவன் தன் திறமையால் இன்று சீஃப் இஞ்சினியராக இருக்கிறான் நந்து. நல்ல சம்பளம் தான். ஆனாலும் இன்னும் முன்னேற வேண்டும் என்பது அவனின் எண்ணம். அதற்கான தகுதிகளை இன்றுவரை வளர்த்துக் கொண்டிருக்கிறான் அவன்.

மாலை நந்து வீட்டுக்கு வரும் போது வீட்டில் உள்ளவர்களின் பேச்சும் சிரிப்பும் வெளி வாசல் வரை கேட்டது. ஈஸ்வரியின் கணவன் உத்ராபதி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசு பொருளை வாங்கி வந்திருந்தான். அவன் வாங்கி வந்த பரிசு எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் குழந்தைகளான சபரிக்கும் சிந்துஜாவுக்கும் தான் போர் நடந்தது. அதிலும் சிந்துஜாவுக்கு அண்ணனிடம் உள்ளதுதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.

“வாங்க மாமா!” என்று வீட்டின் உரிமையாளராய் அழைத்தவன் பிறகு ஃபிரெஷ் ஆகி வந்து அமர்ந்த நேரம் வீட்டின் இளவரசியான சிந்துஜா ஓடிவந்து அவன் மடியில் உட்கார்ந்தவள் தன் நந்துப்பா கழுத்தைக் கட்டிக் கொண்டு காதில் ஏதோ சொல்ல..

“அச்சச்சோ! அப்படியா? சரி விடுங்க செல்லம்… உன் நந்துப்பா உங்களைத் தீம் பார்க்குக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று சமாதானப்படுத்த,
“வெவ்வவே... நீ அதையே வச்சிக்கோ. என்னை நந்துப்பா தீம் பார்க் கூட்டிப் போவாங்களே!” என்று அவள் அண்ணனுக்கு ஒழுங்கு காட்ட

“நந்துப்பா! அப்போ நானு..?” என்று சபரி உதடு பிதுக்க

“நீயும் தான் டா கண்ணா!” என்றான் நந்து.

மறுபடியும் மகள் அவன் காதில் ஏதோ சொல்ல “ம்ம்ம்ம்... நீங்க செய்ங்கடா சிந்து குட்டி!” என்றவன் அவள் முன் விரல் நீட்ட, அவள் கிளுக்கி சிரித்த படி “தயிர் ரசம் புவா பருப்பு என்று ஒவ்வொரு விரலாகப் பிடித்துச் சொல்லி உள்ளங்கையிலேயே பப்பு கடைந்து தன் சின்ன தந்தைக்கு ஊட்ட, அவனோ “இதை எல்லாம் நான் சாப்பிட்டா எப்படிமா ஜிம் பாடி ஆகிறது? அதனால எனக்குக் கறி புவா தான் வேண்டும்” என்று அடம்பிடிக்க, சின்னதோ யாழினியைப் பார்க்க, அவள் சிறிதாகத் தலை ஆட்டியதும் சிந்துஜா கறிபுவாவுக்குத் தாவினாள். அப்போது தான் நந்துவுக்கே தெரிந்தது இன்று முழுக்க சிந்துஜா யாழினியோடு தான் இருந்தாள் என்று.

சிந்துஜாவுக்கு ஒரு வயது வரை நன்றாக இருந்த காந்திமதி பிறகு இப்படி ஆகி விட, வேலையை விட முடியாத சந்தியா குழந்தையை மாமனாரிடமும் பாட்டியிடமும் தான் விட்டுச் செல்வாள். ஈஸ்வரியும் ஷிப்ட் டைமைப் பொறுத்துப் பார்த்துக் கொள்வாள். ஈஸ்வரி திருமணத்திற்குப் பிறகு தங்கள் ஸ்கூலில் இருக்கும் பிளேஸ்கூலுக்கு அழைத்துச் சென்று மதியத்துக்கு மேல் மகளைத் தன்னுடனே வைத்திருக்கும் சந்தியா, மாலை வரும்போது தன்னுடனே அழைத்து வந்து விடுவாள்.

சந்தியாவுக்கு அப்பா அம்மா இல்லை. அப்பா வழி தாத்தா பாட்டி தான் அவளை வளர்த்தார்கள். தாத்தாவும் அவளுடைய பத்தாவது வயதில் இறந்து விட, பாட்டி தான் வளர்த்தார். படிப்பில் கெட்டிக்காரியான அவளைத் தங்களின் ஒரே சொத்தான வீட்டையும் விற்று, இவர் முதியோர் இல்லத்தில் இருந்து கொண்டு அவளை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தார்.

பிறகு தரகர் மூலம் பேத்திக்கு கிருஷ்ணாவைக் கட்டி கொடுத்த பின் அவரும் போய் தாத்தாவுடன் சேர்ந்து கொண்டார். அதனால் சந்தியாவுக்கு உறவு என்றால் அது இந்த வீட்டில் உள்ளவர்கள் தான். கணவன் தான் அவள் உலகமே. அன்பு பாசத்தையே அறியாதவளுக்கு அதையே கொடுத்து திக்கு முக்காடா வைக்கிறான் அவளின் மாயக் கிருஷ்ணன்.

இரவு எல்லோரும் அமர்ந்து சாப்பிட, தன் மாமனார் வீடு என்பதால் எந்த நாசுக்கும் பார்க்காமல் பழகினான் உத்ராபதி. உணவுக்குப் பின் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அப்போது குறுக்கிட்ட யாழினி

“என்னோட கடிஜோக் இல்லாம ஒரு சபையா? தோ வரேன்..” எனவும் அனைவரும் காதைப் பொத்திக் கொண்டு வேண்டாம் வேண்டாம் எனவும்

உத்ராபதியோ இவளை பற்றியறியாமல் “நான் இருக்கேன் தங்கச்சி! யு புரொசீட்” என்று ஆதரவளிக்க

யாழினியோ “தாங்க்ஸ் அண்ணையா!” என்று உருகியவள் “ஒருத்தன் ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சான்..கடைசில கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.. ஏன்..?” பதிலுக்கு அங்கே அமைதி நிலவ

"ஏன்னா பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக் கூடாதாம்..” சொல்லிவிட்டு அவள் உத்ராபதியைப் பார்க்க அவனோ சற்றே தேம்பியபடி வராத கண்ணீரைச் சுண்டி விடவும் இவள் சிணுங்கலுடன் “அண்ணையா!..” என்றழைக்க “நான் செத்தையா!..” என்று பரிதாபமாக அவன் கூறவும் அதுவரை வாய் பொத்தி சிரித்தவர்கள் எல்லாம் பக்கென்று சிரித்து விட்டார்கள்.

“யாழினினினிஈஈ... உன்னைய என்று சந்தியா அவளைத் துரத்தவும் “ஒத்து.. ஒத்து.. மாமகாரு என்ன காப்பாடண்டி” என்று தன் மாமனார் பின்னால் அவள் ஒளிய “நான் இருக்கேன்மா..” என்றவர் “சந்தியா பிடிச்சிக்கோமா” என்ற படியே அவளிடம் ஒப்படைக்க “மாட்டிகிட்டியா? நந்து! வித் யுவர் பர்மிஷன்” என்றபடி யாழினி தலையில் ஒரு கொட்டுவைக்க, அதில் சிணுங்கிய படி யாழினி சிரிக்க, இருவரும் அணைத்துக் கொண்டனர்.

பிறகு விஜயன் தன் காலேஜில் நடந்ததைப் பற்றி சுவாரசியமாகச் சொல்ல அதற்குப் பெரிய சிரிப்பலை எழ, அதனால் அக்கம் பக்கத்தினர் வந்து வாசலில் நின்று பார்த்து விட்டு போகவும், அதைக் கவனித்த சந்தியாவுக்குக் கோபம் வர, எழுந்து சென்று அவர்கள் காலடி மண்ணை எடுத்து வந்தவள், எல்லோரையும் நிற்க வைத்துச் சுற்றிப் போட்டாள்.

நந்துவோ “அண்ணி! இதெல்லாம் ரொம்ப ஓவர்... எங்க அம்மா இடத்தை நீங்க பிடிச்சிட்டீங்களா?” என்று சொல்லி கலாய்க்க, சந்தியாவுக்குள் இவ்வளவு நேரம் இருந்த இனிமை மறைந்தது.
“நான் உங்க எல்லோருக்கும் அம்மா தானே தவிர யாருக்கும் மாமியாரா மாற மாட்டேன் தம்பி!” என்று நாசூக்காய் சொல்ல,

“என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க? நாங்க உங்களை அதற்கும் மேலே இல்ல நினைச்சோம்?” எனவும், இவள் புரியாமல் பார்க்க…

“நீங்க இந்த வீட்டுத் தலைவி அண்ணி! எங்கள் தானேத் தலைவி வாழ்க!” என்று நந்தன் சொல்ல

“வாழ்க! வாழ்க!” என்று சொன்னான் விஜயன்.

“எங்கள் தங்க தலைவி வாழ்க!” என்று விஜயன் சொல்ல

இப்போது “வாழ்க! வாழ்க!” என்று மறுமொழி மொழிந்தாள் விஜி.

“போங்க பா… என்னையே கலாய்க்கறீங்களா?” என்று சந்தியா செல்லமாக கோபப்பட..

“இது இப்போ தான் உங்களுக்குத் தெரியுதா?” என்று கணவனில் இருந்து ஈஸ்வரி, உத்ராபதி, யாழினி என்று கோரஸாகச் சொல்ல

“போங்க பா” என்ற சிணுங்கலுடன் உள்ளே ஓடிவிட்டாள் சந்தியா.

என்ன தான் எல்லோரும் கலாட்டா பண்ணினாலும் அந்த வார்த்தை உண்மை என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி பல சிக்கல்களில் கணவனுக்குத் தோள் கொடுத்து இந்த குடும்பத்தைத் தாங்கி நிறுத்தியவள் சந்தியா தான்.

கிளம்பும் போது நந்துவிடம் வந்த உத்ராபதி “என்ன டா ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போறியா? புக் செய்வா?” என்று கேட்க,

“நோ மாமா!” கல்யாணமே வீட்டில் உள்ளவர்களின் அவசரத்தில் நடந்தது. எனக்கு இன்னும் பத்து நாட்களில் டோர்னமென்ட் இருக்கு. சோ நோ வே... சாரி மாமா!” என இவன் கெஞ்ச

“சரி விடுடா மாப்பிள்ளை! கோயில் திருவிழா வருது. அதற்கு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வராங்க, நீயும் வரனும். யாழினி, நீயும் தான்மா” என்று அவன் அழைக்க, கணவன் மனைவி இருவரும் வருவதாக வாக்குக் கொடுத்தார்கள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN