பௌர்ணமி 56

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"உனக்கு ஏற்கனவே ஒரு பாய் பிரெண்ட் இருந்திருக்கான்.. அப்புறம் ஏன் என் மாமாவை கல்யாணம் செஞ்ச?" கையில் கத்தி ஒன்றை எடுத்தபடி சிறையினுள் நுழைந்தாள் அவள்.

பூர்ணிமா தப்பித்து ஓட முயன்றாள். அதற்குள் சிறையின் கதவை தாழிட்டு விட்டு வந்த அவள் பூர்ணிமாவின் தலைமுடியை பிடித்து தரையில் தள்ளினாள். விழுந்தவளின் முன்னால் அமர்ந்தவள் பூரணியின் கையில் கத்தியை குத்தினாள்.

"அம்மா.." வலியில் அலறினாள் பூர்ணிமா.

"கத்தாத.. எனக்கு தலை வலிக்குது.!" என்ற அவள் கத்தியால் இவளின் கன்னத்தில் கோடு போட்டாள். வழியும் ரத்தத்தை ஆசை தீர பார்த்தாள்.

"உன்னை என் மாமா காதலிச்சி கல்யாணம் செஞ்சதே பெரிய விசயம். ஆனா உனக்கு இவரை விட்டுட்டு இன்னொரு பாய் பிரெண்ட் கேட்குதா? மாமாவோட சண்டை போட்டுட்டு, கடைசியில் அவனோடு பழக போயிருக்க.. உண்மையை சொல்லு. அந்த நாய்க்காகதானே என் மாமாவை பிரிஞ்ச.?" பூர்ணிமாவின் தோளில் இறங்கியது கத்தி.

"என்னை விடு.." அவளை தூர தள்ள முயன்றாள். முடியவில்லை.

"இதுக்கு பதிலா நீ என்னை கொன்னுடு.. என் புருசனோடு என் உடம்பை யூஸ் பண்ணி நீ பழகுவதை பார்க்கும்போது செத்துப் போவதே மேல்ன்னு தோணுது.." என்று கடுகடுத்தாள் பூர்ணிமா.

"அப்படின்னா நீ அவரோட பொண்டிட்டியா வந்து சேர்ந்தபோது எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்? என்னை பத்தி நினைச்சி பார்த்தியா நீ?" என்றவளை தூர தள்ளினாள் பூர்ணிமா.

"நீ ஒரு பைத்தியக்கார பிசாசு. உனக்குன்னு ஒரு காதலன் உண்டு. பிறக்காத குழந்தை உண்டு. உனக்குன்னு உறவுகள் இருக்கும்போது ஏன் என் உயிரை எடுத்துட்டு இருக்க?" கோபமும் ஆத்திரமுமாக கேட்டாள்.

எதிரில் இருந்தவள் கசப்பாக சிரித்தாள். அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"இருந்தாங்க. ஆனா என்ன பிரயோஜனம்? இப்ப யாருமே இல்லையே.. நான் அனாதையா இருக்கேன் பூரணி. என் கஷ்டமும் என் கோபமும் உனக்கு புரியாது. நம்பிக்கையின் படியில் சிரமப்பட்டு ஏறிய பிறகு, கடைசி நொடியில் கால் வழுக்கி பாதாளத்துல விழுந்தா எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்ன்னு உனக்கு தெரியாது. வலிக்குது பூரணி. இங்கே.." என்று தன் நெஞ்சை தொட்டு காட்டினாள். பிறகு வயிற்றையும் தொட்டாள்.

"என் பாப்பா அழுதுட்டே இருக்கு பூரணி. எனக்கு கேட்குது. உனக்குதான் கேட்கல. பாவம் அவ. 'இருட்டா இருக்கு அம்மா'ன்னு அழறா.. அவளை பார்க்க முடியல என்னால. அவளை தூக்க முடியல. நான் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அவளுக்கு அழுகை ஓயல.."

அழுதபடி தலை குனிந்து இருந்தவள் மெள்ள நிமிர்ந்தாள். "எனக்குன்னு இருக்கும் ஒரே ஆறுதலும், அரவணைப்பும் மாமா மட்டும்தான் பூரணி. அவரை விட்டு நான் எங்கே போவேன்? இந்த வீட்டை தாண்டினா நான் அனாதை. அவர் மட்டும்தான் எனக்கு ஒரே ஜீவன். அவரை விட்டு விலகி போக முடியாது பூரணி.." என்றாள்.

இப்போது பூர்ணிமா அழுதாள். "ஆனா நான் என்ன பாவம் செஞ்சேன்? பாலாவை நான் எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா? அவனோடு நீ சும்மா பேசினாவே கோபம் வரும் எனக்கு. ஆனா இப்ப இந்த ஆட்டம் ஆடுற.." என்றாள் முகத்தை மூடியபடி.

பூர்ணிமாவின் கன்னம் வருடினாள் அவள்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ இங்கே இப்படியே இரு. மீதியெல்லாம் நானே பார்த்துக்கறேன்.." என்றவள் பூர்ணிமா அழுதுக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

***

"மாமா பால்.." என்ற பூர்ணிமாவை நிமிர்ந்துப் பார்த்தவன் பால் டம்ளரை கைகளில் வாங்கிக் கொண்டான். இதில் ஏதாவது கலந்திருக்குமா என்று சந்தேகித்தான்.‌

அவனின் மடியில் அமர்ந்தாள். தோளில் தலை சாய்ந்துக் கொண்டவள் "நீங்களும் நானும் எப்பவும் பிரியவே கூடாது மாமா.." என்றாள்.

நடுங்கிய கரங்களை மறைத்துக் கொண்டவன் "நாம ஏன் பிரிய போறோம்?" என்றான்.

பால் தொண்டையை விட்டு கீழே இறங்க மறுத்தது. சிரமப்பட்டு குடித்தான்.

விளக்கை அணைத்து விட்டு வந்தவள் அவனின் கழுத்தில் முத்தமிட்டாள்.

"பூரணி.. எனக்கு தலைவலி இன்னமும் போகல. நான் தூங்கட்டா?" என்றுக் கேட்டான்.

"சரி மாமா." அவசரமாக விலகி எழுந்து அமர்ந்தவள் அவனின் கால்களை பிடித்து விட ஆரம்பித்தாள்.

"பரவால்ல.. வேண்டாம் பூரணி.."

"இருக்கட்டும் மாமா. நீங்க தூங்குங்க.."

அவனுக்கு இந்த வீட்டை விட்டு ஓடி விட வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் இது பூர்ணிமா. இது அவளின் உடம்பு. பூர்ணிமாவை அனாதையாக விட்டுவிட்டு செல்ல தோன்றவில்லை.

இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று நினைத்தான்.

பூமாறன் வீட்டிலிருந்த அனைவரிடமும் தான் அறிந்த விசயத்தை சொன்னான். செண்பகம் உடனே அழ ஆரம்பித்து விட்டாள்.

"நான் அப்பவே நினைச்சேன். பூரணி என்னை அவமதிக்க மாட்டாளேன்னு.. பாலா ரோசினிக்காக உயிரையே விட துணிஞ்சான். ஆனா அவளுக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம போயிட்டுச்சே.!" என்று புலம்பினாள்.

பிரியா சோகமாக இருந்தாள். மூன்று வருடங்களில் தொலைபேசியிலேயே தோழிகளாகி விட்டவர்கள் அவர்கள். இந்த முறை நேரில் பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாளே என்று முதலிலேயே சந்தேகித்தாள். ஏதோ ஒரு பிரச்சனை என்று நினைத்தவள் அந்த பிரச்சனை அமானுஷ்யத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று யோசிக்காமல் போய் விட்டாள்.

"இப்ப என்ன பண்றது?" மரிக்கொழுந்து வெற்றிலை ஒன்றை வாயில் திணித்தபடி கேட்டார்.

பிரியாவை பார்த்தான் பூமாறன். "பாப்பாவை கொண்டுப் போய் அந்த வீட்டுல விட்டுட்டு வந்துடு. உன் தம்பியும் அம்மாவும் பார்த்துக்கட்டும். இங்கே என்ன பிரச்சனை வந்தாலும் பாப்பாவுக்கு எதுவும் ஆக கூடாது.." என்றான் முன்னெச்சரிக்கையோடு.

பிரியா சரியென்று தலையசைத்தாள்.

"போயோட்டி, பூசாரி, மந்திரவாதின்னு யாரையாவது கூட்டி வரணும் அப்பா. பூரணியை சரி பண்ணனும்‌‌.!" என்றான் இவன்.

இரவு மெள்ள நடைப் போட்டுக் கொண்டிருந்தது. பூர்ணிமா உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொண்ட பாலா வீட்டை விட்டு வெளியே வந்தான்.

வானம் பார்த்தான். நிலவை தேடினான்.

"பூர்ணி.." என்று அழைத்தபடி வீட்டின் வெளிப்பக்க சுவர் மீது முதுகு சாய்த்தான்.

இதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது.

"பூர்ணி‌ உன்னை எப்படி காப்பாத்துறது? மறுபடியும் நிலாவா வா பூர்ணி.." மெல்லிய குரலில் கெஞ்சினான்.

இந்த நிலவு ஒன்றுதான் அவனுக்கான ஒரே பிடிமானம் என்று தோன்றியது.

சுவரில் சாய்ந்தபடியே தரையில் அமர்ந்தான்.

"ப்ளீஸ் பூர்ணி. மறுபடியும் நிலாவா வா.. எனக்கு ஏதாவது பதில் சொல்லு." என்று கேட்டான்.

விழிகளை மூடியபடி கெஞ்சிக் கொண்டிருந்தவன் வித்தியாசமாக எதையோ உணர்ந்து கண்களை திறந்தான்.

வானில் பெரியதாக நிலவு இருந்தது. அவசரமாக எழுந்து நின்றான்.

"பூர்ணி. இது நீதானா? உன்னை இத்தனை நாளா அடையாளம் காணாம போயிட்டேன். சாரி பூர்ணி.."

நிலவின் வெளிச்சம் அவனை நெருங்கியது. தரையில் சுடர் போல வந்து நின்றது அந்த நிலவு.

அவனின் காலுக்கருகில் அமர்ந்தது நிலவு.

"பூர்ணி.." நிலவை அணைத்துக் கொள்ள முயன்றான். ஆனால் அவனின் கை தீண்டியதும் நிலவு மறைந்துப் போனது. விழ இருந்தவன் தடுமாறி நின்றான். தரையை பார்த்தான். இதயம் வரைந்திருந்தது. இதயத்தின் நடுவே பிறை நிலவு இருந்தது.

"நானும் உன்னை லவ் பண்றேன் பூர்ணி.. நீ என்னை எப்பவும் காதலிப்பன்னு தெரியும். அதனால லவ்வை சொல்லாம பிரச்சனையை எப்படி தீர்க்கறதுன்னு சொல்லேன்." என்றான்.

இரவு மட்டும்தான் அனாதை போல இருந்தது. அவன் அதன் பிறகு வெகு நேரம் காத்திருந்தான். ஆனால் எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

மறுநாள் காலையில் பூர்ணிமா கண் விழித்தபோது அருகில் பாலா இல்லை. "மாமா.." என்று அழைத்தபடியே வெளியே வந்தாள். ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்திருந்தான் அவன்.

"மாமா.." அவனின் கை தொட்டாள். பதறியடித்து எழுந்து அமர்ந்தவன் இவளை கண்டதும் தன் பதற்றத்தை மறைக்க முயன்றான்

"சொல்லு பூர்ணி.."

"இங்கே ஏன் மாமா தூங்குறிங்க?" தயக்கமாக கேட்டவளை புன்னகையோடு பார்த்தவன் "நடு ராத்திரி தண்ணீர் தாகம். தூக்க நினைப்புல இங்கேயே படுத்துட்டேன் போல.. சரி அதை விடு. எனக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. நான் சீக்கிரம் கிளம்பி போகணும்.." என்றவன் அவளை விட்டு நகர்ந்தான்.

காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் பாலா.

இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான். "அம்மா.." என கத்தியபடி வயிற்றை பிடித்தபடி தரையில் விழுந்தாள் பூர்ணிமா. உணவை விட்டுவிட்டு அவளருகே குனிந்தான்.

"என்னாச்சி பூர்ணி?" எனக் கேட்டான்.

"பயங்கரமா வயிறு வலிக்குது மாமா.." துடித்தாள். அழுதாள்.

பாலாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அது பூர்ணிமாவா ரோசினியா என்ற நினைவே வரவில்லை. கையை சுத்தம் செய்துக் கொண்டு அவளை தூக்கினான்.

சோஃபாவில் படுக்க வைத்தவன் "இரு நான் டாக்டருக்கு போன் பண்றேன்.." என்றான்.

அவசரமாக மித்ராவுக்கு அழைத்தான். "பூரணிக்கு வயித்து வலி.. நீ இங்கே வரியா? இல்ல நான் இவளை அங்கே கூட்டி வரட்டா?" எனக் கேட்டான்.

"அவளை கூட்டி வா.. என்னன்னு செக் பண்ணி பார்க்கலாம்." என்றாள் அவள்.

"பூரணி வா.." அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அரை மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தனர் இருவரும். பூர்ணிமாவை பரிசோதித்து விட்டு வந்த மித்ரா "பிரச்சனை என்னன்னு தெரியல பாலா. ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். சில டெஸ்ட் எழுதி தரேன். அதையெல்லாம் எடுத்துட்டு வாங்க.. ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி ஒரு விசயம்.." என்றாள்.

பாலா என்னவென்பது போல பார்த்தான்.

"பூரணி பிரகனென்டா இருக்கா.. ஆனா வயித்து வலிக்கு இது காரணமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்.!" என்றாள்.

பாலா இமைகளை மூட மறந்தான். அருகே அமர்ந்திருந்த பூர்ணிமா அவனின் தோள் மீது தலை சாய்த்தாள்.

"ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா.!" என்றாள்.

வயிற்று வலி இன்னமும் இருந்தது. ஆனால் அதை விட மகிழ்ச்சி பெரியதாக இருந்தது.

பாலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.‌

"கன்கிராட்ஸ் பாஸ்.." என்று தன் கையை நீட்டினாள் மித்ரா. பாலா ரோபோட்டை போல கைகளை நீட்டி குலுக்கினான்.

வயலோரம் இருந்த அந்த சிறு சுடுகாட்டிற்கு வேகமாக வந்தார் மரிக்கொழுந்து.

"பூரணியையும் பாலாவையும் வீட்டுல காணோம்.." என்றார் பதட்டமாக.

அங்கே காத்திருந்தார்கள் குழம்பினர்.

ரோசினியின் கல்லறை முன்பு நின்றிருந்த மந்திரவாதி "குழியை சுத்தி மந்திர கட்டு கட்டியாச்சி. இனி எந்த ஆவியும் உங்க மருமகளை நெருங்காது.." என்றார்.

அது உண்மையிலேயே வேலை செய்ததா என பார்க்கதான் பாலாவின் வீட்டிற்கு சென்றிருந்தார் மரிக்கொழுந்து.

மந்திரவாதியின் அருகில் நின்றிருந்த பூமாறன் "நன்றி சாமி.." என்றபடியே பணத்தை எடுத்து தந்தான்.

பூர்ணிமாவை காப்பாற்றி விட்டதாக நம்பினான்.

அதே நேரத்தில் மருத்துவமனையில் இருந்த பூர்ணிமா வயிற்று வலியை தாங்கும் அளவுக்கு மாறியிருந்தாள்.

'எனக்கு இப்ப நிஜமா பாப்பா பிறக்க போகுது. அதுவும் மாமாவோட குழந்தை. இதுக்கு மேல என்னையும் மாமாவையும் யாராலும் பிரிக்க முடியாது..' என்று மகிழ்ந்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN