பௌர்ணமி 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா சொன்னதை கேட்டதும் பாலாவுக்கு சண்டையிட வேண்டும் என்றுதான் தோன்றியது. உன் அப்பாவை போல நான் உன்னை கஷ்டப்படுத்தவில்லை என்று சொல்ல துடித்த நாக்கை அப்படியே அடக்கிக் கொண்டவன் "சாரி பூர்ணி.. உன்னை இனி கஷ்டப்படுத்த மாட்டேன்.. உன்கிட்ட மன்னிப்பு கேட்டு நிற்கும் அளவுக்கு எந்த தப்பும் செய்ய மாட்டேன்.. முக்கியமா உன்னை அழ விட மாட்டேன்.." என்றான்.

அவன் சொன்னது நூறு சதவீதம் உண்மை என்று அவளால் நம்ப முடியவில்லை. எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அவனின் வாய்க்கும் தனது வாய்க்கும் நிறைய சண்டைகள் வரும் என்றுதான் யூகிக்க முடிந்தது. ஆனாலும் "சரி.." என்றாள்.

"இனி நாம சண்டை போட்டுக்கிட்டாலும் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும் அது.." என்றாள்.

"சரி" என்றான் அவனும்.

இருவருக்குமே விட்டுக் கொடுத்துச் செல்வது போலதான் இருந்தது. ஆனாலும் இயல்பு போல தோன்றியது.

அதன் பிறகு இருவரும் தினமும் போனில் உரையாடினர். மாதத்திற்கு இருமுறை பாலா இவளை பார்க்க வந்தான். முல்லைக்கும் இப்போதுதான் நிம்மதி பிறந்தது. ராஜா மட்டும் எப்போதேனும் பாலாவை முறைத்தார்.

ரோசினி இறந்து இரண்டரை மாதங்கள் கடந்து விட்டது. கல்லூரி இடைவேளை நேரத்தில் பூர்ணிமா தனது வகுப்பில் அமர்ந்து பாட புத்தகம் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள்.

"அண்ணாவோட நினைப்புல இருந்து ரோசினி போயிட்டாளா.?" ஸ்டெல்லா சந்தேகமாக கேட்டாள்.

"அதெப்படி உடனே நடக்கும்.? அவர் அவளை ரொம்ப பாசமா பார்த்துக்கிட்டாரு. தங்கச்சி போல இருந்த பொண்ணு. ரொம்ப நாளா இவரை ஒன்சைடா லவ் பண்ண பொண்ணு அவ.." என்றாள்.

ஸ்டெல்லா தோழியின் தோளில் தலை சாய்த்தாள். ஒரு தலை காதலின் வலி அவளையும் உருக்கிக் கொண்டிருந்தது. ரோசினியின் இறப்பால் மன குழப்பத்தில் இருந்த பூர்ணிமாவுக்கும் தோழியின் மன வாட்டம் தெரியவில்லை.

"ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் பூரணி.." என்று எழுந்த ஸ்டெல்லா அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்ற இரண்டாம் நிமிடம் உதயா பூர்ணிமாவை தேடி வந்தான்.

"சீனியர்.." என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள். வகுப்பில் அவ்வளவாக மாணவர்கள் இல்லை. இருந்த ஒன்றிரண்டுப் பேரும் தங்களின் வேலையில் இருந்தனர்.

பூர்ணிமாவின் அருகில் வந்து அமர்ந்தான் அவன்.

"சீனியர் நீங்க உங்க பிரெண்டை பார்த்திங்களா.?" என கேட்டவனை குழப்பதோடு பார்த்தவள் "ஸ்டெல்லாவா.? இப்பதான் ரெஸ்ட் ரூம் போனா.. ஆனா நான் அவளை பார்க்காம என்ன.?" என்று விசாரித்தாள்.

உதயா தயக்கத்தோடு தரையை பார்த்தான்.

"அவங்களை நான் நேரா பார்த்து இத்தோடு மூனு மாசம் ஆச்சி சீனியர்.." இதை கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஆனா ஏன் உதயா.?"

"எனக்கும் தெரியல.. அவங்க என்னை லவ் பண்றாங்கன்னு சொன்னிங்க.. நான் ஒரு வாரம் கழிச்சி அவங்களை தேடி போனேன். ஆனா அவங்க என்னை கண்டதும் விலகி போக ஆரம்பிச்சாங்க. அப்புறம் அவங்களை நான் பார்க்கவே இல்ல. நான் போன் பண்ணா எடுக்க மாட்டேங்கிறாங்க. என்னை நேருக்கு நேரா பார்க்க மாட்டேங்கிறாங்க.. நான் என்ன செய்யட்டும்?" எனக் கேட்டான் குழப்பமாக.

"நீ சாயங்காலம் வா. அவ என்னோடு இருப்பா.." என்ற பூர்ணிமாவை நன்றியோடு பார்த்தவன் "மறக்காம அவங்களை பிடிச்சி வைங்க சீனியர்.." என்று விட்டு அங்கிருந்து ஓடினான்.

சிறிது நேரத்தில் ஸ்டெல்லா அங்கே வந்து சேர்ந்தாள். "என்ன சொன்னான் அவன்?" பிடிப்பே இல்லாமல் கேட்டாள். அவன் வருவது தெரிந்துதான் இவள் ஓடியிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட பூர்ணிமா "சும்மா.. அசைன்மெண்ட்ல சந்தேகம்ன்னு கேட்டு வந்தான்." என்றாள்.

ஸ்டெல்லா தனது பாட புத்தகத்தை எடுத்தாள்.

"அவன் என்ன பதில் சொன்னான் ஸ்டெல்லா? நானும் என் பிரச்சனையில் உன்னை கண்டுக்காம விட்டுட்டேன். சாரி.." என்றாள் பூர்ணிமா.

"ச்சே.. ச்சே.. அதுக்கென்னப்பா? உன் பிரச்சனையே பெரும் பிரச்சனை. இதுல என்னை நினைச்சி ஏன் வருத்தப்படணும்?" என்றவள் "அவன் ஒரு வாரத்துல சொல்றேன்னு சொன்னான். ஆனா அவன் சொல்வதை கேட்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதனால நான் அவனை சந்திக்கவே இல்ல." என்றாள்.

தோழியின் தலையை வருடி தந்தாள் பூர்ணிமா. "இப்படி பண்ணாத.. நான் குழந்தை இல்ல.." சிணுங்கினாள் தோழி.

"அப்புறம் என்ன? அதுதான் குழந்தை இல்லையே.. இருக்கும் பிரச்சனையையும் ஸ்பேஸ் பண்ணு.." என்றாள்.

"அவன் பிடிக்கலன்னு சொல்லிட்டா.?" தயக்கமும் பயமுமாக கேட்டவளின் கழுத்தை கட்டிக் கொண்டவள் "அவன் பிடிக்கலன்னு சொன்னா அவனுக்கு மட்டும்தான் உன்னை பிடிக்கலன்னு புரிஞ்சிக்க. உன்னை பிடிச்சவன் வரும்போது அவனை லவ் பண்ணு.." என்றாள்.

ஸ்டெல்லாவுக்கு பயமாகதான் இருந்தது. ஆனாலும் அன்று மாலையில் பூர்ணிமாவின் பிடிவாதத்தால் உதயாவிடம் பேச சென்றாள்.

"ஹாய்.." என்றான் தயக்கமாக அவன்.

இவளும் தயக்கமாகவே அவனை நெருக்கினாள்.

"நீங்க ஏன் இத்தனை நாளும் ஓடிக்கிட்டே இருந்திங்க?"

"ரொம்ப முக்கியமான கேள்வி.." என்று மென்குரலில் முனகியவள் "சும்மா.. கொஞ்சம் வேலை.." என்று சமாளித்தாள்.

"ஓ.. உங்களுக்கு என்னை பிடிக்கலயோன்னு நினைச்சிட்டேன்.." அவன் இப்படி சொன்னதும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் மீதான காதல் மும்மடங்கு பெருகி இருந்தது. இதை எப்படி சொல்வாள்?

"என்னை லவ் பண்ணிங்க.. ஆனா நான் உங்க பிரெண்டை லவ் பண்ணிட்டேன். அதனால் என் மேல வெறுப்போன்னு நினைச்சேன்.."

அவசரமாக மறுத்து தலையசைத்தாள். "ரொம்ப பிடிக்கும்.. பார்த்ததுல இருந்து ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றாள்.

உதயாவின் முகத்தில் புன்னகை உருவானது. அவளை இதழ் விரித்துப் பார்த்தான். "தேங்க்ஸ்.." என்றான்.

ஸ்டெல்லா விழித்தபடி நின்றாள்.

"எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எனக்காக உங்களோட பல விருப்பங்களை மாத்திக்கிட்டிங்கன்னு சீனியர் சொன்னாங்க. எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆச்சரியமா இருந்தது. உங்களை ரசனையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.. உங்களை நினைக்க நினைக்க ரொம்ப பிடிச்சி போச்சி.." என்றான்.

ஸ்டெல்லா இன்ப அதிர்ச்சியில் இருந்தாள். காண்பது கனவாய் போய் விட கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் அவளும் உதயாவும் காதலிப்பதாக பூர்ணிமாவிடம் சொன்னாள். தோழியை கட்டிப் பிடித்து முத்தமிட்டவள் "உன்னாலதான் என் காதல் கை கூடுச்சி.. தேங்க்ஸ் பூரணி.." என்றாள்.

தோழியை விலக்கி நிறுத்திய பூர்ணிமா "காதல் உன்னோடது. நான் காரணம் இல்ல. நீங்க நல்லா இருந்தா அதுவே போதும். ஆனா அவன்கிட்ட சொல்லு. காதலிச்சா வாய்ல சொல்லணும். கிஸ் பண்ண கூடாதுன்னு.!" என்றாள்.

"சாரி. அவனுக்கு பதிலா நான் கேட்கிறேன்.." வழிந்தாள் ஸ்டெல்லா.

மாதங்கள் கடந்தது.

ஸ்டெல்லாவும், உதயாவும் மனதால் நெருங்கி விட்டனர். ஸ்டெல்லாவின் வீட்டிற்கு உதயா வந்து பழக ஆரம்பித்தான். உதயாவின் வீட்டிற்கும் அவ்வப்போது வந்து சென்றாள் ஸ்டெல்லா.

பூர்ணிமா தனது படிப்பை முடித்துக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

அவள் வந்த முதல் நாளில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்திருந்தான் பாலா. அவளை அழைத்து வர இருந்தான். ஆனால் அவள்தான் தானே வருவதாக சொல்லி விட்டாள். ராஜா அழைத்து வந்திருந்தார்.

செண்பகம் இம்முறை ஆரத்தியோடு காத்திருந்தாள். காரை விட்டு கீழிறங்கிய பூர்ணிமாவின் பார்வை முதலில் திண்ணை ஓரத்திற்குதான் சென்றது. அவளையும் மீறி விழிகள் கலங்கியது. அதை வெளிக்காட்டாமல் பாலாவை பார்த்து புன்னகைத்தாள்.

செண்பகம் வாசலில் வந்து நின்று ஆரத்தியை எடுத்தாள்‌. அதை கொண்டு சென்று சாலையில் ஊற்றி விட்டு வந்தாள்.

பாலா தன் கையை நீட்டினான். பூர்ணிமா தன் கையை நீட்டினாள். இருவரும் சேர்ந்து வீட்டை நோக்கி நடந்தனர்.

"மா.." குழந்தையின் அழைப்பில் நிமிர்ந்த பூர்ணிமா பாலாவின் கையை விட்டுவிட்டு ஓடிச் சென்று குழந்தையை கையில் தூக்கினாள். தத்தி தத்தி நடந்துக் கொண்டிருந்தாள் பூமாறனின் மகள் மைதிலி.

"மயிலு.. பெரியம்மா மேல அவ்வளவு பிரியமா?" எனக் கேட்ட பூர்ணிமா குழந்தையின் கன்னங்களில் முத்தத்தை தந்தாள்.

உள்ளிருந்து வந்த பிரியா குழந்தையை தன் கையில் வாங்கினாள். "கோல்டு பிடிச்சிருக்கு பூரணி.. மருந்து தந்துட்டு இருந்தேன். ஓடி வந்துட்டா. நீ உள்ளே வா.." என்றபடி முன்னால் நடந்தாள்.

வீட்டின் கதவை நெருங்கிய பூர்ணிமா உள்ளே காலடி எடுத்து வைக்கும் முன் உயிர் போகும் தலைவலியை உணர்ந்தாள். பாலா என்று கத்தி அழைக்க முயன்றாள். ஆனால் அதற்கும் முன்பே பொத்தென்று தரையில் மயங்கி விழுந்தாள்.

அவளருகே ஓடி வந்த பாலா அவளின் கன்னங்களை தட்டினான். "பூரணி." என்று அழைத்தான். அவளின் தலையில் ஏதும் அடிப்பட்டு விட்டதா என்று சோதித்தான்.

"அவளை உள்ளே தூக்கிட்டு வாடா.." என்ற செண்பகம் மருத்துவருக்கு போன் செய்ய ஓடினாள்.

பூர்ணிமாவை சோபாவில் படுக்க வைத்த பாலா அவளின் முகத்தில் தண்ணீரை தெளித்தான். "பூரணி.." என்றழைத்தான் பயத்தோடு.

"காலையில் சாப்பிட்டுதான் வந்தோம். அப்புறம் என்ன பிரச்சனைன்னு தெரியலையே.. நல்லாதானே இருந்தா.." ராஜாவும் பதறினார்.

பாலா பயத்தோடு அவளின் கையை பற்றினான். "பூர்ணி.. உனக்கு என்ன ஆச்சி?" எனக் கேட்டான்.

"டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு.." என்று செண்பகம் சொன்ன நேரத்தில் மூடிய இமைகளுக்குள் தன் விழிகளை உருட்டினாள் பூர்ணிமா.

"பூரணி.." பாலாவின் அழைப்பில் கண்களை திறந்தாள்.

"மாமா.." என்றாள்.

பாலா வியந்தான்.

"ரொம்ப ஓவரா உணர்ச்சி வசப்படாத.. அவ என்னை கூப்பிட்டு இருக்கா.." என்றபடி பாலாவின் பின்னால் இருந்து முன்னால் வந்தான் பூமாறன்.

"என்ன வேணும் பூரணி? உனக்கு எதுக்கு மயக்கம் வந்துச்சி?" எனக் கேட்டான்.

பூர்ணிமா நெற்றியை பிடித்தாள். "லேசா தலைவலி.." என்றாள். பின்னர் செண்பகத்திடம் திரும்பியவள் "ஒரு காப்பி தரிங்களா?" என்றுக் கேட்டாள்.

"இதோ.." என்று ஓடினாள் அத்தை.

மருத்துவர் வந்து சோதித்தார். "ஒரு பிரச்சனையும் இல்ல.." என்றார்.

காப்பியை அவள் குடித்து முடித்த பிறகு அறைக்கு அழைத்து சென்று அவளை கட்டிலில் விட்டான் பாலா.

"நாளைக்கு ஹாஸ்பிடல் போய் புல் பாடி செக்கப் பண்ணிடலாமா?" எனக் கேட்டான்.

வேண்டாமென மறுத்தவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

"பரவால்ல மா.. பாலா. எனக்கு ஒன்னும் ஆகல.. இது ஏதோ சும்மா மயக்கம்.." என்றவள் அவனுக்கு முத்தமிட ஆரம்பித்தாள்.

"என்னாச்சி.? வந்ததும் ஆரம்பிச்சிட்ட.. ரொம்ப நாள் பிரிஞ்சி இருந்ததுல அதிகமா மிஸ் பண்றியோ?" எனக் கேட்டான்.

"ம்.." என்றவள் அவனின் இதழில் தன் இதழ் தடத்தை பதிக்க ஆரம்பித்தாள்.

பாலாவுக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. அவளின் இழுப்புக்கு வளைந்து செல்வது கூட புது அனுபவமாகதான் இருந்தது. இவளுக்கு இவ்வளவு அருமையாக முத்தமிட தெரியும் என்பதையே இப்போதுதான் கண்டுக் கொண்டான்.

"பூர்ணி.. நீ.." அவளிடம் பேச முயன்றான். ஆனால் அவள் விடவில்லை. மீண்டும் இதழ்களை பூட்டிட்டு விட்டாள்.

இருவரும் மாலை நேரத்தில் ஹாலுக்கு சென்றனர். பூர்ணிமாவின் முகத்தில் பளபளப்பு கூடி இருந்தது.

இருவரும் இணைந்து அமர்ந்து தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தனர்.

மைதிலி பெரியம்மாவிடம் ஓடி வந்தாள். "மா.." என்றபடி அவளின் மடியில் ஏற முயன்றாள். அடுத்த நொடியில் கீழே விழுந்தாள். கீழே விழுந்து அழுதவளை தூக்கிய பாலா "அழாதிங்க செல்லம்.." என்றான்.

"குழந்தை விழறான்னு தெரியுது இல்ல.. பிடிச்சிருக்கலாமே பூர்ணி.." என்றான் வருத்தமாக.

"சாரி மாமா. கவனிக்கல.."

பாலா குழந்தையின் காயமில்லா கையையும் காலையும் நாடக தனமாக ஊதி விட்டான்.

"அவ்வளவுதான் எல்லா காயமும் மறைஞ்சி போச்சி.!" என்றான்.

குழந்தை சிரித்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN