குரங்கு கூட்டம் 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஐ.சி.யூ கதவின் வழியே ஸ்வேதாவை பார்த்தாள் மிருதுளா. அசதியோடு படுத்திருந்த ஸ்வேதாவின் விழிகள் அங்கும் இங்குமாக சுழன்றுக் கொண்டிருந்தன.

"எழுந்துட்டா.!" என்றாள் இவள் நிம்மதி பெருமூச்சோடு.

"யார் அந்த பொண்ணு? அவளோட உங்களுக்கு எப்படி பழக்கம்? அவளுக்கு எப்படி குண்டடி பட்டுச்சி?" என்று வரிசையாக கேட்ட தன் அம்மாவை திரும்பி பார்த்த மிருதுளா "பழைய பிரெண்ட்.. உங்களுக்கு தெரியாது.." என்றாள்.

அம்மாவின் கண்களில் கனல் தெறித்தது. "எனக்கு தெரியாம என்ன பிரெண்ட்? ஊட்டிக்கு டூர் போறன்னு சொன்னிங்க. ஆனா இங்கே வந்து இருக்கிங்க.. டிவியில் உங்க முகம். பேப்பர்ல உங்க முகம். எக்ஸ் எம்.எல்.ஏ வெங்கட்டோட வீட்டுல உங்களுக்கு என்ன வேலை? உண்மையை சொல்லன்னா வீட்டுக்கு போனதும் சூடு போட்டுடுவேன் பார்த்துக்க.!" என்றாள்.

மருத்துவமனை வராண்டாவில் நின்றிருந்த செவிலியர்களும், மற்ற மனிதர்களும் வேறு பக்கம் திரும்பி ரகசியமாக சிரித்தனர்.

மிருதுளாவுக்கு தன் மொத்த மானமும் கப்பலேறியது போலிருந்தது. அம்மா எப்பவும் அம்மாவா இருக்கும் ரகசியம் அவளுக்கு புலப்படவில்லை. உலகத்திலேயே அவளுக்கு அம்மாவை தவிர வேறு யாரும் ஹிட்லரை போல தோன்றவில்லை. "அம்மா அப்புறமா பேசலாம். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.." என்றாள் சிறு குரலில்.

"இப்ப நீ நடந்ததை சொல்றியா இல்ல நான் இங்கேயே உன்னை வெளுக்கட்டா?"

மிருதுளா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். ஏதாவது விளக்குமாறு கிடைத்தால் சொன்னது போலவே அம்மா தன்னை வெளுத்து விடுவாள் என்று அவளுக்கு நன்றாக தெரியும். நல்லவேளையாக அங்கே எதுவும் இல்லை.

"அப்பா.. நீங்களாவது அம்மாக்கிட்ட சொல்லுங்க.." சிணுங்க ஆரம்பித்த மிருதுளாவிடம் "எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு.. உன்னால நான் இன்னைக்கு ஆபிஸ் லீவ்.. ஒருநாள் லீவ்ன்னா அடுத்தநாள் அது எவ்வளவு சுமைகளை தரும்ன்னு தெரியுமா?" எனக் கேட்டார் அப்பா.

'வாடகைக்கு வாங்கிய அப்பா மாதிரியே பேசுறாரு..' என்று வருத்தப்பட்டவள் "அது சிபி.!" என்று பிரேமின் அருகே இருந்தவளை கை காட்டினாள்.

பிரேம் வேண்டாமென தலையசைத்தான். அவனை முறைத்த மிருதுளா "அவளும், பிரேமும் ரொம்ப வருசமா லவ் பண்றாங்க.. அந்த பொண்ணுக்கு கல்யாணம். அவளை அங்கிருந்து கடத்திட்டு போக வந்தோம் நாங்க." என்று சொல்லி முடித்தாள்‌.

பிரேமின் அம்மா தன் முகத்தை மெள்ள மகன் புறம் திருப்பினாள்.

"பேய் மாதிரி பயமுறுத்துறாங்க.." என்று மிருத்யூவிடம் கிசுகிசுத்தாள் ரோஜா.

"அடுத்தது நாமதான்.." என்ற மிருத்யூவுக்கு கால்கள் இரண்டும் கொஞ்சமாக நடுங்க ஆரம்பித்தது.

"அட பாவிங்களா.. நீங்க எல்லோரும் அம்மா செல்லங்களா?" ஆச்சரியத்தோடு கேட்ட ரோஜாவிடம் "அந்த மிருது குரங்கை தவிர.. அவ மட்டும் அப்பா செல்லம்.!" என்றான் அவன்.

"லவ்?" பிரேமின் அம்மா மகனை நோக்கி நடந்தாள்.

"ஆன்டி.. நீங்க கோபப்பட நேரம் இல்ல.. எல்லாமே டூ லேட்.. அந்த குழந்தை பிரேமோட குழந்தை.." என்று மிருதுளா சொன்ன அதே நேரத்தில் ‌"மாம்மா.." என்று கையை நீட்டி அழைத்தாள் நிலா. பிராக் அணிந்திருந்த நிலா விளம்பர படத்தில் வரும் குழந்தைகளை விடவும் அழகாய் இருந்தாள்.

"உண்டியல் பானையை டப்புன்னு போட்டு உடைச்ச மாதிரி எல்லா விசயத்தையும் உடைச்சிட்டாளே.. அம்மா என்னை கொல்ல போறாங்க.." என்றான் பிரேம் பயத்தோடு. அந்த வராண்டாவில் இருந்த மொத்த பேருமே இப்போது சிபியையும் பிரேமையும்தான் பார்த்தனர்.

மிருதுளாவின் அம்மாவும், அர்விந்தின் அம்மாவும் சிபியையும் பார்வையால் பிரேமையும் எடைப் போட்டனர்.

"இவனை டெல்லிக்கு அனுப்ப வேண்டாம்ன்னு நான் அப்பவே சொன்னேன்.!" காலம் நேரம் தெரியாமல் குறை சொன்னாள் மிருதுளாவின் அம்மா.

"கையில குழந்தை.. என் பையனா இருந்திருந்தா நான் இன்னேரம் கை காலை முறிச்சி போட்டிருப்பேன்.." நேற்றைய நாளில் பிரேமின் அம்மா சொன்னதற்கு இப்போது வார்த்தைகளால் பழி வாங்கினாள் அர்விந்தின் அம்மா.

பிரேமின் அம்மா நெற்றியை பிடித்தாள். தள்ளாடியவள் அருகே இருந்த சுவரில் முதுகு சாய்ந்து நின்றாள்.

"குழந்தையா?" என்றாள் அரை மயக்கத்திற்கு சென்றபடி. அவளால் இப்போது கூட இதை நம்பவே முடியவில்லை. அது எப்படி இவ்வளவு பெரிய குழந்தை இருக்கும் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். தினமும் போனில் தன்னிடம் கொஞ்சிக் கொண்டிருந்த மகன் இவ்வளவு பெரிய குண்டை தூக்கிப் போடுவான் என்று அவள் மட்டும் கனவா கண்டாள்?

"சின்ன வயசுல பாட்டியாகிட்டமேன்னு பீல் பண்ணாதிங்க ஆன்டி.. மூணாம் வீட்டு மரகதம் ஆன்டிக்கு கூட உங்க வயசுதான். அவங்களுக்கு மூணு பேர பிள்ளைங்க இருக்காங்க.." என்று மேலும் எரிச்சலை கிளப்பினாள் மிருதுளா.

"அந்த வீட்டு பிள்ளைங்க என்ன இப்படி வீட்டுக்கு தெரியாமலா கல்யாணம் கட்டி குழந்தை பெத்தாங்க?" என்றுக் கேட்டு திட்டினாள் அர்விந்தின் அம்மா.

"அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ன்னு சொல்றிங்க? கல்யாணம் பண்ணாமலேயே குழந்தையை பெத்துட்டாங்க.. மனசு இருந்தா ஏத்துக்கங்க. இல்லன்னா துரத்தி அடிங்க.." என்ற மிருதுளா ஸ்வேதாவின் அறை கதவை திறந்து உள்ளே சென்றாள்.

"வெடியை மொத்தமா பத்த வச்சிட்டு அவ மட்டும் எஸ்கேப் ஆகிட்டா.." கடித்த பற்களோடு தோழியை திட்டிய பிரேம் "அம்மா.." என்றான் தயக்கமாக.

உறைந்து போய் நின்றிருந்தவளுக்கு என்ன பேசுவது என்றுக் கூட தெரியவில்லை. உலகமே சுழல்வது போலிருந்தது. மகனின் திருமணத்தை சீரும் சிறப்புமாக செய்ய வேண்டும் என்று கனவு கோட்டை கட்டி வைத்திருந்தாள். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு இப்போது எப்படி இவர்கள் திருமணம் செய்வார்கள் என்றெண்ணி மனம் வாடினாள்.

ஊருக்கு என்ன பதில் சொல்வது? உறவுகளுக்கு என்ன பதில் சொல்வது என்று ஆயிரம் யோசனைகள் மனதில் ஓடியது.

"அம்மா.." துணிந்தெழுந்து அழைத்தான் பிரேம்.

"சாரிம்மா.. மறைக்கணும்ன்னு நினைக்கல. சந்தர்ப்ப சூழ்நிலை.." என்றவனை வெறித்தவள் "உன் பொண்ணுக்கு நடக்க தெரியும் போல.." என்றாள் நக்கலாக.

ஆமென தலையசைத்தவனிடம் "இவ்வளவு பெரிய குழந்தை ஒரே நாள்ல வானத்துல இருந்து குதிச்சிடாது.. இரண்டு இரண்டரை வருசமா எங்களை ஏமாத்திட்டு இருந்திருக்க.." என்றாள். சொல்லும் போதே விழிகள் கலங்கி போனது அவளுக்கு. ஒருநாள் தவறையே ஏற்றுக் கொள்ளாதவள். மூன்று ஆண்டுகள் மறைக்கப்பட்ட தவறை எப்படி மன்னிப்பாள்?

"அம்மா.. சாரி.."

மறுப்பாக தலையசைத்தவள் "ஒத்தை பையனை பெத்து வச்சிருந்தேன். இனி அந்த பையனும் இல்ல.." என்று சொல்லிவிட்டு அழுதபடியே வெளியே‌ நடந்தாள்.

"மாம்மா.." பாட்டி அழுவதை கண்டுவிட்டு நிலாவும் உதடு பிதுக்க ஆரம்பித்தாள். தினமும் தன் போனில் இருந்த அம்மாவின் புகைப்படத்தை பிரேம் காட்டியதால் வந்த விளைவு இது.

நிலாவை தாண்டி ஓரெட்டு வைத்துவிட்டவள் நின்றாள்‌. பேத்தியின் புறம் திரும்பினாள். பாட்டியை பார்த்து கையை நீட்டிய நிலா மெல்லிய குரலில் அழ ஆரம்பித்தாள். அவளின் சிணுங்கல் அழுகை இவளின் மனதை அசைத்தது.

"பால் மறந்துட்டாளா?" விழிகளை துடைத்தபடி சிபியிடம் கேட்டாள். சிபி ஆமென தலையசைத்ததும் குழந்தையை தன் கைகளில் பிடுங்கிக் கொண்டாள்.

"மாம்மா.." பாட்டியின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். அழுகை கொஞ்சமாக ஓய்ந்தது. பாட்டியின் கழுத்தை சுற்றி கையை போட்டுக் கொண்டாள். அதை கண்டு அங்கிருந்த‌ அனைவருக்குமே உள்ளம் சிலிர்த்துப் போனது‌.

குழந்தையின் முதுகில் கை பதித்து அணைத்துக் கொண்ட பிரேமின் அம்மா "ஒன்னும் இல்லடா செல்லம். நாம வீட்டுக்கு போகலாம்.." என்றாள்.

பிறகு மகனையும் மருமகளையும் ஒருசேர பார்த்தாள். "இரண்டு பேரும் வீட்டு பக்கம் வந்துடாதிங்க.. காலை உடைச்சிடுவேன்.!" என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து நடந்தாள்.

"அத்தை நான்.." சிபி அவசரமாக கேட்டாள். மீண்டும் தடைப்பட்டு நின்ற பிரேமின் அம்மா மருமகள் புறம் திரும்பினாள்.

"உங்க மகனை நம்பி என் மொத்த சொந்தத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன். என்னை நீங்க ஏத்துக்கலன்னா அப்புறம் நான் அனாதை ஆசிரமம் தேடி போக வேண்டியதா இருக்கும். விசாலாட்சி மருமக அனாதை ஆசிரமத்துல இருக்கான்னு நாலு பேர் பேசிக்கிட்டா உங்களுக்குதானே அது கஷ்டமா இருக்கும்?" எனக் கேட்டாள். அப்படியே விழிகளையும் துடைத்துக் கொண்டாள்.

'மிருது குரங்கோட இரண்டு நாள் இருந்ததுக்கே இப்படி சோப் போட கத்துக்கிட்டாளே.!' என்று நினைத்த பிரேம் "அம்மா.. அப்ப நான் பாவம் இல்லையா? நீ பெத்த புள்ளை நான் அனாதையா தெருவுல நின்னா பார்க்கற நாலு பேரு உன்னை தப்பா நினைக்க மாட்டாங்களா?" என்றுக் கேட்டான் அப்பாவியாக. எப்படியாவது தானும் சிபியும் அம்மாவின் மனதை உருக்கி விட வேண்டும் என்று நினைத்தான்.

பிரேமின் அப்பா மகனையும், மருமகளையும் மாறி மாறி பார்த்துவிட்டு "நடிக்கற வேலை வேணாம்.. நாலு நாளைக்கு ரோட்டுல சுத்தினாதான் உங்களுக்கு புத்தி வரும்.‌" என்றார். பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பினார். குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டார். அவருக்கும் நிலாவை பிடித்திருந்தது.

உண்மையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற பிறகுதான் பிரேமுக்கும் சிபிக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. இப்போது இல்லையென்றாலும் நாளையோ நாளை மறுநாளோ மகளின் மூலம் இவர்களும் உள்ளே சென்று விடலாம் என்று நம்பினார்கள்.

"என்னால உங்களுக்கும் சிரமம்.." ஸ்வேதா சொன்னதற்கு மறுப்பாக தலையசைத்த மிருதுளா "நீ நல்லாகி வந்துட்டா எங்களுக்கு அதுவே போதும்.!" என்றாள். ஸ்வேதாவின் கூந்தல் முடிகளை ஓரம் ஒதுக்கி விட்டாள். அவளின் போர்வையை சரி செய்தாள்.

"அர்விந்த் சார்.." என்று இழுத்தவளை சிரிப்போடு பார்த்த மிருதுளா "அவனை சார்ன்னு கூப்பிடாத.. எனக்கு சிரிப்பு வரும். அவன் ஒரு எருமை. குரங்கு.. ஆனா மேட்டர் இப்ப அது கிடையாது. எங்க பேரண்ட்ஸ் எல்லாம் வெளியே நிக்கிறாங்க.. அர்வியோட அம்மாக்கிட்ட என்ன சொல்லி சமாளிக்கிறதுன்னு முதல்ல யோசி.." என்றாள்.

ஸ்வேதாவின் விழிகள் அகலமாக விரிந்தது. "ஆனா நான் எதுவும் செய்யலையே.." என்றாள்.

"ரொம்ப‌ சரியா கேட்கற.. ஆனா எங்க பேரண்ட்ஸ்க்கு இது எதுவும் முக்கியம் இல்ல.. பயங்கரமா திட்டணும். சான்ஸ் கிடைச்சா போதும். இப்ப மட்டும் நீயும் அர்வியும் லவ் பண்றது தெரிஞ்சதுன்னா இஷ்டத்துக்கு திட்டுவாங்க.."

"ரொம்ப பயமுறுத்துறிங்க." மனதின் பயத்தை மறைக்காமல் சொன்னாள்.

"அர்வியோட பேரண்ட்ஸ் உள்ளே வரும்போது மயக்கம் வந்த மாதிரி நடிச்சிடு.. அர்வியே சிக்கி திணறட்டும்.."

'நல்ல பிரெண்ட்..' என நினைத்த ஸ்வேதா சரியென்று தலையசைத்தாள்.

அதே நேரத்தில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தனர் அர்விந்த், மிருதுளாவின் பெற்றோர்.

ஸ்வேதாவின் அருகில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்த அர்விந்தின் அம்மா "யாருமா நீ? உன்னை ஏன் பையன் இழுத்துட்டு திரிஞ்சான்?" எனக் கேட்டாள். ஸ்வேதா குழப்பத்தோடு தன் மாமியாரை பார்த்தாள்.

"நியூஸ்ல பார்த்தேன்.." என்று அவள் சொன்னதும் புரிந்துக் கொண்டவள் பதில் சொல்ல தெரியாமல் திணறினாள். தான் ஒரு திருடி என்று தெரிந்தால் இவர்கள் வெறுப்பார்களோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

"இவளும் அர்வியும் லவ் பண்றாங்க ஆன்டி.. இவளுக்கு பேமிலி இல்ல.. இவளை நீங்க ஏத்துக்க மாட்டிங்கன்னு பயப்படுறா.. அதுவும் நீங்க அனுமதி தராம அர்வியோட லவ்வுக்கு கூட ஓகே சொல்ல கூடாதுன்னு இருக்கா.." என்றாள் மிருதுளா.

'அடிப்பாவி.. வான்டடா வந்து போட்டு தரா..' என்று கவலைப்பட்ட அர்விந்த் "சாரிம்மா.." என்றான் அவசரமாக.

"பொண்ணு நல்லா கிளி போல இருக்கா.." மிருதுளாவின் அம்மா சொன்னது கேட்டு ஆமென்று தலையசைத்தாள் அர்விந்தின் அம்மா.

இரண்டு நாட்களுக்கு பிறகு..

"அம்மா.. இன்னைக்காவது எங்களை உள்ளே விடுங்களேன்.." சிபி கதவை தட்டியபடி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

ஜன்னலை திறந்து பார்த்த அவளின் மாமியார் "முடியாது.." என்றாள் ஒரே சொல்லில்.

நிலா அவளின் தாத்தா மடியில் அமர்ந்து பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். தாய் தந்தையின் குரல் கேட்டு திரும்பியவள் உடனடியாகவே மீண்டும் பொம்மையின் புறம் திரும்பிக் கொண்டாள். தங்களை மறந்து விட்டாளோ என்று சிபிக்கு சந்தேகம் வந்தது.

"எத்தனை நாளைக்குதான் எதிர் வீட்டுல தங்கிட்டு இருக்கிறது? ஊர்ல எல்லாரும் பார்த்து சிரிக்கறாங்கம்மா.." பிரேம் பரிதாபத்தோடு சொன்னான்.

"புள்ளையோடு வந்து நிற்கும் போது யாரும் சிரிக்கலையோ? இதுதான் அவமானமா இருக்கோ?" என்று கடிந்தாள் அம்மா.

இரண்டு நாட்களாக அர்விந்தின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் இவர்கள். நிலாவும் தாத்தா பாட்டியோடு நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டாள். அதனால் இவர்களின் தேவை அவளுக்கும் இல்லாமல் போய் விட்டது.

பிரேமின் அம்மா குரங்கு கூட்டத்தில் இருந்த ஒருவரை கூட தன் வீட்டில் சேர்த்திக் கொள்ளவில்லை. ஊரில் இருந்த அனைவருமே குழந்தையோடு வந்த இந்த திருமணமாகாத தம்பதியை பற்றியேதான் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் விசாலாட்சியின் முகத்திற்கு முன்பே கூட திட்டிக் கொண்டிருந்தார்கள். அதை கேட்கும் போதெல்லாம் பிரேமின் அம்மாவிற்கு உயிரே போய் வருவது போலிருந்தது. மகனுக்கு எவ்வளவு தண்டனை தந்தாலும் மனம் அடங்காது என்றே தோன்றியது.

"நாளைக்கு முகூர்த்த நாள்.. பக்கத்து கோயில்ல போய் இரண்டு பேரும் தாலி கட்டிக்கிட்டு வாங்க. அப்புறம்தான் நான் உள்ளே விடுவேன்.!" என்ற அம்மாவை அதிர்ச்சியோடு பார்த்த பிரேம் "அப்படின்னா நீங்க வர மாட்டிங்களா? நீங்க இல்லாம நான் எப்படி தாலியை தொடுவேன்?" எனக் கேட்டான்.

அவனின் அம்மாவுக்கோ கெட்ட வார்த்தைகள் நினைவில் வந்தது. குழந்தையை பெற்றுக் கொள்ளும்போது இந்த எண்ணம் ஏன் மகனுக்கு வராமல் போனது என்று யோசித்து நொந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN