பௌர்ணமி 35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ரோசினிக்கு குடிக்க‌ தண்ணீர் தந்தான் பாலா. அவளின் மூச்சு சீர்பெற்ற பிறகு "என்னாச்சி?" என்றான்.

மீண்டும் கண் கலங்கியவள் "நானும் எங்க ஆபிஸ்ல வேலை செய்யும் அருள் குமாரும் ஒரு வருசமா லவ் பண்ணிட்டு இருக்கோம் மாமா.." என்று ஆரம்பித்தாள். இதை பற்றி அவன் ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளான். அதனால் சுவாரசியம் இல்லாமல் கேட்க ஆரம்பித்தான்.

"இப்ப நான் பிரகனென்டா இருக்கேன் மாமா.. அருளும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருந்தோம். ஆனா எங்க வீட்டுல ஒத்துக்கல. அதனால நாங்க வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணி இன்னைக்கு காலையில் பக்கத்து ஊர் கோவில்ல மீட் பண்ணிக்கிட்டோம். ஆனா அதுக்குள்ள தாத்தா, அப்பா, மாமான்னு எல்லோரும் வந்துட்டாங்க. எங்க கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. அதுவும் இல்லாம அவனை கொலை பண்ண டிரை பண்ணாங்க இவங்க. அருள் கையில அருவாள் வெட்டு கூட விழுந்துடுச்சி. " என்றவள் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.

"கையில வெட்டு‌ வாங்கிட்டு அவன் எங்கேயோ ஓடிட்டான். என்னை இவங்க இழுத்துட்டு வந்துட்டாங்க. என்னை ரூம்ல அடைச்சி வச்சிட்டாங்க. எனக்கு வேறு இடத்துல கல்யாணம் பண்ண பேசிட்டு இருக்காங்க. எல்லோரும் தூங்கிய பிறகு‌ நான் தப்பிச்சி ஓடி வந்துட்டேன். ப்ளீஸ் மாமா.. நீங்கதான் எப்படியாவது எங்களை சேர்த்து வைக்கணும்.. அப்படி இல்லன்னாலும் பரவால்ல. அருள் திரும்பி வரும் வரை எனக்கு அடைக்கலமாவது கொடுங்க.." என்றாள் கெஞ்சலாக.

பாலா யோசித்தான். இதனால் வரும் சாதக பாதகங்கள் பற்றிதான் அவன் மனம் முதலில் கணக்கிட்டது. ஏற்கனவே வெறுத்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பம் இப்போது கொஞ்சம் சேர்த்து வெறுப்பதில் எந்த நட்டமும் வந்து விட போவதில்லை என்று முடிவெடுத்தான். அதுவும் இல்லாமல் கருவுற்ற பெண்ணை விரட்டியடிக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை.

"சாப்பிட்டியா?" அவனின் கேள்வியில் நிமிர்ந்தவள் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள். வாடிக் கிடந்த அவளின் முகமே சொல்லியது அவள் சாப்பிட்டு மூன்று வேளைகள் ஆகி விட்டதை. மேஜை மேல் கிடந்த கேரியரை திறந்தான். அவன் உண்டது போல மீதி சாதம் இருந்தது. குழம்பையும் பொரியலையும் முகர்ந்துப் பார்த்தான். அனைத்தும் நன்றாகதான் இருந்தன.

தட்டில் உணவை பரிமாறி கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

"தே.. தேங்க்ஸ் மாமா.." என்றவளுக்கு உள்ளம் நெகிழ்ந்துக் கொண்டிருந்தது. முன்பை விடவும் இப்போது அவனை மிகவும் பிடித்துப் போனது.

"சாப்பிடு.." என்றவன் சாத்தியிருந்த இரண்டாவது அறையை திறந்தான். அம்மா வாரம் ஒரு முறை மொத்த வீட்டையும் சுத்தம் செய்து விட்டுப் போவாள். அதனால் தூசி இல்லாமல் நன்றாக இருந்தது அறை. ஆனால் கட்டில்தான் இல்லை. யோசித்தவன் சென்று தனது அறையிலிருந்து இரு போர்வையையும், ஒரு தலையணையையும் கொண்டு வந்து தரையில் வீசினான்.

"நீ இந்த ரூம்ல படுத்துக்கோ.." என்று தனது அறையை கை காட்டினான். கலங்கும் விழிகளோடு சரியென தலையசைத்தாள் ரோசினி.

சாப்பிட்டு முடித்தவள் அவனின் அறைக்குள் நுழைந்தாள். புது போர்வை ஒன்று படுக்கையில் விரிக்கப்பட்டு இருந்தது. அவள் போர்த்திக் கொள்ள ஒரு போர்வையை வைத்து விட்டுச் சென்றிருந்தான் அவன்.

கண்ணாடிகள் உடைந்த திருமண புகைப்படத்தை பரிதாபமாக பார்த்தபடி கட்டிலில் அமர்ந்தாள். அவர்களின் பிரிவுக்கு தான்தான் காரணம் என்ற விசயம் அவளுக்கு வலியை தந்தது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்தான் போல' என நினைத்தபடி தலையணையில் தலை சாய்த்தாள்.

தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டிருந்த பாலாவுக்கு உறக்கமே வரவில்லை.

கர்ப்பிணி பெண்ணைத் தரையில் படுக்க வைத்துவிட்டு தான் எப்படி கட்டிலில் உறங்க முடியும் என்று நினைத்தவனுக்கு, கட்டிலோ தரையோ எங்கேயுமே அவ்வளவு சீக்கிரத்தில் உறக்கம் வருவதில்லை என்பதுதான் உண்மை.

நாளை காலையில் என்ன பஞ்சாயத்து நடக்குமோ என்று யோசித்துப் பார்த்தான். என்ன நடந்தாலும் தான் அவர்களின் வழிக்கு செல்ல போவதில்லை என்ற எண்ணம் அவனுக்கு புன்னகையை தந்தது. தனது அப்பாவிடம்தான் கொஞ்சம் திட்டுகள் வாங்க வேண்டி இருக்கும் என்று யூகித்தான்.

ரோசினி கண் விழித்த போது மணி ஒன்பதை கடந்து விட்டிருந்தது. தன் வீட்டில் இருப்போருக்கு தான் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை என்று யூகித்துக் கொண்டாள்.

எழுந்து நின்றவள் அருகே மேஜை மேல் இருந்த ஐபாட்டை கண்டு அதை ஒலிக்க விட்டாள். பாடலுக்கு பதிலாக பூர்ணிமாவின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

'எவ்வளவு பெரிய வானம்ன்னா.. முடிவிலியாய் இருக்கும் அது. அந்த வானத்துல இரண்டு நட்சத்திரங்கள் இருக்கும். அது நீயும் நானும்..' பூர்ணிமா சொன்னதற்கு சிரித்தான் பாலா. 'தூரத்துல இருந்து பார்க்கத்தான் நட்சத்திரங்கள் அருகருகே இருக்கும். பக்கத்துல போய் பார்த்தா இரண்டும் ரொம்ப இடைவெளி இருக்கும். நமக்கு அப்படி இருக்கணுமா?' சிரித்து விட்டு கேட்டான்.

'ம்கூம்.. அவ்வளவு பெரிய வானத்துல நீயும் நானும் தூரமா இருப்பது விசயம் இல்ல. நீயும் நானும் மட்டும் இருப்பதுதான் விசயம்.. உனக்கு ரசனை பத்தல பாலா..' அவளின் குற்றச்சாட்டுக்கு மீண்டும் சிரித்தவன் 'அதெல்லாம் எக்கச்சக்கமா இருக்கு.. நீயும் நானும் மட்டும் இருக்கோம்ன்னா தூரம் ஒரு விசயமா?' எனக் கேட்டான்.

'அதேதான்.. காதல்ல எதுவுமே மைனஸ் கிடையாதா பாலா. நீயும் நானும் ப்ளஸ்.. நமக்கு வர இன்ப துன்பங்கள் கூட ப்ளஸ்தான்..' பூர்ணிமா சொன்னது கேட்டு ரோசினியின் இதழ்களில் புன்னகை பூத்தது.

சாதனத்தை அணைத்தாள். அதற்கு மேல் கேட்பது நாகரீகம் இல்லையென்று நினைத்தாள்.

அந்த அறையை விட்டு அவள் வெளியே வந்தபோது வீடு காலியாக இருந்தது. மேஜையின் மீது காகிதம் ஒன்று காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. எடுத்துப் பார்த்தாள்.

"சாப்பாடு கிச்சன்ல இருக்கு. பாத்ரூம் வீட்டுக்கு பின்னாடி இருக்கு. பின் கதவை மட்டும் யூஸ் பண்ணு. யார் வந்து கதவை தட்டினாலும் கதவை திறக்காத.. நீ இங்கே இருக்கும் விசயம் யாருக்கும் தெரியல. அது அவங்களுக்கு தெரியும் வரை நீ வெளியே வந்து மாட்டிக்காத.." என்று எழுதி இருந்தான்.

அவளது போனை வீட்டிலேயே தொலைத்து வந்திருந்தாள். போன் இருந்தால் அருளுக்கு அழைத்து பார்த்திருக்கலாம் என்று நினைத்தாள். இப்போது அவன் எங்கிருக்கிறானோ என்ற நினைப்பு அவளுக்கு கவலையை தந்தது.

உணவை உண்டு‌ விட்டு அமைதியாக கட்டிலில் முடங்கினாள். அப்பா மாமாவெல்லாம் ஏன் தன் காதலை புரிந்துக் கொள்ளவில்லை என்றெண்ணி மனதுக்குள் மருகினாள்.

பூர்ணிமா கல்லூரி பேருந்திற்காக காத்திருந்த நேரத்தில் அவளருகே வந்து நின்றான் உதயா.

"ஹாய்.." என்று கையை அசைத்தான். அவன் பேசும் போது அவனின் கன்னங்கள் வெட்க சிவப்பு பூசியது.

"க்யூட்டா இருக்கான்.!" தன்னை மீறி முனகியவளை கண்டு வெட்கத்தோடு தரை பார்த்தான் அவன். "தேங்க்ஸ்.!" என்றான்.

'கேட்டுடுச்சி..' என்று நாக்கை கடித்துக் கொண்டவள் "ஏரியாவெல்லாம் செட் ஆகிடுச்சா?" என விசாரித்தாள்.

"ஆச்சி சீனியர்.." என்றவன் அடுத்து என்னவோ கேட்க முயலும் முன் அவர்களின் பேருந்து வந்து முன்னால் நின்றது. இருவரும் ஒன்றாக பேருந்தில் ஏறினர்.

எப்போதும் இருவர் சீட்டில் அமர்ந்திருக்கும் ஸ்டெல்லா இன்று மூவர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பூர்ணிமாவுக்கு ஜன்னலோர இருக்கையை கை காட்டினாள். பூர்ணிமா ரகசிய புன்னகையோடு சென்று அமர்ந்துக் கொண்டாள்.

"தம்பி.. நீ வேணா இங்கே உட்காருப்பா.." தனது மறு பக்க இருக்கையை கை காட்டினாள் ஸ்டெல்லா.

"தேங்க் யூ.!" என்றபடி அமர்ந்தான் உதயா.

அவனைப் பற்றிய தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தாள் அவள்.

'அவனோட மொத்த சரித்திரம் பூகோளம் தெரிஞ்சிக்கிட்ட பிறகுதான் இவளுக்கு தூக்கம் வரும்.!' என நினைத்துச் சிரித்தபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் பூர்ணிமா.

மாலையில் வீடு திரும்பிய பாலா தான் வாங்கி வந்திருந்த பழங்கள் நிறைந்த கவரை ரோசினியிடம் தந்தான்.

"எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல மாமா.." என்றவளுக்கு மீண்டும் விழிகள் நனைந்தது.

"பரவால்ல விடு.. உன் குடும்பம் ஊர் முழுக்க உன்னை தேடிட்டு இருக்காங்க.. நாளைக்கு கண்டிப்பா இங்கே வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்.. ஆனா நீ பயப்பட வேண்டியது இல்ல.." என்றவன் தனது ஷூவை கழட்டி ஓரமாக வைத்தான்.

"உன் லவ்வர் இன்னும் அவனோட வீட்டுக்கும் போகல.. எங்கேயோ மிஸ் ஆகிட்டான். எந்த ஹாஸ்பிட்டலுயும் அவன் சிகிச்சை எடுத்துக்கவும் இல்ல.. வெளியூர் போயிட்டானா இல்ல உன் குடும்பத்து கையில் மாட்டிக்கிட்டானான்னு சரியா தெரியல. சரியான தகவல் கிடைக்காம நாமும் எதுவும் செய்ய முடியாது.." என்றான்.

ரோசினி புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள். 'கடவுளே.. எப்படியாவது அருளை காப்பாத்தி கொடுத்துடு.. அவன் நல்லா இருக்கணும்..' என்று வேண்டிக் கொண்டாள்.

அம்மாவிற்கு போன் செய்தவன் இரவு உணவு தேவையில்லை என்று சொல்லி விட்டான். பிறகு அவனே வீட்டில் இருந்த பொருட்களை கொண்டு சமைத்து முடித்தான்.

மகன் காலையிலேயும் இப்படியே சொல்லி விட்டானே என்று செண்பகத்திற்கு சந்தேகம் எழுந்தது.

ரோசினி பயத்தோடே உணவை உண்டு விட்டு உறங்கச் சென்றாள்.

பாலா பூர்ணிமாவின் புகைப்படத்தை தன் போனில் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவளின் சிரிப்பொலி அவனின் செவிகளை சுற்றி வந்து ரீங்காரமிட்டது.

நேரம் கடந்துக் கொண்டிருந்தது. அதன் உணர்வே இல்லாமல் இருந்தவன் கைபேசியின் அழைப்பொலியில் சுயநினைவுக்கு திரும்பினான். பூமாறன்தான் அழைத்திருந்தான்.

காலையிலேயே ரோசினி இங்கிருப்பது பற்றியும், ஓடி போய் விட்ட மாப்பிள்ளையை பற்றியும் தம்பியிடம் தகவல் சொல்லி விட்டிருந்தான் பாலா.

"அண்ணா.. நீ சொன்ன மாதிரியே அவனை எல்லா இடத்திலும் தேடி பார்த்தேன். அப்புறம்.." என இழுத்த தம்பியிடம் "விசயத்தை சொல்லு!" என்றான்.

"இருக்கான் அண்ணா.. அவனோட நர்ஸ் பிரெண்ட் வீட்டுல காயத்துக்கு டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கான். ஆனா நான் கூப்பிட்டா வர மாட்டேங்கிறான்.." என்றான் சோகமாக.

"புரியல மாறா.."

"அவனுக்கு பயமா இருக்காம்.. இனி ரோசினி தனக்கு வேணாம்ன்னு சொல்றான்.."

"அவனை இழுத்துட்டு வா.!" என்று அழைப்பை துண்டித்த பாலா வேங்கையாக எழுந்து நின்றான்.

'பொண்ணுங்களை நம்ப வச்சி ஏமாத்துறானுங்க..' என்று பற்களை அரைத்தான்.

மணி பதினொன்றை தாண்டிய சமயத்தில் உறங்கிக் கொண்டிருந்த ரோசினியை எழுப்பினான் பாலா.

"என்ன மாமா?" என்று எழுந்து அமர்ந்தவளிடம் "கொஞ்சம் வெளியே வா.!" என்று விட்டு நடந்தான்.

கண்களை கசக்கிக் கொண்டு வெளியே வந்த ரோசினி பூமாறனின் அருகே நின்றிருந்த அருளை கண்டதும் பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? நீ நல்லா இருக்க.. தேங்க் காட்.." என்று அழுது தீர்த்தவள் சில நிமிடங்களுக்கு பிறகு அவனை விட்டு விலகி நின்றாள். இவ்வளவு நேரம் அவன் தன்னை திருப்பி அணைக்காதது இப்போதுதான் ஏதோ நெருடல் போல அவளுக்குத் தோன்றியது.

அவனின் இறுகிய முகத்தை கவனித்தவள் "என்னாச்சி அருள்?" எனக் கேட்டு அவனின் கன்னத்தில் கை பதித்தாள்.

ஆனால் அவன் நெருப்பு தன்னை தீண்டியது போல் உணர்ந்து பின்னால் விலகி நின்றான்.

நாளைக்கு ஒருநாளைக்கு மட்டும் யூடி வராது. அஞ்சி நாள் முன்னாடி மின்சாரம் இல்ல. அதான்

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN