என்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நினைவுகள் – 9

நந்து சிறு வயதிலிருந்தே சிறந்த ஹாக்கி வீரன். இந்திய அளவில் பல போட்டிகளில் கலந்து, பல பரிசுகளைப் பெற்றுள்ளான். அவன் வாழ்வில் மட்டும் அப்படி ஒரு துயரச்சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் இன்று உலக அளவில் பங்கேற்று சாதித்திருப்பான். ஆனால் விதியின்சதியால் இன்று பயிற்சியாளராக இருக்கிறான்.

அதன் பிறகு வந்த நாட்கள் வழக்கப்படி தான் சென்றது. கணவன் மனைவி இருவரும் என்ன தான் தனிமையில் நீ யாரோ நான் யாரோ என்றிருந்தாலும் நான்கு பேர் மத்தியில் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் தேவைக்கு பேசிக் கொண்டு தான் இருந்தார்கள். வீட்டில் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் காலையில் சென்று மாலை தான் வருவார்கள் என்பதால் காலையிலேயே மதியத்துக்கான வேலை முடிந்து விடவும் ஈஸ்வரி இல்லாத வீட்டில் பாட்டியிலிருந்து சிந்துஜா வரை ஏன் சுந்தரிக்குக் கூட எது தேவையென்றாலும் யாழினி தான் முன் நின்றாள்.

காந்திமதியைப் பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸை உத்ராபதி நியமித்திருந்ததால் மாமியாரைப் பார்த்துக் கொள்ளும் சிரமம் அவளுக்கு இல்லாமல் போனது. தினமும் இரவு தலையணை இல்லாமல் படுப்பது யாழினிக்கு வழக்கமாக இருந்தாலும், அதெல்லாம் நடுநிசி வரை தான். பிறகு கணவனிடமிருந்து தலையணை எடுத்துக் கொண்டு படுப்பது என்றானது. நந்துவுக்கு இது தெரிந்திருந்தாலும் தெரிந்த மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் ஒரு நாள் மதியம் யாழினியின் போனுக்கு ஈஸ்வரியிடமிருந்து அழைப்பு வரவும்

“யாழினி!” என்று கவலையுடன் அழைத்தது அவளின் குரல்.

“என்ன ஆச்சுஅண்ணி? எங்கேயாவது வலிக்குதா?” என்று இவள் பதற
“எனக்கு ஒன்னும் இல்லை... அனேகமா இன்று சாயந்திரம் நந்து சீக்கிரமா ஆபீஸ் முடிந்து வந்திடுவான். அப்படி வந்தா நீ கொஞ்சம் கூடவேயிருந்து பார்த்துக்கோ யாழினி. நான் உனக்கு சொல்ல வேண்டாம், நீ பார்த்துக்குவ. இருந்தாலும்... நான் இல்லாம அவன் எப்படி இருப்பானோ? சோறு தண்ணி கூட இல்லாம என் மடியிலேயே படுத்திட்டு இருப்பான். நாளையோடு அந்த சம்பவம் நடந்து இரண்டு வருஷம் ஆகப் போகுது. ஆனாலும் நந்துவால் அதிலிருந்து வெளியே வர முடியலை...” என்று இந்தப் பக்கம் பேச இடமே கொடுக்காமல் குரலில் வலியுடன் பேசியவள், சற்றுத் தயங்கி “யாழினி…!” என்றழைக்க,

“சொல்லுங்க அண்ணி...” இவளிடம் படபடப்பு

“நாளைக்கு அவன்... அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போவான்... அப்போ நீ... கொஞ்சம் கூடப் போறியா?” என்று தயங்கித் தயங்கி தர்மசங்கடமான குரலில் கேட்கவும்

“அண்ணி இதை நீங்க சொல்லனுமா? வாழ்நாள் முழுக்க அவர் கூட துணையா இருப்பேனு சொல்லி வந்தவ அண்ணி! நாளைக்கு மட்டும் விட்டுவிடுவேனா? நீங்க எதைப்பற்றியும் கவலைப் படாமல் இருங்க, நான் பார்த்துக்கிறேன்” என்று ஈஸ்வரிக்குத் தைரியம் சொன்னாள் யாழினி.

தன் வழக்கத்திற்கு முன்பாகவே வீட்டுக்கு வந்த நந்தா உடை கூட மாற்றாமல் கட்டிலில் அப்படியே படுத்துக் கண்களை மூடிக் கொள்ள, கணவன் தூங்கவில்லை என்றாலும் அவன் முகத்தில் தெரிந்த இறுக்கத்தையும் சோர்வையும் பார்த்து அவனை எழுப்பத் தயங்கியவள், உடனே சிந்துஜாவைத் தூக்கி வந்து அறையில் விட்டுவிட்டு மறைந்து நிற்க

உள்ளே வந்த குழந்தையோ சின்ன தகப்பனின் வயிற்றில் ஏறி அமர்ந்து கொண்டு “நந்து பா! வந்ததிலிருந்து நீ ஏன் என்னைப் பார்க்கலை. நான் இன்னைக்கு ரைம்ஸ் கத்துகிட்டேன்… உனக்கு சொல்லவா?” என்று தன் மழலையில் கொஞ்ச

அதில் சற்றே தெளிந்தவன் “ஓகே டா செல்லம்! சொல்லுங்க… அதற்கு முன்னே நந்துப்பா ரெஸ்ட்ரூம் போய்ட்டு வந்திடுறேன். நீங்க ஹாலுக்குப் போங்க. சரியா?” என்றவன் அதன் படியே வர, தான் கற்றதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள் சின்ன வாண்டு.

அதில் நேரம் நகர, விஜியும் விஜயனும் வரவும் அவர்கள் பங்கிற்கு பெண்கள் இருவர் ஆண்கள் இருவர் என கேரம் விளையாட, பிறகு வந்த கிருஷ்ணாவும் சந்தியாவும் அவர்களுடன் சேரவும், இப்போது கார்ட் விளையாட ஆரம்பித்தார்கள்.

“தியா! நீ தப்பா விளையாடற” என கிருஷ்ணா மனைவியிடம் சொல்ல

“அச்சோ! எனக்கு வர வேண்டிய கிங் பா...” இது யாழினி

“ஐயோ! விஜயன் திருட்டுத்தனமா கார்ட் எடுக்கிறான்” என விஜி போட்டுக் கொடுக்க

“போடி பஜ்ஜி! நீ பார்த்தியா?” என்று விஜயன் மழுப்ப

“செல்லாது செல்லாது… ஆட்டத்தைக் கலைங்க பா” என்ற படி சந்தியா எல்லார் கையிலிருந்தும் கார்ட்டைப் பிடுங்கிப் போட

“நோ...நோ...” என்று சிறியவர்களிருந்து பெரியவர்கள் வரை கோரசாகக் கூச்சல் போட

“என் நந்து குட்டி தான் ஜெயித்தான்” என்றார் இவர்களின் ஆட்டத்தைப் பார்த்த பாட்டி. அங்கே ஒரே சந்தோஷமும் சிரிப்பும் ஆரவாரத்தையும் பார்க்கும் போது தான் ஏன் பிடிவாதத்துடன் இந்த குடும்பத்திற்கு வந்தோம் என்பதை மனநிறைவுடன் நினைத்துப் பார்த்தாள் யாழினி.

“ஓகே.. ஓகே.. இப்ப யாழினி டைம்” என்று யாழினி கூறிய நொடி, ஆளாளுக்கு காதைப் பொத்திக் கொள்ள, நந்துவின் மடியில் இருந்த சிந்துஜாவோ தன் சின்ன தகப்பனின் காதைப் பொத்திய படி “நோ.. நோ” என்று கத்தவும்,

“இந்த அரை டிக்கெட் எல்லாம் என்னைக் கலாய்க்குது என்று கோபப்பட்டவள்

“அச்சோ! இந்த முறை ஒரே ஒரு சர்தார்ஜி ஜோக்தான்பா..” என்று சொல்லிய படி எல்லோர் முகத்தையும் பாவமாகப் பார்க்க

“சரி சொல்லு பார்ப்போம்” என கிருஷ்ணா ஆர்வத்துடன் கேட்கவும், எல்லோரும் அதில் கலந்து கொண்டார்கள்.

“ஒரு சர்தார்ஜி ஒரு நாள் கண்ணை மூடிகிட்டு கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு இருந்தாராம்.. ஏன்னு சொல்லுங்க?” என்று யாழினி கேட்க

“ம்ஊம்” என்று பதில் வர

“ஏன்னா அவர் தூங்கும் போது எப்படி இருக்கார்னு பார்த்துகிட்டு இருந்தாராம்” என்று சொல்லிச் சிரிக்க அதில் அனைவரின் முகமும் மலர்ந்தது. இந்த கலகலப்பான பேச்சு இரவு உணவுக்குப் பிறகும் தொடர்ந்தது. இன்றைய சூழ்நிலை புரிந்து வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்குமே அவரவர்களுக்குப் பிடித்த உணவை ஹோட்டலிருந்து வாங்கி வந்திருந்தான் கிருஷ்ணா.

உணவு சாப்பிடும் போது “அப்பா! இன்று உனக்கு சேலரியா? என்று சபரி கேட்க எப்போதும் மாத சம்பளம் வாங்குகிற அன்று வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் அவர்களுக்குப் பிடித்த உணவை வாங்கி வருவது கிருஷ்ணாவின் பழக்கம். எனவே அதை நினைத்து மகன் கேட்கவும் “ஆமா டா கண்ணா!” என்றான் கிருஷ்ணா.

நினைத்த நேரத்தில் நினைத்ததை சாப்பிட்டுப் பழகியிருந்த யாழினிக்கு மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் உணவை இப்படி சுற்றி உட்கார்ந்து போன முறை என் உணவில் அதிகம் பங்கு எடுத்த இந்த முறை அதை விட கூட வேணும் என்று சொல்லி சண்டை போட்டு சாப்பிடும் இவர்களைப் பார்க்கும் போது அந்த உணவு அவளுக்கு அமிர்தமாய் தெரிந்தது.

எண்பது தொண்ணூறுகளில் எந்த ஒரு ஆன்ட்ராய்டு போனும், அதிநவீன பொழுதுபோக்கு சாதனங்களும் இடங்களும் இல்லாமல் கூட்டுக்குடும்பாய் வாழ்ந்த நடுத்தர வர்க்க குடும்பங்களுக்குத்தான் தெரியும் இது எப்படிப்பட்ட சொர்க்கம் என்று! இன்று தன்னந்தனியாக வாழ்ந்து பல கோடி ரூபாய் சம்பாதித்து பீட்ஸா பர்கர் என திண்பவர்களுக்கு என்ன தெரியும் அந்த சொர்கத்தைப் பற்றி?...

படுக்கக் போகும்போது சிந்துஜாவை நந்து தங்களுடனே அழைத்து வந்து விட இருவருக்கும் நடுவில் கதை பேசியபடி அவள் தூங்கியதும், யாழினி கீழே படுக்க எத்தனிக்க..

“இப்போ எதுக்கு டி கீழே படுக்கப்போற?” என்று நந்து கேட்க

“நீங்க தானே கீழே படுக்கச் சொன்னீங்க…” இவளோ பவ்யமாக பதில் அளித்தாள்.

“சும்மா நடிக்காதடி. நல்லா தூக்கத்துல இருக்கும் போது நீ என் தலையணையையும் போர்வையையும் உருவி எடுக்கிறது எனக்குத் தெரியாதுனு நினைக்கிறியா? ஒழுங்கா பாப்பா பக்கத்தில் படுடி” என்று சொன்னவன் குழந்தை மேல் கை போட்டபடி தூங்கிவிட,

எதுவும் பேசாமல் கணவனைப் பார்த்த படியே கட்டிலில் படுத்தவள் ‘நீங்க என்கிட்ட கோபப்படும்போது எல்லாம் நம்ப சிந்துஜா கோபப்படற மாதிரியே இருக்கு பாவா. ஐயோ பாவம்! இதை நீங்க என்னைக்குத்தான் புரிஞ்சிக்க போறீங்களோ?’ என்ற படி இவளும் உறங்கிப் போனாள்.


காலையில் நந்து எழும்போதே வீட்டில் உள்ளவர்கள் குரல் ஓங்கிக் கேட்டது. “இன்றைக்கு முக்கியமான வகுப்பு எதுவும் இல்லைண்னா. சோ, நான் இருக்கிறேன்” என்று விஜயன் சொல்ல

“இல்லைங்க… நான் இருக்கேன்” இது சந்தியா.

“யாரும் வேணாம், நந்து கூட நான் இருக்கேன். நீங்க எல்லோரும் கிளம்புங்க” என்று கிருஷ்ணா முடிக்க

இதுவரை இதையெல்லாம் உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த நந்து, அவர்கள் அன்பில் நெஞ்சடைக்க வெளியே வந்தவன் “அண்ணா! நீங்க எல்லாரும் கிளம்புங்க. என்னை இன்னும் இரண்டு வருடத்துக்கு முன்பு இருந்த நந்தனாவே நினைத்து இருக்கீங்களா? அதான் என்னைய கவனிக்கிறதுக்குனு ஒருத்தியைக் கட்டி வைத்திருக்கீங்க இல்லை? பிறகு என்ன?” என்று சத்தம் போட்டவன் திடீரென பக்கத்திலிருந்த யாழினியின் இடையில் கை போட்டு தன்னுடன் இழுத்தவன் அவள் முகம் பார்த்து “நீ என்னைப் பார்த்துக்க மாட்டியாடி?” என்று அதே அதட்டலுடன் கேட்க, என்ன சொல்லுவாள் அவள்? அவள் தவமிருப்பதே அதற்குத் தானே? வார்த்தை வராமல் கண்ணில் நீர் முட்ட கணவனை நிமிர்ந்து பார்த்துத் தலையசைத்தாள் அவனின் மனையாள்.

பிறகு என்ன? இதை வார்த்தையாகச் சொல்லவில்லை என்றாலும் அவன் பார்த்த பார்வையே அங்கிருந்தவர்களுக்கு உணர்த்த, அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

காலை உணவுக்குப் பிறகு கணவனைச் சோர்ந்து இருக்க விடாமல் அவனுடன் சேர்ந்து மதியம் வரை தோட்டத்தைச் சுத்தம் செய்தவர்கள் குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு படுக்க, பழக்கமில்லா வேலையால் யாழினிக்குத்தான் கண்கள் சொருகியது. கணவனைப் பார்த்தபடியே அவள் தூங்கி விட

இவ்வளவு நேரம் தோன்றாத பல எண்ணங்கள் இப்போது அவன் மனதை ஆக்கிரமிக்கவும் திரும்பி மனைவியைப் பார்த்தவன் அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு அவசரமாகக் கிளம்பி வண்டி சாவியை எடுக்கும் நேரம், எழுந்து விட்டாள் அவனின் மணவாட்டி.
உடனே அவள் தன் ஆடைகளைச் சீர் செய்யவும் “எங்கடி கிளம்புற?” என இவன் உறும

“நானும் உங்க கூடத்தான் வரேன்”

“ஏய்! காலையிலிருந்து குட்டி போட்ட பூனை மாதிரி என் பின்னாடி தான சுத்திகிட்டு இருக்க? மனுஷனைக் கொஞ்ச நேரம் நிம்மதியா விடு டி” என்று இவன் பல்லைக் கடிக்க

“முடியாது... உங்க நிம்மதியே போனாலும் பரவாயில்லை. ஓன்னு நான் வரேன் இல்லை பெரிய மாமாவுக்குப் போன் பண்ணி வரச் சொல்லுறேன். அவர் வந்ததும் நீங்க அவர் கூட போங்க” கணவன் எதைச் சொன்னால் அடங்குவான் என்ற எண்ணத்தில் போனை எடுத்தவள் “மாமா தான் எதுவா இருந்தாலும் எப்போ வேண்டுமென்றாலும் அழைக்கச் சொன்னார்” என இவள் வாய்க்குள்ளேயே முனங்கவும்

“சரி சரி சீக்கிரம் கிளம்புடி...” என்றான் அவள் வார்த்தைகளை இடை வெட்டுவது போல்.

அவளும் எங்கே போகிறோம் என்று கேட்கவில்லை அவனும் எங்கே போகிறோம் என்று சொல்லவில்லை. ஆனால் இருவரிடமும் ஒரு வித இறுக்கம் மட்டும் இருந்தது.

பெசண்ட் நகர் கடற்கரையில் வண்டியை நிறுத்தியவன் எந்த பேச்சும் இல்லாமல் இறங்கி நடக்க அவளும் பின் தொடர இன்று அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவாகத் தான் இருந்தது.

‘ஆனால் அன்றைக்கு ஏன் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது? அத்துடன் அந்த லாரி வடிவில் தான் எமன் வரவேண்டுமா?’ என்று யோசித்துக் கொண்டே ஒரு இடத்திற்கு வந்ததும் அவன் அப்படியே நின்று விட,

கீகீகீஈஈஈஈ..... கிரீச்ச்ச்ச்...... என்ற சத்தத்துடன் மஞ்சள் சுடிதார் அணிந்த பெண்ணை நோக்கி வேகமாக வந்த லாரி தூக்கி அடிக்க, அதைத் தன் மனக்கண்ணில் இன்றும் நடப்பதுபோல் பார்த்தவனின் உடம்பு உதற “அம்ம்மா!” என்ற கதறலுடன் கண்களை மூடிக் கொண்டான் நந்தா.

அவன் உடல் வியர்வையால் நனைந்திருக்க “பாவா!” என்ற அழைப்புடன் கணவனின் கையோடு தன் கையை பிணைத்த அடுத்த நொடியே, “ஏய்ய்…” என்ற உறுமலுடன் தன் இயல்பையும் மீறி ஆக்கோரஷத்துடன் மனைவியின் கையைத் தட்டி விட, அவனின் வேகத்தில் ஒரு பிடிப்பு இல்லாமல் கீழே தொப்பென்று விழுந்தாள் யாழினி. கூடவே “ஐயோ பாவா!” என்று மிரட்சியுடன் கத்த, தன்னவளின் குரலில் கூட அவன் அசையாமல் நிற்கவும்,

அப்பொழுது தான் கணவனின் நிலை உணர்ந்து எழுந்தவள் மறுபடியும் தன் கையோடு அவனின் கையைப் பிணைக்க, அவனோ, அவள் விரல்களே நொறுங்கி விடும் அளவுக்கு அவளின் விரல்களை இறுக்கிப் பிடித்தான். கணவன் தன் நிலைப்பாட்டிற்கு வரும் வரை அவள் உடலும் உதறிக் கொண்டிருந்தது.

அதன் பின் அவனை அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர வைத்தவள், “பாவா! என்ன செய்கிறது? டாக்டர் கிட்ட போவோமா? மாத்திரை சாப்பிட்டீங்களா?” அவளின் பதட்டத்தைப் பார்த்ததும் இவன் “ஏன்? உங்க அம்மா சொன்ன மாதிரி பைத்தியக்கார ஆஸ்பிட்டலில் சேர்த்துட்டா நல்லதுன்னு நெனைக்கிறியா?” என்று அவளின் மீது சொற்கள் என்னும் நெருப்புத் துண்டுகளை வீச, அதன் அனலில் துடித்துப் போனாள் அவள்.

அதன் பிறகு இருவருக்குள்ளும் பேச்சே இல்லை. சற்று நேரத்திற்குப் பிறகு கிளம்பியவர்கள், ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்த அந்த வீடோ பூட்டியிருந்தது. அவன் வழக்கம் போல் தன் நெற்றித் தழும்பை வருட

“எதுக்கும் போன் செய்து பாருங்க பாவா”

“ச்சு... வேணாம்...” என்று அவர்கள் கிளம்பவிருந்த நேரம், “யாரு நந்துவா? என்னப்பா எப்படி இருக்க? ஓ... உனக்குக் கூட கல்யாணம் ஆகிடுச்சா?” என்று கிண்டலடித்தவன் “ஆமா… நீ என்ன கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடின? ஏழையா பிறந்துட்டு நீங்களெல்லாம் சாதிக்கணும்னு கனவுல கூட நினைத்தே பார்க்கக் கூடாது. அதையும் தாண்டி நீ செயல்படுத்தி வேற பார்க்க நினைத்த... நாங்க எல்லாம் யாரு? அப்படி மட்டும் நீ ஜெயித்திருந்தே, ஊக்கமருந்து பயன்படுத்திட்டேனு பொய் குற்றசாட்ட வச்சி அந்தப் பதக்கத்தை உன்கிட்டயிருந்து வாங்கியிருப்போம் இல்ல?! போ... போ... போயி, இனிமேலாவது பெரிய இடத்தில் இருக்கிறவங்களோட பகையை வளர்த்துக்காதே” என்று நந்தனின் அன்றைய நிலையை மனதில் வைத்து, விளையாட்டுக் கமிட்டியில் முன்பிருந்த ஒருவன் வம்பிழுக்க, அவனை அடித்து நொறுக்கும் ஆக்ரோஷம் நந்துவுக்கு வந்தாலும், பொது இடம் என்பதால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திய நேரம்..

“ஹலோ மிஸ்டர்!” என்று சொடக்குப் போட்டு அழைத்தவள் யாரைப் பார்த்து சாதிக்க முடியாதவர்னு சொல்றீங்க? அவரையா? அவர் எப்படிப் பட்ட சாதனையாளர்னு உங்களுக்குத் தெரிந்தால் தானே! அவர் மேலே பகைய மட்டும் வளர்த்து வச்சிருக்கீங்க... நாளைக்கு அவர் சாதிக்கிறதைப் பார்க்கத் தானே போறீங்க… அப்போ பார்த்து வயிறு எரிய போறீங்க! ஏழைக்கு லட்சியமெல்லாம் இருக்கக் கூடாதா? திறமையும் துணிவும் தன்னம்பிக்கையும் இருக்கிறவங்க யாரா இருந்தாலும் சாதிக்கலாம் புரிஞ்சிக்கோங்க. மைன்ட் இட்!” என்று இவள் பாய, அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டான் நந்து. அந்த நபரோ சத்தமின்றி ஓடிவிட

பிறகு ஒருசில இடங்களுக்குப் போனவர்கள், இரவு வீட்டிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுக்க வர சிந்துஜாவும் சபரியுமே இவர்களுடன் படுக்க வரவும், கட்டிலில் படுக்க இடம் இல்லாததால் கீழே இரண்டு பெட்டையும் இணைத்துப் போட்டு பிள்ளைகளை நடுவில் விட்டுவிட்டு இருவரும் இரண்டு பக்கமும் படுக்க,

“டேய் குண்டா! என் தலையணையைக் கொடுடா” என்று சிந்துஜா வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

“போடி மூக்கு சிந்தி! இது என்னோடது”

“டேய் பிராடு சபரி! கொடு டா” என்ற படி சின்னவள் அவனின் தலையணையை இழுக்க, தங்கை தலையில் நறுக்கென சபரி கொட்ட, “ஆஆம்மா...” என சிந்துஜா அழ ஆரம்பிக்க,

“சரிமா சரிமா… அப்பா அவனை அடிக்கிறேன் மா” என்ன தான் நந்து மகளைச் சமாதானப் படுத்தினாலும் பார்வை என்னவோ மனைவி முகத்திலேயே இருந்தது. அவர்களின் சிறு வயது நினைவுகளைச் சுமந்தவன் முகத்தில் கேலி இருக்க அதைப் பார்த்த அவன் மனைவியின் முகத்திலும் அதுவே படர்ந்தது.

“நந்து பா, அவன் பக்கத்தில் நான் படுக்க மாட்டேன். அவன் கெட்ட அண்ணா! அவன் பேச்சு கா” என்று சிந்து சிணுங்கவும்

“சரி மா, நீ இந்தப் பக்கம் படு டா” என இவன் இடம் மாற,

“யாழினி மா நானும் இந்த கூஜா பேச்சு கா. நானும் இடம் மாறி படுத்துக்கிறேன்” என்று சபரி சொல்ல, யாழினி தயங்கிய படி இருக்க,

“என்னடி தயக்கம்? வந்து படுடி...” என அதட்டும் குரல் கணவனிடமிருந்து வரவும், உடனே உருண்டு வந்து படுத்துக் கொண்டாள் யாழினி.

இருவரும் அருகருகே இருந்ததால் தூக்கமே வரவில்லை. குழந்தைகள் தூங்கியதும் அவ்வளவு நேரமிருந்த இணக்கம் மாறி, “என்னடி? நீ ரொம்ப நல்லவளா? இந்த பைத்தியத்திற்கு எல்லாம் பரிஞ்சிகிட்டுப் பேசுற! ஓஹ்… நான் உன் புருஷன் இல்ல?! அது உனக்கு இப்ப தான் தெரியுதா? நான் கூட மறந்திட்டியோனு நினைத்து வல்லாரைக் கீரை எல்லாம் வாங்கிக் கொடுக்கலாம்னு நினைத்தேன்” என்று நக்கல் நையாண்டியுடன் கூறியவன், குறிப்பால் அவள் தாயிடம் தனக்காக எதுவும் கேட்காமல் இருந்ததை மறைமுகமாக சுட்டிக் காட்ட,

யாழினியோ, ‘இவ்வளவு நேரம் இயல்பா தானே இருந்தாங்க?’ என்று யோசித்தபடி கணவனின் முகத்தையே பார்க்க, அவனோ ‘இவ்வளவு சொல்லியும் ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்து இருக்கா பாரு… திமிர் பிடித்தவ!’ என்று கடுகடுத்த படி திரும்பிப் படுக்க, வழக்கம் போல் அன்றைய இரவும் சண்டை சச்சரவுடனே கழிந்தது.

ஆனால் அதுவரை இருந்த வழக்கத்திற்கு மாறாக மறுநாளிலிருந்து மனைவியிடம் அதிக சிடுசிடுப்புடனே இருந்தான் நந்தன்.

முதலில் அவனிடம் வார்த்தைக்கு வார்த்தை பதில் கொடுத்தாலும், அவளின் தாய் சொன்ன வார்த்தைகளுக்காகத்தான் அவன் தேளாய் கொட்டுகிறான் என்பதை உணர்ந்தவள், அவனின் மனக்காயம் மற்றும் லட்சியத்தை நினைத்துப் பொறுத்துப் போக ஆரம்பித்தாள் யாழினி.

இப்படியே நாட்கள் செல்ல, நந்து டோர்னமென்ட் சம்பந்தமாக, நான்கு நாட்கள் பாண்டிச்சேரி போக வேண்டியதாக இருக்க அவர்கள் புறப்பட இருந்த நாள் அன்று பந்த் என்று ஒரு பக்கத்தினர் அறிவிக்க, அதனால் மாணவர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே செல்ல வேண்டும் என பள்ளி நிர்வாகம் முடிவு செய்யவும், அரை நாள் விடுப்பு எடுத்துப் பள்ளி சென்று அதற்கான வேலையில் இறங்கியவன், வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் சொல்ல, அவர்கள் அனைவரும் கேட்ட முதல் கேள்வியே யாழினியிடம் தெரியப் படுத்திட்டியா? என்பது தான்.

அதற்கும் ஆமாம் என்றவன் மறந்தும் மனைவிக்கு அழைத்துச் சொல்லவில்லை. மாலை விஜயன் வீட்டுக்குப் போகும் நேரத்திற்கு அழைத்து தனக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வரச் சொல்ல, நந்துவின் நல்ல நேரமோ இல்லை யாழினியின் கெட்ட நேரமோ சுந்தரியுடன் மாதாந்திர செக்கப்புக்கு ஆஸ்பிட்டல் சென்றிருந்ததால் கணவன் ஊருக்குச் செல்வது அவளுக்குத் தெரியாமலே போனது.

வீட்டிற்கு வந்தவளுக்கு கணவனைத் தவிர அனைவரும் அங்கிருப்பது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. நேரம் செல்லச்செல்ல ஏதோ வேலை, வரத் தாமதம் ஆகும் என்று நினைத்தவள், கணவனுக்காக வீட்டுக்கும் வாசலுக்கும் நடை பழக, அவர்கள் இரவு உணவு உண்ணும் நேரமும் நெருங்கியது. அனைவரும் வழக்கம் போல் அமரவும் அப்போது தான் யாழினிக்கு ஏதோ புரிவது போல் இருக்க

“யாழினி! சாப்பிட வா” என சந்தியா அழைக்கவும், எப்போதும் தான் செய்யும் இரவு உணவைச் சந்தியாவே சமைத்திருக்கிறார் என்பதை உணர்த்தவள்

“அக்கா அவர்…” இவள் சொல்லி முடிப்பதற்குள்

“அண்ணி! அண்ணன் இந்நேரம் ரீச்சாகி, சாப்பிட்டே இருப்பார். சோ நீங்க வாங்க அண்ணி, நாம சாப்பிடலாம்” என்று விஜயன் அழைக்க

‘இன்னும் வரவில்லையே?’ என்று கேட்க வந்தவளுக்கு, அப்போது தான் தெரிந்தது கணவன் எங்கோ போய் இருக்கிறான் என்று. உடனே எங்கே போனார் என்று கேட்கவிருந்த நேரம்

கிருஷ்ணாவின் கைப்பேசி அழைக்கவும், “இதோ நந்து தான்” என்ற சொல்லுடன் அதை ஆன் செய்தவன், “ரீச் ஆகிட்டியா நந்தா? ம்ம்ம்... இங்க இருக்கிற பாண்டிச்சேரி தானே? அதான் சீக்கிரம் போய் இருக்க. சாப்டியா?” நாங்க எல்லோரும் இப்போ தான் சாப்பிடப் போகிறோம். யாழினிகிட்ட பேசுறியா? என்ன, வேலை இருக்கா? நைட் யாழினி கிட்ட பேசுறியா? சரி சரி… சொல்லிடுறேன்” என்று தம்பியிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்கவும்,

அப்போது தான் யாழினிக்குப் புரிந்தது கணவன் டோர்னமென்டுக்காகப் சென்றிருக்கிறான் என்று. கணவனிடமிருந்து அழைப்பு என்றதும் முதலில் போனை வாங்க நினைத்தவள், அவன் சொல்லாமல் சென்றிருப்பது தெரிந்ததும் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

யாரிடமும் எதுவும் கேட்காமல், சிந்தனையுடன் சிலை என நிற்க, “யாழினி! சாப்பிட வா மா...” என்று சந்தியா அழைக்கவும்

சற்றே தெளிந்தவள் “இல்லைக்கா… பசி இல்லை, நீங்க எல்லோரும் சாப்பிடுங்க” என்று சொல்லும் போதே அவள் குரல் கரகரத்தது.

அதை உணர்ந்த பச்சையப்பன் “என்ன யாழினி இது? சின்னக் குழந்தை மாதிரி இருக்க! அவன் ஊருக்குப் போகணும் என்பது தெரிந்த விஷயம் தானே? என்ன ஒண்ணு… இப்போ நடக்க இருக்கிற பந்த்தினால் இன்றே கிளம்பிட்டான். உன் கிட்ட சொல்லிட்டுக் கிளம்பிய பிறகும் நீ இப்படி சாப்பிடாம இருந்தா எங்களுக்குக் கஷ்டமா இருக்காதா?” என்று அவர் சிறு கோபத்துடன் கண்டிக்கவும்

‘யாரு? உங்க பிள்ளை என் கிட்ட சொல்லிட்டுப் போனாரா? அதை நம்பித்தான் நீங்க யாரும் எதுவும் என்கிட்ட சொல்லாம இருந்தீங்களா? இப்படியெல்லாம் சொல்லி சொல்லித்தான் அந்த மனுஷன் உங்களை எல்லாம் ஏமாத்திட்டு இருக்கார்!’ கத்தவேண்டும் போல் தோன்ற அதையெல்லாம் விழுங்கியவள்,

ஒரு இயலாமையுடன் “இல்லை மாமா! நிஜமாவே எனக்குப் பசி இல்லை. நான் தூங்கப் போறேன் மாமா!” என்றவள், திரும்பிப் “பெரிய மாமா! அவர் சாப்பிட்டாரா? வேற எதுவும் சொன்னாரா?” என்று ஒரு மனைவியாக கணவனைப் பற்றிக் கேட்க

கிருஷ்ணா அதற்கான பதிலைத் தரவும் தங்கள் அறைக்கு வந்து, கதவைப் பூட்டிக் கொண்டவளின் கண்களில் நீர் மூட்ட, கதவின் மேலேயே சிறு கேவலுடன் சாய்ந்தவளின் கால்கள் துவள அப்படியே மடங்கி அழ ஆரம்பித்தாள் நந்துவின் மனையாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN