குரங்கு கூட்டம் 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஸ்வேதாவின் தோளில் கை பதித்தான் அர்விந்த்.

"நான் வேணும்ன்னு பொய் சொல்லல. அது சும்மா ஒரு சேப்டிக்கு சொன்னேன். நான் நல்ல வேலை பார்க்கறேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். என் வீட்டுக்கு நான் ஒரே பையன். என் அம்மாவும் அப்பாவும் எப்பவும் என்னை மட்டும்தான் திட்டுவாங்க. கண்டிப்பா உன்னை பாசமா பார்த்துப்பாங்க. நீ என்னை நம்பி என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்.." என்றான்.

அவன் சொன்னது கேட்டு "ஹோஹோ.." என்று விசில் அடித்தாள் மிருதுளா.

ஸ்வேதா அந்த மொத்த கூட்டத்தையும் மாறி மாறி பார்த்தாள். "அப்படின்னா நீங்க பொண்ணு தூக்க மட்டும்தான் அந்த வீட்டுக்குள்ள வந்திங்களா?" எனக் கேட்டாள் அப்பாவியாக.

"ம்.." என்றவன் நிலாவை சுட்டிக் காட்டினான். "இப்படியொரு அழகு செல்லத்தை அனாதையா விட முடியுமா? அதுக்காகதான் இந்த பாப்பாவோட அம்மாவையும், அப்பாவையும் சேர்த்து வைக்கிறோம். அது மட்டுமல்ல.. இந்த பிரேம் பையன் எங்க உயிருக்கு உயிராச்சா.. அவன் ஹெல்ப் கேட்டா இல்லன்னு சொல்ல முடியுமா?" என்று அங்கே நடந்த மொத்த பிரச்சனையையுமே தான்தான் சமாளித்தது போல சொன்னான்.

வாகனங்கள் விரைந்தோடும் சாலை. மற்ற வாகனங்களை காட்டிலும் இந்த சிற்றுந்துதான் வேகமாக ஓடியது. ஆனால் பின்னால் வந்த கார் இந்த பஸ்ஸை சுடுகிறேன் என்ற பெயரில் சுட, இவர்களின் அருகே சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.

"ஓ.. நோ.." பயத்தில் கத்தினாள் ரோஜா.

"நம்மால வேற யாரும் சாக வேணாம். நீ பஸ்ஸை நிறுத்து. நாம இறங்கிக்கலாம். இறங்கி அவங்களோடு நேரா சண்டை போடலாம்.." என்றாள் பின்னால் திரும்பி பார்த்தபடி. விழுந்து கிடந்த இரு சக்கர வாகன ஓட்டியை சுற்றி ரத்தம் பரவிக் கொண்டிருந்தது. கூட்டமும் அங்கே கூட ஆரம்பித்து விட்டது.

மிருதுளா தனது இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள். "லூசு மாதிரிதான் நீ பேசுவியா ரோஜா? அவங்ககிட்ட கன் இருக்கு. உன்கிட்ட இரண்டு கையை தவிர ஏதும் இல்ல. இப்படி உளறாம அமைதியா இரு.." என்றாள்.

ஆனால் மிருத்யூ தங்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. அதனால் அந்த நாற்வழி சாலையின் ஓரத்தில் இருந்த சிறு தார் சாலைக்குள் பேருந்தை ஓட்ட ஆரம்பித்தான்.

"ரூட் ஏன் மாறுற?" சந்தேகமாக கேட்ட பிரேமிடம் "இந்த ரோட்ல போனா மத்தவங்க பாதிக்கப்பட மாட்டாங்க. நாமளும் கூட தப்பிக்க சான்ஸ் கிடைக்கலாம்.." என்றான்.

ராகுலும் ஜீவனும் அந்த வீட்டிலிருந்த மொத்த ரவுடிகளையும் கைது செய்து போலிஸ் வாகனங்களில் ஏற்றி விட்டனர். அடிப்பட்டு கிடந்த ஒன்றிரண்டு போலிசாரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அங்கிருந்து வேகமாக கிளம்பினர். எப்படியாவது சம்பத்தையும், சித்துவையும் பிடித்து விட வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

"கேவலம் ஒரு சின்ன பையன்கிட்ட ஏமாந்திருக்க.." அடிக்கடி இப்படியே திட்டிக் கொண்டிருந்தான் சம்பத். எதிரில் சுடுவதற்கு பதிலாக இவனையே சுட்டு விடலாம் என்று கோபம் வந்தது சித்துவுக்கு.

ஆள் அரவமற்ற சாலையில் ஓடிக் கொண்டிருந்தது பேருந்து.

தனது ஓட்டுநரின் தலையில் அடித்தான் சித்து. "கேவலம் ஒரு பஸ் வேகமா போகுது. இப்படிப்பட்ட மாடல் காரை மாட்டு வண்டி மாதிரி உருட்டிட்டு இருக்க.. இறங்கி தொலைடா.. நானே ஓட்டிக்கிறேன்.." என்று கத்தினான்.

காரின் ஓட்டுநர் அவசரமாக காரை நிறுத்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டான். காரை எடுத்த சித்து ஆக்ஸிலேட்டரை வைத்து மிதித்தான்.

"கார் ஸ்பீடா வருது.." பின்னால் பார்த்தபடி சொன்னான் விஜி.

மிருத்யூ அந்த சாலையை பார்த்தான். ஒரு பக்கம் கரும்பு காடும், மறுபக்கம் சோளக்காடும் இருந்தது.

"பஸ்ஸை நிறுத்துறேன் நான். இந்த சோளக்காட்டு வழி புகுந்து அந்த பக்கம் ஓடி தப்பிச்சிடலாம்.." என்றான் மிருத்யூ.

கரும்பு காட்டை காதலோடு பார்த்த மிருதுளா "நான் மட்டும் இந்த பக்கமா தப்பிக்கிறேன்.!" என்றாள்.

"த்தூ.. இப்படியொரு நேரத்துல கூட உனக்கு கரும்பு தேவைப்படுதா?" என்றுத் திட்டினான் பிரேம்.

"உனக்கு என்னடா போகுது?" எனக் கேட்டவள் "நான் இப்படி போறேன். நீங்க இப்படி போங்க.." என்றாள்.

"தனி தனியா சாவதை விட ஒன்னா சாகலாம். உன்னோடவே நாங்களும் வரோம்.!" சிபி உறுதியாக சொல்ல, "இல்ல வேணாம்.. அவ சொல்றதுதான் சரி. இரண்டு குரூப்பா பிரிஞ்சிடலாம். அப்பதான் அவங்கக்கிட்ட மாட்டிக்காம தப்பிக்க முடியும்.." என்றான் பிரேம்.

அங்கிருந்த அனைவருக்கும் இந்த முடிவு ஒரு மனதாக ஒத்துப் போனது.

ஒரு வளைவில் பேருந்தை நிறுத்தினான் மிருத்யூ. பிரேம் ஜோடியும், மிருதுளாவும் கரும்பு காட்டுக்குள் நுழைந்தனர்.

மிருத்யூ ஜோடியும், அர்விந்த் ஜோடியும் சோளக்காட்டிற்குள் புகுந்தனர். விஜி மட்டும் தன் கையிலிருந்த நகை பேக்கை அணைத்தபடி கடைசி இருக்கைக்கு சென்று ஒளிந்துக் கொண்டான்.

இவன் எதிர்பார்த்தது போலவே பின்னால் வந்த ரவுடிகள் இவனை பார்க்கவே இல்லை. அங்கே ஓடியிருந்த மற்றவர்களை பார்த்து விட்டவர்கள் அவர்களின் பின்னால் துரத்திக் கொண்டு ஓடினர்.

மிருதுளா காட்டிற்குள் நுழைந்த உடனேயே ஒரு கரும்பை அடியோடு உடைத்து எடுத்துக் கொண்டாள். கரும்பை கைகளில் சுற்றினாள். ஓடிக் கொண்டிருந்த பிரேம் "என்னடி பண்ற?" எனக் கேட்டான் குழப்பமாக.

"கரும்பால் அடிச்சா வலிக்கும்.." என்றாள் இவள் பற்களை காட்டியபடி.

"புரியல.." என்றவனிடம் "என் கையிலும் இப்ப ஆயுதம் இருக்கு. அவனை பக்கத்துல விட்டு அடிக்கலாம்.!" என்றாள்.

அவளை பாய்ந்து அணைத்துக் கொண்ட பிரேம் "இப்பதான் உனக்கும் கூட மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு பாப்பும்மா.!" என்றான். கரும்பு ஒன்றை உடைத்தான். "ஆனா நீ இப்படின்னு சொல்லி இருந்தா நான் பஸ்ல இருந்த கடப்பாரையை எடுத்து வந்திருப்பேன். அது இன்னும் நல்லா தாங்கியிருக்கும்.!" என்றான்.

சிபியின் கைகளில் இருந்த நிலா இவன் கரும்பை உடைத்ததும் கைகளை நீட்டி "பாப்பா.. மிட்டா.." என்று அழ ஆரம்பித்தாள்.

"இவளுக்கு கரும்பு வேணுமாம்.." சிபி சொன்னதை கேட்டு இடம் வலமாக தலையசைத்த பிரேம் "வேணாம்.. இது சாப்பிட்டா உனக்கு சளி பிடிக்கும்.!" என்றான். ஆனால் அதற்குள் மிருதுளா கரும்பை ஒரு துண்டு உடைத்து குழந்தையின் கையில் தந்தாள்.

அதே நேரத்தில் நிலாவின் சத்தம் கேட்டு இவர்களின் திசை நோக்கி வந்த சம்பத் தன் துப்பாக்கியை பயன்படுத்தினான். மிருதுளாவை தொட்டும் தொடாமல் சென்று ஒரு கரும்பில் புதைந்தது குண்டு.

"ஓடு பிரேம்.!" என்றவள் அவளும் சேர்ந்து ஓடினாள். கரும்பு காட்டிற்குள் ஓடுவது சிரமமாக இருந்தாலும் கூட அவர்களுக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை.

சம்பத் கரும்பு காட்டிற்குள்ளும், சித்து சோளக்காட்டிற்குள்ளும் சென்றதை பார்த்த பிறகு பேருந்தை இயக்கினான் விஜி. அவனின் அருகே இருந்த பேக்கை பார்த்து சந்தோசப்பட்டுக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN