குரங்கு கூட்டம் 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிளாஸ்டிக் கவருக்குள் இருந்த தலைமுடியை உற்றுப் பார்த்தான் சம்பத்.

"அது மட்டுமில்ல.. உங்க பிரதரோட உடம்புல சில நக கீறல்கள் இருக்கு. அவரோட சட்டை பையில் கசங்கிய மல்லிகை பூ இருந்தது.. யாரோ பிளான் பண்ணி பக்கத்துல இருந்து கொன்னிருக்காங்க. முதல்ல கைகள்ல.. அப்புறம் நெஞ்சுல.." என்றார் மருத்துவர்.

"அது அந்த பொண்ணுதான்.." முனகியவன் சட்டென்று தனது போனை எடுத்தான். சித்துவுக்கு அழைத்தான்.

"ஹலோ சம்பத்.." என்றவனை பேச விடாமல் குறுக்கிட்டவன் "ஷெட் அப்.. நான் சொல்றது நல்லா கேளு.. என் பிரதரை கொன்னது ஒரு பொண்ணு. அந்த பொண்ணு யார்ன்னா என் பிரதர் மேரேஜ் பண்ணிக்க நினைச்ச அதே பொண்ணு.. அவதான் எல்லாத்தையும் பிளான் பண்ணி இருக்கா. என் பிரதரை அங்கே வர சொல்லி போன் செஞ்சதும் அவதான். அப்புறம் என் பிரதரை நீ கொன்னுட்டதா எனக்கு சொன்னவளும் அவதான்.." என்றான்.

அதிர்ச்சியடைந்த சித்து "நான் கொன்னேன்னு சொன்னாளா?" என்றான்.

"ஆமா.. அந்த விசயத்தை விடு.. இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்கே இருப்பேன். அதுக்குள்ள அவளை பிடிச்சி வை.. எனக்கு பிரசென்ட் பண்ணு.." என்றவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

சித்து வாயை மூடியபடி கையை காற்றோடு குத்தினான். மிருதுளா சந்தேக வட்டத்திற்குள் வந்த அந்த நொடியிலேயே மிருணாளினியும் சந்தேக வட்டத்திற்குள் வந்து விட்டாள். அன்று அவளாக வந்து கொஞ்சி விட்டு திரும்பிச் சென்றதை நினைத்துப் பார்த்தான்.

தனது ஆட்களை அழைத்தான்.

"மிருணாளினியை கூட்டி வாங்க.." என்றான்.

'இந்த நேரத்துலயும் இவருக்கு ரொமான்ஸ் கேட்குது..' என்று மனதுக்குள் திட்டியபடியே வெளியே நடந்தார்கள் ஆட்கள்.

மிருத்யூ மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். துணி பந்தலில் இருந்து விழுந்த நிழலை பார்த்தபடியே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். உறவினர்களுக்கு இடம் போதாத வேளையில் இங்கே வந்து இருக்கலாம் என்று இதை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் இந்த பந்தலுக்கு அவசியமே இல்லாமல் அனைவருக்கும் மற்ற தளங்களிலேயே இடம் இருந்து விட்டது.

நாற்காலிகளும், சாப்பாட்டு மேஜைகளும் ஆங்காங்கே கிடந்தன. குழந்தை ஒன்று பயன்படுத்தி எறிந்த பிளாஸ்டிக் விசிலும், வாழைப்பழ தோல்கள் சிலவும் கிடந்தன.

புது காதல் ஜோடி ஒன்றும், கிழவர் ஒருவரும் மட்டும் இங்கே இவனோடு துணைக்கென இருந்தார்கள். நாற்காலி அடுக்கின் அந்த புறம் அமர்ந்திருந்த காதல் ஜோடியை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. யாருக்கும் தெரியாது என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டு காமரசத்தில் பாதி ரசத்தை அமர்ந்த இடத்திலேயே ருசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த காதலனின் கைகள் போன இடத்தை எதேச்சையாக கண்டு விட்டு தொண்டையை நீவிக் கொண்டான் மிருத்யூ.

'இந்த வீடுதான் ஹோட்டலை விட பெருசா இருக்கே.. அத்தனை ரூம்ல ஒரு ரூம் கூடவா இவங்களுக்கு கிடைக்கல?' என்று கவலையோடு நினைத்தான்.

கிழவர் ஒரு மூலையில் குறுங்கிப் படுத்திருந்தார். காய்ச்சல் மாத்திரையின் வெறும் அட்டை மட்டும் அவரின் அருகே கிடந்தது.

மிருத்யூ தனது போனில் இருந்த வார்த்தைகளை பார்த்தான்.

'அன்பே ரோஜா அழகு ரோஜா நான் செய்வதெல்லாம் தாஜா என்று நினைக்காதே.. காஜா பீடியின் முதல் நாற்றத்தைப் போல உன் பிரிவு என் நுரையீரலுக்கு வலிகளை தந்து விட்டது. துளை துளையாய் இருக்குமாம் நுரையீரலின் பாகம். ஆனால் உன் பிரிவினால்தான் எனக்கு இந்த பாவம் என்று நான் நினைக்கிறேன்.. உன் விழிகள் இரண்டும் டைம் பாமின் நேர முட்கள். எப்போது என் இதயம் வெடித்து சிதறும் என்பதை உன் பார்வைதான் முடிவு செய்து வைத்துள்ளது..'

இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆவலாக இருந்தது அவனுக்கு. ஒற்றை காதல் மொழியில் அவள் இந்த ஜென்மத்தையே மறந்து விட்டு அவனோடு கூடி விட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

உதட்டில் விரலை வைத்து‌ தட்டியபடி யோசனை வருவதற்காக மீண்டும் நிழலையே வெறித்தான். யோசனைகள் வர மறுத்தது. போனில் இருந்த ரோஜாவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். ரோஜா பூவை விடவும் மென்மையாக தெரிந்தாள் இவள்.

"அப்ப நான் சின்ன பையனா போயிட்டேன்.. இல்லன்னா அவளை இழுத்துட்டு ஓடிப் போயிருப்பேன்.!" என்று‌ச் சொல்லிக் கொண்டான். ஆனால் அவனுக்கு இப்போதும் கூட அவ்வளவு தைரியம் வரவில்லை என்பதுதான் உண்மை.

பந்தலின் சிறு ஓட்டையின் நேராக வந்து நின்றது சூரியன். சூரியனின் வெளிச்சம் அவனின் விழிகளில் நேராய் விழுந்தது.

"சூரியனை விட்டுட்டோமே.!" என்றபடி போனை எடுத்தான்.

'அன்பே நீ சூரியன். நான் உனக்குள் எரிந்துக் கொண்டிருக்கும் ஹைட்ரஜனும் ஹீலியமும் ஆவேன். உன் வெப்பத்தில் உயிர் வளர்க்கும் சந்திர தேவன் நான். உன் ஒளியில் பச்சையம் தேடும் பச்சை செடிகள் நான். உன் நிழலில் உறைந்திருக்கும் அதீத வெண்மை நான்.!' எழுதுவதை நிறுத்தியவன் "எல்லாம் அவளுக்குள்ள நான் இருக்கற மாதிரியே இருக்கு. எனக்குள்ள அவ இருக்கற மாதிரி எழுதினா நல்லாருக்கும்.!" என்றபடி மீண்டும் போனை கையில் எடுத்தான்.

'எனது இந்த ஆகாய சமவெளியில் ஆக்ஸிஜனும், நைட்ரஜனும் நீ‌. பகல் நேர மரமாய் நான் உறிஞ்சும் கார்பன் டை ஆக்சைடும் நீ. நீரில் பிரிக்க இயலா தீண்டல் நீ. வேலையை அதிகம் நேசிக்கும் ஒருவனின் திங்கள் கிழமை நீ. சர்க்கரை நோயாளி போல் உள்ள என் கையில் கிடைத்த பாகற்காய் நீ.. என் வாழ்வு நீ. உன் வாழ்வு நானாக வேண்டும். வாய்ப்பு தருவாயா? ஒரு வார்த்தை சொல்வாயா? கண்ணசைவில் என் பிணி தீர்ப்பாயா?' என்று முடித்தவன் அதை குறுஞ்செய்தியாக அவளுக்கு அனுப்பி வைத்தான்.

அனுப்பி‌ வைத்த பிறகுதான் கால்கள் இரண்டும் நடுங்க ஆரம்பித்தன அவனுக்கு. அவளிடமிருந்து என்ன மாதிரியான பதில் வரும் என்று யூகிக்க இயலாமல் பயந்தான்.

போனை எங்கேயாவது தூக்கி எறிந்து விட்டு உலகை விட்டே ஓடி விட வேண்டும் போல இருந்தது. பற்களும் தந்தியடிப்பது போலிருந்தது. அவன் தனது பயத்தை முழுதாய் அனுபவிக்க விடாமல் அவனின் முன்னால் வந்து நின்றார்கள் சில அடியாட்கள். விழிகளை உருட்டி பார்த்தவன் எழுந்து நின்றான்.

'என்ன'வென்பது போல கை சைகை காட்டினான்.

"சித்து சார் உன்னை கூப்பிடுறாரு.." அவன் சொல்லியது கேட்டு இவனுக்கு அடி வயிறு கலக்குவது போலவே இருந்தது. காதலியோடு காதல் செய்ய பயந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு காதலன் இம்சையா என நினைத்தபடி எழுந்து அவர்களோடு நடந்தான்.

சித்து தனது அறையில் சிலை போல நின்றிருந்தான்.‌ அவனின் முன்னால் மிருத்யூவை கொண்டு வந்து நிறுத்தி இருந்தார்கள் அடியாட்கள்.

வெள்ளை நிற சுடிதாரில் வெண்மேகம் போல இருந்தான் மிருத்யூ. இடை வரை ஆடிய அவனது கூந்தலில் அளவுக்கு அதிகமாகவே தொங்கிக் கொண்டிருந்தன மல்லிகை பூக்கள். நெற்றியில் அடுக்கடுக்காக மூன்று பொட்டுகளை வைத்திருந்தான். காதுகளில் இருந்த கம்மல்கள் அவனின் தோள் வரை உராசிக் கொண்டிருந்தன. சிறு வயதில் காது குத்தி முடித்த பிறகு அதை மறைய விடாமல் வைத்திருந்தான் அவன். அவன் சிறுவனாக இருக்கும்போது அவனுக்கு பிடித்த மேற்கத்திய பாடகர் ஒருவர் காதில் வளையம் அணிந்திருப்பதை கண்டு பெரியவனாக பிறகு அதே போல தானும் அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டு காதின் துளைகளை அப்படியே வைத்திருந்தான். ஆனால் பெரியவனான பிறகு அவன் தோடு போடவே இல்லை. எதற்கோ வைத்திருந்தது இப்போது இவனின் பெண் ரூபத்திற்கு உதவியது.

"யார் நீ?" சித்துவின் கேள்விக்கு குழம்பியவன் 'பைத்தியமா இவன்?' என நினைத்தான்.

"உண்மையில் நீ யார்?" கர்ஜனையோடு கேட்டான் அவன்.

மிருத்யூ பயப்படுவது போல நடுங்கினான். 'பையன்னு தெரிஞ்சிடுச்சா?' என்று பயந்தவன் அருகில் இருந்த கண்ணாடியில் தன் உருவம் பார்த்தான்.

'வாவ்.. மிருத்யூ நீயா இது? சான்ஸே இல்லடா.. இந்த மொத்த பெண் குலமும் உன் அழகின் முன்னாடி மண்டியிடணும்.. 'பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி'ன்னு பாடினாங்களே.. அது உனக்காகதான் எழுதி இருக்கணும் மிருத்யூ.. அச்சோ செல்ல குட்டி இம்புட்டு அழகாடா நீ? நான் மட்டும் இப்படியே அம்மா முன்னாடி போய் நின்னா அம்மா மிருதுவை எங்கேயாவது துரத்தி‌ விட்டுட்டு உன்னை மட்டுமே கொஞ்சிட்டு இருப்பாங்க.. ச்சே.. ச்சே.. நானே சைட் அடிக்கற அளவுக்கு அவ்வளவு அழகா இருக்கேனே.. இம்புட்டு அழகும் எந்த மகராசனுக்கு கொடுத்து வச்சிருக்கோ..' ப்ளோவில் நினைத்துக் கொண்டிருந்தவன் தன் எண்ணத்தின் கடைசி பகுதியை நினைத்து மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான்.

'பைத்தியம்.. இத்தனை அழகும் ஒரு பொண்ணுக்கு கொடுத்து வச்சிருக்கு.. அதுதான் ரோஜா குட்டி.. என்னை இப்படி ஒரு ப்யூட்டியில் பார்த்த பிறகும் அவ வேணாம்ன்னு எப்படி சொல்வா? எவ்வளவு அழகு நான்?' அவனை அவனே பாராட்டி சீராட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவனின் முன்னால் வந்து ஆடியது ஒரு துப்பாக்கி.

அதிர்ச்சியோடு நிமிர்ந்துப் பார்த்தான். சித்து ஆத்திரத்தோடு நின்றுக் கொண்டிருந்தான்.

"யார் நீ?" என்றவன் அவனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தவன்.

'இவனுக்கு என்ன கேடு வந்ததுன்னு இப்படி ஒரு கேள்வியை கேட்கிறான்? இந்த கேள்விக்கு என்னன்னு நான் பதில் சொல்வேன்? பைத்தியக்கார பக்கிங்க‌ளோட வீட்டுல வந்து மாட்டிக்கிட்டு பாடா படுறதா இருக்கு!' கவலையோடு புலம்பியவன் "பெப்பே.. பெப்பே.." என்றான் கையை நீட்டி.

அப்படி பேசி முடித்த பிறகு மீண்டும் தன்னையே திட்டிக் கொண்டான். 'அட அறிவு கெட்ட எருமை மாடே.. பெப்பேன்னாலும் உன் ஜென்ஸ் வாய்ஸ் அவனுக்கு தெரிஞ்சிடுமேடா.. மாட்டிக்கிட்ட நல்லா..' பயந்தபடி அவனை பார்த்தான்.

சித்து கண்களை மூடி திறந்தான். அருகில் இருந்த நோட்டையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு வந்து இவனின் கையில் திணித்தான்.

"இப்ப இதுல எழுது.. நீ யாரு?" என்றான்.

'மெண்டல் தடிமாட்டுப் பயலே.!' என நினைத்தவன் 'மிருணாளினி.!' என்று கொட்டையாக எழுதினான்.

இடம் வலமாக தலையசைத்த சித்து "உன் பேர் கேட்கல.. நீ யார்ன்னு கேட்டேன்.. நீ எதுக்கு இங்கே வந்திருக்கன்னு உண்மையை சொல்லு.." என்றவன் தன் ஆட்களிடம் கண் சைகை காட்டினான். ஒருவன் சென்று கதவை உள் பக்கம் தாளிட்டுவிட்டு வந்தான்.

"உன் சிஸ்டர் மிருதுளா மாப்பிளையோட பிரதரான சரத்தை கொன்னிருக்கா.. அவளை கூட்டி வர ஆள் போயிருக்கு. அதுக்கும் முன்னாடி நீ சொல்லு. எதுக்காக நீயும் உன் சிஸ்டரும் இந்த வீட்டுக்குள்ள வந்திங்க? உண்மையிலேயே நீ என் சிஸ்டரோட பிரெண்ட்தானா?" எனக் கேட்டான்.

'முடிஞ்சது சோலி.. மிருது எருமையை கூட்டிக்கிட்டு எங்கே போனாலும் அடிப்பட்டுதான் திரும்புவோம்ங்கறது மறுபடியும் கன்பார்ம் ஆக போகுது.!' என்று நினைத்தவன் 'நான் சிபியின் பிரெண்ட்தான்.. என் சிஸ்டர் அப்படி கிடையாது.. அவ ரொம்ப பயந்த சுபாவம்.. அவளுக்கு கரப்பான் பூச்சி பார்த்து கூட பயம்.. நீங்க ஏதோ தப்பா நினைச்சி இருங்கிங்க..' நடுங்கும் கையை மறைத்தபடி எழுதி முடித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN