பௌர்ணமி 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தனது கைபேசியே எடுத்தான் பூமாறன்.

"விசயத்தை நான் பூரணிக்கிட்ட சொல்றேன்.!" என்றான்.

போனை தன் கையில் பிடுங்கினான் பாலா.

"வேணாம்.." என்றான் அதட்டலாக.

தம்பி அவனை முறைத்தான்.

"இப்பவே அவக்கிட்ட சொன்னாதான் உன் பைத்தியம் தெளியும்.."

பாலா முகத்தை தேய்த்துக் கொண்டு ரோசினியை கை காட்டினான். "இவ சாகணும்ன்னு ஆசைப்படுறியா?" எனக் கேட்டான்.

பூமாறன் முறைத்தான்.

"ஆனா அதுக்காக நான் பூரணியை பலி தர முடியாது.." என்ற தம்பியின் தோளை பற்றியவன் "என்னை நம்பு.. அவளை நான் வேணும்ன்னுதான் அங்கேயே விட்டு வச்சிருக்கேன். அவளும் இப்போதைக்கு அங்கேயே இருப்பதுதான் சரி. எங்களுக்கு டைவர்ஸ் ஆகல மாறா.. எங்களுக்குள்ள ஏகப்பட்ட கோபம், சண்டை இருக்கு. ஆனா பிரிய மாட்டோம். பிலீவ் மீ. இதை இப்போது விட்டுடு. அவகிட்ட நான் மெதுவா பேசிக்கிறேன்.!" என்றான்.

"என்னவோ.." என்றவன் தன் போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

இரண்டு நாட்கள் கடந்து விட்டது. ரோசினியை பாலா அழைத்து வந்து வைத்திருப்பது பற்றியும், அவன் அவளை திருமணம் செய்துக் கொள்ள இருப்பது பற்றியும் தன் தாய் தந்தையிடம் சொல்லி விட்டான் பூமாறன்.

"அவனுக்கு‌ பைத்தியம் பிடிச்சிருக்கு.." அப்பாவும் திட்டி வைத்தார்.

"பூரணி பாவம்.!" பிரியா சொன்னது கேட்டு பூமாறனுக்கும் உள்ளம் உடைந்தது.

அன்று மாலையில் பூமாறன் பாலாவை தேடிச் சென்றான். ரோசினி கழுத்தில் புது மஞ்சள் கயிற்றோடு கதவை திறந்தாள். அவளுக்கு பின்னால் நின்றிருந்த அண்ணனை முறைத்தவன் கோபத்தில் உச்சத்தில் கலங்கும் தன் கண்ணீரை வெளி காட்டாமல் அங்கிருந்து திரும்பி நடந்தான். அவன் தன் வாகனத்தில் ஏறும் முன் அவனுக்கு முன்னால் குறுக்கே வந்து நின்றான் பாலா.

"மாறா.."

அண்ணனை நோக்கி வேகமாக வந்தவன் அவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். பாலா மல்லாந்து தரையில் விழுந்தான். அவனின் நெஞ்சில் ஏறி அமர்ந்தவன் கையை மடக்கி அண்ணனின் கன்னத்தில் நான்கைந்து குத்துகளை தந்தான்.

"நீ ஒரு சைக்கோ.." என்றான். அவனால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதை.

தம்பியை தடுக்க முயன்றானே தவிர அவனை திருப்பி தாக்கவில்லை பாலா. வெறுத்துப் போய் அவனை தள்ளி விட்டுவிட்டு தூரமாய் தரையில் அமர்ந்தான் பூமாறன்.

"சொல்ல சொல்ல கேட்கல இல்ல நீ.. உனக்கு எங்க யார் மேலேயும் அக்கறை கிடையாது. ரோசினிக்கு நீ ஏன் வாழ்க்கை தரணும்?" கத்தினான்.

பாலா தடுமாறி எழுந்து அமர்ந்தான். உதட்டில் இருந்து வழிந்தது ரத்தம். கன்னத்தில் கருப்பாக தடம் பதித்து விட்டது.

"கொஞ்ச நாள் தள்ளிப் போட்டிருக்கலாம்.. அந்த பையன் எழுந்து வந்து இவளை கூட்டி போகும் வரை இவங்களை ஏமாத்தி இருக்கலாம்.." என்ற தம்பியிடம் மறுப்பாக தலையசைத்தவன் "நானும் அப்படிதான் நினைச்சேன். ஆனா நேத்து தாத்தாவும் மாமாவும் வந்து கலாட்டா பண்ணாங்க. அதான் கடுப்புல தாலியை கட்டிட்டேன்.!" என்றான். அதே நேரத்தில் எழுந்து நின்று அவனின் அடி வயிற்றில் உதை விட்டான் பூமாறன்.

"அந்த தாலியை அவளே கட்டிக்கிட்டான்னு நீ சொல்வேன்னு கடைசி கடைசியா எதிர்பார்த்தேன். எல்லாத்தையும் உன் எடுத்தோம் கவுத்தோம் முடிவால அழிச்சிட்ட. ஒழிஞ்சி போ.. இனி எப்பவும் என் முகத்துல விழிக்காத.. ஐ ஹேட் யூ.." என்றவன் எழுந்து அங்கிருந்து நகர்ந்தான்.

பாலா அடிவயிற்றை பிடித்துக் கொண்டு தம்பியை வெறித்தான். அவனின் வாகனம் இவனின் கண்களை விட்டு மறைந்தது.

"மாமா.." ஓடி வந்தாள் ரோசினி. அவனை தூக்க முயன்றாள்.

"நான் மேனேஜ் பண்ணிப்பேன். என்னை விடு.!" என்றவன் கையை ஊன்றி எழுந்து நின்றான். உடம்பில் நிறைய வலித்தது.

"என்னாலதான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்.. சாரி மாமா.!" கண்ணீர் விட்டபடி அவனின் உதட்டு காயத்தை சுத்தம் செய்தாள் ரோசினி.

"நான் பார்த்துப்பேன் நீ விடு.." என்றவனின் பேச்சை காதில் வாங்கவில்லை அவள்.

"என் பிரச்சனையில் நீங்க ரொம்ப சிரமப்படுறிங்க.." என்றவளின் கையில் இருந்த பஞ்சை வாங்கியவன் "ஒரே விசயத்தை சொல்லி சொல்லி நீயும் டார்ச்சர் பண்ணாத. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். இதுல எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நீ போய் உன் வேலையை பார்.." என்றான்.

அன்று இரவு மருத்துவமனையிலிருந்து பாலாவுக்கு அழைப்பு வந்தது. உடனே மருத்துவமனைக்கு ஓடினான்.

"அந்த பையன் கண் விழிச்சான்.." என்ற மித்ராவை நம்பிக்கையோடு பார்த்தவன் "எப்ப எழுந்து உட்காருவான்.?" எனக் கேட்டான்.

மித்ரா வருத்தமாக தலையசைத்தாள்.

"இப்ப அவன் கோமாவுக்கு போயிட்டான்.!"

பாலா அதிர்ந்துப் போனான். "என்ன சொல்ற?" என்றான் கோபத்தோடு.

"அவனுக்கு அவ்வளவு காயம். அவனால் மட்டும் என்ன செய்ய முடியும்? இந்த மூணு நாள்ல இன்னைக்கு மட்டும் ஒன்னு இரண்டு செகண்ட் கண் விழிச்சான். ஆனா மறுபடி எப்ப கண் விழிப்பான்னு தெரியாது. அவன் உடம்புல இருக்கும் காயங்கள் முதல்ல குணமாகணும். அதுக்கு பிறகுதான் நாம எதையும் சரியா சொல்ல முடியும்.. அடுத்த வாரத்துல நீ அந்த பொண்ணை செக்கப் கூட்டி வா.." என்றவள் தனது வேலையை கவனிக்க சென்று விட்டாள்.

பாலா ஐசியூ கதவின் வழியே பார்த்தான். நிறைய வயர்களும், பைப்களும் இணைக்கப்பட்டு மயங்கி கிடந்தான் அருள்.

பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பினான்.

பூர்ணிமா தியேட்டரில் அமர்ந்திருந்தாள். இருள் சூழ்ந்திருந்தது. இடப்பக்கம் ஸ்டெல்லாவும்,‌ வலப்பக்கம் உதயாவும் அமர்ந்திருந்தார்கள். இந்த மூன்று நாட்களில் இவர்களோடு நன்றாக நெருங்கி விட்டான் உதயா.

அதிகம் வெட்கப்பட்டான். வார்த்தைகளை அளந்து பேசினான். பெண்கள் இருவரிடமும் புன்னகையோடு பழகினான்.

ஸ்டெல்லாவுக்கு அவன் மீது ஈர்ப்பு வந்து விட்டதை பூர்ணிமாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை ஆண்டுகளாக சினிமா கதாநாயகர்களை கூட ஏறெடுத்துப் பார்த்து ரசிக்காத தோழி முதல் முறையாக ஒரு பையன் மீது காதல் வயப்பட்டு உள்ளாளே என்று பூர்ணிமாவும் மகிழ்ந்தாள்.

ஸ்டெல்லாவின் தொல்லை தாங்காமல்தான் இப்போது திரைப்படம் பார்க்க வந்திருந்தாள் பூர்ணிமா. இதற்கு முன் அம்மா இப்படி இரவில் திரைப்படம் பார்க்க அனுப்பியதில்லை. ஆனால் இன்று எதிர் வீட்டு பையனை நம்பி அனுப்பியிருந்தார்கள். ஆனால் அதற்கும் ஓரவஞ்சனை நிரம்பிய உலகம் என்று வீட்டில் கூப்பாடு போட்டு விட்டுதான் வந்திருந்தாள் இவள்.

"பாப்கார்ன்.." தன் கையில் இருந்த சோளப்பொரியை நீட்டினான் உதயா. ஆனால் பூர்ணிமாவுக்கு முன்னால் முந்திக் கொண்டு ஸ்டெல்லா சோளப்பொரியை அள்ளினாள்.

"ரொம்ப அலையாத.. அப்புறம் அந்த பையன் பயந்து ஓடிட போறான்.!" தோழியிடம் எச்சரித்தாள் பூர்ணிமா.

"நடுவுல உட்கார்ந்து எனக்கு தடை போடுறது நீதான்.!" ஸ்டெல்லா சீறவும் அவளின் கையை கிள்ளி வைத்த பூர்ணிமா "இந்த பையன் இன்னைக்குதான் முதல் நாள் நம்மோடு வெளியே வந்திருக்கான். உன்னை நம்பி பக்கத்துல உட்கார வச்சா அப்புறம் உன் சேட்டை எந்த லெவலுக்கும் போகும். அந்த பையன் நிச்சயம் பயந்துடுவான். நீ கொஞ்சமாவது டைம் கொடு.." என்றாள்.

ஸ்டெல்லா தோழியை முறைத்தபடியே திரைப் பக்கம் திரும்பி அமர்ந்தாள்.

பூர்ணிமா தன் போன் ஒலிப்பது கண்டு அதை கையில் எடுத்தாள். பூமாறன் அழைத்திருந்தான்.

"ஹலோ.." என்றாள்.

"ஹலோ.. ஹலோ.. பூரணி.." எதிர் முனையில் கத்தினான் அவன்.

"மாமா இங்கே சரியா கேட்கல. நான் கொஞ்ச நேரம் கழிச்சி பண்றேன்.!" என்றவள் இணைப்பைத் துண்டித்துக் கொண்டாள்.

"எங்கேயோ டவர் கிடைக்காத இடத்துல இருக்கா.." போனை தூக்கிக் கட்டிலில் வீசி விட்டு கவலையோடுச் சொன்னான் பூமாறன். அவனருகே அமர்ந்திருந்த பிரியா "அப்புறம் சொல்லிக்கலாம்.." என்றாள்.

இரவு நேர சாலை. இரு சக்கர வாகனங்களும், மற்ற வாகனங்களும் சாலையில் நெரிசல் இன்றி சென்றுக் கொண்டிருந்தன.

பூர்ணிமா குளிர் காற்றுக்கு உடல் சிலிர்த்து, தன் துப்பட்டாவை கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டாள்.

"குளிருதா? என் ஜாக்கெட் போட்டுக்கோங்க.." என்று தனது தோல் ஜாக்கெட்டை கழட்டி நீட்டினான் உதயா.

பூர்ணிமா அதை வாங்கி தோழியிடம் தந்தாள். ஸ்டெல்லா தன்னை அணிய விட மாட்டாள் என்று அவளுக்கே தெரியும்.

"நீ போட்டுக்கோ.!" என்றாள். உதயாவின் முகம் வாடியதை அப்போது அந்த இருவருமே பார்க்கவில்லை.

பேருந்து வந்து நின்றது. மூவரும் ஏறி அமர்ந்தனர்.

பார்த்து வந்த திரைப்படத்தைப் பற்றி விவாதித்தபடி வந்தனர் ஸ்டெல்லாவும் உதயாவும். பூர்ணிமா வழக்கம் போல ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இரவை ரசித்துக் கொண்டு வந்தாள்.

வானில் நிலவு அழகாக தெரிந்தது.

தன் அப்பாவின் வீட்டில் இருந்த போது இதுபோல் ஓர் இரவில் உணவை முடித்துக் கொண்டு இவள் அறைக்கு செல்ல, அதே நேரத்தில் தூரத்தில் நாய் ஒன்று சத்தமாக ஊளையிட்டது. பூர்ணிமாவுக்கு பயம் இல்லையென்றாலும் கூட இந்த நாயின் ஊளை மனதை என்னவோ செய்து விட்டது. ஆனாலும் அதை பெரிதுப்படுத்தாமல் நடந்தவள் சட்டென்று விளக்கு அணையவும் அதே இடத்தில் நின்று விட்டாள்.

தந்தையின் புகைப்படத்தின் முன்பு மட்டும் ஒரு சிறு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அந்த விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் சிறு சிறு பொருட்களும் கூட பூதாகரமாக தெரிந்தன.‌ ஆனாலும் அவள் நின்றிருந்த இடம் வரை எட்டவில்லை வெளிச்சம்.

"பாலா.. டார்ச் ஆன் பண்ணு.!" என்றவளின் காதோரத்தில் உப்பென்று‌ காற்று வந்து மோதியது. காதை தேய்த்து விட்டுக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். இருளில் எதுவும் புலப்படவில்லை. அவளின் காலில் என்னவோ ஊர்ந்தது. அவசரமாக காலை உதறி விட்டுவிட்டு நகர்ந்தவளின் கழுத்தில் விளையாடியது ஒரு கரம்.

"பாலா.. விளையாடாத. பயமா இருக்கு.!" என்றவளுக்கு யாரும் மறுமொழி சொல்லவில்லை.

மீண்டும் நாய் வித்தியாசமாக ஊளையிட்டது. காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டவள் "பாலா.. எங்கடா இருக்க?" என்றுக் கத்தினாள்.

சமையலறையில் பாத்திரங்கள் உருட்டப்படும் சத்தம் கேட்டது. அருகில் சுவற்றில் இருந்த பல்லி வேறு சத்தமிட்டது. பூர்ணிமாவுக்கு அழுகை வர இருந்த அந்த நேரத்தில் விளக்குகள் அணைத்தும் பளிச்சென்று எரிந்தன.

தந்தையின் புகைப்படத்தையும், மொத்த ஹாலையும் நோட்டம் விட்டவள் அறையை நோக்கி திரும்பினாள்.

"ப்பே.." என்று கதவின் பின்னால் இருந்து துள்ளி குதித்தான் பாலா.

அவன் முன்னால் வந்ததும் பயத்தில் கண்களை மூடிக் கொண்டு "ஆஆ.." என்றுக் கத்தினாள் இவள். அவசரமாக வந்து அவளின் வாயை பொத்தினான் பாலா.

"என்னாச்சி பூரணி?" சமையலறையிலிருந்து வெளியே ஓடி வந்தாள் அல்லி. அவளின் கைகளில் சோப்பு நுரை இருந்தது. பாத்திரம் துலக்கி கொண்டிருந்தபோது மின்சாரம் அணைந்துள்ளது. அதனால்தான் அந்த பாத்திரம் உருளும் சத்தமும் கூட கேட்டுள்ளது.

"சும்மாக்கா.." என்ற பாலா பூர்ணிமாவை இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

"ஆளையே அடிச்சி சாப்பிடும் அளவுக்கு வாய் இருக்கு. ஆனா கொஞ்சமாவது தைரியம் இருக்கா?" எனக் கேட்டான் கிண்டலாக.

அவனின் கையை தட்டி விட்டவள் "நான் சொல்ல சொல்ல கேட்காம நைட்டெல்லாம் ஹாரர் மூவியா ஓடவிட்டு என்னையும் பார்க்க வச்சது நீ. அதே மைன்ட் செட்ல இருந்தா பயமா இருக்காதா?" எனக் கேட்டுச் சீறினாள்.

"எனக்கு பயமா இல்ல.." என்று வாயை நெளித்து சொன்னவனின் மீது பாய வந்தாள் இவள். அருகில் நெருங்கியவளை அப்படியே பிடித்து கட்டிலில் தள்ளி விட்டவன் அவளருகே பொத்தென்று விழுந்தான்.

அவன் சொன்ன கதைகள் அனைத்திலும் அழுத்தமான காதல்தான் இருந்தது. அவனின் பேச்சில், செய்கையில், விளையாட்டில் என அனைத்திலும் ஆளுமை செய்தபடியே அளவில்லா காதலை வழங்கிக் கொண்டிருந்தான். அந்த ஆளுமை அவளுக்கு சற்று நெருடலாக இருந்தது. அதை தன் கையில் எடுத்து விட வேண்டி முயன்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் மொத்தமாகவே பிரிந்து விட்டார்கள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN