பௌர்ணமி 59

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சாமியாரின் வீட்டு நடு கூடத்தில் பூஜை பொருட்கள் பல பரவி கிடந்தது.

வட்டமிட்ட இடத்தில் அமர்ந்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார் அவர். அவருக்கு முன்னால் மணல் கொஞ்சம் பரப்பப்பட்டு இருந்தது. ஆன்மாவோடு பேச அதைதான் ஊடகமாக பயன்படுத்த நினைத்திருந்தார் அவர்.

பாலாவும் பூமாறனும் அவருக்கு முன்னால் அமைதியாக நின்றபடி காத்திருந்தனர்.

சாமியாரின் முன்பே இருந்த ஓலை சுவடிகள் காற்றில் ஆடின. பூஜை பொருட்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டது. மஞ்சளும், குங்குமமும் காற்றில் வீசி எறியப்பட்டது. வீசப்பட்ட மஞ்சளும் குங்குமமும் தரையில் சிதறியது. அந்த வீட்டை சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் பேயாட்டம் ஆடின.

"யார் நீங்க?" பொறுமையாக கேட்டார் சாமியார்.

சாமியாருக்கு முன்பே இருந்த மணலில் எழுத்துகள் சில தோன்றின. பாலா படித்தான்.

"என் பொண்ணோட அப்பா."

பூமாறனும் படித்துப் பார்த்தான். "நாகேந்திரன் மாமாவா?" சந்தேகத்தோடு கேட்டான். மணலில் இருந்த எழுத்துகள் மறைந்து மீண்டும் "ம்‌‌.." என்ற வார்த்தை மட்டும் வந்தது. பாலாவுக்கும் பூமாறனுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

"பூர்ணிக்கு என்ன ஆச்சு?" இம்முறை பாலா கேட்டான்.

"ரோசினி.." என்று எழுத்துகள் உரு மாறியது.

"பூரணியை, அவளோட சிந்தனையை, செயல்பாட்டை அவளோட இதயத்துக்குள்ளயே சிறை பிடிச்சி வச்சிருக்கா.."

பாலாவும் பூமாறனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பாலாவுக்கு இதயம் கனத்தது.

"அந்த பொண்ணை எப்படி காப்பாத்துறது?" சாமியார் கேட்டார்.

மணல் இம்முறை அமைதியாக இருந்தது.

"நீங்க ஏதாவது சொன்னாதான் எங்களுக்கு தெரியும்."

"எனக்கு தெரியாது.!" மணலிலிருந்த எழுத்துகள் கண்டு அனைவருக்கும் மனம் விட்டுப் போனது.

"இனி என்ன செய்றது?" பாலா அங்கிருந்த தூண் ஒன்றை பிடித்து திண்ணையில் அமர்ந்தபடி கேட்டான்.

எதிரிலும் மௌனம்தான் நிலவியது.

பூமாறன் இதய குறிப்பை பற்றி யோசித்தான். 'பூர்ணிமா தன்னோட உடம்புக்குள்ளயே, அதுவும் அவளோட இதயத்துக்குள்ளயேதான் இருக்கா. அவளோட மூளையை ரோசினி ஆக்கிரமிச்சி இருக்கா..'

"பூர்ணிமாவோடு எங்களால பேச முடியுமா?" பூமாறனின் கேள்விக்கு பாலாவும் கூட திகைத்தான்.

"பேசினா கேட்கும்."

மணல் எழுத்துக்களை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டான் பாலா. அப்படியானால் இத்தனை நாட்களும் அவன் வேறு ஒருத்தியோடு கொஞ்சிக் கொண்டிருந்தது கூட அவளுக்கு அப்படியே தெரிந்திருக்குமே என்று வருத்தப்பட்டான்.

"என்னால இதுக்கும் மேல முடியாது. நான் கிளம்பணும்.." என்று எழுத்துகள் தோன்றியதும் பூமாறன் "இருங்க.. எங்கே போறிங்க.. எங்களுக்கு எந்த உருப்படி தகவலும் தரல நீங்க.." என்றான் கோபமாக.

"இது அப்படி இல்ல தம்பி. இறந்து போன ஒரு மனுசனோட ஆன்மாவை குறிப்பிட்ட நேர அளவு வரைதான் என் கட்டுப்பாட்டுக்குள்ள பிடிச்சி வைக்க முடியும்.. அவை சுதந்திரமானது.." என்றார் சாமியார்.

பாலா திண்ணையிலிருந்து எழுந்து நின்றான். மணல் பரவி இருந்த இடத்தை வெறித்தான்.

"பூர்ணிக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அவ உங்களை ரொம்ப மதிக்கிறா.. ஆனா நான் அப்படியில்ல. சாகும்வரை உங்களை மனசுக்குள்ள திட்டிக்கிட்டே இருப்பேன். உங்களால என் அத்தைகள் வாழ்க்கை நாசமா போச்சி.. உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல.!" என்றான்.

பூமாறன் எரிச்சலோடு முகத்தை திருப்பிக் கொண்டான். அண்ணனால் மட்டும்தான் இந்த நேரத்திலும் கூட இப்படி பேச முடியும் என்று தோன்றியது.

மணலில் சிறு சூறாவளி போல உண்டானது.

"நான் என்னை திட்டிய அளவுக்கு உங்களால திட்ட முடியாது. செஞ்ச தப்புக்கு நட்டத்தை அனுபவிச்சது நான்.. இப்ப நானே என்னோட தண்டனையை தளர்த்திட்டேன். என் பொண்ணு என்னை மன்னிச்சிட்டா. அதை விட முக்கியமா என்னை நானே மன்னிச்சிட்டேன். அதுக்கு மேல நீ ஏன்டா என்னை மன்னிக்கணும்?"

வெறும் எழுத்துகள் கூட காட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை இப்போதுதான் அறிந்துக் கொண்டான் பூமாறன்.

"என் பொண்ணோட மனசை கஷ்டப்படுத்தாதடா.. உன் யோக்கியத்தையை காட்ட அவளை‌ கொடுமை செய்யாத.. உன்னை விடவும் என் பொண்ணு பர்பெக்ட்.!" என்ற எழுத்துகள் மணலில் தோன்றிய அதே கணத்தில் வெளியே வீசிக் கொண்டிருந்த காற்று நின்றுப் போனது.

எழுதியிருந்ததை படித்தபோது பூமாறனுக்கு சிரிப்பாக வந்தது.

"அவர் இருந்திருக்கணும்.. மாமனார் மருமகன் சண்டையை பார்த்திருப்பேன் நானும்‌.!" என்றான்.

பாலா தம்பியை முறைத்தான்.

"இப்ப இது முக்கியமா? பூர்ணியை எப்படி காப்பாத்துறதுன்னு கண்டுபிடிக்கணும்டா.!"

"பிளேட்டை மாத்துறான்." என்று முனகிய பூமாறன் "மந்திரவாதி.. நீங்கதான் ஏதாவது செய்யணும்.." என்றான்‌.

மந்திரவாதி மணலில் இருந்த எழுத்துகளை வெறித்தார்.

"பேய்களை ஓட்ட தெரியும். ஆனா அதீத சக்தி கொண்ட ஆன்மாக்களை ஓட்ட தெரியாது‌. அது ஆன்மா கிடையாது. அது ஒரு சக்தி. இரட்டை உயிரா துர்மரணத்தில் பலியான சக்தி. ஆனாலும் அந்த சக்தி நல்ல சக்தி. அதனால்தான் உயிர்களை காவு வாங்காம தனக்கு கிடைச்ச ஒரு உடல்ல ஒண்டிக்கிச்சி.." என்று விளக்கினார் சாமியார்.

பாலாவுக்கு கண்கள் கலங்கியது. ரோசினியை நினைத்து வருந்தினான். அவள் இறக்காமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தான்.

"நான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட வழி கேட்டுப் பார்க்கிறேன்.." என்ற சாமியார் தனது சிறு கைபேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

"ரோசினி பாவம்.!" என்றான் பாலா.

"அவளா? என் பொண்ணோட முதுகுல எப்படி அறைஞ்சிருந்தா தெரியுமா? அவ சும்மாவே சைக்கோதான். பேயா மாறின எப்படியிருக்கும்? அவ சரியான சாத்தான் அண்ணா.." என்று தன் இஷ்டத்திற்கு திட்டினான் பூமாறன்.

"செத்து போனவ மேல உன் கோபத்தையும், வெறுப்பையும் காட்டாத.."

கலகலவென சிரித்த பூமாறன் "கொஞ்ச நேரம் முன்னாடி நாகேந்திரன் மாமாகிட்ட நீ பேசியது என்ன? ஒரு விசயத்தை புரிஞ்சிக்க. உன் கண்ணோட்டமும் என் கண்ணோட்டமும் ஒன்னு கிடையாது. உனக்கு ரோசினி மேல இரக்கம். பூரணிக்கு அவ அப்பா மேல இரக்கம். அவ எப்பவும் தன் இரக்கத்தை நீயும் உணரணும்ன்னு கட்டாயப்படுத்தல. நீயும் ரோசினி விசயத்துல என்னை கட்டாயப்படுத்தாத.." என்றான்.

பாலாவுக்கு எரிச்சலாக வந்தது. என்னடா வாழ்க்கை இது என்று கூட தோன்றியது.

மந்திரவாதி திரும்பி வந்தார். இருவரையும் கை சைகை காட்டி தன் அருகே அழைத்தார்.

"நான் சொன்னது போலவே அது ஒரு சக்திதான். அதை உங்களால மட்டுமில்ல யாராலயுமே விரட்ட முடியாது. அது காலத்துக்கும் அழியாத சக்தி. நாம இறந்த பிறகும் இதே பூமியில் இருக்கும் அந்த சக்தி. அது நல்ல சக்தியாவே இருக்கணும். அப்பதான் சுத்தியுள்ள நாம எல்லாம் நல்லாருக்க முடியும்."

"ஆனா அதுக்கு நாங்க என்ன சாமி செய்றது?" எனக் கேட்ட பூமாறனிடம் "அந்த சக்தி தங்க ஒரு இடம் அமைச்சி கொடுங்க. ஒரு சிலை வடிச்சி அதுல போய் தங்கிக்க சொல்லுங்க.." என்றார்.

பாலா அதிர்ந்தான்.

"என்ன சாமி சொல்றிங்க?"

"ஆமாப்பா. களி மண்ணால ஒரு சிலை வடிச்சா கூட போதும். அந்த சக்திக்கிட்ட மனசார கேளுங்க.

உங்க குடும்பத்தை காக்கும் காவல் சக்தியா ஏத்துக்கங்க. நிச்சயம் அந்த சக்தி மனமிறங்கும்.. உங்க மனைவியை விட்டுடும்.." என்றார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN