பௌர்ணமி 43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தாள் பூர்ணிமா. அம்மாவையும், அப்பாவையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இவளே கிளம்பி விட்டாள்.

பாதியிலேயே திரும்பி விடு என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது மனம். அவ்வளவு பயமும், கோபமும், பதட்டமும் இருந்தது அவளுக்கு.

அவளின் இத்தனை வருட பிரிவுக்கான காரணம் ஒரே ஒரு பயம்தான். அது பாலா தன்னை சந்தேகப்பட்டு விட கூடாது என்பதுதான். ஆனால் அவன் தன்னை பூமாறனோடு இணைத்து சந்தேகப்பட்டான் என்பது தெரிந்ததும் பாதி உயிர் போய் விட்டது என்றே சொல்லலாம். அவனின் நம்பிக்கையை பெற எவ்வளவோ முயன்றாள். எத்தனையோ கெஞ்சினாள். அழுது புலம்பினாள். ஆனால் முழுதாய் முடிந்து‌ விட்டது அது அத்தனையும் நாடகம் என்று தெரிந்ததும்.

அவளின் மென்மையான உள்ளத்துப் பகுதியை கத்திக் கொண்டு கீறி விட்டான் அவன். அதற்கு மேலும் அவளுக்கு ஆபத்தோடு விளையாட விருப்பம் இல்லாமல் போய் விட்டது.

இப்போது இன்னும் மோசம். அவளின் மனம் குளிரையும், எரிமலையையும் ஒன்றாய் உணர்ந்துக் கொண்டிருந்தது.

பாலா மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்திருந்தான்.

ரோசினியின் அம்மாவும், பாட்டியும் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள். ரோசினி மசக்கையின் சலிப்பினால் படுக்கையறையில் மயங்கி கிடந்தாள்.

பாலா வீட்டிற்கு வந்ததும் "ஏய் ரோசினி.. வந்து சாப்பாடு பரிமாறு.." என்று கத்தி அழைத்தாள் பாட்டி.

பாலா தானே உணவை பரிமாறிக் கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தான்.

"எனக்கே கை கால் இருக்கு. அவளை ஏன் தொல்லை பண்றிங்க?" எனக் கேட்டான் எரிச்சலாக.

"அப்புறம் ஏன் பொண்டாட்டின்னு இருக்கணும்?" பாட்டி நொடிந்துக் கொண்ட நேரத்தில் படுக்கையறையின் கதவை பிடித்தபடி சோர்வாய் வந்து நின்றாள் ரோசினி.

"மாமா.." என்றாள் அரை கண்களை திறந்தபடி.

"நீ போய் தூங்கு ரோசினி. நான் சாப்பிட்டு கிளம்பறேன்.. தூங்கும் முன்னாடி சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கோ.." என்றவன் அவசரமாக உணவை விழுங்க ஆரம்பித்தான். அந்த வீட்டில் பாட்டியும், அத்தையும் இருக்கையில் அவனால் உணவை கூட வயிறார உண்ண முடியவில்லை.

ரோசினி சரியென்று தலையசைத்த அதே நேரத்தில் அந்த வீட்டின் வாசலில் நிழலாடியது. உணவை பிசைந்தபடியே நிமிர்ந்த பாலா பூர்ணிமாவை கண்டு விட்டு உணவு தட்டை தூர வைத்து விட்டு படக்கென்று எழுந்து நின்றான். அவனோடு சேர்ந்து பாட்டியும், அத்தையும் கூட எழுந்து நின்றார்கள்.

"பூர்ணி.." மகிழ்ச்சியும் குழப்பமுமாக வெளிப்பட்டது பாலாவின் குரல்.

"நீ ஏன் இங்கே வந்திருக்க?" சின்ன பாட்டியின் கேள்வியில் எரிச்சல்தான் முதலில் வந்தது பூரணிக்கு. மேடிட்ட வயிற்றோடு இருந்த ரோசினியையும் பாலாவையும் மாறி மாறி பார்த்தவள் "இவ ஏன் இங்கே இருக்கா?" எனக் கேட்டாள்.

"பூரணி.." பூமாறனின் உரத்த குரல் தூரத்தில் திரும்பிப் பார்த்தாள். தனது பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன் அருகில் வந்து அவளின் கையை பற்றினான். அவள் இங்கே வந்தது பற்றி இப்போதுதான் முல்லை சொல்லியிருந்தாள். விசயம் கேள்விப்பட்ட உடனே ஓடி வந்து விட்டான் அவன்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா.!" என்று அழைத்தான்.

பூர்ணிமா அசையாமல் நின்றாள்.

"இவ ஏன் இங்கே இருக்கா?" இரண்டாம் முறையாக கேட்டாள்.

"ஏன் இங்கே இருக்க கூடாது? என் பேத்தியோட வீடு இது.." பாட்டியின் வெறுப்பு குரலில் உடல் சிலிர்த்து நின்றாள் இவள்.

"நீ ஓடி போயிட்ட.. அதுக்காக இவன் காலத்துக்கும் மொட்டையா இருக்கணுமா? அதான் என் பேத்தியை கட்டிக்கிட்டான்.." என்றாள் பாட்டி.

பூர்ணிமாவுக்கு தரையின் கீழிருந்த மொத்த தரையும் நழுவி போனது போலிருந்தது‌. சம்பந்தமே இல்லாமல் இவன் ஏன் அவளை கட்டிக் கொள்ள போகிறான் என்று குழம்பினாள். என்னவோ இடித்தது. ஆனால் அதை விடவும் கோபம்தான் அதிகம் வந்தது.

"பூர்ணி நாம பேசிக்கலாம்.." என்றபடி அருகே வந்த பாலாவை நெருப்பாய் முறைத்தவள் "அப்பாவாகி இருக்க போல.. வாழ்த்துக்கள் பாலா.." என்றாள் கடித்த பற்களின் இடையே.

பாலா இடது கையால் முகத்தை துடைத்துக் கொண்டான். அவனால் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அருள் இன்னமும் மருத்துவமனையில் இருந்தான். முழுதாய் அவன் குணமாகும் வரை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை பாலா.

"நம்ப வச்சி ஏமாத்துறதை உன்கிட்டதான் தெரிஞ்சிக்கணும்.." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அருகில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து வந்தாள்.

"என்னடா நினைச்ச? என் அம்மாவை போல இளிச்சவாயா இருந்து உன் சபலத்துக்கு பூஜை செஞ்சி கொண்டாடுவேன்னு நினைச்சியா?" எனக் கேட்டவள் அவனின் மீது கம்பியை வீசினாள். ஆனால் கம்பி அவனின் உடம்பை தொடும் முன் அவளின் கையை பற்றி விட்டான் பூமாறன்.

"பூரணி.. பைத்தியமா நீ?" எனக் கேட்டான் கோபத்தோடு.

"கோபமா?" எனக் கேட்டவளுக்கு விழிகள் கலங்கியது.

"ஏமாத்திட்டான் இவன்.. எனக்கு ஆத்திரமா வருது. என்னவெல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணான்னு உங்களுக்கு தெரியாது.." என்றவள் தலையை பிடித்தபடி இடம் வலமாக தலையசைத்தாள்.

"பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு மாமா.‌ இதெல்லாம் கனவுதானே?" என்றாள் அழுகையை அடக்கியபடி.

பூமாறன் உதட்டை கடித்தான்.‌ தனது வேதனையை மறைத்துக் கொள்ள முயன்றான்.

"பூரணி.." கை நீட்டி அழைத்தான்.

ஆனால் அவள் அவனை கண்டுக் கொள்ளாமல் கணவன் புறம் திரும்பினாள்.

"சொல்ல கூட தோணல உனக்கு..‌ உன்னோடு சண்டை மட்டும்தானே வந்தது? முழுசா வெறுத்துட்டியா என்னை? அப்படின்னா சொல்லி இருக்க வேண்டியதுதானே?" எனக் கேட்டாள்.

ரோசினியின் பாட்டியையும், அம்மாவையும் பார்த்த பாலா, "அப்புறம் பேசலாம். நீ இப்ப கிளம்பு.." என்றான்.

"உன்னை சும்மா விடுவேன்னு நினைக்காத..‌ குழந்தை அனாதையாகிடும்ன்னு சீன் போடலாம்ன்னு கனவுல கூட நினைக்காத.. பொண்டாட்டிக்கு நியாயமா இல்லாதவன் பிள்ளைக்கு எப்படி நல்லவனா இருப்ப? இன்னும் டைவர்ஸ் வாங்கல. உன்னை கோர்ட் கோர்டா ஏத்தி சாகடிக்க போறேன்.!" என்றவள் அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

சோகமாய் நடந்தவளை அவளை விட சோகமான மனதோடு பார்த்துக் கொண்டிருந்தான் பாலா. அவள் விழிகளை துடைத்துக் கொள்வது இவனுக்கு தெரிந்தது.

"ஓடி போனவளுக்கு என்ன வாய்? கோர்ட்டுக்கு போவாளாம்.. போகட்டுமே.. யாருக்கு இங்கே நட்டம்? அவளுக்குதானே மானம் போக போகுது.." என்று திட்டிக் கொண்டே சென்று ஸ்வெட்டர் பின்ன ஆரம்பித்தாள் பாட்டி.

ரோசினி கலங்கிய விழிகளோடு பாலாவை பார்த்தாள். "போய் ரெஸ்ட் எடு ரோசினி.." என்றவன் மிச்சம் வைத்த உணவை இரண்டே வாயில் அள்ளி போட்டுக் கொண்டு கையை கழுவி முடித்தான்.

"சாயங்காலம் வந்துடுறேன்.." என்றவன் கிளம்பினான்.

பூமாறன் அண்ணனின் ஒட்டும் ஒட்டாத குணத்தை கண்டு எரிச்சலானான்.

தம்பியின் கோபத்தை கண்டுக் கொள்ளாமல் சென்ற பாலா சாலை முனையை தாண்டியதும் வேகமாக ஓடினான்.

பூர்ணிமா மங்கிய பார்வையை அழுந்த துடைத்தபடி நடந்தாள். ஓடி வந்து அவளின் கையை பற்றினான் பாலா.

"பூரணி.." என்றான் கெஞ்சலாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN