பௌர்ணமி 52

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஏதோ சத்தம் கேட்டு பாலா கண்களை திறந்தான். இரவு மணி இரண்டை கடந்திருந்தது. எழ முயன்றான். பூர்ணிமாவின் கரம் அவன் நெஞ்சின் மீது கிடந்தது. அவனை எழ விடாமல் தடுத்தது.

அவள் புறம் திரும்பினான். அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கேசத்தை ஒதுக்கி விட்டான். தாடையில் முத்தமிட்டான். பூர்ணிமாவின் கரம் அவனை இறுக்கமாக அணைத்தது. அதே நேரத்தில் அறையின் வெளியே என்னவோ சத்தம் கேட்டது.

பூர்ணிமாவின் கரத்தை மெள்ள விலக்கி விட்டவன் எழுந்து நின்றான். உடைகளை சரி செய்துக் கொண்டு சென்று கதவை திறந்தான். நீண்டிருந்த வராண்டாவில் அரை குறை வெளிச்சம் இருந்தது. வராண்டாவின் கடைசியில் இருந்த ஜன்னலை பார்த்தான். முழு நிலவு ஜன்னலில் பிரதிபலிப்பாக தெரிந்தது.

முழு நிலவு இருந்தும் வெளிச்சம் உள்ளே இல்லாததை கண்டவன் ஜன்னலின் அருகே சென்றான். நிலவு வானில் உள்ளதா ஜன்னலில் உள்ளதா என்று குழப்பமாக இருந்தது. நிலவை நோக்கி கையை நீட்டினான். நிலவையே தொடுவது போலதான் இருந்தது. அவன் ஜன்னலை தீண்டும் முன் "பாலா.." என்றழைத்தாள் பூர்ணிமா.

திரும்பினான். அரை குறை இரவு உடையோடு அறையின் கதவில் சாய்ந்து நின்றிருந்தாள். இரவில் யாரும் வெளியே வர மாட்டார்கள்தான். ஆனாலும் பிரியா குழந்தையின் தேவைக்காக கதவை திறந்தால் இவளின் நிலை கண்டு வித்தியாசமாக நினைப்பாளே என்று தோன்றியது பாலாவுக்கு.

அவளருகே வந்தவன் "தூங்கலையா?" எனக் கேட்டபடி அவளை கைகளில் தூக்கிக் கொண்டான்.

"நீ பக்கத்துல இல்லாம எனக்கு தூக்கம் வரல.."

கதவை தாழிட்டு விட்டு உள்ளே நடந்தவன் அவளை படுக்கையில் விட்டான்.

அவளின் கன்னத்தை வருடியவன் "நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா?" எனக் கேட்டான்.

புன்னகைத்தவள் அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

"மாமா வீட்டுல தங்காம கிளம்பி போயிட்டாரு.. இரண்டு நாளாவது இருந்திருக்கலாம்.." என்றான் ராஜாவின் நினைவில்.

"அம்மா தனியா இருக்காங்க இல்லையா.. அதான்.." என்றவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து கண்களை மூடினாள்.

காலை நேரத்தில் செண்பகமும் பிரியாவும் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அல்லி ஏதோ வேலையாக ஊருக்கு சென்றிருந்தாள். மைதிலி சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

"குழந்தைக்கு என்ன ஆச்சி?" சமைத்தபடியே கேட்டாள் செண்பகம்.

"தெரியல அத்தை.. நேத்திருந்து அழுதிட்டே இருக்கா.." என்ற பிரியா சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.

"அவளை வெளியே கூட்டி போய் விளையாட்டு காட்டுங்க.." என்றாள் கணவனிடம்.

சிணுங்கிய குழந்தையை கைகளில் வைத்து சமாதானம் செய்ய முயன்றுக் கொண்டிருந்தவன் வெளியே நடந்தான். பூர்ணிமா‌ திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவளருகே சென்று அமர்ந்தவன் "இன்னமும் உன் அப்பா ஞாபகமா? சாரி பூரணி.. உங்கிட்ட நானாவது சொல்லி இருக்கணும்.." என்றான் வருத்தமாக.

அவள் தன் காதில் எதுவும் விழாதது போல அமர்ந்திருந்தாள். இவன் அமர்ந்ததும் குழந்தை முன்பை விட அதிகமாக சிணுங்கி அழ ஆரம்பித்தது.

"நை நைன்னு அழுதுட்டே இருக்கு. இதை எப்படிதான் வளர்த்திட்டு இருக்கியோ.?" எரிச்சலாக கேட்டாள் பூர்ணிமா.

பூமாறன் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர உணர்ந்து அவளை வியப்போடு பார்த்தான். ஏதாவது விளையாடுகிறாளா என்றுக் கூட சந்தேகம் வந்தது.

"பூரணி.." என்றான் தயக்கமாக.

"உனக்கு இப்ப என்ன வேணும்?" அவனிடம் திரும்பி அதட்டலாக கேட்டாள்.

பூமாறனுக்கு முகம் கறுத்துப் போய் விட்டது. எழுந்து நின்றான். மாமா என்றோ, வாங்க போங்க என்றோ அழைக்காதது அவனுக்கும் கூட பிடித்திருந்தது. இப்போதாவது நண்பனாக ஏற்றுக் கொண்டாளே என்று கூட சந்தோசப்பட்டான். ஆனால் இப்படி அதட்டவும், வெறுக்கவும் அவசியம் என்ன என்று யோசித்தான்.

சிணுங்கிய குழந்தையோடு தூர நடந்தான். தென்னந்தோப்பில் பறந்துக் கொண்டிருந்த பறவைகளை காட்டி குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றான். அப்படியே இவள் புறம் திரும்பிப் பார்த்தான். பூர்ணிமா திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். நீண்ட குச்சியை வைத்து தரையில் என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

"பூர்ணி.." பாலா வீட்டுக்குள்ளிருந்து அழைத்தான். வேகமாக எழுந்து ஓடினாள்.

"சொல்லு பாலா.." என்றாள்.

"போன்.. அத்தை பண்ணியிருக்காங்க.." என்றவன் அவளின் போனை அவளிடமே நீட்டினான். போனை வாங்கிக் கொண்ட பூர்ணிமா "ஹலோ.." என்றாள்.

"பூரணி.. கடையோட பட்ஜெட் நோட் எங்கே வச்ச?" என்றுக் கேட்டாள் அவள்.

"எந்த நோட்?" இவள் குழப்பமாக கேட்கவும், "அதுதான்.. இரண்டு நாள் முன்னாடி உன்கிட்ட கணக்கு போட சொல்லி தந்தேனே.." என்றாள்.

"எ.. எனக்கு தெரியல.. நீங்க உங்க வீட்டுக்காரர்கிட்ட கேளுங்க.." என்றவள் அத்தோடு இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

பாலா அவளை குறுகுறுவென பார்த்தான். "என்ன?" நெகிழியாய் கரையும் ஒரு குரலில் கேட்டாள்.

"உங்க வீட்டுக்காரர்? ரொம்பதான் பண்ற நீயும். உன் அம்மாவுக்கு மனசு வாடாதா?" எனக் கேட்டான்.

பூர்ணிமாவின் முகம் சட்டென்று மாறி விட்டது. "சா.. சாரி தலைவலி. அதனாலதான் என்னவோ உளறிட்டேன் போல.." என்றாள்.

பாலா அக்கறையோடு அவளின் தலையை வருடி விட்டான். "ஹாஸ்பிட்டல் போலாமா?"

"வேணாம் மாமா.. நான் மருந்து தேச்சிக்கிறேன்.." அவனிடமிருந்து விலகியவள் சமையல் வேலையில் பங்கு கொள்ள சென்றாள்.

காலை உணவை அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள்.

"பூரணிக்கு ரொம்ப பொறுப்பு வந்துடுச்சி.!" பிரியா கிண்டல் செய்தாள். வெட்கப்பட்டு தலை குனிந்தாள் பூர்ணிமா. பூமாறன் மட்டும் அவளை வித்தியாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பாலா கம்பெனிக்கு சென்ற பிறகு அவனுக்கு போனில் அழைத்தாள் பூர்ணிமா.

"என்ன.?" என்றவனிடம் "உங்களோடு பேசிட்டே இருக்கணும் போல இருந்தது.!" என்றுச் சொன்னாள்.

பாலா செய்ய இருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.

"பேசலாம்.. எனக்கும் உன்கிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருக்கு.."

"நமக்கு பாப்பா இருந்தா நல்லாருக்கும் இல்ல?" அவள் கேட்கவும் நகைத்தவன் "போன வாரம் நான் கேட்டதுக்கு இன்னும் மூனு வருசத்துக்கு நோன்னு சொன்னவளுக்கு இப்ப ஆசை வந்துடுச்சா? மைதிலியை பார்த்தா ஆசை தானா வரும். நான் யூகிச்ச மாதிரியே உனக்கும் ஆசை.." என்றான்.

பூர்ணிமா சிவந்த முகத்தோடு "ஆசை எப்ப வேணாலும் தோணும்.." என்றாள்.

"நல்லதுதானே?" என்றவன் "என்ன பண்ணிட்டு இருக்க?" என்று விசாரித்தான்.

"சும்மாதான் மாமா.. நம்ம ரூம்ல இருக்கும் உங்க போட்டோவை பார்த்துட்டு இருக்கேன்.."

"நீ மாமான்னு கூப்பிடும் ஒவ்வொரு முறையும் எனக்கு சிலிர்க்குது பூர்ணி. நீ என்னை மாமான்னு கூப்பிடலன்னு சின்ன வயசுலயே உன்கிட்ட சண்டை போட்டிருக்கேன் தெரியுமா? நீ அப்ப சின்ன பொண்ணு. உனக்கு ஞாபகம் இருக்காது."

"சாரி மாமா.. உங்களுக்கு பிடிக்கும்ன்னு தெரிஞ்சா முன்னாடியிருந்தே கூப்பிட்டு இருப்பேன்.." என்றவள் படுக்கையில் சாய்ந்தாள்.

"எப்பவும் உங்க பக்கத்துலயே இருக்கணும் போல இருக்கு.."

அவளின் குரலில் இருந்த குழைவு அவனை தடுமாற வைத்தது. வீட்டிற்கு ஓடி‌விட வேண்டும் என்று கூட தோன்றியது. நான்கு வருட பிரிவு எவ்வளவு பேராசையாக மாறி விட்டது என்பது புரிந்து அதிசயித்தான்.

"வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு பூர்ணி. இல்லன்னா இன்னேரம் அங்கே வந்திருப்பேன்.." வருத்தமாக சொன்னான்.

"சரி மாமா.. நீங்க வேலையை பாருங்க.. நான் அப்புறம் கால் பண்றேன்.." என்றாள்.

மதிய உணவு நேரத்தில் மீண்டும் அவனுக்கு அழைத்தாள். அவன் போன் பேசிக் கொண்டு சாப்பிட்டான்.

"இந்த நாலஞ்சி மாசமா சிஸ்டரோடு சமாதானம் ஆகியிருந்த போது கூட இப்படி பேசல. சிஸ்டர் இங்கே வந்த பிறகு இவ்வளவு கடலை போடுற.. புது மாப்பிள்ளை நினைப்புலயே இருக்காதடா மச்சி.." என்று கிண்டலடித்தான் சுகன்.

போன் பேசிக் கொண்டிருந்த பூர்ணிமாவை தேடி வந்தாள் செண்பகம்.

"பூரணி..‌ ஏன் இன்னும் சாப்பிட வரல?" என்று கனிவோடு கேட்டாள்.

"வரேன் அத்தை." என்றவள் எழுந்து ஓடினாள். மைதிலி சோஃபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். கனமான போர்வை ஒன்றை போர்த்தி விட்டிருந்தாள் செண்பகம்.

மருமகளோடு சேர்ந்து அமர்ந்து உணவை பரிமாறிக் கொண்டவள் பேத்தியை ஓரக்கண்ணால் கவனித்தபடியே சாப்பிட ஆரம்பித்தாள்.

"வேலையை பார்க்கறேன் பூர்ணி.." என்ற பாலா இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

"குழந்தைக்கு காய்ச்சல்.." பரிவோடு செண்பகம் சொல்லவும் குழந்தையின் புறம் திரும்பிப் பார்த்த பூர்ணிமா "அவங்க அம்மா எங்கே?" என்று கேட்டாள்.

"பக்கத்துல குளம் தூர் வார போயிருக்காங்க.!" பூமாறன் பிரியாவின் கூட்டில் இப்போது இன்னும் பலர் இணைந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் இப்போது ஒரு குளத்தை தூர் வார ஆரம்பித்து இருந்தார்கள்.

"குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது இவளுக்கு எதுக்கு ஊர்ல பொது சேவை?" காட்டமாக கேட்டாள் பூர்ணிமா.

அவள் கேட்டதில் செண்பகத்திற்கே முகம் வாடி விட்டது.

"உன் மேலயும், என் மேலயும் இருக்கும் நம்பிக்கையில் போயிருக்கா.." என்றாள் சிறு குரலில்.

"சா.. சாரி அத்தை.. நான் அவளை குறை சொல்லல. ஏதோ வாய் தவறி.." என்று சமாளித்தாள்.

மாலை நேரம் வரை உறங்கிக் கொண்டே இருந்தது குழந்தை.

பூர்ணிமா சீரியலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

"நான் குளிச்சிட்டு வரேன் பூரணி.. குழந்தை அழுதா கொஞ்சம் பார்த்துக்க.." என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் செண்பகம்.

திரையில் ஓடிய காதல் தொடரை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா 'இந்த காதல் ஜோடியை விடவும் நாங்க ரொம்ப ஒற்றுமையா இருக்கணும்.!' என்று நினைத்தாள்.

பாலா தன் அலுவலக அறையில் அமர்ந்தபடி பைல் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அனைத்தும் சரியாக‌ இருந்தது. மூடி வைத்தான். அவன் அடுத்த வேலையை கவனிக்கும் முன் மேஜையிலிருந்த பூர்ணிமாவின் புகைப்படம் தரையில் விழுந்தது. கண்ணாடி நொறுங்கிய சத்தத்தில் திகைத்து எழுந்தவன் புகைப்படத்தை நோக்கி குனிந்தான்.

உடைந்த புகைப்படம் நெருடலை தந்தது. புகைப்படத்தை எடுக்க முயன்றான். புகைப்படத்தின் ஓரத்தில்‌ இருந்த கண்ணாடி சில் குத்தியதில் அவனின் சுட்டு விரலில் காயமானது. கண்ணாடி குத்திய இடத்திலிருந்து சொட்டிய ரத்தம் அவளின் புகைப்படத்தின் மீதிருந்த மற்றொரு கண்ணாடி சில்லில் விழுந்தது. ரத்தத்தை பார்த்த பாலா அந்த ரத்த வட்ட சொட்டில் பளிச்சென்று தெரிந்த பூர்ணிமாவின் முகத்தை கண்டு திடுக்கிட்டு போனான். நேராய் எழுந்து அமர்ந்தவன் சுற்றும் முற்றும் அமர்ந்தான். பூர்ணிமா எங்கும் இல்லை.

"எப்படி? அவ்வளவு தெளிவா தெரிஞ்சதே.!" குழப்பத்தோடு மீண்டும் அதே ரத்த பொட்டை பார்த்தான். மீண்டும் முன்பு போல்தான் தெரிந்தது. யோசனையோடு ரத்தத்தின் மீது தன் கையை அசைத்தான். அவனின் அசைவில் புகைப்படமும் மறைந்து தெரிந்தது.

"ச்சே.. கண்ல இருக்கும் பிம்பம்தான் இப்படி விழுந்து தெரியுதா?" என்று தனது பயத்தை கண்டு சிரித்தவன் தலையை கோதிக் கொண்டான். அவன் பார்வையை திருப்பிய நேரத்திலும் அந்த ரத்தத்தில் பூர்ணிமாவின் முகம்தான் தெரிந்தது. அதை அவன்தான் கவனிக்கவில்லை.

உடைந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்தி விட்டு வந்து இருக்கையில் அமர்ந்தான். பூர்ணிமாவின் புது புகைப்படத்தை இங்கே வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

"பா.." மைதிலி தூக்கத்தில் முனகினாள். சிரமத்தோடு கண்களை திறந்தாள். தன் பக்கத்தில் இருந்திருந்த பூர்ணிமாவை கண்டு விட்டு வீறிட்டு அழ ஆரம்பித்தாள்.

பூர்ணிமா எரிச்சலோடு குழந்தையை முறைத்தாள். "இப்ப நான் உன்னை என்ன செஞ்சேன்னு இப்படி அழற?" என்று அதட்டினாள். குழந்தை இன்னும் அதிகமாக அழுதது. காய்ச்சலில் சுட்டுக் கொண்டிருந்த கன்னங்களில் அதை விட சூடாக இறங்கியது கண்ணீர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN