பௌர்ணமி55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூர்ணிமா சிறை கம்பிகளுக்கு உள்ளே இருந்தாள். "என்னை வெளியே விடு.." என்று கத்தினாள். அந்த கதவை உடைக்க முயன்றாள். ஆனால் எதுவும் பலனிக்கவில்லை.

"இங்கே வந்திருப்பவன் யார்ன்னு சொல்லு.." எதிரில் இருந்தவள் அதட்டி கேட்டாள்.

"நான் சொல்ல மாட்டேன்.!" மறுத்து பேசிய பூர்ணிமாவை கேலியோடு பார்த்தவள் "அந்த குழந்தை மைதிலியை கொன்னுட்டு வரட்டா? அப்புறம் சொல்வியா?" எனக் கேட்டாள்.

பூர்ணிமா அதிர்ச்சியோடு மறுப்பாக தலையசைத்தாள். அழுதழுது சிவந்திருந்தது அவளது விழிகள். முகம் சோர்ந்திருந்தது. அந்த முகத்தில் இப்போது பயமும் கலந்துக் கொண்டது. "வேணாம் அவ குழந்தை.."

"பதில்.."

"அது என்‌ பிரெண்ட் ஸ்டெல்லா. இது என் முன் வீட்டு பையன். ஸ்டெல்லாவோட லவ்வர்.." கோபத்தை தனக்குள் அடக்கியபடி சொன்னாள் பூர்ணிமா.

***

உதயா அதிர்ச்சியோடு பூர்ணிமாவை பார்த்தான். "சீனியர் அதுக்குள்ள என்னை மறந்துட்டிங்களா?" எனக் கேட்டான்.

பூர்ணிமாவை பூமாறனும் அதே அதிர்ச்சியோடுதான் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த பூரணியை விட இப்போது இருந்த பூரணி வித்தியாசமாக இருந்தாள். முகத்தில் அலங்காரம் மாறியிருந்தது. சேலையை கூட சற்று மாற்றிதான் கட்டியிருந்தாள். இரு கை வளையல்கள் மாறி இப்போது ஒரு கையில் பிரேஸ்லெட் ஒன்று இருந்தது. பிரேஸ்லெட்டை பார்த்த பூமாறனுக்கு அதிர்ச்சி அதிகமானது.‌ பூர்ணிமாவின் முகத்தை சந்தேகத்தோடு பார்த்தான்.

அது ரோசினி அணிந்துக் கொண்டிருந்த பிரேஸ்லெட். எப்போதும் அணிந்துக் கொண்டிருப்பாள் அதை. ஆனால் அதை ஏன் இவள் அணிய வேண்டும்?

"தலைவலி.. அதான் குழம்பிட்டேன்.. வாங்க ஜூனியர் தம்பி.. ஸ்டெல்லா உள்ளே வா.. இரண்டு பேர் லவ்வும் எப்படி போகுது?" எனக் கேட்டபடி அவர்களுக்காக கதவை திறந்து விட்டாள்.

"நீங்களும் வாங்க ப்ரோ.." என்று பூமாறனையும் அழைத்தான் உதயா.

இதுநாள் வரை அவனுக்கு உள்ளே செல்ல விருப்பமில்லை. ஆனால் இப்போது வேறு விதமாக தோன்றியது. பூர்ணிமாவின் முறைப்பை கண்டுக் கொள்ளாதவன் போல உள்ளே நடந்தான்.

ஒரு மாற்றமும் இல்லை. ரோசினி இருக்கும்போது அந்த வீடு எப்படி இருந்ததோ அதே போலதான் இப்பவும் இருந்தது. ரோசினி இறந்து விட்டாள் என்று யாராவது நினைவுப்படுத்த வேண்டும் போல இருந்தது. பூமாறனுக்கு சந்தேகம் மேலும் உறுதியானது.

"அப்புறம் ஸ்டெல்லா, உன் வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?" என கேட்டபடி தோழிக்கு தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் பூர்ணிமா.

"என்னவோ போல தெரியற நீ.." தயக்கமாக சொன்ன ஸ்டெல்லா "உனக்கு என்ன வந்துச்சி? ஏன் இந்த இரண்டு மாசமா என் போன் காலை அட்டென்ட் பண்ணவே இல்ல நீ? பாலா‌ அண்ணாவுக்கு போன் பண்ணாலும் நீ தலைவலின்னு சொல்லி தட்டி கழிச்சிட்டே இருந்திருக்க.." என்றாள் கோபத்தோடு.

பூர்ணிமா அசடு வழிந்தாள். "எனக்கு உண்மையிலேயே தலைவ.." மேலே பேசும் முன் சப்பென்று ஒரு அறையை விட்டாள் ஸ்டெல்லா. பூமாறனே அசந்து‌ விட்டான். உள்ளுக்குள் சற்று ஜில்லென்று இருந்தது இப்போதுதான்.

பூர்ணிமா கன்னத்தை பிடித்தபடி ஸ்டெல்லாவை முறைத்தாள்.

"என் வீட்டுக்கே வந்து என்னையே அடிக்கிறியா?" என்று அவளும் கையை ஓங்கினாள். ஆனால் அதற்குள் ஸ்டெல்லா அவளின் கையை பற்றி விட்டாள். பூர்ணிமாவின் மறு கன்னத்திலும் அறையை விட்டாள்.

"யார்க்கிட்ட சீனை போடுற? இருபத்தியொரு வருசமா ஒன்னும் மண்ணுமா இருக்கோம். உன் வீடுன்னு சொல்ற.." என்றவள் தலையிலும் ஒரு கொட்டு வைத்தாள். பூர்ணிமாவுக்கு மூக்கு சிவந்து போனது.

"உனக்கு என்னவோ காட்டேரி பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். இரு பாலா அண்ணாக்கிட்ட சொல்லி ஓட்ட சொல்றேன்.!" என்றவள் தன் பேக்கில் இருந்த பத்திரிக்கையை எடுத்து இவளது கையில் திணித்தாள்.

"எனக்கும் உதயாவுக்கும் கல்யாணம். இரண்டு நாள் முன்னாடியே வந்து தொலை.. நீ சொன்னது போலவே உன் பேரை முன் பக்கத்துலயே போட்டிருக்கேன்.." என்றவள் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.

"அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா?" பூமாறனின் கேள்விக்கு பூர்ணிமாவை முறைத்தாள் ஸ்டெல்லா. அவளோ ஆடாமல் அசையாமல் நின்று தோழியை வெறித்துக் கொண்டிருந்தாள்.

"நான் இங்கே இருப்பதுல இவளுக்கே விருப்பம் இல்ல. நான் ஏன் தண்டமா இருக்கணும் ப்ரோ?" என்றவள் நினைவு வந்தவளாக உதயாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த மில்கி ஃபார் சாக்லேட்களை எடுத்து பூர்ணிமாவின் முகத்தில் வீசினாள். "உனக்குதான் வாங்கிட்டு வந்தேன். எடுத்து தின்னுட்டு அப்புறம் மறக்காம செத்துடு.!" என்றாள் ஆத்திரத்தோடு.

பூமாறனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அதை காணுகையில் பூர்ணிமாவுக்கு இன்னும் அதிகமாக வெந்தது.

"நாங்க கிளம்பறோம் ப்ரதர்.. இரண்டு மாசத்துல ஆளே மாறிட்டா.. கேன்சர் டெஸ்ட் ஏதும் எடுத்து அதுல பாசிடிவ்ன்னு வந்துடுச்சா?" வாசலை நோக்கி நடந்தபடி கேட்டாள் ஸ்டெல்லா.

'ஆத்தி.. என்னடா இவ இப்படியெல்லாம் கேட்கறா?' என ஆச்சரியப்பட்ட பூமாறன் "அப்படியெல்லாம் இல்ல சிஸ்டர்.. இவளுக்கு என்ன ஆச்சின்னு எங்களுக்கு சுத்தமா தெரியல. நல்லா இருந்தவ சம்பந்தமே இல்லாம எங்க வீட்டுல சண்டை போட்டுட்டு இங்கே தனி குடித்தனம் வந்துட்டா.." என்றான்.

"நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?" தங்களின் கார் அருகே வந்தபிறகு தயக்கமாக கேட்டான் உதயா.

"சொல்லுங்க.."

"அவங்க கண்ணுல எனக்கு கருப்பு மட்டும்தான் தெரிஞ்சது.." என்றவனை குழப்பமாக பார்த்த ஸ்டெல்லா "என்ன கருப்பு?" எனக் கேட்டாள்.

"உனக்கு தெரியாது பேபி. ஆனா இது நம்ம சீனியரோட முழு மனசு கிடையாது. யாரோ அவங்களுக்குள்ள இருக்காங்க. என் அண்ணனுக்கு சின்ன வயசுல இப்படிதான் ஆச்சி. கண்டுக்கல நாங்க. அப்பாவுக்கு இதுலயெல்லாம் நம்பிக்கை இல்லை. ரொம்ப லேட்டாதான் கண்டுபிடிச்சோம். சின்ன வயசுல செத்துப் போன அவன் பிரெண்டோட ஆவி அவனை பிடிச்சி இருந்திருக்கு.‌ அஞ்சாறு வருசத்துக்கு மேல அந்த ஆவி எங்க அண்ணன் உடம்புல இருந்திருக்கு. அதுல அவனோட ஆன்மா வீக்காகி கடைசியில் அவன் இறந்து போயிட்டான்.." என்றான்.

ஸ்டெல்லா சோகமாக அவனின் கையை பற்றினாள்.

பூமாறனை நிமிர்ந்து பார்த்த உதயா "உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னு தெரியும். ஆனா எதுக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கோ, மசூதிக்கோ இவங்களை கூட்டிப் போய் பாருங்க. அப்புறம் தெரியும் இவங்களுக்குள்ள ஏதாவது இருக்கா இல்லையான்னு.. என் அண்ணனை நாங்க விட்ட மாதிரி நீங்களும் இவங்களை விட்டுடாதிங்க.." என்றவன் காரில் ஏறி அமர்ந்தான்.

ஸ்டெல்லா பயத்தோடு பூர்ணிமாவின் வீட்டை பார்த்தாள். தோழியின் நலனில் அக்கறை இருந்தது அவளுக்கு.

"ப்ளீஸ் ப்ரோ.. அவளை கொஞ்சம் பாருங்க.. நான் எங்க சர்ச் பாதர்கிட்ட இதை பத்தி விசாரிச்சி பார்க்கறேன்.." என்றவள் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

சாத்தப்பட்டு இருந்த கதவை வெறித்துப் பார்த்த பூமாறன் அருகே இருந்த பேக்டரியை நோக்கி நடந்தான்.

பாலா தலைவலியோடு தனது அறையில் அமர்ந்திருந்தான். மண்டைக்குள் என்னவோ குடைவது போலவே இருந்தது. மருத்துவருக்கு அழைக்கலாம் என்று நினைத்து அவன் போனை எடுத்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் பூமாறன்.

தம்பியை கண்டதும் போனை இருந்த இடத்திலேயே வைத்தான். கடந்த இரு மாதங்களாக சரியாய் முகம் கொடுத்து கூட பேசவில்லை தம்பி.

"மாறா.. சாரிடா.." என்று ஆரம்பித்தவனை கை காட்டி நிறுத்திய பூமாறன் "கொஞ்சம் பேசலாம்.." என்றபடி முன்னால் அமர்ந்தான்.

"பூரணிக்கு பேய் பிடிச்சிருக்கு.."

பாலா முறைத்தான்.

"உண்மை அதுதான். எனக்கே இந்த விசயம் இப்பதான் புரிஞ்சுது. அவளை ரோசினியோட ஆவிதான் பிடிச்சிருக்கு.."

பாலா‌ தன் இருக்கையை விட்டு கோபத்தோடு எழுந்தான்.

"நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். நம்ம வீட்டுல இருந்து உன்னை பிரிச்சி கூட்டி வந்ததே ரோசினியோட ஆவிதான். பூரணிக்கு உன்னை பிடிச்சதை விட நம்ம குடும்பத்தைதான் அதிகம் பிடிக்கும். அவ சுய நினைவோடு இருந்தா இப்படி எதுவுமே நடந்திருக்காது. நீயே நல்லா யோசிச்சி பாரு. நீ லேட் பண்ணா பூரணியோட உயிருக்குதான் ஆபத்தா முடியும். நீயே நல்லா கண்காணிச்சிட்டு முடிவெடு.." என்றவன் அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பினான். பிறகு யோசனை வந்தவனாக நின்றான். அண்ணன் புறம் திரும்பினான்.

"இந்த இரண்டு மாசமா யாரோ என்னை பாலோவ் பண்ற மாதிரியே இருக்கு. நான் பார்க்கும் இடத்திலெல்லாம் பூர்ணிமான்னு அவ பெயரேதான் எழுதியிருக்கு. கண்ணாடியில் கூட தண்ணீரால் எழுதியிருக்கு. எதுவும் கோஇன்சிடென்ட்ஸ் இல்ல. யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா இப்பதான் தெரியுது. யாரோ என்னவோ சொல்ல வராங்கன்னு.." என்றவன் ஸ்டெல்லா வந்ததையும், அவளுக்கும் பூரணிக்கும் இடையில் நடந்தது பற்றியும் சொன்னான்.

பாலா குழப்பத்தின் பிடியில் இருந்தபோதே பூமாறன் கிளம்பி விட்டான்.

பாலா தன் மேஜையில் இருந்த பூர்ணிமாவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். அவனால் எதையும் நம்ப முடியவில்லை. அதுவும் அது ரோசினி என்று சுத்தமாக எண்ண முடியவில்லை. அவள் அருளை காதலித்துக் கொண்டிருந்தாள். அவள் ஏன் பூரணியை பிடிக்க வேண்டும் என்று யோசித்துக் குழம்பினான்.

அன்று முழுக்க அவனுக்கு வேலையே ஓடவில்லை. பூர்ணிமா கொஞ்சம் வித்தியாசமாகதான் இருந்தாள். அதை அவனே ஒப்புக் கொண்டான். ஆனால் அது அனைத்தும் காதலின் மிகுதி என்பதை தாண்டி எதையும் நினைக்க முடியவில்லை.

மாலையில் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தான். பூர்ணிமா வழக்கமான புன்னகையோடு அவனை வரவேற்றாள். அவன் உள்ளே வந்ததும் அவனின் கழுத்தில் தனது கரங்களை மாலையாக்கினாள். அவனின் தாடையில் முத்தமிட்டாள்.

"லவ் யூ மாமா.!" என்றாள். இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த மாமா என்ற வார்த்தை இன்று நெருடலை தந்தது.

"தலைவலி பூர்ணி.." என்றபடியே அவளின் கைகளை விலக்கினான்.

"நான் இஞ்சி டீ போட்டு கொண்டு வரேன் மாமா.." என்று சமையலறை நோக்கி ஓடினாள்.

பாலா நெற்றியை தேய்த்தபடி இருக்கையில் அமர முயன்றான். அப்போதுதான் கதவோர குப்பை தொட்டியில் இருந்த சாக்லேட்களை பார்த்தான். சென்று சாக்லேட்களை கையில் எடுத்தான்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு டீயோடு வந்தாள் பூர்ணிமா.

"சாக்லேட்ஸை ஏன் குப்பையில் எறிஞ்சிருக்க பூர்ணி?" என்றவன் ஒரு சாக்லேட்டை பிரித்து தன் வாயில் போட்டுக் கொண்டான். அவளுக்கும் ஒன்று நீட்டினான். முகத்தை சுளித்தவள் "எனக்கு வேணாம் மாமா.. நீங்களே சாப்பிடுங்க.." என்றாள்.

இப்போதுதான் உண்மையான திகில் அவனுக்குள் குடி புகுந்தது. பூரணியாய் இருந்திருந்தால் அவனது வாயிலிருக்கும் மிட்டாயையும் சேர்த்து சுவைத்திருப்பாள். கால்கள் இரண்டும் லேசாக நடுங்கியது அவனுக்கு. தன்னை சுற்றி எப்போதும் ஏதாவது வித்தியாசமான சத்தம் கேட்க காரணம் இதுதானா என்று குழம்பினான்.

"நான் தலையை பிடிச்சி விடுறேன் மாமா.!" என்றவள் அவனின் பின்னால் வந்து நின்று அவனது நெற்றியை மென்மையாக அழுத்தி விட ஆரம்பித்தாள். பூவின் மென்மை.

இவ்வளவு நாளும் மாற்றம் மாற்றம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போதுதான் வித்தியாசம் எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது. அவள் மாறவில்லை. வித்தியாசமாக இருந்தாள்.

"பூர்ணி பிரகீதன் போன் பண்ணியிருந்தான்.." என்றான் கண்களை மூடியபடியே.

***

"அது யார் பிரகீதன்?" அவளின் கேள்வியில் தன் தலையில் வலியை உணர்ந்தாள் பூர்ணிமா. சிறையின் ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்தவள் "என் காலேஜ்மேட்.. என்னை லவ் பண்ணிட்டு இருந்த பையன்.." என்றாள் சிரமத்தோடு.

***

"அவன் ஏன் மாமா போன் பண்ணான்?" பாலாவின் இரு பக்க நெற்றியிலும் கட்டை விரலை வைத்து அழுத்தியபடி கேட்டாள் பூர்ணிமா.

"உன் காலேஜ் மாடி படிக்கட்டுல உனக்கும் அவனுக்கும் நடந்த விசயத்தை பத்தி அவனோட லவ்வருக்கு தெரிஞ்சிடுச்சாம். ரொம்ப திட்டினாளாம்.. அதுக்குதான் எனக்கு போன் பண்ணி நீங்களும் இது போல பூரணியை திட்டிடாதிங்கன்னு சொன்னான்.."

பூர்ணிமாவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

"மாமா நான்.." தடுமாறினாள்.

பாலா எழுந்து நின்றான். அவளின் கன்னங்களை பற்றினான்.

"ஐ லவ் யூ பூரணி. உன் பாஸ்டை பத்தி எனக்கு எப்பவும் பிரச்சனை கிடையாது. நீ இப்ப என்னை மட்டும்தான் லவ் பண்றன்னு எனக்கு முழுசா தெரியும்.. நீ உன் பாஸ்ட்ல யாரை லவ் பண்ணா எனக்கு என்ன?" எனக் கேட்டவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகினான்.

பூர்ணிமாவின் முகத்தில் பயமும் குற்ற உணர்ச்சியும் அப்பட்டமாக தெரிந்தது.

அவளை‌ தாண்டி நடந்த பாலாவின் முகத்தில் உயிரே இல்லை. அனைத்தையும் இழந்தது போலாகி விட்டான்.‌

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN