பௌர்ணமி 54

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீடு பழைய கலகலப்பை இழந்து விட்டது போலிருந்தது மரிக்கொழுந்துவுக்கு. நேற்று நடந்ததை கேள்விப்பட்ட பிறகு யாரை குறை சொல்வது என்றே அவருக்கு தெரியவில்லை.

குழந்தையை காட்டு மிராண்டி போல அடிக்கும் அளவுக்கு பூர்ணிமா கெட்டவள் அல்ல என்று நம்பினார். ஏதாவது போதாத நேரமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டார்.

காலை உணவின் போது பாலாவின் அருகில் அமர்ந்தாள் பூர்ணிமா. 'சாப்பிடும் போதாவது நான் நிம்மதியா சாப்பிடணும். அதனால அத்தை பக்கத்துலதான் உட்காருவேன்.!' என்ற அவளின் பழைய வாதம் இப்போது என்ன ஆனதோ?

கணவனை பல நாள் பிரிந்து இருந்ததால் நெருக்கமாக இருக்க விரும்புகிறாள் என நினைத்தாள் செண்பகம்.

"அம்மா.. நானும் இவளும் தனிக்குடித்தனம் போகலாம்ன்னு இருக்கோம்.." தயக்கமாக சொன்னான் பாலா.

அம்மா அதிர்ந்தாள். "நான் கொடுமை செஞ்சிட்டேனா?" என்றாள் கரகரத்த குரலில்.

இவ்வளவு நாளும் மகன் விலகி இருந்தான். மருமகள் வந்த பிறகு தன்னோடு இருக்க போகிறான் என்று மகிழ்ந்திருந்த தாயின் மனம் இப்போது வாடி போய் விட்டது.

பாலா அவசரமாக மறுத்தான். "இல்லம்மா.. இவளுக்கு இந்த வீட்டுல இருக்க பிடிக்கலையாம்.." மென்று விழுங்கி எப்படியோ சொல்லி விட்டான்.

பூமாறன் அசந்துப் போய் பூர்ணிமாவை பார்த்தான். 'என்ன பொண்ணுடா?' என்று கூட நினைத்தான்.

"அவ குழந்தையை அடிச்சதுக்கு பிரியாதான் கோவிச்சிக்கிட்டு தனிக்குடித்தனம் கூப்பிட்டு இருக்கணும்.." கோபமாய் உரைத்தாள் செண்பகம்.

பூமாறன் உணவை பாதியிலேயே முடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

"இல்லம்மா. ஏதாவது பிரச்சனை வந்தா அவங்கதான் தனிக்குடித்தனம் போகணும்ன்னு ஏற்கனவே நானும் அண்ணனும் பேசி முடிவெடுத்திருக்கோம். அதனால அவங்கதான் கிளம்பணும். ஒருவேளை உங்களுக்கு அவங்க இரண்டு பேரும் முக்கியம்ன்னா மட்டும் சொல்லுங்க,‌ நாங்க கிளம்பிக்கிறோம்.!" என்றான்.

செண்பகம் யாருக்கு பரிந்து பேசுவாள்? இரண்டும் அவள் பெற்ற பிள்ளைகள் ஆயிற்றே!

"இல்ல.. அவளுக்கு இந்த வீட்டையே பிடிக்கலையாம்.." பாலா சொன்னது கேட்டு அனைவரும் பூர்ணிமாவை பார்த்தனர். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் மனம் நிறையும் போல இருந்தது அவர்களுக்கு.

"உங்களோடு சேர்ந்திருந்து ஏற்கனவே பிரிஞ்சி போனது போதும். அதனால்தான் இந்த முறை எச்சரிக்கையோடு தனிக்குடித்தனம் போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் நான்." என்றாள் பூர்ணிமா.

செண்பகம் முந்தானையால் வாயை பொத்திக் கொண்டு, மூக்கை உறிஞ்சியபடி பேச ஆரம்பித்தாள்.

"அம்மா.." அவளை பேச விடாமல் தடுத்தான் பூமாறன்.

"அவ முடிவு பண்ணிட்டு பேசிட்டு இருக்கா. உங்களுக்கு எதுக்கு அவ முடிவை மாத்துற வேலை? இவ ஆடணும்ன்னு ஆடுறா.. அவ இஷ்டம்.." என்றுவிட்டு அங்கிருந்து நடந்தான்.

பூர்ணிமா அவனின் முதுகை வெறித்தாள்.

அன்று மாலையே பாலாவும் பூர்ணிமாவும் தனி வீட்டிற்கு குடி சென்றனர்.

"இந்த வீடு சின்னதா இருக்கு. நாம வேணா உன் அப்பாவோட வீட்டுக்கு போயிடலாமா?" என கேட்ட பாலாவிடம் வேண்டாமென தலையசைத்தவள் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"வேண்டாம். எனக்கு இங்கேதான் பிடிச்சிருக்கு.." என்றாள். அவனின் கன்னங்களில் முத்தமிட தொடங்கினாள்.

அவளின் அணைப்பு, அரவணைப்பு, முத்தம், மோகம் என்று அனைத்தும் பிடித்திருந்தது பாலாவுக்கு.

நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது.

பூர்ணிமாவின் அன்பு மழையில் நனைந்துக் கொண்டிருந்தான் பாலா. சொர்க்கமே தரையிறங்கி வந்தது போலிருந்தது.

அவளின் கரம் கோர்க்கும் நேரங்கள் அவன் இதயத்தை இருமடங்கு வேகத்தில் துடிக்க வைக்கும் நேரமாக மாறிக் கொண்டிருந்தது.

அவளின் பூவிதழ் சிரிப்பில் உள்ளம் நெகிழ்ந்தது. அவள் கோபப்படவேயில்லை. எப்போதேனும் அவன் அதட்டினால் கூட புன்னகையை பரிசாய் அளித்தாள். அவனோடு நெருங்கி வாழ்ந்தாள். வார்த்தைகளை பார்த்து பார்த்து பேசினாள். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் இருந்தது.

"மாமா நீங்க எவ்வளவு அழகா இருக்கிங்க தெரியுமா?" அவனுக்கு சாதம் ஊட்டி விட்டபடியே கேட்டாள்.

"அழகு எதுக்கு? உனக்கு பிடிச்சா போதும்.." என்றவனின் மூக்கின் மீது முத்தமிட்டவள் "நீங்க என் பொக்கிஷம்.!" என்றாள் மன நிறைவோடு.

இவளை மணம் முடிக்க என்ன தவம் செய்தோமோ என்று ஆச்சரியப்பட்டான் பாலா.

அன்று இரவு பூர்ணிமா உறங்கி பிறகு அவளருகே விழித்தபடி அமர்ந்திருந்தான் பாலா. அவளின் நெற்றியை வருடி விட்டான். அவளின் கை விரல்களை எடுத்து சொடுக்கு எ‌டுத்து‌ விட்டான்.

இந்த வீட்டிற்கு வந்தபோது பயந்துக் கொண்டேதான் வந்தான். ரோசினியின் நினைவில் தன்னால் இங்கே நிம்மதியாகவே இருக்க முடியாது என்று நினைத்திருந்தான். ஆனால் இப்போது அவளை பற்றிய நினைவே இல்லை. அவ்வளவு காதலில் மூழ்கியிருந்தான் இப்போது.

பூர்ணிமா புரண்டு படுத்தாள். அவளின் காது மடலில் முத்தமிட்டவன் தலையணையில் தலை சாய்க்க முயன்றபோது வீட்டின் வெளியே ஏதோ சலசலப்பு கேட்டது.

சத்தத்தை ஓரம் தள்ளி விட்டு படுத்தான். ஆனால் மீண்டும் ஏதேதோ சத்தம்.‌ அவனால் இனம் காண முடியாத சத்தம். இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து இருக்கும் ஒரே பிரச்சனை இது மட்டும்தான். அவ்வப்போது சத்தம் கேட்கும். ஆனால் எழுந்து சென்று பார்த்தால் எந்த சத்தமும் கேட்காது. இதை பற்றி பூரணியிடமும் விசாரித்தான். ஆனால் அவள் தனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என்றுச் சொல்லி விட்டாள்.

வீட்டை சுற்றி விலங்குகள் ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தான். அப்படி எதுவும் இல்லை. வீட்டை சுற்றி இருந்த சிறு சிறு புதர்களை கூட முழுதாய் சுத்தம் செய்து விட்டான். ஆனாலும் விசித்திரமான சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

இன்றைக்கும் அந்த சத்தத்தை ஒதுக்கி விட்டு கண்களை மூடினான். யாரோ அழும் சத்தம் கேட்டது. எழுந்து அமர்ந்தான். மணி பத்துதான் ஆகியிருந்தது. வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெளியே நடந்தான்.

வீட்டின் கதவை திறந்து பார்த்தான். வாசலில் எதுவும் இல்லை. வாசலுக்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். பளிச்சென்று இருந்தது. தொழிற்சாலையிலிருந்து வீசும் வெளிச்சமும், வீட்டை சுற்றி இருக்கும் விளக்குகளின் வெளிச்சமும் அந்த வீட்டை பாதுகாப்பாக வைத்திருந்தன. அப்படியிருந்தும் எதற்கு இந்த சத்தம் என்று குழம்பினான்.

வீட்டை நோக்கி நடந்தான். மீண்டும் ஏதோ சத்தம். சத்தம் வந்த திசைக்கு திரும்பி பார்த்தான். வானமும் நிலவும்தான் தெரிந்தது‌. பூரண நிலவு. சத்தம் மறந்து போனது. நிலவின் வசீகரம் அவனை இழுத்து நிறுத்தியது.

கைகளை கட்டிக் கொண்டு வீட்டின் வெளிச்சுவற்றில் முதுகு சாய்ந்து நின்றான். நிலவை நோக்கி கை நீட்டினான். நிலவு அவனை பார்த்து புன்னகைப்பது போலிருந்தது. பூமிக்கு மிக அருகில் இருப்பது போல பெரியதாகவும் தெரிந்தது.

எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை. நிலவை ரசித்து மூழ்கி நின்றவன் தூரத்தில் ரயில் ஓடும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தான். தலையை அசைத்துக் கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.

கதவை தாழிட்டு விட்டு திரும்பியவன் அதிர்ந்து நின்றான். எதிரே இருந்த காலண்டரில் அமாவாசை என்று இருந்தது. அவசரமாக கதவை திறந்து வெளியே ஓடினான். வானம் பார்த்தான். நட்சத்திரங்கள் அனைத்தும் மின்னிக் கொண்டிருந்தன. முன்பு அவை இல்லை. ஆனால் முன்பிருந்த நிலா இப்போது இல்லை.‌ தலையை பிடித்தான்.

"எப்படி நிலா காணாம போகும்? இன்னைக்கு அமாவாசைன்னா நான் எப்படி நிலாவை பார்த்தேன்?" சந்தேகத்தோடு சுற்றிலும் பார்த்தான்.

"எனக்குத்தான் கிறுக்கு பிடிச்சிருச்சோ!?" ஆனால் நிலவை ரசித்து கணம் உயிரோட்டமாக அப்படியே மனதில் இருந்தது. மறக்கவே முடியவில்லை அவனால்.

யாரிடமாவது சொல்லலாமா என யோசித்தபடி வீட்டுக்குள் வந்து போனை எடுத்தான். "அமாவாசையில் பௌர்ணமி நிலவை பார்த்தேன்னு சொன்னா உன்னை பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்ல சேர்த்துடுவாங்க.." என்று முணுமுணுத்தபடி போனை இருந்த இடத்திலேயே வைத்தான். ஜன்னலை திறந்து மீண்டும் வானம் பார்த்தான். அமாவாசையாகதான் இருந்தது.

தலைவலி மாத்திரை ஒன்றை எடுத்து விழுங்கியவன் அமைதியாய் சென்று படுத்தான்.

பூமாறன் தூக்கம் தெளிந்து எழுந்தான். பகல் வெளிச்சம் அறை முழுக்க பரவியிருந்தது. சோம்பல் முறித்தபடி கட்டிலை விட்டு இறங்கி நின்றான். மைதிலி ஒற்றை கையால் பிரஷ்ஷை பிடித்தபடி பல் துலக்க முயன்றுக் கொண்டிருந்தாள்.

"மயிலு.. இங்கே கொடுங்க. அப்பா பல் விளக்கி விடுறேன்.!" கொட்டாவி விட்டபடியே கையை நீட்டினான்.

மைதிலி மறுப்பாக தலையசைத்தாள். அவளின் கையிலிருந்த பிரஷ்ஷை பிடுங்கியவன் வலுக்கட்டாயமாக அவளுக்கு பல் துலக்கி விட்டான். அவளை‌ பாத்ரூமிற்கு அழைத்துச் சென்று வாயை கொப்பளிக்க வைத்தான்.

"போங்க.. போய் பாட்டிக்கிட்ட சாப்பாடு‌ தர சொல்லி சாப்பிடுங்க.." என்று அனுப்பி வைத்தான்.

குழந்தையின் பிரெஸ்ஸை ஸ்டேன்டில் வைத்துவிட்டு தனது பிரெஸ்ஸை எடுத்தவன் வாஷ்பேசினின் முன்னால் இந்த கண்ணாடியை கண்டு குழம்பினான்.

'பூர்ணிமா' என்று தண்ணீரில் தொட்டு கண்ணாடியில் எழுதி இருந்தது.

தண்ணீர் புதிது. முன்பே எழுதியிருந்தால் இன்னேரம் தண்ணீர் வழிந்தோடி கரைந்து காணாமல் போயிருக்கும். குழந்தைக்கு பல் துலக்கி விட்ட நேரத்தில்தான் யாரோ எழுதி இருக்கிறார்கள். ஆனால் அவன் இங்கிருக்கும் போது யார் எழுதியிருக்க முடியும்?

குழப்பத்தோடு கண்ணாடியின் மீதிருந்த பெயரை அழித்தான். இது போல்தான் சில நாட்களாகவே பூர்ணிமாவின் பெயர் அவனை சுற்றி வருகிறது. சமூக ஆர்வலர்களுக்கு என்று இருக்கும் தனி கட்டிடத்தின் கதவில் அன்று யாரோ பூர்ணிமாவின் பெயரை எழுதி வைத்திருந்தனர்.

நான்கு நாட்கள் முன்பு மர கன்றுகள் வாங்கியதற்கான பில் பேப்பரில் அவள் பெயர் கிறுக்கி இருந்தது. யாரோ விளையாடுகிறார்கள் என்று எரிச்சலானான்.

பூர்ணிமாவும் பாலாவும் இந்த வீட்டை விட்டு சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது‌. அப்படி இருக்கையில் ஏன் அவளின் பெயர் தன்னை சுற்ற வேண்டும் என்று ஆத்திரமானான்.

உணவு உண்ண வந்துச் சேர்ந்தான். அம்மா சாப்பாட்டை பரிமாறினாள்.

"மயிலு.. இங்கே வா. அங்கே என்ன பண்ற?" பிரியா உணவை உண்டபடியே மகளை அழைத்தாள். மகள் வாசலின் முன் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவளின் சிரிப்பு சத்தம் வீட்டில் இருந்தவர்களுக்கு கூட கேட்டது.

பூமாறன் எழுந்து வெளியே சென்று பார்த்தான். குழந்தை பெஞ்சின் மீது எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். பூமாறன் அருகில் சென்று அவளை தூக்கிக் கொண்டான். அப்போதுதான் பார்த்தான். பூர்ணிமா என்று கொட்டை எழுத்தில் பெஞ்சில் எழுதப்பட்டு இருந்தது. குழந்தையை அங்கேயே இறக்கி விட்டான். அந்த பெயரின் மீது கை வைத்து துடைத்தான். குழந்தையின் கையிலிருந்த அதே செங்கலால்தான் எழுதப்பட்டு இருந்தது. பேசவே ஆரம்பிக்காத குழந்தை எப்படி எழுதுவாள் என்று குழம்பினான்.

அன்று மாலையில் அவனும் பிரியாவும் வீடு திரும்பியிருந்த போது உதயாவும், ஸ்டெல்லாவும் வீட்டில் இருந்தனர்.

"பூரணியோட பிரெண்ட்ஸ் மாறா.. அவளை பார்த்துட்டு போக வந்திருக்காங்க.." என்றாள் செண்பகம்.

"இவங்களை கூட்டி போய் அந்த வீட்டுல விட்டுட்டு வாடா.." என்றார் மரிக்கொழுந்து.

வெட்கத்தை விட்டுவிட்டு போக‌ வேண்டுமா என்று தோன்றியது. ஆனாலும் அம்மாவின் வற்புறுத்தலால் அந்த வீட்டுக்கு சென்றான்.

பாலா இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.

"இந்த வீடுதான்.." என்று பூமாறன் சொன்னதும் கதவை தட்டினான் உதயா.

சில நொடிகளுக்கு பிறகு கதவை திறந்த பூர்ணிமா உதயாவை குழப்பத்தோடு பார்த்தாள்.

"யார் நீங்க?" என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN