குரங்கு கூட்டம் 35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெங்கட்டின் கையில் விலங்கை மாட்டினார் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி.

"என்னை ஏன் அரெஸ்ட் பண்றிங்க?" அதிர்ச்சியோடு கேட்டார் அவர்.

"நீங்க செஞ்ச ஊழலுக்காக அரெஸ்ட் பண்றோம் சார். உங்களுக்கு எதிரான அத்தனை சாட்சியங்களையும் எதிர் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் தந்திருக்காரு.." என்றார் அதிகாரி.

எதிர் கட்சிக்காரர் தந்தது என்னவோ தனது சொந்த கட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், இதற்கு முன் நடந்த அரசியல் தோல்விகளுக்கு பழி வாங்கவும்தான். ஆனால் இவர்களுக்கு காரணமா முக்கியம்? இருக்கும் அனைத்து ஊழல்வாதிகளையும் ஒழிக்க வேண்டும் என்பது மட்டும்தானே ஒரே குறிக்கோள்!

இரவு சூழ்ந்த நகரம் தனது இரண்டாம் அழகிய முகத்தை பிரபஞ்சத்திற்கு வெளிக்காட்ட தொடங்கி இருந்தது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த ரூபாவதியை தடுத்து நிறுத்தியது காவல் துறை. குழப்பத்தோடு பார்த்தவளின் முன்னால் கை விலங்கை அசைத்தது.

"என்ன மேன் பண்றிங்க? தூர போங்க.." என்றவள் அவர்களை தாண்டிக் கொண்டுச் செல்ல முயன்றாள். ஆனால் அவளை தடுத்து நிறுத்திய இளம் அதிகாரிகள் இருவர் தங்களிடம் இருந்த பேப்பர் ஒன்றை அவளிடம் நீட்டினர்.

"நீங்க உங்க அலுவலகத்தில் போதை பொருட்களை மறைச்சி வச்சதற்காக உங்களை அரெஸ்ட் பண்ண போறோம்.!" என்றான் ஒருவன்.

அதிர்ச்சியில் நிலை குலைந்த ரூபாவதி இந்த விசயம் எப்படி வெளியே தெரிந்திருக்கும் என்று குழம்பினாள். அவளுக்கு இது பகுதி நேர தொழில் என்று கூட சொல்லலாம். சித்துவுக்கு உதவியாகவும் இருந்தது. இவளுக்கும் இன்னும் கொஞ்சம் பணம் வந்து சேர்ந்தது. அதனால் ஒவ்வொரு முறையும் மூட்டை கணக்கில் வரும் போதை பொருட்களை தனது அலுவலகத்தின் வேஸ்ட் ரூமில் வைப்பாள். தேவைப்படும் பொழுது தேவையானவற்றை கொண்டுச் சென்று சித்துவிடம் தருவாள். ஆனால் இத்தனை வருடங்களில் இது பற்றி அவளது அலுவலகத்தில் இருப்போருக்கு தெரியாத அளவுக்கு கவனத்தோடு இருந்தாள்.

அவள் வெளியே வேண்டுமானால் கவனத்தோடு இருந்திருக்கலாம். ஆனால் அவளின் வீட்டில் இருந்த சிபிக்கு இவளை சும்மா விட விருப்பம் இல்லை. அதனால் அவள்தான் இந்த சித்தியை பற்றிய அனைத்தையும் சொல்லி இருந்தாள்.

"நீங்க பொய்யான குற்றம் சுமத்த பார்க்கறிங்க.. இதை வேற யாரோ கூட செஞ்சிருக்கலாம்.!" என்றவளை பார்த்து நகைத்த இரண்டாம் அதிகாரி "உங்களோட அலுவலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் சாட்சி சொல்ல தயார். வீடியோ ஆதாரங்கள், ஆடியோ ஆதாரங்கள்ன்னு ஏகப்பட்டதை சேகரிச்சி வச்சிருக்கோம். நீங்க எதை பேசுவதா இருந்தாலும் அதை கோர்ட்ல வந்து பேசிக்கோங்க.!" என்றவன் அவள் மேலே பேசும் முன் விலங்கையிட்டு ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றான்.

மருத்துவமனை வராண்டாவில் நண்பர்கள் கூட்டம் கவலையோடு அமர்ந்திருந்தது. விஜியும், அர்விந்தும் ஜீவன் செத்தவர்களை போல இருந்தனர்.

"மிருது.." ராகுலின் அழைப்பில் திரும்பிய மிருதுளா அவனை கண்டு விட்டு அவசரமாக எழுந்து நின்றாள்.

"சீனியர்.." என்றவளை அருகில் வந்து அணைத்துக் கொண்டவன் "உனக்கு ஒன்னும் ஆகலையே.!" எனக் கேட்டு அவளை தன் பார்வையால் பரிசோதித்தான்.

"இல்ல சீனியர். ஆனா ஸ்வேதாதான்.." கவலையோடு சொன்னவளின் தலையை வருடி தந்தவள் "நல்லாயிடுவா. பயப்படாத நீ.!" என்றான்.

அன்று இரவில் அவர்கள் தங்குவதற்கு தனது வீட்டிலேயே இடம் ஒதுக்கி தந்தான் ராகுல்.

அவன் செய்த சமையலை மூக்கு பிடிக்க ருசித்து சாப்பிட்ட மிருத்யூ "என் மச்சான் நீங்கதான்.." என்றான்.

"சோத்து மூட்டை.!" என்று அவனை திட்டிய மிருதுளா அன்றைய இரவு உறங்காமலேயே கடத்தினாள். அவளின் அருகே உறங்கி கொண்டிருந்த ரோஜா நல்ல உறக்கத்தில் இருந்தாள். பக்கத்து அறையில் நிலாவும் சிபியும் இருந்தார்கள்.

இரவு மணி பன்னிரெண்டு வரை உறங்காமலேயே இருந்த மிருதுளா அறையை விட்டு வெளியே வந்தாள். பிரேம், மிருத்யூ, விஜி மூவரும் ஹாலில் உருண்டு புரண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டின் முக்கிய கதவு கொஞ்சமாக திறந்திருந்ததை கண்டவள் சத்தமில்லாமல் வெளியே வந்தாள்.

வராண்டாவில் இருந்த ஊஞ்சல் தொட்டிலில் அமர்ந்திருந்தான் ராகுல். பச்சை நிற இரவு விளக்கு அவ்விடத்தை முழுதாய் ஆக்கிரமித்து இருந்தது. முன் தோட்டத்தில் இருந்த இரவு மலர்களின் வாசம் மென்மையாக வீசிக் கொண்டிருந்தது.

அரவம் கேட்டு திரும்பிய ராகுல் "ஏதாவது வேணுமா மிருது?" எனக் கேட்டான்.

"இல்ல.. சும்மா தூக்கம் வரல.. உங்களுக்கு என்னாச்சி?" எனக் கேட்டபடி வந்து அவன் முன் நின்றாள்.

அவளின் கையை பற்றியவன் அவளின் கை முட்டியிலிருந்து விரல்கள் வரை வருடிக் கொண்டிருந்தான்.

"இதுவரை இந்த வீட்டுல தனியாவே தூங்கி பழகிட்டேன். இப்ப சந்தடியில் ஒரு மாதிரியா மனசு தூங்கவே இல்ல. டிரை பண்ணி பார்த்துக் தூக்கம் வரல.." என்றான்.

"நிலா கூட தூங்கிட்டா.." என்றவள் வானம் பார்த்தாள். நிலவை கண்டவள் அதன் அழகில் மயங்கி நிற்க, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டான் ராகுல்‌.

"உனக்கு என்னாச்சி?" எனக் கேட்டான் அவன் அவளின் கன்னத்தில் தன் கன்னம் தேய்த்தபடி.

அவனின் தோளில் கழுத்தை சாய்த்துக் கொண்டவள் "அந்த ரூம் முழுக்க உங்க வாசமே வருவது போல இருந்தது. சுத்தமா தூக்கம் வரல.." என்றாள் சிரிப்போடு.

"அது என் பெட் ரூம்தான்.." சிரித்தபடி சொன்னவன் அவளின் கம்மலை அப்படியும் இப்படியுமாக தள்ளி விட்டான்.

"என் அம்மாவுக்கு சொல்றேன். அவங்க வந்து உன் வீட்டுல பேசுவாங்க. உனக்கு சம்மதம்ன்னா வர மே மாசம் நாம மேரேஜ் பண்ணிக்கலாம். உன் ஆபிஸ்ல சொல்லி இந்த ஊர் பிராஞ்ச்கு உன்னை மாத்திட கேளு.." என்றான்.

"யோசிச்சி சொல்றேன் சீனியர்.."

இருவரின் இடையே மௌனம் நிலவ ஆரம்பித்தது. அந்த மௌனத்தை கூட இருவருக்கும் பிடித்திருந்தது. வானம் பார்த்து அமர்ந்திருந்த இருவரும் அந்த சாய்வு தொட்டிலிலேயே சாய்ந்து விழிகளை மூடினர்.

அர்விந்த் ஐ.சி.யூவின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான். அரை தூக்கத்தில் இருந்தான். விஜி இங்கேயே இருக்கிறேன் என்று பிடிவாதம் பிடித்தான். ஆனால் இவன் அவனை விரட்டி விட்டுவிட்டு இங்கேயே இருந்தான்.

பதினொரு மணியளவில்தான் ஸ்வேதாவை ஐ.சி.யூவிற்கு மாற்றி இருந்தார்கள். அவளின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்திருந்தது. அரை உயிர் வந்தது போலிருந்தது அர்விந்த்க்கு.

சிபி கெட்ட கனா கண்டு படக்கென்று எழுந்து அமர்ந்தாள். கனவில் சித்துவும், சம்பத்தும் அவளை துரத்திக் கொண்டிருந்தார்கள்.

"என்னாச்சி சிபி?" பிரேமின் திடீர் குரலில் துள்ளி விழுந்தவள் அவனின் புறம் திரும்பினாள். பாலில் நனைத்த பிஸ்கட்ஸை நிலாவுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான். நிலா நல்ல பசியில் இருந்தாள். அவன் தரும் பிஸ்கட்டை ஒரே வாயில் விழுங்கிக் கொண்டிருந்தாள். அவளை தான் சரியாக கவனித்துக் கொள்ளாதது போலிருந்தது சிபிக்கு.

"கெட்ட கனவு.." என்றவள் கட்டிலை விட்டு இறங்கி நின்றாள். கடிகாரத்தை பார்த்தாள். மணி ஏழை தாண்டி விட்டிருந்தது.

"இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்.." என்றவளின் கையை பற்றியவன் "பதறாத.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவதால் ஒரு பிரச்சனையும் இல்ல. ஸ்வேதா கண் விழிச்சிட்டா.. இன்னைக்கு சாயங்காலம் நீயும் நானும் நம்ம வீட்டுக்கு போகலாம்.." என்றான்.

சரியென்று தலையசைத்த சிபி "உன் அம்மாவும் அப்பாவும் என்னை எப்படி எடுத்துப்பாங்களோ?" என்றுக் கவலைப்பட்டாள்.

"நிச்சயம் அவங்களுக்கு பிடிக்கும்.." நம்பிக்கையோடு சொன்னவன் "போய் ரெடியாகி வா.. நாம ஹாஸ்பிட்டல் கிளம்பலாம்.." என்றான்.

சிபி தயாராகி வந்த போது கிச்சனில் மிருதுளாவும் ராகுலும் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

"ஹாய் சிஸ்டர்.." கையசைத்தான் ராகுல். சமையலறையின் ஜன்னல் வழியே பார்த்தபோது பூச்செடி ஒன்றில் இருந்த பூக்களை எட்டி பறித்துக் கொண்டிருந்தாள் நிலா. அவளை தன் கையில் வைத்திருந்த மிருத்யூ உயரத்தில் இருந்த பூக்களை பறித்து நிலாவிடம் தந்துக் கொண்டிருந்தான்.

"ரொம்ப அழகான குழந்தை.." ராகுல் ரசித்துச் சொல்ல "ஆமா.." என்றாள் மிருதுளா.

"அவ ஏன் எங்களை பார்த்தா மட்டும் அழல?" தன் நீண்ட கால சந்தேகத்தை கேட்டாள் அங்கே ஓரத்தில் நின்று வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்த ரோஜா.

"டெல்லியில் எங்க வீட்டுல உங்களோட ஒரு குரூப் போட்டோ இருந்தது. அதை தினமும் அவ பார்ப்பா.. அதை எடுத்து விளையாடிட்டு இருப்பா. அப்ப பிரேம் உங்களையெல்லாம் மாமா, அத்தைன்னு சொல்லி தந்துட்டு இருப்பான்.." சிபி சொன்னது கேட்டு ராகுல் குழம்பினான்.

"நானும் இருந்தேனா?" எனக் கேட்டான்.

"ம்.. காலேஜ் பங்சன். ப்யூச்சர் காட்ஸ்ன்னு எழுதி இருந்த போர்டுக்கு முன்னாடி நீங்க எல்லாம் நின்று இருந்திங்க.. இன்னும் இரண்டு பேர் கூட இருந்தாங்க. மேகா, கௌசிக் அவங்களும் இருப்பாங்களே அந்த போட்டோதான்.." என்றாள்‌.

அவள் சொன்ன பிறகே அவர்களுக்கு புகைப்பட விசயம் நினைவுக்கு வந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை ஒன்றாய் நடித்தார்கள் அவர்கள். கலை நிகழ்ச்சி முடிந்து மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். விழாவிற்கு அடுத்த நாளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. அதன் பிறகே இவர்களின் நாடகம் ஜெயித்ததாக சொல்லி பரிசு தரப்பட்டது. பரிசை வாங்கிய கையோடு அனைவரும் ஒன்றாய் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இவர்களின் குரங்கு கூட்டத்தில் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சேருவோம் என்று ரோஜாவும், ராகுலும்தான் கற்பனை கூட செய்யவில்லை.

ராகுலை தவிர மற்ற அனைவரும் மருத்துவமனை புறப்பட்டு வந்தனர். வந்தவர்கள் மருத்தவமனையின் கூடத்திலேயே உறைந்து நின்று விட்டனர். அவர்களின் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது.

பிரேமின் அம்மாவும், அர்விந்தின் அம்மாவும் கடும்கோபத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர்.

"ஆன்டி.." என்றபடி அவர்களின் அருகே சென்றான் மிருத்யூ.

"கழுதைகளா.. இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கிங்க?" கோபத்தோடு கேட்டாள் பிரேமின் அம்மா.

"மாம்மா.." நிலா அவளை கண்டதும் ஆவலோடு அழைத்தாள். அவளிடம் செல்ல ஆசை கொண்டு கையை நீட்டினாள்.

"நமக்கு சமாதி கட்ட உன் பொண்ணே போதும்டா.." என்று நண்பனின் காதோரம் கிசுகிசுத்தாள் மிருதுளா.

"யார் இந்த பாப்பா?" என்று குழந்தையை காட்டி கேட்டாள் பிரேமின் அம்மா.

பதில் சொல்ல தெரியாமல் அனைவருமே விழித்தனர். இப்படி ஒரு பொது இடத்தில் அம்மாவிடம் செருப்படி வாங்க கொஞ்சம் பயமாக இருந்தது பிரேமுக்கு. எதிரி நாட்டு ராணுவத்தை கூட சமாளித்து விடலாம். ஆனால் அம்மாவின் முறைத்த கண்களில் இருந்து தப்பவே முடியாது என்பது அவன் உணர்ந்த விசயம்.

"கேட்கும் கேள்விக்கு பதில்?" நெருப்பாய் முறைத்த அம்மாவை அவன் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த நேரத்தில், "ஆன்டி இப்ப இதுவா முக்கியம்? என் பிரெண்ட் ஒருத்தி ரொம்ப சீரியஸா இருக்கா.. அவளை முதல்ல பார்க்கணும்." என்ற மிருதுளா அவர்களை தாண்டிக் கொண்டு நடந்தாள். இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று மற்றவர்களும் அவளை பின்தொடர்ந்து நடந்தனர்.

அங்கே ஸ்வேதாவின் அறை வாயிலில் நின்றிருந்த அர்விந்த் மௌன சாமியார் போல நின்றிருந்தான். இவர்களை பார்த்த பிறகும் பேச மறுத்தான்.

"அவ நல்லா இருக்கா இல்ல?" மிருதுளா அவசரமாக கேட்க,‌ அவனோ நண்பர்களுக்கு பின்னால் நின்றிருந்த பெற்றோரை பயத்தோடு பார்த்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN