பௌர்ணமி 58

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்றைய நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தான் பாலா. அவனது அறையின் கண்ணாடியில் என்னவோ கிறுக்கி இருந்தது. இரவு விளக்கின் வெளிச்சத்திற்கு சரியாக தெரியவில்லை. எழுந்து அருகே சென்றுப் பார்த்தான்.

வட்ட நிலவு. அதில் ஒரு இதயம். அதன் நடுவே ஒரு பிறை நிலவு இருந்தது‌.

"நீ சொல்றது எனக்கு புரியல பூர்ணி.." என்று கவலையோடு முனகினான்.

"மாமா.." உறங்கிக் கொண்டிருந்தவளின் குரலில் திரும்பியவன்,‌ திரும்பும் முன் கண்ணாடி ஓவியத்தை அழித்து விட்டான்.

பூர்ணிமா கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

"தூங்கலையா மாமா?" எனக் கேட்டவளின் அருகே வந்தவன் "நீ தூங்கு பூர்ணி.. எனக்கு என்னவோ நெஞ்சை புரட்டுது.." என்றுப் பொய் சொன்னான்.

பூர்ணிமா சட்டென்று கட்டிலை விட்டு இறங்கி நின்றாள்.

"நீங்க அமைதியா உட்காருங்க மாமா.. நான் கசாயம் வச்சி கொண்டு வரேன்.." என்று ஓடினாள்.

பாலா தலையணை ஒன்றை எடுத்து முகத்தில் மூடியபடி படுத்தான். மனதில் அவ்வளவு சோகம் இருந்தது.

பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள் பூர்ணிமா. விளக்கை ஒளிர விட்டவள் அவனருகே வந்து அமர்ந்தாள்.

எழுந்து அமர்ந்தவனின் கையில் கசாயத்தை தந்தாள்.

கசாயத்தை கையில் வாங்கியவன் அதை குடிக்காமல் யோசனையோடு இருந்தான்.

அவன் தலையை கோதி விட்டாள். "வேற ஏதும் பிரச்சனையா மாமா?"

எவ்வளவு அன்பான, ஆதூரமான குரல்? அவனால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் காட்டும் அன்பை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவன் மீது உயிராக இருந்தாள். அவளின் மனதை கண்ணாடி போல பார்க்க முடிந்தது.

"என்னோட வாழ்க்கையே நீங்க மட்டும்தான்.!" என்று நெஞ்சில் சாய்ந்தவளை உதறி விட சொன்னது புத்தி.

முழுதாய் இரண்டு மாதங்கள்.. எப்படி அறியாமல் போனோம் என்று தன்னையே திட்டிக் கொண்டான். பூர்ணிமாவின் உடம்பிலிருந்து இந்த பேயை ஓட்டி விட்டால் பிறகு பூர்ணிமா பழைய நினைவுகளோடு திரும்ப வந்து விடுவாளா என்று யோசித்துக் குழம்பினான்.

"நாம எங்கேயாவது வெளியே போய் வரலாமா?" என கேட்டவளின் கைகளை விலக்கியவன் "வேணாம் பூர்ணி. இப்ப நீ ரெஸ்ட் எடுக்கணும்.!" என்றான்.

மறுநாள் பூர்ணிமா கண் விழித்தபோது வீடு மொத்தமும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அவளின் உடலில் நெருப்பு பற்றியது போல எரிந்தது. "மாமா..‌மாமா.." என்று கத்தினாள்.

அக்னி குண்டத்தின் அருகே அமர்ந்திருந்த பாலா எழுந்து ஓட முயன்றான்.

"கொஞ்சமும் அசைய கூடாது நீ.." என்று கர்ஜித்தார் எதிரில் இருந்த சாமியார் மாயப்பன்.

பாலா மனதை கல்லாகிக் கொண்டு அங்கேயே அமர்ந்தான். கொஞ்சம் தள்ளி நின்றிருந்த பூமாறனும், மரிக்கொழுந்துவும் சாமியாரின் மந்திர உச்சரிப்பை கவனித்துக் கொண்டிருந்தனர்.

பூர்ணிமா தட்டு தடுமாறி தனது அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அக்னி குண்டத்தின் முன்னால் கருப்பு நிற சாம்பலில் வட்டம் வரையப்பட்டு இருந்தது.

"இதுல வந்து உட்கார்.." என்று அந்த வட்டத்தை கை காட்டினார் சாமியார்.

"என்னங்கடா பண்றிங்க? எனக்கு உடம்பெல்லாம் வேகுது.." கதறலாக சொன்னாள்.

"நீ வந்து உட்காரலன்னா இன்னும் அதிகமா வேகும்.."

"பாவம்டா என் பாப்பா.." வயிற்றை பிடித்தபடி ஓரடி முன் வந்தாள்.

அவள் சொன்னது கேட்டு பாலாவுக்கு சகலமும் அடங்கியது போலிருந்தது.

"மனசை நிலையா வச்சிக்க தம்பி.." எச்சரித்தார் சாமியார்.

தடுமாறியபடியே வந்து வட்டத்தின் நடுவே விழுந்தாள் பூர்ணிமா.

"நீ யாரு? எதுக்கு இந்த பொண்ணோட உடம்பை பிடிச்சி வச்சிருக்க?" அக்னியில் எதையோ அள்ளிப் போட்டபடியே கேட்டார் சாமியார்.

"மூச்சு விட முடியல.." என்றவள் அரை மயக்கத்திற்கு போனதை போல உணர்ந்தாள்.

"மாமா.. என்னை காப்பாத்துங்க. இந்த ஆள் என்னை கொல்ல பார்க்கறான்.." கெஞ்சினாள்.

"நீ பூர்ணி இல்லன்னு எனக்கு தெரியும்.." பாலா சொன்னது கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

"தயவு செஞ்சி என் பூரணியை என்கிட்ட கொடுத்துடு."

பூர்ணிமாவின் கண்களில் நிறைந்து நின்றது கண்ணீர்.

சாமியார் மீண்டும் புகை வளர்த்தார்.

"நீ யாரு?" எனக் கேட்டார்.

"ரோசினி.." ரொம்பவும் மெதுவாக ஒலித்தது குரல்.

"இந்த பொண்ணை ஏன் பிடிச்ச?"

அழுதாள் அவள். "வேற எங்கே போவேன்? என் பாப்பா அழுதுட்டே இருக்கா.. ஆவிகள் உலகத்துல என்னால நுழைய முடியல. சொர்க்கம், நரகம் எங்கேயும் என்னால போக முடியல. மாமாவை தவிர எனக்கு யாருமே இல்ல.." என்றாள்.

பாலா இமை தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

"ரோசினி சாரி.. நான் உன்னை காப்பாத்தி இருக்கணும்.. என்னாலதான் உனக்கு இந்த நிலமை.." கரகரத்த குரலில் சொன்னான்.

ரோசினி அழுதபடி அவனைப் பார்த்தாள். "நீங்க உங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிங்க மாமா. எனக்குதான் விதி இல்ல.." என்றாள்.

கண்களை துடைத்துக் கொண்டவள் "உங்களுக்கு இப்ப என்ன மாமா குறைச்சல்? நான் உங்களை சந்தோசமாதானே பார்த்துக்கறேன்? பூரணி வேணாம் மாமா.. நான் இருந்தாதான் உங்க லைஃப் ஹேப்பியா இருக்கும்." என்றாள்.

பாலா மறுப்பாக தலையசைத்தான். "வேணாம் ப்ளீஸ்.. அவளை விட்டுடு. அவ பாவம்."

"ஏன் மாமா? இதுதான் மாமா பர்பெக்ட்.. நான்தான் கரெக்ட்.."

பூமாறனுக்கு எரிச்சலாக வந்தது. விழிகளை சுழற்றினான். அதை கண்டு ரோசினிக்கு ஆத்திரமாக வந்தது.

"எல்லாம் இவனால வந்தது.." என்று எழுந்தாள். பூமாறன் மீது பாய இருந்தாள்.

தன் கையிலிருந்த ஒரு பொடியை அள்ளி அவள் மீது வீசினார் மாயப்பன். சுருண்டு தரையில் விழுந்தாள் அவள்.

"நகராத.." எச்சரித்தார்.

"இந்த பொண்ணை விட்டு போ.." என்றார்.

"மாட்டேன். எனக்கு என் மாமா மட்டும்தான் இருக்காரு. அவரை விட்டு நான் போக மாட்டேன்." என்றவள் பாலாவின் புறம் திரும்பினாள்.

"மாமா.. நமக்கு பாப்பா பிறக்க போகுது மாமா. உங்களுக்கு நான் வேணாமா? நான் உங்களை எவ்வளவு அன்பா பார்த்துக்கறேன்.? என்னை போல யார் இருப்பாங்க மாமா?" கெஞ்சலாகவும், கொஞ்சலாகவும் கேட்டாள் ரோசினி.

பாலா முகத்தை தேய்த்துக் கொண்டான்.

"ஐயம் சாரி ரோசினி.. எனக்கு பூர்ணிதான் வேணும். நீ நினைக்கிற மாதிரி இல்ல‌. இது சத்தியமா உடம்பை பார்த்து வந்த லவ்தான். இல்லன்னு சொல்ல மாட்டேன். நான் நிறைய தப்பு கூட செஞ்சிருக்கேன். ஆனா நான் அவளோடு வாழ ஆசைபடுறேன். அவளோட மனசை காதலிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அவளோடு சேர்ந்து காலம் முழுக்க வாழணும். இதையெல்லாம் தாண்டி நான் அவ ஆன்மாவை காதலிக்கிறேன் ரோசினி. உனக்கு புரியலையா? எனக்கு அவ முழுசா வேணும். அவ உடம்பை நீ யூஸ் பண்ணா நான் சந்தோசப்படுவேன்னு நினைக்காத. வருசம் முழுக்க சண்டை வந்தாலும் சரி. டென்சன், கோபம், வருத்தம்ன்னு வாழ்க்கை முழுக்க வாழ்ந்தாலும் சரி. எனக்கு அவதான் வேணும்." கையெடுத்து கும்பிட்டுக் கேட்டான்.

ரோசினி நகைத்தாள். "நரகம் கேட்கிறிங்களா மாமா?"

"நாம ஆசைப்பட்டது இருந்தாதான் அது சொர்க்கம் ரோசினி. இல்லன்னா எது கிடைச்சாலும் அது நரகம்தான்.!" என்றான் வருத்தமாக.

ரோசினி கசப்பாக சிரித்தாள். அந்த சிரிப்பு மெள்ள அழுகையாக மாறியது.

"என் காதல் கடைசி வரை புரியாதா?"

"உனக்குதான் அருள் இருக்கானே?" என்ற பூமாறனை திரும்பிப் பார்த்து முறைத்தவள் "அவன் இங்கே இல்லடா.. அவன் எங்கேயுமே இல்ல.‌. தேடி தேடி சலிச்சிட்டேன்.." என்று கத்தினாள்.

பாலாவின் புறம் பார்த்தவள் "ப்ளீஸ் மாமா.. என்னை விரட்டாதிங்க.. என் பாப்பா பாவம் இல்லையா? அவளுக்காகவாவது என்னை வாழ விடுங்க.." என்றாள்.

"பூர்ணி இல்லாத வாழ்க்கை எனக்கு வேஸ்ட் ரோசினி..‌ எனக்கு அவளோட சோல் வேணும். அதுதான் என் நேசம்.!" என்ற பாலா எழுந்து நின்றான்.

"அவளை கஷ்டப்படுத்தாத விட்டுடு.." என்றான்.

அவனால் அவளின் கண்ணீரை பார்க்க முடியவில்லை. அங்கிருந்து கிளம்பினான்.‌ அவன் கதவை தாண்டும் நேரத்தில் மயங்கி விழுந்தாள் அவள்.

"பூரணி.." பூமாறனின் குரலில் திரும்பிப் பார்த்தான் பாலா.

பூர்ணிமாவின் அருகில் ஓடி வந்து அவளை மடியில் வைத்துக் கொண்டான்.

"என்ன பண்ற நீ?" சாமியாரின் அதட்டலில் நிமிர்ந்தான் பாலா. அதே நேரத்தில் அக்னி முழுதாய் அணைந்துப் போனது.

பாலா பயத்தோடு சாமியாரை பார்த்தான். மறுப்பாக தலையசைத்தவர் "இனி என்னால முடியாது. அந்த பொண்ணை என்னால ஓட்ட முடியல.. அவளோட காதலனுக்கு விதி முடிஞ்சிருக்கு. அதனால்தான் அவன் கிளம்பிட்டான். இவளுக்கு விதி இல்ல.. இவளை இந்த உடம்புல இருந்து துரத்தியிருந்தா கூட பாதி பிரச்சனை தீர்ந்திருக்கும். இப்ப எல்லாமே போச்சி.." என்றவர் எழுந்து நின்றார்.

"சாமி ஏதாவது செய்ங்க.."

"இனி என்னால முடியாது.." என்றவர் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலா பூமாறனை முறைத்தான். பூர்ணிமாவை எழுப்ப முயன்றான். அவளிடமிருந்து ஒரு அசைவும் இல்லை.

"பூர்ணி.. எழுந்திரு. என்னை பயமுறுத்தாதே.!" என்று கெஞ்சிப் பார்த்தான்.

பூமாறன் தண்ணீரை கொண்டு வந்து அவளின் முகத்தில் தெளித்தான். ஒரு முன்னேற்றமும் இல்லை. பயந்து போனவர்கள் அவசரமாக அவளை கொண்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

மித்ரா பல மணி நேரமாக பரிசோதித்து விட்டு வந்தாள். அதற்குள் பாலாவுக்கு பாதி உயிர் போய் விட்டது.

தயங்கியபடியே வந்த மித்ரா "சாரி பாலா.. அவ கோமாவுல இருக்கா‌.." என்றாள்.

பூமாறன் குழம்பினான்.

"ஆனா ஏன்? நல்லாதானே இருந்தா?"

"கோமாவுக்கான காரணத்தை தெரிஞ்சிக்க டிரை பண்ணிட்டு இருக்கோம்.. காரணம் தெரிஞ்ச பிறகுதான் அதுக்கேத்த மாதிரி சிகிச்சை தர முடியும்.. கோமாவுல விழும் அளவுக்கு என்னதான் ஆச்சி?" காரணத்தை தெரிந்துக் கொள்ளலாம் என நினைத்துக் கேட்டாள் அவள்.

பாலா நடந்ததை சொன்னான்.

"உங்க நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பல. ஆனா பூஜையால இவ கோமாவுக்கு போனான்னு நம்ப முடியல.. நாங்க பார்த்துட்டு சொல்றோம்." என்று விட்டு சென்றாள் அவள்.

பாலா அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

"சாரி அண்ணா.." என்ற பூமாறனை பார்த்தவன் "என்ன ஆச்சி.? ஏன் ரோசினி இப்படி பண்ணா? நிஜமாவோ பூர்ணி எனக்கு திரும்ப கிடைப்பாளா?" என்று பயத்தோடு கேட்டான்.

"நம்பிக்கை இழக்காத அண்ணா.." என்றவன் தனது போன் ஒலிப்பது கண்டு எடுத்துப் பேசினான்.

அண்ணனை பார்த்தவன் "மாயப்பன் அவரோட வீட்டுக்கு நம்மை கூப்பிட்டு இருக்காரு.." என்றான்.

அவரின் மீதிருந்த நம்பிக்கை முழுதாய் போய் விட்டது பாலாவுக்கு.

"போய் பார்த்துட்டு வரலாம் அண்ணா.." பாலாவை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றான்.

ஓட்டு வீடு ஒன்றில் தனியாய் வசித்து வந்தார் மாயப்பன். இவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். நடு கூடத்தில் கோல பொடி கொட்டி கிடந்தது. அதில் வட்ட நிலவும், இதயமும், பிறை நிலவும் வரையப்பட்டு இருந்தது.

பாலா அதிர்ச்சியோடு அந்த கோலத்தை பார்த்தான்.

"இது எப்படி இங்கே?"

"யாரோ என்னோட பேச முயற்சி பண்றாங்க.. சம்பந்தப்பட்டவங்க இல்லாம நான் எந்த சக்திகளோடும் பேசுறது இல்ல. அதனால்தான் உங்களை வர சொன்னேன். உன் மனைவிக்கு உதவி பண்ண நினைக்கிற யாரோ பேச ஆசைப்படுறாங்க.." என்றார் அவர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN