பௌர்ணமி 50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலா உறங்கி எழுந்தபோது பூர்ணிமா அங்கே இல்லை. அவள் சென்றுவிட்டாள் என்று புரிந்து கண்கள் கலங்கியது.

இரண்டு நாட்கள் கடந்தது. இன்னமும் ரோசினியிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. மொத்த குடும்பமும் பயந்து இருந்தது.

அருள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. ரோசினி இருந்த அறை வாயிலையே வெறித்தபடி இருந்தான்.

"அவ கூப்பிட்ட போதே கிளம்பி இருந்தா உங்களுக்கு வெட்டு விழுந்திருக்காது. இப்ப அவளுக்கும் இப்படி நடந்திருக்காது.." அருளின் மீது குற்றம் சுமத்தினான் பூமாறன். தன் கணவனை தூர இழுத்துச் சென்ற பிரியா "ஏற்கனவே அவர் ரொம்ப கவலையில் இருக்காரு. நீ ஏன் இப்படி அவர் மேல குறை சொல்லிட்டு இருக்க.?" என கேட்டு அவனை திட்டினாள்.

"ஆனா இவன் அப்பவே வந்திருந்தா இப்படி ஆகியிருக்காதுதானே.? இவளோட குடும்பத்தை எல்லாம் தெரியும்தானே இவனுக்கு.? அப்புறம் ஏன் காதலிக்கிறான்.? இல்ல இவ ஏன் காதலிக்கிறா.?" என்று இப்போது ரோசினியையும் சேர்த்து திட்டினான்.

"அவ மேல இருக்கும் அக்கறையில் உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி. நீ போய் அமைதியா வீட்டுல இரு.. ரோசினி நல்லாகிடுவா." என்று பிரியா சொன்ன அதே நேரத்தில் ரோசினியின் அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் இவர்களை சோகமாக பார்த்தார்.

கெட்ட சேதி இருக்க கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தான் பூமாறன். ஆனால் வந்த மருத்துவர் "சாரி.. அந்த பொண்ணோட போராட்டம் ஒரேடியா முடிஞ்சிடுச்சி.." என்றார்.

மருத்துவரை கண்டதும் எழுந்து ஓடி வந்திருந்த அருள் அவர் சொன்ன சேதியை கேட்டு விட்டு அப்படியே தரையில் விழுந்தான்.

"டாக்டர் வேற ஹாஸ்பிட்டல் கூட்டி போனா அவ சரியாகிடுவாளா.?" பூமாறனுக்கு அவனது கேள்வியே விசித்திரமாகதான் இருந்தது. ஆனாலும் இப்படி கேட்காமல் இருக்க முடியவில்லை.

"அந்த பொண்ணு இறந்துட்டா தம்பி.. இரட்டை உயிர்.. கழுத்துல வெட்டு. தப்பிக்கிறது ரொம்ப கஷ்டமான விசயம். இன்னும் கொஞ்சம் அந்த பொண்ணு போராடி இருந்தா கண்டிப்பா உயிர் பிழைச்சிருப்பா. அவளே கை விட்டுட்டா. பிறகு எப்படி.?" என்றார் சோகமாக.

பிரியா வாயை மூடிக் கொண்டு அழுதாள்.

"அடுத்து நடக்க வேண்டியதை பாருங்க.." என்ற மருத்துவர் அங்கிருந்து நகர்ந்தார்.

செண்பகம் பாலாவிடம் விசயத்தை சொன்னாள். அவனால் நம்பவே முடியவில்லை. அவள் நலமுடன் இருக்க அவன் செய்த அத்தனை முயற்சிகளும் வீணாய் போனதை நினைக்கையில் கண்ணீர் வந்தது. கையில் கட்டோடு எழுந்தவன் மீண்டும் அந்த படுக்கையில் படுக்கவே இல்லை.

விசயம் கேள்விப்பட்டு பூர்ணிமாவும் ஊருக்கு ஓடி வந்தாள். ரோசினியின் பிறந்த வீட்டாரின் மீது பதியப்பட்டிருந்த வழக்கு இப்போது கொலை வழக்காக மாறி விட்டிருந்தது. பத்திரிக்கைகளில் ரோசினியின் செய்தி பெரியதாக எழுதப்பட்டு இருந்தது. இது போல வாரம் ஒரு செய்தியை அலங்கரித்துக் கொண்டிருந்த செய்தித்தாள் இந்த செய்தியையும் கடந்துச் செல்ல ஆரம்பித்து விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

ரோசினி இறந்த மறுநாள் போஸ்ட் மார்ட்டம் முடிந்த சடலத்தை தந்தார்கள். கணவன் என்று கையெழுத்திட்டு வாங்கினான் பாலா. ரோசினி இறந்த பிறகு அருளை எங்கும் காணவில்லை. அவனை தேடுவதற்கு இவர்களுக்கு நேரமும் இல்லை. ஆனால் ரோசினியின் பிறந்தவீட்டார் அவனையும் கொன்று விடுவார்களோ என்று பயந்து போலிசிடம் மட்டும் தகவலை தந்திருந்தான் பூமாறன்.

அன்று மலர் இருந்த அதே இடத்தில் இன்று ரோசினியை படுக்க வைத்தார்கள். ஊரே கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. பெரிய தாத்தாவின் குடும்பமும் வந்துச் சேர்ந்தது.

"இந்த புள்ளை சாக நீதான் காரணம்.." என்று பாலாவின் மீது பழியை போட்டார்கள் அவர்கள்.

"அவங்க அப்பன்கிட்டயிருந்து புள்ளையை ஏன் நீ மறைக்கணும்.? அடுத்தவன் குழந்தைக்கு நீ ஏன் அப்பனாக பார்த்த.? அவங்க கேட்டப்போதே அனுப்பி வச்சிருந்தா இந்த புள்ளை வேற எங்கேயாவது கல்யாணமாகி போய் நல்லா இருந்திருப்பா.. உன்னாலதான் இவ செத்தா.." என்றார் தாத்தா.

பாலா மௌனமாய் அமர்ந்திருந்தான். அவர் சொன்னது போல அவளை அப்போதே அனுப்பி இருக்கலாமோ என்று எண்ணினான்.

"உன்னால இன்னைக்கு எத்தனை இழப்பு.? இவ செத்துட்டா.. இவளோட குடும்பம் மொத்தமும் ஜெயில்ல இருக்கு. ராட்சசன் போல மொத்த குடும்பத்தோட நிம்மதியையும் கெடுத்து வச்சிட்ட.." என்று திட்டினார் பெரியப்பா.

பிணத்தை நடு வீட்டில் வைத்துக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு செல்ல இந்த வீட்டிலிருந்த யாருக்கும் மனம் வரவில்லை.

நேரம் கடந்தது.

ரோசினிக்கு சடங்குகள் யார் செய்வது என்று கேள்வி எழுந்தது. ரோசினியின் அப்பாவை ஜெயிலிலிருந்து அழைத்து வரலாம் என்று யோசித்தார் பெரிய தாத்தா.

"அவங்கதான் கொன்னாங்க. அவங்க வந்து கொள்ளி வச்சா இவளோட ஆன்மா கூட சாந்தியடையாது.." என்று எரிந்து விழுந்தான் பூமாறன்.

"அப்ப வேற யார் செய்வாங்க.? நீ செய்வியா.? நீ என்ன இவளுக்கு அண்ணனா.. தம்பியா.?" என எதிர்த்துக் கேட்டார் தாத்தா.

"நானே பண்றேன்.." என்ற பாலாவை அனைவரும் விசித்திரமாக பார்த்தனர்.

"அவளுக்கு நான் தாலி கட்டி இருக்கேன். அந்த கயிறை நான் அவளோட பாதுகாப்புக்காக கட்டினேன். எது எப்படியோ அவளுக்கு சடங்கு செய்ற உரிமை எனக்கு இருக்கு.. நானே பண்ணிக்கிறேன்.." என்றான் கரகரத்த குரலில்.

அனைவரும் பூர்ணிமாவை பார்த்தனர். அவள் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள்.

கர்ப்பிணி பெண் என்பதால் சடங்குகளும் கொஞ்சம் அதிகப்படியாய் நடந்தன.

ரோசினி இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

வீடே சோகத்தில் இருந்தது. பாலா அரை குறையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அன்று மாலையில் அருளின் அழுகிய உடலை ஒரு விவசாய கிணற்றிலிருந்து கண்டுபிடித்து மேலே எடுத்தார்கள். பாலாவுக்கும் மற்றவர்களுக்கும் இன்னும் கொஞ்சம் மனம் விட்டுப் போனது.

"ஒரு குடும்பம் இவங்களை மொத்தமா அழிச்சிடுச்சி.." என்று வாடினான் பாலா.

"அவன் சொன்னபோது அவனையும் அவளையும் பிரிச்சி அனுப்பியிருந்தா இன்னேரம் இரண்டு பேரும் உயிரோடு இருந்திருப்பாங்க.." என்றான் பூமாறன்.

பாலாவுக்கும் இப்போது குற்ற உணர்வாக இருந்தது. ரோசினியின் இறப்புக்கு தான்தான் மறைமுகமான காரணம் என்று நம்பினான்.

அருளையும் ரோசினியின் கல்லறை அருகிலேயே புதைத்தார்கள். சின்ன தாத்தா வீட்டில் சுதந்திரமாக இருந்த ஒரு சிலர் வந்து பாலாவை திட்டிச் சென்றார்கள். ஆனால் இவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஒருநாள் மாலையில் சோகமாய் அமர்ந்திருந்த பூர்ணிமாவின் அருகே வந்த பாலா "நீ கிளம்பு. உனக்கு எக்ஸாம்ஸ் இருக்கு.!" என்றான்.

அவள் அந்த நினைவிலேயே இல்லை. அதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளின் கையை பற்றியவன் "மாண்டவர் மீண்டு வர மாட்டாங்க.. நீ இதை மறந்துட்டு போய் உன் வேலையை பாரு.." என்றான். அன்று இரவு யோசித்துப் பார்த்த பூர்ணிமா மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

பாலாவின் தலையெல்லாம் குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை பூர்ணிமாவை பார்த்து, அவளை காதலித்து திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் ரோசினியின் காதலை ஏற்றுக் கொண்டு இருந்திருக்கலாம் என்றும், அப்படியாகி இருந்திருந்தால் இன்று ரோசினி உயிரோடு இருந்திருப்பாள் என்றும் யோசனையோடு இருந்தான்.

ஒரு வாரம் கடந்து விட்டது. பாலா அதே குழப்பத்தில்தான் இருந்தான். தனது பிரச்சனையை பற்றி தம்பியிடம் சொன்னான்.

பூமாறன் அண்ணனின் தோளை பற்றினான். "இப்படி நடக்காம இருந்திருக்கலாம்ன்னு ஒவ்வொரு சோக நிகழ்ச்சியின் போதும் தோணும். ஆனா அதுக்காக நம்மால காலத்தை மாத்த முடியாது. நீ உன்னால முடிஞ்ச அளவுக்கு ரோசினிக்கு உதவி செஞ்சிட்ட.. இனி நீ கலங்கினா அது உன் இஷ்டம். ஆனா ஒன்னை புரிஞ்சிக்க. நீ அழுது புரண்டாலும் எதுவும் மாறாது. செத்து போனவளை நினைச்சி உயிரோடு இருப்பவளுக்கு ஒரேடியா டாட்டா காட்டிடாத.." என்றான்.

பாலா புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான். மறுநாள் சுகனிடன் பேசினான்.

"அவளோட ஆன்மா சாந்தியடையுமா?" என்றுக் கேட்டான்.

"அவ ஆன்மா சாந்தியடையும்.. நீ அமைதியா இரு.." என்றான். பின்னர் பூர்ணிமாவுக்கு அழைத்து பேசினான்.

"சாரி சிஸ்டர்.. உங்களுக்குள்ள பிரச்சனை இருக்குன்னு தெரியும். ஆனா இவன் இப்ப ரொம்ப மோசமா மாறிட்டு இருக்கான். உங்களுக்கு விருப்பம் இருந்தா இவனோட மனசை டைவர்ட் பண்ண முடியுமா? நீங்க பேசினாவே சரியாகிடுவான்னு நினைக்கிறேன்.." என்றான். "ம்." என்ற ஒற்றை சொல்லோடு உரையாடலை முடித்துக் கொண்டாள் அவள்.

அன்று இரவு தூங்க முயன்ற பாலாவுக்கு அழைத்தாள் பூர்ணிமா. சில நாட்களுக்கு முன்பே அந்த சின்ன வீட்டில் இருந்து வெளியேறி விட்டான் அவன். அந்த வீடு முழுக்க ரோசினியின் நினைவுதான் வந்தது.

"பூர்ணி.." அதே பழைய நேசம் தென்பட்டது அவளுக்கு.

"ம்.." என்றாள். என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"சாப்பிட்டியா?" அவனே ஆரம்பித்தான்.

"ம்.‌‌ நீ?"

"நானும்.. என்ன பண்ற? ஏன் போன் பண்ணி இருக்க? ஏதாவது விசயமா?" எடுத்ததும் விசயத்திற்கு வந்து விட்டான்.

"சும்மா பேசலாம்ன்னு.."

"பூரணி.." குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது அவனுக்கு.

"சொல்லு பாலா.." என்றவளிடம் "ஐ மிஸ் யூ.." என்றான்.

பூர்ணிமா மௌனம் காத்தாள்.

"ரோசினி பாவம் இல்ல? இந்த கொஞ்ச மாசமும் எவ்வளவு அமைதியாக இருந்தா தெரியுமா? அன்பா மட்டும்தான் பேசுவா. அவளை மாசா மாசம் ஹாஸ்பிட்டல் கூட்டிப் போவேன். அவளோட குழந்தையோட இதய துடிப்பை நானும் கேட்டிருக்கேன். கண்ணை மூடினா அந்த குழந்தை அழற மாதிரியே இருக்கு பூரணி. அவளுக்கு பிறகு அந்த குழந்தை செத்திருக்குமா? இல்ல முன்னாடியே செத்திருக்குமா?" என்றான்.

பூர்ணிமா கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். "அந்த குழந்தையை சாமிக்கு பிடிச்சிருக்கு போல.." என்றாள்.

"அப்படின்னா கொடுக்காம இருந்திருக்க வேண்டியதுதானே? நான் ரோசினிக்கு உதவி செய்ய காரணமே அந்த குழந்தை மட்டும்தான். இப்ப தோத்துப் போயிட்டேன். அந்த குழந்தையும் செத்துப் போச்சி.. என் எல்லா முயற்சியும் வீணா போயிடுச்சி.." என்றான் விரக்தியோடு.

"ரொம்ப யோசிக்காத பாலா.." என்றவள் தயங்கிய பிறகு "நான் வேணா ஊருக்கு வரட்டா?" என்றுக் கேட்டாள். அவனை சோகத்தில் விடுவது தனக்கு தானே தண்டனை தந்துக் கொள்வது போல தெரிந்தது பூர்ணிமாவுக்கு.

பாலா இந்த புறம் அமைதியாக இருந்தான். "கருணை தேவையில்ல பூர்ணி.." என்றான் தயக்கமாக.

"பைத்தியம் போல பேசாத பாலா. இது கருணை கிடையாது. கஷ்டமான சூழ்நிலைகளில் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கதான் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.."

பாலாவிற்கு உள்ளம் உருகியது.

"சாரி பூர்ணி.. ஐ லவ் யூ.."

ஜன்னல் வழி தெரிந்த மரங்களை வெறித்துக் கொண்டிருந்த பூர்ணிமாவின் விழிகளில் இருந்து தானாய் சிந்தியது கண்ணீர்.

"ம்.." அதை தவிர வேறு சொல்ல முடியவில்லை.

"கஷ்டங்களில் துணை நிற்கதான் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஆனா நானே உனக்கு கஷ்டமா போயிட்டேன். சாரி. இனி அப்படி இருக்க மாட்டேன்.."

"உன்னை கஷ்டபடுத்த நானும் நினைக்கல பாலா. என் அப்பாவும் உன்னை போலதான் மனைவியை கஷ்டப்படுத்தினாரு. ஆனா அவருக்கு கடைசி வரை மன்னிப்பே கிடைக்கல. ஆனா உன்னை அப்படி விட முடியல. குத்திக் காட்ட சொல்லல. என்னவோ தோணுச்சின்னு உளறிட்டேன்.‌ சாரி.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN