பௌர்ணமி 46

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அருள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அறையின் வெளியே வந்து நின்றான் பாலா. கொஞ்சமாக திறந்திருந்த கதவில் அருளும், ரோசினியும் பேசிக் கொள்வது தெரிந்தது.

பேசிவிட்டு வரட்டும் என்றெண்ணி நகர இருந்தவன் "சீக்கிரம் ரெடியாகி வா அருள்.. என் கையால எனக்கு நானே கட்டிய தாலியோடு மாமாவுக்கு பொண்டாட்டியா எத்தனை நாள் நடிச்சிட்டு இருப்பது? நீ ரெடியாகி வந்தாதான் குழந்தை பிறக்கும் முன்னாடி நாம வேற ஊர் போக முடியும்." என்றாள்‌.

"டிரை பண்றேன் ரோசினி.." என்றவனை முறைத்தவள் "மனசுல தைரியம் இல்லாம உடம்பு எப்பவுமே ரெடியாகாது. தயவு செஞ்சி மனசு வை.. நம்ம குழந்தையை நினைச்சி பாரு.." என்றவள் அவனின் கையை எடுத்து தன் வயிற்றின் மீது வைத்தாள். கண்களை மூடி படுத்திருந்தவன் சீராய் மூச்சு விட்டான். எப்படியெல்லாம் கண்ட கனவு இப்படி நடந்துக் கொண்டிருந்தது.

அவ்வளவாக காயங்கள் இல்லை. கொஞ்சம்தான் குணமாக வேண்டி இருந்தது. ஆனால் மெதுவாக குணமாகிக் கொண்டிருந்தான். மற்றவர்களுக்கு ஒரு மாதத்தில் ஆற வேண்டிய காயம் கூட இவனுக்கு இரண்டு மூனு மாதங்கள் எடுத்துக் கொண்டது. அதற்கு காரணம் அவனின் பயம்தான் என்று ரோசினிக்கு தெரியும்.

அவளுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருந்தது. பாசம் காட்டுகிறேன் என்ற பெயரில் இவ்வளவு விலகி செல்பவனை நம்பி எப்படி வாழ்க்கை பயணத்தை கடப்பது என்றுப் பெருமூச்சு விட்டாள். ஆனால் அவன் மீது இருந்த காதல் துளியும் குறையவில்லை. அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற வெறி இன்னும்தான் அதிகமாக வளர்ந்திருந்தது.

"என் பிரெண்ட்கிட்ட பேசியிருக்கேன் ரோசினி.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நாம இந்த ஊரை விட்டுப் போயிடலாம்.." என்றான் அவன்.

"உன்னைதான் மலை போல நம்பியிருக்கேன்.." என்றவள் வெளியே வந்தாள். பாலா எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான். இவள் வந்ததும் இவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

"ஏன் அப்படி பொய் சொல்லி வச்சிருக்க? தாலியை நீயே கட்டிக்கிட்டதா சொல்ல வேண்டிய அவசியம்?" செல்லும் வழியில் தன் சந்தேகத்தை கேட்டான் பாலா.

ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டு வந்த ரோசினி இவன் புறம் திரும்பினாள்.

"நீங்க தாலி கட்டினிங்கன்னு சொன்னா அவனுக்கு ஹர்ட் ஆகும் மாமா.. அதுவும் இல்லாம மனுசங்க மனசை நான் முழுசா நம்ப மாட்டேன். எதிர்காலத்துல இதை ஒரு காரணமா வச்சி எங்களுக்குள்ள சண்டை கூட வரலாம். ஏன் தெரிஞ்சே ரிஸ்க் எடுக்கணும்? தாலியை நான் கட்டிக்கிட்டேன்னு சொல்வதால ஒரு நட்டமும் இல்லையே.." என்றாள்.

அவளின் முன்னெச்சரிக்கை அவனுக்கு வியப்பை தந்தது. பூர்ணிமா இந்த முறை சண்டை போட்ட காட்சிகள் நினைவுக்கு வந்தது. தாலியை தான் கட்டவில்லை என்று சொல்லியிருந்தால் அவளின் காயம் சற்று குறைந்திருக்கலாம். சில இடங்களில் உண்மையை மறைப்பது கூட நலனை தரும் என்று காலம் போன கடைசியில் கண்டுக் கொண்டவன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்.

ரோசினியை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டவன் பூர்ணிமாவுக்கு கைபேசியில் அழைத்தான். அன்று முழுவதுமே அதைதான் செய்தான். ஆனால் அவள் போனை எடுக்கவே இல்லை.

பூமாறனுக்கு அழைத்து "பூரணி கூட நீ பேசினியா?" எனக் கேட்டான்.

"இல்ல.. அவ என் போனை எடுக்கல.." என்றவன் அத்தோடு போனை வைத்து விட்டான்.

முல்லைக்கும் கூட அழைத்துப் பார்த்தான். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லாமல் போய் விட்டது.

அப்படியே இரண்டு நாட்கள் கடந்து விட்டது. பூர்ணிமாவை தேடி ஓடதான் நினைத்தான். ஆனால் அலுவலகத்தில் முக்கியமான வேலைகள் இருந்ததால் செல்ல முடியாமல் போய் விட்டது.

மூன்றாம் நாள் காலையில் இவனின் பெயருக்கு தபால் ஒன்று வந்து சேர்ந்தது. விவாகரத்து மனுவில் கையொப்பமிட கேட்டு வந்திருந்தது ஒரு கடிதம்.

பாலா ஆத்திரத்தில் கடிதத்தை கசக்கி வீசினான். ரோசினி எடுத்து படித்து விட்டு "சாரி மாமா.. என்னால்தான் இத்தனையும்.." என்று கண் கலங்கினாள்.

"நீ போய் உன் வேலையை பாரு ரோசினி." என்றவன் மறுநாள் காலையில் பூர்ணிமாவை தேடி புறப்பட்டான்.

வீட்டிற்கு அவன் சென்ற போது அவள் கல்லூரி சென்று விட்டிருந்தாள். அத்தை அவனோடு பேசவே இல்லை. ராஜா அவனை முறைத்தார்.

"இங்கே ஏன் வந்த?" என்று கூடத்திலேயே மறித்துக் கேட்டார்.

"என் பொண்டாட்டியை பார்க்க.."

அவனை அறைய துடித்தது கரம்‌.

"உன் பொண்டாட்டி உன் வீட்டுல இருப்பா.."

"மாமா.. நான் கெட்டவன் கிடையாது. நான் ரோசினிக்கு புருசனும் கிடையாது.." என்றவன் அதற்கு மேல் சொல்ல பயந்தான். உண்மையை அத்தை தெரிந்துக் கொண்டால் பிறகு அதை பற்றி ரோசினியில் வீட்டில் சொல்லி விடுவாளோ என்று தயங்கினான். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்க விரும்பாதவன் "நான் பூரணிக்கு துரோகம் செய்யல.." என்று மட்டும் சொன்னான்.

"அழுதழுது தலை வலிக்குது பாலா.. நெஞ்செல்லாம் கூட எரியுது. தயவு செஞ்சி போயிடு.. இனியும் உன்னால நான் அழ வேணாம்.." கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சினாள் முல்லை. அவளின் தோற்றமும் கூட அப்படிதான் இருந்தது. வாராத தலை, வீங்கிய முகம் என்று பரிதாபமாக இருந்தாள்‌.

"இன்னைக்கு நைட் இங்கேதான் இருக்க போறேன். எனக்கும் சேர்த்து சமைச்சி வைங்க.." என்றவன் வெளியே நடந்தான்.

கல்லூரிக்கு சென்று அவளை தன்னோடு அழைத்து வந்து விடலாம் என்றுப் புறப்பட்டான்.

கல்லூரி முடிய ஒரு மணி நேரம் இருந்தது. வாசலில் தவமிருந்தான்.

நிமிடங்கள் கடந்த பிறகு ரோசினி அழைத்தாள். "மாமா.." என்றாள் சிறு குரலில். அழுதிருக்கிறாள் என்பது புரிந்தது. காரணம்தான் தெரியவில்லை.

"என்னாச்சி ரோசினி?" எனக் கேட்டான்.

"மாமா.. அப்பா வந்தாரு.. ரொம்ப திட்டினாரு.."

"ஏன்?"

"ஏதோ ஜாதகக்காரன் பிறக்கும் பிள்ளையால அவங்களுக்கு தோசம் வர போகுதுன்னு சொல்லிட்டானாம்.. 'நீ செத்தாலும் பரவால்ல.. வந்து குழந்தையை அழி'ன்னு சொல்லி கூப்பிட்டாங்க.. 'மாமா வேலை விசயமா வெளியூர் போயிருக்காங்க. அவங்க வந்ததும் அவரை கூட்டி போறேன்'னு சொன்னேன். ஆனாலும் அப்பா ரொம்ப திட்டிட்டாரு.. ரொம்ப பயமா இருக்கு மாமா.." என்றாள் அழுகையோடு.

பாலா நெற்றியை தேய்த்தான்.

"பயப்படாத.. நான் வரும் வரை பத்திரமா இரு.. நான் வந்து அவங்களை பேசிக்கிறேன்.." என்று தைரியம் சொன்னான்.

பூர்ணிமா கல்லூரி கட்டிடத்தை விட்டு வெளியே வந்தாள்.

"அந்த பையன் என்ன சொன்னான்?" ஸ்டெல்லாவிடம் கேட்டாள்.

"யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டான்.." என்ற ஸ்டெல்லாவுக்கு அவன் பதிலை சொல்லும் வரை தூக்கம் வராது என்று மட்டும் புரிந்தது.

பூர்ணிமாதான் தோழிக்கு உதவியாக இருக்கட்டுமே என்று உதயாவிடம் காதலை சொன்னாள். ஸ்டெல்லாவின் காதல் அவனை அதிர்ச்சியடைய செய்தது. இவ்வளவு நாளும் பூர்ணிமாவை மட்டுமே கவனித்து வந்தவன் அவள் புறம் திரும்பாமலேயே இருந்து விட்டான். இப்போது திடீரென்று சொல்லவும் என்னவோ போலாகி விட்டது. "அப்புறம் சொல்றேன்.." என்றவன் இரண்டு மூன்று நாட்களாக இவர்களின் அருகே வரவில்லை. பார்த்தால் கூட வெறுமனே புன்னகைத்து விட்டு நகர்ந்துக் கொண்டிருந்தான்.

"உன் ஆளு.." பூர்ணிமாவின் தோளில் கை பதித்தாள் ஸ்டெல்லா. நேரே பார்த்தாள் இவள். பாலா இவளை நோக்கி வந்தான்.

"என்ன?" அவன் ஆரம்பிக்கும் முன்பே இவள் சீறினாள்.

"பேசணும்.. என்னோடு வா.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு காருக்கு வந்தான்.

"காலேஜ்ல வந்து சீனை போடாத பாலா.." என்றவளிடம், "அதேதான் பூரணி.. நான் சீன் போடாம இருக்கும்ன்னா நீ என்னோடு அமைதியாக வரணும்.." என்றான்.

வீட்டை நோக்கி புறப்பட்டது கார்.

"என்னை முழுசா கொல்லணுமா?"

பாதி வழி சென்ற பிறகு காரை ஓரம் கட்டியவன் தன் கையில் இருந்த கசங்கிய தாளை அவளிடம் காட்டினான்.

"என்ன இது?"

"டைவர்ஸ் நோட்டிஸ்.. தெரியாதா என்ன?"

"நான்தான் கொஞ்ச நாள் டைம் கேட்டிருந்தேன் இல்லையா? உனக்கு என்ன அவ்வளவு அவசரம்? மூனு வருசமா விலகி இருப்பவளுக்கு இந்த ஒன்னு இரண்டு மாசம்தான் குறையா போச்சா?" என்று காட்டு கத்தல் கத்தினான். பூர்ணிமாவுக்கு காதில் ங்ஙொய்யென்று சத்தம் கேட்டது. சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் கூட இவனின் கத்தல் கேட்டு திரும்பிப் பார்த்தனர்.

"தப்பு பண்ணிட்டேன்.. நீ உன் அப்பாவை எப்படி பார்த்தாலும், நேசிச்சாலும் அது உன் சொந்த விசயம். நான் உன் பீலிங்ஸை அடக்க நினைச்சது என் தப்புதான். சாரி.." என்றான்.

பூர்ணிமாவால் நம்பவே முடியவில்லை. அவன் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வர மாட்டேனே? மூன்று வருடங்களாக முகத்தை திருப்பிக் கொண்டு திரிபவன் திடீரென்று மன்னிப்பு கேட்டால் அவள் மட்டும் எப்படி நம்புவாள்?

"இவ்வளவு நாளும் நீ உன் அப்பாவோட காரணத்தாலதான் என்னை விலகி இருந்தன்னு நினைச்சேன்.. ஆனா சத்தியமா நான் உன்னை ஒரு செகண்ட் கூட தப்பா நினைக்கல பூர்ணி.. மனசார லவ் பண்றேன். நீ மாறனோடு என்ன பேசி பழகினாலும் நான் தப்பா நினைச்சதே இல்ல. நீ இந்த விசயத்துல இன்செக்யூரா பீல் பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்ல. ரியலி சாரி. அன்னைக்கு அந்த பையன் உனக்கு கிஸ் பண்ண போது கூட நான் உன்னை தப்பா நினைக்கல. நீ என்னை மட்டும்தான் லவ் பண்றன்னு நினைச்சேன்.."

பூர்ணிமாவுக்கு அவள் அறியாமல் கண்ணீர் வழிந்தது. அழுகை சத்தம் வெளியே வராமல் இருக்க உதட்டை கடித்துக் கொண்டாள்.

"நீ உன் அப்பா மாதிரின்னு நான் நினைச்சதே கிடையாது. நீ பூமாறனை மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னபோது கூட நான் அதை விளையாட்டா மட்டும்தான் நினைச்சேன். நீ வேற யாரையாவது லவ் பண்ணா கூட அப்பவும் நான் பொறாமை மட்டும்தான் படுவேன். உன் கேரக்டரை தப்பா நினைக்க மாட்டேன். பிராமிஸ்.." என்றான்.

பூர்ணிமா ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். வாயை மூடி அழுகையை அடக்கினாள். காலம் போன கடைசியில் மன்னிப்பு கேட்டு என்ன லாபம் என்று நினைத்தாள்.

பாலா தன் போனை எடுத்தான்.

"நீ பிரிஞ்சி வர இதுதான் காரணம்ன்னு சொல்லி இருந்தா நான் அப்பவே புரிய வச்சிருப்பேன் பூர்ணி. உன் அப்பாவுக்கு நீ சப்போர்ட் பண்ணிட்டு இருந்த.. எனக்கு அப்ப புத்தி இல்ல. அதனாலதான் அப்படி பேசிட்டேன். அந்த காரணம் கூட தானா விலகிடும்ன்னு நம்பினேன். ஆனா இவ்வளவு பெரிய சுமையை உன் மனசுல வச்சிருப்பன்னு நினைக்கல.." என்றவன் போனை பார்த்து "அருள்.." என்றான்.

இவள் திரும்பி பார்த்தாள். மருத்துவமனை கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த அருள் வீடியோ காலில் தெரிந்தான்.

"ஹலோ பாஸ்.." என்றவன் பூர்ணிமாவை பார்த்து விட்டு "ஹாய்.." என்று கையசைத்தான்.

"நீங்க இவரை நம்பலன்னு சொன்னாரு இவரு. சாரி சிஸ்டர்.. எங்களால்தான் இவ்வளவு பிரச்சனையும். நானும் ரோசினியும் லவ் பண்றோம். பேரண்ட்ஸ் ஆக போறோம். ஆனா இந்த ஆதிக்க மனப்பான்மை கொண்ட சொந்தங்களால் பிரிஞ்சி இருக்கோம்.. குணமாகிட்டேன் சிஸ்டர். ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க.‌ இந்த ஊரை தாண்டிட்டா நாங்க இரண்டு பேருமே பிச்சைக்காரங்கதான். ரெஸ்ட் எடுக்க நேரம் இருக்காது. அதனாலதான் இங்கே சாரோட ஓசி காசுல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன். ஆனா சம்பாதிச்சி திருப்பி தந்திடுவேன்.. இன்னும் ஒன் மன்த்ல நானும் என் லவ்வரும் இங்கிருந்து கிளம்பிடுவோம்.. அதுவரைக்கும் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க சிஸ்டர்.. ப்ளீஸ்.." என்றான் கெஞ்சலாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN