பௌர்ணமி 49

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே வந்தார் மருத்துவர். பூர்ணிமா ஓடி சென்று அவர் முன் நின்றாள்.

"டாக்டர் பாலாவுக்கு என்ன ஆச்சி?" எனக் கேட்டாள்.

"ரொம்ப நல்லா இருக்காரு.. கண் விழிச்சதும் நீங்க பார்க்கலாம்.!"

உயிரே திரும்ப வந்தது போல உணர்ந்தவள் அருகே இருந்த சுவரில் சாய்ந்து நின்றாள். நெஞ்சில் கை பதித்துக் கொண்டாள். இப்போதுதான் மூச்சு விடவே முடிந்தது.

"குல தெய்வம்தான் காப்பாத்தி இருக்கு.." என்று வானம் நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் செண்பகம்.

"நீ வந்து அமைதியா உட்கார் பூரணி.. மாமாவை டீ வாங்கி வர சொல்றேன்.." பிரியா ஆறுதலாய் சொல்லி பூர்ணிமாவை அழைத்து வந்து இருக்கை ஒன்றில் அமர வைத்தாள்.

"போலிஸ் வர லேட்டாகிடுச்சி.." என்று காவல் துறை அதிகாரிகளையே திட்டிக் கொண்டிருந்தான் சுகன்.

அன்றைய இரவு வந்தது. அனைவரும் அங்கிருந்து வீடு திரும்பினர்.

பூர்ணிமா பாலாவின் அறையில் அமர்ந்திருந்தாள். அவன் அதிகம் பயன்படுத்தாத அந்த அறையிலும் கூட இவளின் நினைவுகள்தான் இருந்தது. அவன் எப்போது கண் விழிப்பான் என்ற யோசனையில் அவள் இருந்தபோது அந்த அறைக்குள் வந்தாள் முல்லை.

"அம்மா.." எழ முயன்றவளை தோளில் தட்டி அமர வைத்து விட்டு அவளின் அருகில் அமர்ந்தாள் முல்லை.

"உனக்கு அவனை பிடிச்சிருக்கா?" என்றுக் கேட்டாள்.

தயங்கினாள் பூர்ணிமா.

"அவனுக்கு அடிப்பட்டு இருக்கு. இரக்கம் எல்லோருக்கும் உண்டு. இரக்கத்தை காதல்ன்னு நினைச்சி குழப்பிக்காத.. ரோசினி விசயத்தை விட்டுடு. ஆரம்பத்துல இருந்து யோசிச்சி பாரு. உனக்கு அவன் தேவைன்னா, அவனை பிடிச்சிருக்குன்னா மட்டும் நீ உன் நேசத்தை வெளிப்படுத்து. இந்த மாதிரி சந்தர்ப்பத்துல இரக்கத்தையும் காதலா காட்டும் மனசு. நீ குழம்பி அவனுக்கு நம்பிக்கை தராதே. ஒரு நொடி தடுமாற்றம் மறுபடியும் உன்னை கைது செய்றதை நான் விரும்பல. அவனை பிடிக்கலன்னா விட்டுடு. நம்ம வீட்டுல உனக்கு இடம் இருக்கு. இந்த உலகத்துல ஆண்களும் உண்டு.!" என்றாள்.

அம்மாவின் அறிவுரை பூர்ணிமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன்னை பெற்ற அம்மா இந்த விசயத்தில் நிச்சயம் தோற்று விடுவாள் என்றுதான் இவளுக்கு தோன்றியது. சரி தவறு யோசிக்காமல், தன் மகளுக்கு தான் மட்டும்தான் துணை என்ற எண்ணத்தோடு இருக்கும் இப்படிப்பட்ட தாய் கிடைக்க தான் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தோமோ என்று ஆச்சரியப்பட்டாள்.

அம்மாவின் மடியில் சாய்ந்து படுத்தாள்.

"அந்த அளவுக்கு வெறுப்பு இல்லம்மா. சும்மா கோபம்தான். கொஞ்ச நாள் பிரிஞ்சியிருந்தா அவனுக்கு அருமை புரியும்ன்னு நினைச்சேன். அதுவும் இல்லாம நான் பக்கத்துல இருந்திருந்தா அவனோட பிசினஸ் லாஸ் ஆகியிருக்கும். சுத்தமா அதுல அவனுக்கு கவனமே இல்ல. எப்பவும் என்னையே சுத்திட்டு இருந்தான். அடிக்கடி லீவ் போட்டுட்டு இருந்தான். அவன் பக்கத்துல எனக்கும் படிக்க விருப்பம் இல்லாம போயிடுச்சி. அதனால்தான் அந்த பிரிவை நான் மறுபடியும் சேர்க்கல. இன்னும் ஒரு வருசம் கழிச்சி அவனோட தலையில் கொட்டி அவனோடு சேர்ந்துடலாம்ன்னு நினைச்சேன்.." என்றாள்.

இப்போது முல்லைக்கு மகளை பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

"ஆனா நீ ஒன்னும் சகிச்சிக்க தேவையில்ல பூரணி.." என்றாள் தலையை வருடி விட்டபடி.

"சகிச்சிக்க என்னம்மா இருக்கு? நமக்கு ஈக்வெல்லா சண்டை போடுற ஒருத்தனை எங்கே போய் தேடுறது? இவன் எல்லாத்துக்கும் செட் ஆகுறான். என்னோட ஆசை, கோபம், காதலுக்கு கரெக்டா மேட்ச் ஆகுறான்.. இவன் காட் கிடையாது. சராசரி மனுசன். நானும்தான். என் மனசை அவன் காயப்படுத்தினான். நானும் அதே தப்பை செய்யலாம். அப்ப அவன் அட்ஜஸ்ட் பண்ணுவான். அவன் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணுவான்னு நம்பும்போது நானும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறது தப்பு இல்லையே.!" என்றாள்.

முல்லை எதிரே சுவரில் இருந்த அவர்களின் திருமண புகைப்படத்தைப் பார்த்தாள். இருவரின் கண்களும் ஓராயிரம் உணர்ச்சிகளை சேர்த்து வைத்திருந்தது. எதை நம்பி இந்த திருமணத்தை அவர்கள் செய்துக் கொண்டார்கள் என்று யோசித்தாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட நம்பிக்கைதான் அந்த திருமணத்தின் அடித்தளமாக இருந்தது.

மேஜிக் உண்மையா என்று தெரியவில்லை. சில வார பழக்கத்தில், அரை குறை காதலில், முழு உரிமையில் செய்துக் கொண்ட திருமண பந்தம் இருவரையும் நிலைத்திருக்க செய்வதே மேஜிக் போல்தான் இருந்தது.

"உன் இஷ்டம்.. ஆனா நல்லா யோசி‌." என்ற அம்மா அங்கிருந்து எழுந்துச் சென்றாள்.

இரவு உணவின் போது செண்பகம் வாடி வதங்கிய முகத்தோடுதான் அனைவருக்கும் உணவை பரிமாறினாள்.

"இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? இப்ப அந்த பொண்ணு செத்துப் போயிட்டா பிறகு காலத்துக்கும் இவனுக்குதான் கெட்ட பேரு.." என்றாள் வருத்தமாக.

"அம்மா.. உங்க வாய் என்ன வாய்? இப்படியா சாபம் வைப்பிங்க?" கோபத்தோடு திட்டினான் பூமாறன்.

"அவளை காப்பாத்த அண்ணன் தன் உயிரையே பலியா தர டிரை பண்ணி இருக்கான். அவ சாக மாட்டா. நீங்க தேவையில்லாம பேசாதிங்க.." என்றான். ரோசினி இறப்பதில் இவனுக்கும் விருப்பமே இல்லை.

பூமாறனின் குழந்தை அவனின் மாமியார் வீட்டில் வளர்ந்துக் கொண்டிருந்தது. அதனால் பூர்ணிமாவால் குழந்தையை கொஞ்ச முடியாமல் போய் விட்டது.

இரவு உறங்கியவள் கனவாய் கண்டு அடிக்கடி கண் விழித்தாள். கனவு முழுக்க பாலாதான் வந்திருந்தான்.

மறுநாள் காலையில் மருத்துவமனை செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த பூர்ணிமாவின் முன்னால் வந்து நின்றான் பூமாறன்.

"சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காத பூரணி.. என் அண்ணனை விட்டு விலகுறதுதான் உனக்கு நல்லது.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"காரணம்?" என்றாள் உயிர் இல்லா குரலில்.

"அவனுக்கு பொண்டாட்டி இருக்கா. ஆனா அவன் கொஞ்சமும் யோசிக்காம ஹெல்ப்ங்கற பேர்ல இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டி இருக்கான். குடும்பம் இருந்தும், பொண்டாட்டி இருந்தும் கூட உதவின்னு சொல்லி உயிரையே விடப் போயிருக்கான். அவனுக்கு நம்ம மேல பாசம் இருந்திருந்தா இப்படி செஞ்சி இருக்க மாட்டான். அவனை எங்களால டைவர்ஸ் பண்ண முடியாது. உனக்கு சான்ஸ் இருக்கு. நீ டைவர்ஸ் பண்ணிடு.." என்றான்.

'அடப்பாவி' என நினைத்தவள் "என் மேல அக்கறை காட்டுவதுக்கு தேங்க்ஸ் மாமா. நான் முடிவு பண்றேன்.." என்றாள்.

பூமாறன் சரியென்று தலையசைத்து விட்டு வெளியே நடந்தான்.

ஐ.சி.யூ அறையில் படுத்திருந்த பாலா ஆர்வம் கேட்டு கண் விழித்தான். பூர்ணிமா இவன் அருகே வந்தாள். அருகில் அமர்ந்தாள்.

"ஆர் யூ ஓகே?" எனக் கேட்டாள்.

"ம்" என்று தலையசைத்தவன் "பயந்துட்டியா?" எனக் கேட்டான்.

பூர்ணிமா சுவற்றை வெறித்தபடி ஆமென தலையசைத்தாள்.

"பூ பொட்டை துறக்க யாருக்குதான் பிடிக்கும்?" என்றாள்.

'தாலியை ரவிக்கையில் மறைச்சிட்டு காலேஜ் போனவளுக்கு சாங்கியம் சடங்குதான் ரொம்ப முக்கியமோ?' என்று யோசித்தவன் "நீ செகண்ட் மேரேஜ் பண்ணிக்கலாம்.." என்றான்.

"ம். நல்ல ஐடியாதான். ஆனா நீதான் சாகலையே.!" அவளின் குற்றச்சாட்டு அவனுக்கு காயத்தை தந்தது.

'அமைதியா செத்திருக்கலாம்.' என்று நினைத்தான்.

அவனின் வலது புறங்கையின் மீது தன் உள்ளங்கையை பதித்தாள் பூர்ணிமா.

"ரொம்ப பயந்துட்டேன். லைப்பே இல்லன்னு நினைச்சிட்டேன். என் மொத்த எதிர்காலத்தையும் நீதான் ஆக்கிரமிப்பு செஞ்சிருந்த.. ஒருவேளை நீ செத்திருந்தா ஒரு வாரம் கழிச்சு நான் நார்மல் ஆகியிருப்பேனோ என்னவோ.. ஆனா இப்ப இதுவும் பிடிச்சிருக்கு. தேவைப்படுது. உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..‌ நீ எவ்வளவு பெரிய கிறுக்குன்னு தெரிஞ்சே ரிஸ்க் எடுக்க ஆசை வருது. என்ன செய்யட்டும்?" என்றாள் பெருமூச்சோடு.

பாலாவுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்க முடியவில்லை. உடம்பில் அவ்வளவு வலி இருந்தது.

"நீ ஒரு பைத்தியம்.. யாரையாவது ப்ரொடக்சன் பண்ணிட்டே இருக்கணும்ன்னு உனக்கு ஆசை. மாறா மாமா, நான் போதாதுன்னு இப்ப ரோசினியையும் பிடிச்சி வச்சிருக்க. இதுக்கு பதிலா நான் உனக்கு நாலு நாய்க்குட்டிகள் வாங்கி தரேன். அதை ப்ரொடக்ட் பண்ணு.." என்றாள்.

பாலாவின் இதழில் மென்னகை பரவியது.

"நீ ப்ரொடக்சன் பண்ற அளவுக்கு நாங்க குழந்தைங்க இல்ல. அதனால உன் அதிகாரத்தால எங்களை டார்ச்சர் செய்யாதே.!" என்றாள்.

சரியென்று தலையசைத்தான் பாலா.

"மன்னிப்பு கேட்டியா.. நான் வேற எந்த பதிலும் சொல்லல. இப்படியே செத்துடுவியோன்னு பயந்துட்டேன்.. நாளைக்கு பேயா வந்து பதில் கேட்டு தொல்லை செய்வியோன்னு ஒரே யோசனை.."

பாலா அவளின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"மனம் திருந்தி மன்னிப்பு கேட்டிருக்க.. போனா போகுதுன்னு மன்னிக்கிறேன்.. ஆனா இரண்டாம் முறை மன்னிப்பு கேட்க நினைக்காத. இதுக்கே ரொம்ப பாவம் பார்த்து மன்னிக்கிறேன்.." என்றாள்.

"தேங்க்ஸ்.." சத்தம் வராமல் சொன்னான்.

"எனக்கு எக்ஸாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது. அதனால நான் கிளம்பறேன். நீ நல்லாகி எழுந்த பிறகு அடுத்த செமஸ்டர் முடிஞ்ச பிறகு என்னை கூட்டிப் போக வா.." என்றவள் எழுந்து நின்றாள்.

அவளின் கையை பற்றினான் பாலா.

"நிஜமா விட்டுப் போக போறியா?" எனக் கேட்டான்.

"நர்ஸ்க்கு பீஸ் நான் கூட தரேன் பாலா.. நீ பீல் பண்ணாத. உன்னை நல்லா கவனிச்சிப்பாங்க. நான் கிளம்பணும். உன் பாடி‌ ஸ்ட்ராங்க்குக்கு எப்படியும் இரண்டு வாரத்துல முழுசா குணமாகிடுவ.. நான் எதுக்கு?" என்றவள் அவனின் கன்னத்தில் கை பதித்தாள்.

"எனக்கு காதல் வர வைக்கணும்ன்னோ,‌ இல்ல புத்தி வர வைக்கணும்ன்னோ இந்த வெட்டை நீ வாங்கல இல்ல?" எனக் கேட்டாள்.

பாலாவின் முகம் கறுத்துப் போனது.

"ஒருமுறை தப்பு பண்ணிட்டா அதையே மறுபடி மறுபடி செய்வாங்களா? நான் என்ன பைத்தியமா?" எனக் கேட்டான்.

அவனின் நெற்றியில் முத்தமிட்டவள் "என்ன செய்ய? நீ அப்படிதானே.!" என்றாள்.

அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

பூர்ணிமா அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

தனது அறையில் இருந்த அலமாரியை திறந்தாள். தன் தந்தையின் கடிதங்களை எடுத்தாள்.

'பெரிய தப்பு பண்ணிட்டேன்டா பூரணி.. உன் அம்மா என்னை மன்னிப்பாளா? என்னால பாதிக்கப்பட்ட யாராவது ஒருத்தர் என்னை மன்னிக்க கூடாதா? மன்னிப்பே கிடைக்காமல் சாக போறேன். அந்த ஆண்டவன் கூட என்னை மன்னிக்க மாட்டான்.!' அப்பாவின் கடிதத்தை படித்தவளுக்கு விழிகள் கலங்கியது.

"நான் மன்னிக்கிறேன்ப்பா.. உங்களை நான் மன்னிக்கிறேன்.. பாலாவையே மன்னிச்சேன். உங்களை மன்னிக்க மாட்டேனா?" என கேட்டபடி அலமாரியோடு சாய்ந்து அமர்ந்தாள். பிச்சைகாரனாய் அவளிடம் பழைய சாதத்திற்கு கையேந்திய அப்பாவின் உருவம் அவள் முன் வந்து நின்றது.

கதறினாள். "என்னை மன்னிச்சிடுங்க அப்பா.. நீங்க யாருன்னு தெரிஞ்சிக்காம இருந்துட்டேன்.. தெரிஞ்சிருந்தா பட்டினியா, குளிர்ல விட்டிருக்க மாட்டேன் அப்பா.." என்று அழுதாள்.

ஒற்றை மன்னிப்பு யாரின் குற்ற உணர்வையாவது நீக்கும் என்றால் அந்த கடவுளையும் மன்னிக்க தயார் இவள். ஆனால் இவளை அப்பா மன்னிப்பாரா என்ற சந்தேகம்தான் அவளின் இதயத்தை அறுத்தது.

"அப்பா.." என்று ஓயாமல் அழுதுக் கொண்டிருந்தாள். மூன்று வருடங்களாக தொடரும் அழுகை இது. கண் முன் இருந்தும் அறிந்துக் கொள்ள முடியாமல் போனதற்காக அழுதுக் கொண்டே இருந்தாள். அவர்களின் கோபத்திற்காக‌‌ உண்மையை இவளிடம் மறைத்தவர்களுக்கு கடைசி வரை தெரிய போவதில்லை இவளின் இதய ரணம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN