பௌர்ணமி 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மதிய நேரத்தில் தனது வகுப்பறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள் பூர்ணிமா. பாலாவின் கார் அதே இடத்தில் நின்றிருந்தது. அவனும் அதே இடத்தில் இருந்தான்.

"டார்ச்சர் பண்றான். இவன் இருந்தாலும் டார்ச்சர். இல்லன்னாலும் டார்ச்சர். பக்கத்துல இருந்தா புத்தி பழக்குறேன்னு சாகடிப்பான். தூரமா இருந்தாலும் தேடி வந்து சாகடிப்பான்.." என்று திட்டி தீர்த்தாள்.

தோழியின் தோளில் கை பதித்து இந்த பக்கம் எட்டிப் பார்த்த ஸ்டெல்லா "என் பிரதரை ரொம்ப சைட் அடிக்காத.." என்று கிண்டலடித்தாள்.

பற்களை கடித்தபடி திரும்பியவள் "சைட் அடிச்சதுதான் தப்பு ஸ்டெல்லா.. முகத்தோட அழகு மனசுலயும் இருக்கும்ன்னு நம்பிட்டேன் நான்." என்றாள் கடுப்போடு.

"கூல் டவுன் பேபி.. சாப்பிட வரியா? இல்ல கடலை போட போறியா?" டிபன் பாக்ஸை கையில் எடுத்தபடி கேட்டாள்.

பூர்ணிமா அவளை முறைத்தாள்.

"அவனோடு கடலை போட ஒன்னும் இல்ல. வா நாம் போய் சாப்பிடலாம்.." என்று கிளம்பினாள்.

உணவை முடித்துக் கொண்டு அவள் திரும்பி வந்தபோது பாலா அங்கே இல்லை. இவளும் நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள். கல்லூரி முடிய இன்னும் ஏழெட்டு மாதங்கள்தான் இருந்தன. அதன் பிறகு என்ன செய்வது என்ற யோசனைதான் அவளை யோசிக்கவே விடாமல் செய்தது.

மாலையில் கல்லூரி வாகனத்தில் அமர்ந்து பிறகு "உன் டார்லிங் பர்த்டே செலிபிரேசனுக்காக வந்திருக்காரு. இப்படி மூக்கை உடைச்சி அனுப்பிட்டியே.!" என்றாள் ஸ்டெல்லா.

இவள் இதை விடவே மாட்டாளா என்று சலித்துக் கொண்ட பூர்ணிமா "ஸ்டாப் வந்திடுச்சி. இறங்கு.." என்று தோழியை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள். அவர்களை தொடர்ந்து உதயாவும் இறங்கினான்.

மகளுக்கு பிறந்தநாள் என்று முல்லை சிறு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள். அக்கம்பக்கத்து பெண்கள் இப்போதே வீட்டில் அமர்ந்திருந்தனர்.

வாசலில்‌ வண்ண பலூன்கள் தொங்கவிடப்பட்டு இருந்தன. பூர்ணிமாவுக்கு தான் குழந்தையாகி விட்டது போல இருந்தது.

சமையல் வாசம் மூக்கை துளைத்தது.‌ "வாவ்.. யம்மி.." சாப்பிடும் முன்பே வாசனையை ருசித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.

உதயா தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றான். "அரை மணி நேரத்துல வந்துடுறேன் சீனியர்.." என்று விட்டு ஓடினான்.

பூர்ணிமா வாசலிலேயே தயங்கி நிற்க ஸ்டெல்லா மட்டும் பட்டாம் பூச்சியாய் வீட்டிற்குள் புகுந்தாள்.

"இவன் ஏன் இப்படி பண்றான்?" எரிச்சலோடு கேட்ட பூர்ணிமா வாசலின் ஓரத்தில் நின்றிருந்த பாலாவின் காரை கண்டுக் கோபமடைந்தாள்.

நெடுநேரம் யோசித்து நின்று விட்டு உள்ளே வந்தவளுக்கு ஹாலில் சோஃபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்த பாலா கையசைத்து வரவேற்றான்.

முகத்தைத் திருப்பிக் கொண்டவளுக்கு ஸ்பூனில் எதையோ ஊட்டினார் ராஜா.

சிரமத்தோடு விழுங்கியவளிடம் "இதை பார்த்தா உனக்கு அல்வா மாதிரி தெரியுதா? உன் அம்மா இதை அல்வான்னு சொல்லிதான் செஞ்சிருக்கா.." என்றார்.

அம்மாவின் சமையல் எப்போதும் ருசிக்கதான் செய்யும். ஆனால் அவள் புதிதாய் முயலுகையில் கொஞ்சம் சொதப்பலாகும். இன்றைக்கு செய்த புது அல்வாவும் சொதப்பல் பட்டியலில்தான் இணைந்திருந்தது.

"நீங்களும் நானும் மட்டும் சாப்பிட வேணாம்.." தந்தையின் காதோரம் சொன்னாள்.‌ ராஜா கட்டை விரலை உயர்த்தி காட்டி "சரி.." என்றார்.

பூர்ணிமாவுக்கான புது உடையை கட்டில் மீது வைத்திருந்தாள் முல்லை. எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். தாவணி இருந்தது. அவள் இது போல அதிகம் அணிந்ததில்லை. அம்மா ஏன் இப்படி ஒரு ஆடையை தேர்ந்தெடுத்தாள் என்ற குழப்பத்தோடு குளித்து விட்டு வந்தாள்.

உடையை அணிந்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். நன்றாகத்தான் இருந்தது. தலை பின்னி பூ முடிந்தாள். சிறு பொட்டு வைத்துக் கொண்டாள். கண் முன் இருந்த குங்குமத்தை கண்டும் காணாதது போல ஐ ப்ரோ பென்சிலை எடுத்து ஒற்றை தீட்டு தீட்டிக் கொண்டாள்.

அறையை விட்டு வெளியே வந்தவளை அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். பூர்ணிமாவுக்கு கொஞ்சம் வெக்கமாக இருந்தது.

"ராஜாத்தி மாதிரி இருக்கா.." என்றார் ஒரு பாட்டி.

"எந்த இராஜகுமாரனுக்கு கொடுத்து வச்சிருக்கோ?" எதிர் வீட்டு பெண்மணி சொன்ன அதே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தான் உதயா.

முல்லை சத்தம் வராமல் செருமினாள். எதிர் வீட்டார் புது குடித்தனம் என்பதால் அவர்களிடம் பூர்ணிமாவின் திருமணம் பற்றி இதுவரை சொல்லியிருக்கவில்லை அவள். இந்த பெண்மணி சொன்னது பாலாவுக்கு கோபத்தை தந்து விடுமோ என்று பயந்தாள் முல்லை.

ஆனால் அவனோ எதையும் காதில் வாங்காதவன் போல அமர்ந்திருந்தான். அவனின் பார்வை முழுக்க தொலைக்காட்சியில் இருந்தது. அவனின் அருகே அமர்ந்திருந்த ஸ்டெல்லா "பாஸ்.. என் செல்லத்தைதான் கொஞ்சம் பார்க்கிறது.." என்றாள்.

"நான் பார்த்தா அப்புறம் அவ பார்வையாலயே என்னை குருடாக்கிடுவா.." என்றான் இவன்.

"செமையா சொல்றிங்க அண்ணா.. உங்களோடு பேசிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.."

அவள் சொன்னது கேட்டு பாலாவின் இதழில் சிறு புன்னகை அரும்பியது. ஓரக்கண்ணால் இவனின் புன்னகையை கண்ட பூர்ணிமாவுக்கு இன்னும் அதிகமாக எரிந்தது.

"சீனியர்.. செம ப்யூட்டியா இருக்கிங்க.." உதயா அருகில் வந்து அவளின் காதோரம் சொன்னான்.

"ரொம்ப ஐஸ் வைக்காத.." சிறு குரலில் சொன்ன பூர்ணிமா மாலை நேரத்து பசியை தீர்த்துக் கொள்ள சமையலறைக்கு சென்றாள்.

"இந்த பையனைதான் நான் லவ் பண்றேன்.. பொருத்தமா இருக்கான்னா பாஸ்? அவனுக்கும் எனக்கும் ஒரே கலர், ஒரே புட், ஒரே ஹீரோதான் பிடிக்கும்.." என்று பாலாவிடம் சொன்னாள் ஸ்டெல்லா.

அவள் சொன்ன அந்த பையனை பார்த்தவன் "நல்லாருக்கான்.. இரண்டு பேரும் எவ்வளவு நாளா லவ் பண்றிங்க?" எனக் கேட்டான்.

"இன்னும் என் லவ்வை சொல்லல பாஸ்.. சீக்கிரம் சொல்லணும். ஆனா அவன் முன்னாடி போனாவே தயக்கமாக இருக்கு. வயசு வித்தியாசம் வேற.. அவன் வெஜ்.. நான்வெஜ்ஜா இருந்த நான் இப்பதான் வெஜ்க்கே மாறி இருக்கேன். வேற வேற மதம் வேற.. பிடிக்கலன்னு சொல்லிடுவானோன்னு பயமா இருக்கு.." என்றாள்.

அவளின் கையை பற்றினான் பாலா. ஸ்டெல்லா அவனை புதிதாய் பார்ப்பது போல பார்த்தாள்.

"சொல்லிடுங்க.. பிடிச்சிருந்தா நோ பிராப்ளம். அவனுக்கு உங்களை பிடிக்கலன்னா கூட நீங்க மனசை மாத்திக்க அப்புறமா டைம் இருக்கும். ஆனா நீங்க உங்க காதலை மனசுக்குள்ள போட்டு ஊற போட போட அந்த லவ் உங்களை முழுசா ஆக்கிரமிச்சிடும். அப்புறம் உங்களால அவனை மறக்கவே முடியாது. காதலிக்க காதலிக்கதான் நாம அந்த காதலுக்குள் மூழ்குவோம்.. யோசிங்க.." என்றான்.

ஸ்டெல்லா யோசனையோடு சரியென்று தலையசைத்தாள். அவன் சொல்வது சரியென்றுதான் தோன்றியது.

"நான் எடுத்துட்டு வந்த சுடிதார் நல்லா இல்லையா பூரணி?" அம்மாவின் கேள்வியில் குழம்பியவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை அப்படியே மேஜையின் மீது வைத்தாள்.

"இது நீங்க எடுத்துட்டு வரலையா?" என்றவள் நொடியில் விசயம் புரிந்து பாலாவை பார்த்து முறைத்தாள். ஆனால் அவன்தான் இவள் புறம் பார்க்கவே இல்லையே.

மகளின் பார்வை போன திசையை பார்த்த முல்லை "இது இன்னும் ரொம்ப அழகா இருக்கு.." என்றாள் அவசரமாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN