பௌர்ணமி 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அருளின் முகம் போன போக்கை கண்டு பாலாவுக்கு கோபம் வந்தது.

அவனின் பின்னங்கழுத்தில் கை பதித்தவன் "பொண்ணுங்களை நம்ப வச்சி ஏமாத்துறதுதான் உன் வேலையாடா?" எனக் கேட்டான்.

"என்னை விடுங்க.." அவனின் கையை தட்டி விட்டுவிட்டு ரோசினியிடம் வந்தான் அருள்.

"ரோசினி.. நான் இப்படி ஒரு முடிவுக்கு வருவேன்னு கனவுல கூட நினைச்சிப் பார்த்தது இல்ல. ஆனா எனக்கு வேற வழி இல்ல.. நாம பிரியறதுதான் நல்லது.!" என்றான் தாழ்ந்த குரலில்.

ரோசினி விசும்பினாள். அவன் சொன்னதை அவளால் துளியும் நம்ப முடியவில்லை.

"ஆனா ஏன் பிரியணும்?"

"சேர்ந்து சாவதை விட பிரிஞ்சி வாழ்வது நல்லது. உயிரை விட்டு காதலை ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியம் என்ன? இரண்டு பேரும் உயிரோடு இருப்பதுதான் இப்ப முக்கியம்.. என் காதலை விட நம்ம உயிர்தான் எனக்கு ரொம்ப முக்கியம்.." என்றான் கண்டிப்புடன்.

"அருள்.. நீ என்னை ரொம்ப லவ் பண்ற.. அப்புறம் ஏன் இப்படிச் சொல்ற?" எனக் கேட்டாள் விழிகளை துடைத்தபடி.

"பிராடை காதலிச்சி வச்சிருக்க.." பாலா சொன்னது கேட்டு அவனை முறைத்தான் பூமாறன்.

"உன் அவசர குடுக்கை முடிவை இங்கேயும் எடுக்காத அண்ணா.." என்று கண்டித்தவன் "அருள்.. நீங்க கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.." என்றான்.

"வேணாம்‌‌ சார்.." என்று தலையசைத்தவன் "இவ உயிரை விட எனக்கு வேற எதுவுமே முக்கியம் கிடையாது.." என்றான்.

பாலாவும் ரோசினியும் புரியாமல் அவனைப் பார்த்தனர்.

"நான் நல்லா யோசிச்சிட்டேன் ரோசினி. உன் குடும்பம் இப்படின்னு தெரிஞ்சிருந்தா சத்தியமா நான் உன்னை லவ் பண்ணி இருக்க மாட்டேன்.. நாம சேர்ந்துட்டா உன் குடும்பம் நம்மை எப்போதும் வாழ விடாது. நீ உயிரோடு இருக்கணும்ன்னா நான் பிரிஞ்சாகணும்.. நான் சாகறதை பத்தி கவலை இல்ல. ஆனா நீ சாக கூடாது.." என்றவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான். "அந்த குழந்தையை கலைச்சிடு.." என்றான்.

ரோசினி சிலை போல நின்றிருந்தாள். அதிர்ச்சியில் மூளை செயல்பட மறுத்தது.

பாலாவோ என்ன பேசுவது என்று கூட தெரியாமல் இருந்தான்.

"நம்ம காதலை விட இந்த உயிர் முக்கியமா?" ரோசினியின் கேள்வியில் பாலாவும் பூமாறனும் அதிர்ந்து போனார்கள்.

"ஏதோ வேற டைமன்சன்ல வாழுற பொண்ணு போல.." கிண்டலாக சொன்ன அண்ணனை முறைத்த பூமாறன் "லவ்வுன்னு வந்துட்டா இப்படிதான்.. நீ அமைதியா இரு.." என்றான்.

"நான் தெளிவா சொல்லிட்டு இருக்கேன். எனக்கு உன்னை விட எதுவும் முக்கியம் இல்ல. உனக்காகதான் நான் உன்னை விட்டுப் போறேன்.." என்ற அருள் திரும்பினான்.

ரோசினி குலுங்கி அழுதாள். "விட்டுப் போகாத அருள்.." என்றுக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவள் அழுவதை காண சகிக்காத பாலா "விடு.. அவன் போனா போறான்.‌ உனக்கு வேற நல்ல பையன் கிடைப்பான்.." என்றான்.

"இந்த வார்த்தையை எங்க அத்தை பூரணிக்கிட்ட சொல்லியிருந்தா ஆகியிருக்கும்.." கேலியாக சொன்ன தம்பியை திரும்பிப் பார்த்து முறைத்த பாலா‌ "வாயை மூடு.." என்று அடக்கினான்.

"அந்த பையனை கன்வின்ஸ் பண்ணி எங்கேயாவது பாதுகாப்பான இடத்துல தங்க வச்சிட்டு வரேன்.." என்று வெளியே ஓடினான் பூமாறன்.

ரோசினி அழுதபடியே தரையில் அமர்ந்தாள்.

"சரி சரி அழாத.. இவனை மாதிரி ஒருத்தனை காதலிக்கும் முன்னாடியே நீதான் புரிஞ்சிக்கிட்டு இருக்கணும்.." என்றான் பாலா.

நிமிர்ந்துப் பார்த்த ரோசினி "எல்லாம் இந்த குடும்பத்தாலதான்.. உங்களுக்கு எல்லாரையும் ஆட்டி வைக்கணும்.. யாரும் ப்ரியா இருக்கவே கூடாது.." என்று கத்தினாள். இவன் மீதும் சேர்த்து பழி போட்டாள்.

நகைத்தான் பாலா. "தைரியம் இல்லாதவனை காதலிச்சது உன் தப்பு!" என்றான்.

"ஓ.. அப்படின்னா உங்களை போல தைரியமா இருக்கணுமா? கட்டின பொண்டாட்டியை துரத்தி விட்ட நீங்களும் கோழைதான்..!" அழுதபடியே சொன்னாள்.

'உன்னை இந்த வீட்டுல தங்க வச்சதுக்கு நீ இன்னமும் கூட பேசுவ!' என்று நினைத்தவன் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து அவளின் முன்னால் வைத்தான்.

"பிரகனென்டா இருக்க.. அழுது செத்துடாத.." என்றான்.

ரோசினிக்கு அதன் பிறகுதான் அவனின் கருணை தன் மீது அல்ல, பிறக்காத இந்த சிசுவின் மீது என்றுப் புரிந்தது.

தொழிற்சாலை சாலையில் நடந்துக் கொண்டிருந்த அருளின் அருகே தன் காரை நிறுத்தினான் பூமாறன்.

"வாங்க.. நான் உங்களை டிராப் பண்றேன்.!" என்று அழைத்தான்.

திரும்பிப் பாரத்தவன் தயங்கினான்.

"உங்க சேப்டிக்குதான் கூப்பிடுறேன்.. நீங்க நல்லா இருந்தாதானே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் கண்டுபிடிக்க முடியும்.?'' என்றவன் அவனுக்காக கதவை திறந்து‌ விட்டான்.

அருள் காரின் கதவை தொட இருந்த நேரத்தில் அவனை நோக்கி பாய்ந்து வந்தது ஒரு கத்தி. வந்த கத்தி அவனின் மறு பக்க தோளில் குத்தி நின்றது. கத்தி சிறியதாக இருந்தாலும் காயம் சற்று ஆழமாக விழுந்து விட்டது.

பூமாறன் பதறியபடி கீழே இறங்கி நின்றான். அவனின் சின்ன தாத்தா குடும்பத்தில் இருக்கும் அனைத்து ஆண்களும் அங்கே இருந்தார்கள். அனைவர் கையிலும் ஆயுதம் இருந்தது.

அருளின் குறுக்கே புகுந்து நின்றான் பூமாறன்.

"வேணாம் மாமா.. வேணாம் சித்தப்பா.. போலிஸ் கேஸ் ஆக்க வேணாம்.. நல்ல முறையா பேசி தீர்த்துக்கலாம்.." என்றான்.

ரோசினியின் அப்பா முன்னால் வந்தார். "இவனை கொன்னுட்ட பிறகு எந்த கேஸ் வேணாலும் பார்க்கலாம். பிரச்சனையே இல்லை.!" என்றார்.

அவரின் கையில் இருந்த பெரிய அருவாளை கண்டு மிடறு விழுங்கிய பூமாறன் "இவனும் ரோசினியும் இப்ப பிரிஞ்சிட்டாங்க மாமா. இவனை போக விட்டுடலாம்.." என்றான் கெஞ்சலாக.

ரோசினியின் பெரிய மாமா சந்தேகமாக இவர்கள் இருவரையும் பார்த்தார்.

"உண்மையா?" எனக் கேட்டார்.

ஆமென தலையசைத்தவன் "பாவம் இவன்.. இவனை கொன்னு நீங்க யாரும் ஜெயிலுக்கு போக வேணாம்.." என்றான்.

அதே வேளையில் ரோசினியின் அண்ணன் தன் அருவாளை வீசி விட்டிருந்தான்.

"டேய்.." பூமாறன் அலறியபடி திரும்பிப் பார்த்தான். தரையில் கிடந்தான் அருள். அவனின் நெஞ்சில் புதைந்து கிடந்தது அருவாள். ரத்தம் அவனை சுற்றி பரவிக் கொண்டிருந்தது. ரோசினியின் அண்ணன் அருகே வந்தான். தன் அருவாளை மீண்டும் கையில் எடுத்தான். அருவாள் பிடுங்கப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் ஆறாய் ஊற்றெடுத்தது.

அருளின் கையை பிடித்து நாடி பார்த்தவன் "செத்துட்டான்.." என்றான் தன் தாத்தாவிடம்.

"சரி வாங்க போகலாம்.." என்றவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

பூமாறன் அதிர்ச்சியில் வாயை பொத்தியபடி அருளைப் பார்த்தான். அவனுக்கு கண்கள் இரண்டும் கலங்கி விட்டிருந்தது. காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்திருந்தான் இவன்.

நடுங்கும் கரங்களோடு பாலாவுக்கு போன் செய்தான். விசயத்தை சொன்னான். மறுபக்கம் பாலா ரோசினியை பரிதாபத்தோடுப் பார்த்தான்.

விசயத்தை அவளிடம் தயங்கி தயங்கிச் சொன்னான். ரோசினி அதிர்ச்சியோடு எழுந்து நின்றாள். மயக்கம் வருவது போலிருந்தது அவளுக்கு.

போனில் இருந்த பூமாறன் "அண்ணா மூச்சு வருது.." என்றான் சிறு குரலில்.

பாலாவுக்கும் ஆச்சரியம்.

"நீ இங்கேயே இரு..‌ நான் போய்ட்டு வரேன்.." என்று கிளம்பினான்.

"நானும் வரேன் மாமா.." என்ற ரோசினியை முறைத்தவன் "உங்க தாத்தா, அப்பா, மாமாவெல்லலாம் உன்னை பார்த்தாங்கன்னா அடுத்த செகண்ட் உன் லைஃப் என்னாகும்ன்னு தெரியாது. ஒரு மனுசனை கொலை பண்ணியிருக்காங்க அவங்க. அவங்க இன்னும் எது வேணாலும் செய்வாங்க. கொஞ்சமாவது புரிஞ்சிக்க டிரை பண்ணு.." என்றவன் அவளை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினான்.

பாலா தன் வீட்டை விட்டு வெளியே ஓடினான். தொழிற்சாலை சாலையில் திரும்பியவுடனேயே அவர்கள் இருவரையும் பார்த்து விட்டான்.‌ அவர்களிடம் ஓடினான்.

"ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணியா?" எனக் கேட்டான்.

"ம்.. ஆனா என்ன பிரயோசனம்? இவன் பிழைக்கிறது ரொம்பவும் கஷ்டம். அதையும் மீறி இவன் பிழைச்சாலும் கூட இவன் உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சதும் அவங்க கொல்லதான் போறாங்க.." விரக்தியாக சொன்ன தம்பியின் தோளை தொட்டவன் "நீ சொல்றதும் சரிதான். ஆனா இவனுக்கான மருத்துவத்தை நாம தந்துதான் ஆகணும்.." என்றான். தனது போனை எடுத்து சுகனுக்கு அழைத்தான். விசயத்தை சொன்னவன் அவனிடம் சிறிது நேரம் பேசி விட்டு திரும்பி வந்தான்.

"சுகனோட வொய்ப் இவனுக்கு ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க.. இவனை நாம காப்பாத்தி ஆகணும்.." என்றான் தம்பியிடம்.

பூமாறன் தலையை பிடித்தபடி காரோடு சாய்ந்து தரையில் அமர்ந்தான். அவன் அதிகம்‌ பயந்து விட்டான் என்பதை புரிந்து கொண்ட பாலா அவனின் முன்னால் அமர்ந்து அவனை அணைத்துக் கொண்டான்.

"சாரி.. நான் உங்கிட்ட ஹெல்ப் கேட்டதாலதான் இப்படி நீ பயந்துட்ட.." என்று மன்னிப்பு கேட்டான்.

பூமாறன் நிமிர்ந்து அண்ணனை முறைத்தான். "குழந்தை மாதிரி என்னை ட்ரீட் பண்றதை நிறுத்து.. என் இடத்துல யார் இருந்தாலும் இப்படி பயந்திருப்பாங்க.." என்றான்.

பாலா புரிந்ததாக தலையசைத்தான்.

ஆம்புலன்ஸ் சற்று நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தது. அருளை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். அங்கேயே முதல் சிகிச்சையும் தொடங்கியது.

சுகனின் புகுந்த வீடு ஒரு மருத்துவ குடும்பம். மாமனார், மாமியார், மச்சினர்கள், மனைவி என அனைவரும் மருத்துவர்கள். நகரத்திற்குள் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றும் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. இதுநாள் வரை நண்பனின் மாமனார் மருத்துவமனை பக்கம் காய்ச்சலுக்கு கூட சென்றதில்லை. இப்போது அருளை உயிரோடு மீட்க வேண்டி இருந்தது.

சுகனின் மனைவி மித்ரா வாசலில் காத்திருந்தாள். ஆம்புலன்ஸில் இருந்து இவர்கள் இறங்கியதும் அருளை ஸ்டெச்சரில் இறக்கி உள்ளே எடுத்துச் செல்ல சொல்லி அங்கிருந்தவர்களிடம் சொன்னாள்.

"என்னாச்சி?" எனக் கேட்டாள்.

நடந்ததை முழுதாக விவரித்தான்.

"ஸ்டேசன்ல கம்ப்ளைண்ட் பதிவு பண்ணுங்க.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "முடியாது.. அப்புறம் எங்க சின்ன தாத்தா வீட்டை சேர்ந்தவங்க இவனை கொன்னுடுவாங்க.." என்றான்.

"ஒருவேளை இவன் செத்துட்டா அப்புறம் போலிஸ் எங்களை விசாரணை செய்யும் பாலா.." இவள் பிரச்சனையை விவரித்து சொல்ல முயன்றாள்.

"ப்ளீஸ் மித்ரா.. இவன் செத்துட்டான்னு வெளியே நம்ப வைக்கலன்னா அவங்க இவனை கொன்னுடுவாங்க. நீதான் காப்பாத்தணும்.." என்றான்.

யோசித்தாள் மித்ரா.

"சரி.. ஆனா நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா நீதான் பார்த்துக்கணும்.!" என்றுச் எச்சரித்தாள்.

பிறகு அந்த மருத்துவமனையிலேயே அருளுக்கு சிகிச்சை நடைப்பெற்றது. ஆனால் மருத்துவமனை ஏட்டில் அவனின் பெயர் மாற்றி பதியப்பட்டது.

"ரிஸ்க் எடுக்கறோம் அண்ணா.." என்றபடி அண்ணனோடு அவனது வீட்டிற்கே வந்துச் சேர்ந்தான் பாலா.

இருவரும் இரவு பத்து மணிக்குதான் வீடு வந்திருந்தனர். வீட்டில் ரோசினி மட்டும் இருப்பாள் என்று எதிர்பார்த்தவர்கள் அங்கே அவளின் மொத்த குடும்பமும் இருப்பது கண்டு வியந்தனர்.

"இங்கே என்ன பண்றிங்க?" எனக் கேட்டவனின் அருகே வந்த தாத்தா அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

"வயசு பொண்ணை மூனு நாளா உன்னோடு வச்சிட்டு இருந்திருக்க.. இது தப்புன்னு தெரியாதா?" எனக் கேட்டார்.

'ஏதோ புது‌ வம்பு.!' என நினைத்தான் பூமாறன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN