குரங்கு கூட்டம் 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மிருதுளா ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ராகுலிடம் இருந்து அழைப்பு வருமா என்று எதிர்ப்பார்த்து போனை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் அழைக்கவே இல்லை.

அதே நேரத்தில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த பேருந்தை துளைத்தது ஒரு துப்பாக்கி குண்டு.

பேருந்திலிருந்த அனைவருமே திகைத்துப் போயிருந்தனர். திரும்பிப் பார்த்தனர். காரையும், காருக்குள் இருந்தவர்களையும் பார்த்தவர்கள் "இவங்க எப்படி இங்கே வந்தாங்க?" என்று கூச்சலிட்டனர்.

மிருதுளா அவசரமாக தனது போனை எடுத்தாள். ராகுலுக்கு அழைத்தாள்.

"சீனியர்.. சித்துவும் சம்பத்தும் இங்கே இருக்காங்க.." என்றாள்.

"மிருது.. ஆர் யூ ஓகே?" பதறியபடி கேட்டான் அவன். அவனின் பாசம் கண்டு இவளின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

"நல்லாருக்கோம் சீனியர். ஆனா அவங்க இப்ப பின்னாடி வராங்க.. துப்பாக்கி வச்சிருக்காங்க.. எங்ககிட்ட எதுவும் இல்ல. கொஞ்சம் பயமா இருக்கு.!" என்றாள்.

"பயப்படாத மிருது.. உன் போனை நாங்க டிராக் பண்ணி வரோம்." என்றவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

அந்த அறை இப்போதுதான் சுத்தமான காற்றுக்கு மாறி இருந்தது. போலிஸ்காரர்கள் பத்திரமாக இருந்தனர். ஒருவருக்கு மட்டும் காயம் பட்டிருந்தது. கீழே மூவருக்கு படுகாயம். அனைவருமே சம்பத்தின் மீது கொலைவெறியில் இருந்தனர்.

இவனை கொன்று விட்டு மாஃபியா தலைவன் பலி என்றுக் கெத்தாக செய்தித்தாளில் தகவல் தரலாம் என்றுக் காத்திருந்தனர். ஆனால் இப்போது மொத்த திட்டமும் நாசமாக போய் விட்டது.

குமரனுக்கு அழைத்தான் ராகுல். அவர் சம்பத்தின் வெப்பன்ஸ் குடோனில் தேடுதல் வேட்டையில் இருந்தார்.

"சார்.. சம்பத்தும் சித்துவும் இப்ப ஒரு பஸ்ஸை பாலோவ் பண்ணிட்டு இருக்காங்க.." என்றவன் அனைத்தையும் முழுதாய் சொல்லி முடித்தான்.

"ஓகே.. நான் அவங்களை பாலோவ் பண்ண ஆள் அனுப்புறேன்.. உன் பிரெண்டை கொஞ்சம் கேர்புல்லா இருங்க சொல்லு.." என்றார் அவர்.

மிருத்யூ பேருந்தை வேகமாகதான் ஓட்டினான். ஆனால் பின்னால் வரும் காரை விட அதிக வேகத்தில் செல்லவில்லை அது.

சாலையில் ஓடிக் கொண்டிருந்த மற்ற வாகனங்களின் இடை புகுந்து ஓடியது பேருந்து. ஆனால் அவர்களின் துப்பாக்கி குண்டுகள் மற்ற வாகனங்களின் மீது மோதியது.

"மை காட்.." அலறினாள் ரோஜா.

"இவளை வாயை மூட சொல்லு.." திட்டினாள் மிருதுளா.

"அவ இடத்துல நீ இல்ல.." காதலிக்கு பரிந்து பேசினான் மிருத்யூ.

"உதவாதவனே.. வேணும்ன்னா இவளை என் சீட்டுல வந்து உட்கார சொல்லு. நான் அந்த சீட்ல உட்கார்ந்துக்கறேன். அப்ப அவ இடத்துல இருந்துதான் நானும் பார்க்கறேன்.." என்றாள்.

நிலா மட்டும்தான் அந்த கூட்டத்தில் நகைத்துக் கொண்டிருந்த ஒரே ஜீவன். பேருந்தை குண்டுகள் தொட ஆரம்பித்த அடுத்த நொடியே நிலாவை தூக்கிக் கொண்டு முன்னால் வந்து அமர்ந்து விட்டான் பிரேம். அவனருகே அமர்ந்திருந்த சிபி நிலாவை இறுக்கமாக அணைத்திருந்தாள். அவளை அணைத்திருந்த பிரேம் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தான்.

"நம்மால மத்தவங்க பாதிக்கப்படுறாங்க.." என்று வருத்தப்பட்டான் மிருத்யூ.

"அப்படின்னா பஸ்ஸை ஓரமா நிறுத்து. நாம போய் பின்னாடி வர கார்காரர்கிட்ட லிஃப்ட் கேட்டுக்கலாம்.." என்றாள் மிருதுளா.

"நக்கலா சகி.." என கேட்டவனை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்ட அர்விந்த் "இப்படியொரு டைம்லயாவது மனுச மூளையை யூஸ் பண்ணலாம்டா.. தயவு செஞ்சி குரங்கு சேட்டையை ஆரம்பிக்காதிங்க.." என்றான் கவலையோடு.

"பெரிய ரவுடியே நம்மளை பாலோவ் பண்றாங்க.." பயத்தோடு அர்விந்தின் அருகில் மேலும் ஒட்டினாள் ஸ்வேதா.

'ஹாஹா.. ரணகளத்திலும் கிளுகிளுப்புங்கறது இதுதானா?' என்று எண்ணியவனுக்கு உடம்பெல்லாம் பட்டாம்பூச்சியின் சிறகு மோதி விளையாடுவது போலவே இருந்தது.

'ஆனந்தமா இருக்கு!' என்றான் மனதுக்குள்.

"பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்.!" என்ற விஜி "எங்கேயாவது டர்ன் வரும்போது நிறுத்துறிங்களா? நாங்க இரண்டு பேரும் கீழே இறங்கிக்கிறோம்.." என்றான்.

வாகனத்தை ஒற்றை கையால் செலுத்தியபடியே இந்தப் புறம் திரும்பிய மிருத்யூ "திருடருக்கு மூளை அதிகமா வேலை செய்யும்ன்னு நம்பினேன். ஏன்ய்யா இப்படி? டர்ன்ல இறங்க முடியும்ன்னா‌ அப்புறம் நாங்க ஏன்ய்யா இப்படி உயிரை கையில பிடிச்சிக்கிட்டு ஓட போறோம்? நாங்களும் உங்களோடவே இறங்க மாட்டோமா?" என்றுக் கேட்டான்.

அந்த இடைவெளியில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டி ஒன்றை மோதி தூக்கி எறிந்து விட்டு சென்றது பேருந்து.

"பாவி பயலே.. எங்க மொத்த உசுரும் உன் கையிலதான்டா இருக்கு.. பராக்கு பார்த்துட்டு வண்டியை ஓட்டி எங்களை கொண்டுப் போய் எமலோக வாயில்ல நிறுத்திடாதடா.." திட்டியபடியே பேருந்து இருக்கையின் அருகில் இருந்த வாழைப்பழ தாரிலிருந்து வாழைப்பழம் ஒன்றை பிடுங்கி நண்பனின் முதுகின் மீது எறிந்தான்.

"வாழைப்பழத்தை வச்சி சாகடிக்க பார்க்கறான்.." என்றவன் ஆக்ஸிலேட்டரின் மீது அழுத்தமாக மிதித்தான். அதே நேரத்தில் அவனின் ஓரத்தில் இருந்த கார் ஒன்றிலிருந்து துப்பாக்கி குண்டு பறக்கும் சத்தம் கேட்டது. பேருந்தை முன்னால் செலுத்தியபடியே திரும்பிப் பார்த்தான். சித்து இரத்தமாய் சிவந்த கண்களோடு இவனை முறைத்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் தனது பெண் வேடத்தையும் பார்த்தான்.

"டாடா டார்லிங்.." கையசைத்தவன் வண்டியின் வேகத்தை கூட்டினான். காரை விட வேகமாக சென்றது பேருந்து. ஆனால் எதிரே சிக்னல் விழுவதை கண்டு தயங்கினான்.

"வேகம் மிருத்யூ.. நம்ம மொத்த பேரோட உயிரும் உன் கால்லயும் இந்த வேகத்திலும்தான்டா இருக்கு. ரிஸ்க் எடுத்துடு தங்கம்.." என்றான் பிரேம். அதே நேரத்தில் சிக்னலில் நூலிழையில் தப்பி தாண்டி விட்டது பேருந்து. ஆனால் அவர்களின் பேருந்தை தொட்டுக் கொண்டே பின்னால் வந்து விட்டது அவர்களின் காரும்.

"விடாகண்டனா தொரத்தி வருது காரு.. மிருத்யூ நீ கொடா கண்டனா ஓடுடா.." என்றான் அர்விந்த்.

காலின் ஓரம் இருந்த நால் இஞ்ச் ஹீல்ஸை தூக்கி நண்பர்களிடம் எறிந்தான் மிருத்யூ.

"டேய் நாய்களா.. இங்கே நான் கஷ்டப்பட்டு வண்டியை ஓட்டிட்டு இருக்கேன்.. நீங்க இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துட்டு இருக்கிங்களா?" எனக் கேட்டு கடுப்பானான்.

அவனின் தோளில் கரம் பதித்தாள் ரோஜா. உள்ளே எரிந்துக் கொண்டிருந்த எரிமலை பனிமலையாய் மாறியது போலிருந்தது அவனுக்கு.

"தண்ட கருமாந்திர லூசு பசங்க.. அந்த வீட்டுல அத்தனை போலிஸ் இருக்காங்க.. அவங்களை விட்டுட்டு இந்த அப்பாவி குரங்கு கூட்டத்தை துரத்துறானுங்களே.. இவனுங்க நம்மை துரத்துறது மூலமா மாஃபியா கேங் லீடர்ஸ்ங்கற பேரையே கெடுத்துப்பாங்க போல.." எரிச்சலாக முனகினாள் மிருதுளா.

"நீ உன் ஓட்ட கையை வச்சிக்கிட்டு அமைதியா இருந்திருந்தா இப்படி ஆகியிருக்காது.. எருமை மாதிரி சரத்தை சுட்டதாலதான் இப்ப இப்படி ஒரு வம்பு.‌ அவங்க உன்னை பழி வாங்கதான் எங்களையும் சேர்த்து துரத்துறாங்க.." என்று தன் பங்கிற்கு திட்டினான் அர்விந்த்.

"அப்ப நீங்க போலிஸ் கிடையாதா?" ஸ்வேதாவின் கேள்வியில் விஜியையும், நிலாவையும் தவிர மற்ற அனைவரும் சிரித்தனர்.

"இவன் போலிஸா? இரண்டு மூட்டை வெங்காயம் அரிஞ்சதும் ரொம்ப தைரியம் வந்துடுச்சி. அதான் இஷ்டத்துக்கு பொய் சொல்லிட்டான்.." என்றுச் சொல்லி சிரித்தாள் மிருதுளா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN