குரங்கு கூட்டம் 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கரப்பான் பூச்சியை கண்டு பயப்படும் பெண் எப்படி ஒரு மாஃபியா தலைவனை கொன்றிருப்பாள் என்று நினைத்த சித்து கேலியாக மிருத்யூவை பார்த்தான்.

"நீ சொல்வதை என்னால நம்ப முடியல.." என்றான் உதட்டை நாவால் நக்கியபடி.

'நம்பற மாதிரி கதை சொல்ல எனக்கு எப்படிடா வரும்? நான் ஹிஸ்டிரியில் பெயில் ஆகற பையன்டா!' என்று பரிதாபத்தோடு மனதுக்குள் சொன்னவன் "அவ ரொம்ப நல்ல பொண்ணு.." என்று மீண்டும் எழுதிக் காட்டினான். இப்போது மிருதுளாவை காப்பாற்றுவதை விட தன்னை ஓர் அறியா பிள்ளையாக காட்டிக் கொள்வதில்தான் புத்திசாலிதனம் உள்ளது என்று நம்பினான் அவன்.

"ஒருவேளை இவளுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியலையோ.." என்று தன் ஆட்களிடம் கேட்டான் சித்து.

மிருத்யூ ஆமென்று தலையசைக்க இருந்த நேரத்தில் அவனின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டான். ஒற்றை அறையில் இரண்டடி தள்ளி தரையில் விழுந்தான் மிருத்யூ. ஒற்றைக் கையால் கன்னத்தைத் துடைத்தபடி இவன் புறம் பார்த்தான். ரொம்ப பரிதாபமாக இருந்தது சித்துவுக்கு.

ஆனால் அவன் குனிந்து மிருத்யூவின் தோளைப் பற்றி தூக்கி நிறுத்தினான்.

"நான் ரொம்ப கோபத்துல இருக்கேன் டார்லிங்.. நீ உண்மையை சொல்லிட்டா நான் உன்னை மன்னிச்சி விட்டுடுவேன்.." என்றான் கொஞ்சலாக.

'கையில் கத்தியையும் துப்பாக்கியையும் வைத்துக் கொண்டு எவன் ஒருவன் சமாதானம் சொல்லுகிறானோ அவன் நிச்சயம் எதிராளியை கொன்று விடுவான்!' எப்போதோ எங்கேயோ படித்த வாசகம் மிருத்யூவுக்கு நினைவில் வந்தது.

'தப்பிக்கணும்.. எப்படியாவது தப்பிக்கணும்..' என அவன் நினைத்த நேரத்தில் அந்த அறையின் கதவு படீரென திறக்கப்பட்டது.

'மிருது குரங்கும் மாட்டிக்கிச்சா?' என்று கவலையோடு திரும்பிப் பார்த்தான். திறந்த கதவின் வழியே சம்பத் வந்துச் சேர்ந்தான்.

'வாடா.. என் பிரெண்டுக்கு சக்காளத்தியனே. உன் ஒருத்தனை போட்டுட்டா இந்த மொத்த பிரச்சனையும் தீர்ந்துடும்.. ஆனா உன்னைப் போட ஒரு சான்ஸ் கிடைக்க மாட்டேங்குதே!' என்று கவலைப்பட்ட மிருத்யூவின் முன்னால் வந்து நின்றான் அவன்.

"இவதான் என் பிரதரை கொன்னது.." என்று பாய இருந்தவனை கை காட்டி நிறுத்தினான் சித்து.

"இது மிருணா.." என்றான்.

"அதுக்கென்ன?"

"உன் அண்ணனை கொன்னது இவளோட டிவின் சிஸ்டர்.. இவ கிடையாது.." என்றவனை முறைத்துப் பார்த்த சம்பத் பட்டென்று ஒரு அறையை சித்துவின் கன்னத்தில் தந்தான்.

"நான் அவளைதானே பிடிச்சி வைக்க சொன்னேன்?" என்றான் ஆத்திரத்தோடு.

"ஆள் அனுப்பி இருக்கேன்.!" என்றபடி தன் கன்னம் பற்றிய சித்து "இவ என் லவ்வர்.. இவகிட்ட கேட்டா உண்மையை சொல்லுவான்னு கூட்டி வந்திருக்கேன்.!" என்றான்.

"நீ நிச்சயம் லூசுதான்.!" என்றபடி தனது துப்பாக்கியை கையில் எடுத்தான் சம்பத்.

"இவளோட சிஸ்டர் என் பிரதரை கொன்னு இருக்கா.. நீ இவளையும் சேர்த்து கொன்னிருக்கணும்.. ஆனா கூப்பிட்டு வச்சி கொஞ்சிக்கிட்டு இருக்க.. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?" எனக் கேட்டவன் துப்பாக்கியை மிருத்யூவின் கழுத்தில் பதித்தான்.

"எதுக்கு என் பிரதரையும், என் ஆட்களையும் கொன்னிங்க?" என அதட்டிக் கேட்டான்.

"பாஸ்.. இந்த பொண்ணு ஒரு ஊமை.." சித்துவின் ஆள் ஒருவன் சொன்னது கேட்டு சந்தேகத்தோடு மிருத்யூவை பார்த்தான் அவன். அப்பாவி போல இமைகளை மூடி திறந்து நின்றுக் கொண்டிருந்தான் மிருத்யூ.

"ஊமையா நீ?" எனக் கேட்டவன்‌ சட்டென்று அவனின் விலா எழும்பில் குத்தினான்.

வலியோடு முகத்தை அஷ்ட கோணலாக்கிய மிருத்யூ மயங்குவது போல அப்படியே தரையில் சாய்ந்தான்.

"மிருணா.." அவனின் அருகே மண்டியிட்டான் சித்து. அவனின் கன்னத்தில் தட்டினான். மூடிய விழிகளை திறக்கவில்லை அவன்.

'இந்த மொத்த பிரச்சனையும் முடியும் வரை மயங்கியே நேரத்தை கடத்திடு மிருத்யூ.. இவனுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு சின்னாபின்னமாகுவதை விட இப்படி கனவுலயே ரோஜாவோடு டூயட் பாடிட்டு போயிடலாம்.!' என்று நினைத்து தன் நாக்கை இறுக்கமாக கடித்தான்.

சித்து கோபத்தோடு எழுந்து நின்றான்.

"எதுக்கு இவளை அடிச்ச? ஒரு ஊமை பொண்ணுக்கிட்ட உன் வீரத்தை காட்டி இருக்க.." என்று சீறினான்.

சம்பத் தன் துப்பாக்கியை இவன் புறம் காட்டினான். "ஊமை பொண்ணுக்கிட்டதானே வீரத்தை காட்டி கூடாது. உன்கிட்ட காட்டலாம் இல்ல?" எனக் கேட்டான்.

வாயை விட்டு விட்டோமோ என்று சித்து நினைத்த நேரத்தில் "இன்னும் அஞ்சி நிமிசத்துல அந்த கொலைக்கார பொண்ணு இங்கே இருக்கணும்!" என்று தன் ஆட்களிடம் கட்டளையிட்டான்.

அனைவரும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து ஓடினார்கள்.

'கொலைக்கார பொண்ணு.. உன் பட்டப்பெயர் கூட நல்லாதான் இருக்கு மிருது!' என்று நக்கலாக நினைத்துப் பார்த்தான் மிருத்யூ.

"அர்வியோ பிரேமோ மட்டும் இந்த கன்னத்தை இப்படி பார்த்தாங்கன்னு வை.. அப்புறம் இந்த வீடு தலைகீழா மாறுவது நிஜம்.." என்று கவலையோடு சொன்ன மிருதுளா கன்னத்தில் இருந்த காயத்தை அலங்கார பொருட்களின் உதவியோடு மறைத்துக் கொண்டாள்.

"உண்மைதான்.." என்ற ரோஜா காயம் இப்போது தெரிகிறதா என்று கவனித்துப் பார்த்தாள்.

சிபி தயாராகி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவளின் மடியில் அமர்ந்திருந்த நிலா நிமிடத்திற்கு ஒரு முறை அவளுக்கு முத்தங்களை தந்துக் கொண்டிருந்தாள்.

"இவளுக்கு தாய்ப்பால் மறக்கடிச்சிட்டாயா?" ரோஜாவின் கேள்வியில் நிமிர்ந்த சிபி சங்கடமாக ஆமென்று தலையசைத்தாள்.

"இவங்களுக்கு கொழுப்பு ரோஜா.. ஒரு குழந்தையை அவங்க இஷ்டத்துக்கு பெத்து அவங்க இஷ்டத்துக்கு வளர்த்தி இருக்காங்க.. இவங்க மட்டும் சந்தன கொடிக்கால்ல இருந்திருக்கணும்.. அப்ப தெரிஞ்சிருக்கும் கச்சேரி.." சமயம் கிடைத்தது என்று திட்டித் தீர்த்தாள் மிருதுளா.

"மாம்மா.." சிபியின் வயிற்றில் முகம் புதைத்து எழுந்த நிலா மிருதுளாவுக்கு கண்ணாமூச்சி காட்டினாள். மிருதுளாவின் கோபம் மறைந்து இதழில் தானாய் புன்னகை வந்துச் சேர்ந்தது.

"இவளுக்காக உங்களை மன்னிச்சி விடுறேன்!" என்றபடி வந்து நிலாவை தூக்கிக் கொண்டாள்.

அனைத்து இடங்களிலும் தேடி முடித்து விட்டு கடைசியாக சிபியின் அறை கதவை வந்து தட்டினார்கள் சம்பத்தின் ஆட்கள்.

கதவை திறந்த சிபியிடம் "அண்ணி.. உங்க பிரெண்ட் மிருதுளாவை எங்களோடு அனுப்பி வைங்க.!" என்றார்கள்.

"எதுக்கு?" சிபியின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாதவர்கள் "நீங்க அதை சம்பத் சார்க்கிட்ட கேட்டுக்கோங்க.." என்றனர்.

மிருதுளா குழப்பத்தோடு அவர்களைப் பார்த்தாள். அவளின் அருகே வந்த ரோஜா குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

ஒருவன் உள்ளே நுழைந்து மிருதுளாவின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான். மிருதுளா திகிலோடு தோழிகளை பார்த்தார்கள்.

ரோஜா அவசரமாக மிருத்யூவுக்கு அழைத்தாள். ஆனால் எதிர் முனையில் எந்த சத்தமும் வரவில்லை. அதன் பிறகுதான் அவன் அனுப்பியிருந்த செய்தியை படித்தாள்.

"அருமையா எழுதியிருக்கான். ஆனா எனக்கா எழுதினான்? நம்பவே முடியல.!" என்று ஆச்சரியத்தோடு சொன்னாள்.

'அடிப்பாவி!' என நினைத்தபடியே பிரேமுக்கு அழைத்தாள் சிபி.

பலரின் முன்னால் தியானத்தில் அமர்ந்திருந்தான் பிரேம். உள்ளாடைக்குள் இருந்த போன் அதிர்ந்தது. இந்த நேரத்தில் யார் அழைப்பது என்ற சந்தேகத்தோடு எழுந்து நின்றான்.

"சாமி அதுக்குள்ள எங்கே கிளம்பிட்டிங்க?" எனக் கேட்டான் ஒருவன்.

"பாத்ரூம்.!" என்றுவிட்டு நடந்தவன் "சாமிக்கு பாத்ரூம் கூட‌ வருமா?" என ஒருவன் கேட்டதை கண்டு அதிர்ந்து நின்றான். திரும்பிப் பாரத்தவன் இப்படியொரு அறிவாளிதனமான கேள்வியை கேட்டவனை முறைத்தான்.

'எதுக்கு இந்த வீட்டுக்கு வந்திருக்கோம்ங்கறதையே மறந்துட்டானுங்க இவங்க.. விட்டா கல்யாணத்தை ஓரம் கட்டிட்டு இங்கேயே ஒரு சாமியார் மடம் ஆரம்பிச்சி பிசினஸை தொடங்கிடுவானுங்க.. எவனுக்குமே சுய புத்தி வேலை செய்றது இல்ல போல..' என்றுக் கடுப்போடு திட்டினான்.

"சாமியார்ன்னாலும் பசிக்கும்.. பாத்ரூம் வரும்டா.." என்றான் இன்னொருவன்.

'இங்கே இருந்தா நாம கிறுக்கு ஆகிடுவோம்.!' என்று பயந்தபடி அருகே இருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தான் பிரேம்.

"சம்பத் ஆளுங்க மிருதுவை கூட்டிப் போயிருக்காங்க.." சிபி சொன்னது கேட்டு எரிச்சலானவன் 'இருக்கற பிரச்சனையில் இவ வேற சீனியரோடு சேர்ந்துக்கிட்டு இல்லாத சாகசமெல்லாம் பண்ணிட்டு இருக்கா..' என்று தோழியை திட்டி தீர்த்தான்.

ராகுலுக்கு அழைத்து விசயத்தை சொன்னான்.

"நான் பார்த்துக்கறேன் பிரேம்.." என்றவனிடம் "என் பிரெண்ட் எந்த பிரச்சனையும் இல்லாம இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் சீனியர்.‌ இல்லன்னா நடக்கறதே வேற.." என்று விட்டு இணைப்பைத் துண்டித்தான்.

"பொண்ணு கடத்த வந்தவனெல்லாம் நமக்கு கட்டளையிடுறான்.!" என்று முனகிய ராகுல் ஜீவனிடம் விசயத்தைச் சொன்னான்.

"சித்துவோட ரூம்லதான் இருப்பாங்க.." என்ற ஜீவன் தன் அதிகாரி குமரனுக்கு கைபேசியில் அழைத்தான். அவர் அழைப்பை ஏற்கவேயில்லை.

"ஆபிசர் குமரனை நம்பினோர் கை விடப்படார்ன்னு நான் வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒருத்தன் சொன்னான்.. அவன் மட்டும் இப்ப என் கையில் கிடைச்சான்னா கண்டம் துண்டமா வெட்டிப் போட்டுடுவேன்.!" என்றான்.

உதட்டை சுழித்தபடி அவனைப் பார்த்த ராகுல் "அப்படி சொன்னது நான்தான்.. வருசம் ஆனதுல மறந்துட்ட நீ.!" என்றான்.

"ஓ. சாரிப்பா.!" என்று நாக்கை கடித்துக் கொண்ட ஜீவன் தனது துப்பாக்கியை எடுத்து உடையில் மறைத்துக் கொண்டான்.

சித்துவின் அறை கதவை திறந்ததும் மிருதுளாவை வேகமாக தரையில் தள்ளினான் அவளை அழைத்து வந்தவன். பொத்தென்று வந்து விழுந்தவள் எரிச்சலோடு எழுந்து நின்றாள்.

"*** எதுக்குடா என்னை இப்படி பிடிச்சி தள்ளி விட்ட?" என்றாள் கோபத்தோடு.

மயங்கி இருப்பதாக தரையில் படுத்திருந்த மிருத்யூ 'வந்துட்டாளா.. பாவம் இவனுங்க..' என்று பரிதாபப்பட்டான். 'அவளோட ஆயுதமே அவ வாய்தான்.. அந்த வாய்லயிருந்து வரும் வார்த்தைகளால் எத்தனை பேர் கடுப்பாக போறாங்களோ.? அவ பேசுறதுக்கு என்னை வச்சி செய்யாம இருந்தா சரி.!' என்று கவலைப்பட்டான்.

அங்கிருந்த அனைவரையும் நோட்டம் விட்ட மிருதுளா தரையை மட்டும் பார்க்காமல் போய் விட்டாள்.

"எதுக்குடா என்னை இங்கே கூட்டி வந்த?" என்றவளின் அருகே வந்த சம்பத் "எதுக்குடி இப்படி கத்தற?" எனக் கேட்டு கையை ஓங்கினான்.

ஓரடி‌ பின்னால் நகர்ந்து நின்றவள் 'ஏற்கனவே இவனோட ஆளுங்க அறைஞ்சதுல கன்னம் பன்னு மாதிரி இருக்கு. இதுல இவனோட அறைதான் குறைச்சலா?' என்றுக் கடுப்பானாள்.

"தப்பிக்க பார்க்கறியா?" எனக் கேட்டவன் தன் துப்பாக்கியை கையில் எடுத்தான்.

"நீதானே என் பிரதரை கொன்ன.. எதுக்குடி அவனை கொன்ன?" எனக் கேட்டு அவளின் நெற்றியில் துப்பாக்கியின் முனையை பதித்தான்.

மிருதுளா தனக்குள் சாந்தமாக முயன்றாள். 'மிருதுளா புத்திசாலியா இரு..' என்று சொல்லிக் கொண்டாள்.

"நீங்க என்ன சொல்றிங்க.? நான்.. அதுவும் நான் சரத்தை கொல்லுவேன்னு நினைச்சிங்களா? அவரும் நானும் கல்யாணம் பண்ணிக்க இருந்தோம்‌. அவரை கல்யாணம் பண்ண பிறகு நான் இந்த மாஃபியா கும்பலில் பாதி பேருக்கு மகாராணி ஆகியிருப்பேன். என் இழப்பு என்னன்னு மத்தவங்களை விட உங்களுக்கு நல்லா தெரியும். எல்லாம் தெரிஞ்சிருந்தும் நீங்க இப்படி கேட்கறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்று தன் விழிகளை துடைத்துக் கொண்டாள்.

'யப்பா சாமி.. இவ நடிப்பை பார்க்கறதுக்கு பதிலா நான் இப்படி தரையோடு புதைஞ்சி போகலாம்..' என்று மிருத்யூ எரிச்சலாக எண்ணினான்.

"இத்தனைக்கும் காரணம் சித்து மட்டும்தான். அவன்தான் சரத்தை கொன்னான். எல்லாம் பண்ணிட்டு இன்னைக்கு ஒன்னும் தெரியாதது போல சும்மா நிற்கிறான்.." என்ற மிருதுளா சித்துவின் அருகே வந்து அவனின் சட்டையை பற்றினாள். "சொல்றா.. ஏன்டா என் சரத்தை கொன்ன?" என்றுக் கேட்டு கதறினாள்.

நாளைக்கு ஒருநாளைக்கு மட்டும் யூடி வராது. அஞ்சி நாள் முன்னாடி மின்சாரம் இல்ல. அதான்

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN