பௌர்ணமி 45

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மணி பன்னிரெண்டை தாண்டிக் கொண்டிருந்தது. பாலா எதிரே இருந்த சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான். முட்டிக் காலை கட்டியபடி அமர்ந்திருந்தவனின் காலோரத்தில் கைபேசி கிடந்தது. கைபேசியில் இருந்த பூர்ணிமாவின் புகைப்படம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. கைபேசியின் ஒளி அணைய இருந்த நேரத்தில் திரையின் மீது தன் விரலை பதித்தான். இப்படியேதான் நேரம் சென்றுக் கொண்டிருந்தது.

தவறை உணர்ந்துக் கொண்டான். ஆனால் தாமதமாக உணர்ந்திருந்தான். பூர்ணிமா சொன்னது கல் மீது விழுந்த உளியின் முனையை போல தெளிவாக விசயத்தை புரிய வைத்திருந்தது.

'என்ன பண்ணிட்ட பாலா? அவளுக்கு புத்தி வர வைக்கிறேன்னு நீ எடுத்த கத்தி அவளை வேற வகையில் காயப்படுத்தி இருக்கு. அதை கூட தெரிஞ்சிக்காம இருந்திருக்கியே.!' என்று நெற்றியில் அடித்துக் கொண்டான்.

அவன் எப்போதுமே அவளை சந்தேகித்தது இல்லை. திருமணத்தின் முதல் நாள் பூமாறனை பற்றி அவள் சொல்லியதும் சரி, அதன் பிறகு அவளும் பூமாறனும் அணைத்துக் கொண்டபோதும் சரி.. அவர்கள் இருவரையுமே தவறாக நினைக்கவில்லை. அவள் விளையாடுகிறாள் என்றும், அவன் நட்போடு பழகுகிறான் என்றும் மட்டும்தான் மனதார நினைத்திருந்தான்.

அவளை இந்த விதத்தில் காயப்படுத்த ஒரு போதும் அவன் நினைத்ததில்லை. இன்னும் சொல்ல போனால் அவளை எப்போதுமே காயப்படுத்த நினைக்கவில்லை. அத்தையின் மீதான அன்பில் குற்ற உணர்வு மிகுந்து, அதை சரியான முறையில் வெளிக்காட்ட தெரியாமல்தான் பூர்ணிமாவின் மீது கோபத்தை திருப்பி விட்டு விட்டான்.

அவள் அப்பாவின் காரணமாக மட்டும்தான் இத்தனை நாட்களும் பிரிந்து உள்ளதாக நினைத்தான். ஆனால் அவளின் பிரிவுக்கு பின்னால் இப்படியொரு காரணம் இருக்குமென்று நினைக்கவே இல்லை.

'நீதான் எல்லா தப்பையும் பண்ணியிருக்க பாலா..' என்று வருந்தியவனுக்கு பூர்ணிமாவின் பயந்த கண்கள் ஞாபகத்தில் வந்துப் போனது. பூமாறன் முதல் முறையாக அவளை அணைத்தபோது எவ்வளவு பயம் அந்த விழிகளில் இருந்தது என்பதை யோசித்துப் பார்த்தவனுக்கு பைத்தியம் பிடிக்கும்போல இருந்தது. அதே பயம்தான் இவன் அவளை பற்றி குற்றம் சாட்டும் போதும் இருந்தது.

எங்கேயோ ஆரம்பித்தது எப்படியோ முடிந்தது கண்டு பயம் ஆரம்பித்தது இவனுக்கு. இவ்வளவு நாளும் அவளுக்கு திமிர், அப்பாவின் மீதுள்ள பாசம் என்று நினைத்துதான் அவளே வரட்டும் என்று விலகி இருந்தான். சம்பந்தமே இல்லாமல் அவளை உடைத்திருப்போம் என்று நினைக்கவேயில்லை.

அவளுக்கு அழைத்து பேச கை பரபரத்தது. ஆனால் அவளை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் குழம்பினான். தெளிவாய் பயந்திருந்தான்.

மறுநாள் விடிந்த உடனேயே அவளுக்கு அழைத்தான். ஆனால் அவள் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து இவன் அழைத்தபோது முல்லைதான் எடுத்துப் பேசினாள்.

"ஏன் இப்படி செஞ்ச பாலா? உன்னை நான் எவ்வளவோ நம்பினேன்.. ஆண்கள் எல்லோரும் இப்படிதான்னு நான் இதுவரை சொன்னதே இல்ல. ஆனா நீ செஞ்சதை கேள்விப்பட்ட பிறகு அப்படிதான் சொல்ல தோணுது.. அந்த நாகேந்திரனுக்கும் உனக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்ல.." என்றாள்.

பாலா நெற்றியை தேய்த்தான். ஒரு மன்னிப்பை கேட்க தயங்கி, பிரச்சனை எவ்வளவு தூரம் வந்துள்ளது என்று புரிந்துக் கொண்டான்.

"நான் அப்படி கிடையாது அத்தை.." என்றவனை மேலே பேச விடவில்லை அவள். "இனி என்ன இருக்கு பாலா? அதுதான் உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கே.! என் பொண்ணை பார்த்த உடனே கல்யாணம் பண்ணிக்க கேட்ட நீ. லவ்வுன்னு நம்பிய என்னை எதுல வேணாலும் அடிக்கலாம். என்னையே மதிக்காத நீ என் பொண்ணை மதிப்பன்னு நினைச்சி தப்பு பண்ணிட்டேன். என்னோட எல்லா தப்புக்கும் என் பொண்ணுக்கு தண்டனை கிடைச்சிடுச்சி.." என்றவள் விம்மினாள். வந்த அழுகையை புடவை முந்தானையில் அடக்க முயன்றாள்.

"நீங்க நினைக்கிற மாதிரி இல்ல அத்தை.. நான் பூர்ணியை லவ் பண்றேன்.."

கசந்து சிரித்த முல்லை "ஏன் இரண்டு பொண்டாட்டியும் பக்கத்துல வேணுமா உனக்கு? உன் மாமனால செய்ய முடியாம போனதை நீ செய்யணும்ன்னு ஆசைப்படுறியா?" எனக் கேட்டாள்.

"அவரோடு என்னை கம்பேர் பண்ணாதிங்க.." எரிச்சலாக இருந்தது பாலாவுக்கு.

"இதைதானே நீ இத்தனை நாளா என் பொண்ணுக்கு பண்ணிட்டு இருந்த. அவளை அவங்க அப்பா மாதிரி அப்பா மாதிரின்னு சொல்லிதானே வீட்டை விட்டு விரட்டி விட்ட.. அவளை சொல்லும் போது இனிச்ச விசயம் இப்ப உன்னை சொல்லும் போது கசக்குதா?" எனக் கேட்டாள் கோபத்தோடு.

பாலாவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அவ்வளவு அழுத்தம் மனதில் இருந்தது.

"இனி எப்பவும் என் பொண்ணை தேடி வரதா.. முந்தாநாள் நீ வரவும் நான் கூட நீ திருந்தி வந்திருக்கன்னு நினைச்சேன். எல்லாம் என் முட்டாள்தனம்.." என்றவள் அத்தோடு இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

பாலா அமர்ந்திருந்த சுவரிலேயே இன்னும் கொஞ்சம் சாய்ந்தான். நேற்று இரவில் இருந்து இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தான்.

"மாமா.." ரோசினியின் அழைப்பில் நிமிர்ந்தான்.

"டிஸ்டர்ப்க்கு சாரி மாமா.. அருளை பார்க்க இன்னைக்கு கூட்டி போறேன்னு சொல்லி இருந்திங்க.. டாக்டரும் கூட நான் அவனோடு அடிக்கடி பேசினால் அவன் சீக்கிரம் நடமாட ஆரம்பிச்சிடுவான்னு சொன்னாங்க.. அவன் நல்லாகிட்டா நாங்க இங்கிருந்து கிளம்பிடுவோம். உங்களுக்கும் பிரச்சனை இருக்காது.." என்றாள்.

சரியென்று தலையசைத்த பாலா எழுந்து நின்றான்.

"நீ ரெடியாகி இரு.. நான் பத்து மணிக்கு உன்னை கூட்டிப் போறேன்.." என்றவன் நேரம் என்னவென்று பார்த்தான். மணி ஆறுதான் ஆகியிருந்தது. அம்மாவும், அல்லியும் இன்னும் சமைக்க ஆரம்பித்திருக்க மாட்டார்கள் என்று யூகித்தவன் அம்மாவுக்கு அழைத்தான்.

"அம்மா.. எங்களுக்கும் சேர்த்து சமைச்சி கொண்டு வரிங்களா?" எனக் கேட்டான்.

"அத்தை ஏதோ வேலையா இருக்காங்க மாமா.. சாப்பாட்டை அவர்கிட்ட தந்து விடுறோம்.." என்றாள் பிரியா.

இவன் ரோசினியை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து அம்மாவும் அப்பாவும் இவனோடு பேசுவதே இல்லை.

இவன் குளித்து விட்டு வந்தபோது வாசலில் அடுக்கு பாத்திரம் இருந்தது. பூமாறனின் வண்டி தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தது. நேற்றைய பிரச்சனையிலிருந்து இவனும் பேசுவதை நிறுத்தி விட்டான் என்பதை புரிந்து கொண்டான்.

ரோசினி உணவை முடித்துக் கொண்டதும் எழுந்தவன் தொழிற்சாலைக்கு சென்று அன்றைய அவசர வேலைகளை முடித்து விட்டு திரும்பி வந்தான்.

ரோசினியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்பினான். ஆனால் வாசலிலேயே தடை போல வந்து நின்றான் ரோசினியின் அண்ணன்.

"எங்கே மச்சான் கிளம்பிட்டிங்க?" என்றவனை எரிச்சலோடு முறைத்தவன் "போகும் போதே எங்க போறன்னு கேட்கற.. விளங்குமா?" என்றான்.

"இந்த கருவை எதுக்கு நீங்க பார்த்துக்கிறிங்க? கண்ட நாயோட குழந்தை நமக்கு எதுக்கு?"

இரவெல்லாம் உறங்காததால் ஏற்கனவே கோபம் அதிகம் வந்தது. இப்போது இவன் இருக்கும் சிறு கோபத்தையும் பற்ற வைத்து வெடிக்க செய்வது போலிருந்தது பாலாவுக்கு.

"அதுதான் முன்னாடியே சொன்னேன் இல்லையா.. குழந்தையை அழிச்சா இவளும் செத்துடுவான்னு.. இவளை கொல்றதுல உங்களுக்கு என்னடா அவ்வளவு பேராசை? குழந்தை பிறந்த பிறகு ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துலயாவது போட்டுட்டு வந்துடலாம்.. அதுவரைக்கும் இவளையும், என்னையும் டார்ச்சர் பண்ணாம இருங்கடா.. இவ்வளவு நாளா உன் அம்மாவும் பாட்டியும் வந்து உயிரை வாங்கினாங்க. இன்னைக்கு நீ வந்திருக்க.. புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து பேச கூட டைம் தராம டார்ச்சர் பண்ணிட்டு இருக்கிங்க.." என்றவன் வீட்டை தாளிட்டு விட்டு "நீ வா.. நாம போகலாம்.. இனி உன் வீட்டுல இருந்து எவனாவது வந்தா நான் மனுசனா இருக்க மாட்டேன்.. அவனவன் ஒழுக்க **க்கு எனக்கு அறிவுரை சொல்ல வந்துடுறானுங்க.." என்று திட்டியபடி சென்று காரை இயக்கினான்.

ரோசினி தன் அண்ணனை தயக்கமாக பார்த்தபடியே சென்று காரில் ஏறினாள்.

மருத்துவமனையில் அருளோடு பேச சென்று விட்டாள் ரோசினி. பாலா மித்ராவை தேடி சென்றான். தனது கன்சல்டிங் அறையில் இருந்தவள் இவன் உள்ளே வந்தது கண்டு "ஜூஸ் எடுத்து வாங்க.." என்று யாருக்கோ போன் செய்து சொன்னாள்.

"எனக்கு எதுவும் வேணாம்.." என்ற பாலாவை ஓரக்கண்ணால் அலட்சியமாக பார்த்தவள் "ஜூஸ் எனக்கு பாஸ்.. உங்களோடு பேச ஆரம்பிச்சா அப்புறம் எனக்கு டயர்ட் ஆகிடாதா? அதுக்குதான் முன்கூட்டியே ஜூஸ்.." என்றாள்.

"காமெடி போலதான் தெரியுது.." சலிப்பாக சொல்லியபடியே வந்து அவள் முன்னால் அமர்ந்தான்.

"ஒரு கவுன்சிலிங் வேணும்.." என்றவனை சந்தேகமாக பார்த்தவள் "மனநல மருத்தவரோட ரூம் எதிர் ப்ளாக்ல இருக்கு.." என்றாள்.

"இல்ல.. ஒரு பிரெண்டா பேசினா போதும்.." என்றவன் அவள் அமைதியாக இருப்பதை கண்டுவிட்டு பிரச்சனையை விலக்கிச் சொன்னான்.

அனைத்தையும் கேட்டு முடித்த மித்ரா "அவங்க இடத்துல யார் இருந்தாலும் அப்படிதான் பயப்படுவாங்க.. சொந்த தாயும், காதல் கணவனுமே நம்பலன்னு சொல்லும்போது இன்செக்யூராதான் பீல் பண்ணுவாங்க.. நீங்க சொன்னதும் சாது மிரண்டா காடு கொள்ளாதுங்கற கணக்கா முழுசா தூக்கிப் போட்டுட்டு போயிட்டாங்க.. இது ரொம்ப சிம்பிள் தியரி பாஸ்.. எது மேலாவது அளவுக்கு அதிகமா பயம் இருக்கும்போது ஏதோ ஒரு காரணத்தால், சந்தர்ப்பத்தால் அந்த பயம் உடையும் இடத்துல மாபெரும் எழுச்சி உருவாகும்.‌. சிலர் எவ்வளவு வேணாலும் கெஞ்சுவாங்க. ஆனா ஒரு எல்லையை தொட்டுட்டா நாம கெஞ்சினாலும் திரும்ப மாட்டாங்க.. வானத்துக்கு எல்லை இல்ல. ஆனா மனுசன் உணர்வுகளுக்கு சூடு சொரணை உண்டு. காரியம் கை மீறி போயிடுச்சி. இதுக்கு மேலேயும் அதிகம் லாஸ் ஆக கூடாதுன்னு நினைச்சா உடனே போய் அவங்ககிட்ட பேசுங்க.." என்றாள். அதே நேரத்தில் குளிர்பானமும் வந்துச் சேர்ந்தது. இரு டம்ளர்களில் இருந்ததில் ஒன்றை எடுத்து பாலாவிடம் தந்தாள்.

"ஆனா என்னால இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது.. ரோசினியும் அருளும் பத்திரமா எங்காவது கிளம்பணும்.." என்றவனை விசித்திரமாக பார்த்தவள் "ஊர் காதலை உழைச்சி சேர்த்தா தன் காதல் தானா சேரும்ன்னு எண்ணமோ? எதுவா இருந்தாலும் நாமதான் பேசி தீர்க்கணும்.." என்றவள் எழுந்து நின்றாள். "இதுக்கு மேல அட்வைஸ் பண்ற அளவுக்கு சரக்கு என்கிட்ட ஸ்டாக் இல்ல பாஸ்.. எதிர் ப்ளாக்ல மங்கை மேமை போய் பாருங்க. நான் வேணா போன் பண்ணி சொல்றேன். உங்களுக்காக அம்பது பர்சன்ட் டிஸ்கவுண்ட் தர சொல்றேன்." என்றாள்.

இவனும் எழுந்தான். "வேணாம். இதே போதும்.. அந்த பையனை மட்டும் சீக்கிரம் டிஸ்சார்ஜ் பண்ணி கொடுங்க.." என்றுச் சொன்னான்.

மித்ரா சரியென்று தலையசைத்து விட்டு சென்றாள்.

அருள் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான். இன்னமும் கூட பலவீனத்தை உணர்ந்தான்.

"நேரா நேரம் சாப்பிடு ரோசினி.."

"ம்.."

"ரொம்ப மெலிஞ்சி இருக்க.. எதுக்கு இவ்வளவு ரிஸ்க்? என்னை மறந்துட்டு போய் நல்ல வாழ்க்கை வாழலாம் நீ.."

ஆரஞ்சு பழத்தை பிழிந்துக் கொண்டிருந்தவள் பழத்தை தூக்கி அவன் மீது எறிந்தாள்.

"பாசத்துக்கும் கோழைத்தனத்துக்கும் வித்தியாசம் இருக்கு. பாசம் காட்டுறதா நினைச்சி கோழையாகாத.. உன்னை லவ் பண்றேன் நான். என்னால முடிஞ்ச அளவுக்கு ரிஸ்க் எடுப்பேன்.." என்றாள் அழுத்தமாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN