பௌர்ணமி 48

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ரோசினி பயந்து நடுங்கினாள். அவளின் தோளோடு அணைத்துக் கொண்ட அருள் "இப்ப என்ன சார் செய்றது?" என்றான் பாலாவிடம்.

"நீங்க காரை விட்டு வெளியே வராதிங்க.." என்றவன் தான் மட்டும் கீழிறங்கி நின்றான்.

"ஓவரா குழையும்போதே தெரியும்டா நீ இப்படி ஏதாவது கோக்குமாக்கு செய்வன்னு.. இவளுக்கு அடைக்கலம் தந்து எங்க குடும்பத்து மானத்தை கப்பலேத்தி விட பார்க்கிறியா?" என கேட்டார் சின்ன தாத்தா.

"அவங்க இரண்டு பேரும் மேஜர். அவங்களை கட்டாயப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அமைதியா போயிடுங்க." என்றவனை நோக்கி உருட்டுக்கட்டை ஒன்றை வீசினான் ரோசினியின் அண்ணன்.

"அம்மா‌‌.." பயத்தில் கத்தினாள் ரோசினி. "கண்ணை மூடிக்க.." என்றான் அருள்.

"என்னடா மேஜர்? பெத்து, கஷ்டப்பட்டு வளர்த்தினா மேஜர்ன்னு சொல்லி கண்ட நாயோடு கூட்டி கொடுப்பியா?" எனக் கேட்ட ரோசினியின் அப்பா அரிவாளோடு முன்னேறினார்.

பாலா தன் பாக்கெட்டில் கை விட்டான். எதற்கும் இருக்கட்டுமென்று நினைத்து பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து வந்திருந்தான். ஆனால் இந்த கூட்டத்தின் முன்னால் இந்த ஸ்ப்ரே போதாது என்று அவனுக்கே புரிந்தது.

"அப்ப என்னதுக்கு நீ பெத்துக்கற? அவளா உன்னை பெத்துக்க சொல்லி கேட்டா? உனக்கு வாரிசு வேணும்ன்னு பெத்துக்கிட்ட. வாரிசு வந்துட்டா அத்தோடு நிறுத்திக்க. அவளை கன்ட்ரோல் பண்ற நேரத்துல உன் ரவுடி பையனை கூட்டிப் போய் நல்ல புத்தி சொல்லி கொடு.." என்றான்.

"எதுக்குப்பா இவனோடு சும்மா பேசிக்கிட்டு.. இவனை போட்டு தள்ளிட்டு அவளை கொன்னுட்டு கிளம்பலாம்.." என்ற ரோசினியின் அண்ணன் வேகமாக பாலாவை நோக்கி ஓடி வந்தான். வந்தவன் கத்தியை தூக்கி இவன் மீது வீச அவசரமாக விலகி நின்றான் பாலா.

"லூசு பசங்களை வச்சிக்கிட்டு.." சலித்துக் கொண்டவன் காரை விட்டு இறங்காமல் அப்படியே இவர்களை ஏற்றி கொன்று விட்டு சென்றிருக்கலாம் என்று இப்போது நினைத்தான்.

ரோசினியின் அண்ணனை உதைத்து தள்ளினான். முறைத்தபடி ஓடி வந்த அவன் இவனை வெட்ட முயல, எப்படியோ நழுவி நகர்ந்துக் கொண்ட பாலா அவனின் கையை வளைத்து முதுகில் ஒரு குத்து விட்டான்.

ஆனால் அதே சமயத்தில் தூரத்தில் நின்றிருந்த ரவுடிகள் ஓடி வந்தனர்.

"தப்பு பண்ணிட்டியே பாலா.. இவனுங்களை சமாளிக்க உன்னால முடியாதே.!" என்று தயங்கி நின்றவன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் முன்பே அவனின் தோளில் வந்து வெட்டியது ஒரு கத்தி.

ரோசினி அலறினாள். காரை விட்டு இறங்கி முயன்றாள். அவளின் கையை பிடித்து தடுத்த அருள் "அவங்க உன்னையும் கொன்னுடுவாங்க.." என்றான்.

"ஆனா நான் அவரை சாக விடட்டா? உன்னோடு வாழும் பாக்கியம் எனக்கு கிடைக்கல அருள்.. என்னை மன்னிச்சிடு.!" என்றவள் வெளியே வந்தாள்.

தன் தந்தையை பார்த்தவள் "அவரை விட்டுடுங்க.. நான் உங்களோடு வரேன். அவரையும் அருளையும் உயிரோடு அனுப்பிடுங்க.." என்றாள் கெஞ்சலாக.

ரோசினி இறங்கிய மறுநொடியே அருளும் தனது இருக்கையிலிருந்து கீழிறங்கி விட்டான்.

அப்பா நக்கலாக நகைத்தார். வெற்றி பெருமிதம் முகத்தில் தாண்டவமாடியது.

ரோசினி தன் அப்பாவை நோக்கி நடந்தாள்.

"ரோசினி அங்கே போகாத.. அவங்க உன்னை கொன்னுடுவாங்க.." அடிப்பட்ட தோளை ஒற்றை கையால் அழுத்தி பிடித்தபடி சொன்னான் பாலா.

ரோசினி கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். "என் ஒருத்தியால நீங்க இரண்டு பேர் சாக வேண்டாம் மாமா.." என்றாள்.

"இடியட்.. அதுக்காக நீ போய் இரட்டை உயிரை விட போறியா? அங்கே பக்கத்துல போகாத.. நீ காருக்கே போ.." என்று எச்சரித்தான். ஆனால் அதற்குள் அவளின் அண்ணன் ரோசினியை நெருங்கி விட்டான். "நம்ம வீட்டு கௌரவத்தை விட இந்த நாயோடு போறதுதான் உனக்கு முக்கியமா? அதுக்கு நாங்க விடுவோமா?" எனக் கேட்டவன் கத்தியை அவளின் கழுத்தில் பதித்தான்.

அருள் இவளை நோக்கி ஓடி வந்தான். அவனை பிடித்து நிறுத்தினர் இரு ரவுடிகள். அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினர்.

"மொத்தமா முடிஞ்சது.." வருத்தத்தோடு சொன்ன பாலாவுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. அவன் மயங்கி விழ இருந்த நேரத்தில் போலிஸ் வாகனம் ஒன்று அவ்விடத்திற்கு வந்தது.

ரோசினியின் அண்ணன் அவசரமாக அவளின் கழுத்தில் கத்தியை ஆழமாக பதித்தான். போலிசார் ஒருவர் தன் லத்தியை தூக்கி வீசினார். ரோசினியின் அண்ணன் கீழே விழுந்தான். ரோசினியும் கீழே விழுந்தாள். போலிசார் அவசரமாக அவளின் கழுத்தில் துணியை வைத்து அழுத்தினார்கள்.

"பயப்படாத பாப்பா.. உனக்கு ஒன்னும் ஆகாது.." என்ற ஒருவர் "இவனுங்க எல்லோரையும் பிடிங்க.." என்றார் தனது ஆட்களிடம்.

ரோசினியின் குடும்பம் ஆளுக்கொரு திசையில் ஓடியது. அவர்களை பிடிக்க காவல் துறையினரும் ஓடினர்.

ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தரையில் விழுந்து கிடந்த பாலா ரோசினியை பார்த்து கண்ணீர் வடித்தான். தன்னை நம்பி வந்தவளை கடைசியில் பலி தந்து விட்டோமே என்று மனதுக்குள் கதறினான். வயிற்று பிள்ளையோடு இருப்பவளை கூட எப்படி இவர்களுக்கு கொல்ல மனம் வந்தது என்று வாடினான். போலிஸார் ஒருவர் இவனை நோக்கி ஓடி வந்தார்.

"சாரி பாலா.. வழியில் கார் பஞ்சர்.." என்றான்.

"அந்த பொண்ணை காப்பாத்துங்க சார்.." என்றவன் அப்படியே மயங்கி விட்டான்.

பூர்ணிமா மதிய உணவு இடைவேளையின் போது தனது போனை கையில் எடுத்தாள். பூமாறனிடம் இருந்தும், பிரியாவிடமிருந்தும் ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தன. எதற்கு இத்தனை முறை அழைத்தார்கள் என்று குழப்பத்தோடு அவர்களுக்கு அழைக்க நினைத்தாள். அதே நேரத்தில் "பாப்பா.. உன்னை பார்க்க உங்க அம்மா வந்திருக்காங்க.." என்றார் காவலாளி ஒருவர்.

இந்த நேரத்திற்கு அம்மா ஏன் வந்துள்ளாள் என்ற யோசனையோடு வெளியே சென்றாள் பூர்ணிமா. அழுது வடிந்த முகத்தோடு நின்றிருந்த முல்லை இவளை கண்டதும் அணைத்துக் கொண்டாள்.

"பாலாவுக்கும் ரோசினியோட பிறந்த வீட்டாருக்கும் நடுவுல சண்டையாம். ரோசினியோட அண்ணன் இவனை வெட்டிட்டானாம். சாக கிடக்கறானாம் பாலா.." என்றாள் அம்மா.

பூர்ணிமாவுக்கு எல்லாமே நின்றுப் போனது போல இருந்தது. காட்சிகள் தெரியவில்லை. காதில் எதுவும் விழவில்லை. சுவாசிப்பதும்‌ மறந்து விட்டது. ராஜா இவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்தது கூட கனவு போல்தான் இருந்தது. அம்மா சொன்ன வார்த்தைகளை தாண்டி யோசனை செல்லவில்லை.

ஆயிரம் சண்டைகள், மனதில் கோபங்கள் இருந்தாலும் கூட அவனை மரணத்திற்கு தர விரும்பவில்லை பூர்ணிமா.

"இதுவும் அவன் நாடகமா?" பாதி வழியில் சென்றபோது கேட்டாள். முல்லை நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"அவனுக்கு இது தேவைதான்.." என்று எரிந்து விழுந்தாள். ராஜாவுக்கும் கூட பூர்ணிமாவின் அதே சந்தேகம்தான் இருந்தது.

"இந்த பையன் ரோசினிக்கு உதவி செய்றேன்னு அவளை கல்யாணம் பண்ணி இருக்கான். அதனால வந்த பிரச்சனைதான் இத்தனையும். இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?" என்று முல்லை திட்டி தீர்த்தாள்.

மருத்துவமனையில் வந்து இறங்கிய பிறகு பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தாள் முல்லை.

செண்பகம் அழுதபடி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தாள். போலிசும் ஒரு ஓரமாக நின்றிருந்தது. பூர்ணிமாவுக்கு கால்கள் நடுங்கியது. இவளை கண்டதும் விசித்து அழுதாள் செண்பகம்.

அங்கிருந்த நாற்காலி ஒன்றில் முல்லையும், பூர்ணிமாவும் அமர்ந்தார்கள். நாடகம் இல்லையென்று பூர்ணிமாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதுவும் அதிக பயத்தைதான் தந்தது.

நடந்ததை விளக்கமாக விவரித்தான் பூமாறன்.

"இவனுக்கு எதுக்கு இந்த வேலை? உயிர் போனா திரும்புமா?" எனக் கேட்டார் ராஜா.

ரோசினிக்கு சிகிச்சை நடைப்பெறுவது அறிந்து அவளுக்காகவும் மனம் வருந்தினாள் பூர்ணிமா. அருள் ஒருபுறம் பைத்தியக்காரன் போல அமர்ந்திருந்தான்.

ரோசினியின் பிறந்த வீட்டை சேர்ந்த முக்கால்வாசி பேர் சிறையில் இருந்தனர். மீதம் இருந்தவர்களும் ரோசினியை சபித்துக் கொண்டு இருந்தனர்.

"இந்த மாதிரி ஏதாவது நடக்கும்ன்னு நினைச்சிதானா சொத்தை கூட மாத்திட்டான் போல.." என்று சொல்லி கலங்கினான் பூமாறன்.

"கடைசி நேரத்துல இப்படி ஆகிபோச்சி. இன்னும் பத்து நிமிசம் இருந்திருந்தா இவங்களை ப்ளைட் ஏத்தி அனுப்பியிருக்கலாம். இவனுக்கும் இப்படி அடிப்பட்டிருக்காது.." என்று கவலைப்பட்டான் சுகன்.

ரோசினிக்கு சிகிச்சை முடிந்தது.

"ரொம்ப சீரியஸ் கன்டிசன்.. இரண்டு நாள் கழிச்சிதான் எதையும் சொல்ல முடியும்.." என்றார் மருத்துவர்.

பாலாவுக்கு இன்னமும் சிகிச்சை நடந்துக் கொண்டே இருந்தது. பூர்ணிமா தனக்கு தெரிந்த அனைத்து கடவுளையுமே வேண்டி விட்டாள். யாராவது ஒருவர் அவனின் உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவன் கடைசியாக பேசி சென்றது அனைத்தும் நினைவில் திரும்ப திரும்ப வந்தது.

மனதார மன்னிப்பு கேட்டவனிடம் மன்னித்தேன் என்றாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் என்று நினைத்தாள்.

ஆனால் இது அனைத்தையும் விட முக்கிமாக அவன் இல்லாத வாழ்வை தான் எப்படி வாழ்வோம் என்ற சந்தேகம் வந்து சேர்ந்தது. இவ்வளவு நாளும் வராத சந்தேகம். இப்போது ஆளையே கொல்லும் அளவுக்கு வளர்ந்துக் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN