பௌர்ணமி 47

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா சிலை போல அமர்ந்திருந்தாள்.

"என்னோடு வா.." என்றான் பாலா.

தலையை பிடித்தவள் "என்னை கொஞ்ச நாள் விடு பாலா. நான் யோசிக்கணும்.!" என்றாள்.

"ஆனா நான் சாரி கேட்டுட்டேனே.."

"அதுதான் சந்தேகமாக இருக்கு. இவ்வளவு நாள் சாரி கேட்காதவன் இன்னைக்கு ஏன் கேட்கணும்? இவ்வளவு நாளும் கூட இப்படியேதான் மனசு கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். கேரக்டர் சந்தேகத்தாலதான் நான் பிரிஞ்சேன். இல்லன்னு சொல்லல. ஆனா நான் என் அப்பா மேல இப்பவும் கூட பாசமாதான் இருக்கேன். நான் அன்னைக்கு உன்னை தேடி வராம இருந்திருந்தா நீ சாரி கேட்டிருக்க மாட்ட இல்லையா? எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கு. நான் யோசிக்கணும்.. சாரி.." என்றவள் காரின் கதவு கைப்பிடியை திறக்க முயன்றாள். அவளின் மறு கையை பிடித்தான் பாலா.

"டிராப் பண்றேன் பூர்ணி.." என்றான். அவள் அமைதியாக அமரவும் காரை இயக்கினான்.

வீட்டின் முன்னால் கார் நின்றது.

"நீ சொன்னதை நான் நம்பினேனா இல்லையாங்கறது முக்கியம் இல்ல. உன் வீட்டுல ஒரு கர்ப்பிணி பொண்ணு இருக்கா.. அவளுக்கு நீ புருசனா, அவ குழந்தைக்கு நீ தகப்பனாங்கறதும் இப்போதைக்கு ஆராய வேண்டிய தேவை இல்ல. அந்த பொண்ணு அங்கே தனியா இருக்கா. அதனால கிளம்பி போ.!" என்றாள்.

அவன் சரியென்று தலையசைத்தான்.

கீழே இறங்க முயன்றவள் ஒரு நொடி தயங்கி இவன் புறம் பார்த்தாள். "இதுவும் உன் நாடகத்துல ஒன்னு இல்லதானே?" எனக் கேட்டாள்.

அவன் அதிர்ச்சியோடு நிமிர்ந்தான்.

"பயமா இருக்கு பாலா‌. உன் கிறுக்குதனத்தையும், உன் கோபத்தையும் என்னால புரிஞ்சிக்க முடியல. இனி உன்னோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும் இன்செக்யூராதான் பீல் பண்ணுவேன். இது செட்டாகுமான்னு எனக்கு தெரியல. யோசிச்சி பார்க்கறேன்.." என்றவள் காரை விட்டு கீழே இறங்கினாள்.

பாலா இவளை சற்று நேரம் வெறித்துப் பார்த்தான். பிறகு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான்.

"என்னவாம்?" என்றாள் முல்லை இவளை கண்டதும்.

"சும்மா பேச வந்திருக்கான்.." என்றவளின் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை முல்லையால்.

பூர்ணிமாவின் இரவை பாலாதான் ஆக்கிரமித்து இருந்தான். அவன் சொன்னதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பூமாறனுக்கும் அழைத்து பேசினாள். அவன்தான் அருள் வெட்டப்பட்டதை பற்றி சொன்னான். அந்த நேரத்தில் இதன் பயந்ததையும் சொன்னான்.

ரோசினி விசயத்தில் அவன் பொய் சொல்லவில்லை என்று புரிந்துக் கொண்டாள். ஆனாலும் அவனின் முந்தைய குணத்திற்கு அவனை ஏற்றுக் கொள்ள தயக்கமாக இருந்தது.

பாலா வீட்டிற்கு வந்தபோது ரோசினி அழுது ஓய்ந்திருந்தாள்.

"மாமா.." என்றாள் இவனை கண்டதும்.

அம்மா அனுப்பி வைத்திருந்த உணவு ஹாலிலேயே கிடந்தது. இவள் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்பது புரிந்தது.

உணவை தட்டில் பரிமாறிக் கொண்டு வந்தவன் "சாப்பிடு.." என்றான்.

"அவங்க சொன்னது போலவே செஞ்சிடுவாங்களா மாமா?" பயத்தோடு கேட்டாள். அவளின் குடும்பம் அப்படிப்பட்டதுதான் என்பதால் அவன் நேரடியாக பதில் சொல்லவில்லை.

"நீ இங்கே இருக்கும் வரை நான் எதுவும் ஆக விடமாட்டேன். என்னை நம்பு.." என்றவன் தண்ணீர் கொண்டு வந்து அவளருகே வைத்தான்.

"ஏன் மாமா என் மேல கருணை காட்டுறிங்க?" அப்பாவியாக கேட்டவளின் தலையை வருடி விட்டவன் "நீயும் என் அத்தை பொண்ணுதானே? பாசம் இல்லாம என்ன?" எனக் கேட்டான். ஆனால் அவனுக்குள் இருக்கும் மூத்த குழந்தை எனும் பொறுப்புதான் இவளையும் சேர்த்து பாசம் காட்டி வைத்துக் கொண்டிருந்தது.

இந்த பாச சங்கிலியில் பூர்ணிமாவின் மீதான பாசம் மட்டும் எப்படி மாறி போனது என்றுதான் அவனுக்கு புரியவில்லை. காதல் ஆரம்பித்த உடன் அந்த பொறுப்பு சற்று தளர்ந்து விட்டதை அவனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ரோசினி மாத்திரையை விழுங்கி விட்டு படுத்தாள். அவளின் உடலில் ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது என்று மருத்துவர்கள் சொல்லி இருந்தார்கள். இவளை எப்படி பழையபடி மாற்றுவது என்று அவனுக்கு தெரியவில்லை. அருள் குணமாகி வந்தால் இவளும் சேர்ந்து சரியாகி விடுவாள் என்று நம்பினான்.

ரோசினி கண்களை மூடினாள்.

"நீ என் புள்ளைங்கறது உண்மைன்னா வயித்துல இருக்கும் இந்த குழந்தையை அழிச்சிடு. இந்த குழந்தையால நம்ம மொத்த குடும்பத்துக்கும் ஆபத்துன்னு சோசியக்காரன் சொல்றான். நீ ஆசைப்பட்டவனை நாங்க கொன்னுட்டோம்ன்னு இந்த குழந்தை மூலமா எங்களை பழி வாங்க நினைக்காத. இப்பவே அழிச்சிட்டா உனக்கும் நல்லது. இல்லன்னா எப்படியாவது, உன்னை கொன்னாவது இந்த குழந்தையை நாங்க அழிச்சிடுவோம்.." அப்பா சொன்னது கனவு போல் வரவும் பதறியடித்து எழுந்து அமர்ந்தாள்.

மூச்சு சீர் பட்ட பிறகு மீண்டும் படுத்தாள். தான் எதிரி போல செயல்பட்டும் கூட மாமன் தனக்கு இவ்வளவு உதவுகிறானே என்றெண்ணி வியந்தாள்.

பாலா குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். ரோசினியின் குடும்பத்தை விலக்கி வைக்க ஏதேனும் வழியிருக்கிறதா என்று யோசித்தான்.

மறுநாள் காலையில் தாத்தாவும், ரோசினியின் அப்பாவும் வந்து சேர்ந்தனர்.

"குழந்தையை பத்தி ஜாதகம் பார்த்தோம் மாப்பிள்ளை.." என்றார் மாமா இருக்கையில் அமர்ந்தபடி.

"நானும்தான் பார்த்தேன்.." இவன் சொன்னது கேட்டு அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவனுக்கு இதன் மீது அவ்வளவா நம்பிக்கை இல்லை என்று அவர்களுக்கே தெரியும்.

"இந்த குழந்தை பிறந்தா‌ என் குடும்பம் செழிப்படையும்ன்னு ஜாதகக்காரன் சொன்னான்."

பொய் சொல்கிறானோ என்று அவர்கள் சந்தேகித்த நேரத்தில் "உங்களுக்கு ரொம்ப நாளா ஒரு விசயம் சொல்லணும்ன்னு நினைச்சேன். எனக்கு நடக்கும் கிரக திசையின் காரணமா என்னை நெருங்கி யார் இருந்தாலும் அவங்களுக்கு ஆபத்து. அதனாலதான் நானே என் குடும்பத்தை விட்டு தூரமா வந்து இருக்கேன். நீங்களும் வராதிங்க. நீங்க சாகறதை பத்தி எனக்கு கவலை இல்ல. நீங்க செத்தா மருமகன் முறை செய்யணும். வெட்டி செலவு பண்ண கடுப்பாக இருக்கு. அதான் சொல்றேன்.." என்றான்.

மாமா படக்கென்று எழுந்து நின்றார். இதை விட மோசமாக அவமானப்படுத்த முடியாது என்று அனைவருக்கும் தெரியும்.

"உன்னை ஒருநாள் தனியா கவனிக்கிறேன்.." என்றவர் வெளியே நடக்க முயல, "நான் உங்க மேல போலிஸ் கம்ப்ளைண்ட் தர கூடாதுன்னு நினைக்கிறேன்.!" என்றான். நின்றவர்கள் இவனை திரும்பி பார்த்து முறைத்து விட்டு நகர்ந்தனர்.

பாலா அலுவலகம் சென்ற பிறகு பாட்டியும் ரோசினியின் அம்மாவும் வீட்டிற்கு வந்து அவளை மூளை சலவை செய்ய முயன்றனர். இதை அன்று மாலையில் அறிந்த பாலா மறுநாளில் இருந்து அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தொழிற்சாலை கிளம்பினான். அங்கே அவளை தன் அறையிலேயே தங்க வைத்துக் கொண்டான். அவள் படிக்க புத்தகங்கள் சில வாங்கி வந்து தந்தான்.

இங்கே வந்த பிறகுதான் அவளுக்கு மனம் சற்று அமைதியடைய ஆரம்பித்தது. இரு வாரங்களுக்கு பிறகு நடந்த பரிசோதனையில் கூட இவளுக்கு அனைத்தும் நார்மலுக்கு வந்து விட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். யோசித்துப் பார்த்தவன் மறுநாளில் இருந்து அவளை கூட்டி சென்று அருளிடம் விட்டு வருவான். மாலையில் வீடு செல்லும்போது அழைத்துக் கொள்வான். இது முன்பை விடவும் அதிக மாற்றங்களை தந்தது‌. பாலாவுக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

ஆனாலும் இன்னமும் பூர்ணிமாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பாலா பொறுமையாக காத்திருந்தான்.

அடுத்த ஒரு வாரத்தில் அருளுக்கு முழுதும் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இன்னும் ஒரு நாளில் டிஸ்சார்ஜ்.

பாலா முல்லையின் வீட்டிற்கு வந்தான். ராஜா துணிக் கடைக்கு சென்றிருந்தார். பூர்ணிமாவும் கல்லூரி சென்றிருந்தாள்.

அத்தையின் முன் வந்து நின்றான் பாலா.

"இங்கே ஏன் வந்த?" கோபமாக கேட்ட அத்தையிடம் "சாரி.." என்றான்.

எதற்காக என்ற எண்ணத்தோடு நிமிர்ந்தவளிடம் "உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். உங்க கேரக்டர் பத்தி பேச எனக்கு எந்த வித உரிமையும் கிடையாது.. உங்களை நான் நடத்தை கெட்டவங்கன்னு சொல்லி இருக்க கூடாது.." என்றான் கை கூப்பி.

முல்லைக்கு நம்பிக்கையே இல்லை.

"அப்பவே சாரி கேட்கணும்ன்னு நினைச்சேன். ஆனா ரொம்ப தயக்கமா இருந்தது. என்னவோ மனசுல தடுப்பு. அதனாலதான் இவ்வளவு தாமதம்.." என்றான்.

முல்லைக்கு ஆச்சரியம் கூடியது.

"நீங்க நாகேந்திரனோடு சேர்ந்திருந்தா கூட உங்களோட கேரக்டரை பத்தி பேச எனக்கு உரிமை கிடையாது. பாசம் காட்டுறேங்கற பேர்ல நீங்க நான் நினைச்ச மாதிரி இருக்கணும்ன்னு நினைச்சது என் தப்புதான். நீங்க உங்களை நல்லவங்கன்னு சொன்ன அத்தனை முறையும் நம்பாம போனதுக்கு சாரி. இது உங்களுக்கு இவ்வளவு வலியை தரும்ன்னு நினைக்கல நான்‌. திமிர் ஆணவம்தான் காரணம். நான் தெளியவும், என் புத்தி வளரவும் இத்தனை வருசங்கள் ஆகிடுச்சி. இவ்வளவு நாளும் உங்களுக்கு கஷ்டம் தந்ததுக்கு சாரி.." என்றவன் அவளிடம் கடைசியொரு முறை மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பூர்ணிமா மாலையில் வந்த போது பாலா வந்து போனதை பற்றி சொன்னாள் முல்லை. "இவன் மன்னிப்பு கேட்பான்னு நான் நினைக்கவேயில்ல.." என்றாள் வியப்போடு.

"புள்ளைக்கிட்ட அவன் சேட்டை எடுப்படலன்னு உங்கிட்ட வந்து பேசியிருக்கான்.." என்றார் ராஜா.

பூர்ணிமாவுக்குதான் என்னவோ நெருடியது. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே அன்றைய இரவை கடத்தினாள்.

மறுநாள் பூமாறனுக்கு கைபேசியில் அழைத்து விசயத்தை சொன்னாள். "தெரியல பூரணி.. அண்ணன் இந்த கொஞ்ச நாளாவே இப்படிதான் இருக்கான். வக்கீல்கிட்ட சொல்லி அவன் பேர்ல இருந்த எல்லா சொத்தையும் உன் பேர்லயும், என் பேர்லயும் மாத்திட்டான். அந்த கம்பெனியில் அவனுக்குன்னு இப்ப பத்து பைசா கூட ஷேர் இல்ல. ஏன் செய்றான்னு தெரியல. நான் போய் கேட்டதுக்கும் எதுவும் சொல்ல மாட்டேன்கிறான்.." என்றான் அவன்.

பூர்ணிமாவுக்கு இன்னும் குழம்பியது. என்ன நடக்க இருக்கிறது என்று யூகிக்க முயன்றாள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு..

விமான நிலையத்தின் முன்பே காத்திருந்தான் சுகன். பாலா ரோசினியையும், அருளையும் அழைத்து வந்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரையும் பத்திரமாக விமானத்தில் ஏற்றி விட்டுவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நம்பினான்.

"ரொம்ப நன்றிகள் சார்.." என்றான் அருள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த பாலா தலையசைத்தான். யோசனையோடு கண்ணாடியை பார்த்தவன் "ஒரு சின்ன கிளாரிபிகேஷன்.. ரோசினி இத்தனை வருசமா என் வீட்டுல இருந்ததால நீங்க அவளை தப்பா நினைச்சிட வேணாம். எங்களுக்குள்ள அண்ணம் தங்கை உறவை தாண்டி வேற எதுவும் இல்ல. பேருக்குதான் அத்தை மாமா பசங்க. ஆனா நாங்க எப்பவும் சகோதர பாசத்தோடுதான் இருந்தோம்.." என்றான்.

ரோசினிக்கு உள்ளம் குறுகுறுத்தது. இவனின் பாசத்தை தான்தான் சரியாக புரிந்துக் கொள்ளாமல் போனோம் என்று இப்போது அறிந்துக் கொண்டாள்.

"இல்ல சார்.. நான் அப்படி நினைக்க மாட்டேன்‌. சாக கிடந்த என்னை மீட்டு கொண்டு வந்தது நீங்கதான். மறுவாழ்க்கை தந்த கடவுள் நீங்க. உங்களை தப்பா நினைக்க தோணுமா?" என்றான்.

அதே நேரத்தில் காரை சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் பாலா. எதிரில் ரோசினியின் அண்ணனும் அப்பாவும் சில ஆட்களோடு நின்றிருந்தார்கள். அவர்களின் கைகளில் உருட்டு கட்டைகளும், வீச்சரிவாள்களும் இருந்தன.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN